EPISODE 76
டென்மார்க்கில் ஆதியும் வெங்கடாச்சலமும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க… அப்போது “ஹாய் அங்கிள்… ஹாய் ஆதி” என்று சொல்லிக்கொண்டே அவர்கள் வீட்டிற்குள் வந்தாள் சங்கவி.
தங்களை அழைத்தது யார் என்று திரும்பிப் பார்த்த இருவரும் அப்படியே உறைந்து போயினர். அவளை அங்கு எதிர்பார்க்காத இருவரும் கேள்வியுடன் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டு சங்கவியைத் திரும்பிப் பார்க்க…
“என்ன ஆதி என்னை உள்ளே வான்னு கூப்பிட மாட்டியா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வர…
“அதன் உள்ளே வந்துட்டியே. பிறகு என்ன உன்னை வான்னு நான் கூப்பிடுறது?” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க…
ஆதியின் மாஸ்க் அணிந்த முகத்தைப் பார்த்த சங்கவி… அவன் முகம் முன்பை விட அதிகமாகக் கொப்பளங்கள் நிறைந்து இருக்க… அதைப் பார்த்ததும் சங்கவியின் முகம் மாறிவிட, அதைக் கவனித்த ஆதி தன் மாஸ்க்கை எடுத்துக் போட்டுக் கொண்டு, “அப்பா நான் ரூமிற்குப் போறேன்,” என்று சொல்லிவிட்டு மேலே சென்றான்.
அவன் சென்றதும், ‘என்னை பார்த்ததும் வான்னு கூடக் கூப்பிடாம உள்ளே போறே இல்ல ஆதி…’ என்று மனதில் அவனைத் திட்டிக்கொண்டே வெங்கடாச்சலம் அருகில் வந்த சங்கவி, “அங்கிள் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்றால்.
“நான் நல்லா இருக்கேன்மா… நீ என்ன சொல்லாமல் கொள்ளாமல் இப்படித் திடீர்னு வந்திருக்க?” என்றார் வெங்கடாச்சலம்.
“ஒன் மினிட் அங்கிள். நான் இங்கே வந்ததும் அப்பா உங்ககிட்டே பேசுறேன்னு சொன்னாரு…” என்று சொல்லி அவரிடம் அவள் அப்பாவிற்குப் போன் பண்ணிக் கொடுக்க…
போனை வாங்கி, “சொல்லு வேதாச்சலம் எப்படி இருக்கே… நல்லா இருக்கியா… சிவகாமி எப்படி இருக்கா…” என்று எப்போதும் போல உரிமையாக வெங்கடாச்சலம் பேச…
வேதாசலமும், “எல்லாரும் நல்லா இருக்கோம் வெங்கடாச்சலம்,” என்றவர். “என் பொண்ணை நான் உன்கிட்டேயும் ஆதியிடமும் சொல்லாமல் கொள்ளாமல் நான் அங்கே அனுப்பி வைத்து விட்டேன்னு சொல்லி என்னை தப்பா எடுத்துக்காதே வெங்கடாச்சலம்,” என்றார்.
“அதெல்லாம் எதுவும் இல்லைடா… ஆனா ஏன் திடீர்னு சங்கவியை அனுப்பி இருக்கே?” என்றார் வெங்கடேச்சலம்.
“என் பொண்ணு உங்க கம்பெனி சார்பில் நடந்த ஷோவில் கலந்துட்டு சரியாப் பெர்ஃபார்ம் பண்ணாமல் விட்டு உங்க கம்பெனிக்கு அவளால் அவமானம் ஆகிடுச்சுன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டா… உன்கிட்டயும் ஆதியிடமும் நேரில் வந்து மன்னிப்புக் கேட்கணும்னு சொல்லிட்டு அங்க வந்துட்டா…” என்றார் சங்கவியின் அப்பா.
“ஏன்டா… ஒரு மன்னிப்புக் கேட்குறதுக்காக வயசுப் பொண்ணைத் தனியா இவ்வளவு தூரம் அனுப்பி வைப்பியா… உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?” என்று வெங்கடாச்சலம் திட்ட…
“டேய்… டேய்… திட்டாதேடா… என் பொண்ணை நான் தனியாப் போகாதேனு தான் சொன்னேன். அவ என்னைக்கு என் பேச்சைக் கேட்டிருக்கா… கிளம்பியே ஆகணும்னு அடம்பிடிச்சு நின்னாதான் சரி போய்ட்டு வான்னு அனுப்பி வெச்சேன்.”
“அவளை அனுப்பி வெச்சதுலயும் ஒரு விஷயம் இருக்குடா… நான் சொன்னேன்னு அவ கிட்ட சொல்லாதே,” என்று சற்று குரலைத் தாழ்த்திப் பேச ஆரம்பித்தார் வேதாச்சலம். “அவ கொஞ்ச நாள் அங்கேயே இருக்கட்டும் வெங்கடாச்சலம். அவளோட கல்யாணம் நின்னு போனதுல அவ ரொம்ப அப்செட் ஆகி இருக்கா.. எங்க கிட்ட காட்டிக்கிறது இல்லை என்றாலும் அவ உள்ளுக்குள்ளே ரொம்பக் கஷ்டப்படுறா…”
“அதுவும் இல்லாம எனக்கு ஒரே பொண்ணு. நாளைக்கு எனக்குப் பிறகு அவ தான் என்னோட எல்லா பிசினஸையும் பார்க்கணும். அதுக்காகத் தான் நான் ஏற்கனவே ஆதியிடம் பிசினஸ் கத்துக்கட்டும்னு அனுப்பினேன். ஆனா… சூழ்நிலை எதுவும் சரியா அமையலை.”
“அவ கொஞ்ச நாள் அங்கேயே இருக்கட்டும்டா… அவளுக்கும் இடம் மாறினால் கொஞ்சம் மனசு நல்லா இருக்கும். ஆதியிடம் சொல்லி அவன் கூடவே சங்கவியை வெச்சுக்கச் சொல்லு… அவளுக்கு பிசினஸைப் பற்றிக் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கச் சொல்லுடா…” என்றார் சங்கவியின் அப்பா.
இதை எல்லாம் சங்கவி தான் அவள் அப்பாவிடம் சொல்லி… ஆதியின் அப்பாவிடம் இப்படி எல்லாம் பேசச் சொல்லியது. ஆனால் சங்கவியின் அப்பா வெங்கடாச்சலத்தை ஏமாற்ற சங்கவிக்குத் தெரியாது என்று பொய் சொன்னது வெங்கடாச்சலத்திற்குக் தெரியாது.
சங்கவியின் அப்பா சொன்னதைக் கேட்டு வெங்கடாச்சலமும் சங்கவியைப் பார்க்க… அதுவரை அவர்கள் பேசியதை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு இருந்தவள். இப்போது எதுவும் கேட்காதவள் போல… வீட்டைச் சுற்றிப் பார்ப்பது, தலையைத் திருப்பிக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தாள்.
வெங்கடாச்சலம், “சரிடா வேதாச்சலம்… நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாதே…” என்றவர் போனை வைத்துவிட்டு.
சங்கவியைப் பார்த்து, “ஒரு மன்னிப்புக் கேட்க இவ்வளவு தூரம் வரணுமாமா… என்னமா நீ…” என்றவர் “சரி போ… அந்த ரூமில் போய்ப் ரெஸ்ட் எடு,” என்று சொல்லி அவளைப் போகச் சொல்ல…
“அங்கிள் நீங்க என்னை மன்னிச்சுட்டீங்களா?” என்றால். “நீ தப்பே பண்ணாத அப்போ நான் ஏன்டா உன்னை மன்னிக்கணும்? நானும் ஆதியும் உன்னை எதுவும் சொல்ல மாட்டோம். ஷோவில் நடந்ததெல்லாம் நீ வேணும்னே பண்ணலையே… தெரியாம தான நடந்துச்சு… நீ நிம்மதியா இரு,” என்றார்.
“சரி அங்கிள் அப்போ நான் வந்த வேலை முடிஞ்சுது. நான் கிளம்புறேன். அடுத்த ஃபிளைட் இன்னும் ஒரு டூ ஹவர்ஸ்ல இருக்கு. நான் இப்போ கிளம்பினால் தான் ஏர்போர்ட் போகச் சரியாக இருக்கும்,” என்று எழுந்திருக்கப் போக…
“என்னது வந்ததும் போகணுமா… நீ பேசாம உள்ள போ. நீ கொஞ்ச நாளைக்கு இங்கயே இருமா… ஊரை எல்லாம் சுத்திப் பார்த்துட்டு இரு.. அதுக்குப் பிறகு ஆதி பிசினஸ் விஷயமாக வெளிநாடு செல்கிறான். நீ… அவன் கூடப் போய்ட்டு வா… அவன் கூட இருந்து பிசினஸ் எல்லாம் கொஞ்சம் கத்துக்கோ,” என்றார்.
அவர் அப்படிச் சொல்லவும் “அங்கிள் நான் வந்ததும் போகணும்னு டிரஸ் எதுவும் எடுத்துட்டு வரலை,” என்று சங்கவி சொல்ல…
“அட… டிரஸ் தானே… மா… இங்கயே எடுத்துக்கலாம். நான் இன்னைக்குச் சாயங்காலம் ஆதியை உன்னை வெளியே கூட்டிப் போகச் சொல்றேன்,” என்றார்.
“அங்கிள் நான் இங்கே இருக்குறதுல உங்களுக்கும் ஆதிக்கும் டிஸ்டர்பன்ஸா இல்லையே அங்கிள்?” என்றால் நல்லவள் போல.
“ச்சே… ச்சே… அது எல்லாம் ஒண்ணும் இல்லை சங்கவி… நான் நாளைக்குக் காலையில் இந்தியா கிளம்பிடுவேன். ஆதியும் இன்னும் ரெண்டு மூணு நாளில் வெளிநாடு போறதால நான் முன்னாடியே ஊருக்குப் போறேன்,” என்றவர் வேலை ஆளிடம் சொல்லி சங்கவிக்கு அவள் இருக்கும் அறையைக் காட்டச் சொல்லி அனுப்பி வைத்தார்.
அவளுக்கு அறையைக் காட்டிவிட்டு வேலையாள் சென்று விட… அறைக் கதவைப் பூட்டிவிட்டுத் தன் மொபைலை எடுத்து அவள் அப்பாவிற்கு அழைத்தாள்.
அவள் அழைத்ததும், “சங்கவி… எல்லாம் ஓகேவா?” என்றார். “அப்பா… டபுள் ஓகே..” என்றால் சங்கவி.
“சரிம்மா… இருக்கப் போற கொஞ்ச நாளில் எப்படியாவது அந்த ஆதியை கைக்குள்ளே போட்டுக்கோ… அவனையும் அவன் குடும்பத்தையும் நம்ப வெச்சு அவனை எப்படியாவது அந்த துர்கா கிட்டே இருந்து பிரிச்சு… நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கோ,” என்றார் வேதாச்சலம்.
“அப்பா…” என்றால் சங்கவி… “சொல்லுமா…” என்றார் வேதாச்சலம்.
“அப்பா… நான் அந்த ஆதியை கண்டிப்பாகக் கல்யாணம் பண்ணணுமா?” என்று கேட்டாள் சங்கவி.
“என்னமா… அவனை அந்த துர்கா கிட்ட இருந்து பிரிச்சு அவனைக் கல்யாணம் பண்ணத் தானே நீ பிளான் பண்ணி டென்மார்க் வரை போயிருக்கே… இப்போ அவனைக் கண்டிப்பா கல்யாணம் பண்ணணுமான்னு கேக்குறியே…” என்றார்.
“எனக்கு அப்போ இருந்து இப்போ வரை அந்த ஆதியை பிடிக்கவே இல்லைப்பா… அவன் மூஞ்சியும் அதுல இருக்கப் புண்ணையும் பார்த்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு… அவன் கையில் லேசாகத் தெரிந்த பகுதியில் இருக்கக் கொப்பளங்களைப் பார்த்தாலே எனக்குக் குமட்டிகிட்டு வருது.”
“இப்போ இங்கே வந்த பிறகு அவனுக்கு முகம் கை கால் எல்லாம் இன்னும் அதிகமா கொப்பளங்கள் ஜாஸ்தி ஆகிடுச்சு. அவனைப் பார்க்கவே சகிக்கலை. நான் எப்படி அவனைக் கல்யாணம் பண்றது?” என்றால் சங்கவி.
“அப்படி எல்லாம் சொல்லாதேம்மா… அவன்கிட்டயும் அவன் அப்பன்கிட்டயும் நீ இப்போ பார்க்கிறதை விட அதிகமா பரம்பரைச் சொத்துக்கள் அவனிடம் நிறைய இருக்கிறது. அதை எல்லாம் அவன் இன்னும் இவர்களிடம் வெங்கடாச்சலம் கொடுக்கவே இல்லை… கதிருக்குத் திருமணம் செய்த பிறகு தான் அந்தச் சொத்துக்களைப் பற்றிய விவரங்களே வெளியில் வரும் என்று நினைக்கிறேன். ஆதிதான் அந்த வீட்டில் வெங்கடாச்சலத்திற்கு அடுத்த அனைத்து பிசினஸையும் எடுத்து நடத்தப் போகிறவன். அதனால் நீ அவனைத் திருமணம் செய்து கொண்டால் தான் வாழ்நாள் முழுவதும் ராணி போலப் பணத்திற்குக் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கலாம்.”
“அவன் நோயைப் பார்த்து அவனிடம் நெருங்கிப் பழகாமல் இருந்தால் எப்படி நீ அவன் மனதில் இடம் பிடித்து அவனைத் திருமணம் செய்ய முடியும்?” என்றார் வேதாச்சலம்.
உடனே சங்கவி… “அப்பா… அவன் மனதில் இடம் பிடித்து அவனைத் திருமணம் செய்து கொள்வது என்பது நடக்காத காரியம். நான் அவனை மனமேடையில் வைத்து மிகவும் அவமானப்படும்படி பேசிவிட்டேன். அதை எல்லாம் அவன் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டான். அதனால் நான் அவனை வேறு வழியில் தான் திருமணம் செய்ய வேண்டும்,” என்றவள் “நான் பார்த்துக் கொள்கிறேன் அப்பா. நீங்க ஃப்ரீயா இருங்க,” என்றவள் அவரிடம் பேசிவிட்டுப் போனை வைத்தாள்.
ராதாவை ஒரு முறை சீண்டியதோடு சரி அவ்வப்போது அவள் நினைவு வந்து போகத்தான் செய்தது சந்தோஷிற்கு… கடைசியாக அவளின் இடையில் கைகொடுத்துத் தூக்கியது நினைவுக்கு வர…
அவள் மெல்லிய இடையில் சருமத்தைத் தொட்ட உணர்வு அவளை நினைத்ததும் இப்போதும் வந்து போக… அவனை அறியாமல் அவன் கைகளைப் பார்த்தவன். தன் கைகளை முகத்திற்கு நேராகக் கொண்டு சென்று முத்தமிடப் போனவன் அப்படியே உறைந்து போய் நின்றான். ‘ச்சே… நான் என்ன பண்ணிட்டு இருக்கேன். நான் ஏன் அவளைப் பார்த்தால் மட்டும் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறேன்?’ என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டவன் தன் தலையில் தானே தட்டிக்கொண்டு குளிக்கச் சென்றான்.
அன்று கல்லூரி விடுமுறை என்பதால் அவனை காலை நேரமே வரச் சொல்லி இருந்தார் சிவகாமி… அவன் அப்பா இன்று ஊருக்குப் போவதாலும் அவருடன் இன்றைய பொழுதைக் கழிக்கலாம் என்று… சங்கவியின் வீட்டிற்கு நேரமே வந்துவிட்டான்.
அவன் வந்ததும் வாசல் வரை சென்று சிவகாமி சந்தோஷின் கையைப் பிடித்து அழைத்து வந்தவர் நேராக டைனிங் டேபிளில் சென்று அமர வைத்தார்.
“அத்தை என்ன இது வந்ததும் வராததுமா சாப்பிடக் கூட்டிட்டு வந்துட்டீங்க… கொஞ்ச நேரம் பேசிட்டுப் பிறகு சாப்பிடலாமே,” என்றான் சந்தோஷ்.
“முதல்ல சாப்பிடு சந்தோஷ்… அப்பறோம் பேசிக்கலாம். வாரம் முழுக்க… கடையில தானே சாப்பிட்டு இருப்பே… இன்னிக்கு ஒரு நாள் ஆவது வீட்டுச் சாப்பாடு சாப்பிடு சரியா…” என்றவர் அவன் தட்டில் சாப்பிட உணவுகளை அடுக்கிக் கொண்டே சென்றார்.
“அத்தை… அத்தை… என்ன இது இவ்வளவு சாப்பிட வெச்சா… நான் ஒரே நாளில் நான்கு ஐந்து கிலோ ஏறிடுவேன் போல…” என்று அவரையும் தன் அருகில் அமர்த்தி அவன் அப்பாவையும் அழைத்து மூவரும் சேர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
சாப்பிட்டு முடித்ததும் ஹாலில் வந்து அமர்ந்தவன், “எங்கே அத்தை உன் பொண்ணைக் காணோம்?” என்றான். “அவளா… அவ வேலை விஷயமா வெளிநாடு போயிருக்கா ராஜா… வரதுக்கு எப்படியும் ஒரு மாசம் ஆகும்னு அவங்க அப்பா சொல்லிட்டு இருந்தாரு,” என்றார் சிவகாமி.
தன் மகள் எதற்குப் போயிருக்கிறாள் என்று இவருக்குத் தெரியும். தன் அண்ணனுக்கும் அண்ணன் மகனுக்கும் விஷயம் தெரிந்தால் தன் பெண்ணைப் பற்றிய அவர்களது அபிப்ராயம் மாறிவிடும் என்று மறைத்துவிட்டார்.
பிறகு சிவகாமி சந்தோஷிடம், “ராஜா… உங்க அப்பாகிட்டே சொல்லி அண்ணியையும் கூப்பிட்டுட்டு இங்கயே வரச் சொல்லுடா ராஜா… எனக்குன்னு உங்களை விட்டா யாரு இருக்கா… எல்லாரும் இங்கேயே இருந்தா எவ்வளவு நல்ல இருக்கும். நான் சொன்னா அண்ணா கேட்க மாட்டேன்குறாரு… நீயாவது சொல்லேன்,” என்றார் சிவகாமி.
“அத்தை அப்பாவும் அம்மாவும் நான் சொன்னால் எல்லாம் கேட்க மாட்டாங்க… அவங்களுக்கா எப்போ தோணுதோ அப்போ வரட்டும் அத்தை. நாம வற்புறுத்த வேணாம்,” என்றான்.
“உன்கிட்டே போய்ச் சொன்னேன் பாரு. நீயும் உங்க அப்பா மாதிரி தானே இருப்பே,” என்று சலித்துக் கொண்டவர். “சரி ராஜா நீயும் அண்ணாவும் பேசிட்டு இருங்க. நான் ரெண்டு தெரு தள்ளி கோவில் இருக்கு அங்கே போய்ட்டு வரேன்,” என்றார்.
“என்ன அத்தை கோவிலுக்கு எப்பவும் சாயங்காலம் தானே போவீங்க… இன்னிக்கு என்ன காலையிலேயே கிளம்புறீங்க..” என்றான்.
“அது எல்லாம் ஒண்ணும் இல்லை ராஜா… இன்னிக்கு போகணும்னு தோணிச்சு. அதான் கிளம்பிட்டேன்,” என்றார்.
முத்து சிவகாமியிடம், “இரு சிவகாமி நானும் வரேன். அப்படியே காலார நடந்து போய்ட்டு வரலாம்,” என்று சொல்ல… “என்ன ரெண்டு பேரும் நடந்து போறீங்களா…. இப்போ மணி எட்டு ஆகுது… நம்ம ஊரு மாதிரி இங்கே மரம், நிழல் என்று எதுவும் இருக்காது. வெயில் கொளுத்தி எடுக்கும். ரெண்டு பேருக்கும் வயசு கம்மின்னு நினைப்பு… அண்ணனும் தங்கச்சியும் அப்படியே பாசமலர் சிவாஜி, சாவித்ரின்னு நினைப்பு… கைகோர்த்துட்டு அப்படியே நடந்து போய்ட்டு வராங்களாம்,” என்று கிண்டல் செய்தவன்.
“அத்தை நீங்க போய் அந்த செக்கு மாடோட கார் சாவியை எடுத்துட்டு வாங்க… நான் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போறேன்,” என்று சொல்ல… சிவகாமி சிரித்துக் கொண்டே சென்று கார் சாவியை எடுத்து வந்து சந்தோஷ் கையில் கொடுக்க… மூவரும் கிளம்பி கோவிலுக்குச் சென்றனர்.
அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பிப் பத்து நிமிடத்தில் கோவிலுக்கு வந்துவிட்டனர். சிவகாமியையும், தன் அப்பா முத்துதுவையும் இறங்கி உள்ளே போகச் சொல்லிவிட்டு காரைப் பார்க் பண்ணிவிட்டு உள்ளே சென்றான் சந்தோஷ்.
உள்ளே அவன் வரவும் அவர்கள் இருவரும் யாருடனோ பேசிக்கொண்டு நின்று இருப்பதைப் பார்த்தவன். அவர்களுடன் மூன்று பெண்களும் ஒரு ஆணும் நின்று இருந்தனர். அந்த ஆணை எங்கோ பார்த்தது போல இருக்க… அவர்களைப் பார்த்துக் கொண்டே… அருகில் வர… இவனுக்கு முதுகு காட்டி நின்று சிவகாமியும், முத்துவும் பேசிக்கொண்டு இருக்க…
சந்தோஷ் அவர்கள் அருகில் வர… அவர்கள் முன் நின்று அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தால் ராதா… அவளை அங்கு எதிர்பார்க்கவே இல்லை சந்தோஷ்.
அவளைப் பார்த்துக் கொண்டே வந்து சிவகாமியின் அருகில் நின்றவனை.. “வா ராஜா… வந்துட்டியா…” என்றவர். விசாலாட்சி இவன் தான் என் அண்ணன் மகன் சந்தோஷ். இங்கே தான் பி.ஆர். காலேஜில் வேலை பார்க்கிறான் என்று சொல்ல…
உடனே அவனைப் பார்த்து அவர்கள் அருகில் நின்று இருந்த முத்து, “அட… என் பொண்ணும் அந்த காலேஜில் தான் படிக்கிறா… நீங்களும் அதே காலேஜில் தான் வேலை பார்க்கிறீர்களா?” என்று துரை கேட்க.
“ஆமா அங்கிள் உங்க பொண்ணோட டிபார்ட்மென்ட்ல தான் நான் ஹெட் ஆஃப் தி டிபார்ட்மென்ட் (HOD) ஆஹ் இருக்கேன்,” என்றவன் தான் எடுக்கும் சப்ஜெக்டைப் பற்றியும் சொல்ல ராதாவைப் பார்க்க…
அவள் அவனைப் பார்த்துவிட்டு அமைதியாக நின்று இருந்தால். “அப்படியா தம்பி… ரொம்பச் சந்தோசம். ஊர்ல படிக்க வெச்ச அப்போ அவங்க HOD கிட்ட தான் டியூஷன் அனுப்பினேன். ஆனா இங்க யாரைக் கேட்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். பரவாயில்லை நம்ம ஊரு பையன் நீங்க இருக்க அப்போ நான் உங்க கிட்டயே இவளை டியூஷன் அனுப்பி வைக்கவா… உங்களுக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையா?” என்றார் துரை.
அவர் அப்படிச் சொன்னதும், “அப்பா…. நான் என் ஃபிரெண்ட்ஸ் போற டியூஷனுக்கே போய்க்கிறேன்,” என்று ராதா சொல்ல… “எதுக்கு ஃபிரெண்ட்ஸ்ன்னு சொல்லி டியூஷன் போகாம அவங்க கூட ஊர் சுத்தப் போறதுக்கா… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ சும்மா இரு,” என்று சொல்லி அவளை அடக்கி வைத்துவிட்டு. சந்தோஷிடம் திரும்பி, “தம்பி நீங்க சொல்லுங்க… உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்க… அவன் திரும்பி ராதாவைப் பார்க்க… அவள் கோபத்துடன் முகத்தை உம்மேன்று வைத்துக் கொண்டு நின்று இருக்க…
சந்தோஷ் அவளைப் பார்க்கவும் அவனைப் பார்த்த ராதா ‘வேண்டாம்னு சொல்லு’ என்று அவனிடம் பார்வையாலேயே கெஞ்ச… அவளைப் பார்த்து வில்லன் போலப் புன்னகை செய்தவன், “எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை அங்கிள். நான் என் அத்தையோட வீட்ல தான் தங்கி இருக்கேன்,” என்று சொன்னவன். தான் இருக்கும் அட்ரஸைக் கொடுத்துவிட்டு, “தினமும் மாலை ஆறு மணிக்கு மேல கொண்டு வந்து விட்ருங்க அங்கிள். ஒன்பது மணி வரை டியூஷன் அங்கிள்,” என்றான்.
“சரிப்பா…. அப்போ இன்னைக்குச் சாயங்காலமே நான் இவளைக் கூட்டிட்டு வந்து விடுறேன்,” என்றார். “அப்பா…” என்று ராதா அழுவாத குறையாக அவரைப் பார்க்க… “நீ சும்மா இரு,” என்று ஒரே வார்த்தையில் அதட்டி விட்டார்.
விசாலாட்சியும், ஹேமாவும் ராதாவைப் பார்த்துச் சிரிக்க… செண்பகம் ராதாவை அருகில் அழைத்து, “உன்னோட நலத்துக்காக தானே உங்க அப்பா சொல்லறாரு. இதுக்கு ஏன் நீ முகத்தை இப்படி வெச்சிருக்கே… நமக்குத் தெரிஞ்ச பையன்… பார்க்க நல்ல தானே,” என்று சொல்லி அவளைச் சமாதானம் செய்ய…
‘ஆமாமா நமக்குத் தெரிஞ்சவன் தான். ஆனா…. நல்லவன் இல்லை… சரியான பொறுக்கி இவன்… இவன் நேத்து என்னை இடுப்பைப் பிடிச்சுத் தூக்கினதை மட்டும் நீங்க பார்த்திருக்கணும்…. அப்பறோம் நீங்களே இவனைப் பொறுக்கின்னு சொல்லுவீங்க….’ என்று தனக்குள்ளேயே முணுமுணுக்க… அவள் உதட்டு அசைவைப் படித்தவன்.
‘அடிப்பாவி பார்த்த நாலு நாளில் நாற்பது பட்டப் பெயர் வெச்சிருவா போலயே எனக்கு’ என்று நினைத்தவன், ‘வா… இன்னைக்கு டியூஷன் வருவே இல்ல. அப்போ இருக்கு உனக்கு,’ என்று நினைத்தவன் அமைதியாக இருக்க…
அனைவரும் பேசிவிட்டுக் கிளம்ப… சந்தோஷ், சிவகாமி, முத்து மூவரும் கோவிலுக்குள் சென்றனர்.
நிலாணியையும் விக்கியையும் விட்டுவிட்டு துர்காவும், கதிரும் சென்றுவிட… தூங்கிக் கொண்டு இருந்தவளின் அருகில் சேரைப் போட்டு அமர்ந்தவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அப்படியே தூங்கிப் போனான்.
இருவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்க… நிலானிக்கு ட்ரிப்ஸ் மாற்ற வந்த நர்ஸ் கைகள் கோர்த்த படி தூங்கும் இருவரையும் பார்த்தவர் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் வந்து ட்ரிப்ஸை மாற்றிவிட்டு அவர்கள் இருவரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்துச் சிரித்தவர் வெளியே செல்லப் போக…
அப்போது சரியாக அவர்கள் அறைக் கதவைத் திறந்து கொண்டு நிலானியின் அக்கா மது அவளைப் பார்ப்பதற்காக அழுது கொண்டே கதவைத் திறக்க…
அவளைப் பார்த்த நர்ஸ்… ‘ஷ்…’ என்று சொன்னவர், “பேஷன்ட் அவங்க ஹஸ்பண்டும் நல்லாத் தூங்குறாங்க. நீங்க அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க,” என்று சொல்ல…
“என்ன நர்ஸ் சொல்றீங்க? இது… இது… பேஷன்ட் நிலானி தானே இங்கே இருக்காங்க?” என்று கேட்டார். “ஆமா மேடம். அவங்க ரெண்டு பேருக்கும் நேத்து நைட் தான் கல்யாணம் ஆச்சு…” என்று சொன்னவர்.
நேற்று இரவு நடந்ததை எல்லாம் அந்த நர்ஸ் மதுவிடம் சொல்லிவிட்டு நர்ஸ் வெளியே சென்று விட… நிலானியின் அருகில் வந்த மது… தலையில் கட்டுடன் கை கால்களிலும் கட்டுப் போட்டுக்கொண்டு உறங்கிக் கொண்டு இருந்த நிலானியைப் பார்த்தவர் தன்னால் தன் தங்கைக்கு உதவ முடியாமல் போனதை எண்ணி அழுதார்.
மது அழுத சத்தம் கேட்டு கண் விழித்த நிலானி… தன் எதிரில் அழுது கொண்டு நின்று இருந்த மதுவைப் பார்த்ததும்… “அக்கா…” என்று சத்தமிட்டுக் கொண்டு அழ… இவர்கள் இருவரின் அழுகை சத்தம் கேட்டு கண் விழித்த விக்கி அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்க்க…
அவனுக்குப் புரிந்து போனது நிலானியைப் போலவே இருக்கும் இந்தப் பெண் தான் அவளின் அக்காவாக இருக்க முடியும் என்று. இருவரும் கட்டிக் கொண்டு அழுது கொண்டு இருக்க அவர்களாகவே சமாதானம் ஆகட்டும் என்று அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்தில் இருவரும் சமாதானம் ஆகிவிட… நிலானியிடம் இருந்து பிரிந்த மது… அவள் கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்ததும் அதிர்ந்தவராய் அதை கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டு இருக்க…
“விக்கி…. இது….” என்று தன்னிலை விளக்கம் அளிக்க வர. அவனைப் பார்த்த மது… “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்… எனக்கு இங்க இருந்த நர்ஸ் எல்லாமே சொல்லிட்டாங்க… என் தங்கச்சியை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்குச் சந்தோசம் தான். என் ஊதாரி புருஷன் கிட்டே இருந்து என் தங்கச்சியை நீங்க தான் காப்பாத்தி இருக்கீங்க,” என்றால்.
மது அப்படிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது, “யாரைப் பார்த்துடி… ஊதாரியின்னு சொன்னே…” என்று சொல்லிக்கொண்டே நிலானி இருந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு மதுவின் கணவன் உள்ளே வந்தான்.
