Home Uncategorizedமோகம் முத்தாடுதே 12

மோகம் முத்தாடுதே 12

by Layas Tamil Novel
383 views

EPISODE 12

முற்றுப்புள்ளி, கமா, மற்றும் மேற்கோள் குறியீடுகளை சரிபார்த்து, பிழைகள் நீக்கப்பட்ட கதை இதோ.

முகில், பூவிழியின் வீட்டிற்கே வந்து, ஏன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் வீராவைத் திருமணம் செய்து கொண்டாள் என்று அவளிடம் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டான்.

பூவிழியின் இடையில் கை கொடுத்து அழுத்தம் கொடுத்த வீரா, “சொல்லு பூவிழி… அதான் நியாயம் கேட்டு வந்திருக்காரே மிஸ்டர் முகில்… அவருக்குப் பதில் சொல்லு…” என்று அவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டு, பூவிழியின் இடையைப் பிசைந்தான்.

இதை அவர்கள் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து இருந்த முகில் கவனித்தான். ஆனால், ரசிகாவுக்கோ, செண்பகத்திற்கோ வீரா செய்யும் லீலை தெரியவில்லை. அப்போதுதான் தோட்டத்தில் இருந்து வந்த தேவகியும் உள்ளே வந்தவர், இவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு பூவிழி என்ன சொல்லப் போகிறாள்? ‘அன்று சொன்னதுபோல இந்த முகிலை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல், அப்போதைக்கு வீராவைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் சொன்னாளா? இல்லை, உண்மையாகவே பூவிழிக்குப் பிடித்துதான் தன் மகனைத் திருமணம் செய்துகொண்டாளா?’ என்று அவரும் பூவிழி சொல்லப் போகும் பதிலுக்குக் காத்திருந்தனர்.

அனைவரும் பூவிழியைப் பார்க்க, அவளுக்கு அது ஒரு மாதிரியாகப் போய்விட்டது. அவள் முகமும் வியர்த்துவிட… ‘இவனை யாரு இங்கே வரச் சொன்னது? இப்போ இவனை நான் ஏன் கல்யாணம் செய்துக்கலைனு தெரிஞ்சு என்ன பண்ணப் போறான் இவன்? அறிவு கெட்டவன். அவன் மூஞ்சியும், முகத்தையும் எப்படிப் பார்க்கிறான் பாரு’ என்று தன் எதிரே இருந்த முகிலை மனதிற்குள் வறுத்தெடுத்தாள் பூவிழி.

“பூவிழி, நான் பேசிட்டே இருக்கேன். நீ பதில் பேசாம இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? உனக்குப் என்னைப் பிடிக்கலைன்னா கல்யாணத்தை முதலில் நிறுத்தி இருக்கலாமே? மணமேடை வரைக்கும் வந்து, அதுவும் தாலி கட்டுகிற நேரத்தில் என் கையிலிருந்து தாலியைப் பிடுங்கி இவன் உன் கழுத்தில் தாலி கட்டித்தான்…” என்று பூவிழியின் இடையை வருடிக்கொண்டிருந்த வீராவைப் பார்த்து முகில் கோபமாகப் பேச…

“இவன் உன்னை மிரட்டி தாலி கட்டிட்டானா? அவனுக்குப் பயந்துதான் நீ எதுவும் பேசாம அமைதியா இருக்கியா? அப்படி அவன் உன்னை மிரட்டித்தான் தாலி கட்டியிருந்தா, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. இப்பவே நீ என் கூட கிளம்பி வா. நான் உனக்கு வாழ்க்கை கொடுக்கிறேன். இவன் தாலியைக் கழட்டி எறிஞ்சிட்டு உனக்கு புது தாலி கட்டி, என் பொண்டாட்டியா என் வீட்டுக்கு உன்னை கூட்டிட்டுப் போறேன்” என்றான் முகில்.

அவன் பேசியதைக் கேட்டு தேவகி, செண்பகம், ரசிகா என மூவரும் ஆத்திரம் கொண்டு முகிலைப் பார்க்க…

ஆனால், இதைக் கேட்டு கோபப்பட வேண்டியவன் அமைதியாகப் பூவிழியின் அருகில் அமர்ந்திருந்தான்.

அவர்கள் மூவருக்கும் ஆச்சரியம்தான். எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் அமர்ந்திருக்கிறான் என்று.

அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று அவன் கைக்குள் மாட்டியிருக்கும் பூவிழியின் இடைக்குத்தான் தெரியும். ஏற்கனவே அழுத்தம் கூட்டி இருந்தவன், முகில் பூவிழி கழுத்தில் வீரா கட்டிய தாலியைக் கழட்டி எறிந்துவிட்டு அவனோடு வரச் சொல்லித் தன் முன்னாலேயே கூப்பிடவும், ஆத்திரம் அதிகமானது. ஆனால், அவன் கோபப்படாமல் இருந்ததற்குக் காரணம், பூவிழி அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்றுதான். பொறுமையாக அதே சமயம் உள்ளுக்குள் கனன்று எரிந்த கோபத்தோடு வீரா அமைதியாக அமர்ந்திருக்க…

முகில் இப்படி ஒரு வார்த்தையைச் சொன்னதும் பூவிழிக்குப் பற்றி கொண்டு வந்ததே கோபம். சோபாவில் அமர்ந்திருந்தவள் விருட்டென எழுந்து வேகமாக முகிலிடம் வந்தவள் அவனைப் பார்க்க, “என்ன பூவிழி? எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லு. இவங்க எல்லாரும் இருக்காங்கன்னு நீ பயப்படாதே. நான் இருக்கேன் உனக்கு” என்று பேசியபடியே சோபாவில் இருந்து எழுந்தான் அவன். அவன் எழுந்த வேகத்தில் பூவிழி ‘பளார்’ என்று அவன் கன்னத்தில் அறைந்தாள்.

பூவிழியின் இந்தச் செயல் மற்ற மூவருக்கும் ஆச்சரியமே! ஆனால், வீராவோ அதை ரசித்துக் சிரித்தபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

“ஏண்டா ராஸ்கல்! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் வீட்டுப் பெண்ணையே வந்து என் குடும்பத்தினர் முன்னாடி, என் புருஷன் முன்னாடி, அவர் கட்டின தாலியைக் கழட்டி எறிஞ்சிட்டு உன் கூட வரச் சொல்லுவ? எவ்வளவு தைரியம் உனக்கு? உன்னை முதல்ல உள்ள விட்டதே தப்புடா. அதுவும் இல்லாம சரிக்குச் சமமா உன்னை உட்கார வைத்து இவ்ளோ நேரம் பேசவிட்டுப் பார்த்தேன் பார்த்தியா? அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு. முதல்ல இந்த வீட்டை விட்டு வெளியே போடா! எனக்கு இந்தத் திருமணத்தில் முழு சம்மதம். நான் விருப்பப்பட்டுதான் இந்தத் திருமணத்தைப் பண்ணி இருக்கேன். சொல்லப்போனால் நான் சொன்னதுனாலதான் என் புருஷன் என் கழுத்தில் தாலி கட்டினார். இனிமேல் ஏதாவது சாக்கு சொல்லிட்டு இந்த வீட்டுப் பக்கம் கால் எடுத்து வெச்சா, நானே உன் காலை வெட்டிப் போட்டு விடுவேன். முதல்ல வெளியே போடா” என்று மீண்டும் அவனை ஓங்கி அறைந்தாள் பூவிழி.

பூவிழி தன்னை அடிப்பாள் என்று முகில் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் வீரா முன்பு அவள் அடித்தது அவனால் தாங்க முடியவில்லை. ஏற்கனவே அவனால்தான் தனக்கு இவ்வளவு பெரிய அவமானம் என்று இவர்கள் மீது பகை வளர்த்துக் கொண்டிருந்தவன், இப்போது பூவிழியும் அவன் முன்பு தன்னை அவமானப்படுத்திப் பேசி அறையவும், அவன் பகை உணர்வு மேலும் அதிகரித்தது.

“பூவிழி, எவ்வளவு தைரியம் இருந்தா நீ என்னை அடிச்சிருப்ப? இதுக்கு நீ அனுபவிச்சே ஆகணும். ஏற்கனவே என்னை கல்யாணம் பண்ணிக்காம இவன் கூட வந்து என்னை அவமானப்படுத்திட்ட. இப்போ என்னை அடிக்கவும் செஞ்சுட்ட. இதுக்கு நீ அனுபவிச்சே ஆகணும். நீ மட்டும் இல்ல, உன் கூட இருக்கிற ஒவ்வொருத்தரும் இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்” என்றவன் வேகமாக அங்கிருந்து வெளியே சென்றான்.

அவன் சென்றதையே கோபத்தோடு பூவிழி பார்த்துக் கொண்டு இருக்க, தன் வீல்சேரை நகர்த்திக்கொண்டு பூவிழியிடம் வந்த செண்பகம், அவள் கையை ஆதரவாகப் பற்றி, “நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவனை உள்ள வர வேண்டாம் என்று தடுத்தும் பார்த்தேன். ஆனா அவன் சொல்லச் சொல்லக் கேட்காம உள்ள வந்துட்டான்” என்று அவர் வருத்தப்பட…

கோபமாக நின்றிருந்த பூவிழி, அவள் அம்மாவின் கரம் பற்றியதும் சற்று சாந்தமடைந்தவள், திரும்பி செண்பகத்தின் காலுக்கு அருகில் முட்டிபோட்டு அமர்ந்து, “அம்மா, நீங்க வருத்தப்படாதீங்க. அது அவனோட புத்தி. இது ஏற்கனவே நம்மளுக்குத் தெரிஞ்சதுதானே? அவனுக்கும் எனக்கும் கல்யாணம் நிச்சயமாக ஆன பிறகு, என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணினான்னு உங்களுக்குத் தெரியாது. அதுக்கெல்லாம் சேர்த்து வட்டி முதலுமாத்தான் இப்ப நான் அவனை அடித்துவிட்டு அனுப்பினேன். அவன் பேசுறது எல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க. குலைக்கிற நாய் எப்பவும் கடிக்காது. எனக்கு நல்லா தெரியும்” என்றாள்.

“அவன் பேசிட்டுப் போனதெல்லாம் பார்த்தா, அவன் எதுவும் உன்னையும் மாப்பிள்ளையையும் செஞ்சிருவானோன்னு எனக்குப் பயமா இருக்கு. நீங்க கொஞ்சம் அவன்கிட்ட இருந்து ஜாக்கிரதையாவே இருங்க” என்று வீராவையும் பார்த்துச் செண்பகம் கூற…

செண்பகத்தின் அருகில் வந்த ரசிகா, “அம்மா, நீங்க கவலைப்படாதீங்க. அப்படியே அவன் எதுவும் செய்யணும்னு நினைச்சா, இங்கே இத்தனை பேர் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் மீறி அவனால எதுவும் செய்ய முடியாது. தவிர, பூவிழிக்கு ஒண்ணுன்னா அவ புருஷன் பார்த்துட்டுச் சும்மா இருப்பார் என்று நினைத்தீர்களா?” என்றாள் ரசிகா.

தேவகியும் வந்து செண்பகத்தின் கவலைக்கு ஆறுதல் சொல்ல…

இவர்கள் எல்லாம் தனக்கும் தன் அம்மாவிற்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்க, அங்கே வீரா மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்த பூவிழி, ‘எதுவுமே நடக்காத மாதிரி முகத்தை எப்படி வெச்சுட்டு உட்கார்ந்திருக்கான் பாரு. என் இடுப்பைப் பிடிச்சு அந்தத் தடவ தடவிட்டு, ஏதோ பால் குடிக்கத் தெரியாத பிள்ளை மாதிரி அமைதியா உட்கார்ந்து இருக்கான்’ என்று அவனை முறைத்தவள், செண்பகத்தின் சேரைத் தள்ளிக்கொண்டு அவர் ரூமிற்குச் சென்றாள்.

இங்கு ரசிகாவைப் பார்த்துவிட்டுத் தன் அறைக்கு வந்ததிலிருந்து அர்ஜுனுக்கு, அவள் ஏன் தன்னை பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் என்று அவள் மனதைப் போட்டு அடித்துக்கொண்டே இருந்தது.

பூவிழியின் தோழி ரசிகாவை ஓரிருமுறை அவளோடு அர்ஜுன் பார்த்திருக்கிறான். அத்தோடு சரி. அவளைப் பற்றி அவனுக்கு அவ்வளவாகத் தெரியாது. அவளைப் பார்த்தது கூட கிடையாது. அப்படி இருக்கும்போது, தன்னை பார்த்ததும் முதல் சந்திப்பிலேயே எதற்கு முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டும்?

தன்னைப் பார்த்ததுமே அவளுக்குப் பிடிக்கவில்லையா என்று அவன் மனதை இந்தக் கேள்வி அரித்துக்கொண்டே இருந்தது. அவளைப் பார்த்து கேட்டுவிட வேண்டும் என்று உடைமாற்றிவிட்டுத் தன் அறையை விட்டு வெளியே வந்தான்.

ஹாலில் தேவகி, செண்பகத்துடன் அமர்ந்து கதை பேசியபடி ரசிகா இருக்க, அவள் அருகில் அமர்ந்து பூவிழியும் பேசிக்கொண்டிருந்தாள்.

அவர்கள் நால்வரையும் பார்த்தபடி மாடியிலிருந்து படி இறங்கி வந்தான் அர்ஜுன்.

தன் மகன் வருவதைப் பார்த்ததும் சோபாவில் இருந்து எழுந்த தேவகி, “அடடே! வாப்பா. ஃப்ரெஷ் ஆகிட்டியா? சாப்பிட எதுவும் எடுத்து வைக்கட்டுமா? சாப்பிடுறியா?” என்று கேட்டார் தேவகி.

அவ்வளவு நேரம் மற்றவர்களோடு சிரித்துக் கலகலவெனப் பேசிக்கொண்டிருந்த ரசிகா, அர்ஜுன் பார்த்ததும் பேசுவதை நிறுத்திவிட்டு அமைதியாக முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

ஓரக்கண்ணால் பார்த்தபடியே, “சரிம்மா எடுத்து வைங்க. எனக்குக் கொஞ்சம் வெளியே போற வேலை இருக்கு. நான் சாப்பிட்டுட்டே போறேன்” என்றான்.

உடனே தேவகி மற்றவர்களையும் பார்த்து, “நீங்களும் வாங்க. எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம். எப்படியும் சாப்பிட நேரம் ஆயிடுச்சு” என்று அழைக்க…

“சரி” என்று தலையாட்டிவிட்டு செண்பகத்தின் வீல்சேரைத் தள்ளிக்கொண்டு டைனிங் டேபிளுக்குச் செல்ல, ரசிகா மட்டும் வராமல் ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.

டைனிங் டேபிள் வந்த பூவிழி அப்போதுதான் ரசிகாவைக் கவனித்தாள். இருந்தவர்களைப் பார்த்து, “இன்னும் ஏண்டி அங்கேயே உட்கார்ந்திருக்க? வா வந்து சாப்பிடு” என்று பூவிழி அழைக்க…

“இல்ல பூவிழி, எனக்குப் பசிக்கல. நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. நான் ரூமுக்கு போறேன்” என்றாள்.

தேவகியும், “கொஞ்சமா சாப்பிட்டுவிட்டுப் போய் தூங்கு ரசிகா. சாப்பிடாமப் படுத்தா நைட் தூக்கமே வராது” என்றார்.

“எனக்குப் பசிக்கல. நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. நான் தூங்குறேன் அத்தை” என்றுவிட்டுத் தன்னறைக்கு வேகமாக எழுந்து சென்றுவிட்டாள் ரசிகா.

தான் கீழே வருவதற்கு முன்பு வரை ரசிகா அனைவரிடமும் சிரித்து பேசிக்கொண்டிருக்க, தன்னைப் பார்த்ததும் அவள் முகம் மாறியதையும், சாப்பாடு வேண்டாம் என்றுவிட்டு உள்ளே செல்வதையும் கவனித்த அர்ஜுனுக்கு, அவள் வேண்டுமென்றே தன்னை உதாசீனப்படுத்துகிறாள் என்று தோன்ற ஆரம்பித்தது.

எழுந்து செல்லும் ரசிகாவையே முறைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான் அர்ஜுன்.

செண்பகத்தை அவர் அறையில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்த பூவிழி, ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த தேவகி, ரசிகா இருவரின் அருகிலும் வந்து அவர்களோடு அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள்.

வீரா ரூமுக்குச் சென்று நீண்ட நேரம் ஆகியிருக்க, உணவையும் அவன் ரூம்மிலேயே சாப்பிட்டு முடித்திருக்க, பூவிழி இன்னமும் அவனைப் பார்க்க மேலே செல்லாமல் இங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்த தேவகி, பூவிழியைப் பார்த்து, “ஏம்மா, இன்னும் இங்கேயே உட்கார்ந்திருக்க? போ போய் படுத்துத் தூங்கு. நேரம் ஆச்சு பாரு” என்று அவளை ரூமுக்குச் செல்லச் சொன்னார்.

“இல்ல அத்தை, எனக்குத் தூக்கம் வரல. கொஞ்ச நேரம் உங்க கூட டிவி பார்த்துட்டு அதுக்கப்புறம் தூங்கப் போறேன்” என்றாள்.

“சரிம்மா” என்ற தேவகி, எப்படி பூவிழியை அவள் அறைக்கு அனுப்புவது என்று தெரியாமல் அமர்ந்திருக்க… அவர்கள் வீட்டு வேலை ஆள் வீராவின் அறைக்கு கையில் பால் டம்ளருடன் செல்வதைப் பார்த்தவர், அந்த வேலை ஆளைக் கூப்பிட்டு, “எங்கே போற சாமி?” என்றார்.

“அம்மா, ஐயாவுக்குப் பால் கொண்டு போறேன்” என்றார் அந்த வேலை ஆள்.

“இனிமேல் நீ இந்த வேலை எல்லாம் செய்ய வேண்டாம். அதான் என் பிள்ளை கவனிச்சுக்க என் மருமகள் வந்துட்டாலே? இனி அது எல்லாம் அவ பார்த்துக்கொள்வாள்” என்றவர், “அம்மாடி பூவிழி, அந்தப் பாலை வாங்கிட்டுப் போய் வீராவுக்குக் கொடுத்துடுமா. சூடாக இருந்தால் தான் அவன் குடிப்பான்” என்று வேலை ஆளிடம் இருந்து டம்ளரை வாங்கிப் பூவிழியின் கையில் கொடுத்தார் தேவகி.

அவரிடம் பாலை வாங்கிவிட்டு மெதுவாகப் படி ஏறி மேலே சென்றாள் பூவிழி. ‘இந்தக் கிழவி வேற என்கிட்ட இவன்கிட்ட என்ன இப்படி கோர்த்து விட்டுடுச்சு? நானே இவன்கிட்ட இருந்து எப்படித் தப்பிக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தா, இப்படி என்னை வம்புல மாட்டி விட்டுடுச்சு. இப்போ உள்ளே போனா இவன் என்னை என்ன பண்ணுவான் என்று தெரியலையே’ என்று பயந்தபடி, தங்கள் அறைக் கதவை மெதுவாகத் திறந்து கொண்டு பூவிழி உள்ளே சென்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured