EPISODE 57
கதிர், கீர்த்தி, ராதா மூவரும் ஆதியையும் துர்காவையும் பிரிச்சு நிறுத்திட்டு, அவங்களைப் பார்த்து, “போதும்!”னு சொன்ன கீர்த்தி, “வீட்ல போய் எல்லா ரொமான்ஸையும் பண்ணுங்க. இது கோவில். அதோட, உங்க ரெண்டு பேரையும் வச்சு தான் பூஜை நடக்குது. கொஞ்சம் கோவிலுக்குள்ள அடக்கம் ஒடுக்கமா இருங்க…”னு கிண்டல் பண்ண, இப்போ தான் துர்காவுக்குத் தான் என்ன செஞ்சுக்கிட்டு இருக்கோம்னு புரிய, வெட்கத்துல அவ முகம் மொத்தமும் சிவந்துடுச்சு. அதை இவங்க கிட்ட இருந்து மறைக்க ரொம்பச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள் துர்கா.
அவங்க மூவரையும் விலக்கி விட்டுட்டு, பக்கத்துல வந்த விசாலாட்சி (விசி அத்தை), “ஏய்! மூணு பேரும் பேசாம இருக்கீங்களா, இல்லையா இப்போ? எப்போ பார்த்தாலும் என் மருமகளைக் கிண்டல் பண்ணிட்டே இருக்குறது…” என்றவர்,
“நீ வாடா… அவங்க கிடக்கட்டும். என் பையனும் மருமகளும் சந்தோஷமா இருக்குறதே பெருசு! இது இவங்களுக்கெல்லாம் பொறுக்காதே…”னு சொன்னவர், துர்காவை அழைச்சுட்டுப் போய் அவர் பக்கத்துல நிக்க வச்சுக்கிட்டார்.
“உனக்கு உட்கார சேர் கொண்டு வரச் சொல்லட்டுமாடா? அடிபட்ட இடம் வலிக்கப் போகுது…” என்று கனகா (கனகா அத்தை) துர்காவிடம் கேட்க,
“இல்லைம்மா, வேணாம். எனக்கு இப்போ நல்லாத் தான் இருக்கு. நான் நிக்கிறேன்” என்று சொல்லி, அவர் கையைப் பாசமாகப் பிடிச்சுக்கொண்டு துர்கா பேச,
கனகா அத்தையும் துர்காவின் தலையைப் பாசத்தோடு வருடிக்கொடுத்தவர், துர்காவின் அம்மாவைப் பார்த்து, “உங்க பொண்ணை அருமையா வளர்த்திருக்கீங்க அக்கா. ரொம்பத் தங்கமான குணம் துர்காவுக்கு” என்றார். அவர் சொல்றதைக் கேட்டு வடிவு (துர்காவின் அம்மா), “துர்காவோட பிறவிக் குணமே அது தான் அக்கா. நான் மூணு வயசுல இருந்து அவளைப் பார்க்குறேன். அப்போ இருந்து துர்கா இப்படியே தான் இருக்கா…” என்றார்.
அவர் இப்படிச் சொன்னதும் ஆதி சந்தேகத்தோட அவரைப் பார்த்தான். அப்போ தான் வடிவு, ‘தான் உளறிவிட்டோம்’னு புரிஞ்சவரா, நாக்கைக் கடித்துக்கொண்டார். தன்னைச் சுத்திப் பார்வையைச் சுழல விட, தன்னை யாரும் கவனிக்கலை, தான் சொன்னதை யாரும் சரியாப் கேட்கலைனு புரிஞ்சவர், நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
ஆனா, இதெல்லாம் அவருக்குத் தெரியாம ஆதி கவனிச்சுக்கிட்டு தான் இருந்தான். தன் சந்தேகம் மேலும் அதிகமாகிறதை உணர்ந்த ஆதி, ‘இதை அப்புறம் பார்த்துக்கலாம்’னு விட்டுட்டான்.
***
எல்லாரும் பூஜை எல்லாம் முடிச்சுக்கிட்டு, கடவுளைத் தரிசனம் செஞ்சுட்டு வந்து பிராகாரத்துல அமர்ந்திருந்தாங்க.
பொண்ணுங்க எல்லாம் ஒரு பக்கமும், இளசுகள் ஒரு பக்கமும், சங்கவியும் ஷிவுவும் ஒரு பக்கமும், ஆண்கள் எல்லாம் ஒரு பக்கமும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாங்க.
வெங்கடாச்சலம் (வெங்கி மாமா) துர்காவின் அப்பா கிட்டயும், துரை கிட்டயயும் பேசிக்கொண்டு இருக்க, அப்போ அவர் பின்னால் தயக்கத்துடன் ஒரு பெண்மணி வந்து நின்றார்.
அவரைப் பார்த்த துரைக்கு அது யார்னு தெரிஞ்சு போச்சு. ஆதியின் அப்பா பின்னால் நின்றிருந்த அந்தப் பொண்ணைப் பார்த்ததும் துரையின் முகம் மாறிடுச்சு. இதைக் கவனிக்காத துர்காவின் அப்பா, ஆதியின் அப்பாவிடம், “சம்மந்தி! உங்க பின்னாடி ஒரு அம்மா வந்து நிக்குறாங்க. அவங்க உங்களைத்தான் வந்ததில் இருந்து பார்த்துட்டு இருக்காங்க!”னு சொல்லவும்,
துர்காவின் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தவர், தன் பின்னால் திரும்பிப் பார்க்க, அவர் பின்னால் நின்றிருந்த அந்தப் பொண்ணைப் பார்த்ததும் அவர் முகம் அப்படியே கருத்துப் போச்சு.
அந்தப் பொண்ணைப் பார்த்ததும் வெடுக்கென்று எழுந்தவர், “நீயா! நீ எதுக்கு இங்க வந்தே?” என்று அந்தப் பெண்மணியிடம் எரிந்து விழுந்தார்.
வெங்கடாச்சலம் (வெங்கி மாமா) அந்தப் பொண்ணு கிட்ட கோபம் கொண்டு கத்த, “அண்ணா!”னு அழுதுகொண்டே அவர் காலில் விழுந்தா அந்தப் பெண்.
இவங்க பேசினதை எல்லாம் கேட்டுக்கிட்டே அங்கே வந்த விசாலாட்சி (விசி அத்தை)யும், கனகா அத்தையும் அந்தப் பொண்ணைக் கண்டதும் ஓடிச் சென்று, “செண்பகம்!”னு கட்டிக் கொண்டாங்க.
அவங்களைப் பார்த்ததும், “அண்ணி… கனகா…” என்று கட்டிப்பிடிச்சுக்கிட்டா அந்தப் பொண்ணும். இவங்களைப் புரியாமப் பார்த்துகொண்டிருந்த எல்லாரும், ‘இங்க என்ன நடக்குது?’ என்பது போல சும்மா வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாங்க.
“செண்பகம்! எப்படி இருக்கே? இத்தனை வருஷத்துல எங்கள் ஞாபகம் உனக்குக் கொஞ்சம் கூட வரவில்லையா? எங்களைப் பார்க்கணும்னு உனக்கு ஒரு முறை கூடத் தோன்றவில்லையா?” என்று விசாலாட்சி (விசி அத்தை) கேட்க,
அவங்க பேசுவதைப் பார்த்த வெங்கடாச்சலம் (வெங்கி மாமா), “விசாலாட்சி! கனகா! அங்கே என்ன பேச்சு வேண்டி இருக்கு? நம்ம உறவே வேண்டாம்னு சொல்லி எல்லாரையும் அசிங்கப்படுத்திட்டுப் போனவளோட எதுக்கு உறவாடிட்டு இருக்கீங்க?” என்று கோபமாகச் சொல்ல,
“என்னங்க, என்ன இது? இத்தனை வருஷம் கழிச்சு செண்பகம் நம்மளைப் பார்க்க வந்திருக்கா. எங்களை எல்லாம் விட அவ உங்க மேல தாங்க பாசம் அதிகமா வச்சிருக்கா. உங்க தங்கச்சியை நீங்களே இப்படி ஒதுக்கி ஒதுக்கி வச்சுட்டு இருந்தா, அவ எங்க போவா? செண்பகம் பாவங்க…” என்று செண்பகத்திற்கு விசாலாட்சி பரிந்து பேச,
“அண்ணி! அண்ணாவை எதுவும் சொல்லாதீங்க. நான் உங்க எல்லாருக்கும் பண்ணின துரோகத்துக்குத்தான் என் வாழ்க்கையை மொத்தமா தொலைச்சுட்டு, யாரும் இல்லாத அனாதையைப் போல இந்த ஊர்ல இருக்கேன்” என்று அவர் சொன்னதும்,
அவ்வளவு நேரம் நெஞ்சை நிமிர்த்தி கோபத்துடன் நின்றிருந்தவர், செண்பகம் தன்னை அனாதை என்று சொன்னதும், அவர் இதயத்தில் சம்மட்டியால் அடித்தது போல உறைந்து நின்றார்.
“என்ன செண்பகம் சொல்றே? உனக்குப் பிடிச்சவரோட தானே நீ கல்யாணம் பண்ணிட்டு வந்தே? நீ உன் புருஷன், குழந்தை கூடச் சந்தோஷமா இருக்குறதா உங்க அண்ணா அப்போவே சொன்னாரே” என்று கேட்டார் விசாலாட்சி
“அண்ணா சொன்னதெல்லாம் சரிதான் அண்ணி. நாங்க கல்யாணம் பண்ணிச் சந்தோஷமாத் தான் இருந்தோம். ஆனா, விதின்னு ஒன்னு இருக்கே! நான் செஞ்ச பாவத்துக்கு எனக்குச் சரியான தண்டனை கிடைச்சிருச்சு அண்ணி…” என்று அழுதவர்,
“உங்களை எல்லாம் வேண்டாம் என்று அண்ணன் பேச்சை மீறி, நம்ம கிட்ட வேலை பார்த்தவரைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிட்டு, நம்ம வீட்டை விட்டு இந்த ஊருக்கு வந்தோம். வந்த புதுசுல குடும்பம் நடத்தக் கொஞ்சம் சிரமமா இருந்த போதும், எங்களோட காதலும், அவர் என் மேல வச்சிருந்த அன்பும் அப்போ எங்களுக்குப் பெருசா தெரியலை அண்ணி. கல்யாணம் ஆன ஒரே வருசத்துல எங்களுக்கு ஒரு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தாள். அவள் பிறந்த பிறகு சில வருஷங்கள் நாங்க சந்தோஷமா இருந்தோம். அவர் ஒரு வேலை விஷயமா வெளியூர் போயிருந்த இடத்துல, கட்டிடத்துல இருந்து கீழே விழுந்து அங்கேயே இறந்துட்டாரு…
அவர் இறந்த பிறகு, அவரை இங்கே கொண்டு வந்து அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வசதி இல்லாததால், நானும் என் பொண்ணும் அவருக்கு இறுதிச் சடங்கு செய்யச் சிலர் உதவியோட அவர் போன ஊருக்குப் போனோம். அங்கே அவருக்கு எல்லா மரியாதையையும் செஞ்சு, அவர் சடங்கை எல்லாம் செஞ்சுட்டு, திரும்பி ஊருக்கு ரயிலில் வந்துட்டு இருந்தப்போ என் பொண்ணையும் நான் தொலைச்சுட்டேன்.
கட்டின புருஷனையும் இழந்துட்டு, பெத்த பொண்ணையும் இழந்துட்டு நான் தனி ஆளா இருக்கேன் அண்ணி… என்னிக்காவது ஒருநாள் என் பொண்ணைக் கண்டு பிடிச்சுட மாட்டோமானு இந்த உயிரைக் கையில இன்னும் பிடிச்சு வச்சுட்டு இருக்கேன்” என்றார்.
அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வெங்கடாச்சலம் ‘இதற்கு மேலும் தன்னால் முடியாது’ என்று நினைத்தவர், “செண்பகம்…” என்று அழைக்க, இவ்வளவு நேரம் அழுதுகொண்டிருந்த செண்பகமும் மற்றவர்களும் வெங்கடாச்சலத்தைப் பார்க்க, அவர் செண்பகத்தின் அருகில் வந்து அவர் தலையை வருடிக்கொடுத்து, “இனிமேல் உன் வாயில் இருந்து அனாதை என்ற வார்த்தை வரக்கூடாது. உனக்காக உன் அண்ணன் நான் இருக்கிறேன்” என்றார் வெங்கடாச்சலம்.
அவர் அப்படிச் சொன்னதும், “அண்ணா…” என்று அழுதுகொண்டே ஓடிச்சென்று வெங்கடாச்சலத்தைக் கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினார் செண்பகம்.
“இத்தனை நாள் நீ நல்லா இருக்கேன்னு தானே நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, இத்தனை வருஷமா… நீ தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்கேனு நான் எதிர்பார்க்கவே இல்லை.”
“நீ, உன் புருஷன், பிள்ளையோட சந்தோஷமா இருப்பேன்னு நான் நினைச்சேன்! அதனால தான், நீ எங்களை விட்டுப் போன கோபத்துல உன்னைப் பத்தி எதுவுமே சரியா விசாரிக்காம விட்டுட்டேன். என்னை மன்னிச்சிரு செண்பகம்…” என்று அவர் செண்பகத்தின் தலையை வருடியவர் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
“அண்ணா… அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நான் செஞ்ச தப்புக்கான தண்டனையைத் தான் நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்.
நான் நீங்க இந்த ஊருக்கு வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். இந்த கோவில்ல தான் நான் பூ விற்றுக்கொண்டு இருக்கிறேன் அண்ணா. நேற்றுல இருந்து இந்தக் கோவில்ல பரபரப்பாக வேலைகள் நடந்துகொண்டு இருந்தது. விசாரிச்சதுல, நீங்கள் குடும்பத்துடன் இங்கே வருவதாகக் கேள்விப்பட்டுத் தான் உங்களையும் அண்ணியையும் பார்க்கணும்னு வந்தேன். உங்ககிட்ட இருந்து எனக்கு மன்னிப்பும் கிடைச்சுடுச்சு அண்ணா.
இனிமேல் என் மிச்ச காலத்தை நான் சந்தோஷமா கழிச்சுடுவேன்” என்றவர், “நான் போயிட்டு வரேன் அண்ணா. உங்களை எல்லாம் பார்த்ததுல எனக்கு ரொம்பச் சந்தோஷம். நான் போயிட்டு வரேன்” என்று அவர் கிளம்பப் போக,
அவரை இடைமறித்த விசாலாட்சியும், கனகா அத்தையும், “எங்கே செண்பகம் போறே? மறுபடியும் எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டுப் போகலாம்னு பார்க்குறியா? நீ இங்கே தனியா இருந்து என்ன செய்யப் போறே? எங்க கூடயே வந்திரு” என்று இருவரும் கெஞ்ச,
செண்பகம் “வேண்டாம்”னு பல முறை மறுத்தும், வெங்கடாச்சலமும் செண்பகத்தைத் தன்னுடன் வரச் சொல்ல, அவர் பேச்சைத் தட்ட முடியாமல் அவர்களுடன் வருவதற்குக் ஒப்புக்கொண்டார்.
செண்பகம் வருவதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. அவரை அழைச்சுட்டுப் போய் ஒவ்வொருவரா அறிமுகம் செஞ்சு வச்சார் வெங்கடாச்சலம்.
துர்காவைப் பார்க்கும் போது ஏனோ இனம் புரியாத ஒரு உணர்வு செண்பகத்திற்குள் தோன்றுச்சு. அதே உணர்வு தான் துர்காவுக்கும் ஏற்பட்டுச்சு.
எல்லாரும் மகிழ்ச்சியோட கோவிலில் உட்கார்ந்திருக்க, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சங்கவிக்கும், ஷிவுவிற்கும் எரிச்சலாக இருந்தது.
ஷிவு சங்கவியிடம், “ஏற்கனவே இந்த துர்காவைத் துரத்த வழி இல்லாம இருக்கு. இப்போ போதாததுக்கு இந்த கிழவி வேற எங்க கூட வரப்போறா” என்று அழுத்துக்கொண்டாள்.
“இந்தக் கிழவியால் பெரிய பிரச்சனை எல்லாம் வராது. இதைச் சமாளிச்சுக்கலாம். அந்த துர்காவைத் தான் எப்படியாவது ஆதிகிட்ட இருந்து துரத்தி அடிக்கணும்”னு சொன்னா சங்கவி.
“ஆமாம் சங்கவி அக்கா, நீங்க சொல்றதும் சரிதான். முதல்ல இந்த துர்காவைத் துரத்த ஏதாவது ஐடியா பண்ணனும்”னு சொன்னா ஷிவு.
“நீயும் நானும் நினைச்சா சீக்கிரமே துர்காவை அந்த வீட்ல இருந்து துரத்தி விடலாம்”னா சங்கவி.
“நான் உங்களுக்குத் தான் சப்போர்ட் பண்றேன் அக்கா! நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யறேன்…” என்று ஷிவு சங்கவியுடன் கைகுலுக்கி, துர்காவை ஒழிக்க ஒன்று சேர்ந்து கொண்டனர்.
இதெல்லாம் எதுவும் தெரியாம துர்கா எல்லார் கிட்டயும் சிரிச்சுப் பேசிக்கிட்டு சந்தோஷமா இருந்தாள். அவங்க கூட வந்து ஷிவுவும் சங்கவியும் இணைஞ்சுக்க, சங்கவி நிஜமாகவே திருந்தி விட்டதா எல்லாரையும் நம்ப வச்சிருந்தா. அதனால எல்லாரும் அவளையும் தங்களுடன் பாகுபாடு இல்லாமச் சேர்த்துக்கிட்டு அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாங்க.
நீண்ட நேரம் எல்லாரும் கோவிலில் இருக்க, செண்பகம், விசாலாட்சி, கனகா மூவரும் செண்பகத்தின் வீட்டிற்குச் சென்று, அவரோட சில பொருட்களையும், அவர் கணவர், மகள் நினைவாகச் சில புகைப்படங்கள், பொருட்கள் என எடுத்துக்கொண்டு வர, செண்பகத்தை அழைச்சுட்டு எல்லாரும் கும்பகோணத்தில் இருந்து கிளம்பினர்.
