Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 46

உன் ரகசிய ரசிகை நான் 46

by Layas Tamil Novel
593 views

EPISODE 46

துர்கா உடை மாற்றிவிட்டு வந்து தன் கை கால்களில் க்ரீமை அப்ளை செய்துகொண்டிருக்க… அவள் குனிந்திருப்பதைப் பார்த்த ஆதி, அவளிடம் இருந்து கண்களை விலக்க முடியாமல் தவிக்க… அவன் எங்கே பார்க்கிறான் என்று புரிந்துகொண்ட துர்கா, “ஆதி” என்று அவனை அழைக்கவும்… தன்னிலை வந்த ஆதி, மெதுவாக எழுந்து துர்கா அருகில் செல்ல… அவள் பயந்துகொண்டே பின்னால் நகர்ந்தவள், சுவற்றில் மோதி நின்றாள். அவளைத் தன் இருக்கை கொண்டு நகர்விடாமல் அணை கட்டிக்கொண்டு நின்றவன், “நான் எதுக்கு வந்தேன்னு உனக்குத் தெரியாதா துர்கா…?” என்று கேட்டான்.

“எது…. எதுக்கு வந்த ஆதி?” என்று துர்கா திக்கித் திணறி கேட்க… “அதைத்தான் நானும் உன்கிட்ட கேக்குறேன். நான் எதுக்கு வந்தேன் உனக்குத் தெரியாதா?” என்று ஆதி அவள் முகத்தின் அருகில் தன் முகத்தைக் கொண்டு வந்து கேட்க… அவன் மூச்சுக்காற்றுச் சூடாக அவள் முகத்தில் படவும், அதில் துர்காவின் உடல் சிலிர்க்க… வார்த்தை வராமல் வெறும் தலையை மட்டும் ‘இல்லை’ என்பது போல இடவலமாக ஆட்டினாள்.

“நான் உன்ன எங்க பார்த்துட்டு இருந்தேன்னு நீ என்கிட்ட கேள்வி கேட்டியே, அதுக்குப் பதில் சொல்லத்தான் நான் இப்போ உன் பக்கத்துல வந்தேன்,” என்று ஆதி கூற… துர்காவுக்கு அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் இதயம் வேகமாகத் துடிக்கும் ஓசை அவள் காதிற்குக் கேட்க…

ஆதி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் விழிவிரித்து அவனைப் பார்க்க… “என்ன அப்படிப் பார்க்கிற? நீதானே கேட்ட, எங்க பார்த்துட்டு இருக்கேன்னு. அதைச் சொல்லத்தான் உன் பக்கத்துல வந்தேன்,” என்றான்.

“அதை நீ அங்கிருந்து சொல்லி இருக்கலாமே ஆதி. இப்படிப் பக்கத்தில் வந்து அதுவும் இவ்வளவு க்ளோஸா நின்னு தான் சொல்லணுமா?” என்று துர்கா தன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு மெதுவாக அவனிடம் கேட்க…

“அவ்வளவு தூரத்துல இருந்து ‘நான் எங்க பார்த்தேன்னு’ சத்தமா சொல்லணுமா உன்கிட்ட? நீ கூச்சப்படுவியே! அதனாலதான் உன் பக்கத்துல வந்து சொல்லலாம்னு வந்தேன்,” என்று கூற…

“அ… அது… அது எல்லாம் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் ஆதி. நான் உன்கிட்ட எதுவுமே கேட்கல,” என்று துர்கா கூற… “எதுவுமே கேக்கலையா துர்கா….. இப்பதானே கேட்ட நீ அங்க இருக்கும் போது? கேட்டேயே…” என்று கூற…

“ம்ஹும்…. இல்ல…. இல்ல…. நான் எதுவுமே கேட்கல. என்னை விடு,” என்று அவன் மார்பில் தன் இரண்டு கைகளையும் வைத்து அவனைப் பின்னுக்குத் தள்ளப் போக… ஆதி அவன் வைத்திருந்த கையை எடுத்து, துர்கா தன் மார்பின் மீது வைத்திருந்த அவள் கைகளைத் தன் மார்போடு சேர்த்துப் பிடித்துக்கொண்டவன் அவள் முகத்தைப் பார்க்க… துர்கா படபடக்கும் விழிகளோடு ஆதியையே பார்த்தாள்.

மெல்லக் குனிந்து துர்காவின் காதருகில், “சொல்லட்டுமா….” என்று ஹஸ்கி வாய்ஸில் ஆதி கூற… அவன் சூடான மூச்சுக்காற்று அவள் காதில் பட்டதும், கூச்சத்தில் அவள் முகமும் காதும் சிவந்துவிட… அதை ரசித்துக்கொண்டே, “வெறும் மூச்சுக்காத்து பட்டத்துக்கே உன் முகம் இப்படிச் சிவந்துடுச்சு,” என்று கேட்டவன்…

அவளை விட்டுப் பிரிந்து திரும்பி நடக்க… அவன் தன்னை எதுவும் செய்யாமல் சென்றதை நினைத்து துர்கா “அப்பாடா….” என்று மனதுக்குள் நினைத்து பெருமூச்சு விட…

அவளை விட்டுச் சென்றவன் திடீரென்று நிற்கவும், அவனைப் புரியாமல் பார்த்த துர்காவை ஆதி திரும்பிப் பார்த்தான். “நான் எனக்கு உரிமையானதைத்தான் பார்த்தேன். சொல்லப் போனால், நான் பார்க்கத்தான் எல்லாமே இருக்கிறது,” என்றவன் துர்காவை மேலிருந்து கீழாகத் தன் பார்வையாலேயே தின்று விடுவது போலப் பார்க்க…

அவன் பார்வை சென்ற இடமெல்லாம் துர்காவுக்கு உடல் கூசுவது போல இருக்க… தன்னிச்சையாக அவள் கைகள் அவள் உடலை மறைக்கப் போராட… அவள் கூச்சத்தில் தன் உடலை ஆதியிடம் இருந்து மறைக்க முயற்சிப்பதைப் பார்த்துச் சிரித்த ஆதி, “நீ என்ன வேணா இப்போ செஞ்சுக்கோ. நீ இப்ப மறைக்கணும்னு நினைக்கிறது எல்லாமே எனக்கு மட்டும்தான் சொந்தம். நான் உன்னை பார்க்க மட்டும் செய்யணும்னு அவசியம் இல்லை. அதை எடுத்துக்கவும் எனக்கு உரிமை இருக்கு. ஆனா, அதை நான் இப்ப எடுத்துக்க மாட்டேன். நேரம் வரும்போது நானே மொத்தமா எடுத்துக்குவேன். நான் உன்கிட்ட வந்து உன்னை மொத்தமா எடுத்துக்கப் போறேன். அப்போ நீ என்ன பண்றேன்னு நானும் பார்க்கிறேன்,” என்று ஆதி மென்மையாக அவளைப் பார்த்துச் சிரித்துக் கூறிவிட்டுச் சென்று… துர்கா கொண்டு வந்து வைத்த பாலை எடுத்து, சேரில் அமர்ந்து அவளைப் பார்த்தவாறு அவள் இதழ்களைப் பார்த்தவாறு பாலைக் குடித்துக் கொண்டிருக்க…

துர்காவுக்கு அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவள் உச்சி முதல் பாதம் வரை உடல் கூசச் செய்ய… என்ன செய்வது என்று தெரியாமல் க்ரீம் பூசிக்கொண்டிருந்தவள், அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு, வேகமாகச் சென்று பெட்டில் படுத்து, உடல் முழுவதும் மறைக்குமாறு பெட்ஷீட்டால் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.

பாலைக் குடித்து முடித்த ஆதி, அவள் தன்னைப் பார்த்து கூச்சப்பட்டு கொண்டுதான் சென்று படுத்துவிட்டாள் என்று புரிந்தவன், சிரித்துக்கொண்டே சென்று அவனும் துர்கா அருகில் பெட்ஷீட்டை எடுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டான்.

அந்த அறையே சத்தமின்றி அமைதியாக இருக்க, இருவரின் மூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்டது. துர்கா படுத்த சில நிமிடங்களில் நன்றாக உறங்கிவிட… அவள் சீரான மூச்சுக்காற்றே சொன்னது அவள் உறங்கிவிட்டாள் என்று.

அதுவரை துர்காவுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவன், மெல்ல அவள் புறம் திரும்பிப் படுக்க… துர்காவின் முதுகுதான் அவனுக்குத் தெரிந்தது.

அவள் முதுகையே வெறித்தவன், அவள் முகம் காண ஏக்கம் கொண்டவனாக, தூங்கிக்கொண்டிருக்கும் அவளைத் தன் புறம் திருப்பலாமா, வேண்டாமா என்று அவனுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தான்.

அதற்கு வேலை வைக்காமல் துர்காவே தூக்கத்தில் திரும்பிப் படுத்தாள். அவள் திரும்பியதும் தன்னை அறியாமலேயே ஆதியின் முகத்தில் புன்னகை பூத்தது.

சிறிய விளக்கு ஒளியில் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு தூக்கம் மறந்து படுத்திருந்தான். தன் தோழியாக முதன் முதலில் அவளைக் காலேஜில் சந்தித்த ஞாபகங்கள் வந்து போக… அப்போது அவனுடன் பழகிய புதிதில் எப்படி இருந்தாளோ, இன்று வரை அதே போலத் தன் மீது அக்கறையும் பாசத்துடனும் இருக்கிறாள்.

என்னை யாராவது ஏதாவது சொன்னால், என்னை விட இவளுக்குத்தான் கோபம் அதிகமாக வருகிறது. என்னுடைய கோபத்தையும், என்னையும் சமாளிக்க இவள் ஒருத்தியால் மட்டுமே முடியும் என்பது உட்பட பல சிந்தனைகள் அவன் மனதில் ஓட… அவளையே வெறித்திருந்தான் ஆதி.

அப்போது அவன் வயிற்றின் மீது தன் கையைத் தூக்கத்தில் புரண்டு படுத்துக்கொண்டே போட… முதலில் அதிர்ந்தவன், பின் மெல்லச் சிரித்துவிட்டு, இது வழக்கமாக நடக்கும் ஒன்று தானே, என்று நினைத்தவன்… அவன் வயிற்றின் மீது போட்டிருந்த துர்காவின் கையைப் பார்க்க… அந்தக் விளக்கொளியில் அவள் கையைப் பார்த்தவன்… அது மிகவும் மென்மையாக, பூப்போன்று மிருதுவாக, விரல்கள் எல்லாம் ஒல்லியாக இருந்தது.

அதை கவனித்தவன், “நல்லா சாப்பிட மாட்டியா துர்கா… நீ… பாரு உன் விரல் எல்லாம் எவ்வளவு ஒல்லியாக இருக்கு,” என்று அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டவன்… அவள் கையைத் தன் முகத்தருகில் கொண்டு வந்து அவள் உள்ளங்கையில் மிருதுவாக முத்தமிட்டான்.

அவள் கைக்கு முத்தம் வைத்தவன், தன் மார்பில் அவள் கையை வைத்துப் பிடித்துக்கொண்டவன் துர்காவைப் பார்க்க… அவள் நன்றாக ஆழ்ந்து மூச்சி விட்டுக்கொண்டிருந்தாள்.

துர்கா தூக்கத்தில் அமைதியாக ஒரு இடத்தில் படுக்காமல் நெளிய… அவன் உடல் அருகில் வந்து நெருங்கிப் படுத்துக்கொண்டாள். ஆதி அவள் இப்படி வந்து படுத்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் அவளையே பார்க்க…

துர்கா ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருந்தாள். அவன் மீது தன் கைகளையும் காலையும் போட்டுக்கொண்டு, அவன் முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தை வைத்துக்கொண்டு, அவன் உடலோடு தன் உடலை உரசி… அறையில் இருந்த ஏ.சி. குளிரில் உடல் லேசாக நடுங்க… ஆதியின் உடல் சூட்டிற்காக அவன் அருகில் நெருங்கிப் படுத்திருந்தவளை, அவள் இடுப்பில் கைபோட்டு மேலும் அவளைத் தன்னோடு சேர்த்துப் படுக்க வைத்தவன், அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான்.

இவ்வளவு நெருக்கமாக அவள் உடல் உரசிக்கொண்டிருக்க… ஆதியின் உடல் சூடு அதிகமானது அவள் நெருக்கத்தால். அவளையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தவன், பின் மெல்ல அவளை விட்டு விலகி… மெத்தையின் அருகில் மேஜையில் வைத்திருந்த அவன் மொபைல் போனை எடுத்தவன்… அதில் கேமராவை ஆன் செய்து… அவள் முகத்தோடு முகம், உடலோடு உடல், மூக்கோடு மூக்கு உரசிக்கொள்ள மிக நெருக்கமாகப் படுத்துக்கொண்டு செல்ஃபி எடுத்தான்.

செல்ஃபி எடுத்துக்கொண்டு அந்தக் போட்டோவைப் பார்த்தவன் சிரித்துக்கொண்டு, மறுபடியும் இரண்டு மூன்று போட்டோக்களை எடுத்தவன்… போனில் அதில் இருவரும் இருந்த அழகான ஒரு போட்டோவைத் தேர்ந்தெடுத்து, தன் மொபைலில் ஸ்கிரீனில் அந்தப் போட்டோவை வைத்துக்கொண்டான்.

அந்தப் போட்டோவை ஜூம் செய்து பார்க்க… அதில் அவன் முகம் முழுதும் கோபளங்களாக (காயங்களாக) தழும்புகளுடன் இருக்க… அவள் முகத்துடன் தன் முகத்தைப் பார்த்தவன், அவனுக்கே அவன் முகத்தைப் பார்க்க முடியாமல்…

ஸ்கிரீனில் சேவ் செய்த போட்டோவை டெலீட் செய்தவன், ஏதோ யோசித்தவனாகப் படுத்துவிட்டான். அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே சிறிது நேரத்தில் அவனும் உறங்கிப் போனான்.

*****

வெங்கடாச்சலம் காலையில் அந்தப் பெரிய பங்களாவில் இருந்த ஹாலில் சோஃபாவில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டே பேப்பர் படித்துக்கொண்டு இருக்க… விசாலாட்சி பூஜை அறையில் பூஜை செய்துகொண்டிருந்தார்.

பூஜை முடித்துக்கொண்டு வந்தவர், வெங்கடாச்சலத்தின் அருகில் அமர்ந்து அவருடன் காஃபி குடித்துக்கொண்டே, “ஏங்க…. நம்ம ஆதிக்கு நல்லபடியாகக் கல்யாணம் ஆனா, நான் அவனை நம் ஜோசியர் சொன்ன கோவிலுக்கு அழைச்சுட்டுப் போய் பரிகாரத்தைப் பூர்த்தி செஞ்சு கூட்டிட்டு வரலாம்னு இருக்கேங்க,” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும், வெங்கடாச்சலத்தின் முகம் அவ்வளவு நேரம் சாதாரணமாக இருக்க… இப்போதோ விசாலாட்சி சொன்னதைக் கேட்டதும், “அந்தப் பரிகாரத்தை அங்கே சென்று தான் பண்ண வேண்டுமா என்ன? இங்க இருக்கும் ஏதோ ஒரு கோவிலில் வைத்துப் பண்ணக் கூடாதா என்ன? அங்கே எல்லாம் நான் வரமாட்டேன்,” என்று கோபமாகக் கேட்டவர்.

“ஏங்க இப்படி எதுக்கு தேவையில்லாமல் கோச்சுக்கறீங்க. ஜோசியர் என்ன சொன்னார்? நம்ம பையனுக்குக் கல்யாணம் ஆன ஒரு மாசத்தில் கண்டிப்பா இந்தப் பரிகாரம் செய்யணும், அப்போதான் அவன் ஆயுள் பலம் கூடும்னு சொன்னாரில்லையா? அதுக்காகவாவது உங்க கோபத்தைக் குறைச்சுட்டு வரக் கூடாதா?” என்று கேட்டார்.

“அவள் இருக்கும் அந்த ஊருக்கு நான் வரமாட்டேன் என்று உனக்குத் தெரியாதா? நான் வரலை. நீங்க வேண்டுமானால் போய்ட்டு வாங்க,” என்றவர் எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

உள்ளே செல்லும் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த விசாலாட்சி, ஒரு பெருமூச்சொன்றை விட்டுவிட்டுத் தன் போனை எடுத்து ஆதிக்குக் கால் செய்தார்.

அப்போதுதான் ஜாகிங் சென்றுவிட்டு அவர்கள் கார்டனில் இளைப்பாறிக்கொண்டு இருந்தவன் கையில் இருந்த போன் அடிக்கவும், அவன் அம்மா தான் அழைத்திருந்ததைப் பார்த்தவன், அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன், “அம்மா…. என்ன இவ்வளவு காலையில் கால் பண்ணி இருக்கீங்க? என்ன விஷயம்?” என்று நேராக விஷயத்திற்கு வந்தான்.

“அது ஒண்ணுமில்லைப்பா… சும்மா தான் கால் பண்ணினேன். ஜாகிங் போய்ட்டு வந்துட்டியாப்பா….?” என்றார்.

“ம்ம்ம்… வந்துட்டேன்மா… அப்படியே கார்டனில் கொஞ்சம் இயற்கை காற்றை சுவாசிக்கலாம்னு உட்கார்ந்து இருக்கேன்,” என்றான்.

“சரிப்பா… நாளைக்கு உனக்கு ஆஃபிஸில் ஏதும் முக்கியமான வேலை அல்லது மீட்டிங் எதுவும் இருக்கிறதா?” என்று கேட்டார்.

“ஏன்மா சுத்தி வளைச்சுக் கேக்குறீங்க? என்ன சொல்லணுமோ தயங்காம சொல்லுங்கம்மா. எனக்கு உங்களை விட மற்ற வேலை எல்லாம் எதுவும் முக்கியமில்லை,” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு உள்ளம் சந்தோஷத்தில் நிறைய விசாலாட்சி புன்முறுவலுடன், “நாளைக்கு நம்ம கும்பகோணம் போய்ட்டு வரலாமாப்பா…? ஜோசியர் ஒரு பரிகாரம் கண்டிப்பா நீ கல்யாணம் ஆன முப்பது நாளுக்குள்ள செய்யச் சொல்லி இருக்காங்க. அதான் போய்ட்டு வந்துரலாம்னு கேட்டேன்,” என்றார்.

சிறிது யோசித்தவன், “சரிமா… போய்ட்டு வரலாம்,” என்று ஆதி சொல்ல… “சந்தோஷம் ஆதி. நீ துர்காவைக் கூட்டிட்டு இன்னைக்கு நைட் நம்ம வீட்டுக்கு வந்துரு. காலையில் நேரமே கிளம்பணும்,” என்றவர். “அப்பறம் இன்னொரு விஷயம்ப்பா…” என்றார். “என்ன? சொல்லுங்கம்மா,” என்றான் ஆதி.

“உங்க அப்பாவையும் கூட்டிட்டுப் போகணும் அந்த கோவிலுக்கு. தாய், தகப்பன் என்ற முறையில் துர்காவின் அம்மா, அப்பாவும், நாங்க ரெண்டு பேரும் முன்ன இருந்து உங்களுக்கு இந்த பரிகாரம் செய்யணும்பா…. ஆனா உங்க அப்பா வரமாட்டேன்னு சொல்லிட்டாரு. அவரை எப்படியாவது அழைச்சுட்டுப் போகணும்பா…” என்றார்.

“சரிமா… அதை நான் பார்த்துக் கறேன். நானும் கும்பகோணத்தில் இருக்கும் நம்ம ஆஃபிஸிற்குத் துவங்கிய நாளில் இருந்து அப்பாவை அங்கே வரச் சொல்லி நிறைய முறை கேட்டிருக்கேன். ஆனா அவர் நம்ம வெளிநாட்டில் இருக்கிற ஆஃபிஸிற்கு எல்லாம் போய்விட்டு வருகிறார். ஆனால் இங்கே இருக்கிற கும்பகோணத்திற்கு வர மாட்டேங்குறார். நான் இதைச் சொல்லி எப்படியாவது அவரை வரவழைக்கிறேன் அம்மா…. நீங்க கவலைப் படாதீங்க. நான் பார்த்துக்கறேன்,” என்றான்.

“சரிப்பா. நான் துர்காகிட்ட அப்புறம் பேசுறேன். அவங்க அம்மா கிட்ட கூப்பிட்டு நான் விஷயத்தைச் சொல்லணும். நான் போனை வைக்கட்டுமா ஆதி?” என்று கூற… “சரிமா…” என்று போனை கட் செய்தான்.

விசாலாட்சி ஆதியிடம் பேசிவிட்டு வைத்தவர், துர்காவின் அம்மாவிடமும் விஷயத்தைக் கூறிவிட்டுப் போனை வைத்தவர். பூஜை அறையைத் திரும்பிப் பார்த்து, “கடவுளே! இந்த இருபத்தி எட்டு வருசமாப் போகாத ஊருக்கு அவரை கூட்டிட்டு வரேன். எப்படியாவது நான் நினைச்சதை நிறைவேற்றிக் கொடுங்க,” என்று தன் வேண்டுதலைக் கடவுளிடம் வைத்துவிட்டு நாளை செல்வதற்கு வேண்டிய வேலைகளைச் செய்யப் போனார்.

அவர் வேண்டுதல் பலிக்குமா? அப்படி இருபத்தி எட்டு வருடமாக கும்பகோணத்திற்கு மட்டும் ஏன் ஆதியின் அப்பா போகாமல் இருக்கிறார்?

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured