EPISODE 75
அதிகாலை மூன்று மணி போல பெட்டில் மயக்கத்தில் படுத்திருந்த நிலானி தன் கண்களை லேசாகத் திறந்து பார்க்க… எப்போதும் தான் இருக்கும் அறையில் இல்லாமல் இப்போது வேறு எங்கோ இருப்பது போல தோன்ற…
தன் கண்களை நன்றாகத் திறந்து பார்த்தவள் தலையைச் சுழல விட்டு எங்கே இருக்கிறோம் என்று பார்க்க நினைக்க… அவள் தலை வின்னென்று வலிக்கவே… தன் கையைத் தூக்கித் தலையைப் பிடிக்கப் போனவள், தன் வலது கை தூக்க முடியாமல் போக பார்வையை கீழே தாழ்த்திப் பார்த்தவளுக்கு, தன் கையிலும் காலிலும் கட்டுப் போட்டுப் படுத்திருப்பது நினைவுக்கு வந்தது.
உடனே நேற்று அவள் மாமா அவளிடம் கூறியது எல்லாம் நினைவுக்கு வர… நிலானிக்குப் பதட்டம் தொற்றிக்கொள்ள… கண்களில் இருந்து கண்ணீர் அவளை அறியாமல் வழிந்து அவள் கன்னங்களை நனைக்க…
அதைத் துடைக்க தன் இடது கையை உயர்த்தப் போக, அப்போது ஒரு கை வந்து அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது… யார் என்று கை வந்த திசையைத் திரும்பிப் பார்க்க… அங்கே அவள் அருகில் விக்கி நின்று இருந்தான்.
அவனைப் பார்த்ததும் நிலானியின் புருவம் சுருங்கியது… ‘இவன் இங்கே என்ன பண்ணுகிறான்?’ என்ற கேள்வியோடு அவனைப் பார்க்க… அவள் பார்வையில் இருந்த அர்த்தம் புரிந்தவன், “உன்னோட சீனியர் எனக்குக் கால் பண்ணி நீ மாடியில் இருந்து டைவ் அடிச்சதைச் சொல்லி என்னை இங்கே வரச் சொன்னா…” என்றவன்.
“ஏன்டி விழுந்தது தான் விழுந்தே… நேரா உன்னோட ஹாஸ்டல் மொட்டை மாடியில் போய் விழுந்திருக்கலாமே… அதை விட்டுட்டு உன்னோட ரூம் இருக்குற மூணாவது மாடியில் இருந்து விழுந்து கையையும் காலையும் உடைச்சுக்கிட்டு… தலையை உடைச்சு ரத்தம் வேற நிறையப் போயிருச்சு… உனக்கு ரத்தம் தேடிக் கொடுக்கிறதுக்குள்ள இங்க இருக்கவங்க பாடு எவ்வளவு கஷ்டமா போயிருச்சு தெரியுமா? மொட்டை மாடியில் இருந்து விழுந்திருந்தால்… இந்த நேரம் நாங்க எல்லாரும் சேர்ந்து உன்னைச் சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போயிருப்போம்…” என்று காண்டாக விக்கி சொல்ல…
அவன் அப்படிச் சொன்னதும் ஏற்கனவே அவள் மாமா பேசியதில் வருத்தத்தில் இருந்தவள் இப்போது விக்கி பேசியதும் உடைந்து போனவள் ஓவென்று சத்தமெடுத்து அழ ஆரம்பித்தாள்.
அதே அறையில் ஆளுக்கு ஒரு புறமாக இரவெல்லாம் தூங்காமல் இருந்தவர்கள் கலைப்பில் தூங்கி இருக்க… நிலானி அழும் சத்தம் கேட்டதும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தவர்கள். ஒன்றும் புரியாமல் நிலானியையும் விக்கியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே அவள் அருகில் வர…
அவர்களை எல்லாம் பார்த்த நிலானி, “யாருக்குமே நான் இருப்பது பிடிக்கலை… நான் எல்லோருக்கும் பாரமா இருக்குறேன்… என்னை எதுக்குக் காப்பாத்துனீங்க… என்னை இப்படியே விட்டிருந்தால் நான் யாருக்கும் பாரம் இல்லாம செத்துப் போயிருப்பேனே…” என்று அவள் அழ…
அவளைச் சமாதானம் செய்ய துர்கா ஏதோ கூற வர…
அதற்குள்… “நீ செத்துப் போய்ட்டா… அப்பறோம் யாரு இந்த ஹாஸ்பிடல் பில் எல்லாம் கட்டுறது… அதை எல்லாம் எங்க தலையில் கட்டிட்டுப் போகலாம்னு நினைக்குறியா…” என்றான் விக்கி.
அவன் அப்படிச் சொன்னதும் அழுது கொண்டே, “எனக்கு உடம்பு சரியாகட்டும். எனக்கு ஹாஸ்பிடலில் நீங்க செலவழிச்சதை எல்லாம் வட்டியும் முதலுமா சேர்த்து உங்க கடனை அடைத்து விடுகிறேன்,” என்றால் நிலானி.
“ஓகே… ஓகே… என் கடனை எல்லாம் கொடுத்து முடிச்சுட்டு அதுக்கப்புறம் போய் நீ உன் ஹாஸ்டல் மாடியில் இருந்து குதிச்சிரு… அப்போதாவது மூணாவது மாடியில் இருந்து குதிக்காம மொட்டை மாடியில் போய்க் குதிச்சிரு. அப்போதான் மேல இருந்து கீழே விழற அப்போ உன்னோட கை கால் எல்லாம் மொத்தமா உடைஞ்சு… உன்னோட மண்டை ஓடு ரெண்டா உடைஞ்சு… உன் மூளை எல்லாம் தெரிஞ்சு வெளிய வந்து விழுந்து உடனே சாவே… சரியா விழாம மறுபடியும் வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிட்டு எங்களை நைட் எல்லாம் தூங்க விடாம பண்ணின மாதிரி அப்போவும் செஞ்சிடாதே..” என்று மறுபடியும் மறுபடியும் நிலானியை வெறுப்பேற்ற…
தன்னிடம் பாசமாக கூடப் பேச யாருமே இல்லையா? இந்த நிலையில் தான் இருந்தும் கூட தனக்கு ஆதரவாக ஒருவர் கூட இல்லையே என்று நினைத்த நிலானி…
“என்னால யாருக்கும் எந்தக் கஷ்டமும் வேண்டாம்,” என்றவள் அருகில் டேபிளின் மேல் வைக்கப் பட்டிருந்த தன் வளையல்களைப் பார்த்தவள், அதை எட்டி எடுத்துத் தன் அருகில் இருந்த விக்கியின் கையில் கொடுத்தவள், “இந்தாங்க… இது என்னோட அம்மாவோட வளையல். நான் சாகும்போது எனக்கு அவங்க ஆசையா கொடுத்தது. இதை வெச்சுக்கோங்க… நான் உங்களுக்குத் தர வேண்டிய பணத்திற்கு இதை வெச்சுக்கோங்க…” என்று நிலானி சொல்ல…
விக்கி, அவள் கொடுத்த வளையலைக் கையில் பார்த்தவன், அத்தை தன் கைகளாலேயே எடை போட்டுப் பார்ப்பது போல லேசாக வளையலைத் தூக்கிப் பார்த்துவிட்டு… “நான் செஞ்ச செலவுக்கு இது எல்லாம் போதாது… ஆனாலும் இதை அட்வான்ஸா வெச்சுகிறேன். மீதியை நீ மெதுவா கொடு… நான் ஒண்ணும் அவ்ளோ கெட்டவன் இல்லை,” என்று விக்கி சொல்ல…
அவனை ஏகத்துக்கும் முறைத்தவள், “உங்க பணத்தை நானே சீக்கிரம் கொண்டு வந்து தரேன். முதல்ல இந்த ரூமை விட்டு வெளியே போங்க… உங்க முகத்துல முழிக்கவே எனக்கு விருப்பம் இல்லை,” என்று நிலானி சொல்ல…
“டேய்… விக்கி… சும்மா இருக்க மாட்டே… அவ ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கா… அவளிடம் விளையாடுறதுக்கு உனக்கு நேரம் காலமே தெரியலையா…” என்றால் துர்கா.
நேராக நிலானியிடம் வந்தவள், “நீ என்ன அவன் முகத்துல முழிக்கவே பிடிக்கலையின்னு சொல்லிட்டு இருக்கே… இனி நீயே நினைச்சு அவனை வேணாம்னு சொன்னாலும் அவன் உன்னை விட்டு எங்கயும் போக மாட்டான். நீ தினம் காலையில் எழுந்திருக்கிறதுல இருந்து… நைட் தூங்கப் போற வரைக்கும் இவன் முகத்தில்தான் முழிச்சு ஆகணும்,” என்று துர்கா சொல்ல…
அவளைப் புரியாமல் பார்த்த நிலானியைப் பார்த்த துர்கா, “என்ன புரியலையா?” என்றவள். தன் கையில் இருந்த தாலியை விக்கியிடம் நீட்ட… அதைப் பார்த்த நிலானி புரியாமல் அந்தத் தாலியையே பார்த்துக் கொண்டிருந்திருக்க… விக்கி துர்காவின் கையில் இருந்த தாலியை வாங்கிச் சட்டென நிலானியின் கழுத்தில் மாட்டிவிட்டான்.
தன் கழுத்தில் தாலியை மாட்டி விட்டவனை அதிர்ச்சியாக நிலானி பார்க்க…
“என்ன அப்படிப் பார்க்குறே… என்னடா… தாலியை எல்லாரும் கட்டி விடுவாங்க இவன் அப்படியே கழுத்துல மாட்டி விடுறாங்கன்னு நினைக்கறியா… இது நமக்கு இரண்டாவது கல்யாணம்,” என்றான் விக்கி.
ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவள் மேலும் அதிர்ச்சியானவள் போல விக்கியைப் பார்க்க…
“டேய், கொஞ்ச நேரம் என் வாயை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா நீ… அவளே ஏற்கனவே ரொம்பக் குழம்பிப் போயிருப்பா… இதுல நீ வேற சும்மா அவ எழுந்ததில் இருந்து அதையும் இதையும் சொல்லி அவளைப் படுத்திட்டு இருக்கே… நீ கொஞ்ச நேரம் போய் அங்கே உட்காரு… மற்றதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம்,” என்றால் துர்கா.
“அதுல… துர்கா…” என்று விக்கி கூற வர…
உடனே துர்கா விக்கியைப் பார்த்து அவள் கையைத் தன் வாய் மீது வைத்து மூடுவது போல பாவனை செய்து காட்டி அவனை அங்கிருந்து செல்லச் சொல்ல… அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகப் போய் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டான்.
விக்கியின் நிலையைப் பார்த்துக் கதிர் சிரிக்க… “கதிர் நீயும் போ, அவன் கூடப் பேசாம உட்காரு…” என்றால் துர்கா.
உடனே கதிர், “துர்கா நான் என்ன பண்ணினேன்?” என்று கதிர் கேட்க, “நீ எதுவும் பண்ணலைடா… நாங்க கொஞ்ச நேரம் தனியாப் பேசுறோமே… நீங்க ஒண்ணு செய்யுங்க… இங்க உட்கார வேண்டாம். அவன் நைட் எல்லாம் தூங்கவே இல்லை. கண் முழிச்சுட்டு இருந்தான்.. நீ விக்கியைக் கூட்டிட்டுப் போய் ஏதாவது காபி, டீ வாங்கிக் கொடுத்துட்டு நீயும் குடிச்சுட்டு பொறுமையா அவனை இங்கே கூட்டிட்டு வா… அதுவரை நாங்க நிலானியைப் பார்த்துக் கொள்கிறோம்,” என்று சொல்ல..
இதற்கு மேலும் இங்கு நின்றால் துர்கா தங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள் என்று நினைத்த கதிர், விக்கியை இழுத்துக் கொண்டு வெளியே செல்லப் போக…
வாசல் கதவு வரை சென்ற விக்கி ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்க்க… அவனையே அதிர்ச்சி மாறாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் நிலானி… அவளைப் பார்த்து, “நான் காபி குடிச்சுட்டு வரேன் பொண்டாட்டி…” என்று சொல்லிவிட்டுக் கதிருடன் வெளியே சென்றான்.
அவன் சென்றும் கூட வாசலையே பார்த்துக் கொண்டு இருந்த நிலானியை துர்கா அவள் தோளில் கை வைத்துத் தங்கள் புறம் திருப்ப…
கண்களில் கண்ணீரோடு துர்காவையும், கீர்த்தியையும் பார்த்து அழ…
கீர்த்தி நிலானியின் கையை ஆதரவாகப் பற்றி அவள் அருகில் இருந்த சேரில் அமர… துர்கா கட்டிலில் நிலானியின் அருகில் அமர்ந்தவள் நிலானியைப் பார்க்க…
“அக்கா… என்ன அக்கா நடக்குது இங்கே… நீங்களே இப்படிப் பண்ணலாமா… அவர் கையில் தாலியைக் கொடுத்து என் கழுத்துல மாட்டிவிட சொல்றீங்க… அவரு என்னன்னா… நம்ம ரெண்டு பேருக்கும் இது இரண்டாவது கல்யாணம்னு சொல்றாரு… என்ன அக்கா நடக்குது இங்கே.. நானே ஏற்கனவே நிறையப் பிரச்சனையில் மாட்டிக்கிட்டு கஷ்டப்படறேன். இதுல இப்போ இவர் வேற என் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டுட்டாரு…” என்று தேம்பி அழ ஆரம்பிக்க…
துர்கா நிலானியின் கையை ஆதரவாகப் பற்றியவள், “நிலானி உனக்கு நடந்த கல்யாணம் எங்களை மீறி நடந்தது… விக்கியே உன்னோட கழுத்தில் நேற்று இரவு தாலி கட்டுவான் என்று அவனே எதிர் பார்த்திருக்க மாட்டான். என்ன சூழ்நிலை அப்படி அமைஞ்சு போயிருச்சு,” என்றால் துர்கா. நேற்று இரவு நடந்ததி அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள் துர்கா.
“விக்கி மட்டும் உன் கழுத்தில் தாலியைக் கட்டாமல் இருந்திருந்தால்… இந்த நேரம் உன்னை உயிரோட பார்த்திருக்கவே முடியாது,” என்றாள் துர்கா.
“உனக்குத் தெரியாமல், அதுவும் நீ சுயநினைவில் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும்போது உனக்குத் தாலி கட்டுவது சரி இல்லை என்று நாங்களும் தடுக்கத்தான் முயன்றோம்… ஆனால் விக்கி, ஒரே முடிவாக இவளுக்காக என்று யாரும் இல்லை… இவளை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரே பிடிவாதமாகத் தாலியைக் கட்டிவிட்டான். அதன் பிறகு உனக்கு ஆபரேஷன் செய்யணும். நீ போட்டிருந்த நகையை எல்லாம் கழட்டி வைக்க வேண்டி ஆகிருச்சு. கூடவே அவன் கட்டின தாலியும் கழட்டி என்கிட்ட நேத்தே கொடுத்துட்டாங்க… நீ கண் விழிச்சதும் உன் கழுத்தில் கட்டி விடச் சொல்லலாம்னு நான் அவன்கிட்ட கொடுக்காமல் நானே வெச்சுக்கிட்டேன். நேத்து உனக்குத் தெரியாம அவசரத்துல கட்டின தாலிதான். இன்னிக்கு நல்ல நாள். அதுவும் பிரம்ம முகூர்த்தத்தில் இந்தத் தாலியைக் கட்டட்டுமேன்னு ஒரு சென்டிமென்டில் இருக்கட்டுமேன்னு கொடுத்துத் திரும்பவும் கட்டச் சொன்னேன்,” என்றால் துர்கா.
அவள் சொன்னதை எல்லாம் நம்பமுடியாமல் கேட்டுக் கொண்டு இருந்த நிலானிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“அக்கா… நான் என்ன அக்கா செய்வேன் இப்போ… நான் இன்னும் படிச்சுக் கூட முடிக்கலை. அதுவும் இல்லாம என் அக்கா இருக்கா… ஏற்கனவே அவளோட வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனை போய்ட்டு இருக்கு… இப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயம் மட்டும் எங்க வீட்ல தெரிஞ்சா என் அக்காவை மாமா வீட்டை விட்டே துரத்தி விட்ருவாங்க…” என்று நிலானி சொல்ல…
“அதெல்லாம் நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே… நாங்க எல்லாரும் இருக்கோம் உனக்கு. உன்னை இப்படியே விட்டுவிடுவோமா… சொல்லு,” என்றால் துர்கா.
“இல்லை அக்கா, நான் அதுக்காக சொல்ல வரலை. என் அக்காவை நினைச்சா தான் எனக்குக் கவலையா இருக்கு. மாமா என்னால் என் அக்காவை எதுவும் பண்ணி விடுவாரோ என்று எனக்குப் பயமா இருக்கு துர்கா அக்கா…” என்றால்.
“நீ அதை எல்லாம் நினைத்துக் கவலைப்படாதே. எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், சரியா…” என்ற துர்கா கீர்த்தியைப் பார்த்துக் கண் அசைக்க…
கீர்த்தி ‘சரி’ என்பது போலத் தலையை ஆட்டியவள். நிலானியைப் பார்த்து, “ஏய் நிலா… நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன். உன் மனசுல இருக்குறதை அப்படியே எனக்குச் சொல்லணும். எதையும் மறைக்காம உனக்கு என்ன தோணிச்சோ அதை அப்படியே சொல்லிடணும், ஓகேவா…” என்றால்.
“சொல்லு கீர்த்து…” என்றால் நிலானி.
“விக்கி அண்ணாவைப் பற்றி நீ என்ன நினைக்குறே…” என்றால் கீர்த்து.
அவன் பெயரைச் சொன்னதும் அமைதியாகிவிட்டாள் நிலானி.
“ஏய் என்னடி எதுவுமே சொல்லாம இருக்கே… சொல்லு அவரைப் பற்றி நீ என்ன நினைக்குறே…” என்றால் கீர்த்து.
“அவரு நல்லவருன்னு பழகின கொஞ்ச நாளிலேயே எனக்குத் தெரியும். இப்போ என்னைக் காப்பாத்துறதுக்காகக் கல்யாணம் பண்ற வரை துணிஞ்சு இருக்குறதைப் பார்க்குற அப்போ அவர் மேல எனக்கு இருந்த அபிப்ராயம் இன்னும் அதிகம் ஆகிடுச்சு,” என்றால் நிலானி.
“விக்கி அண்ணா மேல அபிப்ராயம் அதிகம் ஆகிடுச்சுன்னா நல்லவிதமாவா… இல்லை…” என்று கீர்த்து இழுக்க…
“நல்லவிதமாகத்தான்,” என்றால் நிலானி.
“அப்போ உனக்கு என் அண்ணாவைப் பிடிச்சிருக்கா?” என்றால் கீர்த்து.
நிலானி ‘ம்ம்’ என்று தலை அசைத்தாள்.
“அப்போ என் அண்ணா உனக்குத் தாலி கட்டினதுல எந்த வருத்தமோ வெறுப்போ இல்லையே…” என்றால் கீர்த்து.
அதற்கு நிலானி… “வெறுப்பு இல்லை… ஆனால்…” என்று இருக்க… “என்னடி ஆனா… என்னனு சொல்லு,” என்றால் கீர்த்து. “ஆனா கொஞ்சம் வருத்தமா இருக்கு,” என்றால் நிலானி.
“எதுக்கு வருத்தம்?” என்று கேட்டாள் கீர்த்து… “என் அக்காவுக்குத் தெரியாம எனக்குக் கல்யாணம் ஆனது நினைச்சு வருத்தமா இருக்கு. அதைவிட அவரு என்கிட்ட கொஞ்ச நேரம் முன்ன பேசினதை நீங்க ரெண்டு பேரும் கேட்டுட்டு இருந்தீங்க தானே. அவரு என்னை எப்படிப் பேசினாருன்னு…” என்று சொல்ல…
அவள் சொன்னதைக் கேட்டுச் சிரித்த துர்கா… “அவனுக்கு நீ இப்படிப் பண்ணிட்டியேன்னு கோபம். அதனாலதான் உன்னை அப்படிப் பேசிட்டான். நீ அதை எல்லாம் பெருசா எடுத்துக்காதே.. அவனுக்கு உன்னை அவ்ளோ பிடிச்சிருக்கு. அதனாலதான் உன்மேல கோபப்படவும் செய்றான்,” என்றால் துர்கா.
நிலானியை கொஞ்ச நேரம் தூங்கச் சொல்லிவிட்டு துர்காவும், கீர்த்தியும் அமர்ந்து இருக்க, டீ குடிக்கச் சென்ற விக்கியும் கதிரும் இவர்களுக்கும் வாங்கி வர… அதற்குள் நிலானி தூங்கிவிட்டதைப் பார்த்த விக்கி… ‘தூங்கிட்டாளே…’ என்று மனதிற்குள் அவளிடம் பேச முடியவில்லை என்று வருத்தமாக இருந்தாலும். ‘இனி எங்கே போகப்போறா? என்கூட தானே இருக்கப் போறா. பிறகு பார்த்துக் கொள்ளலாம்,’ என்று நினைத்துக்கொண்டான்.
துர்கா, கீர்த்தி, கதிர் மூவரும் வீட்டிற்குச் சென்று ஃப்ரெஷ் ஆகிவிட்டு ஆஃபிஸில் வேலைகளை முடித்துவிட்டுச் சீக்கிரம் வருவதாகக் கூறிவிட்டு விக்கியை மட்டும் அங்கேயே விட்டு விட்டுச் சென்றனர்.
ஆதி ஊரில் இருந்து வந்த பிறகு நிலானிக்கும் விக்கிக்கும் திருமணம் ஆன விஷயத்தைப் பற்றி அனைவரிடமும் சொல்லிக் கொள்ளலாம். அதுவரை இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் துர்கா.
நிலானியின் ரூம்மேட், அவளுடைய சீனியர், ஹாஸ்டல் வார்டனிடம் இப்போதே காலேஜில் இதை இன்பார்ம் செய்ய வேண்டாம். அப்படிச் செய்தால் அவள் படிப்பு பாதிக்கும். அவள் குணம் ஆகி வரும் வரை யாருடமும் சொல்ல வேண்டாம் என்று இரவே துர்கா அவர்களிடம் சொல்லி இருந்தாள்.
கீர்த்திகாவை வீட்டில் விட்டுவிட்டு துர்காவும், கதிரும் வீட்டிற்கு வரும்போது வேலை ஆட்கள் சிலரைத் தவிர யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை. இருவரும் அவரவர் அறைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு ஆபீஸ் செல்வதற்கு கிளம்பி அவரவர் அறையில் இருந்து சாப்பிட வர…
டைனிங் டேபிளில் அமர்ந்து செண்பகமும் கனகாவும் பேசிக்கொண்டு இருக்க… அவர்களைப் பார்த்ததும், “குட் மார்னிங் செண்பகம் அம்மா… குட் மார்னிங் கனகா அம்மா..” என்று சொல்லிக் கொண்டே வந்த துர்கா, “எங்கே அத்தையைக் காணோம்?” என்று கேட்க…
“துர்கா நான் இங்கே தான் இருக்கேன்,” என்று சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார் விசாலாட்சி. அவரைப் பார்த்துச் சிரித்த துர்கா “குட் மார்னிங் அத்தை,” என்றால்.
பிறகு கதிரையும் துர்காவையும் சாப்பிடச் சொல்லி உணவு பரிமாற… இருவரும் சாப்பிட்டுக் கொண்டே அனைவரிடமும் பேசிக்கொண்டு இருக்க… விசாலாட்சி விக்கியைக் காணோம் என்று கேட்கவும்.
கதிர் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க… துர்கா விசாலாட்சியிடம், “அத்தை, இன்னும் நான்கு ஐந்து நாளில் நானும் விக்கியும் டென்மார்க் போறோம். அதுக்கான வேலைகளை எல்லாம் விக்கி தான் பார்த்துட்டு இருக்கான். அதனால்தான் நேரமே கிளம்பிப் போய்ட்டான்,” என்றால் துர்கா.
பிறகு டென்மார்க்கில் இவளுக்காக வேலைகள் இருப்பதை கதிர் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல… அனைவரும் துர்காவுக்கு வாழ்த்துச் சொல்லி அவளை உற்சாகப் படுத்தினர்.
பின் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் ஆபீஸ் கிளம்பினர். கதிரும் துர்காவும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட… லதாவிற்கும், விவேக்கிற்கும் விடுமுறை அளித்துவிட்டதால் துர்காவை எதுவும் செய்ய வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் அவர்கள் இருவரது வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டு இருந்தாள்.
அப்போது அவர்கள் ஆபீஸ் வாசலில் நான்கு ஐந்து கார்கள் வரிசையாக வந்து நிற்க… அதில் நடுநாயகமாக நின்ற விலை உயர்ந்த காரில் இருந்து இறங்கி வந்தான் போதி.
ஆபீஸ் ரூமில் கதிருடன் இருந்த துர்கா வெளியில் பரபரப்பாகச் சத்தம் கேட்கவும் வெளியே வர… அங்கே அவர்கள் ஆஃபிஸிற்குள் தனது பாடிகார்டுகள் புடை சூழ வந்தான் போதி.
உள்ளே அவனை வரவிட்ட ஆபீஸ் ஸ்டாப் நேராக அவனை அழைத்து வந்தவர் துர்காவிடம் வந்து, “மேடம் சார்…” என்று சொல்ல வர…
துர்கா போதியைப் பார்த்து, “வாங்க மிஸ்டர் போதி… நீங்க எங்க ஆஃபிஸிற்கு வந்ததற்கு நாங்கள் பெருமை படுகிறோம்,” என்று சொன்னவள் ஸ்டாபிடம், “நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க போங்க,” என்று அவரை அனுப்பிவிட்டு நேராகப் போதியை கதிரின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
துர்கா இன்று முட்டி வரை உள்ள மிடி போன்ற உடையை அணிந்திருக்க… அவள் முன்னே செல்ல… அவள் பின்னால் இருந்தே துர்கா நடந்து செல்லும் அழகை ரசித்துக் கொண்டே சென்றான் போதி.
அவனை அழைத்து உள்ளே வர கதிர் தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து போதியிடம் கை குலுக்கி அருகில் இருந்த சோபாவில் போதியை அமரச் சொல்லிவிட்டுத் தானும் அவனுடன் அமர்ந்து கொண்டான்.
துர்கா அவர்கள் பேசட்டும் என்று வெளியே செல்லப் போக… கதிரிடம், “இவங்களும் இங்கேயே இருக்கட்டுமே… நான் மிஸ் துர்கா கிட்டயும் பேசத்தான் வந்திருக்கேன்,” என்றான் போதி.
உடனே கதிர், “துர்கா… நீயும் உட்காரு,” என்று தான் அருகில் கையை காட்ட… கதிரை விட்டுச் சற்று தள்ளி அவனுடனே அமர்ந்தாள்.
துர்காவை உரிமையுடன் ‘துர்கா’ என்று அழைத்த கதிரையும் அவன் அருகில் உரிமையுடன் அமர்ந்த துர்காவையும் பார்த்த போதிக்கு உள்ளுக்குள் சற்றுப் பொறாமையாகத்தான் இருந்தது.
கதிர் போதியிடம், “சொல்லுங்க மிஸ்டர் போதி என்ன விஷயமா நீங்க எங்க ஆஃபிஸிற்கு நேரில் வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா…” என்றான் கதிர்.
அவனைப் பார்த்த போதி, “ஏன்னா உங்க ஆஃபிஸிற்கு வரக்கூடாதா…” என்றான் போதி.
அவன் அப்படி கேட்டதும் கதிருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க…
உடனே துர்கா போதியைப் பார்த்துச் சாதாரணமாக, “நீங்க எங்கயும் நேரில் செல்வதில்லை என்று நாங்கள் கேள்வி பட்டிருக்கிறோம். அப்படி இருக்க நீங்களே இன்று எங்கள் அலுவலகம் தேடி நேரில் வந்திருக்கீங்களே… அதனால் கதிர் அப்படி கேட்டார்,” என்று துர்கா சொல்லிச் சமாளிக்க…
அவள் முகத்தில் எந்த உணர்வும் காட்டிக் கொள்ளாமல் பார்த்த போதி… ‘எவ்வளவு அழகாகச் சமாளிக்கிறாள்’ என்று துர்காவைத் தன் மனதிற்குள் ரசித்தவன்.
“என்னை பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பீர்கள் போலவே…” என்று துர்காவைப் பார்த்துக் போதி கேட்டான்.
“இரண்டு நாள் முன்பு எங்கள் நிறுவனத்தின் சார்பில் நடந்த மிகப்பெரிய ஆடைகள் வடிவமைப்பிற்கான ஷோவில் நான் அணிந்து வந்த ஆடையை அதன் விலையில் இருந்து இரண்டு மடங்கு விலை கொடுத்து ஏலத்தில் வருவதற்கு முன்பே வாங்கிவிட்டீர்கள். அப்போ கண்டிப்பா உங்களைப் பற்றி நாங்கள் கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டாமா…” என்றால் துர்கா.
அவள் சொன்னதைக் கேட்டவன், “வாவ் மிஸ் துர்கா… நல்லா பேசுறீங்க,” என்றவன், “பை தி வே… நான் இங்கு நேரில் வந்ததற்கு காரணம் எங்கள் பிபி சேனலின் சார்பில் நடக்க இருக்கும் ஒரு மிகப் பிரமாண்ட ஃபேஷன் ஷோவிற்கு மெயின் மாடலாக மிஸ் துர்காவை கேட்பதற்காக என் மேனேஜரைத் தான் அனுப்புவதாக இருந்தது. ஆனால் சில பிசினஸ் டீலிங் சம்பந்தமாக உங்க சி.இ.ஓ. மிஸ்டர் ஆதியை நேரில் பார்த்துக் கேட்கலாம் என்று நானே முன்கூட்டியே உங்களிடம் தெரிவிக்காமல் வந்துவிட்டேன்,” என்றான் போதி.
அவனுக்கு ஆதி ஊரில் இல்லை, டென்மார்க் சென்று இருக்கிறான் என்று போதிக்கு நன்றாகத் தெரியும். வேண்டும் என்றே பொய் சொல்லிவிட்டு துர்காவை நேரில் பார்ப்பதற்காகவே வந்துவிட்டான்.
அவன் அப்படிச் சொன்னதும் கதிர், “சாரி மிஸ்டர் போதி என் அண்ணா… ஒரு பிசினஸ் ட்ரிப்பிற்காக டென்மார்க் சென்று இருக்கிறார்,” என்றான்.
“உங்க கம்பெனி சார்பில் நடக்க இருக்கும் ஷோ எப்போது என்று சொன்னால் நாங்கள் துர்காவின் டேட்ஸ் பார்த்துவிட்டுச் சொல்வோம். ஏனென்றால் துர்கா இன்னும் டூ ஆர் த்ரீ டேஸில் டென்மார்க் போறாங்க. அங்கே அவர்களுக்குச் செட்யூல்ஸ் கிட்டத்தட்ட ஒன் மந்திற்கு புக் ஆகி இருக்கிறது,” என்றான் கதிர்.
அவன் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட போதி, “என்னுடைய ஷோ நடப்பதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிடும். அண்ட் மிஸ்டர் ஆதியை நான் போனில் தொடர்பு கொண்டு பேசிக்கொள்கிறேன்,” என்றவன்.
துர்காவைப் பார்த்து, “நீங்கள் டென்மார்க்கில் உங்கள் ஷோவை முடித்துவிட்டு வந்ததும் வேறு எந்த கமிட்மென்டும் வைத்துக் கொள்ளாதீர்கள். ஒரு மாதத்திற்குப் பின் நீங்கள் எனக்குத்தான்,” என்று சொல்ல…
அந்த வார்த்தையைக் கேட்டதும் கதிரும் துர்காவும் அதிர்ந்து போதியைப் பார்க்க… “ஐ மீன் எங்களுடைய கம்பெனிக்குத்தான் உங்கள் முழு அப்பாயின்மென்ட் என்று சொல்ல வந்தேன்,” என்றான்.
‘ஓகே’ என்று இருவரும் தலையை ஆட்ட அவர்களிடம் விடை பெற்றவன், “ஓகே மிஸ்டர் கதிர் நான் கிளம்புகிறேன்,” என்றவன் துர்காவைப் பார்த்து, “ஓகே மிஸ் துர்கா…” என்று அழைக்க… உடனே துர்கா “மிஸ்டர் போதி நான் மிஸ் துர்கா இல்லை… நான்… மிஸ்ஸஸ்…” என்று கூற வர… உடனே அருகில் இருந்த கதிர் துர்காவின் கையைப் பிடித்து அவளை எதுவும் சொல்ல விடாமல் போதியைப் பார்த்து.
“ஒன்றுமில்லை மிஸ்டர் போதி… இவங்க மிஸ் துர்கான்னு சொல்றதை விட மிஸ் துர்கான்னு சொல்லுங்கள் என்று சொல்ல வருகிறாள். ஏன் என்றால் மாடலிங்கில் இப்போது இந்தப் பெயரைச் சொன்னால் தான் மிஸ் துர்காவை எல்லோருக்கும் தெரியும்,” என்றான் கதிர்.
“ஓ… ஓகே… நோ ப்ராப்ளம்… நானும் மிஸ் துர்கா என்றே சொல்கிறேன்,” என்றான் போதி. பின் இருவரிடமும் விடைபெற்றுவிட்டுச் செல்ல… அவனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்க இருவரும் வந்தனர். காரில் ஏறியவன் கிளம்ப… அவன் கார் நகர்ந்ததும் துர்கா கதிரின் தோளில் வேகமாக அடிக்க… “ஏய் துர்கா ஏன் அடிக்கிறே… வலிக்குது,” என்று அவள் கையைப் பிடிக்க…
“ஏன்டா மிஸ்ஸஸ் துர்கான்னு என்னைச் சொல்ல விடல… எதுக்காக அவர்கள் கிட்ட மிஸ் துர்கான்னு சொல்லி வெச்சே…” என்றால் கோபமாக.
“ஏய் லூசு! நீ மாடலிங் ஃபீல்ட்ல இருக்க… உனக்குக் கல்யாணம் ஆகிருச்சுன்னு தெரிஞ்சா… எப்படி உனக்கு ஆஃபர்ஸ் வரும்? அதான் சொல்லலை,” என்று சொல்ல, “என்னவோ பண்ணு,” என்று அவன் தலையில் கொட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
இவர்கள் பேசுவது எதுவும் கேட்காமல் போனாலும்… இருவரும் எதற்காகவோ சண்டை போடுகிறார்கள் என்று காரில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு சைடு மிரரில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சென்றான் போதி. அவர்கள் இருவரும் நெருக்கமாகப் பழகுவதைப் பார்த்து போதிக்கு பொறாமையாக இருந்தது.
டென்மார்க்கில் காலை எப்போதும் போல ஜாகிங் சென்றுவிட்டு வீட்டிற்கு வர… தன் மாஸ்க்கைக் கழட்டிவிட்டு உள்ளே வர… ஹாலில் அமர்ந்து பேப்பர் படுத்துக் கொண்டு இருந்தார் வெங்கடாச்சலம். அவரைப் பார்த்ததும் ஆதிக்கு விக்கி சொன்னது நினைவில் வரச் சிரித்துக் கொண்டே உள்ளே வர… அவனைப் பார்த்த வெங்கடாச்சலம், “என்ன ஆதி சிரிச்சுகிட்டே வர…” என்று கேட்டார்.
“ஒன்றுமில்லை அப்பா… நீங்க ஹாலில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டே பேப்பர் படிப்பதைப் பார்த்ததும் விக்கி உங்களைக் கிண்டல் செய்தது நினைவிற்கு வந்தது. அதனால் தான் சிரித்தேன்,” என்று கூற அவரும் அவனுடன் சேர்ந்து, “ஆமா ஆமா… அந்தப் படவா… என்னை எப்படி கிண்டல் செய்கிறான்னு நானும் கேட்டேன்,” என்று சொல்லி அவரும் சிரித்தார்.
ஆதிக்கு காலையில் சாப்பிட ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க, தன் மொபைலை நோண்டிக்கொண்டு ஜூஸைக் குடித்துக்கொண்டு இருக்க…
காலைச் சூரியன் லேசாக அவர்கள் இருந்த ஹாலிற்குள் லேசாகத் தன் ஒளிக்கற்றைகளைப் பரவவிட்டுக்கொண்டு இருக்க… பிரகாசமாக இருந்த அந்த ஹாலை ஒரு நிழல் வந்து மொத்த வெளிச்சத்தையும் மறைப்பது போல நின்று இருக்க…
வாசலை நோக்கி இருவரும் திரும்பிப் பார்க்க… “ஹாய்… அங்கிள்… ஹாய் ஆதி…” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தால் சங்கவி.
