EPISODE 36
அனைவரும் வந்திருப்பதைப் பார்த்த டி.ஜே… “சரி, இந்த கேமோட மெயின் தீம் என்னன்னா…” என்றவன், இந்த கேம் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான்.
“இரண்டு உண்மைகள் மற்றும் ஒரு பொய்” என்பது ஒரு உன்னதமான ஐஸ்பிரேக்கர் கேம் ஆகும். இதில் கலந்து கொள்ளும் நபர் தங்களைப் பற்றி ஒரு பொய்யுடன் இரண்டு உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஆனால், கலந்து கொள்ளும் நபர் சொல்லிய மூன்று செய்திகளில் எது பொய் என்பதை அவருடைய ஜோடி சொல்ல வேண்டும்,” என்றான். இதுதான் கேம் ரூல் என்று கூறியவன், “ஓகே, ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றான்.
முதலில் ஒரு ஜோடி வந்தது; இரண்டு பெண்கள் கலந்து கொண்டனர். முதல் பெண் தன்னுடன் பங்கேற்ற இரண்டாவது பெண்ணிடம் சொல்ல வேண்டும்.
அவளிடம் என்ன உண்மைகளையும், என்ன பொய்யையும் சொல்ல வேண்டும் என்று யோசித்த முதல் பெண் இரண்டாவது பெண்ணிடம் சொல்ல ஆரம்பித்தார்.
முதலாவதாக, தன் கழுத்திலிருந்த செயினைக் காட்டி, “இது போன வாரம் நான் (ஒரு பிரபல நகைக்கடை பெயரைச் சொல்லி) அங்கே வாங்கினேன்,” என்று சொன்னாள். இரண்டாவதாக, “நானும் மேகாவும்தான் இன்று இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒன்றாக வருவதாக இருந்தது. ஆனால், அவளால் கடைசி நேரத்தில் வர முடியவில்லை,” என்றாள். மூன்றாவதாக, “நான் அணிந்திருக்கும் இந்த ஆடையை ஒரு கடையில் இருந்து வாடகைக்கு எடுத்து அணிந்து வந்திருக்கிறேன்,” என்று சொன்னாள்.
முதல் பெண் கூறிய மூன்று செய்திகளையும் கேட்ட இரண்டாவது பெண், சற்று நேரம் பொறுமையாக அவள் சொன்னதை யோசித்துக் கொண்டிருந்தார்.
“மூன்றாவதாகக் கூறிய விஷயம் பொய். மற்ற இரண்டும் உண்மை,” என்று அந்தப் பெண் சட்டென்று சொன்னார்.
இரண்டாவது பெண் எது பொய் என்று சொன்னதைக் கேட்டு, போட்டியை நடத்துபவர் முதல் பெண்ணிடம், “மேடம், நீங்க சொன்ன மூணு விஷயங்கள்ல இவங்க சொன்ன அந்த விஷயம் தான் பொய்யா?” என்று கேட்டார்.
அதைக் கேட்ட முதல் பெண், “ஆமாம் சார், இவள் கரெக்ட்டாகத்தான் சொல்லியிருக்கா,” என்று அந்தப் பெண் சொல்லிவிட்டு, தன் தோழியைப் பார்த்து, “ஏய்! எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்க,
“நீ நகை எடுக்கப் போனதையும், மேகா வரவில்லை என்பதையும் எனக்கு ஏற்கனவே சொல்லிட்ட. ஆனா, இந்த டிரஸ் விஷயம், நீ வாடகைக்கு எடுத்து சொன்னாய் பார்த்தியா? அதைக் என்னால் நம்ப முடியவில்லை. ஏன்னா, நீ, நாங்க போட்டு இருக்கிற டிரெஸ்ஸையே வாங்கிப் போட மாட்டே. எப்பவுமே உன்னோட பொருளை மட்டும் தான் யூஸ் பண்ணுவ. அடுத்தவங்க பொருளை நீ யூஸ் பண்ண மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும். அப்படி இருக்கிறப்போ, நீ போட்டிருக்கிற டிரஸ்ஸை வாடகைக்கு எடுத்து, இன்னொருத்தர் போட்டு கொடுத்ததை எடுத்து நீ போட்டு இருக்க வாய்ப்பே இல்லை. அதனால்தான், நீ மூன்றாவது சொன்ன விஷயம் பொய்ன்னு நான் சொன்னேன்,” என்றால் அந்தப் பெண்.
“சூப்பர்! கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க!” என்று சொன்னார் நடுவர். “சரி, அடுத்து யார் பார்க்கலாம்?” என்று ஒவ்வொரு ஜோடியாக அழைத்தார். இப்போது விக்கியும் சங்கவியும் மேடை ஏறினர்.
சங்கவி மூன்று விஷயங்களைக் கூற வேண்டும். விக்கி அதிலிருந்து எது பொய் என்று ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.
- “என் வீட்டுக்கு நான் ஒரே செல்லப் பிள்ளை,” என்று முதல் விஷயத்தைச் சொன்னாள்.
- “இந்த ஊரிலேயே நாங்கள் மிகவும் அழகான பெண். என்னைவிட அழகான பெண் இங்கு யாருமே இல்லை,” என்றாள்.
- கூடிய சீக்கிரத்தில் நான் ஆதியைத் திருமணம் செய்யப் போகிறேன்,” என்றால் அத்தனை பேர் முன்னிலையில்.
இவள் சொன்ன மூன்றாவது விஷயத்தைக் கேட்டு அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. துர்காவும் ஆதியுமே சங்கவி கூறியதைக் கேட்டு அதிர்ந்து போய்தான் அமர்ந்திருந்தனர்.
விக்கி, இவள் சொன்ன மூன்று விஷயங்களைப் பொறுமையாகக் கேட்டவன்,
அவளை ஒரு முறை பார்த்தவன் ஏளனமாகச் சிரித்துவிட்டு, “உனக்கு ஒண்ணுமே உருப்படியாகச் செய்யத் தெரியாதா? இவங்க என்ன சொன்னாங்க? ரெண்டு உண்மை ஒரு பொய் சொல்ல சொன்னாங்களா? ஆனா, நீ சொன்ன மூணுமே பொய்!” என்றான் விக்கி.
அவன் கூறியதைக் கேட்ட சங்கவி, “ஏன் மேன், நான் பொய் சொன்னேன்? உனக்கு எப்படித் தெரியும் நான் சொன்ன மூணுமே பொய் என்று நீ எப்படி சொல்லலாம்?” என்று கேட்டாள் சங்கவி.
“முதல்ல என்ன சொன்ன? ‘எங்க வீட்டுக்கு நான் செல்லப் பிள்ளை’ன்னு சொன்னே. அதாவது, உங்க அம்மா அப்பாவுக்கு நீ ஒருத்தி தான் செல்லப் பிள்ளைன்னு சொன்னே. ஆனா, அது பொய். உங்க அம்மாவை விட உங்க அப்பாவுக்குத்தான் நீ செல்லப் பிள்ளை. உங்க அம்மாவுக்குக் கிடையாது, கரெக்ட்டா?” என்றான்.
“சரியாகச் சொன்னீங்க தம்பி! அவ எங்க நான் சொல்ற பேச்சைக் கேட்கிறாள்? அவளுக்குச் செல்லம் கொடுத்துச் செல்லம் கொடுத்து அவங்க அப்பா தான் கெடுத்து வெச்சிருக்காரு. அவருக்குத்தான் அவ செல்லப்பிள்ளை, எனக்கில்லை. என் பேச்சைக் கேட்டால் தானே அவ செல்லப்பிள்ளை?” என்றார் சிவகாமி (சங்கவியின் அம்மா).
சிவகாமி சொன்னதைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த அனைவரும் சிரித்துவிட, இதைப் பார்த்த சங்கவிக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.
சிவகாமி இவ்வாறு கூட்டத்தில் அனைவரும் முன்னிலையில் இவள் செல்லப்பிள்ளை இல்லை என்று சொன்னதும், சங்கவிக்கும் மூக்கு உடைந்தது போல ஆக, அவள் கோபத்துடன் தன் அம்மாவைப் பார்த்து, “அம்மா!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்த, அவள் அருகில் இருந்த வேதாச்சலம் சிவகாமியின் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தவர், “ரூமுக்கு வாடி! உன்னைப் பேசிக்கிறேன்,” என்று யாருக்கும் கேட்காத வண்ணம் அவருக்கு மட்டும் கேட்டவாறு சொல்லிவிட்டு, “அது ஒண்ணும் இல்ல தம்பி, இன்று காலையில சங்கவிக்கும் அவ அம்மாவுக்கும் ஒரு சின்ன சண்டை. அதனால கோபத்தில் அவங்க அம்மா இப்படி சொல்லிட்டா. என் பொண்ணு எங்க ரெண்டு பேருக்குமே செல்லம் தான்,” என்றார் வேதாச்சலம்.
“சரி, அது உண்மையாவே இருந்துட்டுப் போகட்டும். ஆனா மற்ற இரண்டும் பொய்தானே?” என்று சொன்ன விக்கி, “அது எப்படி நீதான் இந்த ஊரிலேயே அழகான பொண்ணுன்னு சொல்ற? உன்னைவிட அழகான பொண்ணு இங்க நிறைய பேர் இருக்காங்க. அதை நீ பார்க்கவே இல்லையா? நீ மட்டும்தான் அழகுன்னு எப்பவுமே நீ சொல்லக்கூடாது. மத்தவங்கதான் சொல்லணும். ஒரு பொய் சொல்றதுக்கு அளவில்லையா?” என்றான் விக்கி.
விக்கி கூறிய விளக்கத்தைக் கேட்டு சில பெண்கள் ஆம் என்பது போல, அவன் சொன்னதுதான் சரி என்பது போலவும், அவனுக்குச் சப்போர்ட் செய்ய, சங்கவிக்குத் தன் நிலை நினைத்துக் கோபம் வர, ‘இவ்வளவு அவமானப்படுத்தி விட்டான்’ என்று அவன் மேல் அளவு கடந்த கோபம் அவளுக்கு வந்தது.
“சரி, மூன்றாவதாக நீ சொன்னியே, ஆதியை நீ சீக்கிரத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லி? மத்த இரண்டையும் கூட ஏதோ ஒரு காரணத்துக்காகச் ‘சரி’ன்னு ‘உண்மை’ன்னும் கூடச் சொல்லிவிடலாம். ஆனா, இப்போ சொன்ன மூணாவது விஷயம், அதாவது ஆதியை நீ சீக்கிரத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்ன விஷயம் எந்த விதத்துல உண்மையாக முடியும்? நல்லா யோசிச்சுப் பாரு. நீ எப்படி யோசிச்சாலும், எவ்வளவு தலைகீழா நின்னாலும், ஆதியை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. இதை நான் அடிச்சு சொல்றேன்! இத்தனை பேரும் முன்னாடியும் ஆதி கல்யாணம் பண்ணிக்கிட்டது எங்க துர்காவைத்தான். அவள்தான் அவனோட பொண்டாட்டி. நீ என்ன நெனச்சாலும் அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க முடியாது,” என்று விக்கி கூறினான்.
இதைக் கேட்ட சங்கவி, “அது எப்படி துர்கா தான் அவனோட பொண்டாட்டி என்று நீ உறுதியா சொல்ற? இந்தத் திருமணமே அவசரத்தில் நடந்தது தானே? அவளே ஆதி காசு வச்சிருக்கான் அப்படின்னு சொல்லித்தான், அவனுடைய நோயைக் கூடப் பொருட்படுத்தாம ஆதியின் சொத்துக்காகத்தான் துர்கா ஆதியைத் திருமணம் பண்ணிக்கிட்டா. அப்படி இருக்கப்போ இந்த மாதிரி எண்ணத்தோடு ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு எப்படி ஆதி சந்தோஷமா காலம் முழுக்க இருக்க முடியும்? அதுக்கு வாய்ப்பே இல்லை. கூடிய சீக்கிரம் துர்காவும் ஆதியும் பிரியத்தான் போறாங்க. நான் தான் ஆதியைத் திருமணம் பண்ணப் போறேன்,” என்று சொன்னாள் சங்கவி திடமாக.
துர்காவை இவ்வளவு பேர் முன்னிலையில் சங்கவியின் பேச்சால் தாங்க முடியாத துர்காவின் மனம் மிகவும் வருத்தப்பட, அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டவள் அமைதியாக அமர்ந்திருக்க, இதைக் கவனித்த ஆதி எதுவும் பேசாமல் சங்கவியின் மேல் கோபத்தோடு அமர்ந்திருந்தான்.
துர்காவைப் பற்றி சங்கவி தவறாகக் கூறியதைக் கேட்ட கீர்த்திகாவும், அவள் அம்மா வடிவும், விசாலாட்சியும் மூன்று பேருமே சங்கவியிடம் சண்டைக்கு வந்துவிட்டனர்.
“நீ எப்படி எங்க பொண்ணைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம்?” என்று வடிவும் விசாலாட்சியும் கேட்க, கீர்த்திகா, “ஆமாம் அத்தை! இன்னைக்கு காலையில இருந்து பூமிகா அக்கா கிட்ட அப்புறம் அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் துர்காவைப் பத்தி சங்கவி இப்படியேதான் சொல்லிட்டு இருக்கா. ‘காசுக்காகத்தான் துர்கா ஆதி மாமாவை கல்யாணம் பண்ணியிருக்கா’ன்னு சொல்லிட்டே இருக்கா. அதைக் கேட்டு அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா? இவளுக்கு ஏன் இப்படி ஒரு பொறாமை? இவள் தானே ஆதி மாமாவை வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போனா. அப்படி இருக்கிறப்ப சும்மா சும்மா துர்காவைப் போட்டு இப்படி கஷ்டப்படுத்திட்டு இருந்தா நல்லா இருக்கா?” என்று கேட்டாள் கீர்த்திகா.
அனைவரும் சங்கவியையே திட்ட, அப்போது அங்கே வந்த வேதாச்சலம், “இப்ப எதுக்கு என் பொண்ணைத் திட்றீங்க? அவ ஏதோ ஆதியைத் திருமணம் பண்ண முடியல அப்படிங்கற ஆதங்கத்தில் எல்லாரும் முன்னாடியும் ஏதோ வார்த்தையை விட்டுட்டா. அதுக்காக என் பொண்ணை யாரும் திட்டாதீங்க. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். என் பொண்ணு ஆதியை நினைச்சுட்டு, அவ எந்தப் பையனையும் இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டா. ‘ஆதியை நான் செய்த தப்பினால் தான் அவனைத் திருமணம் பண்ண முடியாமல் போனது’ என்ற ஆதங்கத்தில் அவ சொல்லியிருப்பா…. அப்படியெல்லாம் பேசாதீங்க,” என்று மிகவும் நல்லவர் போல அனைவரிடமும் சங்கவிக்குப் பதிலாக மன்னிப்புக் கேட்டார். அனைவரும் இவரின் நிலையைப் பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் அமைதியாகப் போய்விட்டனர்.
மேடையில் இருந்து இறங்கிய சங்கவி விக்கியைப் பார்த்து முறைத்துக் கொண்டு கீழே இறங்கி வர, விக்கி சங்கவியைப் பார்த்துத் தன் நாக்கை நீட்டி அவளிடம் பழிப்பு காட்டியவன், “முதல்ல உன்னை அடக்க ஒடுக்கமா நடந்துக்கிற வழியைப் பாரு. இப்படிப் பொய் பேசிட்டு அடுத்தவங்களுக்குக் கெடுக்கணும்னு நினைச்சுட்டு இப்படியே சுத்திட்டு இருந்தேன்னு வை…. இது உன் வாழ்க்கைக்கு நல்லதில்லை. உன்னோட நல்லதுக்காகத்தான் ஒரு அக்கறையாக நான் சொல்றேன்,” என்றான் விக்கி.
அவன் கூறியதை எல்லாம் கேட்ட சங்கவி, “ஏய்…. உனக்கும் எனக்கும் என்ன உறவு இருக்கிறது? நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டே…. உன்னைக் கேட்கவே உனக்கு யாரும் இல்லை. அம்மா அப்பா இல்லாத அனாதை தானே நீ….?” என்று கேட்க.
அதை கேட்ட விக்கி, “நான் அனாதைன்னு யார் சொன்னது? என்கூட எத்தனை நல்லவங்க, நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க இருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும். நீ என்ன வேணாலும் என்னைச் சொல்லிட்டுப் போ…. ஆனா, உன்னைப் பார்க்கும்போது எல்லாம் அது என்னவோ தெரியல, நீ இந்த மாதிரி எல்லாம் பண்றப்போ எனக்குக் கூடப் பிறந்த தங்கச்சியோ அக்காவோ யாராவது இருந்திருந்தால், அவர்களை எப்படி நான் கண்டித்து வாய்ப்பேனோ அப்படித் தான் எனக்கு உன்னைப் பார்த்ததும் கண்டிக்கத் தோன்றுகிறது,” என்றான்.
சங்கவி கூறியதைக் கேட்டதும் அங்கிருந்த பெரியவர்களுக்குப் பிடிக்காமல் அனைவரும் எழுந்து தங்கள் அறைக்குச் சென்று விட்டனர்.
துர்காவும் எழுந்து தன் அறைக்குச் செல்லப் போக, அப்போது அவளின் கையைப் பிடித்து நிறுத்தி இருந்தது ஒரு கை. யார் கையைப் பிடித்து நிறுத்தினார்கள் என்று திரும்பிப் பார்க்கையில் ஆதிதான் அவளைப் பிடித்து நிறுத்தி இருந்தான்.
“துர்கா, எங்க போற? இன்னும் கேம் முடியல. நம்மளும் பார்ட்டிசிபேட் பண்ணப் பேர் கொடுத்திருக்கோம்ன்னு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்றான்.
“நான் இந்தக் கேம்ல கலந்து கொள்ளவில்லை ஆதி. போதும் அவமானப்பட்ட வரைக்கும். ஒவ்வொருத்தரும் வந்து அதையும் இதையும் சொல்லி என்னை அவமானப்படுத்தும் போது எனக்கு ரொம்ப வலிக்குது. எங்களுக்காகப் பேச இங்க யாருமே இல்லை என்கிறப்ப நான் எதுக்காக இங்க இருக்கணும்? நான் போறேன். நீ கையை விடு ஆதி,” என்று கூற, ஆதி கோபமாக அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் இருந்த சேரில் அமர வைத்தான். துர்காவைப் பார்த்து,
“நீ இங்கே இருக்கிறதா இருந்தாலும், இங்கிருந்து போறதா இருந்தாலும், நான் சொன்னா மட்டும்தான் நீ செய்யணும். நீயா யோசிச்சு எந்த முடிவையும் எடுப்பதற்கு நான் உனக்கு எந்த அனுமதியும் கொடுக்கல,” என்று ஆதி துர்காவைப் பார்த்து கோபத்துடன் சொல்ல.
ஆதி சொன்னதைக் கேட்டது கேட்டு துர்காவின் மனம் மேலும் புண்படும்படி ஆகிவிட, எதுவும் பேசாமல் அமைதியாக அவன் அருகில் அமர்ந்தாள்.
கதிரும் கீர்த்திகாவும் ஸ்டேஜுக்கு வந்தனர்.
கதிர் மூன்று விஷயங்களைச் சொல்ல வேண்டும். அதிலிருந்து எது பொய் என்று கீர்த்திகா கண்டுபிடிக்க வேண்டும்.
போட்டியை நடத்துபவர், “ஓகே மிஸ்டர் கதிர்! நீங்க ரெடியா இருக்கீங்களா? இப்போ கேம் ஸ்டார்ட் பண்ணிடலாமா?” என்று கேட்க,
“ஓகே ஷூர்! நான் ரெடியாகத்தான் இருக்கேன். கேம் ஸ்டார்ட் பண்ணலாம்,” என்றான்.
“சரி ஓகே! நீங்க ஏதாவது ஒரு மூணு விஷயத்தை உங்களோட பார்ட்னருக்கு சொல்லுங்க. அவங்க அதிலிருந்து எது பொய் என்று கண்டுபிடிக்கட்டும்,” என்று கூற, “ஓகே” என்று சொன்னவன் மைக்கை வாங்கிக் கீர்த்திகாவைப் பார்த்துவிட்டு,
- “என்னோட வாழ்க்கையின் முதல் லட்சியமே, எனக்காகத் தனியாக ஒரு பிசினஸ் ஸ்டார்ட் செய்து அதில் சக்ஸஸ்ஃபுல்லாக வரவேண்டும். அதில் என் அப்பாவின் பெயரையோ என் அண்ணனின் பெயரையோ உபயோகிக்காமல் நான் அந்தத் தொழிலில் முன்னேற வேண்டும் என்பதே என் முதல் ஆசை,” என்றான்.
- “இங்க கொஞ்ச நேரம் முன்னாடி சங்கவி, விக்கியைப் பற்றி எனக்கு யாருமில்லை என்றெல்லாம் சொல்லி அவனை எல்லோரும் முன்னிலும் அவமானப்படுத்தினாள். அதற்குப் பதிலடி கொடுப்பது போல, ‘சங்கவி கூறிய அனைத்து விஷயங்களும் உண்மையே. அவனுக்கு வேற யாரும் இல்லைன்னு இங்கு யாரும் நினைச்சிட வேண்டாம். என் குடும்பமும் நானும் இருக்கிறோம்,’ ” என்று இரண்டாவது விஷயமாகக் கூறினான்.
கதிர் கூறியதைக்கேட்டதும் விக்கிக்கு மிகவும் சந்தோஷமாகவும், அதேசமயம் கண்களில் இருந்து கண்ணீரும் வந்துவிட்டது. தனக்காகப் பேச தன் நண்பனும் நண்பனின் தம்பியும் எப்போதுமே தன் அருகில் இருக்கிறார்கள் என்று மிகவும் சந்தோஷப்பட்டான்.
- “மூன்றாவதாக, எனக்கு உன்னை சுத்தமாகப் பிடிக்கவே பிடிக்காது,” என்றான் கதிர்.
அவனிடமிருந்து மைக்கை வாங்கிய கீர்த்திகா, “நீங்க சொன்ன மூணாவது விஷயம், அதாவது, ‘என்ன உங்களுக்குச் சுத்தமா பிடிக்கவே பிடிக்காது’ன்னு சொன்னீங்க இல்லையா? அந்த விஷயம் தான் பொய்,” என்றால் கீர்த்திகா.
உடனே அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியமாக கீர்த்திகாவையும் கதிரையும் பார்க்க, ‘என்ன! இவன் அவளைப் பிடிக்காதுன்னு சொல்றான். ஆனா இந்த பொண்ணு அவனுக்கு அவளை பிடிக்கும் என்று சொல்கிறாள்?’ என்று எல்லோரும் யோசனையாகப் பார்க்க, துர்காவும் அதே யோசனையோடு தான் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தாங்கள் மேடையில் இருக்கிறோம் என்பதை மறந்து இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே நின்றிருக்க, அப்போது கீர்த்திகாவின் அருகில் வந்து போட்டியை நடத்துபவர், “ஹலோ மிஸ்… எப்படி நீங்க அவர் சொன்னது பொய் என்று உறுதியாகச் சொல்றீங்க?” என்று கேட்டார். அப்போதுதான் தன் நிலைக்கு வந்த கீர்த்திகா கதிரை ஒரு முறை பார்த்துவிட்டு, அந்தப் போட்டியை நடத்துபவரிடம் திரும்பி, “அதை நான் இப்போ ப்ரூஃப் பண்றேன்,” என்று சொன்னாள்.
“ஓகே” என்று அந்தப் போட்டியை நடத்துபவர் சற்று அவர்களை விட்டுத் தள்ளி நிற்க, கீர்த்திகா ஒரு முறை கதிரைப் பார்த்துவிட்டு,
“ஹலோ கதிர் மாமா….” என்று கீர்த்திகா கதிரை அழைத்ததும், அவ்வளவு நேரம் அவளிடம் விளையாட்டு காட்ட வேண்டும் என்று வேண்டுமென்று ‘அவளைப் பிடிக்காது’ என்று சொன்ன கதிர், அவள் தன்னை ‘மாமா’ என்று அழைத்ததும் ஆச்சர்யத்தில் எதுவும் பேசாமல் அப்படியே நின்று இருக்க, “உங்களுக்கு என்ன நிஜமாகவே பிடிக்காதா மாமா?” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.
கதிர் வேண்டும் என்று தன்னை இத்தனை பேர் முன்னிலையில் ‘மாமா மாமா’ என்று கூப்பிட்டுத் தன்னை வம்பு இழுப்பதைப் புரிந்துகொண்ட கதிர், வேண்டும் என்று அவளிடம், “எனக்கு உன்னைப் பிடிக்காதுன்னு தானே சொன்னேன்,” என்று அவன் திரும்பி கேட்க, “அப்போ நிஜமா என்னைப் உங்களுக்குப் பிடிக்காது அப்படித்தானே?” என்று கேட்க, கதிரும் “ஆமாம்” என்று தலையை ஆட்டினான்.
“சரி, அப்போ உங்களுக்கு என்னப் பிடிக்காது தானே? அப்ப நான் எது செஞ்சாலும் உங்களுக்குக் கவலை இல்லை அப்படித்தானே?” என்று கீர்த்திகா கேட்க, கதிரும், “ஆமாம்! என்ன செஞ்சா எனக்கு என்ன? எனக்குப் பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் நான் அதைப்பற்றிக் கவலையே பட மாட்டேன்,” என்றான் சற்றும் யோசிக்காமல்.
“அப்போ சரி! இனிமேல் நான் எது செஞ்சாலும் நீங்க என்ன எதுவும் கேட்கக்கூடாது. ஓகேவா….” என்று சொன்னவள், மைக்கைப் பிடித்துக்கொண்டு கூட்டத்தில் இங்குமங்கும் சுற்றிப் பார்க்க, அவள் அங்கே பாலு அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அவனைப் பார்த்து, “ஹாய் ஜெண்டில்மேன்….” என்று மேடையில் இருந்து கையை அசைக்க.
அதைப் பார்த்த பாலு புரியாமல் தன்னைத்தான் அழைக்கிறாளா இல்லை தன் பின்னால் இருப்பது யாரோ கூப்பிடுகிறார்களோ என்று தன்னைச் சுற்றி முற்றும் பார்க்க, “இல்லை! நான் உங்களைத்தான் கூப்பிட்டேன்,” என்று சொல்ல.
“என்னையா?” என்று கேள்வியுடன் எழுந்து நின்ற பாலு, “சொல்லுங்க மிஸ்….” என்று புரியாமல் கேட்க, “நீங்க ரொம்ப அழகா ஹேண்ட்ஸமா இருக்கீங்க,” என்று சொன்னாள்.
கீர்த்திகா இப்படிச் சொன்னதும் மேடையில் இருந்த கதிருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. ‘சற்றுமுன் தானே அவளிடம் நான் எவ்வளவு கோபமாக, ‘இப்படி என்னை வைத்துக்கொண்டு அடுத்தவங்களை சைட் அடிக்கக் கூடாது’ன்னு எச்சரித்தேன். ஆனால் இவள் என்னவென்றால் மேடையில இத்தனை பேர் முன்னாடியும் என்னை வைத்துக்கொண்டு இன்னொருவனை ‘அழகா இருக்க’ன்னு சொல்கிறாள்…’ என்று கோபம் வந்த கதிர்,
சட்டென்று அவள் கையில் இருந்து மைக்கைப் பிடுங்கியவன், “உன்னை எனக்குப் பிடிக்காதுன்னு நான் சொன்னதுக்கும் இப்போ நீ செஞ்சிட்டு இருக்குற காரியத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் கதிர்.
“சம்பந்தம் இருக்கு கதிர் மாமா…..” என்று அந்த ‘மாமா’வை அழுத்தமாகச் சொன்ன கீர்த்திகா, “உங்களுக்குத்தான் என்னப் பிடிக்காதே…. அப்போ நான் யாரைப் பார்த்து ஹேண்ட்ஸமா… இருக்குன்னு சொன்னா என்ன? சொல்லாட்டி உங்களுக்கு என்ன? நீங்க பாட்டுக்கு பேசாமல் போக வேண்டியது தானே? இப்ப ஏன் இவ்வளவு கோபமா என்கிட்ட வந்து மைக்கைப் பிடுங்கி என்கிட்ட சண்டை போடுறீங்க?” என்று கேட்டால் கீர்த்திகா.
“எப்பவுமே ஒரு விஷயம் சொல்லுவாங்க, ‘நமக்கு பிடிச்சவங்க கிட்டதான் நம்ம கோபத்தைக் காட்டுவோம்’னு. இப்போ நீங்க என்கிட்ட கோபத்தைக் காட்டிட்டீங்க அப்படின்னா, உங்களுக்கு என்னப் பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம் கதிர் மாமா?” என்று அவள் கூற.
இதற்கு மேல் எதுவும் பேச முடியாத கதிர் எதுவும் பேசாமல் நிற்க, “பாத்தீங்களா! அப்ப நீங்களே எதுவுமே சொல்லலையா? அப்போ உங்களுக்கு என்னை கண்டிப்பா பிடிச்சிருக்கு,” என்று சொன்னவள், போட்டி நடத்துபவரிடம் மைக்கைக் கொடுத்துவிட்டு, “அவ்வளவுதான்! நான் தான் ஜெயிச்சேன். பை….” என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டாள். செல்லும் கீர்த்திகாவையே ஆச்சரியம் தாங்காமல் பார்த்துக் கொண்டு இறங்கி வந்தான் கதிர்.
போட்டி நடத்துபவர் மேடையில் ஏறி நின்று, “அடுத்ததாக மேடைக்கு வரும் ஜோடி ஆதி மற்றும் துர்கா,” என்று கூறினார்.
துர்கா மூன்று விஷயங்களைக் கூற வேண்டும். அதில் எது பொய் என்று ஆதி அவள் சொன்ன விஷயத்தில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
துர்கா மைக்கை வாங்கியவள் தயக்கத்துடனே நின்றிருக்க. அவளை முறைத்த ஆதி, “இப்ப ஏதாவது சொல்லப் போறியா? இல்லை இங்கிருந்து இறங்கிப் போயிடலாமா? மேடையேறி வந்துட்டு எதுக்கு இப்படி எதுவுமே பேசாமல் நிக்கிற?” என்று அவன் அவளை அதட்ட…
துர்கா எதுவும் பேசாமல் திரும்பி மைக்கைப் பிடித்தவள்.
- முதலாவதாக, “ஆதியை எனக்குக் கடந்த பத்து வருடமாகத் தெரியும். அவனும் நானும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள்.”
- இரண்டாவதாக, “ஆதியைப் பற்றி எனக்கு எல்லா விஷயமும் தெரியும். ஆனால், ஆதிக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்,” என்று பொய் சொன்னாள். ஏன் என்றால், ஆதிக்கு துர்காவைப் பற்றி அவ்வளவாக எதுவும் தெரியாது என்று துர்காவுக்கு நன்றாகவே தெரியும்.
அவள் இப்படி கூறியதும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், மூன்றாவதாக துர்கா என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலாகக் காத்திருந்தான்.
- மூன்றாவதாக, “இப்போது சங்கவி சொன்னது போல, நான் ஆதியை அவனிடம் இருக்கும் சொத்துக்காகத் திருமணம் செய்யவில்லை,” என்றால் துர்கா அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு.
துர்கா பேசி முடித்துவிட்டு ஆதியிடம் மைக்கை நீட்ட. கையில் இருந்த மைக்கை வாங்கியவன் துர்காவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, துர்கா கூறியதில் மூன்றாவதாகச் சொன்ன விஷயம் தான் பொய் என்று அவன் சொன்னதும்.
கீழே இருந்த மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்க, துர்காவும் அதே நிலையில் தான் அவனையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆதி இவ்வாறு சொன்னதும், இவ்வளவு நேரம் அவன் சொல்வதெல்லாம் கேட்டுக்கொண்டு மேடையின் கீழ் அமர்ந்திருந்த சங்கவி வேகமாக எழுந்து கையைத் தட்டிக் கொண்டவள், “பாத்தியா ஆதி! நான் சொன்னேன் இல்லையா? துர்கா உன்கிட்ட இருக்கச் சொத்துக்காகத்தான் அவ உன்னை கல்யாணம் பண்ணியிருக்கேன்னு. அதை நீயே ஒத்துக்கிட்ட பார்த்தியா? நான் சொன்னது சரிதானே?” என்று சந்தோசமாக சங்கவி கைகளைத் தட்ட.
அவளை ஒரு பார்வை பார்த்து முறைக்க, அவன் பார்வையிலேயே பேசாமல் தனது சேரில் அமர்ந்தாள்.
துர்கா, ஆதியைப் பார்த்து, தன்னை சங்கவி சொன்னது போல, அவனுடைய பணத்திற்காகத் தான் அவனை நான் திருமணம் செய்து கொண்டேன் என்று ஆதியும் இவ்வளவு நாள் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்ததும், துர்காவின் கண்களில் கண்ணீரோடு ஆதியையே பார்த்துக் கொண்டிருக்க, கீழே இருந்த விக்கியும் கதிரும் ஆதியைப் பார்க்க, கதிர் பொறுக்க முடியாமல், “என்ன ஆதி! அந்த சங்கவி சொன்ன மாதிரியே நீயும் சொல்ற? அதுவும் ஸ்டேஜ்ல இத்தனை பேரும் முன்னாடியும் சொல்லிட்டு இருக்க. உனக்கு துர்காவைப் பற்றி என்ன தெரியும்? அவ உன்னை எத்தனை நாளா……” என்று ஏதோ சொல்ல வரும்போது விக்கி கதிரின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவன், கண்களைக் காட்டி எதுவும் சொல்ல வேண்டாம் என்று மெதுவாகத் தலையசைத்து அவனை அமைதிப்படுத்திச் சேரில் அமர வைத்தான்.
கதிர் துர்காவுக்கு ஆதரவாக எதுவும் பேச முடியாமல் கோபத்தோடு அமர்ந்தான்.
துர்கா, ‘ஆதி சொன்ன இந்தச் சொல்லைத் தாங்க முடியாமல் மேடையில் இருந்து இறங்கி ரூமிற்குச் செல்லப் போக,’ ஆதி மைக்கில் பேசும் சத்தம் துர்காவுக்குக் கேட்டது.
“துர்கா மூணாவதா சொன்ன விஷயம் பொய் அப்படின்னு நான் ஏன் சொன்னேன்னா, ‘துர்கா என்கிட்ட இருக்கிற சொத்துக்காக என்ன கல்யாணம் பண்ணலை’ன்னு சொன்னது பொய்.
துர்காவோட சொத்தே நான் தான். அவ எனக்காகத் தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா….,” என்று ஆதி சொல்ல, இதைக் கேட்டதும் துர்காவால் தன்னையே நம்ப முடியவில்லை.
ஆதி தன்னைப் பார்த்து இப்படிச் சொல்கிறாரா என்று அதிர்ச்சியில் செல்ல இருந்தவள் நின்று திரும்பி அவனைப் பார்க்க, ஆதியும் துர்காவைத் தான் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான்.
“என்னோட திருமணத்தன்னிக்கு மணமேடை வரைக்கும் நான் வந்து மணமேடையில் அமர்ந்திருக்கிறப்போ, இதோ இங்க இருக்காங்களே மிஸ் சங்கவி, இவங்கதான் என்னோட நோயைப் பற்றி சொல்லி என்னைத் திருமணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு என்னை நிராகரிச்சாங்க. இதன் பிறகு யார் யாரோ பேச்சைக் கேட்டு சமாதானம் ஆகி இந்தச் சங்கவி திரும்ப என்னைத் திருமணம் பண்ணிக்க ஒப்புக்கொண்ட போது, அவளுடைய சுயரூபம் தெரிஞ்சு தான் நான் அவர்களைத் திருமணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு சொல்லி மேடையில் இருந்து எழுந்தேன்.
நான் யார் முன்னாடியும் அவமானப்பட்டு நிற்கக் கூடாதுன்னும், திருமணம் தடைப்பட்டு விடக்கூடாது அப்படிங்கற ஒரே காரணத்துக்காக என் அம்மாவோட வற்புறுத்தலால் தான் துர்கா என்னைத் திருமணம் பண்ணிக்கிட்டாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் இந்த காரணத்துக்கு உள்ளேயும் துர்காவுக்கு என் மேல வச்சிருக்கிற அன்பும் பாசமும் எனக்கு நல்லா புரிஞ்சது. என்னச் சந்திச்ச நாளில் இருந்து இன்னைக்கு வரைக்கும் இப்போ வரைக்கும் துர்கா எனக்காக எதுவாக இருந்தாலும் செய்வாள். துர்காவுக்கு ‘நான்’ என்றால் ரொம்பப் பிடிக்கும்,” என்று ஆதி கூற.
ஆதி பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த துர்காவுக்கு, தான் ஆதியைக் காதலிக்கிறாள் என்பது தெரியுமோ தெரியாதோ…. ஆனால், அவன் மேல் தான் வைத்திருக்கும் அக்கறையும் பாசமும் உண்மை என்று எப்படியோ ஆதிக்குப் ஓரளவுக்குப் புரிந்து இருக்கிறது என்று நினைத்தவள், கண்களில் இருந்து கண்ணீர் மேலும் அதிகரிக்க அங்கே நிற்க முடியாமல் அவள் அறைக்குச் சென்று விட்டாள்.
