Home Uncategorizedதீயில் விழுந்த தூரிகை 6 TO 10

தீயில் விழுந்த தூரிகை 6 TO 10

by Layas Tamil Novel
42 views

EPISODE 6

“புல்ஷிட்! என்ன நினைச்சிட்டு இருக்கான் அந்த அபிமன்யு? நான் என்ன, அவன் வச்ச ஆளா? என்ன அவன் கெஸ்ட் ஹவுஸுக்கு வர சொல்றான்?” என்று பொங்கிக்கொண்டு இருந்தாள் நந்தினி.

“மேம், இப்போ என்ன பண்றது?” என்று பார்வதி கைகளை பிசைந்து கொண்டு பதட்டமாகக் கேட்டாள்.

“அவன் என்னன்னு மெசேஜ் அனுப்பியிருக்கான், அதைக் காட்டு” என்று பார்வதியின் கையில் இருந்த மொபைலைக் கேட்டாள்.

தயக்கத்தோடு பார்வதி தன் மொபைலை நந்தினியிடம் நீட்டினாள். அதை வாங்கி அபிமன்யுவின் சார்பில் அவன் பி.ஏ. வித்யாதரன் அனுப்பியிருந்த செய்தியைப் பார்த்தாள்.

“குட் ஈவினிங் மாம், எங்க பாஸ் மீட் பண்ணனும்னா உங்க மேடமை சாரோட அவுட் ஹவுஸுக்கு வர சொல்லுங்க. அவர் அங்க வச்சு மிஸ் நந்தினியை மீட் பண்ண விரும்புறார்” என்று அனுப்பியிருந்தான்.

“ராஸ்கல்! எவ்வளவு தைரியம் இருந்தா என்னை அவனோட அவுட் ஹவுஸுக்கு வரச் சொல்வான்? அவனுக்கு எவ்வளவு திமிரு இருக்கும்? பணம், வசதி இருந்தா இவன் கூப்பிட்ட இடத்துக்குப் போகணுமா?” என்று கொதித்தெழுந்தவள், “இந்த ராஸ்கலை இப்படியே விடக் கூடாது. ‘ஏண்டா என்னை அவன் கெஸ்ட் ஹவுஸுக்கு வரச் சொன்னோம்’னு ஃபீல் பண்ண வைக்கணும்” என்று அங்கிருந்து கிளம்பினாள்.

“மேம், வெயிட்! நானும் வரேன் உங்க கூட” என்று நந்தினியின் பின்னால் ஓடினாள் பார்வதி.

“நோ பாரு, நான் தனியா போறேன். உன்னைக் கூட்டிட்டுப் போனா, அவனுக்குப் பயந்துட்டு நான் துணைக்கு ஆளைக் கூட்டிட்டு வந்ததா நினைப்பான்” என்று தன் புது பிராண்டட் காரை எடுத்துக்கொண்டு அபிமன்யுவின் கெஸ்ட் ஹவுஸுக்குக் கிளம்பி இருந்தாள்.

பார்வதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ‘மேம் வேற தனியா போறாங்க. அங்க போய் அவங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்றது?’ என்று யோசித்தவள், அவசரமாக தன் மொபைலை எடுத்து ராஜனுக்கு அழைத்தாள்.

முழு ரிங் போய் கட் ஆனது. அவர் போனை அட்டென்ட் செய்யவில்லை.

“ஐயோ, சார் ஏன் போன் எடுக்க மாட்டேங்குறார்? இப்போ நான் என்ன செய்றது?” என்று யோசித்தவள் அடுத்து அழைத்தது என்னவோ அக்னிக்குத்தான்.

ஒரு குடோனில் கட்டப் பஞ்சாயத்தில் மும்முரமாக இருந்தவன், போன் அடிக்கவும் ‘ஷ்’ என்று வாயில் விரல் வைத்து அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னவன், பார்வதியின் அழைப்பைப் பார்த்து யோசனையோடு போனை அட்டென்ட் செய்து, “என்ன, எனக்கு கால் பண்ணி இருக்க? எங்க உங்க மேம்? அவளுக்கு நீ கால் பண்ண விஷயம் தெரிஞ்சா உன்னை ஒரு வழி பண்ணிருவா” என்றான்.

“ஐயோ மித்ரன், பொறுடா. இப்படி எடுத்ததும் படபடன்னு பேசினா நான் சொல்ல வந்ததை மறந்துடுவேன் போல” என்று அவனை அடக்கியவள், “இங்க பாரு, நம்ம நந்தினிக்கு ஒரு ப்ராப்ளம்” என்றாள்.

“அதுக்கு ஏன் எனக்கு போன் பண்ணின?” என்றான் அக்னி.

நந்தினி, பார்வதி, அக்னிமித்ரன் மூவரும் ஒரே கல்லூரியில் தான் படித்தனர். அக்னியும் பார்வதியும் முதலாம் ஆண்டு கல்லூரியில் சேரும்போது, நந்தினி இவர்கள் இருவருக்கும் சீனியர். புதிதாக சேர்ந்த அனைவரையும் சீனியர்கள் ராகிங் செய்திருக்க, அக்னியை யாரும் நெருங்கவில்லை. காரணம், நந்தினியின் தம்பி என்பதால் இல்லை. அவன் சாதாரணமாகவே பார்ப்பதற்கு சற்று பயமுறுத்தும் தோற்றத்தை உடையவனாகத்தான் இருப்பான். அவனிடம் யாரும் வம்பு வைத்துக்கொள்ளவில்லை.

அவன் படித்த டிபார்ட்மெண்டில் தான் பார்வதியும் சேர்ந்தாள். முதலில் அவளும் அக்னியைக் கண்டு பயந்து ஒதுங்கித்தான் இருந்தாள். ஒரு நாள் சீனியர் மாணவன் ஒருவன் பார்வதி வேண்டாம் என்று மறுத்தும், அவளைக் காதலிப்பதாகக் கூறி அவள் பின்னால் சுற்றித் திரிந்தான்.

ஒரு கட்டத்தில் பார்வதியின் நிராகரிப்பை தாங்க முடியாமல், அவள் மீது ஆசிட் ஊற்றப் பார்த்தான். அதை தன் நண்பர்கள் மூலம் அறிந்துகொண்ட அக்னி அந்த மாணவனை தேடிப் பிடித்து உண்டு இல்லை என்று அவனை ஆக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்த்தான். அவனிடம் இருந்த ஆசிட்டையும் பிடுங்கிக்கொண்டு அவனைப் போலீஸில் பிடித்துக் கொடுத்தான். அன்றிலிருந்து பார்வதிக்கு அக்னி மீது ஒரு நட்பும் பாதுகாப்பு உணர்வும் தோன்றவே, அவனிடம் அவளாகவே சென்று நட்பு பாராட்டிப் பழக ஆரம்பித்தாள்.

கல்லூரி சேர்ந்த ஆறு மாதத்தில், தனக்கு இந்தப் படிப்பு ஒத்து வராது என்று முடிவு செய்தவன் கல்லூரியில் இருந்து இடை நிறுத்தம் செய்தான். எவ்வளவோ எடுத்து சொல்லியும், தொடர்ந்து படிக்க முடியாது என்று மறுத்துவிட்டான். அவனுக்குப் பின் நந்தினியுடன் அதிக நெருக்கம் காட்டியிருந்த பார்வதி கல்லூரி படிப்பை முடித்து நந்தினியிடம் வேலையில் சேர்ந்துவிட்டாள்.

அக்னியைப் பற்றி அவன் குடும்பத்திற்குப் பிறகு நன்கு புரிந்து வைத்திருப்பது பார்வதி மட்டுமே. அவள் மட்டும்தான் இவ்வளவு உரிமையாக அவனிடம் பேச முடியும். அதனால் தான் நந்தினிக்கு ஒரு பிரச்சனை என்றதும் ராஜனுக்கு அழைத்தாள், அடுத்து யோசிக்காமல் அக்னிக்கு அழைத்து இருந்தாள்.

“டேய், விளையாட நேரம் இல்ல. நான் சொல்றதை முதல்ல கேளு” என்று அபிமன்யு விஷயத்தை சீக்கிரம் சொல்லி முடித்தவள், “நான் உனக்கு வாட்ஸ்அப்ல லொகேஷன் ஷேர் பண்றேன். நீ முதல்ல அங்க போடா, ப்ளீஸ். நந்தினிக்கு எதுவும் ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு” என்று பதறினாள் பார்வதி.

“ஏய் ஏய், இரு. எதுக்கு இப்படிப் பதட்டப்படறே? நீ நினைக்கிற மாதிரி உன் மேம்க்கு எதுவும் ஆகாது. அவளை மீட் பண்ண வரச் சொன்னவன் தான் இந்நேரம் ஒரு வழி ஆகி இருப்பான். நீ ஃபீல் பண்ணாம போனை வை. அவளே வந்துடுவா” என்று கூலாக போனை வைத்துவிட்டுத் தன் பஞ்சாயத்து வேலைகளில் தீவிரமாக இறங்கினான்.

‘இவன் என்ன இப்படிச் சொல்றான்? எதுக்கும் நாம ஒருவாட்டி அப்பாவுக்கு கூப்பிட்டு பார்ப்போம்’ என்று மீண்டும் ராஜனுக்கு அழைக்க, இந்த முறை போனை அட்டென்ட் செய்தவர், “சொல்லு மா. அப்பா குளிச்சிட்டு இருந்தேன்” என்றார்.

“அப்பா” என்று எடுத்த எடுப்பிலேயே நடந்ததை பாரு கூற, அக்னி என்ன சொன்னானோ அதையேதான் ராஜனும் அவளிடம் சொல்லிவிட்டுப் போனை வைத்தார்.

‘என்ன, ரெண்டு பேரும் ஒண்ணு போல சொல்றாங்க?’ என்று யோசித்தவள், ‘ஏண்டி நந்து, நீ மட்டும் தான் இப்படி இருப்பேன்னு நினைச்சா குடும்பம் மொத்தமும் இப்படித்தான் இருக்கு. எப்படித்தான் அம்மா உங்க மூணு பேரையும் சமாளிக்கிறாங்கன்னே தெரியல’ என்று அலுத்துக்கொண்டவள், “அப்பா சொன்னது போல அந்த அபிமன்யு உன்கிட்ட மாட்டிக்கிட்டானா என்னனு தெரியலையே” என்று புலம்பியவள், “சரி, பொறுத்து பார்ப்போம். நந்தினி இன்னும் ஒரு மணி நேரத்துல போன் பண்ணலையினா அடுத்து போலீஸ் கிட்டே போயிட வேண்டியதுதான்” என்று நந்தினிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

இங்கே அபிமன்யுவைக் காண அவன் சொன்ன கெஸ்ட் ஹவுஸ் முன் தன் வண்டியை நிறுத்தியிருந்தாள் நந்தினி. வெளியே காருக்குள் இருந்தபடி அவள் ஹாரன் அடிக்க யாரும் வந்து கேட்டை திறந்ததாகத் தெரியவில்லை.

“ராஸ்கல்! என்னை வர சொல்லிட்டு எங்க போனான் இவன்? திமிரு புடிச்சவன். என் கையில மாட்டட்டும் இவன், அப்போ இருக்கு இவனுக்கு” என்று புலம்பியபடி தன் மொபைலை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.

ரிங் போவதற்கு முன் அவள் கார் ஜன்னல் கதவை யாரோ தட்ட, போனை காதில் வைத்தபடி திரும்பியவள் சிரித்த முகமாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான் அபிமன்யு.

இதுவரை அவள் பார்த்த அபிமன்யுவா இது? அவனுக்குச் சிரிக்கத் தெரியுமா? என்ற ரீதியில் அவனையே பார்த்துக்கொண்டு இருக்க, பாக்கெட்டில் இருந்த தன் போன் ரிங் ஆனதும் அதை எடுத்துப் பார்த்தவன் நந்தினியின் அழைப்பைப் பார்த்துச் சிரித்தவன், வெளியே நின்று ஏதோ சொல்ல காருக்குள் இருந்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. காதில் போனை வைத்துக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு அவன் சொல்வது புரிய வாய்ப்பே இல்லை.

அபிமன்யுவும் அவளிடம் பேச முயற்சித்தவன், கார் கண்ணாடியை இறக்கிவிடச் சொன்னான். அதையும் கேட்டுவிட்டு அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். இத்தனை நேரம் தான் வசை பாடிக்கொண்டு இருந்தவனையா தான் இப்படி விழி அகலாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.

அந்தக் கேள்வி மனதில் எழுந்தாலும், அவளால் தன் பார்வையை அவன் மீது இருந்து அகற்ற முடியவில்லை. மனதையும் தான்.

காருக்குள் இருப்பவளுக்குத் தான் சொல்வது எதுவும் புரியவில்லை என்று உணர்ந்தவன், அவள் அழைப்பை அட்டென்ட் செய்து, “ஹலோ மிஸ் நந்தினி, என்ன ஆச்சு?” என்று போனில் பேசியவன் வெளியே இருந்து அவளைப் பார்த்துப் பேசினான்.

அவன் குரலில் நினைவு வந்தவளாக, “அ… ஆ… அது… மிஸ்டர் அபிமன்யு…” என்று நந்தினி தடுமாற, “கார் கண்ணாடியை இறக்குங்க” என்றான்.

“ஓ, சாரி” என்று அவள் அவசரமாகக் கண்ணாடியை இறக்க, “நந்தினி, ஆர் யூ ஆல்ரைட்? நான் பேசிட்டே இருக்கேன், நீங்க எதுவுமே பேசலையே?” என்றான் புரியாமல்.

“அ… அது நான்…” என்றாள் இன்னமும் தன் மனதை அவனிடம் இருந்து பிரிக்க முடியாமல்.

“ஓகே ஓகே, ரிலாக்ஸ். வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என்றான்.

“ம்ஹும், இல்ல. ஜஸ்ட் நவ் ஐ கேம்” என்றாள்.

“ஓகே, ஒன் மினிட்” என்றவன் தன் ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கேட் சாவியை எடுத்து கேட்டைத் திறந்தான்.

‘என்னடி பண்ணிட்டு இருக்க? எதுக்காக இங்க வந்த? இப்போ என்ன பண்ணிட்டு இருக்க? ஃபோகஸ் நந்து, ஃபோகஸ்’ என்று தன்னையே திட்டிக்கொண்டவள், அவன் கேட்டைத் திறந்து விட்டு நந்தினியை வரச் சொல்லி சைகை செய்ய, அவனைப் பார்த்து லேசான தலையசைப்புடன் காரை உள்ளே செலுத்தினாள்.

அவளைப் பார்த்துக்கொண்டே வந்து கேட்டை சாற்றப் போனவனை ஒரு ஹாரன் சத்தம் வந்து அவன் கவனத்தைத் திசை திருப்பி இருந்தது.

‘யார் இந்த இடத்திற்கு வந்திருப்பது?’ என்று புரியாமல் குழம்பிய அபிமன்யு, “ஹலோ, யார் நீங்க? இங்க எதுக்காக உங்க வண்டியை பார்க் பண்ணியிருக்கீங்க?” என்றபடி அவரை நோக்கி வந்தான்.

“ம்ம்ம்… இங்க வண்டியை நிறுத்தக் கூடாதுனு எதுவும் ரூல்ஸ் இருக்கா என்ன?” என்று வண்டியை விட்டு கீழே இறங்கியவன் பேசிக்கொண்டே அபிமன்யுவை நோக்கி நடந்தான்.

காரைப் பார்க் செய்துவிட்டு இறங்கிய நந்தினி, வாசலுக்கு வெளியே இருந்து வந்த குரலைக் கேட்டதும், “ஓ ஷீட்! பாரு, என்னடி பண்ணி வச்சிருக்க?” என்றபடி வேகமாக அவர்கள் இருவரையும் நோக்கி ஓடி வந்தாள்.

EPISODE 7  

நந்தினியைப் பார்த்து சிரித்தபடி வாசல் கதவை மூடப்போன அபிமன்யுவின் கவனத்தை அந்த ஹாரன் சத்தம் திசை திருப்பியது. தன் வீட்டு முன் நிறுத்தி இருந்த ஜீப்பையும் உள்ளே இருந்த நபரையும் பார்த்தவன், அவருடன் பேசிக்கொண்டே ஜீப்பிற்குள் இருந்தவரை நோக்கிச் சென்றான். அவரும் ஜீப்பை விட்டு இறங்கி, அபிமன்யு கேட்ட கேள்விக்கு நக்கலாகப் பதில் சொல்லிக்கொண்டே அவனை நோக்கி வந்தார்.

காரை நிறுத்திவிட்டு வந்த நந்தினி, வாசலில் நின்றிருந்த ராஜனைப் பார்த்துவிட்டு, “ஓ! பாரு, என்ன வேலைடி பண்ணி வச்சிருக்க!” என்று திட்டியவாறே வந்தாள். “டாட், நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?” என்றபடி அவரிடம் வந்தாள். தன் மகளைப் பார்த்ததும் அவளை நோக்கிச் சென்றார் ராஜன்.

“டாட்?” என்று புருவம் சுருங்க ராஜனைப் பார்த்தவனுக்கு எல்லாம் புரிந்துபோனது.

“இல்லம்மா, தம்பி உன்னைத் தனியா மீட் பண்ணனும்னு சொல்லுச்சாம். அதான் என்னன்னு பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்,” என்றார் அவர்.

“என்னைத்தானே மீட் பண்ணனும்னு சொன்னான்? உனக்கு என்ன வேலை இங்க?” என்று அவர் அருகில் வந்து பல்லைக் கடித்துக்கொண்டே கேட்டாள்.

“அவன் ஏதாவது பிரச்னை பண்ணினானா? சொல்லு, இன்னைக்கு அவனை ஒரு வழி பண்ணிடறேன்,” என்று தன் கையில் இருந்த காப்பை மேலேற்றிவிட்டபடி கேட் பக்கம் இருந்த அபிமன்யுவைப் பார்த்துக் கேட்டார்.

“டாட், இப்பதான் பேசவே வந்தேன்,” என்றவள், “நீங்க கிளம்புங்க,” என்றாள். அபிமன்யுவை திரும்பிப் பார்த்துச் சிரித்துக்கொண்டே.

“நீ உள்ள போய்ப் பேசிட்டு வா, நந்து. அப்பா இங்கேயே வெயிட் பண்றேன்,” என்றார் ராஜன்.

“டாட், தயவுசெய்து இங்கிருந்து கிளம்பிருங்க. இல்லை நான் ஏதாவது சொல்லிடப் போறேன் உங்களை,” என்று ராஜனைத் தள்ளிக்கொண்டு ஜீப்பிற்கு வந்தாள்.

“நீ உள்ள போ. நான் இங்கேயே இருக்கேன்,” என்றார்.

“ஒண்ணும் தேவையில்லை, கிளம்புப்பா முதல்ல,” என்றாள் அழாத குறையாக.

“சரி, நீ சமாளிச்சுக்குவ இல்லை? ஏதாவது பிரச்னை வந்தா உடனே அப்பாவுக்கு கால் பண்ணிடு. நான் வந்துடுவேன்,” என்றவர் மனதே இல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

அவரை அனுப்பிவிட்டு சங்கடமாகத் திரும்பி அபிமன்யுவைப் பார்த்தாள்.

“அவர் பொண்ணு தனியா வந்திருக்கா, என்னால உனக்கு எதுவும் பிரச்னை வந்திரும்னு உன் பாதுகாப்புக்கு வந்திருக்கார் போல. அவரை ஏன் அனுப்பி வச்ச? உள்ள கூப்பிட்டிருக்கலாமே?” என்றான் சிரித்தபடி.

“யது?” என்று அவனைப் பார்த்தவள், “அவர் வந்தது என் பாதுகாப்புக்கு இல்லை. உனக்கு ஏதும் என்னால பிரச்னை வந்திடக் கூடாதுன்னுதான் இங்க வந்திருக்கார்,” என்று சிரித்தபடி அவனிடம் வந்தாள்.

இருவரும் சாதாரணமாக ஒருமையில் பேசிக்கொண்டது இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

அவள் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாக அவளைப் பார்த்தான் அபிமன்யு.

“பின்னே? ஆஃபீஸ் விஷயம் பேச வரச் சொல்ற இடம் இது இல்லையே,” என்றாள்.

“ஆஃபீஸ் விஷயம் மட்டும் பேசணும்னா நான் உன்னை இங்க வர சொல்லிருக்கவே மாட்டேன்,” என்றான் அவனும்.

நடந்துகொண்டிருந்தவள் நின்று ஒருமுறை அவனைப் பார்த்தாள்.

“வாட்?” என்றான் அபிமன்யு சிரித்தவாறே.

“ம்ச்,” என்று தோளைக் குலுக்கிக்கொண்டே அவனுடன் வீட்டிற்குள் சென்றாள்.

எலக்ட்ரானிக் லாக்கை மூடியவன், “வெல்கம் யது,” என்று அவளைத் தன் வீட்டிற்குள் அழைத்தான்.

மெல்லிய புன்னகையோடு அவன் வீட்டை ஏறிட்டுப் பார்த்தபடி வந்தவள், அபிமன்யு கதவைத் திறந்ததும் அவர்களை நோக்கி ஓடிவந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயைப் பார்த்துப் பயந்து பதறி, அபிமன்யுவின் கையைப் பயத்தில் இறுகப் பிடித்துக்கொண்டாள்.

“ஹே யது, டோன்ட் பி ஸ்கேர்ட். ஹி வோன்ட் டூ எனிதிங் டு யூ,” என்று தன்னைப் பிடித்திருந்தவளின் கையைப் பிடித்து அவளை ஆசுவாசப்படுத்தினான்.

“நோ… நோ… நோ… நோ… ப்ளீஸ், இதை இங்கிருந்து போகச் சொல்லுங்க. எனக்குப் பயமா இருக்கு,” என்று அவளிடம் வந்து வாலாட்டிக்கொண்டே நந்தினியின் மேலே தொத்திக்கொண்டு வந்த நாயைக் கண்டு அவள் பின்னோக்கிச் சுற்ற, அவளோடு சேர்ந்து அபிமன்யுவும் அவள் இழுப்பிற்குச் சுற்றினான்.

“யது, ப்ளீஸ் காம் டவுன். இவன் ஏதும் பண்ண மாட்டான், என்னை நம்பு,” என்றான்.

“ம்ஹும்… இல்லை அபி, எனக்கு நாயைப் பார்த்தாலே ஆகாது. படிச்சிடுமோன்னு பயம். அதை விட அது கடிச்சு யாராவது ஊசி போடறதுன்னா இன்னும் பயம்,” என்றாள்.

“யாருக்குக் கடிக்கும், கடிக்கக் கூடாதுன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். நீ இப்படி அவனைப் பார்த்துப் பயந்து பின்வாங்கினா உன்னைத் திருடன்னு நினைச்சு உண்மையாவே கடிச்சு வச்சிருவான். நீ முதல்ல பயப்படாம அமைதியா நில்லு,” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டுச் சிறிது யோசித்தவள், அபிமன்யுவைப் பிடித்துச் சுற்றுவதை நிறுத்திவிட்டு அவளிடம் விளையாட வந்த நாயைப் பார்த்தாள்.

“ம்ஹும்ஹும்ஹும்ஹும்… ப்ளீஸ், அதை பிடிச்சுக் கட்டி வை அபி, ப்ளீஸ்,” என்று கெஞ்சினாள்.

“அது இல்ல. அவனுக்குப் பேர் இருக்கு, ஜாக்கி,” என்றான்.

“என்னவோ இருக்கட்டும், ப்ளீஸ் கட்டி வையுங்க,” என்று அவன் கையை விடாமல் பிடித்துக்கொண்டாள்.

“இப்படி என்னை பிடிச்சிட்டு இருந்தா எப்படி நான் ஜாக்கியைக் கட்ட முடியும்?” என்றான், அவன் கையை கட்டிக்கொண்டிருந்தவளை ரசனையாகப் பார்த்து.

அப்போதுதான் அபிமன்யுவின் கையைத் தான் பிடித்திருப்பதை உணர்ந்தவள், “சாரி,” என்று அவன் கையை மட்டும் தான் விட்டாள். ஆனால், அபியின் பின்னால் பாதுகாப்புக்காக அவனை ஒட்டியே நின்றிருந்தாள்.

“ஒன் மினிட்,” என்றவன், “ஜாக்கி, கம் ஆன்,” என்று கீழே அமர்ந்து ஜாக்கியை அழைக்க, அது ஓடிவந்து அபிமன்யுவின் தோளில் தன் இரண்டு காலையும் போட்டு, அவன் மீது தாவிக்கொண்டு அபிமன்யுவின் முகத்தைத் தன் முகத்தால் தடவிக் கொஞ்சியது.

அதை ஆச்சரியமாகப் பார்த்தபடி அவர்கள் இருவரையும் தனியே விட்டு, பின்னால் நகர்ந்து நின்றிருந்தாள் நந்தினி.

“டேய் தங்கம், உன்னைப் பார்த்துப் பயப்பட ஒரு ஆள் சிக்கிருச்சுடா உனக்கு,” என்று சிரித்தவன் திரும்பி நந்தினியைப் பார்த்தான்.

அவளோ அசடு வழிய சிரித்துக்கொண்டே, “எனக்கு நாயைப் பார்த்தா அவ்ளோ பயமெல்லாம் இல்லை. இவன் கொஞ்சம் பெருசா இருக்கானாதான் பயந்துட்டேன்,” என்றாள்.

“அப்படியா?” என்று நக்கலாகச் சிரித்தவன் எழுந்து, ஜாக்கியிடம், “ஜாக்கி, கோ,” என்று வெளியே வாசலைக் காட்டினான்.

“ஐயோ, கட்டி வைக்கலையா?” என்று மீண்டும் அவன் பின்னே வந்து நின்று கொண்டாள்.

“தேவையில்லை யது, அவன் நான் கூப்பிடாம உள்ள வரவும் மாட்டான், யாரையும் உள்ளே விடவும் மாட்டான்,” என்றான்.

அவனை அதிர்ச்சியாகப் பார்த்த நந்தினியைத் திரும்பிப் பார்த்தவன், “இப்ப வரச் சொல்லு உன் அப்பாவை,” என்று சிரித்தான்.

அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க,

அவள் அதிர்ந்த விழிகளைக் கண்டு சத்தமாகச் சிரித்தவன், “உன்னால எனக்குப் பிரச்னை வரும்னு அக்கறையில் உன் அப்பா வந்ததா சொன்ன. இப்போ நீதான் என்கிட்டே வசமா மாட்டிக்கிட்டே. நான் இல்லாம நீ இந்த இடத்தை விட்டு வெளிய போக முடியாது. காட் இட்?” என்று வில்லன் போல அபிமன்யு பேசினான்.

“வாட்?” என்று அதிர்ந்தவள், பின் அவன் விளையாட்டிற்குப் பேசுவதை புரிந்துகொண்டு, “அப்படி ஒரு பிரச்னை உங்களால் வராதுன்னு நம்புறேன்,” என்றாள்.

“அவ்ளோ நம்பிக்கையா யது என் மேல?” என்றபடி அவளை சோபாவை காட்டி அமரச் சொன்னான்.

“ம்ம்ம்… அப்படியும் சொல்லலாம். ‘யது’ன்னு என் பெயரை நீ கூப்பிடற விதத்துலயே உன்னால எனக்கு எந்தப் பிரச்னையும் வராதுன்னு நினைக்கிறேன்,” என்று சிரித்தாள்.

“தேங்க்ஸ் ஃபார் தி டிரஸ்ட் யது,” என்றவன், “ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்றியா? ஒரே கசகசன்னு இருக்கு. குயிக்கா ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடறேன்,” என்றான்.

அவளும் சிரித்துக்கொண்டே, “ஓகே,” என்றாள்.

“நான் வர வரைக்கும் போர் அடிச்சா, ஃபிரிட்ஜ்ல பால் இருக்கு. எடுத்து காபி, டீ என்ன வேணுமோ போட்டு குடிக்கலாம்,” என்றபடி மாடிப்படி ஏறினான்.

“கெஸ்ட்டையே காபி போட சொல்ற முதல் ஆள் நீதான் அபி,” என்று எழுந்து கிச்சனைத் தேடினாள்.

“உனக்கு லெஃப்ட்ல இருக்கு,” என்றவன், “நான் உன்னை கெஸ்ட்டாவே நினைக்கலையே,” என்றவன், “இன்னும் கொஞ்சம் போரிங்கா இருந்தா எனக்கும் சேர்த்து ஒரு கப்,” என்றுவிட்டு மேலே ஓடினான்.

அவனைப் பார்த்துச் சிரித்தபடி கிச்சனுக்குள் நுழைந்தாள்.

சூடாக ஏலக்காய் டீயை போட்டு, இரண்டு கப்களில் ஊற்றியவள் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

அபிமன்யு வீட்டு வாசல் முன் ஜாக்கி நின்று நந்தினியையே பார்த்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவள் அப்படியே நின்றுவிட்டாள். ஜாக்கியும் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்ததே ஒழிய, இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஒரு வழியாகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டவள், “அபிதானே அவன் சொல்லாம ஜாக்கி வீட்டுக்குள்ள வராதுன்னு சொன்னான்? அப்புறம் எதுக்கு நான் பயப்படணும்? அவனை கண்டுக்காத மாதிரியே நாம போவோம்,” என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டவள், மெல்ல நடந்து வந்து மேஜையில் டீ ட்ரேயை வைத்தாள். ஜாக்கியை ஒருமுறை பார்த்தாள்.

அதுவும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது.

அவனைப் பார்த்துச் சிரித்தவள், “குட் பாய்,” என்று டீயை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் குளித்துவிட்டு அபிமன்யு படிகளில் இறங்கியவன், “ஏலக்காய் டீயா?” என்றான்.

“ம்ம்ம்… ஆமா,” என்று சிரித்தபடி “ஏன் அபி உன் வீட்ல யாரும் வேலைக்கு ஆள் இல்லையா இங்க யாரையுமே காணோமே எப்படி தனியா இங்க இருக்கீங்க” என்றபடி குரல் வந்த திசையை நோக்கி நந்தினி திரும்ப, அந்த நேரம் அவள் பின்னிருந்து சோபாவைத் தாண்டி, கைகளை நீட்டி மேஜையில் இருந்த டீயைக் குனிந்து எடுத்தான் அபிமன்யு.

அவள் முகத்தருகே அவன் முகம் உரசும் தூரத்தில் இருக்க, அதைச் சற்றும் எதிர்பாராதவள் திரும்பி அவனைப் பார்த்தாள். சரியாக அபிமன்யுவும் டீ கப்பை எடுத்துக்கொண்டே திரும்ப, இருவரின் இதழும் உரசும் தூரத்தில் நெருங்கி இருந்தது.

இருவரின் விழிகளும் நேருக்கு நேராகச் சந்தித்துக்கொண்டன. பார்வை பரிமாற்றம் மட்டுமே அங்கு இருந்தது. வார்த்தைகளுக்கு அங்கு வேலையில்லாமல் போய்விட்டது.

சிறிது அசைந்தாலும் உதடுகள் உரசிக்கொள்ளும். அபிமன்யுவின் பார்வை நந்தினியின் விழிகளில் இருந்து கீழிறங்கி அவள் உதடுகளில் படிந்தது. அதை நெருங்கும் ஆசை அவன் இதயத்தில் தோன்ற, அதைச் செயல்படுத்த அவன் உள்ளம் தூண்டியது. அதற்குத் தயாரானவன், உரசும் தூரத்தில் இருந்த நந்தினியின் இதழைச் சுவைக்க நெருங்கினான். நந்தினியும் அவளையும் அறியாமல் கண்களை மூடினாள்.

நந்தினி விழிகளை மூடியதும் தனக்கான சம்மதமாக வார்த்தை பரிமாற்றங்களில் தங்கள் காதலை சொல்லாமலேயே எடுத்த எடுப்பில் முத்த பரிமாற்றம் செய்ய தயாரானார்கள் இருவரும் 

EPISODE 8

கண்களை மூடி இருந்தவளிடம் மெல்ல நெருங்கினான் அபிமன்யு.

அந்த நேரம் பார்த்து வாசலில் இருந்த ஜாக்கி “வவ் வவ்” என்று கத்தி, இருவர் நினைவுகளையும் நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தது.

சட்டென்று எழுந்துகொண்ட அபிமன்யு, தலைமுடியை அழுந்தக் கோதி தன் மனநிலையைச் சமன் செய்தவன், நந்தினி போட்ட டீயைக் குடித்தான். புருவம் உயர்த்தி, “குட்,” என்றபடி நடந்து வந்து நந்தினியின் எதிரே இருந்த சோபாவின் முன் அமர்ந்தான்.

அவனிடம் சண்டையிட வைத்தவள், இப்போது அவளையும் அறியாமல் அவனிடம் சரணடைந்திருந்தாள். அவனும் தான்.

டீயைச் சுவைத்தபடி மென்மையாகச் சிரித்தவள், “தேங்க்ஸ்,” என்றாள்.

“அப்புறம், நம்ம மீட்டிங் பத்தி பேசலாமா யது?” என்றான் அபிமன்யு.

“என்னை யதுன்னு கூப்பிடாத அபி,” என்றாள்.

“ஏன்?” என்றான்.

“நீ இப்படி என்னை கூப்பிட்டா என்னால எதையும் யோசிக்க முடியல. நான் பேச நினைச்சது எல்லாம் மறந்து போயிருச்சு,” என்றாள், கையில் இருந்த டீ கப்பை வருடியபடி.

நந்தினி காதல் மொழி பேசவில்லை. ஆனால் அவள் பேசிய வார்த்தைகளில் அபிமன்யுவிற்கு காதல் தெரிந்தது. அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன், “அப்போ நம்ம பிசினெஸ் மீட்டிங்கை இன்னொரு நாள் வெச்சுக்கலாம் யது,” என்றான்.

“ப்ளீஸ் அபி,” என்று அவள் நிமிர்ந்து அபிமன்யுவைப் பார்க்க,

“சொல்லு யது,” என்றான் வேண்டுமென்றே.

நந்தினியின் முகம் அவன் அழைப்பில் செவ்வனமாய் சிவந்துவிட்டது.

அவள் கையில் இருந்த டீ கப்பை மேஜையில் வைத்தவள், “நான் கிளம்பறேன்,” என்று எழுந்தாள்.

“ஏன் யது? டீ குடிக்கவே இல்லை நீ. ஏன் அதுக்குள்ள கிளம்பிட்ட? இப்போதானே ரெண்டு பேரும் பேசவே ஆரம்பிச்சோம்,” என்றான்.

“இல்லை, நான் கிளம்பறேன். இன்னொரு நாள் நாம மீட் பண்ணலாம்,” என்று அவனைப் பார்க்க முடியாமல் வேகமாக வாசல் வரை சென்றவள், அங்கே ஜாக்கி நின்றதைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட, அவள் பின்னால் வந்தான் அபிமன்யு.

“நான் தான் சொன்னேனே, ‘உள்ளே வரது ஈசி. ஆனா வெளிய போகணும்னு நினைச்சா, அது நான் மனசு வெச்சாதான் முடியும்’,” என்றான்.

நந்தினி அவனைப் புரியாமல் பார்க்க,

“நான் என் கெஸ்ட் ஹவுஸ்க்கு வரவங்களைப் பத்தி சொன்னேன்,” என்றவன், “ஜாக்கி!” என்று கையில் இருந்த அவன் கூண்டை சுட்டிக்காட்ட, அடுத்த நிமிடம் அவன் ஓடிச் சென்று திறந்திருந்த கூண்டிற்குள் போய் சமத்தாக அமர்ந்துகொள்ள,

“தேங்க்ஸ்,” என்று அவனைத் திரும்பிப் பார்த்தவள், “அப்போ நான் கிளம்பறேன்,” என்றாள்.

“என்னவோ தெரியல யது, நம்ம ஃபர்ஸ்ட் மீட்லையே என் மனசுக்குள்ள வந்துட்ட,” என்றான்.

அவனை விழி விரித்துப் பார்த்தவள், “அபி, திஸ் இஸ் ஃபாஸ்ட்,” என்றாள்.

“ஃபாஸ்ட்தான் யது. பட் எனக்கு இது ரொம்ப ஸ்லோவா இருக்கு. ஐ கான்ட்,” என்றவன், “எப்போ என் வீட்டுக்கு என்னோட வரப் போற?” என்றான்.

“பிசினெஸ் ப்ரோபோசல் பத்தி பேச என்னை மீட் பண்ண வரச் சொல்லிட்டு, சார் இப்போ மேரேஜ் ப்ரோபோசல் பேசிட்டு இருக்கீங்க,” என்று சிரித்தாள்.

“எஸ் யது. நீ ஓகேன்னு மட்டும் சொல்லு. அடுத்த நாளே உன் வீட்டுக்கு என் குடும்பத்தோட வரேன், உன்னைக் கல்யாணம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்க,” என்றான்.

“ஓகே சொல்லலைன்னா?” என்று அவனை குறும்பாகப் பார்த்தாள்.

“உன்னை இந்தக் கெஸ்ட் ஹவுஸ்ல வெச்சு ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிருவேன்,” என்றான்.

“அப்பா, பயந்துட்டேன்,” என்று காரில் ஏறியவள், நந்தினி என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று ஒரு எதிர்பார்ப்போடு அவளைப் பார்த்தான்.

அவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்துக்கொண்டே, “வீட்ல பேசிட்டு சொல்றேன்,” என்றாள்.

“தேங்க்ஸ் யது,” என்றவன், “உடனே சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை. வீட்டுக்குப் போனதும் பேசிட்டு சொன்னா போதும்,” என்றான்.

“ம்ம்,” என்று சிரித்துக்கொண்டே சொன்னவள், காரைக் கிளம்பினாள் வீட்டிற்கு.

அவள் செல்லும் வரை அப்படியே நின்று இருந்தவன் ஒரு மென் புன்னகையோடு வீட்டிற்குள் சென்றான். “ஜாக்கி,” என்று அழைக்க, அவன் அழைப்பிற்காக காத்திருந்தவன் போல அபிமன்யுவின் பின்னால் ஓடினான்.


இங்கே, அஞ்சனாவும் தர்மனும் ஆளுக்கு ஒரு பக்கம் அக்னியின் கையைப் பிடித்து, சூடாகக் காய்ச்சிய எண்ணெய்யை அவன் கைகளில் வைத்து தேய்த்துவிட்டுக்கொண்டிருந்தனர்.

“நல்லா தேய்ச்சு விடு அஞ்சனா. இவன் தலைக்கு எண்ணெய் வெச்சு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? நான் எண்ணெய் வெச்சுவிடறேன்னு கூப்பிட்டா, ‘உடனே வேலை இருக்கு, மார்க்கெட் போகணும்னு’ கிளம்பிடுவான்,” என்று சகுந்தலாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் இதழ்யா.

“நீ கவலைப் படாத அத்தை. இன்னைக்கு பாரு, மாமனை எண்ணெயிலேயே குளிப்பாட்டி விட்டுடறேன்,” என்று தர்மன் தீவிரமாக எண்ணெய் தேய்த்துவிட்டுக்கொண்டிருந்தான் அக்னிக்கு.

“டேய், நான் அக்னிடா! இந்த எண்ணெய் எல்லாம் என்னைக் குளிர வைக்குமா?” என்றவன் எழுந்து செல்லப் போக,

“டேய், பேசாம உட்கார மாட்டியா? எப்போ பார்த்தாலும் நாங்க வந்துதான் உனக்கு எண்ணெய் குளியல் வைக்கணுமா? உடம்பை ஒழுங்கா பார்த்துக்கத் தெரியாது உனக்கு,” என்ற அஞ்சனா ஒரு கரண்டி நல்லெண்ணெய்யை அக்னியின் தலையில் வைத்து அடித்துத் தேய்த்தாள்.

“ஷ்! அஞ்சனா, மெதுவாடி. கண்ணெல்லாம் எரியுது எனக்கு,” என்றவன் கண்களை இழுக்க மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தான்.

“எரியாம என்னடா பண்ணும்? அவ்ளோ சூடு இருக்கு உடம்புல,” என்று திட்டிக்கொண்டிருந்தார் இதழ்யா.

“என்ன, மாப்பிளைக்கு எண்ணெய் தேய்ப்பு எல்லாம் பலமா இருக்கு போல,” என்று அங்கு வந்தார் ராஜன்.

“வந்துட்டாரா இந்த ஆளு,” என்று கண்களை மூடியபடி ராஜனின் குரலைக் கேட்டு நினைத்துக்கொண்டான் அக்னி.

“ஏன், கவனிக்கக் கூடாதா? அவனுக்கு சூட்டு உடம்பு. இப்படி அடிக்கடி எண்ணெய் தேய்ச்சு விட்டாதானே கொஞ்சமாச்சும் குறையும்? நீயும் நானும் சொன்னா எங்க கேட்கிறான் அவன்? அதான் அஞ்சனா வந்ததும் வேலையை ஆரம்பிச்சுட்டா,” என்றார் இதழ்யா.

“அவன் தான் வேற விதமா சூட்டை தனிச்சுட்டு இருக்கானே. இதுல எண்ணெய் வேற தேய்ச்சு விடணுமா?” என்று நினைத்த ராஜன்,

“ஏண்டி, இன்னும் எத்தனை நாளைக்கு அஞ்சனாவையே வேலை வாங்குவ? நாளைக்கு அவளுக்குக் கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போய்ட்டா, அப்பவும் வந்து அஞ்சனா தான் தேய்ச்சு விடணுமா?” என்றார் ராஜன்.

“அதுவும் சரிதான்,” என்ற இதழ்யா, “சீக்கிரமே அதுக்கு ஏதும் ஏற்பாடு பண்ணணும்,” என்றார்.

“நீ எதுவும் பண்ண வேண்டாம். உன் மகன் ஏற்கனவே ஏற்பாடோடதான் இருக்கான்,” என்றார்.

“என்ன ஏற்பாடு?” என்று அனைவரும் அவரைப் பார்க்க,

இதை கேட்டுக்கொண்டு இருந்த அக்னி, “என்ன சொல்றாரு இந்த ஆளு? என்ன ஏற்பாடு நான் பண்ணி வெச்சிருக்கேன்?” என்று யோசித்துக்கொண்டிருக்க,

“அதான் சார், அடிக்கடி மார்க்கெட் வீட்ல தனியா தூங்குறாரே! அங்கே போய் தான் தினமும் ராத்திரி சூட்டை தணிக்கிறானே,” என்று அவர் சொன்னாரே பார்க்கலாம்!

அதைக்கேட்டு மொத்தக் குடும்பமும் ஆடிப்போக, அக்னியோ முகத்தில் வழிந்த எண்ணெய்யை அவசரமாகத் துடைத்தவன், “யோவ் அப்பா! வெச்சேன்னு பார்க்கிறேன். இல்லைன்னா இந்த நேரம் நீ சொன்னதுக்கு நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது,” என்றான்.

“இப்போ நான் என்னத்தை சொல்லிட்டேன்னு எல்லாரும் இப்படி பார்க்குறீங்க? நீயேன்டா என்னை திட்டுற? மார்க்கெட் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே நீ வாங்கி வெச்சிருந்த பீரை பார்த்தேன். இதுக்கு அதைத்தான் சொன்னேன்,” என்று ராஜன் சமாளிக்க,

“ச்சே! இது தானா? நான் கூட என் அத்தை மகன் யாரையோ கூடி வந்து அங்கே கொடுத்தானாம், நடத்துதோன்னு நினைச்சுட்டேன்,” என்ற அஞ்சனா, அக்னியை அமரவைத்து அவனுக்கு ஷாம்பு போட்டுத் தேய்த்துவிட ஆரம்பித்தாள்.

அக்னியோ ராஜனை முறைக்க, இங்கு ராஜனோ “என்னடா?” என்பது போல அவனைப் பார்த்தார்.

“நீ தனியா சிக்குவ இல்ல? அப்போ உனக்கு இருக்குய்யா,” என்று அவரை முறைத்துக்கொண்டு இருக்க,

அப்போது தம்பிரானிடம் இருந்து அக்னிக்கு போன் வந்தது.

“டேய், தம்பிதான் போன் பண்றான். என்னன்னு கேளு,” என்ற இதழ்யா, அக்னியின் போனை ஆன் செய்து அதை ஸ்பீக்கரில் போட்டு அவனிடம் நீட்டினார்.

“ஹலோ அக்னி, எங்க இருக்க?” என்றான் தம்பி. அவன் குரல் சற்றுப் பதற்றமாக இருந்தது.

“வீட்லதான். ஏன்டா?” என்றான்.

“நீ உடனே கிளம்பி மார்க்கெட்டுக்கு வரியா? இங்கே ஒரு பிரச்சினை. நீ வந்தாதான் இதை சரி செய்ய முடியும்,” என்றான்.

“இந்தா, அடுத்த பஞ்சாயத்து வந்திருச்சு உன் புள்ளைக்கு! நான் கூட இவன் அளவுக்குக் கட்டப்பஞ்சாயத்து செஞ்சு வைக்கலடி,” என்று அழுதுகொண்டு ராஜன், “அக்கா, எனக்கு கொஞ்சம் சூடான காபி போட்டுக் கொடுக்கிறியா?” என்று கீழே செல்ல, சகுந்தலாவும் இதழ்யாவும் அவனோடு சென்றனர்.

“ஏய், இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? சீக்கிரம் தேய்ச்சு விடுங்க, நேரம் ஆச்சு,” என்று அஞ்சனாவையும், தர்மனையும் அதட்டினான்.

“இரு மாம்ஸ், நல்லா தேய்ச்சுக் குளிச்சாதானே எண்ணெய் பிசுக்கு எல்லாம் போகும்?” என்று வேக வேகமாக அவனுக்கு சோப்பு போட்டுவிட்டான் தர்மன்.

குளித்து, கிளம்பி தன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவனிடம், “ராசா, எண்ணெய் தேய்ச்சு வேற குளிச்சிருக்க. வீட்டுக்கு நேரத்துக்கு வந்திருயா. காத்து கருப்பு அண்டிராம பத்திரமா இரு,” என்றார் பழனி.

“சரி பழனி, நான் நேரமே வந்துடறேன்,” என்றவன் அங்கிருந்து கிளம்பி நேராக மார்க்கெட்டிற்கு வந்தான். அங்கே ஒரே அமைதியாக, அதனதன் வேலை போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தவன்,

“என்ன இது? இங்கே எந்த பிரச்சினையும் நடந்த மாதிரியே தெரியலையே?” என்று யோசித்தபடி தம்பிக்குக் கால் செய்தான்.

“ஹலோ மச்சி, எங்கடா இருக்க? சீக்கிரம் வாடா,” என்றான் தம்பி அதே பதற்றத்துடன்.

“டேய் லூசு! வா வான்னா எங்கடா வரது? நான் இப்போ மார்க்கெட்ல தான்டா இருக்கேன். நீ எங்க போய் தொலைஞ்ச?” என்றான் கடுப்பாக.

“ஓ சாரிடா மச்சி! நம்ம மார்க்கெட் வீட்டுக்கு வரியா?” என்றவன் அவசரமாக போனை வைத்தான்.

“என்ன ஆச்சு?” என்று யோசனையோடு வண்டியை கிளப்பி மார்க்கெட்டிற்கு வெளியே இருக்கும் வீட்டிற்கு கிளம்பினான்.

மார்க்கெட்டை தாண்டி வீடு இருக்கும் இடத்திற்கு வரும்போதே அந்த இடம் கூட்டமாக இருந்தது. அவர்களை யோசனையோடு பார்த்தபடி அக்னி செல்ல,

அவன் வண்டிச் சத்தம் கேட்டதும் நின்று இருந்தவர்கள் விலகி அவனுக்கு வழி விட்டனர்.

கூட்டம் விலகியதும் தான் அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்க முடிந்தது அக்னிக்கு. அவன் வீட்டு முற்றத்தில் இருந்த தூணை இருக்கப் பற்றிக்கொண்டு ஆராதனா அழுதுகொண்டு அமர்ந்திருக்க, அவளை தன்னோடு வரச் சொல்லி சாமிநாதன் அவளைப் போட்டு அடித்துக்கொண்டிருக்க, அவன் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிக்கொண்டு இருந்தாள் தூரிகா.

“மாமா, சொன்னா கேளுங்க. பாவம் அவ சின்னப் பொண்ணு. ஏதோ தெரியாம இங்கே வந்துட்டா. நான் அவளைப் பேசி கூட்டிட்டு வரேன். அவளை விடுங்க,” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தாள்.

ஆராதனா அழுவதைப் பார்த்ததுமே அக்னியின் கழுத்தெலும்புகள் கோபத்தில் புடைத்துக்கொண்டு வர, போதாதற்கு தூரிகா சாமிநாதனின் காலைப் பிடித்து கெஞ்சிக்கொண்டு இருந்ததைப் பார்த்து மேலும் அவனுக்கு கோபம் அதிகமாகியது.

EPISODE 9

தூரிகா ஆராதனாவை மார்போடு அணைத்து அழுதுகொண்டிருந்தாள். அவர்களை அப்படிப் பார்க்கவே பாவமாக இருந்தது அக்னிக்கு.

“டேய் தம்பி, முதல்ல இவங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட எதுவும் வாங்கிட்டு வா,” என்றவன், “ஆராதனா என்ன சாப்பிடுவா? அவளுக்குத் தனியா எதுவும் சாப்பிட வாங்கணுமா?” என்றான் தூரிகாவிடம்.

அழுதுகொண்டிருந்தவள் நிமிர்ந்து அக்னியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். “நீங்க எங்களுக்குச் செய்த உதவியே போதும். எங்களுக்கு ஏதும் வேணாம். என்னையும், ஆராதனாவையும் அந்தப் பாவி கண்ணுல படாத மாதிரி ஏதாவது ஒரு ஊருக்கு பஸ் ஏத்திவிட்டுடுங்க,” என்றாள்.

அவள் அழுத முகத்தையும், சோர்ந்த கண்களையும் பார்த்தவன், “இந்த ஊரை விட்டு போய்ட்டா எல்லாம் சரியாகும்னு நினைக்குறியா? ஊர் பேர் தெரியாத இடத்துக்கு நீ போறேன்னு வெச்சுக்க. அங்கே உன்னையும் ஆராதனாவையும் தேடி வந்து அவன் திரும்பவும் இங்க கூட்டிட்டு வரமாட்டான்னு என்ன நிச்சயம்?” என்றான் அக்னி.

தூரிகா அவன் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் தலையை குனிந்து கொள்ள,

“இங்கே பாருங்க சிஸ்டர். இப்போதைக்கு நீங்க இங்கே இருக்கிறதுதான் உங்க ரெண்டு பேருக்கும் சேஃப். அவனை இப்போதைக்கு என் மச்சி அடிச்சு உதைச்சு அனுப்பி வெச்சிருக்கான். நாளைக்கே, ‘என் பொண்டாட்டி, புள்ளையைப் பிடிச்சு வெச்சுட்டு அவன் கூட அனுப்ப முடியாதுன்னு சொல்றோம்னு’ போலீஸோட வந்து உங்களைக் கூப்பிடலாம். நீங்க தனியா இருந்தா இதை எல்லாம் உங்களால சமாளிக்க முடியுமா?” என்றான் தம்பிரான்.

அவன் பேசியதைக் கேட்டு ஒருமுறை அக்னியைப் பார்த்தவள், “இல்லை,” என்று தலையை ஆட்டினாள்.

“ம்ம்ம்… பாருங்க, நீங்களே முடியாதுன்னு சொல்றீங்க. உங்க புருஷன் ஏதாவது பிரச்சனை பண்ணிட்டு திரும்ப வந்தா, அதை அக்னி பார்த்துப்பான். நீங்க கவலைப்படாதீங்க. தைரியமா இங்கேயே இருங்க,” என்றான் தம்பிரான்.

“என்னடா, தூரிகாவையும் ஆராதனாவையும் அக்னிகிட்டே இருந்தாதான் பாதுகாப்பா இருக்கும்னு சொல்றாங்களேன்னு” தானே பார்க்கிறீங்க?

சாமிநாதன் காலைப் பிடிச்சு தூரிகா கெஞ்சுவதைப் பார்த்து, நம்ம அக்னிக்குக் கோபம் தலைக்கு ஏறிடுச்சு. வண்டியை நிறுத்திட்டு நேரா வந்தவன், சாமிநாதன் உயரத்திற்குத் தன் காலைத் தூக்கி அவன் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி விட்டான் அக்னி. அவ்வளவுதான், அவன் “அம்மா”ன்னு நெஞ்சைப் பிடிச்சிட்டுத் தரையில் விழுந்து கிடந்தான்.

“நானும், ‘போனா போகட்டும், தேவையில்லாம புருஷன் பொண்டாட்டி பிரச்சனைக்குள்ள வரக்கூடாதுன்னு’ அமைதியா இருந்தா நீ என்னடா, எப்போ பார்த்தாலும் ஆராதனாவையும் உன் பொண்டாட்டியையும் ஏழரையில இழுத்துவிட்டுட்டே இருக்க?” என்று தரையில் கிடந்தவன் நெஞ்சில் காலை வைத்து அழுத்தினான்.

சாமிநாதன் அவன் அருகில் நின்று இருந்த தூரிகாவைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவன், “எங்க குடும்பத்துக்குள்ள ஆயிரம் பிரச்சனை வரும், போகும். ஆனா அதை வீட்டுக்குள்ளேயே வெச்சு முடிக்க இவளுக்குத் தெரியல. இந்த ஊருக்கு நாங்க வந்தே ஒரு மாசம்தான் ஆச்சு. அதுக்குள்ள உன்னை பார்க்க ஓராயிரம் தடவை இவ வர்றா. இவ பின்னாடியே இவளும் வர்றா,” என்று இன்னமும் பயத்தில் தூணை இருக்கப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த ஆராதனாவைப் பார்த்து கூறினான்.

“டேய், உன் பொண்டாட்டி என்னைப் பார்க்க எங்கடா வந்தா?” என்றான்.

“அதான், தினமும் நீ இருக்கிற நேரமா பார்த்து மார்க்கெட்டுக்கு வர்றாளே,” என்ற சாமிநாதன் தன் மேல் இருந்த அக்னியின் காலைத் தட்டி விட்டான். எழுந்து சட்டையை சரி செய்துகொண்டே, “இங்கே பாரு. இது என் குடும்ப விஷயம். நீ இதுல தேவையில்லாம தலையிடாது, சரியா?” என்றவன் அவனைத் தாண்டி ஆராதனாவிடம் செல்ல,

“ம்ஹும்! ரவுடி மாமா, எனக்குப் பயமா இருக்கு,” என்று இவ்வளவு நேரம் தூணைக் கட்டிக்கொண்டிருந்தவள் ஓடிவந்து அக்னியின் காலைக் கட்டிக்கொண்டாள்.

“ஏய்! உன் அப்பன் நான் இங்கே இருக்கேன். இவ்வளவு நேரம் நான் கூப்பிட்டும் வராம, இப்போ அவன் வந்ததும் உன் ஆத்தாக்காரி மாதிரி நீயும் அவன் பின்னாடி போறியா? வாடி இங்கே,” என்று ஆராதனாவை அக்னியிடம் இருந்து வாங்க வந்தான் சாமிநாதன்.

குழந்தையைப் பின் இழுத்துக்கொண்ட அக்னி, “அப்பான்னு மட்டும் வாய் நிறைய சொல்றியே, நீ ஆராதனாவை ஒருமுறை கூட கொஞ்சிப் பார்த்ததே இல்லை. இப்படி இருந்தா குழந்தை எப்படிடா உன்கிட்ட வரும்?” என்றான் அக்னி.

“ஓஹோ, கொஞ்சி கூப்பிட்டா தான் வருவாளா?” என்றவன், சாமிநாதன் பின்னே அரண்ட விழிகளோடு நின்று இருந்த தூரிகாவைப் பார்த்தான். “இவளையும் என்கிட்டே சொன்ன மாதிரி கொஞ்சிக் கொஞ்சி பேசித்தான் இங்கே வர வெச்சியா?” என்றான்.

அதை கேட்டதும் தூரிகா “ஐயோ” என்று வாயைப் பொத்திக்கொண்டு அழ,

அக்னிக்கோ அதற்கு மேல் தாங்க முடியவில்லை, சாமிநாதனின் குத்தல் பேச்சை.

“தம்பிஈஈ!” என்று அந்த இடமே அதிரும்படி அலறினான்.

“சொல்லுடா,” என்று அக்னியின் கோபம் புரிந்து அவன் அருகில் வேகமாக வந்த தம்பியை ஏறிட்டவன்,

ஆராதனாவை தம்பி கையில் கொடுத்தவன், “இவ அம்மாவையும் இவளையும் கூப்பிட்டு உள்ளே போ,” என்றான்.

தம்பி தயங்கி நின்று, தூரிகாவைப் பார்க்க,

“இப்போ உள்ள போறியா? இல்லை உன் பொண்ணு கண்ணு முன்னாடி இவன் துடிச்சு சாகுறதை நீயும் உன் பொண்ணும் பார்க்கப் போறீங்களா?” என்று கர்ஜித்தான்.

அதை கேட்ட அடுத்த நொடி ஓடிவந்து, தம்பியின் கையில் இருந்த ஆராதனாவை வாங்கியவள், “அவரை ஒண்ணும் பண்ணிடாதீங்க,” என்று பேசி முடிந்திருக்கவில்லை.

அக்னியின் கோபக் கனல் அவள் அருகில் நின்றிருந்த தம்பியைப் பார்க்க, “அட, என்ன சிஸ்டர் நீங்க? சனியன் ஒழியப் போகுதுன்னு சந்தோஷப்படாம, அவனுக்காக வக்காலத்து வாங்கிறீங்க? நீங்க வாங்க,” என்று அவளைக் கையைப் பிடித்து அவசரமாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றவன், “என் மச்சி வந்து கூப்பிடாம நீங்க கதவைத் திறந்து வெளிய என்ன நடக்குதுன்னு பார்க்கக்கூடாது,” என்று இருவரையும் உள்ளே விட்டு வெளியே கதவை அடைத்தான்.

அவன் கதவை சாற்றுவதற்கு முன்னமே, அக்னி இங்கே சாமிநாதனை அடித்துத் துவைத்துக்கொண்டிருந்தான்.

அதை கதவு மூடும் வேளையில் பார்த்த தூரிகா, அந்தக் காட்சியை ஆராதனா பார்த்துவிடக்கூடாது என்று அவள் கண்களைப் பொத்திக்கொண்டாள்.

இங்கே அக்னி சாமிநாதனிடம், “என்னடா சொன்ன? உன் பொண்டாட்டியை இப்படி என்கூடச் சேர்த்துப் பேசறியா? உனக்கு வெக்கமா இல்ல? நீயெல்லாம் என்னடா மனுஷன்? உன் பொண்ணுக்கு உன்னைக் கண்டாலே பிடிக்கல. அவள் அம்மாவை உன்கிட்டே இருந்து காப்பாத்த சொல்லி என்கிட்டே வர்றாடா. அப்போ எவ்வளவு வெறுத்துப் போயிருப்பா உன்னால? உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம்? கட்டின பொண்டாட்டியை ஒழுங்கா வெச்சுப் பார்த்துக்க துப்பில்லை. பெத்த குழந்தைகிட்ட அப்பாவா பாசமா நடந்துக்கத் தெரியல. நீயெல்லாம் எதுக்குடா இருக்க?” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனை அடித்துத் தோலுரித்தான் அக்னி.

அங்கே கூடி இருந்த மொத்தக் கூட்டமும் இந்தக் காட்சியை வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் யாரும் அக்னியைத் தடுக்க முன்வரவில்லை. ஏனென்றால் அவன் கோபம் பற்றி அனைவர்க்கும் தெரியும். அதைவிட அவன் ஒழுக்கம் பற்றி குறை கூற இங்கே யாரும் இல்லை. அந்த அளவுக்கு அக்னி ஒழுக்கமானவன்.

சாமிநாதன் பேசிய பேச்சிற்கு அவனுக்கு இது தேவைதான் என்று அனைவரும் அவன் அடி வாங்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

சட்டை கிழிந்து உடலெல்லாம் இரத்த காயத்தோடு இருந்தவனைப் பார்த்து, “இதற்கு மேல் அடித்தால் எங்கே செத்துவிடுவானோ,” என்று தம்பிரான் தான் அவசரமாக உள்ளே புகுந்து அக்னியைப் பிடித்துக்கொண்டான்.

“விடுடா என்னை! விடுடா! இவனை இன்னைக்கு நான் கொல்லாம விடப்போறதில்லை,” என்று திமிறியவனை தம்பிரானோடு சேர்ந்து அவன் ஆட்களும் வந்து பிடித்துக்கொள்ள,

குப்பை மேட்டில் விழுந்து கிடந்த சாமிநாதன் தட்டுத் தடுமாறி அருகில் இருந்த குப்பைத்தொட்டியை பிடித்து மெதுவாக எழுந்தவன்,

“டேய், என்னையே அடிச்சுட்டே இல்ல? உன்னை… உன்னை சும்மா விடமாட்டேன்டா. அவங்க ரெண்டு பேரையும் உள்ள வெச்சு எவ்வளவு நாள் பூட்டி வெக்கிறேன்னு நானும் பார்க்குறேன். ஒருநாள் இல்ல ஒருநாள் அவளுக வெளிய வந்துதானே ஆகணும்?” என்றவன் அங்கிருந்து தடுமாறி நடந்து அங்கிருந்து செல்ல,

“என்னை விடுடா! இவனை இப்படியே அனுப்ப எனக்கு மனசு வரல. என்ன சொல்லிட்டு போறான்? இவங்களை எத்தனை நாளைக்கு இங்கே வெச்சுப்பேன்னு தானே கேட்கிறான்? நான் சாகுற வரைக்கும் அவங்க ரெண்டு பேரையும் நான் பார்த்துக்குவேண்டா,” என்று சாமிநாதன் சென்ற திசையை நோக்கி கத்தினான் அக்னி.

“அம்மா, அம்மா, நாம அப்பாகிட்டே போக வேணாம். எனக்கு பயமா இருக்கு. நீயும் நானும் இந்த ரவுடி மாமா கூடவே இருக்கலாம்,” என்று தூரிகாவின் முகத்தைப் பிடித்து கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

“ஆரா, அழாத. நாம அப்பாகிட்டே போக வேணாம். உன் அப்பா கண்ணுல படாம எங்கேயாச்சும் தூரமா போயிடலாம்,” என்று பிள்ளையை மார்போடு கட்டிக்கொண்டு அழுதாள் தூரிகா.

“நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், நீ வேற ஊருக்கு போறதுலையே குறியா இருக்க. நீ போறதுன்னா எங்க வேணா போய்க்க. ஆராதனா என்கிட்டேதான் இருப்பா. அவளை நான் உன்கூட அனுப்பிறதா இல்லை,” என்று தூரிகாவிடம் வந்தவன் ஆராதனாவை அவளிடம் இருந்து பிடுங்கிக்கொண்டான் அக்னி.

“என்ன பண்றீங்க? முதல்ல என் பொண்ணைக் கொடுங்க,” என்று அவன் அருகில் வந்தவளைத் திரும்பி அக்னி முறைக்க, அவன் கோபக்கனல் பார்வையை கண்டு அதிர்ந்தவள் அப்படியே நின்றாள்.

“டேய் தம்பி, போய் எங்க மூணு பேருக்கும் சாப்பிட வாங்கிட்டு வா,” என்றவன், கலைந்திருந்த ஆராதனாவின் தலைமுடியைச் சரி செய்தான். அவள் முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டு, “ஆரா குட்டி, உனக்கு சாப்பிட என்ன வேணும்டா?” என்றான் மென்மையாக.

“எ… ரவுடி மாமா… எனக்கு… எனக்கு பிரியாணி வேணும். அப்பாகிட்டே வேணும்னு கேட்டா வாங்கியே தரல,” என்றாள் மழலை மாறாமல்.

“ஏன், உன் அம்மாவை செஞ்சு தர சொல்ல வேண்டியதுதானே?” என்று தூரிகாவைப் பார்த்தவன், திரும்பி தம்பியைப் பார்க்க, “சரி மச்சி, நான் வாங்கிட்டு வரேன்,” என்று அவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

தூரிகாவைச் சட்டை செய்யாமல் அவளைத் தாண்டிச் சென்ற அக்னி, ஆராதனாவோடு சோபாவில் அமர்ந்தவன், அவளிடம் சிறிது பேசி கொஞ்சி விளையாட ஆரம்பித்தான்.


இங்கே, அக்னியிடம் அடி வாங்கிவிட்டு நேராக சாமிநாதன் சென்றது லட்சுமி கன்ஸ்ட்ரக்‌ஷனுக்குதான். செக்யூரிட்டி அவனைப் பார்த்ததும், “சார், என்ன ஆச்சு? இவ்ளோ காயம்?” என்று கேட்டுக்கொண்டிருக்க, “பாஸ் உள்ள இருக்காரா?” என்றபடி அவனிடம் வந்தான்.

சாமிநாதன் மீது இருந்து வந்த வாடையைச் சகிக்க முடியாமல் மூக்கைப் பொத்திய செக்யூரிட்டி, “அவர் இப்போ கிளம்புற நேரம் தான்,” என்றார்.

“சரி, அதுக்குள்ள நான் அவரைப் போய் பார்க்கிறேன்,” என்று உள்ளே செல்லப் போனவனை, “சார், இப்படியேவா உள்ள போவீங்க?” என்றான் அலங்கோலமாக இருந்த சாமிநாதனைப் பார்த்து.

அவனை முறைத்துவிட்டு உள்ளே செல்ல, அந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சாமிநாதனைச் செக்யூரிட்டியால் தடுக்க முடியவில்லை.

நேராக லிஃப்டிற்கு வந்தவன், லிஃப்டை அழுத்திவிட்டு காத்திருக்க, அவன் இருந்த கீழ் தளத்திற்கு வந்த லிஃப்ட் திறக்க, அதில் இருந்து வெளிப்பட்டான் அபிமன்யு.

EPISODE 10

ராசா மணி ஆறாகப் போகுது இன்னும் காணலையே. என்ன பண்ணிட்டு இருக்க? என்று பழனி அக்னிக்கு போன் செய்து கேட்டார்.

அவர் அழைத்ததும் தான் மணியை பார்த்தான் அக்னி. ஆராதனாவுடன் விளையாடிக் கொண்டிருந்ததில் அவளுடன் நேரம் செலவழித்ததில் மாலை ஆனதுகூட அவனுக்குத் தெரியவில்லை.

“கிழவி, நான் வந்த பஞ்சாயத்து இன்னும் முடியலை. நான் இன்னைக்கு வீட்டுக்கு வரமாட்டேன். மார்க்கெட் வீட்டிலேயே தங்கிக்கிறேன். அம்மா கிட்டயும் சொல்லிடு,” என்றான்.

“என்ன கண்ணு நீ? நான் தான் சொன்னேனே. என்ன பேச்சு கொடுத்திருக்கிறது? இன்றைக்கே எல்லாம் பஞ்சாயத்து பார்க்கணும்,” என்றார் கனிவான குரலில்.

“நான் வரலைன்னு தான் நினைச்சேன் கிழவி. ஆனால், இங்கே பிரச்சனை கொஞ்சம் பெருசு. இந்த பிரச்சனையை முடிச்சுட்டு வரலாம்னு பார்த்தேன்,” என்றான்.

“சரி, அப்போ மார்க்கெட் வீட்டிலேயே இருந்துக்கோ. வெளியே எங்கேயும் போகாத, சரியா?” என்றார்.

“ம்ம்ம் சரி கிழவி. அஞ்சனா, துருவ எல்லாம் என்ன பண்றாங்க?” என்றான்.

“அவங்க ரெண்டும் என்ன பண்ணிட்டு இருக்காங்க? அவன் ஒரு பக்கம் கோண நோண்டிட்டு காலையில இருந்து அப்புறம் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்துட்டு இருக்கான். உன் அம்மா கூட ஏதோ கதை அளந்துட்டு இருக்கா,” என்றார்.

“சரி சரி, இன்னைக்கு ஒரு நாள் எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நான் காலையில வீட்டுக்கு வந்துடுறேன்,” என்று சிரித்தான்.

“சரி ராசா, அப்போ நைட்டு உனக்கு நாட்டுக்கோழி குழம்பு செஞ்சு கொடுத்து விடட்டுமா? தலைக்கு எண்ணெய் வேற வச்சு குளிச்சிருக்க. நாட்டுக்கோழி சாப்பிட்டா உடம்புக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்,” என்றார்.

“சரி, கொடுத்துவிடு கிழவி,” என்றவன், ஆராதனாவை நினைவு கூர்ந்து, “கிழவி அப்படியே எனக்கு சில்லி சிக்கன் செஞ்சு கொடுத்துடுறியா? அதுவும் போன்லெஸ்ஸா வேணும், காரம் கம்மியா,” என்றான்.

“எப்பவும் கண்ணுக்குள்ள தண்ணி வர்ற அளவுக்கு காரமா சாப்பிடுவ. இன்னைக்கு என்ன, சில்லி சிக்கன் காரமே வேண்டாம்னு சொல்ற?” என்றார்.

“திங்கட்கிழமை நைட் டைமா இருக்கே. அதான் எதுக்கு காரத்தைச் சேர்த்துக்கிட்டுனு பார்த்தேன்,” என்று சமாளித்தான்.

“அதுவும் சரிதான். காரத்தை கோச்சுக்கிட்டா கோபம் குறையுமா? என் ராசாவுக்கு கோபம் மூக்குக்கு மேல எப்பவும் வந்துடும்,” என்றவர், “தெளிவாக நான் தம்பியை அனுப்புறேன், நீ கேட்டதெல்லாம் செஞ்சு கொடுத்து விடுகிறேன்,” என்று போனை வைத்தார்.

அவரிடம்  பேசிவிட்டுத் தன் மடியில் உறங்கும் ஆராதனாவைப் பார்த்தான். பாவம் குழந்தை. அழுது ஓய்ந்த அலுப்பில் நிம்மதியாக அவன் மடியில் பாதுகாப்பு உணர்வோடு உறங்கிக் கொண்டிருந்தது.

அவளை மெல்ல தூக்கிக்கொண்டு போய் உள்ளே இருந்த கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தவன், சோபாவில் ஓய்ந்து போய் அமர்ந்து இருந்த தூரிகாவைப் பார்த்தான். அவளுக்கும் தூக்கம் தான். ஆனால், தூங்க அவளுக்குப் பயம். ஆரம்பத்தில் இருந்து அக்னியின் மேல் அவளுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லையே, அதனால் அவனை வைத்துக் கொண்டு தூங்க தூரிகாவுக்குப் பயம்.

நைந்து போன சேலையும் கலைந்த தலைமுடியுமாக அமர்ந்து இருந்தவளைப் பார்த்தவன், “அந்த ரூம்ல இருக்க கப்போர்ட்ல என் அம்மாவோட சேலை இருக்கு. நீ வேணும்னா குளிச்சு சேலை மாத்திக்கோ,” என்றான்.

வேகமாக சோபாவில் இருந்து எழுந்தவள், அவசரமாக அக்னியிடம், “ஐயோ, இல்ல, வேணாம். நான் இப்படியே இருந்துக்கிறேன்,” என்றாள்.

“எவ்ளோ நாளைக்கு?” என்றான்.

“இல்ல, அது எனக்கு இங்கே இருக்க வேண்டாம். யாரும் எதுவும் தப்பா பேசிடுவாங்க,” என்றாள் தயக்கத்தோடு.

“நான் இருக்குற வரைக்கும் யாரும் உன்னை எதுவும் பேச மாட்டாங்க. அப்படி எவனாவது பேசினா, அவன் தோலை உரிச்சு தோரணம் போடுவேன்,” என்றான்.

“ஐயோ,” என்றாள் அவன் சொன்னதைக் கேட்டு பயந்து.

“இல்ல,” என்று அவள் தயங்க, “சரி, உனக்கு உன் புருஷனைத் தவிர சொந்தம்னு சொல்லிக்க யாரும் இருக்காங்களா? அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, எந்த மாதிரி யாரும் இருக்காங்களா?” என்றான்.

தூரிகா அமைதியாக நிற்க, அவள் மௌனத்தில் இருந்தே அவள் யாரும் இல்லாமல் நிராதரவாக இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான்.

“இப்படி ஒரு சொந்தமும் இல்லாதவள் அப்போ எப்படி நீ வெளியே போவ? எங்கே தங்குவ? யார் உனக்கு பாதுகாப்பு கொடுப்பாங்க?” என்றான்.

அதற்கும் அவளிடம் இருந்து அமைதிதான் பதிலாக வந்தது. அதில் அக்னிக்கு எரிச்சல் தான் வந்தது. எந்த தைரியத்தில் தன்னை எங்காவது அனுப்பி வைக்க சொல்கிறாள்? இப்படி இருந்தால் எப்படி வெளியே குழந்தையுடன் தனியே சென்று அனைத்தையும் தனி ஆளாக சமாளிப்பாள் என்று யோசித்தவன், “நீ எங்கேயும் போக வேணாம். உன் பிரச்சனை கொஞ்சம் ஓயட்டும். அதுக்கு அப்புறம் நான் ஏதாவது வழி பண்றேன்,” என்றவன், “ஆமா, உன் புருஷனை எப்படி நீ கல்யாணம் பண்ணின? உனக்குக் கல்யாணம் செய்துக்க வேற ஆளே கிடைக்கலையா?” என்றான்.

அவன் கேட்டதும் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள, அதை அக்னியிடம் காட்டிவிடக்கூடாது என்று தலையை அவள் கவிழ்த்துக்கொண்டாள்.

“சரி, நான் ஏதும் கேட்கல. நீ வருத்தப்படாத,” என்றவன், “போய் வேற சேலை போட்டுக்கோ. எப்போ பாரு சோகமாவே இருக்காத. ஆராதனா உன்னை இப்படி பார்க்கும்போது, ‘அவ அம்மா இப்படித்தான் இருப்பாள்’னு மனசுல பதிய வெச்சிருவா. குழந்தைங்க மனசுல இந்த வயசுல நல்ல விஷயங்களைத்தான் பதிய வைக்கணும். ஆனால், பாவம், அவ இந்த வயசுலயே இவ்ளோ விஷயத்தைப் பார்க்கிற மாதிரி ஆகிடுச்சு,” என்று வருத்தப்பட்டான்.

அவன் சொல்வது சரிதான் என்று தோன்றியது தூரிகாவுக்கு. குழந்தையின் மனதில் வண்ணங்களைக் குழைத்து நிரப்ப வேண்டியவள், இப்படி இருந்த பக்கங்களை அந்தப் பிஞ்சு நெஞ்சில் பதிய வைத்து இருக்கிறோமே என்று எண்ணினாள். பெயரில் தூரிகையை வைத்திருக்கிறாள், ஆனால் அவள் வாழ்க்கை நைந்து போன தூரிகையாக அல்லவா இருக்கிறது?

அவள் யோசித்துக் கொண்டு நிற்க, “எவ்ளோ நேரம் இப்படியே நிக்கப் போற?” என்றவன், ஒருவேளை அவன் இங்கு இருப்பது அவளுக்கு அசௌகரியத்தை கொடுத்திருக்குமோ என்று யோசித்தவன், “எனக்குக் கொஞ்சம் மார்க்கெட்ல வேலை இருக்கு. நீ கதவை சாத்திக்கோ. நானோ இல்ல தம்பியோ வந்தா மட்டும் கதவைத் திற,” என்று பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

அவன் சென்றதும் தான் தூரிகாவுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே அவனை ரவுடி என்ற கோணத்தில் பார்த்தவளுக்கு, அவன் தற்போது நடந்து கொள்வது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அவன் சென்றதும் வந்து வீட்டுக் கதவை சாற்றியவள் சுற்றிலும் நோட்டம்விட்டாள். பழைய காலத்து வீடு, ஆனால் அனைத்தும் நவீனமாக மாற்றப்பட்டு இருந்தது. அதையெல்லாம் பார்த்துவிட்டு நேராக ஆராதனா உறங்கிக் கொண்டு இருந்த பெட் ரூமிற்குச் சென்றாள். அவள் அருகில் வந்து அமர்ந்தவள், கலைந்து இருந்த அவள் தலை முடியை சரி செய்துவிட்டு அவளுக்கு நன்கு போர்த்திவிட்டாள். அக்னி சொன்னது ஞாபகத்திற்கு வர, எழுந்து சென்று அங்கிருந்த கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்தாள்.

பொலிவிழந்த, சோர்ந்த, களைத்துப்போன முகம். காண்பதற்கே அவள் வயதிற்கும் தன் தோற்றத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிந்தது. தன்னையே விரக்தியாக பார்த்துச் சிரித்துக்கொண்டவள், கண்ணாடி வழியே தெரிந்த ஆராதனாவைப் பார்த்தாள். “உனக்காக மட்டும் தான் உன் அப்பா செய்ற கொடுமையை எல்லாம் தாங்கிக்கிட்டு நான் இந்த உயிரைக் கையில பிடிச்சு வெச்சிருக்கேன் ஆரா,” என்று அழுதவள் அப்படியே தரையில் அமர்ந்து ஓவென அழ ஆரம்பித்தாள்.

Inge  

“என்ன நந்து, இன்னைக்கு ஆபீஸ் போகல?” என்று ஹாலில் அஞ்சனா, தர்மனுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த நந்தினியிடம் கேட்டபடி அங்கு வந்தார் ராஜன்.

“நோ டேட். அஞ்சனா, தர்மன் கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு இருந்துட்டேன்,” என்றாள்.

“சரிடா,” என்றவன், “நீ இப்படி வீட்டில இருக்குறதே அதிசயமா இருக்கு. என்னைக்கு அம்மாகிட்டே இருந்து அவ பிசினஸை நீ எடுத்து நடத்த ஆரம்பிச்சியோ, அப்போ இருந்து உனக்கு ரெஸ்ட் எடுக்க நேரமே கிடைக்கிறது இல்ல,” என்றார் ராஜன்.

“ஆமா ராசா, பேசாம நம்ம நந்து பாப்பாவுக்கு ரெஸ்ட் கொடுத்துருவோமா?” என்று அங்கு வந்தார் பழனி.

“அதுக்கு அவ ஒதுக்கணுமே கிழவி,” என்றார் ராஜன்.

“நந்து குட்டி என்ன ஒத்துக்கிறது? கல்யாணம்னு வந்துட்டா அப்புறம் குடும்பம், குழந்தைன்னு பார்க்க சரியா இருக்குமே. அப்புறம் ஆபீஸ் போக எல்லாம் எங்க நேரம் இருக்கும்?” என்றார் பழனி.

“ஏன், கல்யாணம் ஆனா குடும்பத்தைப் பார்த்துக்கிட்டு, வீட்டையும் பார்க்க முடியாதா? நான் செய்யலையா இத்தனை வருஷமா?” என்றார் இதழ்யா.

“ஆமா டேட். எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. என்னால ஒர்க், மேரேஜ் ரெண்டையும் பேலன்ஸ் பண்ண முடியும்,” என்றாள்.

அவள் பேசியது அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இவ்வளவு ஆண்டுகள் திருமணம் என்றாலே காத தூரம் ஓடுபவள், இன்று இவர்கள் பேசியதைக் கேட்டு மறுப்பு சொல்லாமல் இருந்ததே பெரிய விஷயம் தானே.

“அப்போ மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட வேண்டியதுதான்,” என்றார் ராஜன்.

“அதுக்கு அவசியம் இல்லப்பா. மாப்பிள்ளை ஆல்ரெடி நானே பார்த்துட்டேன். நீங்க பேசி எங்க கல்யாணத்துக்கு நாள் குறிச்சா போதும்,” என்றாள் நந்தினி.

இது மேலும் அதிர்ச்சி. அனைவருக்கும் வாயை பிளந்து கொண்டு நந்தினியைப் பார்க்க, தன் டேப்லெட்டில் கவனம் செலுத்தியவாறே, “இப்போ எதுக்கு எல்லாரும் என்னை இப்படி பார்க்குறீங்க? இது எப்படியும் நான் ஓகே சொன்னா நீங்க மாப்பிள்ளை தேடி அலையணும். எனக்குப் பிடிச்சிருக்கா, அந்தப் பையனுக்குப் பிடிச்சிருக்கான்னு பார்க்கணும். அதான் நானே பார்த்துட்டேன்,” என்றாள்.

“ஏய், என்னடி இப்படித்தான் எங்ககிட்ட உன் காதலைப் பற்றி சொல்வியா? பையன் யாரு? என்ன பண்றான்? அவன் குடும்பம் என்ன? இதெல்லாம் பார்க்க வேண்டாமாடி?” என்றார் இதழ்யா.

“ஏன், டேட்டும் நீயும் கல்யாணம் பண்ணின அப்போ இதெல்லாம் பார்த்துதான் நீ கல்யாணம் பண்ணினியா? என்னை மட்டும் இவ்ளோ கேள்வி கேக்குற?” என்றாள் நந்தினி.

“அப்படி சொல்லுடி என் நந்து குட்டி,” என்று அவள் பேச்சைக் கேட்டு மெச்சினார் ராஜன்.

அவனை முறைத்த இதழ்யா, “உன் அப்பன் என்னை தூக்கிட்டு வந்து தாலி கட்டினாண்டி, எதுவும் தெரியாம பேசாத,” என்றார்.

“இருந்தாலும் என் அப்பாவை உனக்குப் பிடிச்சதுனாலதானே இவ்வளவு வருஷம் என் அப்பாவை விட்டுப் பிரியாம இருக்க?” என்றவள், சோபாவில் இருந்து எழுந்தாள். கையில் இருந்த டேப்லெட்டை தன் அம்மாவிடம் நீட்டியவள், “இவன் பேரு அபி. லட்சுமி கான்ஸ்ட்ரக்ஷன்ஸோட சிஇஓ,” என்றாள். “டேட், நான் விபரத்தைச் சொல்லிட்டேன். நீங்க மத்ததைப் பேசிக்கோங்க. நான் கிளம்பறேன், எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு,” என்று கிளம்பி இருந்தாள்.

அவள் நீட்டிய டேப்லெட்டில் சிரித்தமுகமாக இருந்த அபிமன்யுவைப் பார்த்த மொத்த குடும்பத்திற்கும் அவனைப் பிடித்திருந்தது.

“இவனா?” என்று ராஜன் அதிர்ச்சியாகக் கேட்க, “உனக்கு இவனைத் தெரியுமா?” என்றார் இதழ்யா.

“ம்ம்ம்ம், ரெண்டு நாள் முன்ன நந்து பிசினஸ் விஷயமா இவனைத்தான் பார்க்கப் போய் இருந்தா. நானும் கூடதான் போயிருந்தேன்,” என்றார்.

“அப்போ பையன் எப்படின்னு நீ கண்டிப்பா விசாரிச்சிருப்பியே?” என்றார் இதழ்யா.

“அது வெறும் பிசினஸ் மீட்டிங்னுதான் போனேன். ஆனா, இவனைப் பற்றியோ, இல்ல இவன் குடும்பத்தைப் பற்றியோ எதுவும் நான் விசாரிக்கல,” என்றார் ராஜன்.

“சரி விடு, எப்படியும் நந்துவுக்குப் பிடிச்சிருச்சு. அவ பிக்ஸ் ஆகிட்டா. சீக்கிரமே இவங்க கல்யாணத்தை நடத்தி வெச்சுடலாம்,” என்றார் இதழ்யா.

அனைவரும் நந்தினி திருமண விஷயத்தில் சந்தோஷமானார்கள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured