Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 282

உன் ரகசிய ரசிகை நான் 282

by Layas Tamil Novel
180 views

EPISODE 282

ஆதி, துர்கா இருவரின் வீடு மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது.

கனகா, துரை இருவரும் ஷிவுவிடமும், ராதாவிடமும் விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தனர்.

“ஏ ராதா, வீட்டுக்கு வர இவ்வளவு நேரமாடி? எத்தனை வேலை கிடக்கு! காலையில நேரமே வந்திடணும்னு சொன்னேனா இல்லையா? இப்படி ஆடி அசைந்து வர இந்த வேலையெல்லாம் நம்மதானே பார்க்கணும்” என்று அவளைக் கடிந்தார்.

“அம்மா, இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? என்னமோ நம்ம வீட்ல நான் வந்துதான் எல்லா வேலையும் செய்யற மாதிரி இல்ல என்ன விரட்டுற. அங்க பாரு ஷிவு, அவளைப் பார்த்தியா? அவ என்ன பண்ணிட்டு இருக்கான்னு கவனிச்சியா?” என்றாள்.

ராதா சொன்னதும் ஷிவு இருந்த பக்கத்தைத் திரும்பிப் பார்த்தார் கனகா. அங்கே ஷிவு கனகா கொடுத்த வேலையைச் செய்யாமல் அங்கே நின்று வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தாள்.

“இவளுக்கு என்னடி ஆச்சு? ஏன் இப்படி நிக்கிறா?” என கனகா புரியாமல் கேட்க,

“ம்ம்… வேற நான் சொல்லணுமா உனக்கு? அவை ஏன் அப்படி நிக்கிறான்னு தெரிஞ்சுக்கணும்னு நீயே போய் கேட்டுக்க… உன் பொண்ணுக்கு இன்னும் குழந்தை பொறந்த நினைப்பே இல்லை. அவ புருஷன் கூட சேர்ந்துட்டு சும்மா லவ் பண்றாங்க என்ற பெயரில் இருக்கிறவங்களை எல்லாரையும் டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கா. அங்க பாரு” என்றாள்.

அவள் காட்டிய இடத்தைச் கனகா பார்க்க, அங்கே ருபேஷ் கையில் ஒரு ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சுவதுபோல ஷிவுவைப் பார்த்து கொஞ்சிக்கொண்டு இருந்தான்.

“என் பட்டுக்குட்டி! என் செல்லம், டார்லிங், கண்ணுக்குட்டி! ஏண்டா இப்படி வேலை செஞ்சு உடம்பைக் கெடுத்துக்குற? உன்னை யார் இந்த வேலையெல்லாம் இழுத்துப் போட்டு செய்யச் சொன்னது? பேசாம போய் ரெஸ்ட் எடுடா தங்கம்” என்று ருபேஷ் ஷிவுவைப் பார்த்துப் பேசிக்கொண்டு இருக்க…

அவள் நின்ற இடத்தில் இருந்து, “நான் போய் ரெஸ்ட் எடுத்தால் என் அம்மா என்னோட கால் ரெண்டையும் ஒடச்சிடுவாங்க. என்ன பண்ண? நம்மள கொஞ்ச நேரம் தனியாப் பேசக்கூட என் அம்மா விடமாட்டிங்குது” என்று அவள் ருபேஷிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

“இந்த அத்தைக்கு வேற வேலையே இல்லை. எப்ப பாரு என் பொண்டாட்டியை வேலை வாங்குவதிலேயே குறியா இருக்காங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவள் பின்னால் வந்து நின்ற கனகாவைப் பார்த்துச் சிரித்தவன், “சாரி அத்தை! நான் எதுவும் சொல்லல. அவ தான்…” என்று ஷிவுவைக் கை காட்ட…

அவள் காதைக் கிள்ளித் திருகிய கனகா, “ஏண்டி! என் மாப்பிள்ளைதான் புரியாம உன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்காருன்னா உனக்காவது அறிவு வேண்டாமா? இப்படித்தான் எல்லாரும் இருக்கும்போது புருஷன் பொண்டாட்டி கொஞ்சிக்கிட்டு இருப்பீங்களா?.. உங்க கொஞ்சலை எல்லாம் போய் உன் வீட்ல வச்சுக்கோ. இங்க வந்த வேலையைப் பாரு” என்று அவளை அதட்ட.

“ஷ்… அம்மா விடுங்க, வலிக்குது” என்று தன் காதிலிருந்து கனகாவின் கையை எடுத்துவிட்டவள். “என்ன? இங்க இருக்கிற இந்த தாம்பாளத் தட்டையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்ப் பூஜை ரூம்ல வைக்கணும், அவ்வளவுதானே? நான்தான் அதான் இதையெல்லாம் செய்தேன் என்று சொன்னேனே. அப்புறம் என்ன, போங்க. என்னை அதட்டுவதையே விட்டுட்டு வேற யாராவது வேலை வாங்குற வழியைப் பாருங்க” என்றவள், குனிந்து உள்ளது இல்லையே எடை குறைவாக இருந்த ஒரு தட்டை எடுத்துக்கொண்டு பூஜை அறைக்குச் சென்றாள்.

“விடுங்க, எல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும் தான் என் பேச்சைக் கேட்கிறார்கள். கல்யாணம் ஆகிவிட்டால் அவர்கள் ராஜ்ஜியம் தான்” என்று புலம்பியவர்.

“அண்ணி! அண்ணி! இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? மண்டபத்துக்குப் போக நேரம் ஆயிடுச்சு. இன்னும் சமையல் கட்டுல என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அதுதான் சாப்பாடு செய்யச் சொல்லி அங்கேயே சொல்லியாச்சு. இங்கே யாருக்குத் தனியாச் சமைக்கிறீங்க?” என்றார் கனகா.

“இதோ அஞ்சு நிமிஷம் வந்திடுறேன் கனகா. நம்ம துர்காவுக்கும், கீர்த்திகாவுக்கும் கஞ்சி வச்சுக்கிட்டு இருக்கேன். பாவம் அவங்க ரெண்டு பேருமே பசி தாங்க மாட்டாங்க. மண்டபத்துக்குப் போயிட்டா அப்புறம் அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பிடக் கூட நேரம் இருக்காது. இங்கேயே கொஞ்சம் சாப்பிட வச்சு அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போலாம்னு தான் பால் கஞ்சி வச்சுட்டு இருக்கேன்” என்றார்.

“இந்தப் துர்காவை நான் பெத்தேனா இல்ல நீங்க பெத்தீங்களான்னு தெரியல. துர்கா… துர்கா… அவளுக்கு ஏன் தான் இப்படி உருகுறீங்களோ தெரியல. அவளுக்குத் தான் உருகுறீங்கன்னு பார்த்தா, உங்க சின்ன மருமகள் கீர்த்திகாவையும் அதேபோல தாங்கு தாங்குன்னு தாங்குறீங்க. எனக்கெல்லாம் இப்படி ஒரு மாமியார் கிடைச்சிருந்தா நான் இந்த நேரம் எவ்வளவு சந்தோசமா இருந்திருப்பேன். உங்க அம்மாவும் தான் என்னைப் பார்த்துக்கிட்டாங்களே? நின்னா குத்தம், உட்கார்ந்தா குத்தம் என்று ஏதாவது என்னைப் பேசிக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்குப் பிறந்துட்டு நீங்க மட்டும் எப்படி நல்ல மாமியாரா இருக்கீங்க? என்னால இதை நம்பவே முடியல” என்றார் கனகா.

“இப்ப என்ன உனக்கு உங்க மாமியார் நினைப்பு திடீர்னு வந்துடுச்சு? ஏன் என் மருமகள்களை நான் பார்த்துக்கக் கூடாதா? என் மாமியாரென்றால் ஸ்ட்ரிக்ட்டா, கோவக்காரியாக, மருமகள்களை எப்பப் பாரு குறை சொல்லிக்கிட்டே இருக்கணும்னு ஏதாவது இருக்கா என்ன? அவங்களும் என் பொண்ணுங்க மாதிரி தானே? எனக்குப் பொண்ணு இல்லாத குறையை துர்காவும் கீர்த்திகாவும் தான் தீர்த்து வைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன் மருமகள்களை நான் தாங்கறதுல என்ன தப்பு?” என்றார் விசாலாட்சி.

“அடடா! நீங்க சொல்றதெல்லாம் கேட்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா நடைமுறையில் வரப்போ அது சாத்தியமே இல்லை அண்ணி” என்ற கனகா. “ஆமாம், கீர்த்திகா ரெடியாகிட்டாளா? அவளை யாரும் கவனிச்சீங்களா? வழக்கம் போல அவ தூங்கிடப் போறா” என்றவர்.

இப்போதுதான் விக்கியுடன் ஆதி வீட்டிற்குள் நுழைந்த நிலானியைப் பார்த்த கனகா, “அடடே நிலானி! வா வா, வந்துட்டியா!” என்றவர்.

அவள் இடுப்பில் தூக்கி வைத்திருந்த விக்கி (நிலானியின் பெண்ணை) வாங்கிக்கொண்டவர். நிலானியைப் பார்த்து, “கொஞ்சம் கீர்த்திகாவைப் போய் பார்த்துட்டு வாங்க. காலையில் இருந்து இன்னும் ரூமை விட்டு வெளியே வரவில்லை” என்றார்.

“சரிமா, இருங்க நான் போய் அவளைப் பார்த்துட்டு வரேன்” என்று ராதாவைப் பார்த்து, “ஏ ராதா, நீயும் வாடி, அவளைப் போய் கூட்டிட்டு வருவோம்” என்று கீர்த்திகா இருந்த அறையை நோக்கிச் சென்றனர்.

அவர்கள் இருவரும் கீர்த்திகா அறைக்குச் செல்லவும், கீர்த்திகாவின் அறையைத் திறந்துகொண்டு வெளியே கதிர் வரவும் சரியாக இருந்தது. அவன் வெளியே வரும்பொழுது வியர்க்க விறுவிறுக்க… நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு வந்தவன், அவன் எதிரே நின்றிருந்த ராதா நிலானி இருவரையும் பார்த்து, “அப்பாடி! நீங்க ரெண்டு பேரும் ஒரு வழியா வந்துட்டீங்களா? இவளை என்னால தனியாச் சமாளிக்கவே முடியல. எதைச் சொன்னாலும் முடியாது, மாட்டேன் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கா. நீங்க போய் கொஞ்சம் அவகிட்டச் சொல்லி சீக்கிரமா ரெடி ஆகி வரச் சொல்லுங்க. குறித்த நேரத்துக்குள்ள மண்டபத்துக்குப் போகணும்னு ஐயர் சொல்லியிருக்காரு. ஆனா இவ என்னடான்னா இன்னமும் குளிச்சிட்டு வந்துட்டு அதே டிரஸ் ஓட இருக்கா. துணி கூட மாத்திக்காம அப்படியே உட்கார்ந்திருக்கா. நானும் என்னென்னமோ செஞ்சு பார்த்துட்டு முடியாம தான் வெளியே வந்துட்டேன்” என்றான்.

“அண்ணா, நீங்க அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க. இப்ப என்ன? கீர்த்திகா அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு வெளியே வரணும், அதானே? ஒரு பத்து நிமிஷம் பொறுங்க. நாங்க அவளை ரெடி பண்ணி வெளியே கூட்டிட்டு வரோம்” என்று விட்டு நிலானி கீர்த்திகாவின் ரூம் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.

கதவைத் திறந்துகொண்டு இருவரும் உள்ளே வர, அங்கே கட்டிலில் கைகளை ஊன்றி பின்னால் சாய்ந்து அமர்ந்து காலைத் தரையில் தொங்கப் போட்டபடி ஏசி காற்றில் உயர்த்து இருந்த தன் உடலுக்குக் குளிர் காட்டிக் கொண்டிருந்தாள்.

“ஏய் கீர்த்திகா, என்னடி இது? இவ்வளவு சாவகாசமா உட்கார்ந்துட்டே? சீக்கிரம் கிளம்பி வா. மண்டபத்துக்கு நேரமாயிடுச்சு இல்ல” என்று அவளை அவசரப்படுத்த.

“ஏய் இருங்கடி. சும்மா ஏன் வந்தவங்க எல்லாரும் என்ன அவசரப்படுத்திக்கிட்டே இருக்கீங்க? நீங்களே பார்க்குறீங்களா நான் எவ்வளவு சிரமப்படுறேன்னு? அப்படி இருக்கும்போது உங்களை யாரு இவ்வளவு சீக்கிரம் ஃபங்ஷன் வைக்கச் சொன்னது? பொறுமையா ஒரு 12 மணி, ஒரு மணிக்கு வைத்திருந்தா நான் நல்லா தூங்கி எழுந்து பிரஷ்ஷா வந்திருப்பேனே. இப்படி காலங்கார்த்தால 9 மணிக்கு உங்களை யாரு ஃபங்ஷன் வைக்கச் சொன்னது? 9 மணிக்கு போக வேண்டிய ஃபங்ஷனுக்கு என்னைக் காலையில 7 மணிக்கு எழுப்பி விட்டு என் உயிரை வாங்குறான் இந்தக் கதிர்” என்று சலித்துக் கொண்டாள் கீர்த்திகா.

“ஏண்டி! உனக்கு காலையில் நேரமே எந்திரிக்கிறது 7 மணிக்கா? அவனவன் இங்கே வருவதற்காக வீட்டில் அத்தனை வேளையும் முடிச்சு வச்சுட்டு எவ்வளவு சீக்கிரமாக வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கோம். நீ என்னடான்னா எவ்வளவு ஜாலியா உட்கார்ந்து ஏசி காத்துல உட்கார்ந்து என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கியா? சீக்கிரமா வந்து இந்தச் சேலையைக் கட்டிட்டு வாடி” என்றால் ராதா.

“ஏய் சேலை எல்லாம் வேணாம் டி. நான் சிம்பிளா ஒரு சுடிதாரோ இல்ல மேக்ஸியோ போட்டுட்டு வரேன். எனக்குச் சேலை வேண்டாம்” என்றவள்.

“இந்தச் சேலையைக் கட்டினால் எனக்கு எல்லா பக்கமும் குத்தும். ஒரே எரிச்சலா இருக்கும். ப்ளீஸ் டி வேண்டாம்” என கீர்த்திகா இருவரிடமும் கெஞ்சினாள்.

“இங்க பாரு, நம்ம ஒன்னும் டூருக்குப் போகல சிம்பிளா டிரஸ் பண்ணிட்டுப் போறதுக்கு. உனக்குத் தெரியும் இது எவ்வளவு பெரிய ஃபங்ஷன்னு. இந்த ஃபங்ஷனுக்குச் சேலை கட்டாம யாராவது சுடிதாரும் மேக்ஸியும் போட்டுட்டுப் போவார்களாடி? அறிவு கெட்டவளே” எனத் திட்டினாள் நிலானி.

“நான் என்னடி பண்ணுவேன்? எனக்குச் சேலை கட்டவே பிடிக்க மாட்டேங்குது. அதைத்தான் அந்தக் கதிர்கிட்டயும் இவ்வளவு நேரம் சொல்லிக்கிட்டு இருந்தேன். அவனும் உங்களை மாதிரிதான் பேசிப் பேசி என்னைக் கடுப்பேத்திக்கிட்டே இருக்கான்” என்றாள் கோபமாக.

“இனி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சேலை கட்டிக்க. அப்புறம் யாரும் உன்னை எந்தத் தொகையும் சொல்ல மாட்டாங்க. நீ எதை வேணா போட்டுக்கிட்டு ஊரு சுத்தலாம்” என்று ராதா, “என் செல்லம்ல, பட்டுல, தயவுசெய்து இந்தச் சேரீ கட்டுடி” எனக் கெஞ்சினாள்.

அப்போது அவர்கள் அறைக்கதவை யாரோ தட்டுவது போல இருக்க, நிலானி, “இருடி, நான் போய் யாருன்னு பாத்துட்டு வரேன்” என்று கீர்த்திகாவின் அறைக்கதவைத் திறந்தாள்.

விசாலாட்சி கையில் வெள்ளித்தட்டு வைத்து அதில் இரண்டு பெரிய வெள்ளி பவுலில் கீர்த்திகாவிற்குப் பால் கஞ்சி ஊற்றிக்கொண்டு சுடச்சுட அந்த அறை முழுவதும் கம கம கமக்கும் வாசனையோடு கொண்டு வந்தார்.

அவரைப் பார்த்ததும் ராதா, “என்ன அத்த! உன் மருமகளுக்கு வக்காலத்து வாங்க வந்துட்டியா?”

“அவளுக்குக் கெடுக்குறதே நீதான், தெரியுமா? இங்க பாரு. மண்டபத்துக்குப் போறதுக்கு நேரம் ஆயிடுச்சு. இந்தச் சேலையைக் கட்டிட்டு வர சொன்னா, உன் மருமகள் சேலை கட்ட மாட்டேன்னு அடம் பிடிக்கிறா. நீயே அவகிட்டச் சொல்லி அவளை ஒழுங்கு மரியாதையா இந்தச் சேலையைக் கட்டச் சொல்லு. இல்லை அப்புறம் அவளை வம்புடியே பிடிச்சு நானும் நிலானியும் அவளுக்குச் சேலை கட்டி விட வேண்டியதுதான்” என்றாள்.

“ஏய் சும்மா என் மருமகளை எப்பவும் குற்றம் சொல்லிக்கிட்டே இருக்காதே. இப்ப என்ன உனக்கு? அந்தச் சேலையைக் கீர்த்திகா கட்டணும், அவ்வளவுதானே?” என்றார் விசாலாட்சி. “ஆமாம்” என்று ராதா தலையாட்ட, தன் கையில் கொண்டு வந்த பவுலை நிலானியிடம் கொடுத்துவிட்டு நேராக கீர்த்தியிடம் வந்தவர்.

“கீர்த்தி, எந்திரிச்சு நில்லடா. அத்தை உனக்குச் சேலை கட்டி விடுறேன். அத்தை உருத்தாம இருக்குற சேலையைத்தான் பார்த்தும் வாங்கி இருக்கேன். நானே உனக்குச் சேலை கட்டி விடுறேன். நீ ஃபங்ஷன் முடிஞ்சதும் சேலையைக் கழட்டி வைத்துவிடு. ஓகேவா?” என்றார்.

அவர் சொன்னதும் சரி என்று தலையாட்டிய கீர்த்திகா மறு பேச்சு பேசாமல் கட்டிலிலிருந்து எழுந்து நிற்க, விசாலாட்சி அவளுக்காக வாங்கி வைத்திருந்த புதிய பட்டுப் புடவையைப் பிரித்துக் கீர்த்திகாவுக்கு அழகாகச் சேலை கட்டிவிட்டார். அவள் வெறுமனே நின்று விசாலாட்சி தனக்குச் சேலை கட்டி விடுவதை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அதைப் பார்த்த நிலானியும் ராதாவும் வாயடைத்து போயினர். அவளுக்குச் சேலை கட்டி விட்டு, அது சரியாக இருக்கிறதா என ஒருமுறை பார்த்த திருப்தி அடைந்த விசாலாட்சி, “சரி, அவளுக்கு உருத்தாத மாதிரி நகைகள் எல்லாம் இருக்கு. அது போட்டுவிட்டுக் கூட்டிட்டு வாங்க. நான் போய் இந்த கஞ்சியைத் துர்காவுக்குக் கொடுத்துட்டு வரேன்” என்று விட்டு விசாலாட்சி அங்கிருந்து துர்காவின் அறைக்குச் சென்றார்.

விசாலாட்சி மேலே வந்து துர்காவின் அறைக்கதவைத் தட்டுவதற்கு முன்பாக ஆதி, துர்கா இருவரும் அவர்கள் அறையில் இருந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்த விசாலாட்சி, “அடடே! ரெண்டு பேரும் சீக்கிரமா ரெடி ஆகிட்டீங்களா?” என்றார்.

“ஆமா அத்தை, மண்டபத்துக்கு நேரமே போகணுமே. எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்கன்னா அப்புறம் யாரையும் சரியா கவனிக்க முடியாது. ஏற்கனவே நேரம் ஆயிடுச்சு” என்றவள், “சரி வாங்க, கீழ போகலாம்” என அவரை அழைத்துக்கொண்டு ஆதியுடன் கீழே செல்லப் போக…

அவள் கைப்பிடித்து நிறுத்திய விசாலாட்சி, “எங்க போற நீ? கீழ போயிட்டா என்ன? அப்புறம் உன்னைக் கையிலேயே பிடிக்க முடியாது. வந்தவங்களைக் கவனிக்கிறது, அந்த வேலை, இந்த வேலைன்னு விழுந்து விழுந்து எல்லா வேலையும் இழுத்துப் போட்டு நீயே செய்வ. எதுவும் சாப்பிடாமலேயே” என்றவர், “நீ முதல்ல இந்த பால் கஞ்சியைக் குடி. உனக்கு ரொம்பப் பிடிக்குமே இது. குடிச்சுக்கிட்டு அதுக்கப்புறம் நீ கீழ வா. ஒண்ணும் அவசரம் இல்ல. அப்படியே லேட் ஆகுதுன்னு யாராவது சொன்னால், அவசரப்படுத்தினால் அவர்களை நான் சமாளிச்சுக்கிறேன்” என்ற விசாலாட்சி ஆதியைப் பார்த்து, “ஆதி, வா. இந்த பவுல்ல இருக்கிறது முழுசா கொடுத்து முடிக்காமல் கீழே கூட்டிட்டு வராத” என்றார்.

“சரிமா, நான் பார்த்துக்கிறேன்” என்று சிரித்தவன் துர்காவை அழைத்துக்கொண்டு ரூமுக்குள் வர, அவள் அந்தப் பால்கஞ்சியை அதன் ரூமுக்குள் வந்த வேகத்தில் அவசர அவசரமாக எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.

“ஏய் துர்கா, கொஞ்சம் பொறுமையாச் சாப்பிடுடி” என்று அவள் அருகில் வந்த ஆதி வாயில் ஒரு ஸ்பூன் கஞ்சியை வைத்து அவன் வாயை அடைத்தான்.

அதைச் குடித்துவிட்டு அவளை முறித்தவன், “சரி சரி சாப்பிடு” என்று அமைதியாக அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

துர்கா கண்டுகொள்ளாதவளாகப் பவுலில் இருந்த மொத்த கஞ்சியையும் குடித்து முடித்துவிட்டு, அதை கீழே வைத்தவள், “சரி ஆதி, வா போகலாம். நேரம் ஆயிடுச்சு. அம்மாவும் தனியா எல்லா வேலையும் இழுத்துப் போட்டுச் செஞ்சுகிட்டு இருப்பாங்க” என்று அவசரமாக எழுந்து வெளியே சென்றாள்.

‘யார் என்ன சொன்னாலும் இவள் மட்டும் அடங்கறது இல்ல. எல்லார் வேலையும் முன்னாடி நின்னு எல்லாருடைய வேலையையும் இவள் செய்ய வேண்டியது. இவளை என்னதான் பண்றதுன்னு தெரியல. பார்ப்பவர் போலப் போய் அந்த வேலை, இந்த வேலைன்னு எடுத்து போட்டுச் செய்துகொண்டே இருப்பா’ என்று நினைத்துக்கொண்டே ஆதி கீழே வர, அதற்குள் கீர்த்திகாவும் ரெடியாகி வந்து விட்டாள். டிரைவர்கள் இருவரும் வர, அனைவரும் கிளம்பி ஒன்றாக மண்டபத்திற்குச் சென்றனர்.

இவர்கள் வந்த கொஞ்ச நேரத்தில் மண்டபத்திற்கு அழைத்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் வர ஆரம்பித்திருக்க… கீர்த்திகாவை ராதாவும், நிலானியும். துர்காவை மாதவியும் ஷிவுவுமும் அழைத்துக் கொண்டு வந்து, அங்கே அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் பூக்களால் ஆன நாற்காலியில் இருவரையும் கொண்டு வந்து அமர வைத்தனர். அவர்கள் இருவருக்கும் அருகில் போடப்பட்டிருந்த சேரில் கீர்த்திகாவின் அருகில் கதிரும் துர்காவின் அருகில் ஆதியும் அமர்ந்து கொண்டனர்.

கீர்த்திகா, துர்கா இருவருமே மிகவும் சந்தோஷமாக முகமும் உடலும் லேசாகப் பூசப்பட்டு இருக்க, தாய்மை நிறைந்த பூரிப்போடு இருவரும் சிரித்த முகமாக அனைவரையும் பார்த்து வணக்கம் வைத்தனர்.

தன் மருமகள்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க, தன் மருமகள்கள் இருவரையும் தாய்மைப் பூரிப்போடு மேடையில் ஒன்றாகப் பார்த்த விசாலாட்சியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது.

சந்தோஷமாக மேடை ஏறி வந்து கீர்த்திகா, துர்கா இருவரையும் கட்டிக்கொண்டு, “என் தங்கங்களா! நீங்க எப்பவும் இதே போலச் சந்தோஷமா, நிம்மதியா, எந்தக் கஷ்டமும் இல்லாம இருக்கணும். அதை இந்த அத்தை இருந்து பார்க்கணும்” என்று சொன்னவர், நெற்றியிலும் முத்தம் வைத்துத் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured