EPI 267
துர்காவை சமாதானப்படுத்தி விட்டு சங்கவியை காண அவள் அறைக்குச் சென்ற செண்பகத்தை, கோபமாகத் தன் அருகில் இருந்து வெளியே தள்ளி கதவடைத்துக் கொண்டாள் சங்கவி.
எவ்வளவோ செண்பகம் சங்கவியைச் சமாதானம் செய்யப் பேசினாலும், அவள் அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை.
சோகமாக அவள் அறையை விட்டு நடந்து சென்ற செண்பகம், வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றார்.
வெளியே வந்தவருக்கு என்ன செய்வது, எங்கு செல்வது என ஒன்றும் புரியவில்லை. ‘காணாமல் போன எனது மகள் திரும்பி கிடைத்துவிட்டதே’ என நினைத்துச் சந்தோஷப்படுவதா? அல்லது ‘தன் மகளே தன் குடும்பத்திற்கு எதிரியாக வளர்வதை நினைத்து வருத்தப்படுவதா?’ என மிகவும் மன வருத்தத்தில் இருந்தார் செண்பகம்.
கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவர் படிகளிலேயே அப்படியே வாசலில் அமர்ந்துவிட்டார்.
அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட, கிச்சனை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்த துர்கா, வாசற் கதவு திறந்திருப்பதைப் பார்த்துவிட்டு, ‘இப்போது தானே கதவை சாத்திட்டு வந்தேன். அதுக்குள்ள யாரு மறுபடியும் கதவைத் திறந்தது? அதுவும் இந்த நேரத்துல’ என்று ஹாலில் இருந்த வாசல் மணியைப் பார்க்க, மணி 11 கடந்திருந்தது. ‘ஒருவேளை ஆதி வந்தாச்சு’ என நினைத்தவள் சிரித்த முகமாக வெளியே செல்ல…
அங்கே செண்பகம் சோகமாக வாசலில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், ஓடிச் சென்று துர்காவும் செண்பகத்தின் அருகில் அமர்ந்து கொண்டு அவர் கையைப் பிடித்துக் கொண்டவள், “என்னம்மா, சங்கவிக்கு இன்னும் கோபம் குறையலையா? உங்க கூட சரியா பேசலையா?” என்றாள்.
“இல்ல துர்கா. அவ நான் சொல்றதைக் காது கொடுத்துக் கேட்கிற நிலைமையிலேயே இல்ல. ரொம்ப கோபமா இருக்கா. நான் என்ன சொன்னாலும் அதை ஏத்துக்கிற மனநிலையில் அவ இல்ல.
முதல்ல தான் அவளுக்கு இந்தக் குடும்பத்தையோ, இங்கு இருக்கிறவர்களைப் பத்தியோ சரியா தெரியாமல் இருந்துச்சு. அவளைப் பழையபடி வளர்த்துக்கிட்டு இருந்தா. ஆனா இப்போ இது அவளோட குடும்பம் தானே? இது நம்ம குடும்பம் என்ற எண்ணம் அவளுக்கே வர மாட்டேங்குது. அப்படி மட்டும் அவளுக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் இருந்திருந்தால், இந்த நேரம் அவ இந்த வீட்ல இருக்கிறவங்களை எல்லாரையும் பகையா நான் நினைச்சுப் பழக மாட்டாளே” என்றார் செண்பகம்.
“அம்மா என்ன சொல்றீங்க? அவளுக்கு என் மேல தான் கோபமே ஒழிய, இங்கே இருக்கிற யார் மேலயும் கோபம் இல்ல. அவ எல்லார்கிட்டயும் நல்ல முறையில் தான் பேசிப் பழகுறாள்” என துர்கா சங்கவிக்குப் பரிந்து பேசினாள்.
துர்கா சொன்னதைக் கேட்டு விரக்தியாகச் சிரித்த செண்பகம்.
“என்னம்மா நீ! இந்தக் குடும்பத்துல என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னு எனக்கு எதுவும் தெரியாதுன்னு நீ நினைச்சுட்டு இருக்கியா? சங்கவி இந்த வீட்டுக்குள்ள வந்ததிலிருந்து நம்ம குடும்பத்துக்குள்ள எவ்வளவு பிரச்சனைகள் நடந்துட்டு இருக்குன்னு எனக்குத் தெரியாதுன்னு நீ நினைச்சுட்டு இருக்கியா?” என்றார்.
செண்பகம் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த துர்கா, “அம்மா என்ன சொல்றீங்க? எனக்கு எதுவும் புரியல” என்றால், சங்கவி இதனால் வரை செய்த அனைத்தையும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்.
விரக்தியாகப் புன்னகை செய்த செண்பகம், “ஏன் துர்கா? பிள்ளையைப் பெற்றவளுக்குத் தெரியாதா பிள்ளைகளோட குணத்தைப் பற்றி?
எத்தனை வருஷமா சங்கவியை நான் வளர்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவ எப்போ என் கூட இந்த வீட்டுக்கு வந்தாளோ அப்போ இருந்தே நான் அவளைக் கவனிச்சிட்டு தான் இருக்கேன். அவளோட ஒவ்வொரு செயலும் நான் அவளுக்குத் தெரியாமல் கண்காணித்து இருக்கிறேன். அது உங்கள் யாருக்கும் தெரியாது.
அது ஆரம்பத்துல நான் கொஞ்சம் சாதாரணமா இருந்துட்டேன். போகப் போக சங்கவி மாறிடுவா, அவ சரியாயிடுவான்னு நினைச்சேன். ஆனா அவ இப்போ வரைக்கும் என்னோட மகள்ன்னு தெரிவதற்கு முன்னாடி எந்த மாதிரியான பழி உணர்ச்சியோட இருந்தாலும், அதே பழி உணர்ச்சியோடத் தான் இப்பவும் இருக்கிற எல்லார்கிட்டயும் நடந்துக்கவும் செய்றா” என்றார்.
“அம்மா அது வந்து…” என துர்கா என்ன சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல் செண்பகத்தைப் பார்க்க…
அப்போது அவர்கள் வீட்டின் கேட் திறக்கும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பி மெயின் கேட்ட்டைப் பார்க்க, வாட்ச்மேன் கதவு இரண்டையும் திறந்து விட, கதிர் காரை ஓட்டிக்கொண்டு உள்ளே வர, அவன் அருகில் ஆதி அமர்ந்திருந்தான்.
கார் சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் இருந்து கீர்த்திகாவும் வெளியே வந்தாள்.
வெளியே வந்தவள் வாசலில் செண்பகமும் துர்காவும் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், “என்ன? என்னை விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் மட்டும் ஜாலியாப் பேசிட்டு இருக்கீங்களா?” என்ற அவள் இருவருக்கும் நடுவில் புகுந்து அமர்ந்து கொண்டாள்.
கீர்த்திகா திருமணமாகியும் இன்னும் சிறு பிள்ளை போல நடந்து கொள்வதைப் பார்த்த செண்பகம், சிரித்துக் கொண்டே, “நான் சும்மா காத்து வாங்கலாம்னு வெளியே வந்து உட்கார்ந்து இருந்தேன் கீர்த்தி. உன் அக்கா தான் என்னை கொஞ்ச நேரம் காத்து வாங்க கூட விடாமல் வந்து என் பக்கத்துல உக்காந்து இருக்கா” எனச் சொல்லி துர்காவைக் கிண்டல் செய்ய.
“அம்மா! நான் நீங்க தனியா இருக்கீங்கன்னு தானே உங்களுக்கு கம்பெனி கொடுக்க வந்தேன். ஆனா நீங்க என்னடான்னா இவ கிட்ட என்னை இப்படிப் போட்டுக் கொடுக்குறீங்களே? போங்க, நான் உங்க மேல கோபமா இருக்கேன்” என்று துர்கா கோபித்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து செல்லப் போக, கீர்த்திகா துர்காவின் கையைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் அமர வைத்தவள்.
“ரெண்டு பேரும் இருக்கீங்களே” என்றவள், “ரெண்டு பேரும் என்னம்மா நடிக்கிறீங்க? உங்க ரெண்டு பேரையும் பார்த்தா காத்து வாங்க வந்தவங்க மாதிரி தெரியல. ஏதோ முக்கியமான விஷயத்தைப் பேசி டிஸ்கஸ் பண்ற மாதிரி இல்ல இருக்கு?” என்றாள்.
“ஆமாம்” என்று துர்கா லேசாகத் தலையாட்ட, காரிலிருந்து இறங்கி வந்த ஆதியும் கதிரும் படிகளில் ஏறி வந்தவர்கள், செண்பகத்தின் காலிற்கு கீழே அமர்ந்து கொண்டு, “என்ன மூன்று பேருக்கும் தூக்கம் வரலையா? இந்த நேரத்துல வெளியே உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க?” என்றால் கதிர்.
“இல்ல கதிர். நான் உன்னோட கார் சத்தம் கேட்டு தான் வந்தேன். நான் வந்து பார்த்தப்போ இவங்க ரெண்டு பேரும் எனக்கு முன்னாடியே இங்க உக்காந்து ஏதோ ஒரு ரகசியம் பேசிட்டு இருந்தாங்க. நான் வந்ததும் வேறு எதையும் சொல்லி என்கிட்டச் சமாளிக்கிறாங்க. நான் கேட்டா சொல்ல மாட்டாங்க. நீயும் ஆதி மாமாவும் கேளுங்க. அப்பவாது அவங்க சொல்றாங்களான்னு பார்ப்போம். எனக்கும் தூக்கம் வரல. என்ன கதை சொல்றாங்கன்னு கேட்டா ஆகாது, தூக்கம் வருதான்னு பார்க்கலாம்” என்றால் கீர்த்திகா சிரித்துக் கொண்டே.
செண்பகம் கீர்த்திகாவின் காதைப் பிடித்துக் கொண்டு, “நீ வாழ! வர வர நீ ரொம்பச் சின்ன பிள்ளை போல பேசுற, நடந்துக்கிற. சீக்கிரமா முதல்ல நீ ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்கிற வழியைப் பாரு. அப்போதான் இந்த மாதிரி விளையாட்டுத்தனமா நடக்காமல் கொஞ்சம் பொறுப்பா இருந்துக்குவ” என்று செண்பகம் கூற.
“நான் குழந்தை பெத்துக்க எப்பவும் ரெடிமா. ஆனா இதோ இவர், உங்க சின்ன மருமகப் புள்ள. அவன்தான் என் அண்ணாவுக்குக் குழந்தை பிறந்த பிறகு தான் நமக்குக் குழந்தை பிறக்கும்னு முடிவா சொல்லிட்டான். அதுக்கப்புறம் நான் என்ன பண்றது?” என்று துர்காவையும் ஆதியையும் பார்த்து கீர்த்திகா கூற.
கீர்த்திகா சொன்னதைக் கேட்டு துர்கா திரும்பி ஆதியை வெட்கத்தோடு பார்த்தாள்.
“ஓஹோ! இப்போ நீங்க ரெண்டு பேரும் எய்த அம்பு என்கிட்டேயும் என் பொண்டாட்டி கிட்டயும் திரும்பத்தா?” என்ற ஆதி செண்பகத்தைப் பார்த்து, “அத்தை! ஏன் உங்க முகமெல்லாம் ரொம்ப டல்லா இருக்கு? என்ன ஆச்சு? உடம்பு எதுவும் சரியில்லையா? இந்த நேரத்திலேயே இந்தக் குளிரில் வெளியே உட்கார்ந்து இருக்கீங்க?” என கேட்டான்.
“ஒன்னும் இல்ல ஆதி. நான் நல்லாத்தான் இருக்கேன். சும்மா அப்படியே காத்து வாங்கலாம்னு…” என செண்பகம் ஆதியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சமாளிக்கப் போக.
“இல்ல ஆதி, அம்மா பொய் சொல்றாங்க” என்ற துர்கா, சிறிது நேரத்திற்கு முன்பு சங்கவிக்கும் துர்காவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம், செண்பகம் அதன் பிறகு சங்கவியை எச்சரித்தது, தன்னிடம் மன்னிப்புக் கேட்டது, திரும்ப சங்கவியிடம் சென்று பேசச் சென்றது வரை அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னவள்.
“நம்ம எல்லாரையும் விட சங்கவியைப் பற்றி நமக்குத் தெரிஞ்ச எல்லா விஷயமும் செண்பகம் அம்மாவுக்கும் தெரிஞ்சிருக்கு. நம்ம தான் அவங்களுக்கு எதுவும் தெரியக்கூடாதுன்னு இத்தனை நாள் மறைத்து வைத்திருந்தோம். ஆனா அவங்க எல்லா விஷயமும் தனக்குத் தெரியும்ங்குற மாதிரி என்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள தான் நீங்க வந்துட்டீங்க” என்றால் துர்கா.
துர்கா சொன்னதைக் கேட்டு ஆதி, கதிர், கீர்த்திகா மூவருக்குமே சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஏனென்றால் சங்கவி செய்த அனைத்துமே இவர்கள் நால்வருக்குமே நன்றாகத் தெரியும். ஆனால் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டால் செண்பகம் மிகவும் வருத்தப்படுவார் என்று மொத்தமாக அவரிடம் இருந்து எதையும் சொல்லாமல் மறைத்து வைத்திருக்க…
சங்கவி பற்றிய அனைத்து உண்மைகளும் செண்பகத்திற்கு ஏற்கனவே தெரியும் என்பதைத் தெரிந்து கொண்ட ஆதி.
“அத்தை! அப்போ உனக்கு எல்லா விஷயமும் தெரியும். நாங்க புதுசா எதுவும் சங்கவியைப் பத்தி சொல்லப் போறது இல்ல. ஆனா இப்போ நாங்க சங்கவியோட இந்தத் திமிரையும், கொழுப்பையும் அடக்க ஒரு பிளான் பண்ணி வச்சிருக்கோம். அந்த பிளான் எக்ஸிக்யூட் பண்ண கண்டிப்பா உன்னோட உதவியும் தேவைப்படும். நீ மனசு வச்சா தான் சங்கவியை மொத்தமா இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாவது நம்ம பக்கம் இழுக்க முடியும். அப்படி நம்ம கிட்ட இருந்தா தான் அவ அடுத்து என்ன விஷயம் செய்வதற்கு யோசிப்பா. நீ தான் ஹெல்ப் பண்ணனும் அத்தை” என்றால் ஆதி அவர் கையைப் பிடித்துக் கொண்டு.
“என்னப்பா இப்படி கேட்டுட்ட? என் பொண்ணு உங்கள மாதிரி நல்ல குணத்தோட இருந்தா எனக்கும் சந்தோஷம் தானே? அவ நல்லபடியா இருக்க, நல்ல எண்ணத்தோட இனி வரும் வாழ்க்கையை வாழ்வதற்காக நான் என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்கேன். என் உயிர் கூட கொடுக்க தயாரா இருக்கேன்” என செண்பகம் உணர்ச்சி பொங்க கூற…
சொன்னதைக் கேட்டு, “அம்மா…” என கீர்த்திகாவும் துர்காவும் சத்தமிட, “அத்தை என்ன இது?” என்று ஆதியும் கதிர்ம் அதிர்ச்சியாகினர்.
“இல்லப்பா, என் பொண்ணு நல்லபடியா இருந்தா அது எனக்கும் சந்தோஷம் தானே?” என செண்பகம் கூற, “அதுக்காக நீங்க உங்க உயிரை விட்டு தான் உங்க மகளை திருத்தணும்னு எந்த அவசியமும் இல்ல. நாங்க சொல்றது போல நீங்க செஞ்சாலே போதும். மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்” என்ற ஆதி, நாளை நடக்கவிருக்கும் வெங்கடாச்சலம் விசாலாட்சி அறுபதாம் திருமணத்தில் தாங்கள் செய்யப் போகும் ஏற்பாடுகளுக்கு ஏற்கனவே பிளான் செய்து இருந்த விஷயங்களை எல்லாம் கூறி, செண்பகத்தையும் தங்களோடு சேர்ந்து ஒத்துழைக்கச் சொல்லி கேட்டான் ஆதி.
ஆதி சொன்னது எல்லாம் கேட்டு முகம் மலர்ந்த செண்பகம், “இதை ஏம்பா நீ என்கிட்ட முன்னாடியே சொல்லல? நான் சங்கவியோட எதிர்காலத்தை நினைத்து வருத்தப்பட்டுட்டு இருக்கிறப்போ, நீங்க எல்லாம் சேர்ந்து இப்படி ஒரு விஷயத்தைப் பண்றீங்கன்னு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் நிம்மதியாவது இருந்திருப்பேனே” என்றவர்.
“நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க. அதேபோல நான் நாளைக்கு நீங்க சொல்றது போல நடந்துக்கிறேன்” என்றார்.
“அத்தை! எல்லா விஷயத்தையும் நம்ம வாசலை வச்சு பேச வேண்டாம். யாராவது நம்ம பேசுறதைக் கேட்டுட்டாலும் அல்லது சங்கவியும் நம்ம பேசுறதைக் கேட்டுட்டாலோ, அவ்வளவுதான் நம்ம பிளான் மொத்தமும் வீணா போயிடும்.” என்ற ஆதி, அவரை அழைத்துக் கொண்டு தாங்கள் வந்த காரிலேயே திரும்பி வெளியே சென்று சென்றவர்கள், என் வீட்டைத் தாண்டி சிறிது தூரம் சென்றதும் காரை ஓரமாக நிறுத்திவிட்டுத் தங்கள் பிளான் முழுவதையும் செண்பகத்திடம் கூறி முடிக்க, “சரிப்பா, நாளைக்கு நீங்க சொன்னது போலவே நான் நடந்துக்கிறேன்.”
“சங்கவி நம்ம நினைச்ச மாதிரி நம்ம பிளானுக்கு அவ இறங்கி வருவாளா? எனக்கு அவளை நினைச்சா தான் வருத்தமா இருக்கு” என்றார்.
“அது கண்டிப்பா வந்து தான் ஆகணும் அத்தை. நீங்க அதைப் பத்தி எந்தக் கவலையும் படாதீங்க. அதை நான் பார்த்துக்கிறேன்” என்றான் ஆதி.
பிறகு அனைவரும் மீண்டும் வீட்டிற்கு வர, காரை நிறுத்திவிட்டு அனைவரும் ஒன்றாக வரவும், செண்பகம், “சரிப்பா, நான் போய் தூங்குறேன். காலைல நேரமே எந்திரிக்கணும். அண்ணிய ரெடி பண்ண வேலை இதுன்னு எக்கச்சக்கமா இருக்கு” என்று விட்டு அவர் உள்ளே செல்ல…
அவருக்கு முந்திக்கொண்டு, “சரியத்தை, நாங்களும் போய் தூங்குறோம்” என்று விட்டு துர்காவின் கையில் பிடித்து இழுத்து, “ஆதி, வா துர்கா, நம்ம போய் தூங்கலாம்” என அவளை இழுத்தான்.
உடனே கீர்த்திகா துர்காவின் கையைப் பிடித்துக் கொண்டு, “என்ன மாமா! என் அக்காவை இவ்வளவு அவசரமா கூட்டிட்டு போறீங்க? தூங்கத் தானே போறீங்க? நீங்க போங்க. அக்கா மெதுவா வருவா” என்றால் வேண்டுமென்றே துர்காவை விடாமல்.
“கீர்த்தி, கொஞ்ச நேரம் முன்னாடி நீ என்ன சொன்ன… உனக்குக் குழந்தை பெத்துக்க ஆசை இருக்கு, ஆனா நாங்க குழந்தை பெத்துக்கிட்ட பிறகு தான் கதிர் நீ கேட்டதுக்குச் சம்மதம் சொல்வான்னு சொன்னியே? அப்போ நாங்க நேரமே போய்த் தூங்கப் போனா தானே மொத்த வேலையெல்லாம் பார்க்க முடியும்? அப்போதானே சீக்கிரம் குழந்தை பிறக்கும்” என்று சொல்லிச் சிரித்தான் ஆதி.
ஆதி பேசியதைக் கேட்டதும் துர்காவின் முகம் முழுவதும் சூடாகிச் சிவந்துவிட்டது. “ஆதி! என்ன இது? இப்படித்தான் பேசுவியா?” என்று தன் கையைப் பிடித்திருந்த கீர்த்திகாவின் கையை உதறிவிட்டு வீட்டுக்குள் வெட்கப்பட்டுக் கொண்டே ஓட, அவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்து, “ஓகே, சீக்கிரமே ஒரு நல்ல செய்தியை வரும்” என்று விட்டு துர்காவைத் துரத்திக் கொண்டு ஆதி ஓடினான்.
“ஆல் தி பெஸ்ட் மாமா! சீக்கிரமா நல்ல செய்தி சொல்லுங்க. அப்போதான் நாங்களும் நல்ல செய்தி சொல்ல முடியும்” என்று கீர்த்திகா கத்த, அவள் வாயைப் பொத்திய கதிர், “அண்ணன் மட்டும்தான் குழந்தை பொறக்கறதுக்காக வேலை பார்க்கப் போவாரா? ஏன், நான் பார்க்கக் கூடாதா?” என்றான்.
“எப்போடா அந்த வேலை எல்லாம் உன்னைச் செய்ய வேண்டாம் என்று சொன்னேன்? நீதானே உன் அண்ணனுக்குக் குழந்தை பிறந்தது பிறகுதான் நம்ம பெத்துக்கணும்னு என்னமோ ஓவரா பிகு பண்ணுன. இப்ப மட்டும் என்னவாம்?” என்றால் கீர்த்திகா அவனை முறைத்துக் கொண்டே.
“அதான் என் அண்ணா சீக்கிரமாவே நல்ல செய்தி சொல்றேன்னு சொல்லிட்டாரே. நம்மளும் இப்ப இருந்தே அதற்கான வேலையில ஸ்டார்ட் பண்ணினா, என் அண்ணா கூடவே சேர்த்து நம்மளோட குட் நியூஸையும் சொல்லிடலாமே” என்று சிரித்தவன் அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டு தன்னறைக்குச் சென்றான்.
