EPISODE 74
துர்கா, கதிர், விக்கி, கீர்த்து நால்வரும் நிலானியை அட்மிட் செய்திருப்பதாகக் கூறிய ஹாஸ்பிடலுக்குச் சென்றனர்.
காரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிய நால்வரும் உள்ளே செல்லப் போக… ஹாஸ்பிடல் வாயிலில் அம்மன் சிலை இருந்தது. அதைக் கவனித்த விக்கி நேராக சிலையின் முன் சென்று நின்றவன், கண்களை மூடி ஒரு நிமிடம் நிலானிக்காக வேண்டிவிட்டு அவர்களுடன் சென்றான்.
பரபரப்பாக உள்ளே சென்ற நால்வரும் நிலானி அட்மிட் செய்திருந்த எமர்ஜென்சி வார்டுக்கு விரைந்தனர். எமர்ஜென்சி வார்டுக்கு வெளியே நின்று இருந்த நிலானியின் ஹாஸ்டல் வார்டனும், விக்கிக்கு நிலானி மாடியில் இருந்து கீழே விழுந்ததைச் சொன்ன அவளுடைய சீனியரும், அவளுடன் தங்கி இருந்த சில பெண்களும் அங்கே நின்று இருந்தார்கள்.
விக்கியைப் பார்த்ததும் அந்தச் சீனியர் பெண், “சார்… நல்ல வேலை வந்தீங்க… எனக்கு நிலானியுடைய ரிலேஷன்ஸ் யாருன்னு தெரியாது… ஹாஸ்டலில் இருந்து அவளோட அக்காவுக்குப் போன் பண்ணி, நிலானி மாடியில் இருந்து விழுந்ததைப் போன் பண்ணிச் சொன்னோம். அவளோட அக்காவை அனுப்ப மாட்டேன். நிலானிக்கு என்ன ஆனாலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை… அவ எங்க கூட இருக்க மாட்டேன்னு சொல்லி தானே ஹாஸ்டல் போனா… அவ என்ன ஆனா என்ன, எக்கேடு கேட்டுப் போனால் எனக்கு என்ன… எங்களுக்குப் போன் பண்ணாதீங்கன்னு சொல்லி நிலானியுடைய அக்கா வீட்டுக்காரர் கண்டபடி ஹாஸ்டல் வார்டனையும் திட்டிட்டுப் போனை கட் பண்ணிட்டாங்க சார்.”
இதைக் கேட்டதும் விக்கிக்கு அவளது நிலையை நினைத்து மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘இந்தச் சின்ன வயதில் அவளுக்கு எவ்வளவு கஷ்டங்கள்… பாவம் அவள் எவ்வளவு வலிகளை மனதிற்குள்ளேயே வைத்திருந்தாளோ?’ என்று அவன் மனம் அவளுக்காக அக்கறைப்பட்டது.
அதே நேரம், எதையும் எதிர்த்து வாழத் தெரியாத பெண்ணாக இருக்கிறாளே என்று அவள் மீது கோபமும் வந்தது.
“அவளுக்கு மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு ரத்தம் அதிகமா போயிருச்சுனு அவளுக்கு பிளட் கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க… தலையில் நல்லா அடிபட்டு இருக்கு. உடனே ஆபரேஷன் பண்ணனும்னு நிலானியுடைய கார்டியன் சைன் கேட்குறாங்க. ஆனா… அவங்க வீட்ல இருந்து யாரும் வரலை. இப்போ என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியலை,” என்றால் அந்தப் பெண்.
அங்கே நின்று இருந்த நிலானியின் ஹாஸ்டல் வார்டன், “சார், நான் எங்க காலேஜ் சார்பில் அவளுடைய கார்டியனா நான் சைன் பண்றேன்னு சொன்னாலும் இங்கே ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. நிலானிக்கு இப்போ ஆபரேஷன் பண்ணனும் சார். என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கோம். அவளுக்கு அவங்க அக்காவைத் தவிர வேற யாரும் இல்லை. ஆனா, அவங்களை அவங்க வீட்டுக்காரர் ஹாஸ்பிடலுக்கு விட மாட்டேன்னு சொல்லிட்டாரு. அவங்க அக்கா எனக்குப் போன் பண்ணி ‘எப்படியாவது எம் தங்கச்சியைக் காப்பாத்திடுங்கன்னு’ என்கிட்ட அலறாங்க சார். எங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை,” என்று அவர்கள் கைகள் பிசைந்து கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கே வந்த டாக்டர், அவளுடைய வார்டனைப் பார்த்து, “பேஷன்ட் உடைய கார்டியன் வந்துட்டாங்களா?” என்று கேட்க…
அந்த வார்டன், “இல்லை சார். ஆனா, அவங்க ஃபிரெண்ட்ஸ் வந்திருக்காங்க,” என்று சொல்ல… அவர்களைத் திரும்பிப் பார்த்தவர், “ஃபிரெண்ட்ஸ் சைன் எல்லாம் ஏத்துக்க முடியாது,” என்று சொல்ல…
இங்கு நடந்ததை எல்லாம் இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு இருந்த விக்கி, டாக்டரின் முன் வந்து, “சார், நான் நிலானியினுடைய ஹஸ்பன்ட். நான் சைன் பண்ணினால் நீங்க அவளுக்கு ஆபரேஷன் பண்ண ஓகே சொல்வீங்களா?” என்றான்.
விக்கி சொல்வதைக் கேட்டதும் அங்கு இருந்த அனைவருக்குமே அதிர்ச்சியாகி விட்டது. கதிர் விக்கியிடம், “டேய் மச்சான்…” என்று ஏதோ சொல்ல வர… அவன் முன்பு தன் கையை நீட்டி, “கதிர் கொஞ்ச நேரம் அமைதியா இரு,” என்று தீவிரமாக விக்கி சொல்ல… கதிர் மட்டும் இல்லை, மற்றவர்களும் அவனுடன் சேர்ந்து எதுவும் பேசாமல் நின்றனர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த டாக்டர், “என்ன மிஸ்டர், அவங்களை இங்கே அட்மிட் பண்ணின அப்போ அவங்களுக்குக் கல்யாணம் ஆகலை என்று தானே சொல்லி அட்மிட் பண்ணியிருக்காங்க… ஆனா… நீங்க வந்து இப்போ இப்படிப் பேசுறீங்க… இதையெல்லாம் எங்களால் ஏத்துக்க முடியாது,” என்று டாக்டர் சொல்ல…
அவர் சொன்னதைக் கேட்ட விக்கி ஒரு நிமிடம் கண்கள் மூடி அப்படியே அமைதியாக நின்றவன், பின் டாக்டரைப் பார்த்து, “ஒரு நிமிஷம் சார்… நான் இப்போ வரேன்,” என்று சொல்லிவிட்டு ஹாஸ்பிடலை விட்டு வெளியே சென்றவன், சில நிமிடங்களில் மறுபடியும் உள்ளே வந்தவன் நிலானி இருக்கும் அறைக்குள் செல்ல… அனைவரும் ஒன்றும் புரியாமல் அவன் பின்னே சென்றனர்.
உள்ளே வந்தவன், படுக்கையில் படுத்திருந்த நிலானியைப் பார்த்தவன், அவள் முகத்தைப் பார்க்க… கசங்கிய மலர் போல அவள் முகம் இருப்பதைப் பார்த்தவன் பின் ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டவன், தன் கைகளை விரிக்க ஹாஸ்பிடல் வாசலில் இருந்த அம்பாள் சிலையின் கழுத்தில் இருந்த தாலி அவன் கையில் இருந்தது.
அதைப் பார்த்ததும் துர்கா அவன் அருகில் வந்து, “விக்கி…” என்று அவனை அழைக்க…
“துர்கா ப்ளீஸ்… எனக்கு வேற வழி தெரியலை. என் நிலாவைக் காப்பாற்ற… தயவு செய்து யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். யாரும் இல்லாத எனக்கும், எல்லோரும் இருந்தும் யாருமில்லாமல் கஷ்டப்படும் என் நிலானிக்கும் நான் இதை கண்டிப்பாகச் செய்ய வேண்டும்,” என்று சொல்லிவிட்டு,
கண்கள் மூடி கடவுளைப் பிராத்தனை செய்தவன், குனிந்து நிலானியின் கழுத்தில் தாலி கட்ட வர… துர்காவும் கீர்த்தியும் ஆளுக்கு ஒரு புறமாக நிலானியின் தோளைப் பிடித்து லேசாக உயர்த்திப் பிடிக்க… அவர்கள் இருவரையும் பார்த்த விக்கியைப் பார்த்து…
“நீ வேணும்னா… உனக்கு யாரும் இல்லைன்னு நினைச்சுட்டு இருக்கலாம். ஆனா, நீ எங்களில் ஒருவன் என்ற நினைப்பு எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது… நீதான் எங்களை அப்படி நினைக்கவில்லை போல. பரவாயில்லை,” என்றால் துர்கா. “என்ன பார்த்துட்டே இருக்க? நிலானியைக் காப்பாற்ற தானே இந்த முடிவை எடுத்தே… சீக்கிரம்… கட்டு,” என்றால் துர்கா.
அவளை ஒரு முறை பார்த்துவிட்டு நிலானியின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.
பின் டாக்டரிடம் திரும்பி, “எங்கே சைன் பண்ணனும்?” என்று சொல்ல… நர்ஸ் வந்து அவனிடம் ஃபார்மை நீட்ட… அதில் அவர்கள் கட்டிய இடத்தில் கையெழுத்திட்டவன், “எப்படியாவது என் நிலானியைக் காப்பாற்றி விடுங்கள்,” என்றான் விக்கி.
விக்கியிடம் கையெழுத்து வாங்கிய பின்பு நிலானியை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். ஆபரேஷன் தியேட்டரின் முன் பதட்டத்துடன் அனைவரும் நின்று இருக்க…
இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆன பிறகு ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த டாக்டர், “ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. ஆனால்…” என்று அவர்கள் நிறுத்த… விக்கி முதற்கொண்டு பதட்டமாக டாக்டரைப் பார்க்க… “மிஸ் சாரி மிஸ்ஸஸ் நிலானிக்கு மாடியில் இருந்து கீழே விழுந்ததால் அவருடைய வலது கையும் இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் சரியாக எழுந்து நடக்க இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிடும்,” என்றார். அவர் இப்படிச் சொன்னதும் ஒரு அளவுக்கு அவள் ஆபத்து இல்லாமல் தப்பி விட்டதை எண்ணி அனைவர்க்கும் சற்று நிம்மதியாக இருந்தது.
பிறகு டாக்டர் அவர்களிடம், “மிஸ்ஸஸ் நிலானி இன்னும் மயக்கத்தில்தான் இருக்கிறார். ரூமிற்கு ஷிப்ட் செய்த பிறகு பார்க்கலாம்,” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
ஒரு மணி நேரம் கழித்து நிலானியை ரூமிற்கு கொண்டு வர… அவளை முதலில் சென்று பார்த்தது விக்கி தான். பின் வெளியே வந்தவன், அவனுக்குப் போன் செய்த நிலானியின் சீனியரை அழைத்து, “என்ன பிரச்சனை? நிலானி எதனால் மாடியில் இருந்து கீழே விழுந்தாள் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
“இல்லை சார், எனக்குத் தெரியாது. நான் அவளோட ரூம்மேட் கிடையாது… அவளோட ரூம்மேட் இதோ இவள் தான்,” என்று அருகில் அழுது கொண்டு நின்றிருந்த அந்தப் பெண்ணை அழைத்தாள்.
அந்தப் பெண்ணிடம் விக்கி விவரம் கேட்க… “அவள் மாடியில் இருந்து விழுவதற்கு முன்னால் நிலானியைப் பார்க்க அவளோட அக்காவும் அக்கா வீட்டுக்காரரும் வந்தாங்க. அவங்க நிலானியைப் பார்த்துப் பேசிவிட்டுப் போன பிறகு ரூமிற்கு அழுது கொண்டே வந்தாள். நான் நிலானி கிட்டே போய், ‘ஏன்டி அழற? என்ன ஆச்சு?’ன்னு… கேட்டேன் சார்.
அவளோட மாமா இவகிட்ட வந்து, ‘உன் அக்காவை நான் கல்யாணம் பண்ணி நாலு வருசத்துக்கு மேல ஆச்சு. அவ வயித்துல இன்னும் புழு பூச்சி கூட வரலை. அதனால நான் உன் அக்காவை டைவர்ஸ் பண்ணப் போறேன்’ என்று சொன்னான்.
உடனே நிலானி, ‘மாமா அக்காவை அவசரப்பட்டு டைவர்ஸ் பண்ணிடாதீங்க… அவ பாவம். எனக்காக வாழணும்னே எங்க அப்பா அம்மா இறந்த பிறகு அவளுக்கு என்று அவள் எதுவுமே செய்ததில்லை. நீங்க என் அக்காவை கல்யாணம் செய்தே ஆகணும்னு ஒற்றை காலில் நின்னதுனால தானே என் அக்காவும் உங்களை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சா. உங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாதுன்னு தானே நான் உங்க ரெண்டு பேர் கூடவும் தங்கி இருக்காமல் தனியா ஹாஸ்டல்லில் வந்து இருக்கேன். நானே பார்ட் டைம் ஜாப் போய்ட்டு என்னோட படிப்பு செலவும் பார்த்துக்குறேன். என்னால உங்களுக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது என்று தானே நான் எதுவுமே உங்களிடம் கேட்பது இல்லை.
நீங்க இன்னும் ஒரு வருஷம் பொறுத்துக்கோங்க மாமா… நான் வேலைக்குப் போய் உங்களுக்கு என்ன வேணுமோ செய்றேன். என் அக்காவை கல்யாணம் செய்ற அப்போ எங்களோட வசதியை பற்றி நல்லா தெரிஞ்சு தானே என் அக்காவைக் கல்யாணம் செய்துக்கிட்டீங்க. ஆனா அவளைக் கல்யாணம் பண்ணின பிறகு பணம் பணம்னு என் அக்காவை வேலைக்கு அனுப்பி அவ சம்பாதிக்கிற காசை எல்லாம் சூதாட்டத்தில் விட்டுட்டு… அவகிட்ட குழந்தை பெற்றுக் கொள்ள இப்போ என்ன அவசரம், நமக்கு வயசு இருக்குன்னு சொல்லி சொல்லியே குழந்தை பிறக்காமல் இருக்க அவளை மாத்திரையா சாப்பிட விட்டுட்டு…
இப்போ குழந்தை இல்லைனு ஒரே காரணத்திற்காக என் அக்காவை வேண்டாம்னு சொல்றீங்க… நியாயப்படி பார்த்தா… நீங்கதான் குழந்தையை வேண்டாம்னு சொன்னது… எங்க அக்காவுக்கு ட்ரீட்மென்ட் எடுத்தா சரியாப் போயிடும்னு டாக்டர் சொல்லியும் நீங்க அவளை ட்ரீட்மென்ட் எடுத்துக்க அழைச்சுட்டுப் போனா செலவு ஆகும்னு அங்கேயும் கூட்டிட்டுப் போறது இல்லை. அப்படி இருக்க அப்போ அவளுக்கு எப்படி குழந்தை பிறக்கும். முதல்ல நீங்க ரெண்டு பேருமே ஹாஸ்பிடல் போய் யாருக்குக் குறை இருக்குன்னு பார்த்துட்டு வாங்க. அதுக்குப் பிறகு டைவர்ஸ் பற்றிப் பேசலாம்’ என்று நிலானி சொல்லி முடிக்க…
‘ஏய்… யாரைப் பார்த்து உடம்பில் குறை இருக்குன்னு சொல்றே… உன் அக்காவுக்குத்தான் உடம்பில் குறை இருக்கு… என் உடம்பில் குறை இருக்கா இல்லையான்னு நான் உனக்கு நிரூபிக்கட்டுமா?’ என்றவன், தன் கையில் இருந்த ஒரு பேப்பரை நிலானியின் முன் தூக்கிப் போட்டவர், ‘உனக்கு நாளைக்கு காலையில் வரை டைம் கொடுக்கிறேன். உங்க அக்காவை இந்த பேப்பரில் சைன் பண்ணச் சொல்லு. இல்ல எங்க அக்காவை டைவர்ஸ் பண்ணிராதீங்க அவ பாவம்னு நினைச்சேன்னா… நாளைக்கு காலையில எங்க வீட்டுப் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு வந்து என் கையால தாலியைக் கட்டிக்கிட்டு நீயும் உன் அக்காவும் ஒரே வீட்டுல சந்தோசமா இருக்கலாம்’ என்று சொல்ல.
நிலானி அதிர்ந்து போய் அப்படியே நின்றுவிட்டாள். பின் கீழே கிடந்த டைவர்ஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு அவள் அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு நிலானியைப் பார்த்து… ‘உன் அக்காவோட வாழ்க்கை முக்கியமா இல்லையான்னு நீயே முடிவு பண்ணிக்கோ’ என்றவன்.
‘நாளைக்கு காலையில் ஏழு மணிக்கு நீ நான் சொன்ன கோவிலுக்கு வந்திருக்கணும்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவள் அக்காவை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அவர் அப்படிச் சொல்லிட்டுப் போனதில் இருந்து ரூமுக்கு வந்த நிலானி அழுதுட்டே இருந்தா சார்… நான் அவளுக்கு எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தேன். ஆனா அவளை என்னால சமாதானம் செய்ய முடியலை. எல்லாரும் சாப்பிடப் போறோம் வா சாப்பிடப் போலாம்னு கூப்பிட்ட அப்போ கூட, ‘எனக்கு வேணாம் நீங்க போங்கன்னு’ சொல்லி எங்களை அனுப்பி வெச்சுட்டு அவ ரூம்ல இருந்துட்டா. எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்க அப்போ வார்டன் மேம் வெளியே இருந்து சத்தம் போட்ட அப்போதான் நாங்க எல்லாம் வெளியே வந்து பார்த்த போது நிலானி கீழே விழுந்த விஷயமே எங்களுக்குத் தெரிஞ்சுது,” என்றால்.
அவர்கள் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்த விக்கி, “சரிமா… நீங்க ஹாஸ்டலுக்குப் போங்க. ரொம்ப நேரமா கண் முழிச்சிட்டு இருக்கீங்க. டயர்டா இருப்பீங்க… நிலானியை நாங்க பார்த்துக் கொள்கிறோம். நீங்க கிளம்புங்க,” என்று அவர்களையும் அவள் ஹாஸ்டல் வார்டனிடம், “நான் நிலானியைத் திருமணம் செய்து கொண்டாதனால் அவள் வீட்டில் இருந்தோ… இல்லை உங்க காலேஜில் இருந்தோ… உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் நான் பார்த்துக்குறேன். நீங்க தைரியமா இவங்க கூடப் போங்க,” என்று சொல்லி அவரையும் அனுப்பி வைத்தான்.
அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவன், “நீங்க எல்லாரும் கிளம்புங்க. ரொம்ப நேரம் ஆகிடுச்சு…” என்று சொல்ல…
கதிர் எழுந்து நேராக விக்கியிடம் வந்தவன் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.
எதற்காகத் தன்னைக் கதிர் அடித்தான் என்று புரியாமல் பார்த்த விக்கியைப் பார்த்து, “கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ என்ன சொன்னே? உனக்கு யாருமே இல்லையா? எங்க எல்லாரையும் பார்த்தா உனக்கு அப்படித்தான் தோணுதா? சொல்லு… என் அம்மாவும் அப்பாவும் உன்கிட்ட அப்படித் தான் நடந்துக்குறாங்களா? இல்லை என் அண்ணன் உன்னிடம் நண்பன் என்பதையும் தாண்டி எவ்வளவு தூரம் உன் மேல பாசம் வெச்சிருக்கான். நான் உன்கிட்ட அப்படித்தான் நடந்துகிறேனா? இல்லை இவங்க ரெண்டு பேரும் உன்கிட்ட இப்படித்தான் இருக்காங்களா? சொல்லு…” என்று விக்கியைப் பார்த்துக் கோபமாகக் கேட்க…
அவனைத் தாவி அணைத்துக் கொண்ட விக்கி, “டேய் மச்சி மன்னிச்சிருடா… டாக்டர் இவளுக்கு ஆபரேஷன் பண்ண முடியாதுன்னு சொன்னதும் என்ன பேசுறேன் என்ன பண்றேன்னு தெரியாமப் பேசிட்டேன்,” என்று சொல்லிக் கண்ணீர் விட… இதற்கு மேலும் விக்கியைக் கஷ்டப்படுத்த விரும்பாமல் கட்டிக் கொண்ட கதிர் அவன் தோளை ஆதாரவாகத் தட்டிக் கொடுத்தான்.
துர்காவும் விக்கியும் ஹாலில் கட்டிக்கொண்டு நின்றிருந்ததைத் தன் மொபைலில் படம் பிடித்த ஷிவு, தன் அறைக்கு வந்ததும் அதைச் சங்கவிக்கு அனுப்பி வைத்தாள்.
என்ன இந்த நேரத்தில் தனக்கு மெசேஜ் வருகிறது என்று மெசேஜ் வந்த சத்தம் கேட்டு சங்கவி தன் போனை எடுத்துப் பார்த்தவளுக்கு, ஷிவு அனுப்பி இருந்த போட்டோவைப் பார்த்ததும் நம்பவே முடியவில்லை.
உடனே ஷிவுவிற்கு அழைத்த சங்கவி அவள் போனை அட்டென்ட் செய்த உடனே, “ஏய்… ஷிவு என்ன இப்படி ஒரு போட்டோவை இந்த நேரத்தில் அனுப்பியிருக்கே? என்ன நடக்குது அங்கே?” என்றால் சங்கவி.
“அக்கா நான் அனுப்பிய போட்டோவைப் பார்த்தற்கே… நீங்க இவ்வளவு ஆச்சர்யமாப் பேசிட்டு இருக்கீங்க… இதை நேரில் பார்த்து போட்டோ எடுத்த எனக்கு எப்படி இருக்கும். இந்தக் கன்றாவியை எல்லாம் நான் என் கண்ணால் பார்க்க வேண்டி இருக்குது… வீட்டில் இருக்கவங்க கிட்ட கூட சொல்லலாம்னு கூட நினைச்சேன். ஆனா… உங்ககிட்ட பேசிட்டு அப்பறோம் சொல்லிக்கலாம்னு விட்டுவிட்டேன் அக்கா,” என்றால் ஷிவு.
ஷிவு சொன்னதைக் கேட்ட சங்கவி, “நல்ல வேலை நீ வீட்டில் இருக்குறவங்க யார்கிட்டயும் இதைச் சொல்லலை,” என்றால் சங்கவி.
“ஏன் அக்கா? இப்படிச் சொல்றீங்க… நான் மட்டும் வீட்டில் சொல்லி அந்த துர்காவைப் பற்றிய உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அவ எப்படி எல்லாரையும் இவ்வளவு நாளா நம்ப வெச்சு ஏமாத்திட்டு இருந்து இருக்கான்னு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்,” என்றால் ஷிவு.
“நீ மட்டும் இப்படி அவங்க கிட்ட இந்த போட்டோவைப் போய்க் காட்டி அந்த துர்காவைப் பற்றி என்ன சொல்லி இருந்தாலும் அந்த வீட்டில் இருக்குறவங்க யாருமே அதை நம்ப மாட்டாங்க… அந்த அளவுக்கு அவ மேல வீட்டில் உள்ளவர்களுக்கு அவள் மேல் நம்பிக்கை. அதை விட அந்த துர்கா எல்லாரையும் நம்ப வெச்சு ஏமாத்திட்டு இருக்கா,” என்றால் சங்கவி.
“இப்போ என்ன அக்கா பண்றது? வீட்டில் உள்ளவங்க கிட்ட சொல்லாம விட்டுட்டா… இவங்க ரெண்டு பேரும் அடிக்குற கொட்டம் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமலேயே போய்விடும் இல்லையா அக்கா?” என்றால் ஷிவு.
“நீ சொல்றது சரிதான் ஷிவு… ஆனா நீயோ… நானோ போய் இதை எல்லாம் என்னதான் ஆதாரத்தோட சொன்னாலும் அவங்க நம்ம சொல்ற எதையும் நம்ப மாட்டாங்க,” என்றால் சங்கவி.
“அப்பறோம் என்ன அக்கா பண்றது? அவங்களுக்கு எப்படி இதை எல்லாம் சொல்றது?” என்று கேள்வி கேட்ட ஷிவுவிடம்.
“சொல்ல வேண்டிய ஆள் வந்து இவங்க கிட்டே சொன்னாள் எல்லாரும் இந்த விஷயத்தை நம்புவதை விட… அந்த துர்காவை வீட்டை விட்டே… அனுப்பிவெச்சிருவாங்க,” என்றால் சங்கவி.
“அப்படி யாரு வந்து சொன்னா இவங்க எல்லாரும் நம்புவாங்க அக்கா?” என்று புரியாமல் கேட்ட ஷிவுவிடம்,
“ஆதி…” என்றால் ஒரே வார்த்தைதான் சொன்னாள்.
சங்கவி ஆதியின் பெயரைச் சொன்னதும் அதைக் கேட்ட ஷிவு… ஆச்சர்யமாகி… “அக்கா!!!” என்றால் ஆச்சர்யத்துடனேயே…
பின் சங்கவி, “இதுக்கே இப்படி ஆச்சர்யப்பட்டா எப்படி… நான் சொல்லப் போறதை முழுசா கேட்டுட்டு அப்பறோம் மொத்தமா உன் ஆச்சர்யத்தைக் காட்டு, ஓகேவா?” என்று அவளிடம் தன் பிளானைச் சொல்ல… “அக்கா நிஜமா நீங்க இப்போ சொன்ன பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?” என்றால் ஷிவு.
அவள் சொன்னதைக் கேட்டு, “கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும்,” என்றால் சங்கவி.
“சரி, நான் உனக்கு அப்பறோம் கால் பண்றேன். எனக்கு நிறைய வேலை இருக்கு,” என்று சொல்லிவிட்டுச் சங்கவி போனை வைத்தாள்.
