EPISODE 23
ரசிகா, தன்னைப் சோபாவில் தள்ளித் தன் மேல் விழுந்த ‘டீனின்’ திவாகரின் சட்டையைப் பிடித்து உலுக்கியபடி அவனைத் தன் மீது இருந்து விளக்க முயற்சித்து போராடினாள்.
ஆனால், அவனோ ரசிகாவின் மீது மோகம் அதிகரித்திருக்க, அவளை இன்று எப்படியும் அடைந்து தீர வேண்டும் என்று ரசிகா எவ்வளவு கெஞ்சியும் அதை காதில் வாங்காமல் அவளை அடைய முயற்சித்துக் கொண்டு இருந்தான்.
அந்த நேரம் பார்த்து திவாகரின் மனைவி அவனுடைய அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவர், சோபாவில் ரசிகா படுத்திருக்க, திவாகர் அவள் மேல் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்றார்.
“என்னங்க! என்ன நடக்குது இங்க? ஹாஸ்பிடல் கூத்தடிக்கிற இடமா? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கோபமாகக் கேட்டுக்கொண்டே அவன் அருகில் நெருங்கி வந்தார் மனைவி.
திவாகர் தன் மனைவியை அங்கு சற்றும் எதிர்பார்த்திடாதவன், அவசரமாக அடுத்து என்ன செய்வது என்று தன் மூளையை முடுக்கிவிட்டு, சட்டென ரசிகாவின் கையைப் பிடித்துக்கொண்டு, தன் சட்டையில் இருந்து அவள் கையை விடுவிப்பதுபோலப் பாசாங்கு செய்தவன், “சொன்னா கேளுமா. எனக்கு இந்த மாதிரி விஷயத்தில் எல்லாம் கொஞ்சம் கூட இன்ட்ரெஸ்ட் இல்லை. இப்படி என்னைக் கட்டாயப்படுத்தி என்னைத் தப்பு பண்ண வைக்க நீ நினைக்கிறது சரியில்லை” என்று, தன்னை ரசிகா வலுக்கட்டாயமாக அழைப்பதே போல ஜோடித்து அவன் மனைவி முன்பு நாடகம் ஆடினான்.
இதை சற்றும் எதிர்பாராத ரசிகா, “சார், என்ன பேசுறீங்க?” என்று கோபமாக அவனைப் பார்க்க…
“என்னம்மா கோபப்பட்டு என்கிட்ட பேசினா, நீ பண்ணினதெல்லாம் தப்பு இல்லைன்னு ஆயிடுமா?” என்றவர் தன் மனைவியைப் பார்த்து, “அம்மு, நல்லவேளை நீ வந்த. நீ மட்டும் இந்த நேரம் வரலைன்னா, இவ என்னை என்ன செஞ்சிருப்பாலோ தெரியல. நினைக்கவே பயமா இருக்கு” என்று மிகவும் நல்லவன் போலத் தன் மனைவியிடம் நடித்தான்.
ரசிகாவிற்கு இங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஏற்கனவே திவாகர் அவளிடம் அத்துமீறியதே நினைத்து அதிர்ச்சியாக நின்று இருக்க, அதைவிடப் பேரதிர்ச்சியாக அவன் ரசிகாவைப் பற்றித் தவறாக அவன் மனைவியிடம் சித்தரித்துக் கூறிக் கொண்டிருந்தான்.
“மேடம், இவர் சொல்றதை நம்பாதீங்க. ஆக்சுவலா எனக்கு ‘நைட் டியூட்டி’ பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. இவர்தான் என்னை இன்னைக்கு ‘நைட் டியூட்டி’ பார்க்க சொல்லி ‘கம்பெல்’ பண்ணி இங்கே வரச் சொன்னாரு. அவரைப் பார்க்க நான் கேபினுக்கு வரப்போ, அவர்தான் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாரு. எனக்கு அவரிடம் தப்பா நடந்துக்கிற மாதிரி எந்த ஒரு நோக்கமும் கிடையாது. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க. அவர் சொல்றதை நம்பாதீங்க” என்று ரசிகா அந்தப் பெண்மணியிடம் கெஞ்சினாள்.
அந்தப் பெண்ணிற்கு திவாகரைப் பற்றி நன்றாகவே தெரியும். அவன் பல பெண்களிடம் தனக்குத் தெரியாமல் தொடர்பு இருப்பது அவருக்கு அரசல்புரசலாக செய்தி வந்து கொண்டேதான் இருந்தது. இன்றும் அதேபோல ஹாஸ்பிடலில் ஒரு பெண்ணுடன் அவன் அறையில் இருப்பதாக அந்தப் பெண்ணிற்கு செய்தி வர… அதைக் கேள்விப்பட்டதும், அதே ஹாஸ்பிடலில் வேறொரு பிளாக்கில் ‘டியூட்டி’ இருந்த திவாகரின் மனைவி, அவனை காண்பதற்காக வந்தவர், அவனை கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்.
திவாகரை முறைத்த அந்தப் பெண் ரசிகாமிடம் வந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டு, “என் புருஷன் உன்கிட்ட இப்படி நடந்துக்கிட்டதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். தயவுசெய்து வெளியே போய் அவரைப் பற்றி எதுவும் தப்பாகச் சொல்லிடாதே. இந்த ஹாஸ்பிடலுக்கு இன்னும் ஒரு நல்ல பெயர் இருக்கு. என் அப்பா எனக்காகக் கட்டிக்கொடுத்த ஹாஸ்பிடல் இது. இந்த ஒரு விஷயத்துனால என் ஹாஸ்பிடல் பேரு கெடணும்னு நான் விரும்பலமா. என் புருஷன் செஞ்ச காரியத்திற்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன். இந்த விஷயத்தை இங்கேயே முடிச்சிடுவோம். நீ வெளியே போய் யார்கிட்டயும் இதைப் பற்றிச் சொல்லிடாதே. நானும் நடந்த விஷயத்தை வெளியில் சொல்ல மாட்டேன். தயவுசெய்து என்னுடைய நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கோமா” என்று அந்தப் பெண் கெஞ்சி ரசிகாவிடம் கேட்க…
ரசிகாவோ என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்று இருந்தால். அவள் முகம் குழப்பத்தில் இருந்ததை கவனித்த அந்தப் பெண், திவாகரைப் பார்த்து கண் ஜாடை செய்ய… அவன் வேகமாக ஓடி வந்து ரசிகாவின் காலில் விழுந்தவன், “என்னை மன்னிச்சிடுமா. இனிமேல் நான் இந்த மாதிரித் தப்பான காரியத்தைச் செய்யவே மாட்டேன். தயவுசெய்து இந்த விஷயத்தை வெளியில் சொல்லிடாதம்மா. என்னோட மட்டும் இந்த விஷயம் போனா பரவாயில்லை. இதனால என் மனைவியோட ஹாஸ்பிடல், என் மனைவி, என் குழந்தை எல்லோருமே பாதிக்கப்படுவாங்க. என்னோட மானம் உன் கையில்தான் இருக்கு” என்று அவள் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்ச…
அவர்கள் இருவரையும் பார்த்தவள், “சார், முதல்ல என் காலை விடுங்க” என்று அவனிடம் சொன்ன ரசிகா, அவன் மனைவியிடம் திரும்பி, “மேடம், நீங்க என்ன சொல்லிச் சமாதானம் செய்தாலும், இந்த விஷயத்தை நான் இப்படியே விட்டுட்டுப் போறது கிடையாது. இன்னைக்கு எனக்கு நடந்ததுபோல நாளைக்கு வேறொரு பொண்ணு கிட்ட இவர் தப்பா நடந்துக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? அதனால நான் கண்டிப்பா இந்த விஷயத்தைப் பற்றி போலீஸ்ல ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுத்துதான் போறேன். நீங்களும் உங்க கணவரும் அதுக்குத் தயாரா இருங்க” என்றவள், அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் அந்த அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றாள்.
பூவிழி சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுனுக்கு இரத்தம் கொதித்தது. ரசிகா தான் அவள் அருகில் நெருங்கிச் செல்லும் போதெல்லாம் உடல் நடுங்கிப் பதறி அவனை விட்டு விலக முயற்சிக்க, இதுவும் ஒரு காரணம் என்று தெரிந்துகொண்டவன், அவளை மனதளவில் இந்த அளவிற்கு ஆளாக்கிய அந்தத் திவாகரை இப்போதே கொன்றுவிட வேண்டும் என்று தோன்றியது. தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பூவிழியைப் பார்த்தவன்…
“சொன்னதுபோல உங்க ஃப்ரெண்டு ஸ்டேஷன்ல ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுத்தாங்களா?” எனக் கேட்டான்.
“இல்லை” என்று பூவிழி தலையாட்டினாள்.
“என்ன நீ சொல்ற? போலீஸ்ல ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கிறதுதானே அவங்க கிளம்பிப் போனதாகச் சொன்னீங்க? அப்புறம் ஏன் அந்தப் பொறுக்கி மேல ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கல?” என்றான்.
“அர்ஜுன், ஹாஸ்பிடலில் இருந்து ரசிகா அந்த ‘நைட் டைம்’ல ஸ்டேஷனுக்கு போக வேண்டாம்னு அடுத்த நாள் காலையில போய்க் ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கலாம்னு வீட்டுக்குப் போயிட்டா… அவ வீட்டில் இருக்கிறவங்க யார்கிட்டயும் விஷயத்தைப் பற்றி ரசிகா சொல்லவே இல்லை. ஒருவேளை சொல்லியிருந்தா அவளோட அம்மாவும், அப்பாவும் இந்த நேரம் அவளை விட்டுப் பிரிந்து தனியா இருக்க மாட்டாங்க” என்று ரசிகாவைப் பார்த்தவள் அர்ஜுனிடம் திரும்பி…
“மறுநாள் காலையில நேரமே எழுந்து ஸ்டேஷனுக்கு ரசிகா புறப்பட்டு இருந்தா. அப்போ…” என்று அன்று நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள் பூவிழி.
வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார் ரசிகாவின் அப்பா துரை. அப்போது வாசலில் இரு பெண் கான்ஸ்டபிள் வந்து, “இது ரசிகாவோட வீடா?” எனக் கேட்டார்.
பேப்பரை மடித்துக்கொண்டிருந்தவர், தன் வீட்டிற்கு எதற்காக கான்ஸ்டபிள் வந்திருக்கிறார் என யோசித்தபடி, பேப்பரை மடித்து அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு எழுந்து வந்தவர், “என் பொண்ணுதான் ரசிகா. சொல்லுங்க என்ன விஷயம்?” என்றார்.
“உங்க பொண்ணு மேல அவங்க வேலை பார்க்கிற ஹாஸ்பிடல்ல இவங்க மேல ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுத்திருக்காங்க. அவங்களை விசாரிக்க ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போக வந்திருக்கோம்” என்றார்.
அதைக் கேட்டதும் அதிர்ச்சியான ரசிகாவின் அப்பா, “என்ன சொல்றிங்க? என் பொண்ணு மேல யாரு? எதுக்காக ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுத்திருக்காங்க?” என்றார் பதட்டமாக.
அவர்கள் பேசியதை கேட்டுவிட்டு வாசலுக்கு வந்தனர் ரசிகாவும், அவள் அம்மா செல்வியும். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ரசிகாவின் வீட்டின் முன்பு போலீஸ் இருப்பதைப் பார்த்துவிட்டு அங்கு கூடிவிட்டனர்.
ரசிகா அந்தக் கான்ஸ்டபில் இடம் வந்தவள், “மேடம், நான் தான் ரசிகா. என் மேல யாரு? எதுக்காக ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுத்திருக்காங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றாள்.
“ஓ… நீதானா? எதுக்குப் பார்க்க நல்ல பொண்ணு மாதிரி இருந்துட்டு உனக்கு ஏன் இப்படிப் புத்தி போகுது? உன் வயசுக்கு நீ லேசாகக் கண்ணசைச்சாலே உன் பின்னாடி ‘நான்’, ‘நீ’னு போட்டி போட்டுட்டு வயசுப் பசங்க பின்னால வருவாங்க. அப்படி ஒரு ஆளைப் பிடிக்கிறதை விட்டுட்டு, அந்த ஹாஸ்பிடல் ‘டீன்’, அதுவும் 50 வயசு ஆளைப் போய் ரூம் போடச் சொல்லி கூப்பிட்டிருக்க… உனக்கு வெட்கமா இல்லை?” என்றார் அந்தப் பெண்.
அவர் பேசியதைக் கேட்டுப் புரியாமல் அந்தக் கான்ஸ்டபிலைப் பார்த்த ரசிகா, “மேடம், என்ன சொல்றீங்க?” என்றாள் அதிர்ச்சியாக.
“என்னம்மா எதுவும் தெரியாத மாதிரி கேக்குற? நீ முதல்ல ஸ்டேஷனுக்கு கிளம்பி வா. அங்க வந்து எல்லாம் பேசிக்கலாம். இங்க நின்னு எங்க நேரத்தை ‘வேஸ்ட்’ பண்ணாதே. உனக்காக யாரும் காத்திருக்க முடியாது” என்று அவளை அதட்டினார் அந்தப் பெண் கான்ஸ்டபிள்.
“நான் செய்யாத தப்பா என் மேல சுமத்திட்டு, ஸ்டேஷனுக்கு வா என்று கூப்பிட்ட உடனே நான் வந்துடுவேன்னு நினைக்கிறீங்களா? முடியாது. நான் ‘லீகலா’ இந்த விஷயத்தை ‘டீல்’ பண்ணிக்கிறேன். என்னோட வக்கீல் வந்து உங்களைப் பார்ப்பாரு” என்றாள் ரசிகா.
“நீ ‘லீகலா’ என்ன வேணா பண்ணிக்கோ… எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்போ முதல்ல நீ ஸ்டேஷனுக்கு வந்தது ஆகணும். உன்னோட வக்கீலை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லு. முதல்ல கிளம்புமா” என்று அவள் கையைப் பிடித்து ‘வெடுக்’கென எடுத்தார் ஒரு பெண் கான்ஸ்டபிள்.
இதை சற்றும் எதிர்பாராத ரசிகா நிலைகுலைந்து போனாள். தன் பெற்றோரின் முன்னிலையிலும், இத்தனை பேர் முன்னிலையிலும் தன் மீது அவதூறு சுமத்தி ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்ல கான்ஸ்டபில் முயல…
இப்போது ‘இப்போது ஸ்டேஷனுக்கு வர மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படிச் செய்தால் தனக்குத்தான் பிரச்சினை அதிகமாகும் என்று முடிவு செய்தவள், அவள் அப்பாவையும், அம்மாவையும் பார்த்து, “நான் ஸ்டேஷன் வரை போயிட்டு வந்துடறேன்” என்றாள்.
“இருமா. நீ மட்டும் தனியா ஸ்டேஷனுக்குப் போக வேண்டாம். நாங்களும் உன் கூட இப்பவே கிளம்பி வரும்” என்றவர் தன் மனைவியைப் பார்க்க… அவர் அவசரமாக உள்ளே சென்று துரையின் ‘பர்சை’ எடுத்துக்கொண்டு வந்து அவர் கையில் கொடுத்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, ரசிகாவை அழைத்துக்கொண்டு ஸ்டேஷனுக்குக் கிளம்பினர்.
