Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா..காதல்.. 19

அஸ்க்..லஸ்கா..காதல்.. 19

by Layas Tamil Novel
345 views

EPISODE-19

என் தன் குடும்பத்தையும் யார் இவ்வளவு ஆண்டுகளாகத் தன் கைக்குள் வைத்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தன் தம்பி ராமலிங்கம் சொன்னதைக் கேட்ட இலக்கியாவின் அம்மா கோமதி அதிர்ச்சியானார்.

“என்னடா சொல்ற ராமலிங்கம்! நீ சொல்றது உண்மைதானா? எங்களை இத்தனை வருஷமா கஷ்டப்படுத்தச் சொன்னது எல்லாம் உண்மையா?” என்று கேட்டார் நம்ப முடியாமல்.

ராமலிங்கம், கோமதியைப் பார்த்து சிரித்தபடி, “நான் சொன்னது நம்ப முடியல தானே உன்னால?” என்றான்.

கோமதி “ஆமாம்” என்று தலையாட்ட…

“இதைத்தான் அவங்களும் என்கிட்ட சொன்னாங்க. ‘நான் தான் கோமதியையும் அவ குடும்பத்தையும் இவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தச் சொன்னேன்னு அவளுக்குத் தெரிஞ்சா சத்தியமா கோமதி நம்ப மாட்டா’ அப்படின்னு என்கிட்ட நிறைய முறை சொல்லியிருக்காங்க” என்றான் ராமலிங்கம்.

ராமலிங்கம் சொன்ன விஷயத்தை நம்ப முடியாமல் பார்த்த கோமதி கண்களில் கண்ணீரோடு “அவங்களை அப்படி என்ன கொடுமைப்படுத்தச் சொல்லி உன்கிட்ட காசு கொடுத்தா? அவங்க பேச்சைக் கேட்டுட்டு என்னையும் என் புருஷனையும் நான் பெத்த ரெண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமில்லாமல் இத்தனை வருஷமா கூடப் பிறந்தவன்னு பாசம் கூட இல்லாம எங்களை இப்படி கொடுமைப்படுத்தியிருக்கியே, நீ எல்லாம் நல்லா இருப்பியா?” என்று ராமலிங்கத்தை திட்டினார் கோமதி.

“நான் என் அக்கான்னு, அக்கா குடும்பம்னு உங்க மேல இரக்கப்பட்டு இருந்தா இத்தனை வருஷமா நான் உங்க கூட சேர்ந்து கஷ்டப்பட்டு தான் இருந்திருக்கணும். உன்னால தான் நான் இத்தனை வருஷமா சொகுசா இருந்தது. இப்போ உன்னோட பொண்ணால நான் செட்டில் ஆகிட்டேன்” என்றான்.

“ச்சீ… நீ எல்லாம் ஒரு மனிதனா?” என்று கோமதி, ராமலிங்கத்தை ஒரு அற்பப் புழுவைப் போலப் பார்க்க..

“நீ உன் மனசுல என்ன வேணா திட்டிக்க, என்ன வேணா சாபம் விட்டுக்க. அதைப்பத்தி நான் கவலையே படப்போவதில்லை. இப்போ நான் நெனச்சதை விட பல மடங்கு பணம் என் கையில இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் உன்னைய வச்சு பணம் பாத்துட்டா போதும், நான் சாகுற வரைக்கும் தேவையான பணம் என் அக்கவுண்டுக்கு வந்துடும்” என்றவன்.

“சரி எனக்கு நிறைய வேலை இருக்கு நான் கிளம்புறேன். ஒழுங்கா வர வரைக்கும் எந்தப் பிரச்சனையும் பண்ணாம வளர்க்கும் போல அமைதியா வீட்டுக்குள்ளேயே இருந்துக்கோ. அப்படி எதுவும் பிரச்சனை பண்ணினேன்னு எனக்குத் தெரிஞ்சுச்சு… ஏற்கனவே கொஞ்சமா நடக்க முடியல உன் கால ரெண்டையும் மொத்தமா வெட்டிப் போட்டு விடுவேன்” என்ற ராமலிங்கம் வெளியே சென்று விட…

ராமலிங்கம் சொல்லுகின்ற விஷயங்கள் எல்லாம் கோமதியின் மனதை போட்டு மிகவும் அழுத்தியது. தன்னால் தான் தன் குடும்பம் மொத்தமும் எத்தனை வருடமாக கஷ்டப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தவுடன் கோமதி மிகவும் நொந்து போனார்.

காணாமல் போன தன் மகனைப் பற்றியும், இப்போது வேறு ஒருவனுக்கு விலை போய் இருக்கும் தன் மகளைப் பற்றியும் நினைத்து மிகவும் கவலைப்பட்டார்.

இத்தனை நாள் தான் முட்டாளாக… அடிமையாக… இருந்தது போதும், இனியும் இப்படி இருக்கக் கூடாது.

எப்படியாவது தன் மகனையும் மகளையும் கண்டுபிடித்து அவர்கள் இத்தனை வருடங்களாக இழந்த வாழ்க்கையையும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் திரும்பவும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த கோமதி.

தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவர். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்.

முதலில் தன் மகளைத் தேடிப்பிடித்து அவளை விலைக்கு வாங்கியவனிடம் இருந்து தன் மகளை தன்னுடன் மீட்டுக்கொண்டு வர வேண்டும்.

இதன் பிறகு தன் மகனைப் பற்றிய விபரங்களைத் தன் மகளோடு சேர்ந்து கண்டுபிடித்து அவனையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள் இருவரையும் கண்டுபிடித்த பிறகு இத்தனை ஆண்டுகளாகத் தன் வாழ்க்கையை நரகமாக ஆக்கி இருந்தவருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவர்.

ராமலிங்கத்திற்குத் தெரியாமல் இலக்கியாவும் கோமதியும் இத்தனை ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டவர்.

தன்னையும் தன் குடும்பத்தையும் இத்தனை வருடமாகக் கஷ்டப்படுத்திய ராமலிங்கத்தைக் கொஞ்சமாவது கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்.

தன் வீல் சேரிலிருந்து எழுந்த கோமதி கைத்தடியின் உதவியோடு ராமலிங்கத்தின் அறைக்கு வந்த கோமதி முதலில் ராமலிங்கத்தின் பீரோவில் தேடி தன் பாஸ்போர்ட்டை முதலில் எடுத்துக் கொண்டார்.

ராமலிங்கத்தின் பீரோவில் ஒரு சிறிய பெட்டி ஒன்று இருந்தது. அதை எடுத்து திறந்து பார்த்த கோமதி அதில் பணத்தைக் கத்தையாகச் சுருட்டி வைத்திருக்க…

அதை பார்த்தவர் முதலில் அந்தப் பணம் தனக்கு எதுக்கு என்று நினைத்தவர். பின் இந்தப் பணத்திற்காக தானே தன்னை தன் குடும்பத்தையும் இவ்வளவு நாள் கஷ்டப்படுத்தினான் என்று யோசித்தவர் தன் கைப்பைக்குள் அந்தப் பணம் மொத்தத்தையும் கொட்டிக் கொண்டு வெளியே செல்லப் போனவரின் கண்ணில் ராமலிங்கத்தின் பாஸ்போர்ட் பட்டது.

அதைப் பார்த்தவுடன் என்ன நினைத்தாரோ எடுத்து அதையும் தன் பைக்குள் வைத்துக் கொண்டு ராமலிங்கத்தின் வீட்டை விட்டு முதல் முறையாக இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தார் கோமதி.

வெளியே வந்தவருக்கு எங்கே செல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பிரம்மை பிடித்தவர் போல நின்று இருக்க…

முதலில் தன் மகளை யார் ஏலத்தில் வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அங்கே சென்று அவளைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தவர்.

ராமலிங்கம் சொன்ன ஏலம் நடக்கும் இடத்திற்குச் சென்று என்னைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்குமா என்று தெரிந்து கொள்ள அங்கே கிளம்பினார்.

எத்தனை நேரம் இந்தக் கட்டையின் உதவியோடு நடந்து ராமலிங்கம் சொன்ன இடத்திற்குச் செல்ல முடியும்? என்ன செய்வது என்று யோசித்தவர்.

நூலகத்தில் என்ன எல்லாம் புதிதாக மாற்றம் வந்திருக்கிறது, எப்படி எல்லாம் வெளியில் வசதிகள் வந்திருக்கிறது என்று தன் பெண் தினமும் தனக்குச் சொல்லும் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்த கோமதிக்கு இப்போது அது உபயோகமானது.

நின்று இருந்த இடத்திலேயே திரும்பிப் பார்க்க….அப்போது ஒரு டாக்ஸி அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அதை கை காட்டி கோமதி நிறுத்த… வேகமாக வந்து அவர் அருகில் நின்றது.

டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து தான் எங்கே செல்ல வேண்டும் என்று இடத்தின் பெயரைச் சொல்ல…

ஒரு மார்க்கமாகப் பார்த்த அந்த டிரைவர் பின்னிருக்கை கதவைத் திறந்து விட்டு அதில் அமரச் சொன்னான்.

கோமதி காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்ததும் அவர் சொன்ன இடத்திற்குக் கொண்டு வந்து சிறிது நேரத்தில் அவரை டிராப் செய்துவிட்டு அந்த டிரைவர் செல்லப் போக…

அந்த டிரைவரிடம் தன் மகளை அவளுக்கு விருப்பம் இல்லாமல் இங்கே அழைத்து வந்து வேறொருவனுக்கு அவளை எப்படியாவது நான் அந்த நபரிடமிருந்து மீட்க வேண்டும்.

என் மகளை மீட்பதற்காக எனக்குக் கொஞ்சம் உதவி செய்ய முடியுமா? என்று அந்த டிரைவரிடம் கேட்டார் கோமதி.

இந்த இடத்தின் பெயரைச் சொன்னதும் கோமதியைப் பற்றித் தப்பாக நினைத்திருந்த டிரைவருக்கு அவர் இங்கு வருவதற்கான காரணம் தெரிந்ததும் அவரது மீது நல்ல மதிப்பு உண்டானது.

தவிர அவர் கால் ஊனமாகி கைத்தடியின் உதவியோடு நின்றிருப்பதைப் பார்த்தவருக்கு கோமதியின் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவித்து விட்டுச் செல்ல மனமில்லை.

“சரி” என்று தலையாட்டிய அந்த டிரைவர் கோமதியை அழைத்துக் கொண்டு அவர் சொன்ன விபரங்களை எல்லாம் கேட்டுக்கொண்டு அங்கிருந்த நபரிடம் இலக்கியாவைப் பற்றியும் அவளை ஏலத்தில் எடுத்தவர் பற்றியும் தெரிந்து கொள்ள விசாரிக்க ஆரம்பித்தார்.

அங்கே இருந்தவர்கள் இவர்கள் கேட்ட விபரத்தைச் சொல்ல மறுத்து விட்டனர்.

எப்படியாவது தன் மகளைப் பற்றிய விபரத்தை இவர்களிடம் கேட்டு வாங்கித் தரும்படி அவர்களை அந்த டிரைவரிடம் கெஞ்ச…

அந்த டிரைவர் கோமதி இடம் “நாம கேட்டதும் இவங்க உடனே எல்லாத்தையும் சொல்லிட மாட்டாங்க. ஒரு விலை இருக்கு. கொடுக்கறதைக் கொடுத்தால் தான் நமக்குத் தேவைப்பட்டது கிடைக்கும்” என்று சொன்ன டிரைவர்.

“நீங்கள் இருக்கும் நிலைமையைப் பார்த்தால் அவர்கள் கேட்கும் பணத்தை உங்களால் கொடுக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

“உங்களுக்குக் கொடுத்து உதவலாம் என்று நினைத்தாலும் என்னிடமும் அவ்வளவாகப் பணம் இல்லை. நான் கொடுக்கும் பணத்தை வைத்து அவர்களிடம் சின்ன விஷயத்துக்கு கூடக் கேட்டு வாங்க முடியாது” என்று அந்த டிரைவர் சொல்ல..

“அவங்களுக்கு இப்போ எத்தனை பணம் கொடுக்கணும்னு சொல்லுங்க அதை நான் கொடுக்கிறேன்” என்றார் கோமதி.

நம்ப முடியாமல் பார்த்த டிரைவர் “உங்ககிட்ட அவ்வளவு பணம் இருக்கா?” என்று கேட்டார்.

எதற்கும் இருக்கட்டும் என்று கடைசியாக ராமலிங்கத்தின் பணத்தை பீரோவில் இருந்து எடுத்து வந்தது இப்போது தனக்கு உதவியாக இருக்கிறது என்று நினைத்தவர்.

சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு தன் பைக்குள்ள கற்றை கற்றையாகச் சுற்றி வைத்திருந்த பணத்தை அந்த டிரைவரிடம் காட்ட..

அவர் கோமதி காட்டிய பணத்தைப் பார்த்து அப்படியே வாயடைத்து நின்றார். அந்த ஆட்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைப் பற்றிச் சொல்ல, அதை எடுத்து அவரிடம் கொடுத்து “எப்படியாவது என் மகளைப் பற்றியும் அவளை அழைத்துச் சென்றவர் பற்றியும் அனைத்து விபரங்களையும் தனக்கு வாங்கித் தரும்படி” அவரிடம் கெஞ்ச, “சரி” என்று கோமதி கொடுத்த பணத்தை வாங்கிய அந்த டிரைவர் இலக்கியாவைப் பற்றியும் அவளை அழைத்துச் சென்றவர் பற்றியும் விபரங்களையும் சற்று நேரத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டவர்.

அந்த நபர் சொன்ன விபரங்களை எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதிய அந்த டிரைவர் அதைக் கொண்டு வந்து கோமதியின் கையில் கொடுத்தார்.

அவர் கொடுத்த விலாசத்தைப் பார்த்த கோமதி அது இந்தியா என்று தெரிந்து கொண்டவர் “என்னை ஏர்போர்ட்டில் இறக்கி விட முடியுமா? எனக்கு இந்தியா செல்வதற்காகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரும்படி” அந்த டிரைவரிடம் மேலும் உதவி கேட்க.

அவர் கோமதியின் நிலை உணர்ந்து அவருக்கு மறுப்பு சொல்லாமல் கோமதி என்ன கேட்டாரோ அனைத்தையும் பொறுமையாகச் செய்து கொடுத்தார் அந்த டிரைவர்.

கடைசியில் ஏர்போர்ட்டில் கோமதிக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து பிளைட் ஏற்றிவிட்டுச் செல்வதாக கோமதிக்குத் துணையாக அங்கேயே இருந்தார் அந்த டிரைவர்.

எவ்வளவு தன் கைக்கு அகப்பட்டதோ அத்தனை பணத்தையும் எடுத்து அந்த டிரைவரிடம் கொடுத்த கோமதி “இதை நீங்க எனக்குச் செஞ்ச உதவிக்குக் கொடுத்த பரிசு வச்சுக்கோங்க என்னை தப்பா எடுத்துக்காதீங்க” என்று வலுக்கட்டாயமாக அந்த டிரைவரின் கையில் பணத்தைத் திணித்தார் கோமதி.

அவர் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் போவதே அவரிடம் பணத்தைக் கொடுக்க வேறு வழியில்லாமல் அவர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார் அந்த டிரைவர். அவருக்கு இந்தப் பணம் தன் வாழ்நாளின் பெரிய விஷயமாகத் தோன்ற கோமதியை நன்றி உணர்வோடு பார்த்தார்.

சற்று நேரத்தில் கோமதி செல்வதற்கான பிளைட் கிளம்புவதற்காக அவரைப் பத்திரமாகச் செல்லும்படி இந்தியா செல்லும்படி சொன்ன டிரைவர் ஒரு பேப்பரில் தன் போன் நம்பரை எழுதி கொடுத்து பின்னால் அவருக்கு எதுவும் உதவி வேண்டுமென்றால் தனக்கு அழைக்கும் படி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

தன் மகளை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்ற நம்பிக்கையோடு இந்தியா பயணமானார் கோமதி.


❤️

குமரன் சொன்னது போல தமிழ் வீட்டிலேயே இலக்கியாவை இருக்கச் சொல்லி விட்டான் தமிழ்.

அவளை அங்கு தங்கச் சொல்லி விட்டாலும் தமிழால் இலக்கியாவைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இலக்கியா இங்கே வந்த நாட்களில் தினமும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தாத்தாவை சந்திக்க வருவதாக, தன் தந்தையை, தாயைச் சந்திக்க வருவதாக குமரனின் வீட்டிற்கு வந்து இலக்கியாவையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

அவ்வளவு சீக்கிரமாகத் தங்கள் வீட்டிற்கு தமிழ் வந்ததே இல்லை. அப்படியே வந்தாலும் ஏதாவது முக்கியமான விஷயம் இருந்தால் மட்டுமே வருவான்.

குமரன் வீட்டிற்கு வந்ததும் தன் வேலையை முடித்துவிட்டு மீண்டும் இங்கிருந்து கிளம்பி விடுவான்.

அவனைத் தங்களோடு தங்கி விடும்படி காவேரி எவ்வளவு முறை தமிழிடம் கேட்டுக் கொண்டும் அவன் தனக்கு வேலை இருக்கிறது என்று காவேரியின் வேண்டுகோளைத் தட்டிக் கழித்துக் கொண்டு சென்றிருக்கிறான்.

ஆனால் இப்போது தினமும் தங்கள் வீட்டிற்கு வருவதும், ஆபீசுக்குச் செல்லாமல் பாதி நேரம் வீட்டிலேயே ஆபீஸ் விஷயங்களையெல்லாம் செய்து முடிப்பதுமாக இருக்கும் தமிழை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

தினமும் தமிழ் இங்கே வருவதால் அவனுடன் பார்த்திருக்கும் வினித்தும் அடிக்கடி தமிழைப் பார்க்க அவன் தாத்தா வீட்டிற்கு வர வேண்டியதாகப் போய்விட்டது.

ஆராவிற்கு இது வசதியாகப் போக அடிக்கடி வினித்திடம் வந்து பேசவும்… அவன் பின்னால் சுற்றவுமே அவளுக்குச் சரியாக இருந்தது.

அவன் இலக்கியாவை இங்கே வருகிறான் என்று அங்கு இருப்பவர்கள் யாருக்குமே தெரியவில்லை.

அந்த அளவு தன்மீது சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டான் தமிழ்.

தமிழுக்கு எதுவும் உதவி என்றான் வந்து அவனுக்குச் செய்து விட்டு ஆபீசுக்குச் சென்று விடுவான்.

தமிழ் ஆபீசுக்கு வராமல் இங்கேயும் அங்கேயும் தன்னை அலைக்கழிப்பதைப் பார்த்த வினித்.

இன்று அவனிடம் இதைப் பற்றிப் பேசி விட வேண்டும் என்று நினைத்து வந்தான். கையில் ஃபைல்களோடு தமிழை காண உள்ளே வந்தான்.

வழக்கம் போல வினித்தின் வரவிற்காகக் காத்திருந்தாள் ஆரா.

இன்றும் வாசலிலேயே இருப்பதைப் பார்த்த வினித். “இவளுக்கு என் பின்னாடி சுத்துறது தவிர்த்து வேறு வேலையே இல்லையா?” என்று நொந்தபடி வீட்டிற்குள் நுழைய..

வழக்கம் போல சிரித்தபடி ஆரா அவன் முன் வந்து நிற்க…

“தினமும் உனக்கு இதே வேலையா போச்சு. இன்னைக்கு என்ன கேட்கப் போற?” என்றான் வினித்.

“ஒரு முத்தம் வேணும் தரியா?” என்றால் ஆரா அவனைப் பார்த்து கண்ணடித்து.

இப்படி கேட்டதும் அதிர்ந்த வினித் ஆராவை வித்தியாசமாகப் பார்த்தவன்.

“அதற்கு வேற ஆளப் பாரு. முதல்ல வழியை விடு” என்று அவளைத் தாண்டி உள்ளே செல்லப் போக…

தன்னிடம் பேசாமல் உள்ளே செல்லும் இந்த வினித்தை வேகமாகத் தாண்டி வந்து அவன் முன்னே நின்ற ஆரா.

“நானும் பார்த்துட்டு இருக்கிறேன். நீ ரொம்ப ஓவரா தான் போயிட்டு இருக்க…. இத்தனை வருஷமா உன் பின்னாடி நாய் மாதிரி சுத்திட்டு இருக்காளே…. இத்தனை வருஷம் ஒருத்தி மனுசனா மதிச்சு பின்னாடி சுத்திட்டு இருக்காளேன்னு கொஞ்சமாவது பாவம் பார்த்து எனக்காக இறங்கி வரணும்னு ஏதாவது இருக்கா உனக்கு?” என்றாள்.

“இல்லை… இப்ப என்னங்கற?” என்று முடித்துக் கொண்டான் வினித்.

“இனிமேல் மயிலே மயிலேன்னு இறகு போடும்னு மயிலுக்காகக் காத்திருக்கிறது வேஸ்ட்” என்றாள்.

“இப்ப எதுக்கு தேவையில்லாம நீ மயில இழுக்கிற?” என்றான் வினித்.

“ம்ம்ம்…. இதுக்குத்தான் விழிக்கிறேன்” என்று சொன்ன ஆரா ஒருமுறை தன்னைச் சுற்றிலும் பார்த்துவிட்டு சட்டென்று வினித்தின் முகத்தைப் பிடித்து தன் முகத்திற்கு அருகே இழுத்தவள் அவன் உதட்டில் நச்சு என்று ஒரு முத்தம் வைத்தவள்.

அவனை விட்டு இரண்டு அடி தள்ளி ஒன்றும் தெரியாதவள் போல நின்று கொண்டவள்.

“நீ பார்த்து லேசாக வெட்கம் கலந்த புன்னகையோடு ஒழுங்கா என்ன லவ் பண்ணிடு…. இல்லன்னா நான் இன்னும் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று விட்டு அவனைத் திரும்பிப் பார்க்காமல் வெட்கத்தில் ஓடிவிட…

ஆரா தனக்கு முத்தம் கொடுத்தது சற்றும் எதிர்பார்த்திராத வினித் அப்படியே உறைந்து போய் நின்று இருந்தான்.

அவன் ப்ரீஸாகி அப்படியே நின்று இருக்க அப்போதுதான் வெளியே சென்று விட்டு உள்ளே வந்த ஆராவின் அப்பா மணி ஒரே இடத்தில் அசையாமல் அப்படியே நின்று இருப்பதைப் பார்த்தவர் அவனிடம் வந்து தோளைத் தட்டி “என் வாப்பா ஏன் இங்கேயே நின்னுட்டு இருக்க? உள்ளே போலாம்” என்று வினித்தைத் தன்னோடு உள்ளே அழைத்துச் சென்றார்.

அவரோடு உள்ளே நடந்து கொண்டே தனக்கு முத்தம் வைத்த ஆராவை முதன் முதலாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு திரும்பித் தனக்குப் பின்னால் பார்த்தான் வினித்.

ஆனால் அவன் கண்ணு கட்டுக்கே தூரம் வரை ஆரா இல்லை.

ஒரு முத்தத்திலேயே வினித்தை மொத்தமாக கவிழ்த்து விட்டு தன் அறைக்கு ஓடி விட்டாள் ஆரா.

பேய் அறைந்தவன் போல தன் அப்பாவுடன் உள்ளே வந்த வினித்தைப் பார்த்த தமிழ்.

“என்னடா.. பேய் அறைஞ்சவன் மாதிரி முகத்தை இப்படி வச்சுக்கிட்டு வர…. நீ பயங்கர அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு?” என்று கேட்டான் தமிழ்.

“அதுவா மாப்பிள்ளை… அது வந்து…. அது வந்து மாப்பிள்ளை…” என்று வினித் உளறிக்கொண்டு இருக்க…

“நீ என்னவோ பார்த்து பயந்துக்க. முதலில் நான் கேட்ட டீடைல் எல்லாம் கொண்டு வந்தியா?” என்று கேட்டான் தமிழ்.

கையில் இருந்து ஃபைலை தமிழின் முன்பு அதே அதிர்ச்சி நிறைந்த முகத்தோடு நீட்டிய வினித் அந்த ஃபைல்களைப் பிடிக்கும் முன்பே அதை விட்டவன் சென்று சோபாவில் அமரப் போக…

வினித் கொடுத்த ஃபைல் மொத்தமும் தமிழின் முன்பு தரையில் விழுந்து விட…

அதை கண்ட தமிழ் கோபத்தில் அதிலிருந்து ஒரு ஃபைலை எடுத்து வினித்தின் மீது தூக்கிப் போட்டவன்.

“டேய் என்னடா நெனச்சிட்டு இருக்க? கவனமா வேலை பார்க்க மாட்டியா?” என்று வினித்தை திட்ட ..

அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவன் போல “என்ன தமிழ் சொன்ன?” என்று கேட்டான்.

அவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு தமிழ் “முதல்ல ஒழுங்கா கவனமா வேலையப் பாரு. இப்படி பகல்லையே கனவு கண்டுட்டு சுத்திட்டு இருக்காத” என்று திட்டிய தமிழ் வினித் கொண்டு வந்த ஃபைலை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான்.

“என்னடா சும்மா எப்ப பார்த்தாலும் என்னை திட்டிட்டே இருக்க? நீ ஒழுங்கா ஆபீசுக்கு இப்போ வரப் போறியா? இல்லையா? இங்க உட்கார்ந்துட்டு தினமும் ஏதாவது ஒரு வேலை சொல்லி என்ன பாடா படுத்திட்டு இருக்குற?” என்று வினித் தமிழிடம் கோபமாகப் பேசினான்.

வினித் குரலை உயர்த்திப் பேசியதைக் கேட்ட தமிழ் நிமிர்ந்து வினித்தைப் பார்க்க…

“அது இல்லடா மாப்ள. டெய்லியும் இங்கேயும் அங்கேயும் என்னால அலையவும் முடியல டா அதனால தான்…” என்று தமிழைப் பார்த்து குழைவாகப் பேச…

“சரி அதுக்கு இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற?” என்று ஃபைல்களைப் புரட்டிக் கொண்டே கேட்டான் தமிழ்.

“நீ பேசாம ஆபீஸை இங்கேயே மாத்திடு. கொஞ்சம் அலையுற வேலையாவது எனக்கு மிச்சம் ஆகும்” என்று தமிழிடம் வேண்டுமென்றே வம்பு பேசினான் வினித்.

“சரி ஓகே அப்போ நாளையிலிருந்து ஆபீஸ் ஒர்க் ஃபுல்லா இங்கேயே பார்த்துக்கலாம். நீயும் இங்கேயும் வந்துடு” என்றவன்.

“அதுக்கு வேணுங்கற ஏற்பாடு எல்லாம் ஆபீஸ்ல சொல்லிச் செய்யச் சொல்லிடு” என்றான் தமிழும் பதிலுக்கு.

“ஏய் தமிழ்! நான் சும்மா விளையாட்டுக்காக அப்படிச் சொன்னேன் நீ என்ன உடனே ஆபீஸ் வீட்டுக்கு மாத்திட்டேன்னு சொல்ற?” என்றான் வினித்.

“நானும் விளையாட்டுக்கு தான் சொன்னேன்” என்று தமிழ் “சரி தேவையில்லாமப் பேசிட்டு இருக்காம வேலையப் பாரு” என்று தன் கையில் இருந்த ஃபைல்களைப் பொருத்தி அன்றைய வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான் தமிழ்.

அப்போது ஆராவைத் தேடிக் கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்த இலக்கியா… அவளை எங்கும் காணாமல் ஒருவேளை ஹாலில் இருப்பாளோ என்று ஆராவைப் பார்க்க வந்தாள்.

தமிழ் அவன் தாத்தா வீட்டிற்கு வந்ததிலிருந்து தன் அறையை விட்டு இன்று இலக்கியா வெளியே வரவே இல்லை.

அவளைப் பார்ப்பதற்காக அவளுக்காகக் காத்திருந்த தமிழ் தான் ஹாலில் அமர்ந்திருப்பதை கூடக் கண்டுகொள்ளாமல் தன்னைத் தாண்டி எங்கோ செல்லும் இலக்கியாவைப் பார்த்து அவனுக்குக் கோபம் வந்தது.

ஆராவைத் தேடிக் கொண்டு அவன் வீட்டில் இருந்த மற்றொரு இடத்திற்கு இலக்கியா செல்ல…

தன்னைக் கண்டுகொள்ளாமல் செல்பவளைக் கண்டு கடுப்பான தமிழ்.

“இவளை இன்று ஏதாவது செய்தாக வேண்டும். அதுவும் இப்பொழுதே ஏதாவது இலக்கியாவைச் செய்ய வேண்டுமென்று” வேகமாக சோபாவில் இருந்து எழுந்த தமிழ் அங்கிருந்து செல்லப் போக…

அவன் கையைப் பிடித்துக் கொண்ட வினித் “டேய் இங்கே எத்தனை வேலை இருக்கு நீ எங்க எழுந்து போற… வா வந்து வேலையப் பாரு” என்று தமிழின் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் சோபாவில் அமர வைக்க…

இலக்கியா தன்னைக் கண்டுகொள்ளாமல் செல்வதைப் பார்த்த தமிழ் கடுப்பில் இருந்தவன்.

இலக்கியாவை இப்போதே பார்க்க வேண்டும் என்று தான் செல்வதைத் தடுத்து தன்னை மீண்டும் அமர வைத்த வினித்தின் மேல் கோபம் வர…

தன் எதிரே டேபிளில் இருந்து ஃபைலை எடுத்து வினித்தின் மீது தூக்கி வீசியவன் “எனக்குத் தெரியாதா வேலை இருக்குன்னு… ஒழுங்கா நான் உனக்குக் கொடுத்த வேலையை இன்னும் பத்து நிமிஷத்துல நீ செஞ்சு முடிச்சிடுற… நான் திரும்பி வரதுக்குள்ள உனக்குக் கொடுத்த ஒர்க்கை முடிச்சு வைக்கல நடக்கிறதே வேற” என்று வினித்தை மிரட்டி விட்டு.

சோபாவில் இருந்து வேகமாக எழுந்த தமிழ், இலக்கியா சென்ற திசையை நோக்கி அவளைப் பார்ப்பதற்காகச் சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured