Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 271

உன் ரகசிய ரசிகை நான் 271

by Layas Tamil Novel
117 views

EPI 271

மரகதம், அபி இருவரும் மண்டபத்திற்கு வந்து யாரோ போல அமர்ந்து இருந்தனர். அதை மேடையில் இருந்து பார்த்த சங்கவி. ‘நான் சொன்ன மாதிரி செய்து இருந்தா இந்த நேரம் இப்படி யாரோ போல இங்கே இருந்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதில்ல.. தேவைதான், இதுங்களுக்கு இது தேவைதாம்’ என்று நினைத்துக் கொண்டவள், அவள் ஆட்கள் மண்டபத்திற்குள் உலாவிக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் தான் சங்கவிக்கு நிம்மதி வந்தது.

‘அப்பாடா ஒரு வழியா வந்துட்டானுங்க’ என்று நினைத்தவள், ‘இனி அடுத்து என்னோட வேலையை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்திருச்சு’ என்று நினைத்தவள் திரும்பி முதலில் மணமேடையில் துர்காவைத் தான் அவள் கண்கள் தேடியது.

சங்கவியைப் போலவே மேடையில் மற்றொரு பக்கம் நின்று கொண்டு கீர்த்திகா, ராதா, ஷிவு, மாதவி இவர்களுடன் பேசிச் சிரித்த படி நின்று இருந்தாள்.

அவர்கள் அனைவரும் ஒன்று கூடிச் சந்தோசமாகச் சிரித்துப் பேசுவதைப் பார்த்த சங்கவிக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. ‘எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்களா? இந்தச் சந்தோஷம் இன்னையோட உங்க வாழ்க்கையில் இருந்து மொத்தமா காணாம போயிடப் போகுது’ என அவர்களைப் பார்த்து நினைத்துக் கொண்ட சங்கவி திரும்பி தன் ஆட்களைக் கவனித்தாள்.

வந்திருந்தவர்களோடு ஒன்றாகக் கலந்திருந்த அவளுடைய ஆட்களில் ஒருவன் மட்டும் சங்கவியை அங்கே இருந்து தேடிக் கொண்டு இருந்தான். அவன் தன்னைத்தான் தேடுகிறான் எனத் தெரிந்ததும் மேடையில் இருந்து தன் கைகளை யாருக்கும் தெரியாமல் லேசாக உயர்த்தித் தான் இங்கே இருப்பதாக அவனிடம் சிக்னல் கொடுத்தாள்.

முதலில் சங்கவியின் சிக்னலை அவன் கவனிக்கவில்லை. அவனை மண்டபத்தின் முன் வரிசையில் தேடிக் கொண்டு இருந்தான். ‘முட்டாள்! முட்டாள்! நான் இங்கே இருந்து கை காட்டுவது கூடத் தெரியாம அங்க என்ன தேடிட்டு இருக்கான்!’ என்று தன் கையை மேலும் லேசாக உயர்த்தி மேடைக்குக் கீழே இருந்தவனுக்கு சிக்னல் செய்ய, இப்போதுதான் அவன் சங்கவியைப் பார்த்தான். அவன் சங்கவியைப் பார்த்ததும் வேகமாக அவளிடம் சங்கவி அவனுக்குக் கொடுத்திருந்த வேலையை முடித்து விட்டதாக அவளுக்குத் தன் கட்டை விரலை உயர்த்தி காட்டிக் கூற.

சங்கவி சரி என்று தலையாட்டியவள் அவனை அங்கே இருக்கச் சொல்லி சிக்னல் செய்தால்.

அனைத்துச் சம்பிரதாயங்களும் முடிந்து வெங்கடாச்சலம் விசாலாட்சியின் கழுத்தில் தாலி கட்டப் போக… அவர் சரியாகத் தாலி கட்டும் சமயம் பார்த்து, ‘இந்தத் திருமணத்தை நிப்பாட்டினால் தான் சரியாக இருக்கும்’ என்று அவர் தாலியை கையில் எடுத்து கழுத்தில் கட்டப் போவதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருக்க, அவர் கட்டப் போகும் சமயம் பார்த்து “நிறுத்துங்க” என சங்கவி கத்த வருவதற்குள் வெங்கடாச்சலமே விசாலாட்சியின் கழுத்தில் தாலி கட்டுவதை நிப்பாட்டினார்.

அதைப் பார்த்ததுமே சங்கவி ஷாக் ஆகிவிட்டால். ‘நான் தானே இந்தக் கல்யாணத்தை நிப்பாட்டனும். ஏன் இந்தக் கிழவன் தாலி கட்டாமல் இருக்கான்?’ என சங்கவிக்குக் குழப்பமாக இருந்தது. அதே குழப்பத்தோடு அவள் வெங்கடாச்சலத்தைப் பார்க்க.

தாலியை கையில் வைத்துக் கொண்டு விசாலாட்சியை வெங்கடாச்சலம் பார்க்க, விசாலாட்சி கண்கள் மூடி ஏதோ அவருக்குச் சம்மதம் சொல்ல, அவர் சொன்ன பிறகு சிரித்தவர் மேடையில் இருந்து மண்டபத்திற்குள் வந்திருந்தவர்களைப் பார்த்தார்.

அங்கே கூட்டமாக மரகதமும் அபியும் அமர்ந்திருப்பதைப் பார்த்தவர் அவர்கள் இருவரையும் பார்த்து மேடைக்கு வருமாறு சைகை செய்தார்.

வெங்கடாச்சலம் மேடையில் இருந்து யாரை வரச் சொல்லி சைகை செய்கிறார் என சங்கவி பார்க்க அங்கே மரகதமும் அபியும் எழுந்து மேடையை நோக்கி வர அவளுக்கு அதிர்ச்சியானது.

‘அவங்க ரெண்டு பேரையும் இந்தக் கிழவன் எதுக்கு மேடைக்கு கூப்பிடுறான்?’ என குழப்பமாக அவர்கள் இருவரையும் சங்கவி பார்த்துக் கொண்டு இருக்க… மரகதம் அபியும் தயங்கியப்படியே மேடை ஏறி மேலே வர..

துர்கா அவரிடம் வந்தவள் மரகதத்தை அழைத்துக் கொண்டு வந்து வெங்கடாச்சலத்தின் மறுபக்கத்தில் அமர வைத்தாள்.

இதைச் சங்கவி எதிர்பார்க்கவே இல்லை. ‘என்ன செண்பகமும் மரகதமும் ஏற்கனவே விவாகரத்து செய்து பிரிந்து இருக்கிறார்கள். இப்போது எதற்காகக் கையில் தாலியை வைத்துக்கொண்டு தன்னருகில் மரகதத்தை அமர வைக்கிறார்?’ என யோசனையோடு அவள் நின்று இருக்க.

கையில் தாலியோடு மேடையில் அமர்ந்திருந்த வெங்கடாச்சலம் கீழே இருந்தவர்களை எல்லாம் பார்த்து, “உங்களில் சில பேருக்கு என்னுடைய முதல் கல்யாணத்தைப் பற்றித் தெரிஞ்சி இருக்க வாய்ப்பிருக்கு. ஆனா நிறைய பேருக்கு எனக்கு ஏற்கனவே ஒரு குடும்பமும் ஒரு பெண்ணும் இருக்கிறதே தெரிஞ்சிருக்காது. இந்த அறுபதாவது திருமணத்தில என்னோட இன்னொரு குடும்பத்தை உங்க எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன்” என்றவர் தன் அருகில் அமர்ந்திருந்த மரகதத்தைக் காட்டி, “இவர்தான் என்னோட முதல் மனைவி” என்றவர் அபியைப் பார்த்து, “இங்கே வா வா” என அழைத்தார்.

அவளும் தயங்கிக் கொண்டு மேடைக்கு அருகில் தன் தாயிடம் வந்து நிற்க, “இவர்தான் என்னோட முதல் மனைவிக்குப் பிறந்த பெண், பெயர் அபி” என்றவர் அவள் இப்போது ஆரம்பித்திருக்கும் பிசினஸ் ஐப் பற்றிச் சொல்லிவிட்டு.

“மரகதமும் நானும் மனஸ்தாபத்துல பிரிஞ்சிட்டாலும் எங்க பொண்ணுக்காக நாங்க அடிக்கடி பேசுகிறது உண்டு. இத்தனை நாளும் அவங்க என்னுடைய உறவுன்னு அடையாளத்தைக் காட்டிக்காமலேயே வந்துட்டாங்க. இனியும் அப்படி இருக்க முடியாது. என் பொண்ணுக்கும் கல்யாணம் செய்கிற வயசு ஆகிடுச்சு. இன்னமும் அவள் என்னுடைய பொண்ணுன்னு நான் ஊர் அறிய நிரூபிக்காமல் இருப்பது அது நான் என்னோட மகளுக்கு செய்ற துரோகம்.

ஆதி, கதிர் எனக்கு எப்படியோ அதேபோலத்தான் அபியும் எனக்கு ரொம்ப முக்கியம். அவள் என்னுடைய முதல் குழந்தை. அவளை நான் எந்த ஒரு காரணத்துக்காகவும் இந்தச் சமூகத்தில் இறக்கிப் பார்க்கவோ, மத்தவங்க கேலி பேசவோ விடமாட்டேன்” என்றவர்.

“என்னோட முதல் மனைவியை இந்த மேடையில தாலி கட்டி, அவங்கள.. இந்த ஊரறிய என்னுடைய மனைவியா காட்டிக்க விரும்புகிறேன். அவங்க கழுத்துல நான் தாலி கட்டுறதுக்கு ஒரே ஒரு காரணம் என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும் என்பதற்காக மட்டுமே ஒழிய, இந்தத் தாலியைக் கட்டுனதால மரகதத்திற்கும் என்னோட குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு குழப்பமாக அனைவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்ள, மேடையில் நின்றிருந்த அபியும் மரகதம் கூட குழம்பிப் போயினர்.

ஏனென்றால் ஏற்கனவே மரகதம் அபி இருவருக்கும் சேர வேண்டிய அனைத்தையும் ஆதி முறையாக எழுதி கொடுத்திருக்க, அது அவனுடைய அம்மா அப்பாவின் திருமணத்திற்குப் பின்பு கைக்கு வந்து சேரும் என்று சொல்லி இருந்தான்.

இப்போது வெங்கடாச்சலமும் மேடையில் மரகதத்தின் கழுத்தில் தாலி கட்டப் போவதும், ஆனால் அவருடைய முதல் மனைவி என்ற அந்தஸ்தை மட்டும்தான் கொடுக்கப் போவதாகவும். இப்படித் தன்னுடைய குடும்பத்தோடு எந்த ஒட்டும் உறவும் இல்லை என்று சொன்னதைக் கேட்டதுமே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர் அப்படிச் சொன்னதும் மேடையில் இவ்வளவு நேரம் அவர் அருகில் அமைதியாக அமர்ந்திருந்த மரகதம் வேகமாக எழுந்து வெங்கடாச்சலத்தைப் பார்த்து, “ஊர் அறிய என் கழுத்துல தாலி கட்டிட்டு உங்க குடும்பத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்? எங்களுக்குச் சேர வேண்டியதை எங்ககிட்ட கொடுக்கிறேன் என்று தானே பேச்சு? இப்போ இப்படி வாக்கு மாறினால் என்ன அர்த்தம்?” என்றார்.

அவர் நடந்து கொண்டதைப் பார்த்து லேசாகச் சிரித்த வெங்கடாச்சலம், “அப்போ உனக்கு நான் தாலி கட்டி என்னோட முதல் மனைவி என்று கொடுக்கிற உரிமை வேண்டாம். என்னோட சொத்துக்களும், பணமும் மட்டும் தான் வேணும் அப்படித்தானே?” என்றார்.

“நீ கட்டுற வெறும் ஒத்தத் தாலிய வச்சுட்டு என்னோட பொண்ணு வாழ்க்கையைச் சரியா அமைச்சு கொடுக்க முடியுமா? அதுக்கு பணம், காசு வேண்டாமா? இந்தக் காலத்துல பணம் இல்லாம எந்த ஒரு வேலையும் நடக்காது. நீ இப்படித் தாலியைக் கட்டிட்டு உன் குடும்பத்துக்கு எனக்கு ஒட்டும் இல்ல உறவும் இல்லைன்னு சொன்னா சரின்னு நான் கழுத்தை நீட்டி உன் கையால தாலியை வாங்கிக் கட்டிக்க நான் ஒண்ணும் இந்த இளிச்சவாய் விசாலாட்சி கிடையாது” என்று அவர் அருகில் அமர்ந்திருந்த விசாலாட்சியைப் பார்த்து விஷ வார்த்தைகளைத் தடவினார்.

அவர் இப்படிச் சொன்னதும் மேடைக்கு அருகில் நின்றிருந்த ஆதிக்கும் கதிரும் தன் தாயைப் பார்த்து கேவலமாகப் பேசும் மரகதத்தை இருவரும் செல்லப் போக, அப்போது துரை அவர்கள் இருவரையும் பிடித்து தடுத்து நிறுத்தினார்.

“கொஞ்சம் பொறுங்க ஆதி. பிளான் போட்ட நீங்களே எப்படி குறுக்கே போய் அத நடக்க விடாமல் செய்யலாமா? என் அக்காவைப் பேசுறவங்கள நானே எதுவும் செய்யாம அமைதியா இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரம் பொறுங்க எல்லாம் சரியா போயிடும்” என்று அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து கஷ்டப்பட்டுத் தன்னருகில் நிற்க வைத்துக் கொண்டார் துரை.

விசாலாட்சி அவர் இளிச்சவாய் என்று சொன்னதும் வெங்கடாச்சலத்திற்குக் கோபம் வந்தது. “இங்க பாரு மரகதம். ஏன் விசாலாட்சியைப் பத்தி எனக்குத் தெரியும். அவளைப் பத்தி நீ தேவையில்லாமப் பேசுற வேலை எல்லாம் வேண்டாம்.

இப்போ முடிவா சொல்லு. என் கையால இந்தத் தாலியை நீ ஏத்துக்கப் போறியா இல்லையா?” என்றார்.

“உன் கையால தாலிய கட்டிக்கிட்டா எல்லாம் எனக்குக் கிடைச்சிடுமா? நீ தான் குடும்பத்தோட ஒட்டும் இல்ல உறவும் இல்லைன்னு சொல்லிட்டியே? அதுக்கப்புறம் நான் இந்தக் கல்யாணத்தை செஞ்சுக்கிட்டு அதுவும் இத்தனை வருஷங்களுக்கு இந்தக் கல்யாணம் செய்து எனக்கு என்ன இதுல லாபம் இருந்துட்டுப் போகுது? எனக்கு இந்தத் தாலியும் வேண்டாம். நீயும் வேண்டாம்” என்று அவர் முகத்தில் அடித்தார் போல மரகதம் சொல்ல…

அறுபதாம் கல்யாணத்திற்கு வந்திருந்த வெங்கடாச்சலத்தின் உறவினர்களுக்கு ஏற்கனவே மரகதத்தைப் பற்றித் தெரியும் என்றாலும், வந்திருந்த மற்ற ஆட்களுக்கு மரகதத்தின் இந்தக் பேச்சு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

வெங்கடாச்சலம் தன் முதல் மனைவியை விட்டுப் பிரிந்து விசாலாட்சியை கல்யாணம் செய்து கொண்டதற்கான காரணத்தை அவர்கள் நேரடியாகக் கண்டு கொண்டனர்.

வெங்கடாச்சலம் இருக்கும் வசதி வாய்ப்பிற்கு அவர் என் கையால் வெறுமனே தாலியை வாங்கிக் கொண்டால் மட்டுமே போதும் மரகதம். மற்ற அனைத்தும் அவரை தானாகவே வந்து சேரும். வெங்கடாச்சலம் தன் குடும்பத்தோடு மட்டும் தானே உறவு இல்லை என்று சொன்னார். மற்றபடி வேறு எதுவும் சொல்லவில்லையே? ஆனால் இந்த மரகதம் அதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் அவர் கையால் இத்தனை வருடம் கழித்து மீண்டும் தாலியை ஏற்றுக்கொள்ளும் பாக்கியத்தை அவரே வேண்டாம் என்று உதாசீனமாகப் பேசுகிறாரே என அவரை அனைவரும் தங்களுக்குள் திட்டித் தீர்த்தனர்.

மரகதத்தின் உண்மையான சொரூபம் இதுதான் என அனைவருக்கும் அவர் காட்டிவிட… உடனே வெங்கடாச்சலம், “அப்போ உனக்குச் சொத்துக்களும், என்கிட்ட இருந்து உனக்கு வரவேண்டிய பணம் மட்டும் போதும். இந்தத் தாலி வேண்டாம். இதை நான் என் விசாலாட்சி கழுத்தில் கட்டலாம் அப்படித்தானே?” என்றார் சிரித்துக் கொண்டே.

“ஆமா. இந்த மஞ்ச கயிறு வச்சுக்கிட்டு நான் என்ன ஆக்க வலிக்க முடியும்? அதெல்லாம் எனக்கு வேண்டாம். என் பொண்ணுக்கும் எனக்கும் சேர வேண்டியத கொடுத்துட்டா நாங்க இங்க இருந்து வெளியே போயிடுவோம். எங்களுக்கு வேற எதுவுமே வேண்டாம்” என்றார் மரகதம்.

“அப்போ என் விசாலாட்சி கழுத்துல நான் தாலி கட்டலாம் தானே?” என்றார் வெங்கடாச்சலம் மீண்டும்.

இதுவரை அமைதியாக நின்றிருந்த அபி திரும்பத் திரும்ப, “இதையே கேட்டுட்டு இருக்கீங்க. அந்தப் பொம்பளை கழுத்துல தாலி கட்டணும் இப்போ உங்களுக்கு அப்படித்தானே? முதல்ல எங்களுக்குச் சேர வேண்டியத கொடுத்துட்டு அதுக்கப்புறம் உங்க பக்கத்துல உட்கார்ந்து இருக்காளே அந்தப் பொம்பளை, அவள் கழுத்துல தாலி கட்டுங்க” என்றால்.

தன் மகளைப் பாசமாகப் பார்த்த வெங்கடாச்சலம், “அம்மாவுக்குத் தான் புத்தி கெட்டுப் போயிடுச்சு. அவள் இப்படி எல்லாம் பொதுவுல நடத்துகிறாளா? உனக்கும் அவள் புத்தி தானே இருக்கு? கொஞ்சம் கூட யோசிச்சு செயல்படனும் என்கிற எண்ணமே உனக்கு இல்லையா அபி?” என்றவர், “இப்போ உங்க ரெண்டு பேருக்குமே என்னோட பணம் காசு, என்கிட்ட இருந்து வர சொத்துகளும் தான் வேணும் அப்படித்தானே?” என்றார்.

“ஆமாம்” என்று அபி சிறிதும் யோசிக்காமல் தலையை ஆட்ட, அவர்கள் இருவரையும் பார்த்து விரக்தியாகப் புன்னகைத்த வெங்கடாச்சலம், “ஆதி” என மேடையில் ஓரத்தில் நின்றிருந்தவனைப் பார்த்துச் சத்தமிட… அவர் அழைப்பைக் கேட்டதும் ஆதி, கதிர் இருவரும் மேடைக்கு ஓடி வந்தனர்.

“சொல்லுங்கப்பா” என்றான் ஆதி வந்த வேகத்தில். “இங்கே இருக்கிற எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க. என்னோட தாத்தா காலத்துல இருந்து எனக்காக இருந்த சொத்துக்களும், பணம், நகை அனைத்தையுமே நான் மரகதம், அபி இவங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கப் போறேன். இந்தப் பணம், நகை எல்லாம் அவங்க வாங்கிட்டு இங்கிருந்து மண்டபத்தை விட்டு வெளியே போயிட்டாங்கன்னா அவங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்றவர் ஆதி, கதிர் மற்றும் மேடையில் நின்றிருந்த அவர் குடும்பம் மொத்தத்தையும் பார்த்து, “என்னோட இந்த முடிவுல உங்க யாருக்காவது எதுவும் ஆட்சேபனை இருக்கா? எனக்குச் சேர வேண்டிய சொத்துக்களும், பணம், நகை அனைத்துமே நான் இவங்களுக்குக் கொடுத்துடப் போறேன்” என்றார்.

“ஆதி, கதிர்… எங்களுக்கு இதுல எந்த ஆட்சேபனையும் இல்லப்பா. உங்களுக்குச் சேர வேண்டியது மட்டும் இல்ல, நம்ம கிட்ட இருக்குற எல்லாத்தையும் நீங்க அவங்களுக்குக் கொடுப்பதாக இருந்தாலும் கொடுத்துடுங்க. எங்களால அதைவிட இன்னும் அதிகமா சம்பாதிக்க முடியும்” என்றால் ஆதி. கதிரும் அதற்குச் சம்மதம் என்று தலையாட்டினான்.

இங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சங்கவிக்கு மிகவும் அதிர்ச்சியாகப் போனது. வெங்கடாச்சலம் தனக்கு இருக்கும் அனைத்துச் சொத்துக்களையும் இந்த மரகதம், அபி இருவருக்கும் எழுதி வைக்கிறேன் என்று சொல்கிறாரே? அப்படி அவர் எழுதி வைத்துவிட்டால் தனக்கு எங்கே இருந்து சல்லிக் காசு தேறாதே? இப்போது என்ன செய்வது? தன்னுடைய பிளான் வேறு விதமாக இருக்க அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் படி வெங்கடாச்சலத்தின் இந்த முடிவு அவளை நிலைகுலைய செய்தது.

சங்கவி தன் மூளையைப் போட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று கசக்கிக் கொண்டு இருக்க, அப்போது வெங்கடாச்சலம் மரகதம், அபி இருவரையும் பார்த்து, “என்னுடைய சொத்துக்களை எல்லாம், எனக்குச் சேர வேண்டிய சொத்துக்களை மட்டுமே நான் உங்களுக்கு எழுதி வைக்கிறேன். அந்தச் சொத்துக்கள் எல்லாம் உங்களுக்கு முழுசா வந்து சேரனும்னா நான் சொல்ற கண்டிஷனுக்கு நீங்க ஓகே சொல்லணும். அப்போ தான் அந்தச் சொத்துக்கள் எல்லாம் முழுமையா உங்க ரெண்டு பேருக்குமே வந்து சேரும்” என்றார்.

“ஏன்? எந்தக் கண்டிஷன் போட்டாலும் அதுக்கு நாங்க ஒத்துழைக்கிறோம். முதல்ல எங்களுக்குச் சேர வேண்டிய சொத்துக்களை எல்லாம் கொடுங்க. ஏற்கனவே ஆதிக்கும் கதிரும் அந்தச் சொத்துப் பத்திரத்தில் எல்லாம் எங்ககிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க” என்றால் அபி.

“ஆதி!” என்று வெங்கடாச்சலம் ஆதியைப் பார்க்க, அவன் தம்பி விக்கியைப் பார்த்தான். விக்கி இதுவரை கையில் வைத்திருந்த பேக்கில் இருந்து சில சொத்துப் பத்திரங்களை எடுத்துக் கொண்டு வந்து ஆதியின் கையில் கொடுக்க, அதை வெங்கடாச்சலத்தின் கையில் ஆதி கொடுத்தான்.

அந்தச் சொத்துப் பத்திரங்களை எல்லாம் வாங்கி வெங்கடாச்சலம் ஒருமுறை பார்த்துவிட்டு, “இதில் உங்க யாருக்குமே மனவருத்தமோ சங்கடமோ கிடையாது? அப்படி இருந்தா இப்பவே சொல்லிடுங்க” என்றார் வெங்கடாச்சலம். யாருமே அவர் கேட்டதற்கு எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் அமைதியாக மேடையில் நின்று இருக்க, அவர்களையெல்லாம் பார்த்துச் சந்தோசமானவர், “குடும்பம் உறவுங்கிறது இந்தச் சொத்து பத்துக்களை முடிவாகறது இல்ல. உங்களைப் போல நல்ல எண்ணமும், உறவு மட்டுமே முக்கியம்கிற நினைப்பும் இருக்கிறவங்க தான் வேணும்” என்றவர், “இப்படிப்பட்ட இந்த உறவு கிடைச்சதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கேன்” என்றவர் மரகதத்தைப் பார்த்து அவர் கையில் இருந்த தனக்குச் சேர வேண்டிய சொத்துப் பத்திரங்களை அவரிடம் நீட்ட…

சங்கவிக்கு இப்போது இதயத்துடிப்பு எகிறி எது அவள் இதயமே வெடித்து விடும் போல இருந்தது. ‘இந்தக் காரியத்தைப் பார்த்து வெங்கடாச்சலத்தின் சொத்து பத்துக்கள் கோடிகளைத் தாண்டி கணக்கில்லாமல் இருக்க, அதை அப்படியே தூக்கி இந்த மரகதத்தின் கையில் கொடுப்பதா? இதுக்குத் தான் தான் இத்தனை காலம் பொறுமையாக இந்த வீட்டிலே இருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தேனா?’ என ஆத்திரமாக வந்தது. அவளுக்கு இப்போது என்ன செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்க, மரகதத்தின் கையில் வெங்கடாச்சலம் அந்தச் சொத்துப் பத்திரங்களைக் கொடுக்கப் போகும் நேரம் சரியாக “நிறுத்துங்க” என்ற ஒரு குரல் அந்த மண்டபத்தையே அதிரும்படி கேட்டது.

குரல் வந்த திசையைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக, சங்கவியோ அதற்கு மேல் அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டு மேடையில் நின்று இருந்தால்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured