EPISODE 17
அர்ஜுனைத் தன் அறையில் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, அவன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் முடிந்தவரை ரசிகா அவன் கண்களில் படாமல் இருந்தாள்.
எப்போதும் போல காலை நேரமே எழுந்து வாசலில் கோலம் போட்டு வருபவள், காலை பிரேக்ஃபாஸ்ட் அனைவருக்கும் செய்துவிட்டு, ரூமுக்குள் ஒளிந்துகொள்வாள். அர்ஜுன் வந்து சாப்பிட்டுச் செல்லும் வரை ரூமை விட்டு மறந்தும்கூட வெளியே வருவதில்லை.
அர்ஜுனும் அதைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அவள் இந்த சில நாட்களாக அர்ஜுனின் கண்களில் படுவதே இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேல் ஆனது அவளைப் பார்க்காமல். அர்ஜுனுக்கு ஏதோ போல இருந்தது. காலையில் ஜிம்முக்கு போகும் நேரத்தில் கோலம் போடும் அவளைத் தூரத்தில் இருந்து பார்ப்பானேயொழிய, அவளை அருகில் பார்த்து ரசிக்க முடியவில்லை. அவள் முகத்தை முழுவதுமாக அவன் பார்க்க முடிவதில்லை. அவளைப் பார்க்காமல் அவனுக்குப் பித்து பிடித்ததுபோல ஆகிவிட்டது.
இரவு மிகவும் தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தான் அர்ஜுன். ஒரு முக்கியமான கேஸ் போய்க்கொண்டிருக்க… அதைப்பற்றி விசாரிக்கச் சென்ற இடத்தில், குற்றவாளி அர்ஜுனிடமிருந்து தப்பிக்க முயற்சிக்க, அவனைத் துரத்திப் பிடித்ததில், குற்றவாளி எதிர்கொண்டு தாக்குதல் நடத்த, அர்ஜுனின் முகம், உடலில் எல்லாம் லேசாகக் காயங்கள் ஏற்பட்டு, இரத்தம் கசிந்திருந்தது.
அவனை ஒரு வழியாகப் பிடித்து லாக்கப்பில் போட்ட பிறகுதான் அர்ஜுனுக்குத் திருப்தியாக இருந்தது. மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, இரவு இரண்டு மணி போலத்தான் வீட்டிற்கு வந்தான் அர்ஜுன்.
கதவைச் சாற்றிவிட்டு நடந்து வரும்போது, அவன் பாதம் ‘விறிரென்று’ வலிப்பதை அப்போதுதான் உணர்ந்தான். பாதத்தை நன்றாக ஊன்றி நடக்காமல், காலை லேசாகத் தாங்கி தாங்கி நடந்து வந்தான். தன் ஷூவை வாசலிலேயே கழற்றிவிட்டவன், வலியோடு வீட்டுக்குள் கதவைத் திறந்துகொண்டு நுழைந்தவன், சத்தம் வராமல் வீட்டில் இருப்பவர்களின் அமைதி கெடாமல், மெதுவாகக் கதவைச் சாற்றிவிட்டு, படிகளில் ஏறித் தன் அறைக்கதவைத் திறக்கப் போக… அப்போது சமையலறையில் இருந்து ஏதோ கீழே விழும் சத்தம், அந்த நேரத்தில் அவன் கவனத்தை ஈர்த்தது.
நின்ற நிலையில், தாங்கி நடந்தபடி பின்னால் வந்தவன், மாடியில் இருந்து சமையலறை இருந்த இடத்தைப் பார்க்க… அப்போதுதான் அங்கே ஒரே ஒரு லைட் மட்டும் எரிந்துகொண்டிருந்ததைக் கவனித்தான். “இந்த நேரத்தில் யார் சமையலறையில் இருக்காங்க?” என்று யோசனையுடன் அர்ஜுன் கீழே வந்தான்.
அவன் படிகளில் இறங்கி வரும்போதே, சமையலறையில் இருந்து உணவின் வாசனை அவன் மூக்கைத் துளைத்தது. கண்கள் மூடி அந்த வாசனையை அனுபவித்தவன், கீழே இறங்கி வந்து சமையலறையில் பார்க்க… சேலை அணிந்த செந்தாமரை, இடுப்பில் ஃபோனைச் சொருகிக்கொண்டு, காதில் ‘wired’ ஹெட்போன்ஸ் மாட்டிக்கொண்டு, பாட்டு கேட்டுக்கொண்டே அந்தப் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடியபடி சமைத்துக்கொண்டிருந்தாள் ரசிகா.
அவளைப் பார்த்ததும், இத்தனை நேரம் இருந்த அவன் சோர்வெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. மெல்ல சத்தமில்லாமல் அவள் பின்னால் வந்து நின்றவன், அவள் என்ன சமைக்கிறாள் என்று எட்டிப் பார்த்தான். காய்கறிகள் எல்லாம் நிறையப் போட்டு கொதித்துக்கொண்டிருந்த சுடுநீரில், அருகில் இருந்த நூடுல்ஸ் பாக்கெட்டைப் பிரித்து அதில் போட்டு கிளறிக்கொண்டிருந்தாள்.
‘நூடுல்ஸ்… இதுவா செஞ்சுட்டு இருக்கா! இந்த வாசம் தான் அவ்வளவு நன்றாக இருக்கிறதா?’ என்று யோசித்தவன், அவள் பின்னால் இருந்து ரசித்துக்கொண்டே மேலும் அவளை நெருங்கிய அர்ஜுன், ரசிகா இடையில் சொருகியிருந்த ஃபோனைச் சட்டென்று எடுத்துவிட… அவள் காதில் மாட்டியிருந்த ஹெட்போனும் அதனோடு சேர்த்து வந்துவிட்டது.
சட்டென்று ரசிகா திரும்பிப் பார்க்க, அவளை உரசிவிடும் தூரத்தில் அர்ஜுன் அவள் அருகில் நின்றிருந்தான்.
அவனைப் பார்த்ததும் “ஆஹ்…” என்று கத்திக்கொண்டே ரசிகா பின்னால் செல்ல… அடுப்பில் சூடாகக் கொதித்துக்கொண்டிருந்த பாத்திரத்தில் அவள் இடித்துவிடுவாள் என்று, அவள் இடையில் ஒரு கையும், அவள் கத்தி மற்றவர்களை எழுப்பிவிடக்கூடாது என்று அவள் வாயில் ஒரு கையுமாக அழுத்தி, அவளைத் தன்னோடு சேர்த்து இழுத்து நிறுத்தினான் அர்ஜுன்.
அதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகா அவனை அதிர்ந்துபோய் பார்க்க…
அவளிடம் அவள் பின்னால் கொதித்துக்கொண்டிருந்த நூடுல்ஸை பார்வையாலேயே சுட்டிக்காட்டியவன், “சுட்டுடப் போகுது” என்றவன், மெல்ல அவள் வாயை மூடியிருந்த தன் கையை, ரசிகாவின் உதட்டை வருடிக்கொண்டே எடுத்தவன், “என்ன இந்த நேரத்தில சமையல் கட்டில் உருட்டிட்டு இருக்க?” என்றான்.
“இரவு நேரமே சாப்பிட்டுட்டேன். திடீர்னு பசி எடுத்திருச்சுன்னுதான் செஞ்சுட்டு இருக்கேன்” என்றவள், “நீங்க கொஞ்சம் சாப்பிடுறீங்களா?” என்றாள் ஆர்வமாக அவனைப் பார்த்து.
“ம்ம்ஹும்… நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேன். எனக்கு வேண்டாம்” என்று முகம் சுளித்தான்.
“அப்போ வேணாமா? நான் நிறையச் சேர்த்துதான் செய்திருக்கேன்” என்றாள்.
அவள் இதழைப் பார்த்து, “வேணும்” என்றான்.
“அப்போ சாப்பிடுங்க” என்றாள்.
“இல்லை, வேண்டாம்” என்றான் வேகமாக.
“இப்போத்தானே ‘வேணும்’னு சொன்னீங்க?”
“நான் சொன்னது உங்களுக்குப் புரியாது” என்றான்.
அவள் புருவம் சுருங்க அவனைப் பார்க்க…
அவனுக்கோ அவள் செய்த உணவின் மனம் பசியைத் தூண்டியது.
அவனுக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. மதியம் சாப்பிட்டது, சமையல் வாசம் பிடித்துக்கொண்டுதான் சமையலறைக்கு வந்தான். ஆனால், அவளிடம் சாப்பாடு வேண்டும் என்று கேட்க ஏனோ அர்ஜுனுக்கு மனம் வரவில்லை. அவள் வேண்டுமா என்று கேட்டதும், ‘ஆமாம்’ என்று கேட்க அவன் ஈகோ தடுத்தது.
அர்ஜுன் எதுவும் பேசாமல் யோசனையோடு நின்றிருக்க… அவன் முகத்திற்கு நேராக, சூடான நூடுல்ஸை ஒரு பவுலில் போட்டு நீட்டி இருந்தால் ரசிகா.
அதில் கவனம் பெற்றவன், அவன் எதிரே மிரண்ட விழிகளுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகாவைப் பார்த்தான்.
“ம்ம்ம்… இந்தாங்க சாப்பிடுங்க. எனக்கு நான் எடுத்துக்கிட்டேன்” என்றவள், அருகில் இருந்த மேஜை மீது அந்த பவுலை வைத்தவள்… அவளுக்காகப் போட்டு வைத்திருந்த பவுலை எடுத்துக்கொண்டு அவள் அறை நோக்கி நடந்தாள்.
அவள் செல்வதையே பார்த்தவன், “நான் தான் எனக்கு வேணாம்னு சொன்னேனே” என்றான் அவளுக்குக் கேட்கும்படி சத்தமாக.
திரும்பி அவனைப் பார்த்தவள், “ஷ்… எதுக்கு இப்போ இப்படிச் சத்தம் போட்டு பேசுறீங்க? உங்களுக்கு வேணாம்னா அப்படியே வெச்சிருங்க… ஆறினதும் நான் அதை பிரிட்ஜில் வெச்சு மறுபடி எனக்குப் பசிக்கிறபோது சூடு பண்ணி சாப்பிடுகிறேன்” என்றாள்.
“சாப்பாட்டைச் சூடு பண்ணி எல்லாம் சாப்பிடக்கூடாது. சாப்பாட்டை வீண் பண்ண எனக்கும் பிடிக்காது. நீ நிறையச் செய்திருக்கேன்னு சொன்னேல்ல? அதனால சாப்பிடறேன்” என்றான்.
“ம்ஹும்… ரொம்பத்தான். அதான் உங்களுக்கு பயங்கர பசியின்னு உங்க முகமே சொல்லுதே. அப்புறம் என்ன என்கிட்ட இந்த வீராப்பு? சாப்பிடுங்க” என்றவள் அர்ஜுனைப் பார்க்க.
அவன் ரசிகா பேசியதைக் கேட்டு, “என்ன சொன்ன?” என்று அவளை நோக்கி வருவதற்குள், திரும்பி ஒரே ஓட்டமாக ஓடித் தன் ரூமிற்குள் தஞ்சம் புகுந்தாள்.
அவள் ஓடுவதைப் பார்த்துச் சிரித்தவன், திரும்பி மேஜை மீது இருந்த உணவைப் பார்க்க… அவன் வயிறு வேறு அந்த நேரம் பார்த்து ‘பசிக்கிறது’ என்று கூப்பாடு போட்டது. அர்ஜுன் உடலைப் ‘பிட்டாக’ வைத்திருக்க வேண்டும் என்று இதுவரை நூடுல்ஸ் போன்ற ‘ஜங்க்’ உணவுகளைச் சாப்பிடுவதில்லை. இன்று பசி வேறு அவனைச் சாப்பிடத் தூண்ட… “ம்ம்… பரவாயில்லை. ஒரு நாள் தானே?” என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டவன், சென்று சாப்பிட அமர்ந்தான்.
நன்றாகச் சூடாக உணவு இருக்க… முதலில் ஒரு ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டான். அடுத்த நொடி அவன் கண்கள் பளிச்சிட, அந்தப் பவுலையும், ரசிகாவின் அறையையும் பார்த்தவன், “இவள் கையில் ஏதோ மேஜிக் இருக்கும் போல…” என்று அவள் கொடுத்த உணவு முழுவதும் கண்கள் மூடி ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தான்.
சாப்பிட்டு முடித்து பவுலை சின்க்கில் போட்டவன், மெல்ல வலித்த காலை பிடித்துக்கொண்டே மெதுவாகத் தாங்கியபடி மாடிப்படிகளில் ஏறினான்.
அப்போது சாப்பிட்டு முடித்த ரசிகா வெளியே வந்தவள், அர்ஜுன் ஒரு மாதிரித் தாங்கி நடந்து செல்வதைப் பார்த்தவள், வேகமாக அவனிடம் ஓடி வந்தவள், “என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி நடக்குறீங்க?” என்று அவனிடம் வேகமாக வந்தவள், அவனை அப்போதுதான் சரியாகக் கவனித்தாள்.
அவன் கைகளிலும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டு, அதில் இருந்து இரத்தம் வழிந்து, அது காய்ந்துபோயும் இருந்தது. அதைப் பார்த்ததும், “என்ன இது? இப்படி காயம் ஆகியிருக்கு? இதோடா இவ்ளோ நேரமும் இருந்தீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று பதட்டமடைந்தாள் ரசிகா.
அதைப் பார்த்தவன், அவள் தனக்காகப் பதட்டப்படுவது அவனை ரசிக்க வைத்தது. உள்ளுக்குள் ஒருவித புரியாத உணர்வும், தன் மீது அக்கறை காட்டுபவளிடம் தோன்றியது.
“இது லேசான காயம்தான். ஒரு ரவுடியைப் பிடிக்கும்போது, அவன் கிட்ட இருந்த கத்தியால் என்னைக் காயப்படுத்த வந்தான். அவனோட சண்டை போடும்போதுதான் இந்தக் காயம் எல்லாம் ஆகிருச்சு” என்றான் சாதாரணமாக.
“என்ன? நீங்க இவ்ளோ காயம் ஆகியிருக்கு. அதுக்கு எந்த ட்ரீட்மென்ட்டும் பார்க்காமலேயா இருப்பீங்க?” என்றவள், “நீங்க உங்க ரூம்ல இருங்க. இதோ வந்திடறேன்” என்றவள் வேகமாக சமையலறைக்கு வந்தவள், சுடுதண்ணீர் வைத்துவிட்டு, நேராகத் தன் ரூமிற்கு வந்து, அர்ஜுன் காயத்திற்கு மருந்திடுவதற்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு, சுடுதண்ணீரும், ஒரு துண்டுடனும், சேலையைத் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு அவன் அறைக்குள் வந்தாள்.
அப்போதுதான் சட்டையை அர்ஜுன் கழட்டிக்கொண்டிருக்க… அவன் கையில் ஏற்பட்ட காயத்தில் அவனுக்கு அது சிரமமாக இருக்க… சட்டையைக் கழட்ட அர்ஜுன் சிரமப்பட்டுக்கொண்டிருக்கவும், வேகமாக வந்தவள், கையில் இருந்த பொருட்களை எல்லாம் மேஜை மீது வைத்துவிட்டு, “இருங்க நான் ஹெல்ப் பண்றேன்” என்று அவன் சட்டையை மெதுவாகக் கழட்டினாள்.
அப்போதுதான் அர்ஜுனின் திரண்டிருந்த தோள்களைக் கண்ட ரசிகா, ஒரு நிமிடம் அதை ரசித்தவள், பின் தலையை குலுக்கிக்கொண்டு, “இப்படி வாங்க. வந்து உட்காருங்க” என்று அவன் கைபிடித்து சோபாவில் அமர வைத்தவள்… தான் கொண்டு வந்ததையெல்லாம் எடுத்து அவன் முன் இருந்த மேஜையில் வைத்து, சுடுதண்ணீரில் துண்டை முக்கி, அது பொறுத்துக்கொள்ளும் அளவுக்குச் சூடாக இருக்கிறதா என்று தன் கையில் ஒற்றி எடுத்தவள், திருப்தியில் அவன் கைகளில் காய்ந்திருந்த ரத்தத்தைத் துடைக்க ஆரம்பித்தாள்.
அவள் மிகவும் தீவிரமாகத் தன் வேலையைச் செய்துகொண்டிருந்தாள். அர்ஜுன் தீவிரமாகத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான். என்னன்னு பார்க்கிறீங்க? அதான் ரசிகாவை ‘சைட்’ அடித்துக்கொண்டிருந்தான்.
அவன் கைகள், கழுத்து என்று ஒவ்வொரு காயத்தையும் துடைத்தவள், முகத்தில் நெற்றி, கன்னம் என்று இருந்த காயங்களைத் துடைக்கும்போது, சற்று அழுத்தமாகத் துடைத்துவிட… வலியால் அர்ஜுன் முகம் சுருக்க, அதைப் பார்த்தவள், “வலிக்குதா?” என்றால் அவனைப் பாவமாகப் பார்த்தாள்.
அர்ஜுனும் ரசிகாவின் கண்களை ரசித்துக்கொண்டே, அவள் முகத்தில் காட்டும் பாவனைகளை ரசித்துக்கொண்டே, “ஆமாம்” என்று தலையை ஆட்டினான், வலிக்கிறது என்று.
“கொஞ்சம் பொறுத்துக்கோங்க. முடிஞ்சிருச்சு. மருந்து போட்டால் போதும்” என்று காயங்களைத் துடைத்துவிட்டு, மருந்தை எடுத்து காயம் பட்ட இடமெல்லாம் மிகவும் அக்கறையாகப் பூசிவிட்டாள்.
அவள் வேலைகளை எல்லாம் பார்த்தால், ரசிகா ஒரு சிறந்த செவிலியர் போல வேலை செய்துகொண்டிருந்தாள். எல்லா வேலையும் முடிந்து, அதிகமாகக் காயம் ஏற்பட்ட இடத்தில் மட்டும் கட்டுப்போட்டுவிட்டவள், அவன் உதட்டுக்கு அருகில் இருந்த காயத்திற்கு அர்ஜுன் அருகில் வந்து மருந்திட்டுக்கொண்டிருந்தாள்.
அர்ஜுன் சோபாவில் அமர்ந்திருக்க… ரசிகா தரையில் முட்டிபோட்டு அவனுக்கு நெருக்கமாக அமர்ந்து காயத்திற்கு மருந்திட்டுக்கொண்டிருக்க… அவளையும், அவள் நெருக்கத்தையும் ரசித்துக்கொண்டிருந்த அர்ஜுன், “இவ்ளோ நல்லா, பொறுமையாக என் காயத்துக்கு நீங்க ட்ரீட்மென்ட் பண்றதை எல்லாம் பார்த்தா, நீங்க ப்ரொபஷனலா மெடிக்கல் ஃபீல்டில் இருக்கிற மாதிரி தெரியுது. ஆனா இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து நீங்க எந்த வேலைக்கும் போகாமல் வீட்டில் இருக்கிற மாதிரி தெரியுதே?” என்று தன் மனதில் இருந்த கேள்வியை அவளிடம் கேட்டான்.
அவன் காயத்திற்கு மருந்திடுட்டு இருந்தவள், “ஆமாம். நான் இப்போதான் வெட்டியா சும்மா இருக்கேன். பட், ஒரு வருடத்திற்கு முன்ன வரை நான்…” என்று ஒரு பிரபலமான மருத்துவமனை பெயரைச் சொல்லி, “அங்கே நான் டாக்டரா இரண்டு வருடமா வேலை பார்த்தேன்” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாக விழி உயர்த்திப் பார்த்தான். அவள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல், மருந்திட்டு முடித்தவள், அவனிடம் ஒரு மாத்திரையைப் பிரித்து கொடுத்து, கூடவே தண்ணீரையும் கொடுத்து அவனைச் சாப்பிடச் சொல்ல… அர்ஜுனும் அவள் சொல்வதுபோல எந்த எதிர்கேள்வியும் கேட்காமல் மாத்திரையைப் போட்டு தண்ணீர் குடித்தான்.
“என்ன? நான் கொடுத்த மாத்திரையை எதுவும் சொல்லாமல் வாங்கி அப்படியே சாப்பிட்டீங்க? என்ன, எதுன்னு கேட்க மாட்டீங்களா? எதுக்கு கொடுத்தேன்னு தெரிஞ்சுக்க வேணாமா?” என்றால் அவனைப் பார்த்து.
“நீங்க… நீ எதைக் கொடுத்தாலும் நான் ஏதும் பேசாமல் சாப்பிடுவேன்” என்றான் அவள் விழிகளைப் பார்த்து.
“ஓஹோ…” என்றவள், தன் கையில் வைத்திருந்த மற்றொரு மாத்திரையை அவனிடம் நீட்ட, அதையும் வாங்கி வாயில் போட்டான்.
மெல்ல வாயை பார்த்து சிரித்தவள், “சரி, கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க. இப்பவே மணி நாலு ஆகிருச்சு” என்றவள், தான் கொண்டு வந்த மருந்துப் பொருட்களை எடுத்துக்கொண்டு அவன் அறையை விட்டு கிளம்பப் போனாள்.
அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன், “Thank you” என்றான்.
“நான் இந்த நேரத்தில் உங்களுக்குப் பார்த்த ட்ரீட்மென்ட்டை மருத்துவமனையில் பார்த்திருந்தா எனக்குச் சம்பளம், பீஸ் வந்து இருக்கும். ஏதோ உங்க வீட்ல மூணு வேலையும் சும்மா இருக்கறதுனால உங்களுக்கு ஃப்ரீயா ட்ரீட்மென்ட் பண்ணிட்டேன்” என்று சிரித்தவள், அவன் கையில் இருந்த தன் கையை லாவகமாக எடுத்துக்கொண்டாள்.
அவள் கையை மீண்டும் இறுக்கிப் பிடித்தவன், “எனக்கு யாருகிட்டயும் ஃப்ரீயா எதையும் வாங்கிப் பழக்கம் இல்லை” என்றவன், இவ்வளவு நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த தன் உணர்வுகளுக்குத் தீனி போடும் விதமாக ரசிகாவை இழுத்து, அவள் இதழில் முத்தம் வைத்தான்.
இதை சற்றும் எதிர்பாராத ரசிகா, அதிர்ந்து அவனிடமிருந்து விலகப் போக… ஆனால், அவளை விடாமல் தன்னோடு சேர்த்து அணைத்தவன், அவள் இதழினைத் தீவிரமாக ருசித்தவன், அவளை மெல்லத் தன்னிடமிருந்து விடுவித்தவன், அவளைச் சிரித்துக்கொண்டே பார்க்க…
அவன் சிரிப்பதைப் பார்த்து ரசிகா கோபம் கொண்டவள், நொடியும் தாமதிக்காமல் அவனை ஓங்கி அறைந்தாள். அதில் அதிர்ச்சியான அர்ஜுன் அவளைப் பார்க்க… அவளோ, “உங்களைவிட வயசுல பெரியவங்க கிட்ட எப்படி நடந்துகணும்னு உங்களுக்குத் தெரியாதா? ச்சே… உங்களை அப்படியே போகட்டும்னு விட்டேன் பாருங்க, எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்” என்றவள், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அவன் ரூமிலிருந்து வெளியே சென்றாள்.
