Home Uncategorizedமோகம் முத்தாடுதே 19

மோகம் முத்தாடுதே 19

by Layas Tamil Novel
285 views

EPISODE 19

“அர்ஜுன், நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோ. தயவுசெய்து வீரா காதுக்கு இந்த விஷயம் போக வேண்டாம். என்னால இன்னும் அவன் சிரமப்படுவதை நான் விரும்பல” என்றாள்.

“ஏன் பூவிழி, நான் உனக்கு உதவி செய்றதுனால உன்னோட தன்மானம் இறங்கிடும்னு நினைக்கிறியா?” என்று ஒரு குரல் வாசலில் இருந்து வந்தது.

அந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்டு அனைவரும் திரும்பி வாசலைப் பார்க்க, அங்கே பூவிழியும் மற்றவர்களும் இவ்வளவு நேரம் பேசியது எல்லாம் கேட்டபடி, அவள் மீது கோபம் கொண்டவனாக வீட்டுக்குள் நுழைந்தான் வீரா.

அவனைப் பார்த்ததும் அனைவருக்குமே சற்று அதிர்ச்சிதான். எந்த விஷயம் எனக்குத் தெரியக்கூடாது என்று பூவிழி இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தாளோ, அந்த விஷயம் வீராவுக்குத் தெரிந்துவிட்டதே என்று அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க…

“என்ன பூவிழி, எதுவும் பேச மாட்டேங்குற? சொல்லு. என்கிட்ட உரிமையாக இது வேணும்னு கேட்க உனக்கு இன்னும் மனசு வரலையா?” என்றான் செண்பகத்தின் முன்பு பூவிழியிடம் தன் கோபத்தைக் காட்டிவிடக்கூடாது என்று.

“உன்கிட்ட உரிமையாக இது வேணும், அது வேணும்னு நான் கேட்டு வாங்குவது வேற அர்ஜுன். ஆனா எனக்கு வரவேண்டிய சொத்துக்களை எனக்கான உரிமையை நான் தானே போராடி வாங்கணும்? எல்லாமே நீ செய்வேன்னு உன்னை எதிர்பார்த்துட்டு நான் இருக்க முடியுமா?” என்றாள்.

அவன் ஏற்கனவே கோபத்தில் இருக்க, அவன் கோபத்தைத் தூண்டிவிடுவதுபோல பூவிழியும் பேச, அதைக் கவனித்த செண்பகம் பூவிழியின் கையைப் பிடித்தவர், அவளை அமைதியாக இருக்கச் சொல்லி, கையில் அழுத்தம் கூட்ட.

அவர் கையை உதறிவிட்ட செண்பகம், “அம்மா, நீங்க பேசாமல் இருங்க” என்றவள், வீராவைப் பார்த்து, “என்னோட வேலையை நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

அவள் அப்படிச் சொன்னதுமே, ‘என் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். உன்னுடைய வேலையை நீ பார்த்துக் கொள்’ என்று அவள் முகத்தில் அடித்தாற்போலப் பேசியது வீராவுக்குப் புரிந்துவிட…

அவன் பூவிழியை விடுத்து நேராக செண்பகத்திடம் வந்தான்.

செண்பகம் செய்வதறியாது வீராவை நிமிர்ந்து பார்த்தவர், “மாப்பிள்ளை, அவ புரியாத பொண்ணு. தனியாக ஒத்தையால அவ எங்கன்னு போய் அலைவா? போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கேஸ் போக வேண்டிய வயசா என் பொண்ணுக்கு?” என்று பூவிழியை நினைத்து வருத்தப்பட்டபடி வீராவிடம் சொன்னார்.

“அதுக்காகத்தானே அத்தை நானும் அவகிட்ட கேட்கிறேன்? ஆனால், அவ வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட ‘எனக்கு ஹெல்ப் பண்ணு’ என்று கூடக் கேட்க வேண்டாம். ஒரு கண் பார்வை கொடுத்தாலே போதும் அத்தை, அவளுக்காக மலையைக் கூட அவள் காலில் கொண்டு வந்து போட நான் ரெடியாகத்தான் இருக்கேன்” என்றான்.

பூவிழியைத் திரும்பி செண்பகத்தைப் பார்க்க… அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருக்க…

“அத்தை, நீங்க கவலைப்படாதீங்க. இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்” என்றவன், “எப்படியும் பூவிழிக்குச் சேர வேண்டிய சொத்துக்களில் எனக்கும் உரிமை இருக்குதானே? அப்போ அவளுடையது எல்லாமே எனக்குத்தானே?” என்று பூவிழியை கீழிருந்து மேலாகப் பார்த்தபடி வீரா பேச…

அவன் சொன்னதன் அர்த்தம் பூவிழிக்குப் புரிந்தது. ஆனால், செண்பகமும், “இதுல என்ன சந்தேகம் மாப்பிள்ளை? எனக்கு அப்புறம் எல்லாமே என் பொண்ணுக்குத்தான். என் பொண்ணுக்குச் சேர வேண்டியது எல்லாமே உங்களுக்கும் சொந்தம் தானே?” என்றார்.

“அம்மா, நான் தான் இந்த விஷயத்தைப் பார்த்துக்கிறேன்னு சொல்கிறேனே? நீங்க ஏன் மறுபடியும் வீராவைத் தொந்தரவு பண்றீங்க? அவனுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். அதுல நம்ம பிரச்சினையும் சேர்த்து இழுத்துவிடணுமா?” என்றாள் பூவிழி சற்று கடுமையாக.

“அத்தை, அவ அப்படித்தான் பேசுவா. அவளைச் சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க கவலைப்படாதீங்க” என்றவன், “நீ வா. உன்னிடம் நான் பேச வேண்டி இருக்கு” என்று பூவிழியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றான்.

அவன் அறைக்கு பூவிழியை அழைத்து வந்தவன், கதவைச் சாற்றிவிட்டுப் பூவிழியைப் பார்க்க…

“நான் தான் என்னோட விஷயத்தைப் பார்த்துக்கிறேன்னு சொல்றேனே? நீ எதுக்குத் தேவையில்லாமல் அதுல வந்து மூக்கை நுழைக்கிற?” என்றாள் கோபமாக.

“இங்க பாரு பூவிழி, இது நீ நினைச்சதும் முடியிற காரியம் கிடையாது. உன் அப்பா நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே இறந்துட்டாரு. உங்க அம்மாவுக்கு உதவியாக இருக்கேன்னு உன் வீட்டுக்கு வந்த உன்னோட அத்தையும், மாமாவும் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று நீ ஒருத்தியால் கண்டுபிடித்துவிட முடியும்னு நினைக்கிறியா?” என்றான்.

என்ன செய்வது என்று புரியாமல் வீராவைப் பார்க்க…

“இங்க பாரு, உன்னுடைய வீம்பு, ரோஷமெல்லாம் இதுல காட்ட வேண்டாம். உன் அம்மாவோட ஆசைப்படி அவங்களோட சொத்துக்கள் எல்லாமே கிடைக்க நான் வழி செய்கிறேன்” என்றான்.

“என் வீட்டு ஆளுங்களைப் பத்தி, எனக்குச் சேர வேண்டிய சொத்துக்களைப் பற்றி உனக்கு எதுவுமே தெரியாது. நீ என்ன செய்ய முடியும் வீரா?” என்றாள்.

“என்னால முடியாதது எதுவுமே கிடையாது பூவிழி. கண்டிப்பா உங்ககிட்ட இருந்து அவங்க பறிச்சுக்கிட்ட அனுபவிச்ச எல்லாத்தையும் திரும்ப என்னால உங்களுக்கு வாங்கி கொடுக்க முடியும்” என்றான் வீரா தீர்க்கமாக.

“யார்கிட்டயும் நானும் என் அம்மாவும் இதுவரைக்கும் எதையும் எதிர்பார்த்து இதுவரைக்கும் இருந்ததில்லை. முடிஞ்சவரை எங்ககிட்ட இருந்து கொடுத்துதான் பழக்கமே ஒழிய, யார்கிட்டயும் இருந்து வாங்கிப் பழக்கம் இல்லை” என்றாள்.

“அப்போ, என்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி மட்டும் என்கிட்ட கேட்டீயே, அது என்ன?” என்றான்.

தான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது வீராவிடம் உதவி கேட்டதை எந்த இடத்தில் சொல்லிக் காட்டுகிறான் பார் என்று அவனைப் பூவிழி முறைக்க…

“சொல்லு பூவிழி” என்றான்.

“அது, நானா உன்கிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கல. ரசிகா என்னோட மொபைலில் இருந்து உனக்கு மெசேஜ் அனுப்பினா. இதை நான் முதலிலேயே உன்கிட்ட சொல்லிட்டேனே” என்றாள்.

“இருந்தாலும், நான் உன் கழுத்துல தாலி கட்டும்போது அதைத் தடுக்காமல் நீ அமைதியாகத் தானே இருந்த? அப்போ, என்கிட்ட இருந்து உனக்கு அந்த நேரத்துல உதவி தேவைப்பட்டதுதானே? அப்படி இருக்கிறப்போ, இந்த உதவியை நான் செய்றேன்னு சொன்னா மட்டும் ஏன் வேண்டாம் என்று தடுக்கிற?” என்றான்.

“சரி. நான் யார்கிட்டயும் எந்த உதவியும் சும்மா கேட்கிறது இல்லை. அவங்களுக்கு அதுக்கு கைம்மாறாக ஏதாவது செய்வேன்” என்றவள், “நீ இவ்வளவு தூரம் கேட்டுக்கிட்டதுனால, நீ சொன்னதுக்கு நான் சம்மதிக்கிறேன். எனக்குச் சேர வேண்டிய என்னோட சொத்துக்களை எல்லாம் நீ வாங்கி கொடுத்துடு. அதுக்கு கைம்மாறாக நீ என்ன கேக்குறியோ அதை நான் செய்கிறேன். இல்லை, அந்த சொத்துக்கள் எல்லாம் உனக்கே வேணும்னாலும், அதை அப்படியே உனக்கு எழுதி வைக்கவும் நான் தயாராகத்தான் இருக்கேன்” என்றாள் பூவிழி.

“அந்த சொத்துக்கள் எல்லாம் எனக்கு வேண்டாம். ஆனால், நீ சொன்ன பதில் எனக்குப் பிடிச்சிருக்கு. நான் கேட்கிறதை நீ எனக்குக் கொடுக்கணும். சரியா?” என்றான்.

“நீ என்ன கேட்டாலும் நான் கொடுக்கத் தயாராத்தான் இருக்கேன். எனக்கு எதுவுமே சும்மா வேண்டியது இல்லை” என்றாள்.

“ஓகே… ரைட் டீல். நீ சொன்னது தான் எனக்கு. நீதான் வேணும். சொன்னதுபோல, உன்னோட சொத்துக்களை எல்லாம் அவங்க கிட்ட இருந்து மொத்தமாக வாங்கி, உனக்கும் உன் அம்மாவுக்கும் முழுசா இன்னைக்குக் கொடுக்கிறேன். அப்போ நீ எனக்கு முழுசா வேணும்” என்றான்.

அவன் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியான பூவிழி நிமிர்ந்து வீராவைப் பார்க்க…

“என்ன பூவிழி, பதில் சொல்லு. ஏன் அமைதியாக இருக்க?” என்றான்.

“என்ன வீரா, விளையாடுறியா? நான் உன்கிட்ட எவ்வளவு முறை சொல்றது? நீ என்னைக் காதலிக்கிற மாதிரி நான் உன்னைக் காதலிக்கல. எனக்கு உன்கிட்ட அந்த மாதிரியான நினைப்பு வரலைன்னு எத்தனை முறை சொல்றது? அப்படி இருக்கிறப்போ, என்னையே உனக்குச் சொந்தமாக்கிக்க சொல்லி நீ கேட்டா, நான் என்ன பதில் சொல்வேன்? என்னால இதுக்கு ஒத்துக்கொள்ளவே முடியாது” என்றாள்.

“நீ இந்த ‘டீலுக்கு’ ஒத்துக்கிட்டுதான் ஆகணும் பூவிழி. எப்படியும் நீயும் நானும் தான் கடைசிவரை கணவன் மனைவியாக வாழப் போறோம். அதற்காக இப்படி உன்னை பார்த்துக்கொண்டே என்னால காலம் பூரா இருக்க முடியாது. எனக்கு நீ வேணும், முழுசா வேணும். அதுக்கு இந்த வாய்ப்பை விட்டால் எனக்கு வேறு எதுவும் கிடைக்காது” என்றான்.

“ஒண்ணும் தேவையில்லை வீரா. என்னோட விஷயத்தை நானே பார்த்துக் கொள்கிறேன். இந்த மாதிரி எதுவும் நடக்கும் என்று தெரிஞ்சுதான் நான் யாரோட உதவியும் வேண்டாம் என்று என் அம்மா கிட்ட சொன்னேன். என் அம்மாவுக்குத்தான் எதுவுமே புரிய மாட்டேங்குது” என்றவள், “இங்க பாரு வீரா, எனக்கு வேண்டியதை என்னால கஷ்டப்பட்டுப் போராடி வாங்கிக்க முடியும். எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை” என்றாள்.

“சரி, இப்போ நான் சொல்றதைக் கவனமாக கேட்டுக்கோ. உனக்குச் சேர வேண்டிய சொத்துக்களை அடைய நீ என்ன முயற்சி எல்லாம் செய்யணுமோ அதை எல்லாமே செய்து பார். உன்னுடைய முயற்சிகள் எதுவுமே பலிக்கவில்லை என்றால், உனக்குச் சேர வேண்டிய சொத்துக்கள் எல்லாமே நான் அவங்ககிட்ட இருந்து எப்படிப் பெற்று தருகிறேனோ, நான் சொன்ன ‘டீலுக்கு’ நீ ஒத்துக்கிட்டுதான் ஆகணும்” என்றான்.

சிறிது நேரம் அவனையே விழி இமைக்காமல் பார்த்த பூவிழி… சிறிது நேரம் யோசித்தவள், தன் மனதில் எதையோ நினைத்து, தீர்க்கமாக அவனைப் பார்த்து, “ஓகே… டீல். ஆனா அதுல ஒரு சின்ன மாற்றம்” என்றாள்.

“என்ன?” என்றான்.

“எனக்குச் சேர வேண்டிய சொத்துக்களை எல்லாம் நானே என்னோட சொந்த முயற்சியால் எடுத்துக்கிட்டேன்னா, நீ எனக்கு ‘டைவர்ஸ்’ கொடுக்கணும்” என்றாள்.

“வாட்? ‘டைவர்ஸா?’ அது முடியவே முடியாதுன்னு நான் முதலிலேயே சொல்லிட்டேனே. மறுபடியும் நீ ஏன் அதையே கொண்டு வர?” என்றான்.

“உன்கிட்ட நான் தெளிவா சொல்லிட்டேன். எனக்கு உன்ன நண்பனாக மட்டும் தான் பார்க்கப் பிடிச்சிருக்கு. கணவனாகவும், காதலனாகவும் உன்னை என்னால ஏத்துக்கவே முடியல. எனக்கு இதை விட்டா வேற வாய்ப்பு இல்லை. இந்த ‘டீலுக்கு’ நீ ஓகேன்னா, உன்னோட ‘டீலுக்கும்’ நானும் இறங்கிவரத் தயாராக இருக்கிறேன்” என்றாள் பூவிழி.

அவளும் அவனுக்குச் சளைத்தவள் இல்லையே.

“சரி பூவிழி. உன்னோட ‘டீலுக்கு’ நான் சம்மதிக்கிறேன். போட்டியில் நீ ஜெயிச்சா, நீ கேட்ட மாதிரியே நான் உனக்கு ‘டைவர்ஸ்’ அப்பவே கொடுத்துடறேன். அதேபோல நான் ஜெயிச்சிட்டா, நான் கேட்டது எனக்கு உடனே கிடைச்சிடனும்” என்றான்.

மலையின் முன்பு மலர் மோதுவது என்பது முடியாத காரியமே.

கல்லூரியின் இறுதி ஆண்டில் அவனுடன் சண்டையிட்டுப் பிரிந்ததில், வீராவினுடைய வளர்ச்சியைப் பற்றிப் பூவிழி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.

கடைசியில் அவன் தான் ஜெயிக்கப் போகிறான் என்று அறிந்திருந்தால், அவள் இந்த ‘டீலை’ அவனிடம் பேசியிருக்கவே மாட்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured