Episode 283
இதுவரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த உங்க எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
ஆதி துர்கா இருவரும் ஒரு சோபாவிலும், கீர்த்திகா கதிர் மற்றொரு சோபாவிலும் அமர்ந்திருக்க… அவர்கள் அருகில் ஷிவு, ராதா, நிலானி, மாதவி நால்வரும் மேடையில் நின்று இருக்க…
முதலில் பெரியவர்கள் முறைப்படி மேடை ஏறி இரு ஜோடிகளுக்கும் நலுங்கு வைத்து, துர்கா, கீர்த்திகா கைகளில் கண்ணாடி வளையல்களைப் போட்டுவிட்டு, கன்னத்தில் சந்தனம் பூசி, கைகளில் சந்தனம் பூசி… ஏற்கனவே தாய்மையில் பூரித்துத் தகதகவென மின்னிக் கொண்டிருந்த இருவரின் முகங்களிலும் பூசப்பட்டிருந்த சந்தனம் மேலும் அவர்கள் முகத்தில் ஜொலிப்பை ஏற்படுத்த, வந்திருந்தவர்கள் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
“நம்ம விசாலாட்சி அக்கா அவங்க மருமகள்கள் ரெண்டு பேரையும் எப்படிப் பார்த்துக்கிறாங்க! இத்தனை மாதம் ஆன பின்னரும் இன்னமும் அவங்க மருமகள்களை அவங்க பிறந்த வீட்டுக்கு அனுப்பாமல் அவங்க கூடவே வைத்துப் பார்த்துக்கிறாங்க. இந்த மாதிரி ஒரு வீட்டில் மருமகளாக வரதுக்கு ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுவாங்க. அந்த அளவுக்கு அவங்க வீட்டு ஆளுங்க, அந்தப் பொண்ணுங்களோட புருஷனுங்க, அவங்களை கையில் வைத்து தாங்குறாங்க” என்றனர்.
“ஆமாம், உண்மைதான்” என்று அதைக் கேட்டவர்கள் ஒப்புக்கொண்டனர்.
வடிவு, முருகன் இருவரும் தாய் வீடு சீதனமாக முதலில் துர்காவிற்குச் சீர் செய்துவிட்டு, அதன்பின் தான் கீர்த்திகாவிற்கு நலுங்கு வைத்தனர். அவர்களைப் பொறுத்தவரை துர்கா தான் அவர்களின் முதல் பெண் என்று, இன்று வரை அவளுக்குச் செய்ய வேண்டிய அனைத்தையும் தவறாமல் செய்து வருகிறார்கள்.
அதை ஏற்றுக்கொள்ளும் கனகாவோ தடை சொல்வதில்லை. துர்காவும் அதைச் சந்தோசமாக ஏற்றுக்கொள்வாள். ஒவ்வோர் முறையும் விசேஷம், பண்டிகைகள், பிறந்தநாள் என்று ஒன்று விடாமல் சீர் செய்ய வரும் தன் பெற்றோரை நினைத்து துர்காவிற்குப் பெருமையே.
அதைக் கண்டு கீர்த்திகாவும் சந்தோசம் தான் அடைகிறாள் ஒழிய, ஒருபோதும் துர்காவிற்குச் செய்ய வேண்டியதை அவள் பெற்றோர் செய்வதற்குத் தடை போட்டது இல்லை.
துர்கா சந்தோசமாக ஆதியுடன் பேசிக்கொண்டு மேடையில் இருக்க… கீர்த்திகாவோ தன் கணவனுடன் சேர்ந்து தன் தோழிகளும் சேர்ந்து கிண்டல் செய்ய, அவர்களிடம் செல்லமாகக் கோபித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தாள்.
துர்கா, கீர்த்திகா வளைகாப்பிற்கு வந்திருந்தவர்களை வெங்கடாசலம், துறை, முருகன் ஒரு பக்கம் வரவேற்றுக் கொண்டு இருந்தனர். விசாலாட்சி, கனகா, வடிவு வந்தவர்களை கவனித்து அவர்களைச் சாப்பிட அழைத்தது செல்ல, மேடைக்கு அனுப்பிவைக்க என்று பிசியாக இருந்தனர்.
செண்பகம் விசாலாட்சிக்கு எதுவும் வேண்டும் என்றால் அதைச் செய்து கொடுத்துக்கொண்டு இருந்தார்.
அவரிடம் வந்த விசாலாட்சி, “செண்பகம் இங்க வேலை செய்றது எல்லாம் இருக்கட்டும். எங்கே சங்கவியும், அவ புருஷனையும் இன்னும் காணோம்? நீ அவங்ககிட்டே பேசினியா இல்லையா? அவங்க வீட்டில் இருந்து இன்னமும் யாரையுமே காணோமே?” என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.
“அண்ணி, நான்தான் கொஞ்சம் முன்னதான் சங்கவிக்கு போன் போட்டேன். அவ கிளம்பிட்டா. கொஞ்ச நேரத்துல வந்திருவா அண்ணி. சங்கவி வந்த பிறகுதானே மேடைக்கு போகணும்னு நான் இன்னும் துர்கா, கீர்த்திகாவிற்கு நலுங்கு வைக்காம இருக்கேன்” என்றாள்.
“சரி செண்பகம், அவங்க வந்ததும் அவங்களை நல்லாக் கவனிச்சுக்கோ. எதுவும் வேணும்னா என்னைக் கூப்பிடு” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
விசாலாட்சியிடம் பேசிவிட்டு, திரும்ப மண்டபத்திற்குள் தன் குடும்பத்தோடு நுழைந்தாள் சங்கவி. இன்னமும் கபிலனுடன் முறுக்கிக்கொண்டு முன்னே வந்தவள் அவள் அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.
“என்னடி! இங்க இருக்க மண்டபத்துக்கு வரதுக்கு உனக்கு இவ்வளவு நேரமா? வந்திருந்தவங்க எல்லாரும் உன்னையையும் மாப்பிள்ளையையும் கேட்டுட்டே இருக்காங்க” என்ற செண்பகம். “சிவகாமி உன்னைக் காணாம என்கிட்டே 100 தரம் வந்து கேட்டாச்சு” என்று சொல்லிச் சிரித்தார்.
“அம்மா! நான் காலையிலேயே அம்மா கிட்டே சீக்கிரமா வந்திருவேன்னு சொன்னேனே” என்று சொல்லிச் சிரித்தவள். “சரி நான் அவங்களைப் போய் பாக்குறேன்” என்றாள். “ஏய் இருடி. மாப்பிள்ளை பின்னாடி வராரு. நீ அவரை விட்டுத் தனியா போகாதே. அப்புறம் சிவகாமி கோச்சுப்பா” என்றார்.
‘ஆமாம் மாப்பிள்ளை பொல்லாத மாப்பிள்ளை’ என்று மனதில் நினைத்தவள். காலையில் ஃபங்ஷனுக்குக் கிளம்பி வரத் தாமதமானதற்குக் காரணமே அவன் தான். ‘இன்னமும் தன்னை லவ் டார்ச்சர் செய்கிறேன் என்று அவள் பின்னாலேயே சுற்றித் திரிவது ஒன்றையே வேலையாக வைத்து இருப்பவன் தான். லட்சம் பேருக்கு நடுவில் இழிந்து கொண்டிருந்தாலும், தன்னைத் தேடி கண்டுபிடித்து தூக்கிச் சென்றுவிடுவானே’ என்று நினைத்தவள். அவள் அம்மாவிடம், “அவன் என்ன சின்ன பையனா என் பின்னாடியே சுத்தித் திரிவதற்கு? அதை எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான். நீங்க பேசாமல் இருங்க…” என்றவள் சிவகாமியைத் தேடிச் சென்றாள்.
அவள் பேசிவிட்டுச் செல்வதைப் பார்த்தவாறே செண்பகத்திடம் வந்த கபிலன், “என்ன அத்தை சொல்றா உங்க மகள்?” என்றான் சிரித்துக்கொண்டே.
“அவ எப்பவும் அப்படித் தானே மாப்பிள்ள… உங்களைக் கூட கூட்டிட்டுப் போய் சிவகாமியைப் பார்த்துட்டு வர சொன்னா. ‘நீங்க என்ன சின்ன பிள்ளையா கூடவே கூட்டிட்டுப் போறதுக்கு’ன்னு பேசிட்டு போறா” என்றார்.
கபிலனும் சிரித்துக்கொண்டே, “சரி அத்தை நான் பார்த்துகிறேன்” என்றவன் சங்கவியைத் தேடிச் சென்றான். அவள் சிவகாமியிடம் பேசிக்கொண்டு இருக்க… அவள் அருகில் இடித்துவிடுவது போல வந்து நின்றவனைத் திரும்பி முறைத்த சங்கவி, “எல்லாரும் இங்க இருக்காங்க. இது ஒன்னும் உன் வீடு இல்ல என்னை இம்சை பண்ணிக்கிட்டே இருக்கறதுக்கு” என்றால் கடுப்பாக.
“ஏய் சங்கவி! என்னடி மாப்பிள்ளையை மரியாதையே இல்லாம பேசுற? அவர் உன்மேல எவ்வளவு பாசமா இருக்காரு. நீ என்னடான்னா எப்போ பாரு அவர் மேல எரிஞ்சு விழுந்துட்டிருக்க” என்று அவளை அதட்டினார்.
“அத்தை விடுங்க. அவளுக்கு ஒரு நாளைக்கு ஒருமுறையாவது என்னை திட்டலைன்னா தூக்கமே வராது” என்றவன் அவள் முதுகில் தன் விரலால் கோலம் போட்டு அவளைப் பார்க்க… அதில் மூச்சைப் பிடித்தவள் கண்கள் மூடிப் பெருமூச்சை விட்டவள். அவன் கையைப் பிடித்துத் தன் கைக்குள் பிடித்துக்கொண்டவள். “அம்மா இருங்க வரேன்” என்றுவிட்டு கபிலனைப் கை பிடித்துத் தனியே யாருமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றவள், “டேய் என்னடா ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க… வந்த இடத்துல என்ன வேலை இது? வீட்டில் தான் என்னைச் சும்மாவே உயிரை வாங்குவே… இங்கே வந்தாலும் இப்படித் தான் என் உயிரை எடுப்பியா நீ…” என்று அவனைத் திட்டிக்கொண்டு இருந்தால்.
ஆனால் கபிலனோ தன்னைத் திட்டிக்கொண்டு இருந்த சங்கவியின் இதழை ஏக்கமாகப் பார்த்தவன், தங்களைச் சுற்றிலும் யாரேனும் இருக்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துவிட்டுச் சட்டென்று குனிந்து அவள் இதழில் முத்தம் வைத்தான். அவனைத் தோளில் அடித்துத் தன்னிடம் இருந்து விலக்கியவள். “எப்பப் பாரு என் வாயை கடிக்குறதுக்கே இவனுக்கு வேலையா போயிருச்சு” என்று புலம்பியவள் அவனைத் தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றாள்.
இவர்கள் இருவரும் தனியே சென்று வருவதைப் பார்த்துக் கொண்டு இருந்த ராகவன், “ம்ஹும்… இந்தக் கதையில் வில்லியாக வந்தவள் எல்லாம் இப்போ ஹீரோயின் ஆகி ரொமான்ஸ் பண்ற அளவுக்கு வந்துட்டாங்க. ஆனா என் ஹீரோயினே இன்னமும் என்கிட்டே வில்லி ரேஞ்சில் தான் நடந்துக்குறா” என்று மனதிற்குள் புலம்பியவன், விசேஷத்திற்கு வந்ததில் இருந்து தாலி கட்டிய தன்னுடன் அமராமல் இங்கே வந்ததும் வராததுமாய் ஓடிச் சென்று ஷிவுவிடம் நின்று கொண்ட நர்மதாவைப் பார்த்தான்.
மேடையில் ஷிவுவுடன் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்த நர்மதா கீழே இருந்து தன்னைச் சைட் அடிக்கும் தன் கணவனை ஓரக் கண்ணால் பார்த்தவள். ‘இப்படியே கொஞ்ச நாளைக்கு உன்னை அலைய விடுறேன்டா. என் வீட்டில் இருக்குறவங்க முன்னாடி என்னை மணமேடையில் இருந்து இழுத்துட்டு வந்து தாலி கட்டினவன் தானே நீ. உன்னைக் கொஞ்ச நாளைக்கு அலைய விடுறேன்டா. அப்போ தான் உனக்குப் புத்தி வரும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
தன் அருகில் நின்று இருந்தவளை இடித்து, “என்ன மேடம்? கல்யாணம் ஆகி இவ்ளோ மாசம் ஆகியும் உன் புருஷனை இங்கே இருந்தே சைட் அடிக்குற போல…” என்றால் ஷிவு.
“மேடம், நாங்களாவது கொஞ்ச மாசம் தான் ஆச்சு கல்யாணம் ஆகி, ஆனா நீங்களும், சாரும் அடிக்குற கூத்து நம்ம ஆபீஸ் முழுக்கப் பரவி இருக்கு. ரெண்டு பேரும் உங்க கேபின்க்குள்ள போய்ட்டா வர மணிக் கணக்காகுதாமே. கேட்டா ஏதோ ப்ராஜெக்ட் பற்றிப் பேசிட்டு இருந்தீங்கன்னு இல்ல சொல்றாங்க. அப்படி என்ன ப்ராஜெக்ட் மேடம் நீங்களும் சாரும் மட்டும் தனியா சேர்ந்து செய்ற அளவுக்கு?” என்றால் நர்மதா சிரித்துக்கொண்டே…
“ஏய்! நான் உன்னைக் கலாய்ச்சா நீ என்னை ஓட்டுறியா?” என்று நர்மதாவை முறைத்தவள். “நான் என்னடி செய்றது? வீட்டுக்குப் போய்ட்டா குழந்தையைப் பார்த்துக்கிறதும், அத்தைக்கு கிச்சனில் ஹெல்ப் பண்றதுன்னு வேலை முடிச்சிட்டு வந்தா அலுப்பிலேயே ரெண்டு பேரும் தூங்கிடறோம். அப்போ அப்போ ஆபீஸில் ரெண்டு பேரும் கிடைக்கிற காப்பில…” என்று ஷிவு இழுக்க…
“ஐயோ மேடம்! போதும் உங்க ஆபீஸ் ரொமான்ஸ் பத்தி அரசால் புரசலா எனக்கும் தெரியும்” என்று வெட்கப்பட்டாள் நர்மதா. “நானே என் கதையைச் சொல்ல வெட்கப்படல. ஆனா நீ ஏன் இவ்ளோ வெட்கப்படுற? நீ வேணா உன் புருஷன் கூட அதேபோல உங்க ஆபீஸ்ல ரொமான்ஸ் ட்ரை பண்ணிப் பாருங்களேன். ஒரு த்ரில்லிங், ஒரு மாதிரி இருக்கும்” என்றாள் ஷிவு.
“உங்ககிட்டே வந்து நின்றது தப்பா போயிருச்சு. நான் போறேன்” என்று அங்கிருந்து மாதவியிடம் சென்றாள்.
ஷிவுவை விட மாதவி சிறியவள் என்றாலும், அவர்கள் வீட்டின் மூத்த மருமகள் என்ற மரியாதை அவள் மேல் நர்மதாவிற்கு நிறையவே இருக்கிறது. ஆனாலும் இருவரும் தோழிகள் போலப் பேசிச் சிரித்து மகிழ்வர் எப்போதுமே.
இங்கே மாதவியிடம் வந்த நர்மதா அவளைப் பார்க்க… ஆனால் மாதவியோ யாரையோ பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டு நின்று இருந்தாள்.
மாதவி யாரைப் பார்த்து இப்படி வெட்கப்படுகிறாள் என்று திரும்பிப் பார்த்த நர்மதா, அங்கே போதே நின்று அவளைப் பார்த்து ஏதோ ஜாடை செய்துகொண்டு இருப்பதைக் கண்டாள். அவன் மாதவியின் உடையையும் அவள் முகத்தையும் சுட்டிக்காட்டி மிகவும் அழகாக இருக்கிறது என்று சொல்லி, யாருக்கும் தெரியாமல் பறக்கும் முத்தத்தை அவளுக்கு அனுப்பி வைக்க…
மேடையில் நின்றிருந்த மாதவியும் அவன் அனுப்பிய முத்தத்தை யாருக்கும் தெரியாமல் காற்றில் பிடிப்பது போலப் பாவனை செய்து அதைத் தன் பிளவுஸிற்குள் போட்டுக்கொண்டாள்.
“ஐயோ ஆண்டவா! திரும்பிய பக்கமெல்லாம் கன்னி வெடியா வெச்சா நான் எங்கு தான் காலை வைக்கிறது? அவன்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு இங்க வந்தா இவங்க ஒவ்வொருத்தரும் பண்ற அலும்பு பார்த்துட்டு என்னால இங்க நிக்க முடியலையே. பேசாம அவன் பக்கத்துலயே போய் நின்றுவிடலாம் போல இருக்கு இங்கே நிற்கிறதுக்கு” என்று புலம்பியவள் மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்று ராகவை விட்டுச் சற்றுத் தள்ளி நின்று கொண்டாள்.
‘நீ தள்ளி நின்றால் என்ன, நான் வருவேன்’ என்பது போல அவளை இடித்துக் கொண்டு நின்ற ராகவை திரும்பி முறைத்தவள், “அவ்வளவு இடம் இருக்கு. உனக்கு என்மேல வந்து உரசிட்டு நின்னா தான் சந்தோசமா இருக்குமா?” என்றாள்.
“ஆமாம்” என்ற ராகவ், “அதுல ஒரு தனிச் சுகம் இருக்கு. அது உனக்கு எங்க தெரியப் போகுது” என்றான்.
இப்படியே வளைகாப்பிற்கு வந்திருந்த ஒவ்வொரு ஜோடிகளும் தங்கள் ரொமான்ஸையும் கூடல்களையும் அரங்கேற்றிக் கொண்டு இருந்தனர்
“துருவா, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுப்பா… நீ கண்டிப்பா மலேசியா போய் தான் ஆகணுமா? இங்கயே ஒரு நல்ல வேலையைப் பார்த்துட்டு இங்கயே இருக்க கூடாதாப்பா… உனக்குப் பிடிச்ச வேலையை நீ இங்கே இருந்தே செய்யலாமே. உனக்குத் தான் டைரக்டர் ஆகணும்ங்குறது கனவாச்சே. அதை நீ இங்கே இருந்து தொடர்ந்து முயற்சி செய்யலாம் இல்லையா? இப்படி நாடு விட்டு நாடு போய் எங்களை எல்லாம் விட்டுட்டு உன் தங்கச்சிங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு உன்னாலே இருக்க முடியுமா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடு துருவா” என்று அவன் அம்மா தன் மகனை வேலை பார்க்க வெளிநாடு செல்ல வேண்டாம் என்று எவ்வளவோ தடுக்கப் பார்த்தாள்.
ஆனால் துருவனோ, “அம்மா, நான் நல்லா யோசிச்சு அப்பாகிட்டயும், சித்தப்பாகிட்டயும் கலந்து பேசித்தான் இந்த முடிவுக்கே வந்தேன். நான் அங்கே போனா தான் நமக்கு இப்படி இருக்குற நிலை கொஞ்சமாவது மாறும். இன்னும் எத்தனை நாளைக்கு நாம இப்படி கஷ்டப்பட்டுட்டே இருப்போம் சொல்லுங்க” என்றவன்.
அவன் அருகில் இருந்த அவன் தங்கைகள் ஆர்னா, ஜாரா இருவரையும் பார்த்து, “இவங்க ரெண்டு பெரும் இனிமேலும் கஷ்டப்படக்கூடாதுன்னு தான் மா நான் மலேசியா போகவே முடிவு பண்ணினேன். இவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் ஒரு வருஷத்துல காலேஜ் முடிஞ்சிரும். அடுத்து அடுத்து அவங்க கல்யாணம் அது இதுன்னு இருக்கு இல்லையா? அதுக்கு எல்லாம் பணம் சேர்த்து வைக்க வேணாமா அம்மா? எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி என்னை போக வேண்டாம்னு தடுக்குறது நல்லா இல்லை மா” என்றான் துருவன் அவன் அம்மாவைப் பார்த்து.
அவன் அம்மாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. துருவன் சொன்ன காரணங்கள் எல்லாம் ஏற்கத்தக்கதாகவே இருக்க, அதற்கு மேலும் அவன் வெளிநாடு செல்வதைத் தடுக்க அவன் அம்மாவிற்கு மனம் வரவில்லை.
“இங்கே பாருமா… நம்ம பையன் இவ்ளோ தூரம் யோசிச்சு முடிவு எடுத்திருக்கான். அவன் முடிவை நாம மதிச்சு நடந்துக்க வேண்டாமா?” என்று துருவனின் அப்பா சமாதானம் செய்தார்.
“என்னவோ போங்க. அவன் இங்கேயே நம்ம கூடவே இருந்தாலாவது அவனைப் பார்த்துட்டே இருக்கலாம்னு ஒரு திருப்தியாவது இருக்கும். அங்கே அவ்வளவு தூரம் நாடு விட்டு நாடு போய் என் பிள்ளை கஷ்டப்படணுமா? அதுக்காகத்தான் நான் சொல்றேன்.” என்றவர்.
“துருவா, ஒரே ஒரு முறை யோசிச்சுக்கோடா. நீ இங்கே அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை பார்த்து கொடுக்குற சம்பளமே நமக்கு போதும்டா… அதை எல்லாம் விட்டுட்டு நீ அங்கே போய் கஷ்டப்படணுமா?” என்றார்.
“அக்கா, அவன் ஒன்னும் யாரும் இல்லாத இடத்துக்குத் தனியா போகலையே? கூடவே நம்ம ஆர்யாவும் தானே அவன் கூட போறான். நீங்க இன்னமும் துருவனைச் சின்ன குழந்தை மாதிரி நினைச்சிட்டு அவனுக்குத் தோணுற விஷயத்தைச் செய்ய விடாம தடுக்குறது நல்லாவா இருக்கு? ரெண்டு வருஷம் தானே அக்கா? இப்படிங்குறதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிப் போயிரும்” என்று ஜாராவின் அம்மா துருவனின் தாயைச் சமாதானம் செய்தாள்.
“என்னவோ போங்க… என் பிள்ளை இப்படி என்னை விட்டுப் போறதுல எனக்குச் சம்மதம் இல்லை” என்று முகத்தைச் சோகமாக வைத்துக்கொள்ள…
அவரிடம் வந்த ஆர்னாவும், ஜாராவும் அவர் அருகில் அமர்ந்து, “அம்மா என்னம்மா? எப்பவும் நீங்க தான் அண்ணா எது செய்தாலும் அவனுக்கு முதல் ஆளா சப்போர்ட் பண்ணுவீங்க. ஆனா இப்போ நீங்களே அண்ணா வெளிநாடு போறதுக்கு முட்டுக்கட்டை போட்டா அண்ணா மனசு கஷ்டப்படும் இல்லையா? பாவம் அங்கே பாருங்க அண்ணா முகம் எப்படி சோகமா ஆகிருச்சுன்னு. நீங்க இப்படி அண்ணாவையும், ஆர்யாவையும் ஊருக்குப் போக வேணாம்னு சொல்லாதீங்க. அவங்க போயிட்டு வரட்டும்” என்று இருவருமே துருவனுக்கும், ஆர்யாவுக்கும் சப்போர்ட் செய்து பேசினார்கள்.
தன் மகன்களை நிமிர்ந்து பார்த்தவர், “சரி, ரெண்டு வருஷம் தான். அதுக்குப் பிறகு இங்கயே வந்துரணும். அப்படி வரலைன்னா அம்மா உங்க கூடப் பேசமாட்டேன்” என்று சொல்லவும்.
“அம்மான்னா அம்மா தான்!” என்று ஆர்யா வந்து தானும் துருவனும் வெளிநாடு செல்வதற்குச் சம்மதம் சொல்லிவிட்டதும் சந்தோஷமாக வந்து கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
துருவனும் ஆர்யாவும் மலேசியா செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டனர். அதேபோல தாங்கள் அங்கே சென்று வேலை தேடி வீட்டிற்குப் பணம் அனுப்பும் வரை இங்கே இருக்கும் தன் குடும்பத்திற்கு எந்தக் கஷ்டமும் வந்து விடக்கூடாது என்று, அவர்கள் செல்ல இருந்த அந்த இரண்டு மாத இடைவெளிக்குள் இரவும் பகலும் பாராமல் கண் விழித்து உழைத்து வீட்டிற்காக நிறையப் பணம் சேர்த்து வைத்துத் தன் பெற்றோர்களிடம் கொடுத்தனர்.
மலேசியா செல்வதற்காக துருவனும் ஆர்யாவும் ஏர்போர்ட்டுக்கு விரைந்தனர். அவனை வழியனுப்ப வருவதாகச் சொன்ன குடும்பத்தை வேண்டாம் என எவ்வளவோ தடுத்துப் பார்த்தான்.
இங்கிருந்து ஏர்போர்ட் வந்து செல்லும் செலவு அவர்களுடைய இரண்டு நாள் வீட்டுச் செலவிற்கு உபயோகப்படும் என துருவன் கூற…
“அந்த ரெண்டு நாள் நாங்க சாப்பிடலைன்னா கூட எந்தப் பிரச்சனையும் இல்ல. நீ எங்களை விட்டு ரெண்டு வருஷம் ஊர் பேர் தெரியாத இடத்துல இருக்கப் போற. உன்னை வழியனுப்பக் கூட நாங்க வரக்கூடாதா?” என அனைவரும் அவனிடம் கெஞ்ச, வேறு வழியே இல்லாமல் அவர்கள் அனைவரையும் தன்னோடு அழைத்துச் சென்றான். இரண்டு கார்களை புக் செய்து ஏர்போர்ட்டுக்குச் சென்றிருந்தான்.
அங்கேயும் வந்து அவனுடைய அம்மா அழத் தொடங்கினாள். “துருவா, தயவுசெய்து சொல்றதைக் கேளு. நீ போயி ஆகணுமா? இன்னொரு முறை முடிவு பண்ணிக்கோடா. நீ இங்கேயே இருப்பேன்னா அம்மாவும் எங்கேயாவது வேலைக்குப் போறேன். எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் கஷ்டப்பட்டால் ஓரளவுக்கு நம்ம குடும்பத்தோட சூழ்நிலையைச் சமாளிச்சிடலாம்டா. சொன்னா கேளு” என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் துருவன் கேட்கவில்லை.
“அம்மா என்னமோ விளையாடுறீங்க. டிக்கெட் எல்லாம் புக் பண்ணி நான் ஊருக்குப் போற அன்னைக்கு இப்படி ஏர்போர்ட்ல வந்து நின்னுட்டு என்னை மறுபடியும் ஊருக்குப் போகாதேன்னு பழையபடி ஆரம்பிக்கிறீங்க” என்று அவரிடம் கடிந்து கொண்டான்.
“விடு துருவா. அவளுக்கு உன்னை விட்டுப் பிரிஞ்சு இருக்க மனசு வரல. அதனாலதான் மறுபடியும் மறுபடியும் உன்னை போக வேண்டாம் என்று சொல்லிட்டு இருக்கா. ஒரு ரெண்டு நாள் தான் அப்படி இருப்பா. அப்புறம் அவள் சரியாயிடுவா. சூழ்நிலையைப் புரிஞ்சுக்குவா” எனத் துருவனின் அப்பா தன் மனைவிக்கு ஆதரவாகப் பேசினார்.
“அது எல்லாம் சரிதான்பா. எனக்கும் புரியுது. உங்களையெல்லாம் விட்டு ரெண்டு வருஷம் நாங்க தனியா இருக்கப் போறோங்கிறது எங்களுக்கும் ரொம்பக் கஷ்டமா தான் இருக்கு. அதுக்காக நாங்களும் அம்மா மாதிரியே சோகமாவே இருந்தா நல்லாவா இருக்கும்? அப்புறம் எப்படிப்பா நம்ம அடுத்தடுத்த நிலைக்குப் போறது? கொஞ்ச நாள் தான்பா. எல்லாமே சரியாயிடும்” என்றவன் அவன் அம்மாவைக் கட்டிப்பிடித்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன், “அம்மா நான் சீக்கிரமா வந்துடுவேன். கவலைப்படாதீங்க. நான் திரும்பி வரும்போது நம்ம நம்மளோட நிலை மொத்தமாக மாறும். நம்புங்க” என்றான்.
“என்னவோ போப்பா. எப்போ நம்ம இந்த நிலைக்கு ஆளானோமோ, அப்போ இருந்து எனக்கு இந்தக் காசு பணத்தின் மேல இருக்க ஆசையும், மனுஷங்க மேல இருக்க நம்பிக்கையுமே போயிடுச்சு. எனக்குத் தெரிஞ்ச ஒரே சொந்தம் நம்ம குடும்பமும் நம்ம சுத்தி இருக்கிற நம்ம மேல அக்கறைப்படுறவங்களும் மட்டும்தான். அவர்களைத் தாண்டி வேற யாருமே எனக்கு முக்கியம் கிடையாது. நம்ம குடும்பம் நம்ம அவ்வளவுதான்” என்றாள்.
“சரிமா எனக்குப் புரியுது. அதுக்காக நான் இன்னமும் நீங்க அந்த நடந்ததையே நினைச்சுட்டு எத்தனை வருஷம் கஷ்டப்படுவீங்க? போனது போகட்டும். எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவோம்” என்றான்.
பிறகு அனைவரிடமும் விடைபெற்றவன் தன் அப்பாவைத் தனியாக அழைத்து, “அப்பா, அம்மாவுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருங்கப்பா. பாவம் அவங்க ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் அவங்களைப் பத்திரமாப் பார்த்துக்கோங்க. ரெண்டு வருஷம், ரெண்டே வருஷம். நான் சீக்கிரமா திரும்பி வந்துவிடுவேன். வரும்பொழுது நம்மளோட இந்த நிலைமை கண்டிப்பா மாறி இருக்கும்” என்றான் துருவன்.
“சரிப்பா. நீ அதைப் பத்தி எல்லாம் எதுவும் கவலைப்படாதே. நான் உன் அம்மாவைப் பார்த்துக்கிறேன். நீங்க அங்க போனதும் மறக்காம போன் பண்ணுங்க. நேரத்துக்குச் சாப்பிடுங்க. உடம்பு மொதல்ல பத்திரமாப் பார்த்துக்கங்க. சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும். உங்க உடம்பு நல்லா இருந்தா தான் நீங்க நினைச்சதை எல்லாம் சாதிக்க மனசும் உடம்பும் ஒத்துழைக்கும். அதை ஞாபகம் வச்சுக்கோங்க” என்றார்.
அவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு ஆர்யாவை அழைத்துக் கொண்டு தன் குடும்பத்தினரிடம் இருந்து விடைபெற்று மலேசியா செல்வதற்காகச் செக்கின் செய்ய ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தனர்.
துருவனும் ஆர்யாவும் ஏர்போர்ட்டுக்குள் செல்லும் வரை அங்கேயே இருந்துவிட்டு அனைவரும் கிளம்பி தங்கள் வீட்டிற்குச் சென்றனர்.
ஏர்போர்ட்டில் ஃபிளைட்டிற்காகக் காத்திருந்த துருவனிடம் ஆர்யா, “அண்ணா, ஏன் அண்ணா நம்ம வீட்ல மட்டும் இவ்வளவு கஷ்டம் தலை விரிச்சு தாண்டவம் ஆடுது? நம்ம எப்பேர்ப்பட்ட குடும்பம்னு நம்ம தாத்தா பாட்டி எல்லாம் சின்ன வயசுல இருக்கும்போது சொல்லி நான் நிறைய முறை கேட்டிருக்கேன். நம்ம தாத்தா, அவங்களோட தாத்தா, அவங்களோட தாத்தா என்று வழிவழியா பரம்பரை பரம்பரையா பணக்காரங்களா இருந்திருக்காங்க. நம்மளால நிறைய பேர் நல்லா வாழ்ந்து இருக்காங்க. அப்படி இருக்கிறப்போ நம்ம மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டப்படணும்? நம்ம அம்மா அப்பா எல்லாம் எவ்வளவு சந்தோஷமா நிம்மதியா இருந்தாங்க. ஆனா அந்த நிம்மதி எல்லாமே இப்படி காத்தோடு காத்தாக் கரைஞ்சு போயிடுச்சு. அவங்க வாழ்க்கை இப்படியே கஷ்டத்திலேயும் முடிஞ்சு போயிடுமா? எனக்கு அவங்களை நினைச்சா ரொம்பக் கஷ்டமா இருக்கு” என்றான்.
“எப்பவுமே நல்லவங்களுக்குத் தான் ஆர்யா திரும்பத் திரும்ப அந்தக் ஆண்டவன் கஷ்டம் கொடுத்துக்கிட்டே இருப்பான். அவங்களோட பொறுமையைச் சோதிக்கிறதே அவனுக்கு வேலையாப் போயிடுச்சு. அம்மா அப்பா மாதிரி இன்னமும் நமக்கு ஒரு விடிவு காலம் வரும். தானா ஒவ்வொன்னா சரியாகும்னு நம்பிகிட்டே இருந்தா எதுவும் சரியாகாது. மயிலே மயிலேனா இறகு போடுமா? போடாது. நம்ம தான் அந்த இறகைப் புடுங்கணும். நமக்குத் தேவைன்னா நம்ம தான் இறங்கி வேலை பார்க்கணும்” என்றான் துருவன்.
“என்ன அண்ணா சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியல” என்றான் ஆர்யா.
“உனக்கு இப்போ புரியாது ஆர்யா. நேரம் வரும்போது நானே உன்னிடம் எல்லாமே சொல்றேன்” என்றவன் தன் மொபைலில் வால்பேப்பராக வைத்திருந்த தன் குடும்பப் போட்டோவைப் பார்த்தான்.
அந்தப் புகைப்படம் துருவனும் ஆர்யாவும் சிறு வயதில் இருக்கும் பொழுது அவர்கள் வசதியாக மிகவும் சந்தோஷமாக வாழ்ந்திருந்தபோது எடுத்த புகைப்படம். அதில் ஆதி, துர்கா, கதிர், கீர்த்திகா நால்வரும் பெரிய சோபாவில் அமர்ந்திருக்க, ஆதி மடியில் ஆர்னாவும் கதிர் மடியில் ஜாராவும் மழலைச் சிரிப்போடு சந்தோஷமாக அமர்ந்திருக்க… சோபாவின் இருபுறமும் ஆர்யாவும் துருவனும் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் பின்னால் அபியின் குடும்பமும் சங்கவியின் குடும்பமும் நின்றிருந்தது.
அவர்கள் இருவரின் கையிலும் அவர்களுடைய வாரிசும் சிரித்த முகமாக இருக்க… இப்படிச் சந்தோஷமாக இருந்த தங்கள் குடும்பத்திற்கு இவ்வளவு கஷ்டம் வர காரணம் என்ன என்று இதுவரை துருவனுக்கோ ஆர்யாவிற்கோ தெரியாது. ஆனால் சந்தோஷமாக இருந்த தங்களுடைய குடும்பத்தில் யாரோ வேண்டாதவர்கள் செய்த வேலையால்தான் இத்தனை கஷ்டமும் வந்துவிட்டது என்பதை மட்டும் அறிந்திருந்தான்.
சிறுவயதில் தங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் நிலையை முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தங்களை இந்த நிலைக்கு ஆளாகிய அவர்களைக் கண்டுபிடித்து தங்கள் குடும்பத்தை பழைய நிலைக்கு வாழ வைக்க வேண்டும் என்பதே துருவனின் லட்சியமாக இருந்தது.
சுபம்

1 comment
Akka story fulla mudijita enna akka ending ithu enaku onnume puriyala🥺😒