EPISODE 8
மண்டபத்தில் ஆட்கள் எல்லாம் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டு இருக்க.. திருமணத்தை நிறுத்துவதாக கூறி சென்ற இருவரும். கஜேந்திரனின் மிரட்டலுக்கு பயந்து திரும்பி வந்ததை நினைத்து சாந்தாவும் ரியாவும் ஆத்திரப்பட்டனர். இவ்வளவு கோழையாக இருக்கிறார்களே என எண்ணி அவர்களை துச்சம் என பார்த்தனர்.
ஆம் பரம்பனும் குருவும் தங்கள் வீட்டில் வந்து கஜேந்திரனுக்கு பயந்து போய் திரும்பி வந்ததாக பொய் தான் கூறியிருந்தனர்.
அதை நம்புவதை தவிர சாந்தாவிற்கு வேறு வழியே இல்லை ஜனனியும், குருவிடம் “கஜேந்திரன் அவ்வளவு பயங்கரமானவரா? அவரைப் பார்த்து நீங்களே பயந்து வரும் அளவிற்கு நடந்து கொண்டாரா?” என கேட்க…
தன் மனைவியிடம் இப்போதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம் என நினைத்த குரு சாந்தாவிடம் சொன்னது போலவே தன் மனைவியிடமும் சொல்லி அவரையும் தன் மகள்கள் இருவரையும் நம்ப வைத்தார்.
இங்கே ரியா வெறுப்பாக தன் அறையில் அமர்ந்திருந்தாள் ” ச்சே.. அந்த ஜெய்ய லவ் பண்ணா அவனோட கோடிக்கணக்கான சொத்துக்கள் எல்லாம் எனக்கு வரும். நான் காலத்துக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சு தானே அவனை லவ் பண்ணேன். பாக்குறதுக்கும் கொஞ்சம் நல்லாத் தான் இருந்தான். ஆனால் இப்படி காலை உடச்சிட்டு வந்து நிப்பான்னு எனக்கு என்ன தெரியும். இந்த காலில்லாதவன கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கை பூரா நான் அவனுக்கு சேவகம் பண்ணிக்கிட்டு இருக்கணுமா?” என நொந்து கொண்டவள். இந்தக் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என தெரியாமல் கையை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
அப்போது அவளை பார்ப்பதற்காக உள்ளே வந்த சாந்தா ரியா இன்னும் சேலை கூட மாற்றிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்தவர் ” என்னடி ரியா இப்படியே உக்காந்துட்டு இருக்க இன்னும் டிரஸ் மாத்தல முகூர்த்தத்துக்கு நேரமாயிடுச்சு” என்றார்.
“மம்மி மத்தவங்க தான் என் நிலைமை புரியாம வந்து என்கிட்ட பேசுறாங்கன்னா நீங்களுமா? எனக்கு இந்த கல்யாணத்துல துளியும் இஷ்டம் இல்ல. அந்த கால் இல்லாதவன கட்டிக்க எனக்கு விருப்பமே இல்ல.. தயவுசெய்து இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துங்க மம்மி” என்றாள் ரியா.
“நானும் ஏதேதோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன் ரியா இதைத் தவிர நமக்கு வேற வழியே இல்ல எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல உன் அப்பாவை பார்த்தே இல்ல.. என்னால அவரை சமாளிக்கவே முடியல அந்த கால் இல்லாதவனோட அப்பா பயங்கரமான ஆளா இருப்பான் போல இருக்கு, உன் சித்தப்பா அவ்வளவு பணத்தை கொண்டு போய் நீட்டியும் அவன் அதுக்கு ஒத்துக்காம இந்த கல்யாணத்தை கண்டிப்பா நடத்தியே ஆகணும்னு திமிரா பேசி அவங்க ரெண்டு பேரையும் மிரட்டி அனுப்பிட்டான் அந்த பெரிய மனுஷன் . அங்க போன நம்ம வீட்டு ஆம்பளைங்களுக்கே இந்த கதின்னா… எனக்கு நீ அங்க போய் வாழ்க்கைப்பட்டு எப்படி அவங்களை எல்லாம் சமாளிச்சு இருக்க போறேன்னு தான் பயமா இருக்குடி” என்றார்.
“மம்மி நானே ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன் நீங்க வேற இப்படி எல்லாம் பேசி என்ன பயமுறுத்தாதீங்க” என்றாள் ரியா.
“நான் உன்னை பயமுருத்தலடி உள்ளதை சொன்னேன். எனக்கு உன்ன அந்த கந்து வட்டிக்காரன் வீட்டுக்கு அனுப்ப ரொம்ப பயமா இருக்கு” என்றார் சாந்தா.
“மம்மி ப்ளீஸ் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. எனக்கு எதுவுமே விருப்பமே இல்லை” என்று ரியா சாந்தாவின் கையை பிடித்துக் கொண்டு கெஞ்ச…
சிறிது நேரம் யோசித்த சாந்தா “நீ இங்கே இருந்தா தானடி இந்த கல்யாணம் நடக்கும். நீயே இங்க இல்லன்னா எப்படி நடக்கும்” என்றார்.
“மம்மி என்ன சொல்றீங்க நான் எங்க போறது” என ரியா கேட்க…
“இப்போ பேசிட்டு இருக்க நேரம் இல்ல… முதல்ல உனக்கு வேணுங்குற ட்ரெஸ் எல்லாம் சீக்கிரமா எடுத்து பேக் பண்ணு” என்று விட்டு மணமகள் அறையை உள் பக்கமாக தாலிட்டு வந்த சாந்தா ரியா இன்னமும் அப்படியே அமர்ந்து இருப்பதை பார்த்தவர்.
“ஏய் ரியா கிளம்பு டி..” என்றுவிட்டு ரியாவின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த நகைகளை எல்லாம் எடுத்து ஒரு பையில் போட்டு தன் மகளின் சில உடைகளையும் எடுத்து பேக் செய்து அவள் முன்பு வந்து நிற்க…
“அம்மா என்ன பண்றீங்க?” என ரீயா புரியாமல் கேட்க
“இன்னுமாடி உனக்கு புரியல.. நீ இங்க இருந்து யார் கண்ணுலயும் படாம கிளம்பி போயிடு… உன்னோட கல்யாணம் தானா நின்னுடும்” என்றார் சாந்தா.
“மம்மி என்ன சொல்றீங்க கொஞ்ச நேரத்துல கல்யாணத்துக்கு வச்சுக்கிட்டு என்னை மண்டபத்தை விட்டு ஓடிப் போக சொல்றீங்களே.. எல்லாரும் என்ன பத்தி என்ன நினைப்பாங்க அப்பா விஷயம் கேள்விப்பட்டால் அவர் என்னை கொன்னே போட்டுடுவாரு. நான் எங்கேயும் போகல நானே எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்துகிறேன்” என ரியா பிடிவாதம் செய்ய..
“விஷயம் புரியாமல் பேசாதடி உன் அப்பா நீ என்ன பண்ணினாலும் இந்த கல்யாணத்தை நடத்திட்டு தான் மரு வேலை பார்ப்பாரு. உன்னோட விருப்பம் எல்லாம் அவருக்கு இப்ப பெருசில்ல அவர் கொடுத்த வாக்கு தான் அவருக்கு பெருசு உன் அப்பாவ பத்தி நல்லா தெரிஞ்சுமா நீ இன்னும் நம்பிக்கையோட கல்யாணத்தை நிறுத்திடலாம்னு சொல்ற அது நடக்கவே நடக்காது நான் சொன்ன மாதிரி செய் ஒழுங்கா இங்க இருந்து கிளம்பி போ நீ கொஞ்ச நாளைக்கு நம்ம ஊர் பக்கமே வந்துடாதே இந்த பணம் நகையெல்லாம் வச்சு ஏதாவது படிக்கணும்னா படி இல்ல வேற எதுவும் செய்யணும்னா செய்” என்று விட்டு அவள் போனை எடுத்து ரியாவின் கையில் கொடுத்த சாந்தா கிளம்பு என தன் மகளை மணமகள் அறையில் இருந்து அவசர அவசரமாக பின்பக்கமாக அனுப்பி வைக்க..
ரியாவிற்கும் இதை விட்டால் தன் திருமணத்தை நிறுத்த வேறு வழியே இல்லை என்று புரிந்து போக… “சரி மம்மி நான் என்னோட பிரண்டு உஷா டெல்லியில் இருக்கா அவள பார்க்க போறேன். நான் அங்க போயிட்டு அடுத்து என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிட்டு உனக்கு கால் பண்றேன் மம்மி” என்று விட்டு அவள் அம்மாவை கட்டி அணைத்து “ரொம்ப தேங்க்ஸ் மம்மி” என தன் அம்மாவின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு ரியா அங்கிருந்து திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டாள்.
தன் மகளின் திருமணத்தை நிறுத்திய நிம்மதி ஒரு பக்கம் இருக்க இப்படி தன்னந்தனியாக செல்லும் தன்மகளை பரிவாக பார்த்தபடி பின்பக்க கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தவர். கண்ணாடியின் முன்வந்து நின்று தன் முகத்தை ஒரு முறை பார்த்து “இப்படி இருந்தா நல்லா இருக்காது இப்படியே வெளியே போனா எல்லாரும் கண்டுபிடித்து விடுவார்கள்” என்று நினைத்தவர் அழுவது போல தன் முகத்தை வைத்துக்கொண்டு மணமகள் அறைக்கதவை திறந்து வெளியே வந்தவர் “என்னங்க..” என அழுதபடி பரமனை நோக்கி ஓடி வந்தார்.
தன்னுடைய சொந்தங்களிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த பரமன் சாந்தாவின் அழுகுரல் கேட்டு பதறிப் போய் அவரை திரும்பிப் பார்க்க அழுதபடி அவரை நெருங்கி வந்த சாந்தா “ஏங்க நம்ம பொண்ணு நம்மல ஏமாத்திட்டா. அவ இந்த கல்யாணம் பிடிக்கலையினு சொல்லாம கொள்ளாம எங்கேயோ ஓடிப் போயிட்டாங்க. அவளோட ரூம்ல ரியா இல்ல” என பதட்டமாக நடிப்பது போல சாந்தா பேச…
“என்ன சாந்தா சொல்ற ரியா அவ ரூம்ல இல்லையா? நல்லா பார்த்தியா? அவ பாத்ரூம் எதுவும் போய் இருக்க போறா.. நீ சும்மா வந்து இப்படி எல்லாரும் முன்னாடியும் நம்ம பொண்ண பத்தி உளறிட்டு இருக்காத” என பரமன் அவரை கடிந்து கொள்ள…
“ஏங்க இந்த விஷயத்துல யாராவது பொய் சொல்லுவாங்களா? உண்மையாவே ரியா அவ ரூம்ல இல்லைங்க… நான் நல்லா தேடி பாத்துட்டு தான் உங்ககிட்ட சொல்றேன்” என சாந்தா சொல்ல..
பரமன் அதிர்ந்து போனார் அதைக் கேட்டு அங்கே வந்து குரு “இப்போ தான அண்ணி நான் ரியாவை பார்த்துட்டு வந்தேன். அதுக்குள்ள அவ எப்படி அங்கே இருந்து போயிருக்க முடியும்” என்ற குரு சட்டென துரிதமாக வேலை பார்த்து மண்டபத்தில் இருக்கும் தனது உறவினர்களிடமும், தன் மேனேஜர் மற்றும் பியே மாணிக்கத்திடமும் ரியா நீண்ட தூரம் செல்வதற்கு வாய்ப்பு இருக்காது. அவள் பக்கத்தில் தான் எங்காவது சென்றிருக்க வேண்டும் சீக்கிரமாக அவளை எங்கேயாவது தேடி கண்டுபிடித்து அழைத்து வரச் சொல்லி அனுப்பி வைக்க…
“இவன் ஒருத்தன் இந்த விஷயத்தை அப்படியே விடம… அவளை தேடி ஆளுங்களை வேற அனுப்புறான். ஐயோ!! கடவுளே இப்ப நான் என்ன பண்ணுவேன். என் பொண்ணு இவங்க யாரு கண்ணிலும் படாம நீ தான் அவளை காப்பாத்தணும்” என கடவுளிடம் வேண்டியவர் அழுது வடிந்த முகத்தோடு அங்கே நின்று இருக்க ஜனனி வந்து சாந்தாவிற்கு ஆறுதல் கூறினார்.
“கவலைப்படாதீங்க அண்ணி இவங்க எப்படியாவது ரியாவை இங்கே கூட்டிட்டு வந்துடுவாங்க” என்றார்.
“இல்ல ஜனனி உனக்கு அவளை பத்தி தெரியாது. அவ ஒரு விஷயம் முடிவெடுத்தது தான் இந்த நேரம் அவ எங்க இருக்கான்னு யாருக்கு தெரியும் நம்ம தேடுறது வேஸ்ட்” என்றார்.
“அண்ணி நம்ம சொந்தங்கள் எல்லாம் ரியாவ தேடத்தான் போயிருக்காங்க. அவங்க கையில அவ மாட்டலைனாலும் என்னோட வீட்டுக்காரருடைய பிஏ மாணிக்கம் கண்டிப்பா ரியா எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துடுவாரு” என்று தீர்க்கமாக கூற…
அந்த பிஏ மாணிக்கத்தை பற்றி சாந்தாவும் கேள்விப்பட்டிருக்கிறார் ஒரு வேலையை கொடுத்தா அதை சரியாக முடிக்கும் வரை ஓய மாட்டார் என கேள்விப்பட்டிருக்கிறாள். B “அவன் வேற என் பொண்ண தேடி போயிருக்கானே… ஆண்டவா தயவுசெய்து இவன் கண்ணுல மட்டும் என் பொண்ணு மாட்டிடவே கூடாது” என கடவுளிடம் கெஞ்சிக் கொண்டு நின்றிருக்க…
இங்கே மணமகள் அறையில் வேண்டா வெறுப்பாக தயாராகி வீல்சேரில் அமர்ந்திருந்த ஜெய்யிடம் அவனது நண்பர்கள் எவ்வளவோ சந்தோசமாக கேலி கிண்டல் செய்து பேசினாலும் அவனின் மனநிலை எப்போதும் போல இறுக்கமாகவே யாரிடமும் பேசாமல் இருக்க “என்னடா இவன் புது மாப்பிள்ளையா சந்தோசமா சிரிச்சிட்டு இருக்காம இப்படி உர்ருனு இருக்கான்” என ஒருவன் கேட்க…
“டேய் உனக்கு நம்ம ஜெய்ய பத்தி நல்லா தெரியும் தானே… அவன மாதிரி நம்ம கேங்க்ல ஜாலியான ஆள் யாருமே இல்ல எப்போ அவனுக்கு கால் உடைஞ்சுச்சோ அப்பவே அவன் மொத்தமாக மாறிவிட்டான் அவனை ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க… பாவம்” என பேசியபடி அங்கே வந்தான் ஜெய்யின் தோழன் சூர்யா.
“வாடா சூர்யா …நீயாவது இவன் கிட்ட பேசி கொஞ்சம் சிரிச்சிட்டு இருக்க சொல்லுடா கல்யாணம் ஆக போற நேரத்துல இப்படி இருந்தா நல்லாவா இருக்கும்” என ஒருவன் சொல்லிக் கொண்டு இருக்க “சரிடா பாத்துக்கலாம் விடுங்க..”என்றபடி ஜெய்யிடம் வந்த சூர்யா .
“டேய் ஜெய் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க ட்ரை பண்ணுடா.. இப்படி எப்ப பாரு முகத்தை உருன்னு வச்சுட்டு இருந்தா அப்புறம் ரியாவுக்கு உன்னை பார்த்தா மூடே வராது” என்று சொல்லி சூர்யா சிரிக்க..
அதைக் கேட்ட ஜெய் நிமிர்ந்து சூர்யாவை முறைக்க… “என்ன டா முறைக்கிற கொஞ்சம் சிரி” என்று அவன் தோளில் தட்டினான்.
தன் நண்பன் வந்ததும் ஜெய்யிற்க்கு ஏனோ மனம் லேசானது அவனைப் பார்த்து இருக்கம் தளர்ந்து லேசாக சிரிக்க.. ” அப்பாடா ஒரு வழியா சிரிச்சிட்டாண்டா” என மற்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜெய்யின் அறைக்கு வந்த அவனுடைய உறவினர் ஒருவர் “என்னப்பா ஜெய் கல்யாண பொண்ணு மண்டபத்தை விட்டு ஓடிப் போயிடுச்சாம்மா” என கூற… அதைக் கேட்டு அதிர்ந்து போனான் ஜெய்.
