EPISODE 4
ஆதியின் வீட்டிற்கு வந்ததும், இருவரையும் வாசலில் வைத்து ஆரத்தி எடுக்க, அதுவரை அமைதியாக இருந்தவன், ஆரத்தி எடுத்து முடிந்ததும் வேகமாக துர்காவைக் கூட பார்க்காமல் தன் அறைக்குச் சென்றுவிட்டான். அவன் அவ்வாறு சென்றதைப் பார்த்த விசாலாட்சி, “அவன் ஏதோ கோவத்துல இருக்கான்மா, நீ எதுவும் மனசுல வெச்சுக்காத. போக போக சரி ஆகிடுவான். அப்படி ஆகலை என்றாலும் நீ அவனை சரி செய்துவிடு” என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு போய் பூஜை அறையில் நிற்க வைத்தவர்,
“அம்மாடி துர்கா, இந்த வீட்டுக்கு அந்த மகாலட்சுமியே எனக்கு மருமகளா வந்திருக்கா… உன்னால இந்த வீடு சந்தோசத்தில் நிறைஞ்சு இருக்கனும், நம்ம வம்சம் விருத்தி அடையனும், எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சுட்டு விளக்கைக் ஏற்றுமா…” என்று அவள் கையில் தீப்பெட்டியை கொடுத்தார்.
அதை வாங்கிய துர்கா, விளக்கை திரும்பிப் பார்க்க, அவள் உயரத்திற்கு தங்கத்தால் ஆன குத்து விளக்கு இருந்தது. அதைப் பார்த்ததும், “அம்மா, இதுலயா விளக்கு ஏற்றணும்?” என்று கேட்க, “ஆமாம்டா. இன்னிக்கு நீ ஏற்றுகிற விளக்கு நம்ம குலத்தை மென்மேலும் வளரச் செய்யணுமில்லையா? அதான் பெரிய விளக்கை நம்ம கடையில் இருந்து எடுத்து வரச் சொன்னேன்.
இன்று நாள் பூரா அணையாமல் எரியணும் இந்த விளக்கு, சரியா?” என்று கூறியவர், “சரிடா, விளக்கை ஏற்று” என்று கூற, “சரி” என்று தலையை ஆட்டிவிட்டு, கடவுளை வேண்டிவிட்டு விளக்கினை ஏற்றினாள் நம் துர்கா, நம் மகா துர்கா…
திடீரென்று துர்காவுக்குத் திருமணம் ஆனதால், அவளது பெற்றோருக்கும் தங்கைக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தனர்.
அவர்களைப் பார்த்து துர்கா அவர்கள் அருகில் வந்து அமர்ந்தவள், “அப்பா, ஏம்பா ஒரு மாதிரியா அமைதியாக இருக்கீங்க? என்னடா, இப்படி எனக்கு திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு வருத்தப்படுறீங்களா?” என்று கேட்டாள் துர்கா. “இல்லம்மா, நீ கல்யாணம் ஆனது எனக்கு சந்தோசம்தான், வருத்தமல்ல. ஒன்னும் இல்ல, ஆனா நம்ம தகுதிக்கு மேல் மிகவும் பெரிய இடத்துல உனக்குக் கல்யாணம் ஆகி இருக்கு. இங்கே உன்னை எப்படி நடத்துவாங்க? உனக்கு எப்படி மரியாதையாக வைத்துக்கொள்வார்கள் என்று எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. விசாலாட்சி அம்மா நல்லவங்கதான், ஐயரும் நல்லவர் தான். ஆனா மத்தவங்க எல்லாம் நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்க, என்ன பேசுவாங்கன்னு கொஞ்சம் எனக்கு யோசனையா இருக்குமா” என்றார்.
அவர்கள் நால்வரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டு வந்த ஆதியின் அப்பா, துர்காவின் அப்பாவின் அருகில் அமர, இவ்வளவு பெரிய ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் தன்னருகில் அமர்ந்ததும், பதட்டத்தில் துர்காவின் அப்பா எழுந்து நின்றுவிட்டார்.
அவர் சங்கடப்பட்டு எழுந்ததைப் பார்த்து மனம் வேதனை அடைந்த துர்கா, “ஆதியின் அப்பா… சம்மந்தி, ஏன் இப்படி சங்கடப்பட்டு எழுந்தீங்க? எப்போ என் பையனுக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் ஆச்சோ, அப்போவே நம்ம ரெண்டு பேரும் உறவுக்காரங்க ஆகிட்டோம்.
அப்போ ரெண்டு பேருமே சரி சமம் தான். பணம், காசுல ஒன்னும் சரிசமம் நான் எப்பவுமே யார்கிட்டயும் பார்த்து பழகுவதில்லை. நல்ல எண்ணமும், குணமும் இருந்தால் போதும் சம்மந்தி. உட்காருங்க” என்று அவர் கை பிடித்து இழுத்துத் தன் அருகில் இருந்த சோபாவில் அமரவைத்தார்.
“சம்மந்தி, இப்படி திடீர்னு என் பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. அவ கல்யாணத்துக்காக நாங்க கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச மூணு ஏக்கர் நிலம் இருக்கு, அதுபோக துர்காவுக்கும் சிறுக சிறுக சேர்த்து வைத்ததில் ஆளுக்கொரு 20 பவுன் சேர்த்து வைத்திருப்போம். சம்மந்தி, கீர்த்திக்கு போட்டதையும் சேர்த்து நான் துர்காவுக்குப் போட்டு விடுறேன். எங்களால இவ்வளவுதான் செய்ய முடியும் சம்மந்தி. உங்க வசதிக்கும், அந்தஸ்திற்கும் எங்களால இதுக்கு மேல எதுவும் செய்ய முடியாது. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்கலைன்னா முறையா அதெல்லாம் நான் கொண்டு வந்து தரட்டுமா?” என்று கேட்டார் துர்காவின் அப்பா.
அங்கே வந்த விசாலாட்சி, “என்ன சம்மந்திமா… அவர் இப்படி பேசிட்டு இருக்காரு, நீங்களும் பக்கத்துல உட்கார்ந்து கேட்டுட்டு இருக்கீங்க? உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்ய விருப்படுறீங்களோ அது செய்யுங்க. அதுக்காக கீர்த்திக்காக சேர்த்து வச்சதையும் சேர்த்து துர்காவுக்குக் கொடுக்கணும்னு அவசியம் இல்லை.
இதுவே நான் ஏன் சொல்றேன்னா, நீங்க எதுவுமே செய்யாம பொண்ணு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன்னு உங்களுக்கு தோணிற கூடாது என்பதற்காகத்தான் நான் உங்களுக்கு சொல்றேன். உங்கள் இருவருக்கும் என்ன விருப்பமோ, அதை செய்யுங்கன்னு சொன்னேன். அந்த மூணு ஏக்கர் நிலத்தையும் கீர்த்தி பேர்லயே எழுதி வச்சிருங்க. துர்காவுக்கு நகை போடணும்னு சொன்னீங்க இல்லையா, அந்த நகை அவளுக்காக சேர்த்து வச்ச அந்த 20 பவுன் மட்டும் உங்களால் உங்கள் முறைக்காகக் கொண்டு வந்து கொடுங்க. நான் அதை வேண்டான்னு சொல்லல. துர்காவுக்கும் தன் தாய் வீட்டிலிருந்து சீதனமா எதுவுமே வரல அப்படின்னு ஒரு மனசு உறுத்தல் வந்திட கூடாது என்பதற்காகத்தான் இதை நான் உங்ககிட்ட சொல்றேன்” என்றார்.
“இல்ல வேணாம் ஆன்ட்டி. எங்க அக்காவுக்கும் என்னோட நகைகளை கொடுத்து இருங்க. எனக்குதான் இன்னும் கல்யாணத்திற்கு நிறைய நாள் இருக்கே. அண்ணா இப்பதான் ஃபைனல் இயர் முடிச்சிட்டு இருக்கேன். ஃபைனல் முடிச்சு எனக்குப் பிடிச்ச வேலைக்கு நான் போய் நானே சம்பாதித்து எனக்காக சேர்த்துக்கிறேன் ஆன்ட்டி. அக்காவுக்கு என்னுடையதும் சேர்த்து அம்மா, அப்பாவை நான் கொடுக்க சொல்றேன். நீங்க வேண்டாம்னு சொல்லக் கூடாது” என்று கீர்த்தி கூற,
அவள் அருகில் வந்த விசாலாட்சி அவள் தலையை வாஞ்சையாக வருடி கொடுத்தவள், “அக்கா மேல அவ்வளவு பாசமா உனக்கு?” என்றவர், “இங்க பாரு கீர்த்திகா, இனிமேல் என்னை ‘ஆன்ட்டி’ன்னு எல்லாம் கூப்பிடக்கூடாது. உங்க அக்காவுக்கு நான் எப்படி அத்தையோ, அதே தான் உனக்கும். நீ ‘அம்மா’ன்னு கூப்பிட்டாலும் சரி இல்ல ‘அத்தை’ன்னு கூப்பிட்டாலும் சரி. சரியா? உனக்கு எது விருப்பமோ அப்படி கூப்பிடு. இனிமேல் ‘ஆன்ட்டி’ன்னு மட்டும் கூப்பிடக்கூடாது, சரியா?” என்றவர்,
“எங்க வீட்டுக்கு நீங்க பெரிய சொத்தான உங்க மகளையே கொடுத்து இருக்கீங்க. இதுக்கு மேல எங்களுக்கு எதுவுமே வேண்டாம். எங்க கிட்ட இல்லாததா இருந்தாலும் உங்க திருப்திக்காகவும், நான் துர்காவோட மனசு சங்கடப்படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த 20 பவுனையே கொடுங்கள் என்று சொன்னேன்.
இனிமேல் இந்த நகை பற்றியோ, வரதட்சணை பற்றியோ, பணம் பத்தி யாருமே பேசக்கூடாது. சரியா? நீ சின்னப் பொண்ணு. நீ நல்ல சந்தோசமா இருக்கணும். உனக்கானது உனக்கு இருக்கட்டும். நீ எதுவும் சொல்ல வேண்டாம், சரியான தங்கம்” என்று அவளைத் தட்டிக் கொடுத்தார் விசாலாட்சி.
“சரி இருங்க, நான் போய் உங்க எல்லாருக்கும் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று சமையல் அறைக்குச் செல்ல, “அம்மா, இருங்க நானும் வரேன்” என்று கூறிய துர்கா எழுந்து அவருடன் செல்ல, கீர்த்தியும் “நானும் வருகிறேன்” என்று மூவரும் சமையலறைக்குச் சென்றனர்.
❤️
ஆதியின் அறையில் ஆதி கோபமாக இங்கும் அங்கும் நடந்துகொண்டிருக்க, அவனைப் பார்த்த விக்கி, கதிரிடம், “உங்க அண்ணன் என்னடா இவ்வளவு கோவமா இருக்கான்.
இவனை சமாதானம் பண்ணச் சொல்லி அம்மா என்னையும் உன்னையும் அனுப்பி வச்சிருக்காங்க. கோபமா இருக்கும்போது இவன் பக்கத்துல யாருன்னாலும் போக முடியாது, துர்காவை தவிர. ஆனா துர்காவை கல்யாணம் பண்ணதுக்காகத்தான் இப்ப கோவத்துல இருக்கான். இப்ப எப்படி நம்ம போய் துர்காகிட்ட ஹெல்ப் கேட்க முடியும்?” என்று விக்கி கதிரிடம் மெதுவாகக் கூறினான்.
விக்கி கூறியதைக் கேட்ட கதிர், “அம்மா உன்கிட்ட தான சொல்லி அனுப்பி இருக்காங்க. அப்ப நீயே போய் அவன் கிட்ட பேசி சமாதானம் பண்ணு. என்னால எல்லாம் அவன் கிட்ட பேச முடியாது. இப்ப நான் போய் பேசினேன் வை, இருக்கிற மொத்த கோபத்தையும் என் மேலதான் காட்டுவான்” என்று கதிர் கூற…
“ஏன்டா, அப்ப நான் போய் பேசுனா பரவாயில்லையா? அந்தக் கோபம் எல்லாம் என் பக்கம் திரும்பிடுச்சுன்னா நான் என்ன பண்றது?” என்று கேட்க, அவன் தோள் மீது கை வைத்த கதிர், “நீதானே அவனோட பெஸ்ட் பிரண்டு? அவன் எவ்வளவு அடிச்சாலும் நீ தாங்குவடா” என்று தலையாட்ட, “ஏன்டா சொல்ல மாட்டீங்க” என்று கூறியவன், “சரி நானே போய் சமாளிக்கிறேன்” என்று ஆதியின் அருகில் செல்ல,
ஆதியின் அருகில் சென்று விக்கி, “ஆதி” என்று கூற, நடந்துகொண்டிருந்தவன் நின்று அவனைத் திரும்பி, “என்னடா….” என்று கேட்டான் ஆத்திரத்தோடு.
அவன் கோபமாகக் கேட்டதைப் பார்த்த விக்கி அப்படியே நின்றான். மனதில், “ஆஹா, இவ்வளவு கோவமா இருக்கான். என்கிட்ட போய் நான் வாயை கொடுத்துட்டேன்னு” என்று யோசித்து, “சாரி, சமாளிப்போம்” என்று வடிவேலு ஸ்டைலில் கூறிக்கொண்டு அவன் பக்கம் சென்று, “இப்போ எதுக்கு குட்டி போட்டு போன மாதிரி இங்கேயும் எங்கேயும் நடந்துகிட்டு இருக்க?” என்று ஆதியிடம் கேட்க, “நான் ஏன் இப்படி இருக்கேன், உங்களுக்குத் தெரியாதாடா?” என்று திருப்பி அவர்களிடம் கேட்டான்.
“எங்களுக்குப் புரியாம எல்லாம் இல்லைடா. இப்ப என்ன பண்றது? யாருமே எதிர்பார்க்கலையே துர்காவை உனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு சொல்லிட்டு.”
“ஏன்? துர்கா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டா? அவ மனசுல என்ன இருக்கு, எப்படி அவ யோசிச்சிட்டு இருப்பான்னு நமக்கும் தெரியாது தானே? நீ இப்போ தேவையில்லாம டென்ஷனாகி என்ன பண்ணப் போற? நீ டென்ஷனாவே, சுத்தி இருக்கவங்களும் சேர்ந்து டென்ஷனாகுறதுதான் மிச்சம்.
இப்ப போய் நீ, ‘எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல, அது இது’ன்னு அம்மா கிட்டயோ, அப்பா கிட்டயோ சொல்லிராத. ஏற்கனவே அம்மாவோட உடம்பு கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு” என்று விக்கி கூற,
“எனக்குப் பிடிக்காம கல்யாணம் பண்ணி வச்சாங்க. நான் சொல்லாட்டியும் அவங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும். நான் வேண்டாம்னு சொல்லியும் அப்பா என்னை அதட்டி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைத்துவிட்டார். அத்தனை பேர் முன்னாடி அவரிடம் நான் போய் வாக்குவாதம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு, வேற வழி இல்லாம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
அதுக்காக என்னால துர்கா கூட எல்லாம் வாழ முடியாது. அவ என்னப் பத்தி என்ன நினைப்பா? என்னோட உடல் கண்டிஷன் உனக்கே நல்லா தெரியும். நான் இப்படி இருக்கிறப்போ, எனக்குப் பிடிச்ச பொண்ணு, என்னைப் பிடிச்சு ஏத்துக்கிட்ட ஒருத்தியைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருந்தேன்.
அது துர்காவுக்கும் நல்லாவே தெரியும். ஆனா துர்காவுக்கு நான் இப்படி இருக்கிறது எப்படி பிடிக்கும்? அவ மனசுல அவளோட கல்யாணத்தைப் பத்தி, எதிர்கால வாழ்க்கையைப் பத்தி 1008 கனவு கண்டு இருப்பா இல்லையா? இப்போ என்ன போல ஒரு நோயாளியை கல்யாணம் பண்ணிக்கிட்டோமே என்று அவள் மனசுலயும் வருத்தம் இருக்குமா, இருக்காதா? நீயே சொல்லு.
நான் எப்படி அவளை நேருக்கு நேரா ஃபேஸ் பண்ணுவேன்? என்னால துர்காவை ஒரு ஃபிரண்டை தவிர்த்து வேற ஒரு கோணத்தில் என்னால் பார்க்கவே முடியல” என்று கூறினான் ஆதி.
“சரிடா, நீ சொல்றது எனக்குப் புரியுது. நீ எதுவுமே துர்காகிட்ட பேசாம எதுவுமே முடிவெடுக்காத. முதல்ல நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்க. என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணுங்க. அதுக்கப்புறம் அம்மா, அப்பா கிட்ட போய் பேசுங்க. நீ மட்டும் ஏதாவது சொல்லி உன் சைடு மட்டும் யோசிக்காத. துர்காவோட சைடும் கொஞ்சம் யோசி. உன்னைப் பத்தி என்ன நினைக்கிறா? அவளுக்கு உன்னைப் பிடிக்குமா, பிடிக்காதா? இல்ல அவ மனசுல வேற யாராவது இருக்காங்களா? அப்படிங்கறதை நீ தெரிஞ்சுக்க வேண்டாமா? எடுத்த உடனே ‘எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம், எனக்கு இது பிடிக்கவில்லை’ என்று நீ சொல்றது எந்தப் பிரயோஜனமும் இல்லை.
உங்க ரெண்டு பேருக்கும் இந்தக் கல்யாணம் பிடிச்சிருக்கு பிடிக்கலையா? ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இப்போ கல்யாணம் ஆயிடுச்சு. நீங்க ரெண்டு பேரும் உறவு முறையா இருக்கீங்க. அதாவது கணவன், மனைவியா. அது சரியா, தப்பா? முதல்ல நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி முடிவு எடுத்துட்டு, அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் பெரியவங்க கிட்ட போய் பேசுங்க, சரியா? முதல்ல நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நான் சொல்றதை திரும்பத் திரும்ப புரிந்துகொள்” என்றான் விக்கி.
“சரி, நீ இப்படியே டென்ஷனாயிட்டு இங்கே எங்கேயும் நடந்துட்டு இருக்காம போய் கொஞ்ச நேரம் ரிலாக்ஸா ரெஸ்ட் எடு. சரியா? நான் மண்டபத்துக்கு போறேன். அங்க நிறைய வேலைகளை அப்படியே பாதியிலேயே விட்டுட்டு வந்துட்டோம். நானும், கதிரும் மண்டபத்துக்குப் போயி பேலன்ஸ் என்ன வேலை இருக்கு, அதெல்லாம் முடிச்சு கொடுத்துட்டு நைட் வீட்டுக்கு வர்றோம்” என்று கூறிவிட்டு, கதிரை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
விக்கி கூறியது எல்லாம் கேட்ட ஆதி, சிறிது நேரம் அவன் சொன்னதைப் பற்றி யோசித்தவன், “அவன் சொல்றதும் கரெக்ட் தான். முதல்ல துர்காகிட்ட பேசலாம். அவ என்ன நினைச்சி இருக்கா? இந்தக் கல்யாணத்தால அவளுக்கு என்ன பாதிப்பு வந்திருக்கு? அவள் எவ்வளவு சங்கடப்படுறா? இல்ல அவளுக்கு விருப்பமா என்னங்கறது முதல்ல கேட்டு தெரிஞ்சுக்குவோம். அதுக்கப்புறம் எதா இருந்தாலும் நம்ம முடிவு பண்ணிக்கலாம்” என்று யோசித்தவன், அங்கிருந்த சேரில் அமர்ந்து அப்படியே சாய்ந்து படுத்துக்கொண்டு துர்காவிடம் எப்படி பேசுவது என யோசித்துக்கொண்டிருந்தான்.
அறையை விட்டு வெளியே வந்த விக்கியிடம் கதிர், “என்ன விக்கி, நீ பாட்டுக்கு ஆதிகிட்ட ‘நீங்க ரெண்டு பேரும் கணவன், மனைவி. முதல்ல நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்க. அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் முடிவு பண்ணுங்க. துர்கா மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நீ ஏன் எதுவும் முடிவு பண்ணாதே’ என்று சொல்லிட்டு வந்துட்டே.
ஆனா துர்காவுக்கு ஆதியைப் பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியலையே. ஒருவேளை அவன் கேட்டு துர்காகிட்ட ‘உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் இருக்கா? பிடிச்சிருக்கா, பிடிக்கலையா?’ என்று கேட்டு, துர்கா விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டானா என்ன செய்றது?
அப்போ அவன் உடனே ‘ரெண்டு பேரும் பிரிஞ்சிடலாம்’னு அவன் அப்பவே சொல்லிடுவானே. அம்மாவுக்கு துர்கா மருமகளா வந்ததுல ரொம்ப சந்தோசமா இருக்காங்க. இப்ப போய் அண்ணா இப்படி அம்மா, அப்பா கிட்ட ‘கல்யாணத்திலிருந்து விலகிக்கொள்கிறோம், எங்கள் இருவருக்குமே இந்த கல்யாணத்தில் உடன்பாடில்லை’ என்று சொல்லிட்டான்னா என்ன செய்றது?
அம்மாவுடைய மனநிலை எப்படி இருக்கும்? அம்மாவோட உடம்பும் சரி இல்லை. அவங்க என்ன யோசிப்பாங்கன்னு நினைச்சாலே எனக்குப் பயமா இருக்கு. அவங்களுக்கு ஏதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு” என்றான் கதிர் கவலையோடு.
“அப்படியெல்லாம் அவன் கேட்டதும் துர்கா ‘எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை’ன்னு சொல்ல மாட்டா. நீ கவலைப்படாத” என்று கூறினான் விக்கி.
“அது எப்படி? துர்கா, ஆதி ‘இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையா’ன்னு கேட்டா, உடனே அவ அப்படி சொல்ல மாட்டான்னு நீ எப்படி சொல்ற?” என்று கேட்டான் கதிர்.
“ஏன்னா, ஆதியை துர்கா கிட்டத்தட்ட ரொம்ப வருசமா அவனை லவ் பண்ணிட்டு இருக்கா….” என்றான் விக்கி.
விக்கி கூறியதைக் கேட்ட கதிர் அதிர்ச்சியில் நின்றான்.
