Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 266

உன் ரகசிய ரசிகை நான் 266

by Layas Tamil Novel
118 views

EPI 266

ஆதி துர்காவிடம் பேரம் பேசி டெண்டலுக்கான தொகையை வாங்கியதில் இருந்து, அபியோ, அவள் அம்மா மரகதமோ சங்கவியை இன்று வரை தொடர்பு கொள்ளவில்லை. சங்கவிக்கு இப்போது ஆதியின் மேல் இருந்த ஆத்திரத்தை விட, அபி மரகதத்தின் மேல் தான் அதிக கோபம் வந்திருந்தது.

‘நானே ஒரு ஏமாற்றுக்காரின்னா, இவளுக ரெண்டு பேரும் எனக்கு மேல இருக்காளுங்க. கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லாதவர்கள். இவர்களுக்காக நான் ஒரு பிளான் போட்டுக் கொடுத்தேன். அந்தக் பிளானை என் ஐடியாவை வெச்சே அவங்களுக்குக் காரியம் ஆனதும் என்னைக் கழட்டி விட்டுட்டாங்க. இவங்க ரெண்டு பேரையும் சும்மா விடக்கூடாது. இவர்களிடம் லேசுல ஏமாந்துடக் கூடாது’ எனத் தனக்குத்தானே எச்சரித்துக் கொண்ட சங்கவிக்கு, எப்படியாவது அபியையும் மரகதத்தையும் தூண்டிவிட்டு அறுபதாம் திருமணத்தில் பிரச்சனை செய்து சொத்துக்களை எல்லாம் பிரித்து விடலாம் என நினைத்திருந்தவளுக்கு ஒன்றுமே வேலையாகவில்லை என கடுப்பாக இருந்தது.

அதே யோசனையோடுத் தன் அறையில் இருந்து வெளியே வந்த சங்கவி, டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிட்டுவிட்டுச் சென்று இருக்க, துர்கா டேபிளிலிருந்து உணவுகளை எல்லாம் எடுத்து கிச்சனுக்குள் வைத்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் நேராக அவளிடம் சென்றாள்.

“என்ன வேலைக்காரி? என்ன… வேலை எல்லாம் முடிஞ்சு எல்லாம் எடுத்து வச்சுட்டு இருப்ப போல!” என்றால் நக்கலாக துர்காவைப் பார்த்து.

துர்கா எதையும் கண்டு கொள்ளாமல் அவள் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

தான் சொன்னதற்கு துர்கா எதுவும் கோபப்படுவாள் என எதிர்பார்த்துச் சங்கவி துர்காவைப் பார்த்துக் கொண்டிருக்க, ஆனால் துர்கா சங்கவி பேசியதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாதவள் போல வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். அதைக் கண்டதும் சங்கவிக்கு ஆத்திரமாக வந்தது. அவள் கையில் வைத்திருந்த பாத்திரத்தைப் பிடுங்கி டைனிங் டேபிளில் வேகமாக வைத்தவள்.

“ஏய் என்னடி! ரொம்ப ஓவராத்தான் பண்ணிக்கிட்டு இருக்க? நீ ஆதியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டோட எஜமானியா இருக்கலாம். ஆனா என்னைக்குமே நீ எனக்கு வேலைக்காரி தான். அதை மறந்துடாத” என்றாள்.

அவள் அப்படிச் சொல்லி முடிக்கும் முன்னர் துர்கா சங்கவியின் கன்னத்தில் ‘பளார்’ என ஓங்கி அறைந்திருந்தாள்.

இதைச் சற்றும் எதிர்பாராத சங்கவி, “துர்கா” எனக் கோபத்தில் கத்தியவள் அவளை அடிக்கக் கையை ஓங்க…

சரியாக அந்த நேரம் பார்த்து கிச்சனுக்கு வந்த செண்பகம், சங்கவி துர்காவை அடிக்கக் கையை ஓங்குவதைப் பார்த்துவிட்டு, “சங்கவி” எனக் கத்திக்கொண்டு வேகமாக அவளிடம் வந்து, சங்கவியின் கையை குறுக்கே புகுந்து பிடித்து துர்காவை அடிக்க விடாமல் தடுத்தார்.

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா துர்காவை அடிக்கக் கையை ஓங்கி இருப்ப? அவ இந்த வீட்டு மகாராணி. இந்த வீட்டோட மகாலட்சுமி. அவளை அடிக்க உனக்கு எப்படித் தைரியம் வந்துச்சு?” என அவள் கையைத் தட்டி விட்டார்.

“அம்மா! நான் வேணும்னே அவளை அடிக்கக் கையை ஓங்கல. அவ தான் என்ன…” என சங்கவி பேச வருவதற்குள்.

“அம்மா! நான் என் வேலையைப் பார்த்துட்டுச் சும்மாத்தான் இருந்தேன். சங்கவி தான் வந்து என்கிட்ட ரொம்பப் பேசிக்கிட்டே இருந்தா. நான் எதுவும் பேசாமல் அமைதியா என் வேலையைப் பார்த்துட்டு இருந்தேன்.

எனக்குத் தலை வலிக்குது ஒரு கப் காஃபி வேணும்னு கேட்டா சங்கவி. ‘சரி இரு சங்கவி, இதை எல்லாம் எடுத்து வச்சிட்டுப் போட்டுத் தரேன்னு தான் சொன்னேன்’. ஆனா அதுக்கு, ‘நான் இந்த வீட்டோட எஜமானி. நீ இந்த வீட்டுக்கு வாழ வந்தவ தான். உனக்கு இருக்கிற உரிமையை விட எனக்கு இந்த வீட்ல அதிக உரிமை இருக்கு. என் அம்மாவோட சொத்து எல்லாம் எனக்குத் தான் சேரும். உன்னை விட நான் தான் பணக்காரி’ அப்படி இப்படின்னு வார்த்தையை விட்டு கோபமா என்னை அடிக்க வந்துட்டாம்மா” எனச் சோகமாக துர்கா முகத்தை வைத்துக்கொண்டு செண்பகத்தைப் பார்த்தாள்.

“ஹே துர்கா! நான் எங்கடி இப்படி எல்லாம் பேசினேன்? நீ எதுக்கு இப்படி வீணா பொய் சொல்ற? தேவையில்லாம என்னைப் பத்தி பேசி வீணா வம்பை நீயே விலை கொடுத்து வாங்கிக்காத, ஒழுங்கா இரு. இந்த வீட்டு வேலைக்காரியா இருந்துட்டு திடீர்னு எஜமானி ஆனதும் உனக்குத் திமிர் வந்துடுச்சா?” என்று மீண்டும் சங்கவி துர்காவை அடிக்கக் கையை ஓங்க, இந்த முறை அவளைத் தடுத்த செண்பகம் சங்கவியின் கன்னத்தில் ஓங்கி ‘பளார்’ என அறைந்தார்.

செண்பகம் தன்னை அடிப்பார் என்று சங்கவி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கன்னத்தில் கைவைத்தபடி “அம்மா” என கோபமாகச் சங்கவி செண்பகத்தைப் பார்க்க.

“சங்கவி, வார்த்தையை அளந்து பேசு. நீ எப்படி துர்காவைப் பார்த்து வேலைக்காரின்னு சொல்லலாம்? அவ இந்த வீட்டோட எஜமானி. என் அண்ணன் உன்னோட மருமக. அவளை எப்படி நீ வீட்டு வேலைக்காரின்னு சொல்லலாம்? முதல்ல அவகிட்ட மன்னிப்பு கேளு” என்றார் செண்பகம் உச்சபட்ச கோபத்தில்.

“அம்மா! நீங்க என்ன நடந்ததுன்னு முழுசா விசாரிக்காமல் என்னையே குத்தம் சொல்றீங்க” என சங்கவி தன் மீது தப்பில்லை என எடுத்துக் கூற முயல.

“உன்கிட்ட நான் ஒன்னும் விளக்கம் கேட்கல. நீ பேசின பேச்சுக்கு துர்கா இருக்கிறதால தான் அமைதியா கேட்டுட்டு இருக்கா. இதே வேற யாராவது இருந்தா இந்த நேரம் உன் பல்லை உடைச்சுக் கையில் கொடுத்து இருப்பாங்க. ஒழுங்கா மரியாதையா துர்காகிட்ட மன்னிப்புக் கேளு” என்றார் செண்பகம்.

“அம்மா!” என ஆத்திரத்தோடு சங்கவி செண்பகத்தைப் பார்க்க.

“என்ன பாக்குற? நீயும் நானும் இப்போ வரைக்கும் உண்டு அனுபவிச்சிட்டு இருக்கிறது என் அண்ணன் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சுச் சேர்த்து வச்ச சொத்துக்கள் இது. என்னோட அண்ணன் பசங்க ரெண்டு பேரும் ராப்பகலா உழைச்சு சம்பாதிச்ச சொத்துக்கள் இது.

இதுல உரிமை கொண்டாட எனக்கே இடமில்லாத போது நீ எங்கிருந்து உரிமை கேட்டுட்டு வருவ? முதல்ல துர்காகிட்ட மன்னிப்புக் கேட்டுட்டு ரூமுக்கு போ. இனிமேல் தேவையில்லாம துர்காகிட்ட பிரச்சனை வச்சிக்கிற வேலை வேண்டாம்” என்றார் செண்பகம் ஸ்ட்ரிக்டாக.

“அம்மா” என சங்கவி மேலும் பேச வர, “இப்ப நீ அவகிட்ட மன்னிப்பு கேட்கப் போறியா இல்லையா?” என செண்பகம் கத்த…

சங்கவி இதற்கு மேலும் செண்பகத்திடம் வாயை விட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளக் கூடாது என முடிவெடுத்தவள் திரும்பி துர்காவைப் பார்க்க, துர்காவோ வாய்க்குள் தன் நாவைச் சுழல விட்டு நக்கலாகச் சங்கவியைப் பார்த்துச் சிரித்தாள்.

சங்கவி துர்காவை முறைத்தவாரே அவளைப் பார்த்து, “என்ன மன்னிச்சிடு” என்று விட்டு கோபமாகத் தன் அறைக்குள் சென்று கதவை ஓங்கி அறைந்து சாற்றினாள்.

சங்கவி அறைக்குள் சென்று கதவைச் சாற்றியதும் செண்பகம் துர்காவிடம் திரும்பி அவள் கையைப் பிடித்துக் கொண்டு, “துர்கா, சங்கவி பேசினதை பெருசா எடுத்துக்காத. அவளைப் பற்றித் தான் உனக்குத் தெரியுமே? வளர்ந்த விதம் அப்படி. சிறு வயதிலிருந்தே அவள் அக்கா அவளை அவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்திருக்காங்க. காசு பணத்தோட அருமையும் மனுஷங்களோட மதிப்புமே அவளுக்கு இப்போ வரைக்கும் புரியல” என்று சொன்னவர், “அவ பேசுனதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்கிறேன்” என்றார் செண்பகம் துர்காவின் கைய பிடித்துக் கொண்டு.

“ஐயோ அம்மா! என்ன இப்படிப் பேசுறீங்க? நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்புக் கேக்குறீங்க? சொல்லப்போனா சங்கவி என்கிட்ட சும்மா வேணும்னே வம்பு பேசத் தான் வந்தா. நான் தான் அவகிட்ட பதில் எதுவும் பேசாம, அவளைக் கோபப்பட்டு உசுப்பேத்தி, ‘உன் வார்த்தையை விட்டதும்’ முதல்ல நான் தான் சங்கவியை அடிச்சேன். அதுக்குக் கோபம் வந்ததா சங்கவி என்ன அடிக்கக் கையை ஓக்கினாள்” என்று துர்கா உண்மையை கூறினாள்.

துர்கா சொன்னதைக் கேட்டு செண்பகம் அதிர்ச்சியடைவார் என துர்கா எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஆனால் செண்பகமோ துர்கா சொன்னதைக் கேட்டுச் சிரித்தவர், “எனக்கும் தெரியும்மா. இங்க நடந்ததை எல்லாம் பார்த்துட்டுத் தான் நான் இங்கேயே வந்தேன்” என்றார் செண்பகம்.

இப்போது அதிர்ச்சியானது துர்கா தான். “அம்மா என்ன சொல்றீங்க? அப்போ நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை எல்லாம் கேட்டுட்டுத் தான் நீங்க இங்கே வந்தீங்களா? நான் தான் சங்கவியை அடிச்சேன்னு தெரிஞ்சும் அவளை ஏன் திட்டுனீங்க? அவளை ஏன் என்கிட்ட மன்னிப்புக் கேட்க வச்சீங்க? ஏற்கனவே அவ என் மேல பயங்கர கோபத்துல இருப்பா. இப்போ நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணாமல் எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்கீங்க. அவ சும்மா இருக்க மாட்டா” என துர்கா செண்பகத்திடம் கேட்க.

“அவ வாழ்க்கையில கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு துர்கா. இன்னமும் அவ வாழ்க்கையோட அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அடுத்தவங்கள கெடுக்கறதிலேயே குறியா இருக்கா. அவ குணத்தை மாத்தணும். அதுக்கு இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை முன்னமே கண்டிச்சு வச்சா தான் அவ கொஞ்சமாவது யோசிப்பா” என்றார் செண்பகம்.

துர்காவுக்கு செண்பகம் பேசியதைக் கேட்டு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. தயக்கமாக செண்பகத்தின் அருகில் வந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு, “அம்மா! சங்கவி இப்போ நல்லவளா கெட்டவளா என்று பேச வரல. ஆனா இன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு முழுக்க முழுக்கக் காரணம் நான் தான். அதனால நீங்க அவகிட்ட உங்க கோபத்தைக் காட்டவோ இல்லை நியாயம் பேசவோ இல்ல. தப்பு செஞ்சது நான். நான் தான் அவளை அடிச்சேன். அதுக்காக நீங்க அவளை என்கிட்ட மன்னிப்புக் கேட்க வச்சிட்டீங்க. அவர் ரொம்ப கோபமா உள்ள போறா. நீங்க போய் அவளை சமாதானப்படுத்துங்கமா. பாவம் சங்கவி” என்றால் துர்கா.

“அவ உன்னை அவ்வளவு பேசியும் நீ சங்கவிக்குத் தான் சப்போர்ட் பண்ணிப் பேசுற. உன்னோட நல்ல குணத்தை இந்தக் சங்கவி எப்போ தான் புரிஞ்சுக்கப் போறாரோ தெரியல” எனப் புலம்பி அப்படியே செண்பகம் சங்கவியின் அறையை நோக்கி அவளைச் சமாதானம் செய்யச் சென்றார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured