Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 189

உன் ரகசிய ரசிகை நான் 189

by Layas Tamil Novel
170 views

Episode 189

முதலிரவு அறைக்குள் ரூபேஷ் காத்திருக்க… ஷிவுவைத் தயார் செய்து வலுக்கட்டாயமாக அந்த அறைக்குள் அனுப்பி வைத்தார் கனகா.

கதவைத் திறந்து கொண்டு ஷிவு உள்ளே வந்தவள், அங்கே கட்டிலில் அமர்ந்திருந்த ரூபேஷைப் பார்க்க… அவனும் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தவன், ஷிவு கையில் பால் சொம்புடன் தன் அறைக்குள் வந்து நின்றிருப்பதைப் பார்த்ததும் எழுந்தான்.

எழுந்து வந்து ஷிவுவின் கையில் இருந்த பால் சொம்பை வாங்கிக்கொண்டு போய் மேஜையில் (டேபிளில்) வைத்துவிட்டு வந்தவன், ஷிவு அருகில் வந்து நிற்க… அவள் ரூபேஷின் மேல் கோபமாக இருந்ததால் அவன் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. கதவைத் திறந்து வந்த இடத்தில் அப்படியே ஷிவு நின்று இருக்க…

“ஷிவு, ஏன் இங்கே நிற்குறே? வா,” என்று அவள் கையைப் பிடித்து அழைக்க… அவன் கையை உதறிவிட்டு, நேராகப் படுக்கைக்கு (பெட்டிற்கு) வந்த ஷிவு, அங்கிருந்த தலையணையும் போர்வையையும் (பெட்ஷீட்டையும்) எடுத்துக்கொண்டு போய்ச் சோபாவில் படுத்துக்கொண்டாள்.

அவள் தன்னிடம் எதுவுமே பேசாமல், ஏன் திட்டக் கூடச் செய்யாமல் சென்று படுத்துக் கொண்டதைப் பார்த்து ரூபேஷிற்குக் கஷ்டமாக இருந்தது. ஷிவுவின் நிலையும் அவனுக்குப் புரியத்தான் செய்தது. இருந்தும், திட்டுவதற்காவது தன்னிடம் எதுவும் பேசமாட்டாளா என்று ஏங்கினான் ரூபேஷ்.

ஷிவுவின் அருகில் போய்ப் நின்று கொண்டு, “ஷிவு..” என்று அழைத்தான். அவள் எதுவும் பேசாமல், அவன் அழைத்ததற்குப் பதில் சொல்லாமல் படுத்து இருக்கவே.. மீண்டும் அவள் பெயரைச் சொல்லி ரூபேஷ் அழைக்க… அதில் கடுப்பான ஷிவு, “இப்போ எதுக்கு என் பேரை ஏலம் விட்டுட்டு இருக்கே?” என்றாள் கோபமாக.

“உன்கிட்ட பேசலாம்னு தான் கூப்பிட்டேன்,” என்றான் ரூபேஷ்.

“என்ன பேசணும்?” என்றால் எங்கோ பார்த்துக் கொண்டு.

“அது வந்து நான்… நான்…” என்று ரூபேஷ் ஏதோ சொல்ல வர… அவன் பேசுவதைக் கேட்கப் பொறுமை இல்லாத ஷிவு, “உனக்கு என்ன திக்குவாயா? நீ நல்லாத்தானே பேசுவ. அப்பறம் என்ன? ஒழுங்கா சொல்ல வந்ததை சொல்லிட்டு இங்க இருந்து கிளம்பு,” என்றாள்.

“ஏன் ஷிவு என்மேல் இவ்வளவு கோபமா இருக்கே? நான் செய்தது தப்பு தான். உன்னை நான் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன். என்னை மன்னிச்சிரு ஷிவு,” என்றான் ரூபேஷ்.

“நான் யார் உன்னை மன்னிக்க? அதுதான் நான் உன்னால் கர்ப்பமா இருக்கேன்னு உன்கிட்ட சொன்னதும், ‘எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தடமும் இல்லை’ன்னு சொல்லி என்னை துரத்தி விட்டுட்டியே. இப்போ எதுக்கு என்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்டு உங்க நேரத்தை வீணடிச்சிட்டு இருக்கீங்க?” என்றாள் ஷிவு.

அவள் பேசியதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான் ரூபேஷ்.

“நீ என்னை என்ன வேணும்னாலும் திட்டு ஷிவு. ஆனா, இப்படி என்கிட்ட முகம் கொடுத்து எதுவும் பேசாம மட்டும் இருக்காதே. என்னால உன் முகத்தைப் பார்க்காமல், பேசாமல் இருக்க முடியலை,” என்றான் ரூபேஷ்.

“அது எப்படி ரூபேஷ்? பண்ற தப்பு எல்லாம் பண்ணிட்டு, உடனே உன்னால இப்படி நல்லவனா மாற முடியுது? உன்னால நிமிஷத்துக்கு நிமிஷம் உன்னோட முகத்தை மாத்திக்க முடியும். என்னால் அப்படி எல்லாம் இருக்க முடியாது.”

“என்ன சொன்ன… என்ன சொன்ன… என் முகத்தைப் பார்க்காமல், என் கூடப் பேசாமல் உன்னால இருக்க முடியலையா?” என்று சொல்லி கேட்டுச் சத்தமாக வாய்விட்டுச் சிரித்தாள் ஷிவு.

ஷிவு தான் சொன்னதை நம்பாமல் தன்னைக் கிண்டல் செய்வதைப் பார்க்க ரூபேஷிற்குச் சற்று சங்கடமாகத்தான் இருந்தது. அவள் பேசுவதிலும் தவறில்லையே. அவள் கழுத்தில் தாலி கட்டிய பிறகும் கூட அவளைப் பழிவாங்கத் தானே நான் எண்ணியிருந்தேன். அவள் கழுத்தில் தாலி கட்டும் போது கூட அவளை வார்த்தைகளால் காயப்படுத்தித் தானே இருந்தேன். அத்தனையையும் செய்துவிட்டு முதலிரவு அன்று இப்படிப் பேசினால் எந்தப் பெண் தான் தன்னை நம்புவாள் என்று யோசித்தான் ரூபேஷ்.

“ஷிவு, உன்னுடைய வலி எனக்குப் புரியுது. அந்த வலிக்குக் காரணமானவன் நான் தான் எனக்கு நல்லாவே தெரியுது. அந்த வலி அவ்வளவு சீக்கிரத்தில் போகாதுன்னு எனக்குத் தெரியும் ஷிவு. என்னால் ஏற்பட்ட அந்த வலியைச் சரி செய்ய, அந்த வலிக்கு மருந்து போட என்னால் மட்டும் தான் முடியும். வேற யாராலும் அதைச் சரி செய்ய முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ என்கிட்ட எவ்வளவு வெறுப்பாக நடந்துகிட்டாலும், என்னை எவ்வளவு வெறுத்து ஒதுக்கினாலும், நான் உன்னை விட்டு எந்தச் சூழ்நிலையிலும் போக மாட்டேன்,” என்றான் ரூபேஷ்.

அவன் சொல்வதெல்லாம் கேட்டு ஆத்திரமடைந்த ஷிவு, “போதும் நிறுத்து ரூபேஷ். நீ என்ன சொன்னாலும் நான் அதை நம்புவேன்னு நினைச்சிட்டியா? போதும், நான் ஒரு தடவை உன்னை நம்பி ஏமாந்தது. மறுபடியும் உன்னை நம்புவதற்கு நான் தயாராக இல்லை. காலையில் என் கழுத்துல தாலி கட்டும் போது என்ன சொன்ன? இனி தினம் தினம் நான் கொடுமை அனுபவிக்கப் போறேன்னு தானே சொன்ன…. ஆனா, நல்லா யோசிச்சுக்கோ, நீதான் என் கழுத்துல தாலி கட்ட நினைச்சுப் பின்னால வருத்தப்படப் போற. தினம் தினம் நான் உன்னைப் படுத்துற பாட்டுல, ‘என்ன வேண்டாம்’ என்று நீயே எங்கேயாவது ஓடப் போறியா இல்லையா பாரு,” என்றாள் ஷிவு கடுப்பில்.

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகாமல் சிரித்தான் ரூபேஷ்.

“நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன். நான் சொல்றதெல்லாம் கேட்டா உனக்குச் சிரிப்பு வருதாடா ராஸ்கல்?” என்றால் ஆவேசமாக (காண்டாக).

“நீ என்னை அடிச்சுத் துவைச்சாலும் சரி, என்னை விட்டுவிட்டுத் துரத்திவிட்டாலும் சரி, நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். திரும்பத் திரும்ப நான் உன் பின்னாலதான் சுத்திட்டு வரப் போறேன். நீயே நான் உன் பின்னாடியே சுத்துறதைப் பார்த்துட்டு, மனசு இறங்கி என்கிட்ட பழையபடி பேசுவ. அந்த நாளுக்காக நான் காத்துட்டு இருக்கேன் ஷிவு,” என்றான் ரூபேஷ்.

“அது கனவிலும் நடக்காதுடா… நீ என்னதான் எங்கிட்ட அழுது கெஞ்சினாலும் என் மனசு இறங்கி வராது. ஏன்னா, நீ என்னை அந்த அளவுக்குக் காயப்படுத்திட்ட… கல்யாணத்துக்கு முன்னாடியே நான் கர்ப்பமான விஷயம் எனக்குத் தெரிய வந்தப்போ, மனசுல துளி கூட வருத்தமோ, குற்ற உணர்வோ எதுவுமே இல்லை. நான் கர்ப்பமா இருக்கிற விஷயத்தை முதன்முதலில் உன்கிட்ட சொல்லணும்னு அவ்வளவு ஆசையா உன்னைத் தேடி வந்தேன். ‘நீ அப்பாவாகப் போற ரூபேஷ்’ என்று நான் உன்கிட்ட எவ்வளவு சந்தோஷமா வந்து சொன்னேன். ஆனா நீ என்ன செய்த?” என்றாள் ஷிவு.

அவள் சொன்னதை நினைத்துப் பார்த்தான் ரூபேஷ்.

தன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று ஷிவு தொலைபேசி (போன்) செய்து, அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு ரூபேஷை வரச் சொல்லி இருந்தாள்.

அவளுக்காக ஏற்கனவே வந்து ஷிவு காத்திருக்க… தாமதமாகத்தான் அங்கு வந்தான் ரூபேஷ். அவளிடம் வந்தவன், “ஹாய்” என்று சொல்லிவிட்டு, மேஜையில் அவளுக்கு எதிராக அமர்ந்த ரூபேஷ், “ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு என்ன வரச் சொன்னியே. என்ன விஷயம்?” என்றான்.

“ஒன்னும் இல்ல ரூபேஷ். நான் உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொல்லணும்னு தான் உன்னை இங்கே வரச் சொன்னேன்,” என்றாள்.

“அப்படியா? என்ன சந்தோஷமான விஷயம்? உன் மாமா கம்பெனியில் வேலைக்குச் சேரச் சொல்லிட்டாங்களா உன்னை?” என்றான்.

“அது இல்ல ரூபேஷ். என் மாமா தான் ஒரு மாசம் கழிச்சு என்னை அவர் கம்பெனிக்கு வரச் சொல்லிட்டாரே. அது நான் உன்கிட்டே ஏற்கனவே சொல்லித்தானே இருந்தேன்,” என்றால் ஷிவு.

“அப்போ வேற என்ன சந்தோஷமான விஷயம்?” என்று கேட்டான்.

“இந்தா முதல்ல இந்த இனிப்பை (ஸ்வீட்) எடுத்துக்கோ,” என்று சொல்லித் தன் கையில் இருந்த இனிப்புப் பெட்டியை ஆசையாக ரூபேஷின் முன்பு நீட்டினாள் ஷிவு.

“ஹேய்… என்ன இனிப்புப் பெட்டி எல்லாம் கொடுக்கிற… என்ன விசேஷம்? சீக்கிரமா சொல்லு. அது என்னன்னு கேட்க எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு,” என்றான்.

இனிப்புப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து இனிப்பை எடுத்து ரூபேஷிற்கு ஊட்டி விட்டவள், “ரூபேஷ், நீ அப்பாவாகப் போற,” என்றாள் சிரித்த முகமாக.

அவ்வளவு நேரம் அவளுடன் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிய ரூபேஷின் முகம், அவள் சொன்ன செய்தியைக் கேட்டதும் அப்படியே கறுத்து விட்டது. அவள் ஊட்டிவிட்டு இனிப்பை கீழே குனிந்து துப்பி விட்டு, “என்ன உளறல் (நான்சென்ஸ்)? என்ன சொல்ற ஷிவு?” என்றான் அதிர்ச்சியாக.

அவனிடம் தான் தாயான விஷயத்தை முதன்முதலாகச் சொல்ல வேண்டும் என்று சந்தோஷமாக அவனைத் தேடி வந்த ஷிவு. ஷிவு ரூபேஷிடம் விஷயத்தைச் சொன்னதும் அவளிடம் நடந்துகொண்டதைப் பார்த்ததும், ஷிவுவிற்கு இருந்த மொத்த சந்தோஷமும் வடிந்துவிட்டது.

“ரூபேஷ், ஏன் இப்படி நடந்துகிற? நான் சந்தோஷமான விஷயத்தைத் தானே சொன்னேன். நீ அப்பாவாகப் போற ரூபேஷ்,” என்றால் மீண்டும்.

அவள் மறுபடியும் தான் அப்பாவாகப் போகிறேன் என்று சொன்னதும் தன் காதைப் பொத்திக்கொண்ட ரூபேஷ், “தயவு செய்து மறுபடியும் அந்த வார்த்தையைச் சொல்லாத. கேட்கவே எனக்கு எரிச்சலா இருக்கு,” என்றான்.

அவன் சொன்ன வார்த்தையைக் கேட்டுத் தான் ஷிவுவின் இதயம் சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறியது போல இருந்தது.

அவன் கையைப் பிடித்துக் கொண்டு, “ரூபேஷ் …. ஏன் இப்படிப் பேசுற… கல்யாணத்துக்கு முன்னாடியே நான் கர்ப்பமான விஷயத்தைக் கேட்டா கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். நான் இல்லைன்னு சொல்லல. அதுக்காக இப்படி வார்த்தைகளால என்னைக் காயப்படுத்தாத ரூபேஷ். எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. இந்த விஷயத்தை முதன்முதலில் உன்கிட்ட தான் சொல்லணும்னு நான் எவ்வளவு சந்தோசமா உன்னைப் பார்க்க வந்தேன்னு தெரியுமா ரூபேஷ்?” என்றாள் ஷிவு.

தன் கையைப் பிடித்திருந்த ஷிவுவின் கையை உதறிய ரூபேஷ், தான் அமர்ந்திருந்த நாற்காலியை (சேரை) பின்னால் தள்ளிவிட்டு எழுந்தவன், “நீ கர்ப்பமா இருக்குற விஷயம் உனக்கு வேணா சந்தோசமா இருக்கலாம் ஷிவு, ஆனா எனக்குக் கிடையாது. வா, இப்பவே போய் உன் வயித்துல வளர அந்தக் குழந்தையைக் கலைச்சிடலாம்,” என்று சொல்லி ஷிவுவின் கையைப் பிடித்து அழைத்துச் செல்லப் போனவனை.

அவன் பிடித்திருந்த தன் கையை உதறிய ஷிவு, படார் என்று கன்னத்தில் அறைந்தாள்.

“சீ… நீ எல்லாம் ஒரு மனுஷனா? உன்னையும் ஒரு மனுஷனா நினைச்சு, உன்னால உருவான இந்தக் குழந்தையைப் பற்றிய விஷயத்தை முதன்முதலில் உனக்குத் தான் சொல்லணும்னு வந்தேன் பாரு. என்னைச் சொல்லணும், உன் புத்தி இவ்வளவுதானா ரூபேஷ்? என் வயித்துல வளர இந்த உன்னோட குழந்தை ரூபேஷ். அதை எப்படி நீ அழிச்சிடச் சொல்லி இவ்வளவு சாதாரணமா சொல்ற? உண்மையாவே உன் மனசுல ஏதோ ஒரு மூலையில் கூட, ‘இது உன் குழந்தை’ங்கற எண்ணம் தோணலையா? உனக்குக் கொஞ்சமும் சந்தோஷம் இல்லையா? உன் மனசுல அந்தப் ‘பாசம்’ அப்படிங்குற வார்த்தைக்கு இடம் இல்லையா?” என்று கேட்டாள்.

“நீ தேவையில்லாத பேசிட்டு இருக்க ஷிவு. உனக்கும் எனக்கும் நடந்தது ஒரு விபத்து (ஆக்சிடென்ட்). நம்ம ரெண்டு பேரும் வேணும்னே ஒருத்தர் பிடிச்சுக்கிட்டு அந்த விஷயத்தைச் செய்யல. அப்படி இருக்கும்போது நம்ம ரெண்டு பேரும் சுயநினைவே இல்லாத போது செய்த காரியத்திற்காக, உன் வயித்துல உருவாகி இருக்கிற இந்தக் குழந்தையை எப்படி நான் ஏத்துக்க முடியும்?” என்று கேட்டான் ரூபேஷ்.

“ரூபேஷ், நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தது வேணா நமக்கு நினைவு இல்லாம இருந்திருக்கலாம். ஆனால், நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் மனசார விரும்புகிறோம் ரூபேஷ். நீ என்ன மனசாரக் காதலிக்கிறேன்னு என் பின்னாடி எவ்வளவு ஊர் சுத்தி இருக்க. அப்போ அந்தக் காதலுக்கான அர்த்தம் தானே ரூபேஷ் என் வயித்துல வளர நம்ம குழந்தை? இது ஏன் உனக்குப் புரிய மாட்டேங்குது? நீ ஏன் திடீர்னு இப்படி வேற மாதிரி பேசுற? எனக்கு இங்க நடக்கிறது எதுவும் புரியவில்லை. இங்கே நடக்கிறது எல்லாம் கனவோன்னு தோணுது. அப்படி இல்லை தானே ரூபேஷ்? தயவு செய்து நான் சொல்றத புரிஞ்சுக்க. நம்ம வயித்துல இருக்குற குழந்தையை கொஞ்சம் யோசிச்சுப் பாரு ரூபேஷ்,” என்று அவன் கையைப் பிடித்துத் தான் எங்கே இருக்கிறோம் என்பதைப் பற்றி கூட யோசிக்காமல் அவனிடம் கெஞ்சினாள் ஷிவு.

தன்னைப் பிடித்திருந்த அவள் கையை உதறிய ரூபேஷ், “தயவு செய்து என்னை விட்டுடு ஷிவு. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் அப்படி நினைத்து உன் கூடப் பழகல. இனிமேல் என்னை பார்க்க வராத. என்கிட்ட பேசாத. நம்ம இந்த கதை இத்தோட முடிஞ்சது,” என்று சொல்லிவிட்டு அவளைத் திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டான் ரூபேஷ்.

தான் ஷிவுவிடம் இவ்வளவு மோசமாக நடந்துகொண்டோமே என்று யோசித்தபடி வலி நிறைந்த கண்களோடு ஷிவுவைப் பார்க்க…. அதே வலி நிறைந்த கண்களோடும், கண்களில் கண்ணீரோடும் ரூபேஷைப் பார்த்து நின்றுகொண்டிருந்தாள் ஷிவு.

தான் பேசிய வார்த்தைகளால் ஷிவுவின் மனம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும் என்பதை நினைத்தவனின் மனம் வெடித்துச் சிதறியது போல இருந்தது. அவள் முன்பு தன் இரண்டு கைகளையும் கூப்பி, “நான் செய்தது எவ்வளவு பெரிய பாவம்னு எனக்கு இப்போதான் உறைக்குது ஷிவு. இந்தப் பாவத்துக்கு நான் எப்படிப் பிராயச்சித்தம் தேடப் போறேன்னு எனக்குத் தெரியல. என்னை மன்னிச்சிடு,” என்று சொல்லிக் கொண்டே அழுதவன், அவன் முன்பு உடைந்து போய் நின்றிருந்த ஷிவுவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான் ரூபேஷ்.

இப்படித் திடீரென்று ரூபேஷ் தன் காலில் விழுவான் என்று ஷிவு சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனைத் தூக்கி விடத் துடித்த தன் கைகளைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு ஷிவு, “நீ என்ன செய்து என்கிட்ட மன்னிப்புக் கேட்டாலும், உன்னை மன்னிக்கிற மனநிலை என்கிட்ட இல்ல. நான் இந்த வாழ்க்கையே என் வயிற்றில் இருக்க என்னோட குழந்தைக்காக மட்டும்தான் ஏத்துக்கிட்டு இருக்கேன். வெறுமனே நீ அந்தக் குழந்தையோட இனிஷியலாக மட்டும் இருக்கத்தான் போற. வேற எதுவும் கிடையாது,” என்று சொன்னவள். அவனைத் திரும்பியும் பார்க்காமல் சென்று சோபாவில் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.

நீண்ட நேரம் தரையில் அவள் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டபடியே அழுது கொண்டிருந்த ரூபேஷ். ஷிவு துளியும் இறங்கி வராததை நினைத்து மனம் வருந்தினான். அவளைத் தன்னால் மாற்றிவிட முடியும், தன்னுடைய மாற்றத்தை அவளுக்கு நான் உணர்த்துவேன் என்று முடிவு செய்த ரூபேஷ், எழுந்து வந்து ஷிவுவைப் பார்க்க…

அவள் கர்ப்பமாக இருந்ததினாலும், காலையிலிருந்து அலைச்சலினாலும் படுத்து உறங்கி விட்டிருந்தாள். அவள் கண்களின் ஓரம் கண்ணீர்த் துளிகள் இன்னும் ஈரமாக இருந்தது. அவள் நன்றாக உறங்கி விட்டாளா என்பதை உறுதி செய்துகொண்டவன், அவளை பூவை விட மென்மையாகத் தன் இரு கைகளிலும் ஏந்தியவன், அவளைத் தூக்கிக்கொண்டு போய் மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, அவள் அருகில் படுத்துக்கொண்டு அவள் முகத்தைப் பார்த்தவரே அவனும் உறங்கிப் போனான்.

இங்கே மாதவியும், போதியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட சங்கவிக்கு ஆத்திரம் தாங்க முடியாமல், வீட்டில் இருக்கும் மாதவியிடம் இதைப் பற்றி நேரடியாகக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று வீட்டிற்குக் கிளம்பினாள்.

வேகமாக வந்து காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சங்கவி நுழைய… கூடத்தில் (ஹாலில்) அமர்ந்திருந்த வேதாச்சலம் சங்கவி வருவதைப் பார்த்தவர், “என்ன சங்கவி? அலுவலகத்திற்குப் (ஆபிசுக்கு) போகாம இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்கே? எதுவும் கோப்பையை (ஃபைலை) மறந்து விட்டாயா?” என்று கேட்டார்.

அவர் பேசியதைக் காதில் வாங்காமல், அவரைக் கடந்து சங்கவி மாதவியைத் தேடிக்கொண்டு சமையலறைக்குச் (கிச்சனுக்கு) செல்ல…

கல்லூரியில் இருந்து அப்போதுதான் வந்திருந்த மாதவி, வேதாச்சலம் தேநீர்க் (காபி) கேட்டார் என்று சமையலறையில் தேநீர் போட்டுக்கொண்டே, தொலைபேசியில் (போனில்) போதியுடன் பேசிக்கொண்டு இருக்க…

கோபமாகச் சமையலறைக்குள் வந்த சங்கவி, மாதவி தன் தோளுக்கும் உன் முகத்திற்கும் இடையில் போனை வைத்துத் தலை சாய்த்தபடி போனைப் பிடித்துக்கொண்டு, தேநீர் போட்டு அதை ஆற்றிக்கொண்டு யாருடனோ போன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு ஆத்திரமாக வந்தது.

வேகமாக மாதவியின் அருகில் வந்த சங்கவி, அவள் கழுத்தில் வைத்திருந்த போனை வெடுக்கென்று பிடுங்கி அதன் திரையைப் பார்க்க, அதில் “மை லவ்…” என்று வந்திருந்தது.

அந்தப் போனை காதில் வைத்த சங்கவி, அந்தப் பக்கம் போதியின் குரல் கேட்கவும், எரிமலையாகக் கொதிப்பது போல மாதவியைப் பார்த்தவள், அவள் போனைத் தூக்கிப் போட்டுத் தரையில் உடைத்தாள்.

கூடத்தில் அமர்ந்து கோப்புகளைப் புரட்டிக்கொண்டிருந்த வேதாச்சலத்திற்கு, சமையலறையில் ஏதோ உடையும் சத்தம் கேட்டதும், கோப்பையை வைத்துவிட்டு வேகமாக எழுந்து சமையலறைக்கு வர…

கையில் சூடான தேநீரைக் (காபியை) வைத்துக்கொண்டு, சங்கவியைப் பயந்தபடி சமையலறையின் ஓரமாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மாதவி.

மாதவி பயந்து போய்ச் சங்கவியைப் பார்த்துக் கொண்டிருக்க….. அவள் ஏன் அப்படி நிற்கிறாள் என்பது புரியாமல், வேதாச்சலம் கோபமாக நின்று இருந்த சங்கவியைப் பார்த்தவர், “என்னாச்சு சங்கவி?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர….

கீழே மாதவியின் மொபைல் சுக்கலாக உடைந்து கிடப்பதையும், மாதவி பயத்தில் நின்று இருப்பதையும், சங்கவி கோபமாக அவளை முறைத்துக்கொண்டு இருப்பதையும் பார்த்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

பயத்தில் நின்று இருந்த மாதவியைப் பார்த்தவர், அவளிடம் சென்று, “மாதவி, எப்படி போன் கீழே விழுந்து உடைந்தது? உனக்கு எதுவும் காயம் ஆகிடுச்சா?” என்று அக்கறையாக வேதாச்சலம் மாதவிக்கு எங்கும் காயம் ஆகி இருக்கிறதா என்று கீழிருந்து மேலாக அவளைப் பார்த்தார்.

அவள் அருகில் நின்றிருந்த வேதாச்சலத்தின் கையைப் பிடித்து இழுத்துத் தன்னருகில் நிற்க வைத்துக் கொண்ட சங்கவி, “அப்பா, நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க,” என்றவள், அவரைக் கடந்து மாதவி அருகில் சென்று அவள் கழுத்தைப் பிடித்துச் சுவரோடு சேர்த்து நிற்க வைத்தவள்.

“ஏய்! நான் வாங்கிக் கொடுத்த போன்ல, எனக்கே தெரியாம, என் வீட்டில் இருந்துட்டு எவ்வளவு தைரியமா எனக்கு ஆகாதவன் கூட பேசிக்கிட்டு இருப்ப?” என்றால் சங்கவி.

சங்கவி அவள் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்க…. “அக்கா… அ…. அது வந்து….” என்று வார்த்தைகளைத் திக்கித் திணறிச் சங்கவியை அழைக்க.

“அக்கா…. அக்கா…. இனிமேல் என்னை ஒரு வார்த்தை கூப்பிட்ட, அவ்வளவுதான்! உன்னை இங்கேயே கழுத்தை திருகிக் கொன்று போட்டு விடுவேன்,” என்று அவள் கழுத்தில் மேலும் அழுத்தம் கூட்ட ….

சூடாகத் தன் கையில் வைத்திருந்த தேநீர்க் கோப்பையைக் (காபி கப்பை) கீழே போட்ட மாதவி, சங்கவியின் கையைப் பிடித்துத் தன் கழுத்தில் இருந்து விளக்க முயற்சி செய்து, “அக்கா… ரொம்ப வலிக்குது விடுங்க,” என்று கெஞ்ச….

மாதவி சங்கவியிடம் கெஞ்சியும், அப்போதும் சங்கவி மாதவியின் கழுத்தில் இருந்து கையை எடுப்பதாகத் தெரியவில்லை. அவள் கழுத்தைப் பிடித்து மேலும் சங்கவி நெரிக்க, மாதவியின் முகமெல்லாம் வெளிறிப் போய், கண்கள் சிவந்து கண்களில் கண்ணீர் வழிந்து, மாதவியின் கழுத்தைப் பிடித்திருந்த சங்கவியின் கைகளை நனைத்தது.

அவள் கண்ணீர் சங்கவியின் கையை நனைத்தும் கூட, மாதவியின் கழுத்தில் இருந்த கையை எடுக்காமல் சங்கவி மூர்க்கத்தனமாக, மிகவும் கோபமாக மாதவியின் முகத்தை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

இது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வேதாச்சலம் எதுவும் புரியாமல், வேகமாக அவர்களின் இருவருக்கும் நடுவில் வந்து நின்றவர். மாதவியின் கழுத்தில் இருந்த சங்கவியின் கையை கஷ்டப்பட்டு விடுவித்தவர்.

அவளை மாதவியிடம் இருந்து தள்ளி கொண்டு போய் நிற்க வைத்து, “சங்கவி, என்ன ஆச்சு உனக்கு? நீ ஏன்? இப்படி மாதவிகிட்ட நடந்துக்கிற?” என்று கோபமாகக் கேட்டார் வேதாச்சலம்.

“என்னப்பா நீ? நான் சொல்றதைக் கேட்காம அவளுக்கு ஆதரவு (சப்போர்ட்) பண்ற….” என்றால் அவரைப் பார்த்து.

“அது அது வந்து மா…” என்று அவர் பேசத் தயங்க…

“என்னப்பா, உன் பொண்னை கஷ்டப்படுத்தியதும் உனக்கு வலிக்குதா?” என்று மாதவியைத் தன் சிவப்பேறிய கண்களால் காட்டி கேட்டாள் சங்கவி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured