EPISODE 72
சங்கவியைப் வெறுப்பேற்றி அனுப்பிவிட்டு அனைவரும் அவரவர் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட…
துர்காவின் ஷோவிற்குப் பிறகு நிறைய ஆர்டர்கள் ஆதியின் கம்பெனிக்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தது.
அதுமட்டும் அல்லாமல், துர்காவை மாடலாக நடிக்கச் சொல்லிப் பல முன்னணி ஃபேஷன் நிறுவனங்கள் அவளின் கால்ஷீட்டிற்காகக் காத்திருந்தனர்.
விக்கி, கதிருடன் சேர்ந்து அவர்கள் நிறுவனத்திற்கு ஷோ நடக்கும்போதே வந்த ஆர்டர்களையும், இப்போது வந்துகொண்டிருந்த ஆர்டர்களையும் குறித்த நேரத்தில் எப்படி ஒப்படைப்பது என்று அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர்.
இதில் துர்காவிற்காக வரும் போன் கால்களையும் சேர்த்து இருவரும் சமாளித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் மிகவும் பிஸியாக இருக்க, இங்கே துர்கா எப்போதும் செய்யும் ஆபீஸ் வேலைகளை எல்லாம் இப்போதைக்கு வேறு ஒரு ஆளை வைத்துச் செய்துகொண்டு இருந்தனர்.
துர்கா எவ்வளவு சொல்லியும் அவளை வேலை செய்ய விடாமல், ஆதியின் கேபினில் அமர வைத்துவிட்டு ஆஃபீஸில் அனைவரும் பிஸியாக இருக்க,
துர்காவுக்கு மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் தன் மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தாள்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன், ரெடிட் என துர்கா எதைத் திறந்து பார்த்தாலும் அதில் அவளைப் பற்றியும் அவள் அணிந்திருந்த ஆடையைப் பற்றியுமே நிறைய போட்டோக்களும், வீடியோக்களும் வந்த வண்ணம் இருந்தது.
இதையெல்லாம் பார்த்த துர்காவுக்கு, ‘நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்று என்னை எல்லாரும் இப்படித் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள்? அவ்வளவு பெரிய விஷயமா நான் பண்ணியிருந்தேன்?’ என்று அவளைப் பற்றிய ரீல்ஸ்களை ஸ்க்ரோல் பண்ணிக்கொண்டே யோசித்துக் கொண்டு இருக்க… அவள் மொபைலில் மெசேஜ் வந்ததற்கான சத்தம் ‘டிங்…’ என்று வரவே, நோட்டிஃபிகேஷன் அவள் திரையில் வந்தது.
அதில் ‘துர்கா…’ என்று மெசேஜ் ஆதியிடம் இருந்து வந்திருந்தது. அவன் மெசேஜை திரையில் பார்த்ததும் துர்காவுக்கு ஹார்ட் பீட் எகிற ஆரம்பித்தது. ‘துர்கா’ என்று எப்போதும்போலத்தான் ஆதி மெசேஜ் அனுப்பி இருந்தான். ஆனால், துர்காவுக்குத்தான் உடலில் ஏதோ உணர்வு தோன்றியதுபோல இருந்தது.
நேற்று அவன் வீடியோ காலில் பார்த்ததில் இருந்து, ஆதியின் பெயரைக் கேட்டாலோ, அவனைப் பற்றிய நினைவுகள் தோன்றினாலோ, துர்காவுக்கு உடல் எல்லாம் ஒருவிதப் பரவசம் பரவுவதுபோல இருந்தது.
அவன் அனுப்பிய மெசேஜைத் திறக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டே அந்த மெசேஜைத் தொட்டுவிட்டாள்.
‘ஐயோ… அவசரப்பட்டு ஓப்பன் செய்துவிட்டேனே… இப்போ மெசேஜ் ‘ரீட் டிக்’ ஆதிக்கு போயிருக்குமே…’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே…
அந்தப் பக்கம் இரவெல்லாம் அவள் டைரியைப் படித்துவிட்டு, துர்கா தன் மீது வைத்திருந்த காதல் மொத்தமும் அதில் அவள் கொட்டியிருந்ததைப் படித்த ஆதிக்கு, இத்தனை வருடம் தன்னுடனேயே இருந்தவளின் மனதைப் புரிந்துகொள்ளாமலே நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருப்பேன் என்று தன்னைத்தானே நொந்துகொண்டான்.
அவன் எப்போது விடியும், எப்போது துர்காவுடன் பேசுவது என்று ஆவலுடன் துர்கா ஆன்லைன் வரட்டும் என்று காத்திருந்தான்.
அவள் ஃபேஸ்புக் ஓப்பன் செய்ததுமே பார்த்துவிட்டான். அவ்வளவு நேரம் அவளுடன் பேச வேண்டும் என்ற ஆசையில் இருந்தவனுக்கு இப்போது துர்காவிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
அதையும் இதையும் யோசித்து ஒரு வழியாக ‘துர்கா…’ என்று அனுப்பிவிட்டு அவள் அந்த மெசேஜை ஓப்பன் செய்து பார்க்கும்வரை ‘திக்… திக்… திக்…’ என்று இருந்தது அவனுக்கு.
இப்போது துர்கா மெசேஜைப் பார்த்துவிட்டாள் என்பதற்கு அடையாளமாக ப்ளூ டிக் வரவே, அதையே பார்த்துக்கொண்டு இருந்த ஆதிக்கு அவளிடம் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அப்படியே இருக்க…
இங்கே ஆதியின் சாட்டை ஓப்பன் செய்து வைத்துவிட்டு, துர்கா அவன் ஆன்லைனில் இருக்கிறான் என்று பார்த்தவள், அவனுக்குத் திருப்பி மெசேஜ் அனுப்பலாமா வேண்டாமா என்று தடுமாறிக் கொண்டிருந்தாள்.
அப்போது சரியாக, விக்கி ஆதியின் கேபினிற்கு ஃபைலை எடுக்க, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வர… ஏற்கனவே பதட்டத்தில் இருந்தவள், அவன் திடீரென்று கதவைத் திறந்துகொண்டு வந்ததும் பதற்றம் அடைந்தவள் கையில் இருந்த போனை கீழே தவற விட்டுவிட்டாள்.
உள்ளே வந்த விக்கி, துர்கா போனை கீழே போட்டுவிட்டுப் பதட்டத்துடன் அமர்ந்திருப்பதைக் கவனித்தவன், துர்காவின் அருகில் வந்து அவள் போனை கையில் எடுத்தவன், “என்ன துர்கா… இப்படியா… போனை கீழே தவறவிடுவே? போன் உடைந்து போயிருந்தால் என்ன பண்ணுவே?” என்று சொல்லிக்கொண்டே அவளிடம் போனை கொடுக்கப்போனவன், ஏதேச்சையாகப் போனைப் பார்க்க, அதில் ஆதி அனுப்பி இருந்த மெசேஜைப் பார்த்துவிட்டான். அதைப் பார்த்ததும் ஆச்சர்யம் ஆனவன், “நான் தான் சொன்னேன் ஆதி கண்டிப்பா உனக்கு மெசேஜ் இல்லைன்னா கால் பண்ணுவான்னு. நான் சொன்னது போலவே நடந்திருச்சு பார்த்தியா துர்கா,” என்று அவளிடம் பேச…
அவனிடம் இருந்து போனை வாங்கப்போன துர்காவிடம் போனை கொடுக்காமல் கையைப் பின்னே இழுத்துக் கொண்ட விக்கி, “இதுக்குத் தான் நீ பதட்டமா இருக்கியா? அதனால்தான் நான் வந்ததும் போனை கீழே போட்டுட்டியா?” என்று கேட்க.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ… நீ… முதல்ல என் போனை குடு…” என்று அவனிடம் இருந்த தன் போனைப் பிடுங்கப் போக… விக்கி வேண்டும் என்றே போனை அவளிடம் தராமல் இப்படியும் அப்படியும் போக்கு காட்டிவிட்டு துர்காவிடம் போனை கொடுக்க…
ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு விக்கியை முறைத்துவிட்டு அவனிடம் இருந்து போனை வாங்கிப் பார்க்க… அப்படியே அதிர்ச்சி ஆகிவிட்டாள். அவள் அதிர்ச்சி அடைந்த முகத்தைப் பார்த்த விக்கி, “ஏய் துர்கா… ஏன் இப்படி நிக்கிறே?” என்று கேட்க…
“டேய்… என்னடா பண்ணி வெச்சிருக்கே நீ…” என்று அவள் அழுவதுபோல புலம்ப… “ஏய்… என்னடி ஆச்சு? ஏன் இப்படிப் பதட்டப்படுறே?” என்று விக்கி கேட்க…
அவனை முறைத்தவள், “நீ என்ன பண்ணி வெச்சிருக்கேன்னு பாரு,” என்று அவள் போனைத் திருப்பி விக்கியிடம் ஸ்கிரீனைக் காட்ட… குழப்பமாக அதில் தெரிந்ததைப் பார்த்தவன் சத்தமாகச் சிரிக்க…
ஏற்கனவே பதட்டத்தில் இருந்தவள், அவன் சிரிப்பதைப் பார்த்துக் கடுப்பானவள், “டேய்… இப்போ எதுக்குடா சிரிக்கிறே? நீ பார்த்து வெச்சிருக்க வேலைக்கு உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்,” என்று அவனை அடிக்கப் போக…
அவளிடம் இருந்து தப்பித்தவன், “என்ன மிஸ்ஸஸ் துர்காஆதி, உங்க பெட்டர் ஹால்ஃப்க்கு வீடியோ கால் பண்ணிட்டு என்கிட்ட சண்டை போடுறீங்க… போங்க, போய் பேசுங்க… நான் கிளம்புறேன்,” என்று அவளிடம் இருந்து தப்பித்துக் கேபினை விட்டு வெளியே வந்தவன், ‘வந்த வேலை சிறப்பா முடிஞ்சிருச்சு’ என்று சிரித்துக்கொண்டே சென்றான்.
அவனிடம் இருந்து போனைப் பிடுங்கப்போக, யாருடைய விரலோ அதில் பட்டு ஆதிக்கு வீடியோ கால் போய்விட்டது. அதனால்தான் துர்கா பதட்டமாக இருந்தாள்.
கையில் போனை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் துர்கா விழித்துக்கொண்டு நிற்க…
ஆதி, துர்கா தன்னுடைய மெசேஜைப் பார்த்துவிட்டுத் தனக்குத் திரும்ப மெசேஜ் அனுப்புவாள் என்று நினைத்திருந்தான். அவள் திடீரென தனக்கு வீடியோ கால் செய்வாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. காலை அட்டென்ட் பண்ணலாமா? வேண்டாமா? என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்தியவன், ஒரு வழியாக வீடியோ காலை அட்டென்ட் செய்துவிட்டான்.
அவன் காலை அட்டென்ட் செய்துவிட்டுப் பார்க்க… எதிரே துர்கா மருண்ட விழிகளோடு அவனைப் பார்க்க… ஆதியும் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். இருவரும் எதுவுமே பேசாமல் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்க்க… யார் பேசுவது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தனர்.
யார் பேசுவது என்று இருக்க, முதலில் துர்காவே பேசினாள். “கா… ஆதி… நா… நான்… வீடியோ கால் பண்ணலை… விக்கி… தான்…” என்று சொல்ல…
“அதனால் என்ன? என்னுடன் பேச உனக்கு என்ன பயமாக இருக்கிறதா என்ன?” என்றான்.
அவள் “இல்லை” என்று தலையை மறுப்பாக ஆட்ட…
“ம்ம்ம்… அப்பறோம் என்ன?” என்றான் ஆதி.
“ஒ… ஒன்றுமில்லையே…” என்றால் துர்கா.
அதன் பிறகு அவள் எதுவும் பேசாமல் இருக்க…
“துர்கா…” என்று ஆதி அழைத்தான்.
அவன் அழைத்ததும் துர்கா எதுவும் பேசாமல் ஆதியைப் பார்க்க…
மீண்டும் “துர்கா…” என்று ஆதி அழைக்க…
“சொ… சொல்லு… ஆதி…” என்றால் துர்கா.
“ஏதாவது பேசு துர்கா…” என்றான் ஆதி.
“எ… என்ன பேசுறது ஆதி?” என்றால் துர்கா.
“ஏதாவது பேசு துர்கா…” என்றான் ஆதி, அவள் பதட்டமும் வெட்கமுமாக இருந்த துர்காவின் முகத்தை ரசித்துக்கொண்டே…
அவள் எதுவும் பேசாமல் இருக்க, “துர்கா… நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன். நீ மறைக்காமல் பதில் சொல்லணும்,” என்றான் ஆதி.
அவள் ‘என்ன?’ என்பது போல ஆதியைப் பார்க்க…
“நீயும்… நானும்…” என்று சொல்லி ஆதி நிறுத்த…
“நி… நீயும்… நானும்… என்ன ஆதி?” என்று துர்கா வார்த்தையை விழுங்கி விழுங்கிப் பேச…
அவளின் நிலையைப் பார்த்து மனதிற்குள் சிரித்தவன், “நீயும்… நானும்… முதலில் சந்தித்தது நினைவில் இருக்கிறதா உனக்கு?” என்றான்.
அவன் அப்படி கேட்டதும் துர்காவுக்கு இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
“கா… ஆதி… அது… அது… அதை ஏன் இப்போ கேட்கிற?” என்றால் துர்கா.
“சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டேன் துர்கா…” என்று அவள் பதட்டப்படுவதைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.
“சொல்லு துர்கா… நாம ரெண்டு பேரும் எப்போ மீட் பண்ணினோம்?” என்றான் ஆதி.
“உனக்கு நாம ஃபர்ஸ்ட் மீட் பண்ணினது நினைவில் இருக்கிறதா?” என்றான் ஆதி.
அவள் தெரியும் என்பது போலத் தலையை ‘ஆம்’ என்று மேலும் கீழும் ஆட்ட…
“சரி, எப்போ? எங்கே? நாம ரெண்டு பேரும் மீட் பண்ணினோம் என்று சொல்லு பார்க்கலாம்,” என்றான் ஆதி.
‘இவனுக்கு என்ன ஆச்சு? திடீரென்று இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறான்?’ என்று யோசித்தவள்,
“நாம… நாம… ரெண்டு பேரும் முதலில் காலேஜ் படிக்கும்போது தான் மீட் பண்ணினோம்,” என்றால் துர்கா.
“ஓ அப்படியா?” என்று எதுவும் தெரியாதவன் போலக் கேட்க…
“ம்ம்… ஆமாம் ஆதி. ஃபர்ஸ்ட் இயர் ஃபர்ஸ்ட் டே காலேஜ் கிளாஸ் ரூம் வாசலில் வைத்து உன்னை ஃபர்ஸ்ட் டைம் நான் பார்த்தேன்… அன்று நீ… மெரூன் கலர் ஷர்ட்… கருப்பு நிற பேன்ட் அணிந்து… கருப்பு நிற மாஸ்க் இப்போது போட்டிருக்கே, இல்லை? இதே மாதிரி மாஸ்க் போட்டிருந்த…” அதன் பிறகு அன்று அவனுடன் நடந்த நிகழ்வை ஒன்றுவிடாமல் சொன்ன துர்கா, அவனைப் பற்றிய தன் காதலை மட்டும் சொல்லாமல் மற்ற அனைத்தையும் சொன்னாள்.
அவள் சொன்னதை எல்லாம் கேட்டவன், டைரியில் இருந்ததைவிட துர்காவின் வாயால் கேட்கும்போது அழகாகவும் இன்னும் நிறைய விஷயமாகவும் அவனுக்குத் தெரியவர… அவள் தன்னை எவ்வளவு தூரம் கவனித்திருக்கிறாள் என்று நினைத்தவன்…
அவளுக்குத் தன் மீதான காதல், பழைய நினைவுகளைத் தன்னிடம் சொல்லும்போது அவள் முகத்தில் தெரிந்த அசைவுகளை வைத்தே தெரிந்து கொண்டான்.
டைரியில் படித்ததைவிட துர்காவின் வாயால் கேட்பதில் இன்னும் வேறொரு உணர்வை அவனுக்குக் கொடுத்தது. அவளையே ரசித்துக் கொண்டு இருக்க… திடீரென்று அவன் பி.ஏ. அவன் ரூமிற்குள் வர… துர்காவிடம் சொல்லிவிட்டு போனை வைத்தான்.
அவனிடம் பேசிவிட்டு போனை வைத்ததும் தான் துர்காவுக்கு மூச்சே விடுவதுபோல இருந்தது. அவள் இதயம் இன்னும் படபடவெனத் துடித்துக் கொண்டிருந்தது. முகமெல்லாம் சிவந்து… அவனிடம் பேசிய இந்தச் சிறிய உரையாடலையே நினைத்து நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.
கீர்த்தியும் நிலானியும் கிளாஸில் அமர்ந்திருக்க… ராதாவைக் காணாமல் நிலானி கீர்த்தியிடம், “ஏய் கீர்த்து… ராதா எங்கேடி ஆளைக் காணோம்? இன்னைக்கு உன்னோட பஸ்ஸில் வரலையா?” என்று கேட்டாள்.
“ஆமாம்டி… அவள் காலையிலேயே எனக்கு மெசேஜ் பண்ணியிருந்தா. இன்னைக்கு பஸ் மிஸ் பண்ணிட்டான்னு சொல்லி அவ அப்பாவுடன் வர்றதா சொன்னாள்,” என்றால் கீர்த்து.
ராதா அவள் அப்பாவுடன் வந்து காலேஜ் வாசலில் இறங்கியவள் அவரிடம் சொல்லிவிட்டுக் காலேஜிற்குள் வந்தாள். இதுவரை அணிந்ததுபோலப் பாவாடை தாவணி அணியாமல் இன்று துர்கா இவளுக்காக வாங்கிக் கொடுத்த உடைகளில் ஒன்றை அணிந்து வந்திருந்தாள்.
லாங் டாப் போட்டு அதற்கு ஏற்றாற்போலப் பேன்ட் அணிந்து, லேசான ஹீல்ஸ் அதற்குத் தகுந்தாற்போல வாட்ச், ஒரு கையில் பிரேஸ்லெட் அணிந்து… நெற்றியில் சிறிய பொட்டு வைத்து, லேசான மேக்கப் துர்காவின் உதவியுடன் போட்டுக்கொண்டு ஃப்ரீ ஹேர் விட்டு நடந்து வந்துகொண்டு இருந்தாள்.
தூரத்தில் அமர்ந்து இவள் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் கவனித்துக் கொண்டிருக்க…
அதில் ஒருவன் ராதாவைப் பார்த்து, “ஏய்… இங்கே வா…” என்றான். அவள் அவனைப் பார்த்து ‘என்னையா?’ என்று கேள்வியுடன் பார்க்க… “உன்னைத்தான். வா இங்கே,” என்று அழைத்தான்.
அவனிடம் வேகமாக வந்த ராதா, “சொல்லுங்க அண்ணா… எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க?” என்றால்.
“ஏய்… என்ன? வந்ததும் வராததுமா என்னை ‘அண்ணான்னு’ கூப்பிடுறே!” என்றான். “நீங்க என்னைவிட சீனியர் தானே? அப்பறோம் நான் உங்களை அப்படி தானே கூப்பிட முடியும்?” என்றால் ராதா.
“நல்லா உஷாராத்தான் பேசுறே… உன் பேரு என்ன? நீ எந்த டிபார்ட்மென்ட்?” என்று கேட்டான். அவள் படிக்கும் டிபார்ட்மென்ட்டைச் சொல்லி, “செகண்ட் இயர்… என் பெயர் ராதா.”
“ஓஹோ… உன் பேரு ராதாவா? சரி சரி, வந்தது வந்தே… சீனியர்க்கு வணக்கம் வெச்சிட்டுப் போ,” என்றான் அவள் எதிரில் நின்றவன்.
“நீங்க யாரு? உங்க பேரு? என்ன டிபார்ட்மென்ட் படிக்கிறீங்க?” என்றால் ராதா.
இதையெல்லாம் கேட்டவன், “ஏன்? இது எல்லாம் தெரிஞ்சாத்தான் வணக்கம் வைப்பியோ?” என்றான்.
“இது எல்லாம் தெரிஞ்சாலும்… நான் வணக்கம் வைக்க மாட்டேன்,” என்றால் ராதா.
அவள் சொன்னதைக் கேட்டு கடுப்பானவன், “ஒழுங்கா தினமும் காலையில் வந்து எனக்கு வணக்கம் வெச்சிட்டுப் போய்ட்டு இல்லைன்னா நடக்கிறதே வேற,” என்றான் அவன்.
அவனையே அமைதியாகப் பார்த்த ராதா, சட்டென்று அவன் கழுத்தில் மாட்டியிருந்த ஐடி கார்டை அவன் கழுத்தோடு சேர்த்து இழுத்து, அதில் அவன் பெயரைப் பார்த்தவள், “இங்க பாருங்க மிஸ்டர் மகேஷ். எனக்கு நீங்க சீனியர், ஓகே. அதுக்காக தினமும் என்னால உங்களுக்கு வணக்கம் எல்லாம் வைக்க முடியாது. நீங்க என்ன இந்தக் காலேஜ் ஸ்டாஃபா? உங்களைப் பார்த்ததும் வணக்கம் வைக்க… என்னை மாதிரியே நீங்களும் ஒரு ஸ்டூடென்ட் தானே… என்னால எல்லாம் உங்களுக்கு வணக்கம் வைக்க முடியாது,” என்று சொல்லி அவன் ஐடி கார்டை விட்டுவிட்டு அவனைத் தாண்டி நடக்கப் போக…
அவள் கையைச் சட்டென்று பிடித்து இழுத்த மகேஷ், “ஏய் நில்லுடி… என்ன ரொம்ப ஓவரா திமிரு பண்றே? ஒழுங்கா விஷ் பண்ணு இல்லைன்னா… நடக்கிறதே வேற,” என்றான்.
தன்னைப் பிடித்திருந்த கையைப் பார்த்துவிட்டு அவனை முறைக்க… அவள் பார்வையைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தவனது கைகள் தானாகத் தளர்ந்தது.
தன் கையை உதறிவிட்டு அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டவள், “தேவையில்லாம என்கிட்டப் பேசுற வேலையை வெச்சுக்காதே. எவ்வளவு தைரியம் இருந்தால் என் கையைப் பிடிப்பே?” என்றவள் மீண்டும் ஒரு அறை விட்டுவிட்டுச் சென்றாள்.
மகேஷ் தன் இரு கன்னங்களிலும் கை வைத்துக்கொண்டு செல்லும் ராதாவையே கோபத்துடன் பார்த்திருக்க… அவன் நண்பன், “என்னடா மச்சி, இப்படி உன்னை அடிச்சிட்டு போய்ட்டா?” என்று கேட்க… அவனைத் திரும்பி முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
அவனை அடித்துவிட்டு கோபமாக நடந்து வந்துகொண்டிருந்த ராதா, வேகமாகச் சென்று அவள் எதிரில் கைகட்டி அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த சந்தோஷைக் கவனிக்காமல் அவன் மேலே மோதிவிட்டாள்.
அதே கோபத்துடன் நிமிர்ந்து தன் கையை நீட்டி, “ஏய்… இப்படி நடக்குற வழியில் நிக்கிற உனக்கு அறிவில்லையா?” என்று கேட்டுக்கொண்டே நிமிர்ந்து பார்த்தவள், எதிரே நின்றவனைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.
“என்ன மேடம், காலையிலேயே ரொம்ப கோபமா இருக்கீங்க போல?” என்று சந்தோஷ் அவளிடம் வம்பிழுக்க… அவனை முறைத்துவிட்டு கடந்தவளைக் கைபிடித்து இழுத்துத் தன் முன்னே நிற்க வைத்தவன், “பேசிட்டு இருக்கும்போது இப்படி மேனர்ஸ் இல்லாம நடந்துகிறியே…” என்றான்.
“உருப்படியா ஏதாவது கேள்வி கேட்டா பதில் சொல்லலாம். தேவை இல்லாத கேள்வி கேட்கிறவங்க கிட்ட எல்லாம் என்னால பதில் சொல்லிட்டு இருக்க முடியாது,” என்று அவனிடம் இருந்து தன் கையை ராதா வெடுக்கென்று உருவிக்கொண்டாள்.
“ஓஹோ… அப்போ உருப்படியா கேள்வி கேட்டாத்தான் பதில் சொல்வியோ?” என்றவன், அவள் அருகில் குனிந்து, “உன்னோட வெயிட் என்ன?” என்றான்.
அவனைப் புருவம் சுருக்கி நிமிர்ந்து பார்த்தவள், “அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு?” என்றால்.
“சும்மா ஒரு ஜெனரல் நாலேட்ஜ்க்காகத்தான் கேட்டேன். சொல்லு,” என்றான்.
“உங்க நாலேட்ஜ்க்காக நீங்க கேட்கிறதுக்கு எல்லாம் என்னால பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. எனக்கு வழியை விடுங்க,” என்று அவனை கடந்து செல்லப் போக…
தன்னை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன், அவள் கையைப் பிடித்து அப்படியே இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து, அவளை யாரும் இல்லா இடத்திற்கு அவளை இழுத்து வந்தவன். அவள் கன்னத்தைப் பிடித்துத் தன் முகத்தருகே இழுத்தவன், “இந்த வாய் இருக்கே வாய்… இது ரொம்ப பேசுதே… என்கிட்ட நீ வாயாடும்போது எல்லாம் எனக்கு இந்த வாயை…” என்று அவள் கண்களைப் பார்க்க…
படபடவெனப் பட்டாம்பூச்சிபோலச் சிறகடித்த அவள் விழிகளைக் கண்டவன், “உன் கண்ணுக்கு மை ரொம்ப அழகா இருக்கு,” என்றான்.
அப்படிச் சொல்ல, சந்தோஷைப் புருவம் சுருக்கிப் பார்த்த ராதா, அவன் கையைத் தன் முகத்தில் இருந்து எடுக்க முயற்சி செய்ய… மேலும் தன் பிடியை இறுக்கியவன், தன் கைகளை அப்படியே கீழே கொண்டு வந்தவன், அவள் இடையில் கை கொடுத்துத் தூக்கினான்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத ராதா கண்கள் விரிய… அவனைக் குனிந்து பார்க்க… அவள் தலைக்கு மேல் தூக்கப்பட்டிருந்தாள் ராதா.
அவள் பயந்துபோய் அவன் தோளில் தன் கைகளை வைத்துப் பிடித்துக் கொள்ள, அவளை மெல்ல மெல்லக் கீழே இறக்கியவன், தரையில் ராதாவை நிற்க வைத்து, “என்ன? இவ்ளோ வெயிட் கம்மியா இருக்கே… ஒரு நாற்பத்தி ஐந்து கிலோக்குள் தான் இருப்பே போலயே… நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கோ. அப்போதான் இப்படி உன்கிட்ட யாரு வம்பு பண்ணினாலும், அவனை அடிக்கக் கொஞ்சமாவது உடம்பில் வலு இருக்கும்,” என்றவன், அவள் இடையில் இருந்த தன் கைகளை அவள் இடையைத் தடவிக்கொண்டே எடுத்தவன், அவள் கன்னம் தட்டி, “சீக்கிரம் கிளாஸ்க்கு வந்துவிடு,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவன் விட்டுச் சென்ற இடத்தில் அப்படியே நகராமல் வெகுநேரம் நின்றவள். சந்தோஷைப் பற்றியே நினைத்திருந்தவள் அப்படியே… கிளாஸின் உள்ளே செல்ல அங்கே இவளுக்கு முன்னாள் கிளாஸில் இருந்தான் சந்தோஷ்.
அவனைப் பார்த்தவள் “மே ஐ கம் இன் சார்?” என்று சொல்ல… அவளை அப்போழுது தான் பார்ப்பதுபோலப் பார்த்தவன், “கம் இன்,” என்று சொல்லிவிட்டுக் கிளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டான்.
‘அடப்பாவி, வெளியே என்கிட்ட எப்படிப் பேசிவிட்டு இங்கே வந்து எப்படி எதுவும் தெரியாதவன் போல இருக்கான் பாரு,’ என்றவள் ‘பிராடு’ என்று முணுமுணுக்க… அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன், அவள் உதட்டசைவை வைத்தே அவள் பேசியதைப் புரிந்தவன், தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
போதி தன் ஆஃபீஸில் தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தவன், தன் மேனேஜரிடம் துர்காவைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளச் சொல்லி இருந்தான்.
அவர் போதியின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே வர… அவரை நிமிர்ந்து பார்க்க, தன் கையில் இருந்த ஃபைலை போதியிடம் நீட்டி, “நீங்க கேட்ட எல்லா விவரமும் இதில் இருக்கிறது,” என்று சொல்லிக் கொடுத்துவிட்டுக் வெளியே சென்றார்.
அவர் சென்றதும் தன் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு, கையில் இருந்த ஃபைலை ஓப்பன் செய்து துர்காவைப் பற்றிய விவரங்களைப் படிக்க ஆரம்பித்தான்.
அவள் பெயர் துர்கா என்று எழுதிருந்ததைப் படித்தவன், அந்தப் பெயரைத் தன் விரல் கொண்டு வருடியவன், பொறுமையாக துர்காவைப் பற்றிய இப்போதைய விவரங்கள் மட்டுமே அதில் இருக்க…
அவள் இந்தத் துறைக்குப் புதிது என்றும், ஆதியின் கம்பெனியில் அவனுக்கு அசிஸ்டன்ட் என்றும், எதிர்பாராத விதமாக அவள் நேற்று நடந்த ஷோவில் மாடலாக வந்ததும் அதன் மூலம் பிரபலம் அடைந்ததும் என்பது வரை அவனுக்கு அந்த ஃபைலில் துர்காவைப் பற்றித் தகவல்கள் இருந்தது.
அவளுக்குத் திருமணம் ஆன விஷயத்தைப் பற்றி எந்த விவரமும் அந்த ஃபைலில் இல்லை.
துர்காவைப் பற்றித் தனக்குக் கிடைத்த தகவல்களை எல்லாம் படித்துவிட்டு, அவளை நேரில் எப்படிச் சந்திப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
