EPISODE 18
“ஏய் பூவிழி, சீக்கிரம் எழுந்திருடி!” என்று ரசிகா தூங்கிக்கொண்டிருந்த பூவிழியைப் பிடித்து இழுத்து எழுப்பிக்கொண்டிருந்தாள்.
“ம்ச்… டேய், கொஞ்ச நேரம் என்னை நிம்மதியாகத் தூங்க விட மாட்டியா? தினமும் காலையில நேரமே வந்து என்னை எழுப்பி விடுறதுதான் உனக்கு வேலையா? ஒழுங்காகப் போயிடு. ஏற்கனவே உன்னால தினமும் நான் நைட்டு தூங்குறதுக்கு லேட் ஆயிடுது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுடா, ப்ளீஸ்!” என்று கெஞ்சிக்கொண்டே தலையணையைத் தூக்கித் தலையில் வைத்து முகத்தை மறைத்துக்கொண்டு படுத்துக்கொண்டாள்.
“ஏய் என்னடி பேசிட்டு இருக்க? நான் ரசிகாடி. எந்திரி முதல்ல” என்று அவள் போர்த்தியிருந்த போர்வையை வேகமாக ரசிகா இழுக்க…
அப்போதுதான் கவனித்தாள் ரசிகா, பூவிழி சேலை இல்லாமல் வெறும் பிளவுசும், பாவாடையும் போட்டுக்கொண்டு படுத்திருப்பதை.
“ஏய் பூவிழி… என்னடி இது இப்படிப் படுத்திருக்க? உன்னோட சேலை எங்கே? ச்சீ… நைட் வேலை எல்லாம் முடிஞ்சதும் திரும்ப சேலையை மாட்டிக்க வேண்டியதுதானேடி?” என்று ரசிகா பூவிழியைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொள்ள…
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து எழுந்த பூவிழி, “ஏய் ரசி… எருமை, உன்னோட புத்தி ஏன்டி இப்படிப் போகுது? நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை” என்றாள்.
“நான் எதுவும் நினைக்கலைடி…” என்று குறும்புச் சிரிப்புச் சிரித்த ரசிகா கீழே குனிந்து, கட்டிலுக்கு அருகில் இருந்த அவள் சேலையை எடுத்து பூவிழியிடம் நீட்டி, “இந்தா, இதைக் கட்டிக்கிட்டுச் சீக்கிரமா கீழே வா. உன்னைப் பார்க்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஆளுங்க வந்திருக்காங்க” என்றாள் ரசிகா.
அவளிடம் சேலையை வாங்கி கட்டிக்கொண்டிருந்த பூவிழி, “போலீசா!” என்று கேட்டவள், தன் மாமா ஏற்கனவே தங்கள் மேல் போலீசில் கேஸ் கொடுத்தது நினைவுக்கு வர… அவசரமாக ரெடியாகி ரசிகாவுடன் கீழே சென்றாள்.
அவள் கீழே வரும்போது அங்கே போலீஸ் நின்று அர்ஜுனிடம் மிகவும் பவ்வியமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அர்ஜுனைப் பார்த்ததும் ரசிகா, “ஏய் பூவிழி, நீ போய் என்னன்னு கேளு. நான் உள்ளே போறேன்” என்று அங்கிருந்து நகரப் போக…
“ஏய், இருடி. என்னை தனியாக விட்டுட்டுப் போகாத” என்று ரசிகாவின் கையைப் பிடித்து அருகில் நிறுத்தியவள், அவளை அழைத்துக்கொண்டு அர்ஜுன் அருகில் சென்றாள்.
இங்கே அர்ஜுன் வீட்டிற்கு வந்ததிலிருந்து பூவிழி அவனிடம் இதுவரை ஒருமுறை கூடப் பேசியதில்லை. எப்போதுமே தன் அறையிலேயே பூவிழி இருப்பதால், அர்ஜுன் வந்து செல்லும் நேரத்தில் அவனை அவள் சரியாகக் கவனிப்பதில்லை.
தன் அருகில் வந்து நின்ற பூவிழியைப் பார்த்தவன், “வாங்க அண்ணி. இவர் உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்காரு” என்றான் அருகில் இருந்த ரசிகாவைப் பார்த்துக்கொண்டே.
அர்ஜுன், “இவர் எதுக்காக என்னைப் பார்க்க வந்திருக்காரு?” என்றாள் சற்றுப் பதட்டப்பட்டபடி.
அதை கவனித்தவன், “உங்க மேல உங்க வீட்டில் இருந்து ஆல்ரெடி போலீசில் கேஸ் கொடுத்திருந்தாங்க இல்லையா? அதைப்பற்றிதான் விசாரிக்க வந்திருக்காங்க” என்றான் அர்ஜுன்.
“அர்ஜுன், என்ன விசாரிக்கணும்? இதுவும் பெரிய பிரச்சினை ஆயிடுச்சா?” என்றாள் பயந்துகொண்டே.
“ஐயோ, அதெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை அண்ணி. அண்ணா சொல்லி இந்த கேஸை ஃபுல்லாக முடிச்சுட்டோம். அவங்க உங்ககிட்ட கையெழுத்து வாங்கத்தான் வந்திருக்காங்க. ஏன்னா, இந்த கேஸ்ல நீங்களும், உங்க ஃப்ரெண்டும், அத்தையும் சம்பந்தப்பட்டிருக்கீங்க. அதனால, உங்க மூணு பேர் கிட்டேயும் கையெழுத்து வாங்கி இந்தக் கேஸை ‘க்ளோஸ்’ பண்றதுக்காகத்தான் கான்ஸ்டபிள், ‘நான்தான் வீட்டுக்கு வரச் சொன்னேன்'” என்றான்.
“இதுல எந்தப் பிரச்சினையும் இனிமேல் வராதா? ஆக்சுவலா, அவங்க என்மேல எதுக்காக கேஸ் கொடுத்திருக்காங்கங்கிற விவரம் கூட எனக்குத் தெரியாது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து என்னை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி இருந்தாங்க. அதைக் கேள்விப்பட்ட அர்ஜுன் என்னை ஸ்டேஷனுக்குப் போக வேண்டாம்னு சொல்லி மத்ததை அவனே பார்த்துக்குறேன்னு சொல்லியிருந்தான். அதனாலதான் கேட்கிறேன். எனக்கு என்னன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்றாள் பூவிழி.
“அண்ணி, உங்க மாமா, அத்தை எதுக்காக கேஸ் கொடுத்திருக்காங்கன்னு உங்க யாருக்குமே தெரியாதா?” என்றான்.
“இல்லை” என்று பூவிழி தலையாட்ட…
“நீங்க உங்களுக்காக ஏற்பாடு பண்ணியிருந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லி என் அண்ணனைக் கூட்டிக்கிட்டு மண்டபத்திலிருந்து ஓடிப்போயிட்டதாகவும், அதனால அவங்களுக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும் அவங்க மேல ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுத்திருக்காங்க. இதோ உங்க பக்கத்துல நிக்கிறாங்களே, உங்க ஃப்ரெண்டு ரசிகா, அவங்க மேலேயும், செண்பகமே அத்தை மேலேயும் அவங்க அந்த வீட்டில் இருந்து நம்ம வீட்டுக்கு வரும்போது அங்கு இருக்கிற பணம், நகைகளை எல்லாம் திருடிட்டு வந்துட்டதாகவும் இவங்க மேல திருட்டுப் பட்டிக் கேஸ் கொடுத்திருக்காங்க” என்றான்.
“என்னது! யார் திருடி? நான் எதுக்கு அவங்க வீட்டில் இருந்து திருடிட்டு வரணும்? நான் அங்க இருக்கிறவங்ககிட்ட சொல்லிட்டுத்தானே அம்மாவைக் கூட்டிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். பூவிழியோட புருஷன்தான் எங்களை அங்க இருந்து கூட்டிட்டு வந்தாரு. அது அவங்களுக்கும் நல்லாவே தெரியுமே. அதைத் தெரிந்தும் இவங்க யாரு என்மேல தப்பாக ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கிறதுக்கு?” என்று பொங்கி எழுந்தாள் ரசிகா.
“அது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவங்க கேஸ் கொடுக்கும்போது இப்படித்தான் கேஸ் கொடுத்திருக்காங்க. நாங்க அவங்களை ஸ்டேஷனில் வெச்சு விசாரிச்சதுல, அவங்க உங்க மேல கேஸ் கொடுத்ததெல்லாம் பொய்யின்னு ‘ப்ரூஃப்’ ஆயிடுச்சு. ஆனால், அவங்க உங்களுக்காகப் பண்ணின செலவுக்கெல்லாம் கணக்கு சொல்லி, அந்தப் பணம் எல்லாம் வேணும்னு கேட்டு ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுத்திருக்காங்க” என்றான் அர்ஜுன்.
“என்ன அர்ஜுன் சொல்ற? எனக்குப் புரியல” என்றாள் பூவிழி.
“எனக்கும் என்னன்னு தெரியலை அண்ணி. இப்போதான் இவங்க என்கிட்ட இந்த விவரம் எல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. நீங்களே வந்துட்டீங்க… என்னன்னு நீங்களே நேரடியாகக் கேட்டுக்கோங்க” என்றான்.
பூவிழி திரும்பி அந்த கான்ஸ்டபிளைப் பார்த்து, “சார், சொல்லுங்க. இப்போ என்ன பிரச்சனை?” என்றாள்.
“மேடம், நீங்க தானே பூவிழி?” என்றார் அந்தக் கான்ஸ்டபிள்.
“ஆமாம்” என்று பூவிழி தலையாட்ட…
“சுகந்தன், மல்லிகா, இவங்க ரெண்டு பேரும் உங்களுக்கு என்ன உறவு வேணும்?” என்றார்.
“அவர், அவங்க ரெண்டு பேரும் என்னோட மாமா, அத்தை. அதாவது, என் அம்மா கூடப் பிறந்தவர் தான் சுகந்தன். அவருடைய ‘வைஃப்’தான் மல்லிகா” என்றாள்.
“அவங்க ரெண்டு பேரும்தான் உங்க மேலேயும், உங்க அம்மா மேலேயும் கேஸ் கொடுத்திருக்காங்க” என்றார்.
“என்ன கேஸ் சார்? அதான் ஆல்ரெடி எங்க மேல போட்டிருந்த கேஸ் ‘வித்ட்ரா’ பண்ணிட்டதா மிஸ்டர் அர்ஜுன் சொல்றாரே? மறுபடியும் என்ன கேஸ் போட்டிருக்காங்க எங்க மேல?” என்றால் பூவிழி.
“அவங்க உங்க மேல கொடுத்திருக்கிற கேஸ் என்னன்னா, சின்ன வயசுல இருந்து உங்களையும் உங்க அம்மாவையும் அவங்க வீட்டில் வெச்சுதான் பார்த்துக்கிட்டதாகவும், அவங்க வீட்டில் இத்தனை நாள் தங்கியிருந்ததற்கு, மூணு நேரமும் அவங்களோட செலவில் சாப்பிட்டதுக்கு, அதேபோல உங்க படிப்புச் செலவு, இதுல செலவுகள் எல்லாத்தையும் கணக்குப் போட்டு, அதோட சேர்த்து உங்களுக்குக் கல்யாணம் பேசி முடிச்சாங்க இல்லையா? அதுக்கான செலவுகள் என்று எல்லாத்தையும் கணக்குப் போட்டு, உங்க அந்தப் பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுக்கச் சொல்லி கேஸ் போட்டிருக்காங்க. இத்தனை வருஷமா அவங்களோட பணத்தில் வாழ்ந்துட்டு, அவங்களுக்குத் துரோகம் பண்ணிட்டு வேற ஒரு பையனை நீங்கள் கல்யாணம் பண்ணிக்கிட்டதாகவும், அதனால் அவங்களுக்கு அதிக மன உளைச்சல் இருக்கிறதாவும், அவங்க பணம் எல்லாம் உங்களுக்குச் செலவு பண்ணிட்டதால அது எல்லாம் திரும்பத் தரச் சொல்லிக் கேட்டிருக்காங்க” என்றார்.
அதைக் கேட்டதும் உள்ளிருந்து வந்த செண்பகம், “சார், என்ன சொல்றீங்க? அவங்ககிட்ட இருக்கிற பணம் மொத்தமும் எங்களோடது. நியாயப்படி பார்த்தா, அவங்க மேலதான் நாங்க கேஸ் போட்டிருக்கணும், எங்க சொத்தையும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கச் சொல்லி. இத்தனை வருஷமா அவங்க எங்க பணத்திலிருந்து அனுபவிச்சதை எல்லாத்தையும் திருப்பிக் கொடுக்கச் சொல்லி நாங்கதான் கேஸ் போட்டிருக்கணும். ‘போனால் போகட்டும்’னு கூடப் பிறந்த அண்ணன்னு அவர்கிட்ட எதுவும் கேட்காமல் நானும் என் பொண்ணு நிம்மதியாக இருந்தா போதும்னு இங்கே வந்திருக்கோம்” என்றார் செண்பகம் ஆதங்கத்தோடு.
“எனக்கு அதெல்லாம் தெரியாதுமா. இந்த மாதிரி அவங்க உங்க மேல கேஸ் கொடுத்திருக்காங்க. அதைத் தெரியப்படுத்தத்தான் நான் இங்கே வந்திருக்கேன். அடுத்து சட்டப்படி என்ன செய்யணுமோ, அதை நீங்கதான் பார்த்துக்கணும். அதுக்காகத்தான் நான் இங்கே ‘இன்பார்ம்’ பண்ண வந்தேன்” என்றால் அந்தக் கான்ஸ்டபிள்.
கோபமாகப் பூவிழியிடம் வந்து செண்பகம், “பூவிழி, இது கொஞ்சம் கூட சரியில்லை. நம்ம கிட்ட இருந்து பறிச்சுக்கிட்ட எல்லாத்தையும் நம்ம திரும்ப வாங்கணும். உன் அப்பா கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதித்த பணம் அதெல்லாம். அவர் சேர்த்து வைத்த சொத்துக்களை எல்லாம் அவர் போன பிறகு என் அண்ணனும் அவர் பொண்டாட்டியும் வந்து அனுபவிச்சிட்டு இருக்காங்க. உன்னையும் என்னையும் அந்த வீட்டில் வேலைக்காரி மாதிரி இத்தனை நாளும் நடத்தினாங்க. இனியும் இதையெல்லாம் பொறுத்துக்கிட்டுச் சும்மா இருக்கக் கூடாது. நம்மளும் அவங்க மேல கேஸ் போடுவோம். நம்ம சொத்தையெல்லாம் திரும்ப வாங்கணும்” என்றால் செண்பகம்.
பூவிழியும் அதே ஆத்திரத்தோடுதான் இருந்தாள். தங்களுக்குச் சேர வேண்டிய அனைத்துச் சொத்துக்களையும் அவர்கள் அனுபவித்துக்கொண்டு, இப்போது அந்தச் சொத்துக்கு என்னவோ அவர்கள் முழு சொந்தக்காரர்கள் மாதிரி நடந்துகொள்வதே அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இவர்கள் பேசுவது எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுன், செண்பகத்திடம் வந்து, “அத்தை, நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். இந்த விஷயத்தை நம்ம ‘டீல்’ பண்ணிக்கலாம். அண்ணா வரட்டும். அவர்கிட்ட பேசிட்டு என்ன செய்யலாம்னு நான் முடிவு பண்ணி சொல்றேன்” என்றான்.
“சரிங்க தம்பி. மாப்பிள்ளை வந்தா நானும் சொல்றேன். அவர் எங்களுக்காக இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணிக் கொடுக்கணும். என் மகளுக்காகப் பிறந்துவிட்டு சீதனமாக நான் எதுவுமே கொடுக்கல. அவளுக்காக அவங்க அப்பா சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாமே என் மகளுக்குத் திரும்பக் கிடைக்கணும். அதுக்கு ஏதாவது ஒரு வழி செய்யணும்” என்றார்.
விஷயத்தைச் சொல்லிவிட்டு கான்ஸ்டபிள் அங்கிருந்து சென்றுவிட…
அர்ஜுனிடம் திரும்பிய பூவிழி, “அர்ஜுன், எனக்காக ஒரே ஒரு உதவி செய்ய முடியுமா?” என்றாள்.
“என்ன அண்ணி? சொல்லுங்க” என்றான் அர்ஜுன்.
“இப்போ இவங்க கேஸ் கொடுத்துட்டுப் போன விஷயம், எங்க அம்மா உங்ககிட்ட உதவி கேட்ட விஷயம் எதுவுமே வீராவுக்குத் தெரிய வேண்டாம். அவன் ஏற்கனவே என்னைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து பெரிய உதவி செஞ்சிருக்கான். அவனுக்கு நான் தொந்தரவு கொடுக்க விரும்பல. இந்த விஷயத்தை நானே தனியாக ‘டீல்’ பண்ணிக்கிறேன். எனக்காக இந்த ஒரு உதவியை மட்டும் நீங்க செய்வீங்களா?” என்றாள்.
அதைக் கேட்ட செண்பகம், “ஏண்டி மாப்பிள்ளைக்குத் தெரிய வேண்டாம்னு சொல்ற? அவருக்குத் தெரிஞ்சா, அவரால நமக்கு ஏதாவது உதவி கிடைக்குமே. அதை ஏன் நீ வேண்டாம்னு தட்டிக்கழிக்கிற?” என்றார்.
“அம்மா, நீங்க பேசாமல் இருங்க. இப்படியே தொட்டதுக்கெல்லாம் வீராவைத் தொந்தரவு பண்றதுல எனக்கு விருப்பமில்லை. ஏற்கனவே அவன் என்னைக் கல்யாணம் செய்துட்டு வந்து, கூடவே உங்களையும் ரசிகாவையும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அழைச்சுட்டு வந்து, நம்ம வீட்டில் வெச்சு நம்ம மூணு பேருமே நல்லபடியாகப் பார்த்திருக்கான். அவன் மட்டும் இல்லை, இங்கே இருக்கிற எல்லாருமே நம்மளை அப்படித்தான் நடத்துறாங்க. அப்படி இருக்கிறப்போ, அவனுக்கு மேலும் மேலும் சிரமம் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. அதனால, இந்த விஷயத்தை நானே கவனிச்சுக்கிறேன்” என்றாள் பூவிழி.
“அண்ணி, எத்தனை நாளைக்கு அண்ணாகிட்ட இருந்து இந்த விஷயத்தை மறைக்கப் போறீங்க? எப்படியும் ஒரு நாள் அண்ணா காதில் விழத்தானே போகுது? அது இப்பவே சொல்றதில்ல என்ன தப்பு? எப்படியும் அண்ணா உங்களோட புருஷன்தான் தானே? அவர் உங்களுக்கு ஹெல்ப் பண்றதுல என்ன பிரச்சனை?” என்றான் அர்ஜுன்.
ரசிகாவும் அதே கேள்வியோடுதான் பூவிழியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
