EPISODE 25
பூவிழி சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு அமர்ந்து இருந்த அர்ஜுன், ரசிகாவைப் வலி நிறைந்த ஒரு பார்வை பார்த்தான்.
‘இந்தக் காரணத்துக்காகத்தான் நான் அவள் அருகில் நெருங்கிச் சென்றால் பயந்து என்னைவிட்டு விலகிப் போகிறாளோ?’ என்று அவனுக்குத் தோன்றியது.
ரசிகாவின் மீது அவன் பார்வை இருந்தாலும், பூவிழியிடம், “அண்ணி, அப்போ இவங்க பார்த்துட்டு இருந்த வேலை என்ன ஆச்சு? அந்தத் திவாகர் சொன்னதுபோல இவங்களை வேலை செய்யவிடாமல் தடுத்துட்டானா?” என்றான்.
“ஆமாம் அர்ஜுன், அவளுக்காகக் கூட நின்னு போராட யாரும் இல்லை. அதேபோல ரசிகா என்னிடம் வந்து இந்த விஷயத்தைச் சொல்லி அழுதபோது, என்னால் அவளுக்கு உதவவும் முடியவில்லை. நான் என் மாமா வீட்டில் இருந்ததால், ரசிகாவிற்கு என்னால் உதவ முடியாமல் போய்விட்டது. என்னால் முடிந்தது எல்லாம் அவளை அந்தக் கசப்பான நினைவுகளில் இருந்து மீட்டுக்கொண்டு வந்தது மட்டுமே” என்றாள் பூவிழி.
அர்ஜுன் அதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், ரசிகாவைப் பார்த்து, “கவலைப்படாதீங்க… கூடிய சீக்கிரமே நான் உங்க மேல உள்ள பழியை எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்துடறேன். இதற்கு காரணமாக இருந்தவங்களுக்கும் சரியான பாடம் கத்துக் கொடுக்கப் போறேன்” என்றான்.
“எனக்கு அதெல்லாம் எதுவும் தேவை இல்லை. அவங்க செய்த பாவத்துக்கு அந்தக் கடவுள் கண்டிப்பா அவங்களுக்குத் தண்டனை கொடுப்பார். அந்தக் நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றாள்.
அதைக் கேட்டு கோபமடைந்தவன், “அப்போ கடவுள் கிட்டயே போயிருக்க வேண்டியதுதானே? ஏன் என்கிட்டே வந்தீங்க?” என்றான்.
ரசிகா வலி நிறைந்த பார்வையோடு கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள அவனைப் பார்த்தாள்.
“அர்ஜுன், இவ இப்படியேதான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருக்கா. நீ அவ பேச்சைச் சட்டை செய்யாதே. நான் தான் அவளை இங்கே வலுக்கட்டாயமாக கூட்டிட்டு வந்தேன். அவள் மேல இருக்கிற பழியைத் துடைத்தெறியணும் அர்ஜுன். அவளுக்குப் பாதுகாப்பாகப் பக்க பலமாக இருக்க வேண்டிய அவ அப்பா, அம்மாவே மத்தவங்க சொன்னதைக் கேட்டு ரசிகாவை நம்பாமல் போயிட்டாங்க. அவங்களை போலவே இந்த விஷயம் தெரிஞ்சவங்க எல்லார் முன்னாடியும் என் ரசிகா எந்தத் தப்பும் செய்யல, அவள் மேல சுமத்தியது அபாண்டமான பொய்ன்னு எல்லாருக்கும் நிரூபிக்கணும். அதுக்கு நீதான் ‘ஹெல்ப்’ பண்ணணும் அர்ஜுன்” என்றாள் பூவிழி.
“அண்ணி, என்ன நீங்க ‘ஹெல்ப்’ அது இதுனு பெரிய வார்த்தையாக எல்லாம் பேசிட்டு இருக்கீங்க… இது என்னோட கடமை. எனக்கு வேண்டியவங்க இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக்கிட்டு இருக்கிறதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க முடியாது” என்று அவளை ஆழமாகத் தன் பார்வையால் ஊடுருவினான்.
அவன் பார்வையில் இருந்த அர்த்தம் ரசிகாவுக்கு புரிந்ததோ என்னவோ… அவனைப் பார்க்காமல் தவிர்த்துவிட்டுத் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.
பூவிழி தன் பூர்வீகச் சொத்துக்களைப் பெறுவதற்குத் தன் தாய் மாமன், அவரது மனைவி இருவரின் மீதும் புகார் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
அவர்கள் சென்ற பிறகு, அர்ஜுன் கான்ஸ்டபிள் அய்யாக்கண்ணுவை அழைத்தான்.
“சொல்லுங்க தம்பி” என்று அவர் வந்து நிற்கவும், “அண்ணா, எனக்குச் சிலரைப் பற்றி விவரங்கள் தெரியணும். முடிஞ்சா அவங்க ஜாதகத்தையே கொண்டு வந்தாலும் சந்தோஷம்” என்றவன், திவாகர், அவன் மனைவி, அவர்களுடைய ஹாஸ்பிடல் என ஒன்றுவிடாமல் தகவல் சேகரித்துத் தனக்குத் தர வேண்டும் என்று கூறி அவரை அனுப்பி வைத்தான்.
இங்கே ஆபீஸ் முடித்து வீட்டிற்கு வந்த வீரா தன்னுடைய ஸ்டடி ரூமில் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.
வீரா உள்ளே வந்ததும், அவன் கட்டிலில் அமர்ந்து ஏதோ முக்கியமாக எழுதிக்கொண்டிருந்த பூவிழியைக்கூடக் கவனிக்காமல் ஸ்டடி ரூமிற்குள் செல்வதைக் கவனித்த பூவிழி…
‘என்ன இவன்? எப்போதும் வந்ததும் என்னைக் வம்பிழுக்க வந்திருவான். அப்படி என்ன அவசரமாக உள்ளே போறான்?’ என்று யோசித்தவள், கையில் இருந்த நோட்டை அருகில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டு வந்தவள், ஸ்டடி ரூமின் வெளியே நின்று வெறும் தலையை மட்டும் நீட்டி உள்ளே வீரா என்ன செய்கிறான் என்று எட்டிப் பார்த்தாள்.
அவன் ஒவ்வொரு டிராயரையும் திறந்து எதையோ தேடுவதும், பின் தன் டேபிள் மீது இருந்த பென் ஸ்டாண்ட், மற்ற இடங்கள் என எதையோ தேடுவதையும் பார்த்தவள், வெளியே இருந்தவாறே, “என்ன மச்சி, எதையோ தீவிரமா தேடிட்டு இருக்கிற மாதிரி தெரியுது. அப்படி என்ன தேடுறேனு சொன்னால் கூட சேர்ந்து நானும் தேடுவேன் இல்ல?” என்றாள்.
“என்னோட ஒரு ‘காஸ்ட்லி’ பென்னைக் காணோம் பூவிழி. அதைத்தான் தேடிட்டு இருக்கேன்” என்றான்.
“பென் எதுக்கு?” என்றாள்.
குனிந்து தேடிக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தவன், “எதுக்கு கேட்பீங்க? எழுதத்தான்” என்றான்.
“அப்போ ‘காஸ்ட்லி’ பென்னில்தான் எழுதணுமா என்ன?” என்றவள், “இந்தா, இந்த பேனாவை வைத்து எழுது” என்றவள்… தன் சேலையை லேசாகக் கீழே இழுத்து அவள் ஜாக்கெட்டின் மையத்தில் இருந்து பேனாவை எடுத்து அவன் முன்பு நீட்டினாள்.
அந்தப் பேனாவைப் பார்த்து அதிர்ந்து நிமிர்ந்தவன்… தான் தேடிக்கொண்டிருந்த பேனாவைப் பூவிழி தன் ஜாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டுகிறாள்.
“ஏய், அந்தப் பேனாவை நீயா வெச்சிருக்க? இதை எதுக்கு எடுத்தே?” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தான் வீரா.
அவன் கேட்ட கேள்வியில் இருந்து வீரா தேடிக்கொண்டிருந்த பேனா இதுதான் என்று உணர்ந்தவள், “இது என்னவோ சொன்ன மாதிரி தெரியலையே” என்று தன் கையில் இருந்து பேனாவை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள்.
வீரா அவள் கையில் இருந்த பேனாவை வாங்க, அது சூடாக இருந்தது. அந்தப் பேனாவில் இருந்த சூடையும், அது இதற்கு முன்பாக இருந்த இடத்தையும் நினைவுபடுத்திப் பார்த்த வீரா, பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு, “கொடுத்து வெச்ச பேனா” என்றபடி அங்கிருந்து சென்றான்.
வீரா இரட்டை அர்த்தத்தில் பேசியது பூவிழிக்கு விளங்கவில்லை. ‘இந்த பேனாவுக்கு இவ்வளவு நேரம் இந்த ரூமையே புரட்டி போட்டுட்டு இருந்தான்’ என நினைத்தவள், அவனிடம் பேனாவைக் கொடுத்துவிட்டு வெளியே சென்றாள்.
பூவிழி கிளம்பியதை உறுதி செய்து கொண்ட வீரா, ‘நல்லவேளை இவளுக்கு இந்த பேனாவைப் பற்றி எதுவும் சரியாகத் தெரியல’ என்று யோசித்தபடியே பேனாவின் மூடியைக் கழட்ட, அந்தப் பேனாவிற்குள் ‘பென் டிரைவ்’ ஒன்று பொருத்தப்பட்டு இருந்தது. அதைக் கொண்டு வந்து தன் பர்சனல் கம்ப்யூட்டரில் பொருத்தியவன், அந்த ‘பென் டிரைவில்’ இருக்கும் வீடியோக்களை ஓட விட்டான்.
அவன் கம்ப்யூட்டரில் பொருத்தி இருந்த ‘கேமரா பென்’, வீராவின் ஆபீஸில் அவனுடைய கேபினில் இருந்தது. அந்தப் பேனாவைத் தனக்குத் தெரியாமல் யாரோ தன் அறையில் கொண்டு வந்து வைத்ததை தாமதமாகத்தான் உணர்ந்து இருந்தான் வீரா.
ஆபீஸில் தன்னுடைய முக்கியமான ப்ராஜெக்ட், சில ‘கான்ட்ராக்ட் டீல்’ குறித்த ரகசியமாக வைத்திருந்த விஷயங்கள் அனைத்தும் எப்படி தன் எதிரியான அருணுக்குத் தெரியவந்தது என்று இந்தப் பேனாவை வைத்துத்தான் கண்டுபிடித்தான். இந்தப் பேனாவை யார் கொண்டு வைத்து இருப்பார்கள் என அவனுக்கு இன்னமும் தெரியவில்லை. ஒருவேளை இந்தப் பேனாவில் இருக்கும் வீடியோவை ஓடவிட்டால் யார் இதைச் செய்திருப்பார்கள் என்று வீராவுக்குப் புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
அந்தக் ‘கேமரா பெனில்’ இருந்த சேகரிக்கப்பட்ட வீடியோக்களை ஒவ்வொன்றாக எடுத்து ‘ஓபன்’ செய்து ஓடவிட்டான். வீராவுக்கு அவனுடைய ‘பி.ஏ’ ரீனா மீதுதான் சந்தேகம். அவள்தான் தன் அறையில் தான் இல்லாத போது கூட வந்து செல்லும் உரிமை பெற்று இருக்கிறாள். ஒருவேளை அவள்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என நினைத்தவாறு அந்த வீடியோக்களை ஓடவிட்டு இருக்க, அவன் நினைத்தது போலவே இந்தப் பெண்ணை எடுத்து வந்து டேபிளில் இருந்த ‘பென் ஸ்டாண்டில்’ வைக்க அது சரியாக இருக்கிறதா என்று அவள் குனிந்து பார்க்க அவள் முகம் அதில் ‘ரெக்கார்டு’ ஆகி இருந்தது.
அதைப் பார்த்ததுமே அவனுக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. அவளை அவ்வளவு தூரம் நம்பியிருந்தான் வீரா. அந்த அளவுக்கு அவளுக்குச் சலுகையும் கொடுத்திருந்தான். ஆனால் அவள் இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்வாள் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அப்படியே யோசனையோடு ஒவ்வொரு வீடியோவாக ஓடவிட்டுக்கொண்டு இருக்க, அப்போது திடீரென ஒரு வீடியோ மட்டும் வித்தியாசமாக அவன் கண்களுக்குப் பதிந்தது.
அது வழக்கமாகத் தன்னுடைய அலுவலக அறை இல்லை என்பதைப் புரிந்து கொண்டவன், அந்த வீடியோவைச் சற்று ஓடவிட்டுப் பார்க்க… அது இப்போதைய வீரா அமர்ந்திருக்கும் அவருடைய ஸ்டடி ரூமின் வீடியோ. வீரா இந்தப் பேனாவைச் சந்தேகப்பட்டு ஆபீஸில் இருந்து எடுத்து வந்தவன், தன்னுடைய ஸ்டடி ரூமில்தான் அந்தப் பேனாவை வைத்திருந்தான்.
அந்த வீடியோவைச் சற்று அதிகமாக ஓடவிட்டுப் பார்க்க… அவன் ஸ்டடி ரூமை யாரோ திறக்கும் சத்தம் அதில் கேட்டது. பொறுமையாக யார் அங்கே வந்திருப்பார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்க, பூவிழி தான் அவன் அறைக்குள் நுழைந்து இருந்தாள்.
சாதாரணமாகப் பூவிழி வீராவின் ஸ்டடி ரூமிற்குள் வருவதில்லை. அதுவும் அவன் இல்லாதபோது வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் இன்று எதற்கு இங்கே வருகிறாள் என யோசித்தபடி அந்த வீடியோவைப் புருவம் சுருங்க உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான்.
உள்ளே வரும்பொழுது ஏதோ ஒரு உடையைக் கையில் வாரிச் சுருட்டியபடி வந்தவள், ‘இவனுக்கு இதே வேலையாகப் போச்சு. எங்கே போனாலும் என் பின்னாடி வந்து என் உயிரை வாங்குகிறான்’ என்று புலம்பியவள், ‘டிரெஸ்ஸிங் ரூமுக்குள் போய்த் ‘டிரஸ்’ ‘சேஞ்ச்’ பண்ணலாம்னு பார்த்தா அங்கேயும் வந்து இம்சை பண்ணுவான். இப்போதைக்கு அவன் ஸ்டடி ரூம் பக்கம் தான் வரமாட்டான். யார் கூடயோ ‘வீடியோ கால்’ பண்ணி பேசிக்கிட்டு இருக்கான். அவன் வரதுக்குள்ள ‘டிரஸ்’ ‘சேஞ்ச்’ பண்ணிடனும்’ என்றவள், அவள் இருந்த ஸ்டடி ரூம் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருக்கிறதா என்று பூவிழி உறுதி செய்து கொண்டவள்…
அவசர அவசரமாகத் தன் கையில் இருந்த உடையை ஸ்டடி ரூமில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு, தான் கட்டியிருந்த சேலையைக் கழற்றியவள், அவள் ‘பிளவுஸ்’ கொக்கியில் கையை வைத்து வேகமாகக் கழட்ட ஆரம்பித்தாள்.
இதை சற்றும் எதிர்பாராத வீராவின் கண்கள் அகல விரிந்தது.
