EPISODE 16
தன் மேல் விழுந்திருந்த வீரா தன்னை முத்தமிடவும், அவனை கஷ்டப்பட்டுத் தள்ளிவிட்ட பூவிழி, போர்வையைப் பிடித்தபடி தன் அருகில் தரையில் கிடந்த வீராவைப் பார்த்து, “ஏன்டா எனக்கு முத்தம் கொடுத்த? உனக்கு எப்போ பாரு இதே வேலையா போயிருச்சு” என்று அவனிடம் எரிந்து விழுந்தாள்.
அவள் முகத்தில் வரைந்திருந்த மீசைக்கும், பூவிழி கோபமாக கண்களை உருட்டிப் பேசுவதையும் பார்த்த வீரா, “மீசைக்கார நண்பி… இப்படி கோபப்படாதே… பயமா இருக்கு” என்றான்.
‘இவன் என்ன லூசா? சம்பந்தம் இல்லாமல் பேசறான்’ என்று நினைத்தவள்…
“டேய் லூசு, தேவை இல்லாமல் பேசாத. சும்மா சும்மா வந்து என் வாயை கடிக்கிற வேலையை வெச்சுக்கிட்டேன்னு வை, நான் பொல்லாதவள் ஆகிடுவேன் பார்த்துகோ” என்று அவனை விரல் நீட்டி எச்சரித்தாள்.
“இப்படி ஆரஞ்சுப்பழம் மாதிரி உதட்டை வெச்சுட்டு இருந்தால், பார்க்கும்போது எல்லாம் கடிச்சுத் திங்கணும்னுதான் தோணும்” என்று முணுத்த வீரா பூவிழியைப் பார்க்க…
அவன் பேசியது அவள் காதில் சரியாக விழாமல் போகவே, “என்ன… என்னடா சொன்ன?” என்றாள் அவனிடம்.
“என்ன பூவிழி நீ… நான் என்னவோ வேணும்னே வந்து உன் வாயை கடிச்ச மாதிரி சொல்லுற? தெரியாம தவறி விழும்போது உன் உதட்டு மேல என் உதடு லேசா பட்டிருச்சு. இதுக்குப் போய் இப்படி கோபப்படுறியே பூவிழி” என்று அவள் உதட்டைப் பிடித்துக் கிள்ளினான்.
அவன் கையைத் தட்டிவிட்டவள், “தெரியாம தவிலும் என் உதட்டை லேசா உன் உதடு தொடுச்சா? எப்படித்தான் இப்படி வாய் கூசாம பொய் பேசுறியோ தெரியலை” என்றவள் தரையில் இருந்து எழுந்தாள்.
“நான் ஏன் பூவிழி உன்கிட்டப் பொய் சொல்லப் போறேன்? வேணும்னா நீயே பாரேன்” என்றவன், அவள் போர்த்தியிருந்த போர்வையைப் பிடித்து வெடுக்கென்று வீரா இழுக்க… அவன் இழுத்த வேகத்தில் பூவிழி அவன் மேல் விழ, இந்த முறை அவள் உதடு வீராவின் உதட்டில் ‘பச்சக்’ என்று சத்தத்தோடு ஒட்டிக்கொண்டது.
இதை சற்றும் எதிர்பாராத பூவிழி அதிர்ந்துபோய் வீராவைப் பார்க்க… அவள் உதட்டில் மீண்டும் முத்தம் வைத்த வீரா, அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டான்.
அதில் கூச்சத்தில் நெளிந்த பூவிழி, தரையில் தன் கைகளை ஊன்றி அவனிடமிருந்து தன் உதட்டைப் பிரித்தவள், வேகமாக மேலே எழுந்தவள், தான் பிடித்திருந்த போர்வையை அவன் மேல் தூக்கிப் போட்டுவிட்டு, “சீ… உன்னை எல்லாம் என்னோட பிரெண்டுன்னு இத்தனை நாளும் நினைச்சிருந்தேன் பாரு, என்னைச் சொல்லணும். எனக்கு இப்போதான் உன்னோட உண்மையான நோக்கமே புரியுது” என்றான் கோபமாக.
அவள் இந்த முறை தீவிரமாகப் பேசுவதைப் பார்த்த வீரா, தன் மேல் இருந்த போர்வையைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தரையிலிருந்து எழுந்தவன், “என்னோட உண்மையான நோக்கம் என்னன்னு உனக்கு என்ன தெரிஞ்சுது?” என்றான் சற்று கோபமாக.
“ம்ம்… இதை வேற நான் என் வாயால சொல்லணுமா? அதான் அப்பட்டமா தெரியுதே… நான் இங்கே வந்ததில் இருந்து என்கிட்ட வேணும்னே வந்து வழிஞ்சு பேசுறதும், முத்தம் கொடுக்குறதும்னு என் உயிரை வாங்குறியே” என்றாள் வீராவைப் பார்த்து.
“அதெல்லாம் உன் மேல உரிமையில் நான் உன்கிட்ட நடந்துகுறது” என்றான் வீரா.
“ரொம்பத்தான் உரிமை எடுத்துக்குற… ரொம்ப வருஷமா ஃப்ரெண்டாவே நினைச்சுப் பழகிட்டு இருந்தவ கிட்ட… ஒரு இக்கட்டான சூழ்நிலையில உன்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட என்கிட்டே, முதல் ராத்திரி அன்னைக்கே என் சேலையை உருவி வீசிட்டு என்னை அடையத் துடிச்சவன் தானே நீ? ஏதோ நான் அன்னைக்குக் கொஞ்சம் சுதாரிச்சு உன்கிட்டே பேசிட்டேன், அதனால் நான் தப்பிச்சேன். இல்லை, நீ அந்த அன்னைக்கே என்னை என்ன வேணாலும் செய்திருப்ப தானே?” என்றாள் கோபமாக.
அவள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவனுக்கு அளவு கடந்து கோபம் வந்துவிட்டது. “பூவிழி!” என்று அந்த அறையே அதிரும் அளவிற்கு கத்திய வீரா, அவளை நோக்கி கோபமாக வந்தவன், “என்னடி சொன்ன? உன் விருப்பம் இல்லாமல் நான் உன்னை ஏதாவது செய்திருப்பேனா? சொல்லு! அப்படி நான் நினைச்சிருந்தா, நீ இந்த நேரம் முழுசா என்னோட பொண்டாட்டியாவே ஆகியிருப்ப… உன்கிட்ட புருஷன்னு உரிமை எடுத்துக்கிட்டு உன்னை அடைய ஒரு நிமிஷம் ஆகாது எனக்கு. ஏன், இப்போ கூட நான் நினைச்சா உன்னை இங்கேயே இப்பவே… முழுசா எனக்குச் சொந்தமாகிடுவேன். பார்க்கிறியா?” என்று கேட்டு மேலும் பூவிழியை வீரா நெருங்கி வர…
அவன் பேசியதைக் கேட்டு அதிர்ந்த பூவிழி, வீரா தன் அருகில் வந்ததும் வேகமாகப் பயந்துகொண்டே பின்னால் சென்றாள்.
அதைப் பார்த்ததும் அவனுக்கு மேலும் கோபம் அதிகமானது. இப்போதும் தன்னை தப்பான பார்வை பார்க்கும் பூவிழியைப் பார்த்ததும் மேலும் ஆத்திரம் வர… வேகமாக அவளை நெருங்கி, பூவிழியின் கழுத்தில் கை கொடுத்து அவளை அப்படியே மேலே தூக்கினான்.
அவன் செயலில் அரண்டுபோன பூவிழி, “வீரா, விடு… விடு… என்னை… எனக்கு வலிக்குது…” என்று அவன் கைகளில் பூவிழி அடிக்க… ஆனால், வீராவோ அதையெல்லாம் சட்டை செய்யாமல், அவளைத் தன் முகத்துக்கு நேராகத் தூக்கிப் பிடித்தவன்…
அவள் கண்களைத் தன் விரல்களால் சுட்டிக்காட்டி, “நான் ஆசையாக உன் பக்கம் வரும்போது எல்லாம் நீ என்னைப் பார்த்துப் பயந்து பின்வாங்குற பாரு… உன் கண்ணுல தெரியும் இந்தப் பயம் இருக்கே இது… இதுதான் என்னை உன்கிட்ட அதிகமா உரிமை எடுத்துக்காம தடுக்குது. இந்தக் கண்களில் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் காதல்… எனக்கான காதலை மட்டும் நான் பார்த்துட்டேன்னு வை, அடுத்த நிமிஷமே நான் உரிமையாக இந்நேரம் உன்னை நான் எனக்கு முழுசா எடுத்துட்டு, எனக்குச் சொந்தமாக்கி இருப்பேன்” என்றான்.
அவன் கைகளில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பூவிழி, வீரா சொன்னதைக் கேட்டவள், அவன் கழுத்தில் அழுத்தியதில் வலி ஒரு பக்கமும், தன் தூய்மையான நட்பு இப்படிச் சிதறித் தன்னை காயப்படுத்துவதையும் நினைத்து, அவள் கண்களில் கண்ணீர் வந்தது. அவள் கண்ணீர் கன்னம் வழிந்து வீராவின் கைகளில் விழ… அதில் தன் கோபம் இருந்தாலும், அவள் வழியில் சிரமப்படுவதைப் பார்த்த அடுத்த நொடி பூவிழியை அப்படியே விட்டான்.
சட்டென்று தரையில் விழுந்த பூவிழி, இருமிக்கொண்டே நிமிர்ந்து வீராவைப் பார்க்க… அவனோ இன்னமும் கோபம் கொண்டு நின்றிருந்தான்.
மெல்ல மேலே எழுந்தவள், வீராவின் கண்களைப் பார்த்து, “நீ எதிர்பாக்குற காதல் என்கிட்ட இருந்து உனக்கு கண்டிப்பா கிடைக்காது வீரா. என்னை புரிஞ்சுக்கோ. என்னால உன்னை அந்த மாதிரி ஒரு கோணத்தில் பார்க்க முடியல. எனக்கு அந்த மாதிரி ஒரு எண்ணமே என் மனசுல தோணலை வீரா. எனக்கு உன்மேல காதல் வராது” என்றாள் பூவிழி.
அவளிடம் என்ன சொல்லித் தன் காதலைப் புரியவைப்பது என்று தெரியாமல் அவளைப் பார்த்தவன், சட்டென்று அங்கிருந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
பூவிழி, தான் பேசியதில் வீராவின் மனம் புண்பட்டு இருக்குமோ என்று எண்ணி வருத்தத்தோடு அப்படியே நின்றிருந்தாள்.
குளியலறைக்குள் சென்ற வீரா, கதவைத் திறந்து தலையை மட்டும் எட்டி நீட்டி பூவிழியைப் பார்க்க… கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்த பூவிழியைப் பார்த்து, “ஓய் ரோஸ் மில்க், நீ என்ன சொன்னாலும், எப்படிப் பேசினாலும் எனக்குக் கவலை இல்லை. நீ கண்டிப்பா என்னை காதலிப்ப… உன்னைக் காதலிக்க வைப்பேன். நீ இப்படிப் பேசிட்டா நான் அப்படியே கோபமாகப் போயிடுவேன், உன்னை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன்னு நினைக்குறியா? அதான் இல்லை. ஆல்ரெடி நான் உன்கிட்ட என் காதலைச் சொல்லாம இத்தனை வருடத்தை வேஸ்ட் பண்ணிட்டேன். இனியும் அப்படி இருக்க மாட்டேன் நான்” என்றவன் அவளை ஆழமாகப் பார்க்க…
அவன் பார்வையின் தாக்கத்தைத் தாளாமல் பூவிழி தலையைக் குனிந்துகொண்டாள்.
அதை ரசித்தவன், “இங்க பாரு செல்லம், இந்த மாமன் இனிமேல் முழு நேரமும் உன் பின்னாலேயேதான் சுத்தப் போறேன். உன்னை ‘லவ் டார்ச்சர்’ செய்து என்னைக் காதலிக்க வைப்பது என் பெயர் வீரா கிடையாது” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு ஆத்திரமாகத் தலையை நிமிர்த்தி வீராவை பூவிழி முறைக்க… “ஏய், சும்மா சும்மா இப்படிக் கண்ணை உருட்டி என்னைப் பார்க்காத. இப்படிப் பார்த்துப் பார்த்துதான் என்னை உன் வலையில விழ வெச்சே” என்றான்.
“டேய், உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா? இப்படி உன்னைத் திட்டுறேனே, உனக்கு ரோஷம் வரலையா?” என்றாள் கோபமாக.
“பூவிழி…” என்று மெதுவாக அவளை அழைத்தான்.
அவள் கோபமாக, “இன்னும் என்னடா சொல்லணும்? அதான் பத்தி பத்தியா டயலாக் பேசிட்டியே. இனி என்ன சொல்லணும்?” என்றாள் எரிச்சலாக.
“ஒண்ணும் இல்லை. எனக்குக் குளிக்கணும். வந்து கொஞ்சம் எனக்கு முதுகு தேய்ச்சு விடுறியா?” என்றான் அவளைப் பார்த்துக் கண்ணடித்து.
தான் இவ்வளவு சொல்லியும் இப்படி மீண்டும் மீண்டும் தன்னை கடுப்படிக்கும் வீராவைப் பார்த்து ஆத்திரம் அதிகம் ஆக… “டேய்… டேய்… உன்னை…” என்று சொல்லி அறைக்குள் சுற்றிலும் முற்றிலுமாகத் தேடியவள், சோபாவில் இருந்த தலையணையை கையில் எடுத்து, “உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தால் என்னை உனக்கு முதுகு தேய்பிக்கக் கூப்பிடுவ?” என்று அவனை நோக்கித் தலையணையை எறிய…
அதை ‘கேட்ச்’ பிடித்த வீரா, மீண்டும் அவள் மீதே அந்தத் தலையணையை வீசி, “அப்புறம் செல்லம், நீதானே என் பொண்டாட்டி? நீதானே வந்து எனக்கு முதுகு தேய்க்கணும்?” என்றான்.
“டேய்…” என்று அந்த அறையே அதிரும்படி கத்திய பூவிழி…
குளியலறையை நோக்கி அவனை அடிக்க வர… அவள் வருவதைப் பார்த்து வேகமாக உள்ளே தலையை இழுத்துக்கொண்டு கதவைச் சாற்றிக்கொண்டான்.
‘இன்னிக்கு முழுக்க நீ உள்ளேயே இரு. வெளியே வந்தே என் கையாலேயே உன்னைக் கொன்னுருவேன்’ என்று குளியலறைக் கதவை வேகமாக உதைத்தவள் அங்கிருந்து செல்ல… இங்கே பூவிழியை வெறுப்பேற்றிய சந்தோஷத்தில், ஷவரைத் திறந்து சந்தோஷமாக குளிக்க ஆரம்பித்தான்.
அவனிடம் சண்டையிட்டவள் நேராக வந்து தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க… அவள் முகத்தில் மார்க்கரில் கோலம் வரைந்திருந்ததைப் பார்த்து, “ஆஹ்…” பூவிழி கத்த… உள்ளே இருந்த அவனுக்கு, அவள் கத்திய சத்தம் கேட்டதும், “கண்ணாடியில் நான் போட்ட மீசையைப் பார்த்துட்டு கத்துறா போல இருக்கு” என்றான்.
கண்ணாடியில் பார்த்துத் தன் முகத்தில் வீரா வரைந்த மீசையைப் புலம்பியபடியே அழித்துக்கொண்டிருந்த பூவிழி, தன் கண்களை அப்போதுதான் கவனித்தாள்.
வீரா சொன்னதுபோல, தன் கண்களில் அவ்வளவு சக்தி இருக்கிறதா என்ன? ‘என் கண்களைப் பார்த்து விழுந்துவிட்டேன்’ என்று சொன்னானே என்று யோசனையோடு அவள் கண்களை உருட்டி கண்ணாடியில் பார்த்ததும், பூவிழிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “ராஸ்கல்” என்று வீராவைச் செல்லமாகத் திட்டிவிட்டு, அவன் பேசிய வார்த்தைகளை எல்லாம் அசை போட்டவள், உள்ளத்தில் அவளையும் அறியாமல் வீரா இன்று முதல் அடி எடுத்து வைத்துவிட்டான்.
