Episode-34
இலக்கியாவை அழைத்துக் கொண்டு ஒரு பார்ட்டிக்கு தமிழ் சென்று இருக்க…
அவளைப் பார்த்த தாசும், யாழினியின் அப்பாவும் எப்படியாவது இலக்கியாவை தனியாக சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
தாசிற்கும், யாழினியின் அப்பாவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
யாழினியின் அப்பா தமிழுடன் இருப்பது தங்கள் காப்பகத்தில் தற்போது சேர்ந்துள்ள கோமதியின் மகளாக இருக்குமோ என்ற சந்தேகம் அவருக்கு.
ஆனால் இலக்கியாவை எப்படியாவது தமிழுக்குத் தெரியாமல் சந்தித்து அவளைப் பற்றி விசாரித்து, ஒருவேளை அவள் கோமதியின் பெண்ணாக இருந்தால்,
அவளுடைய அம்மா தங்கள் காப்பகத்தில்தான் இருக்கிறார் என்பதை அவளிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தவர், அவளை எப்படிச் சந்திப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
இங்கு தாஸ், இலக்கியாவின் குடும்பத்தைப் பற்றி, அவளைப் பற்றியும் தெரிந்து கொண்டவர், அவளிடம் எப்படியாவது பேசி தமிழுக்கு எதிராகவே அவளைத் திருப்பி, அவள் மூலம் தமிழைத் தங்கள் தொழிலில் தோற்கடிக்கலாம் என்ற யோசனையில் அவளைப் பார்த்தபடி நின்று இருந்தான்.
இலக்கியாவின் கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்த தமிழ், இலக்கியாவைப் பார்த்து, “இங்கே இருக்கிறவர்கள் எல்லாம் நான் டிசைன் செய்து கொடுத்த கட்டிடங்களுக்குச் சொந்தக்காரர்கள்.
இந்த பார்ட்டி எதுக்குன்னு உனக்குத் தெரியுமா?” என்றான் தமிழ்.
இலக்கியா தெரியாது என்பது போல தலையை ஆட்ட…
“என்னோட ஆர்க்கிடெக்ட் பிசினஸ்ல நான் செய்து கொடுத்த டிசைன் எல்லாமே ரொம்பப் பிரபலம்.
நான் செய்து கொடுத்த டிசைன் மூலமா இங்கே இருக்கிறவங்களோட பில்டிங் எல்லாமே மிகவும் ஃபேமஸ்ஸா அந்தந்த ஊர்ல அடையாளம் காட்டப்பட்டு இருக்கு.
அதுக்கு எல்லாம் நான் தான் காரணம்னு எனக்காக இந்த பார்ட்டியை அரேஞ்ச் பண்ணி இருக்காங்க” என்றான் தமிழ்.
“ஓ….” என்று அவன் சொன்னது எல்லாம் அதிசயம் போல கேட்டுக் கொண்டு தலையாட்டினாள் இலக்கியா.
இலக்கியாவுடன் தமிழ் பேசிக் கொண்டு இருக்க, அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அவனிடம் வந்து, “ஹலோ தமிழ்” என்று கைகுலுக்கினர்.
தமிழ் பதிலுக்குக் கைகுலுக்க, அவனைப் பார்த்தவர்கள் அவன் அருகில் நின்றிருந்த இலக்கியாவைப் பார்த்து, “இந்த பொண்ணு… இவங்க யாரு?” என்று கேட்டனர்.
அவளைத் தன் அருகில் இழுத்து இலக்கியாவின் தோளில் கை போட்ட தமிழ், “ஷி இஸ் இலக்கியா, ஷி இஸ் மை ஃபியான்சி” என்று அறிமுகப்படுத்தியவன், “எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப்போகுது” என்று இலக்கியாவைத் தனக்கு எதிரில் நின்று இருந்தவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
“என்ன சொல்றீங்க மிஸ்டர் தமிழ்? இந்த சின்னப் பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?…
அவங்களையும் சேர்த்து வச்சுப் பார்த்தா, அவங்களுக்கு உங்களை விட வயசு ரொம்பக் கம்மியா இருக்கும் போல இருக்கே… எப்படி அவங்களை நீங்க கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சீங்க?” என்று கேட்டார் ஒருவர்.
அவர் வயதைப் பற்றிப் பேசியதும் தமிழுக்குச் சுர்…ரென்று கோபம் வர, அதைக் கவனித்த இலக்கியா அவன் கையைப் பிடித்திருந்தவள்.
அவன் கையில் அழுத்தம் கூட்டி அவனைப் பார்க்க… தமிழ் திரும்பி இலக்கியாவைப் பார்த்தவன், அவள் பார்வையைக் கண்டதும் அப்படியே தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.
தமிழின் எதிரே நின்றிருந்தவர்களைப் பார்த்த இலக்கியா.
தமிழிடம் கேள்வி கேட்டவரைப் பார்த்த இலக்கியா, “அவருக்கு என்னைப் பிடிச்சிருக்கு. அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புகிறார். இதுல உங்களுக்கு எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டாள் இலக்கியா.
அவள் பேசியதைக் கேட்டதில் வாய் அடைத்துப் போய் அப்படியே நிற்க…
அதற்கு மேல் அவர்களிடம் எதுவும் பேச வேண்டியது இல்லை, இதுவே இவர்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் மிகவும் சிறிய பெண்ணாக இருப்பதால், அவளுக்கு இது எல்லாம் புதிதாக இருந்தது.
அங்கே இலக்கியாவைச் சுற்றி இருந்த ஆட்கள் இலக்கியாவை வித்தியாசமாகப் பார்க்க…
தமிழின் அருகில் நின்றிருந்த இலக்கியா தன்னிச்சையாக அவன் கைகளுடன் தன் கையை கோர்த்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.
அவள் தன் கையை இறுக்கிப் பிடிக்கவும், வேறொருவருடன் பேசிக் கொண்டிருந்த தமிழ் திரும்பி இலக்கியாவைப் பார்த்து, “என்ன?” என்று பார்வையாலேயே கேட்டான்.
“இங்கே இருந்து போகலாமா? எனக்கு இங்கே இருக்க ஒரு மாதிரியா இருக்கு” என்றால் இலக்கியா, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“இன்னும் கொஞ்ச நேரம் தான், கிளம்பிடலாம். ஒரு பத்து மினிட்ஸ்” என்றவன்.
“சரி இரு, உனக்கு இங்கே இருக்கப் பிடிக்கலையா?” என்று கேட்டான்.
இலக்கியா தயங்கியபடியே, “ஆமாம்” என்று தலையை ஆட்ட…
“அப்போ நீ கொஞ்ச நேரம் இந்த பில்டிங் பின்னால் இருக்கிற கார்டன்ல வெயிட் பண்ணு.
நான் ஒரு பத்து மினிட்ஸ்ல வந்துடறேன்” என்று அவளுக்கு அந்த ஹாலில் இருந்த பின்வாசல் வழியைக் காட்ட…
இலக்கியா “சரி” என்று தலையாட்டியவள், அவன் காட்டிய வழியில் சென்றாள்.
இவ்வளவு நேரம் இலக்கியாவைச் சந்திக்கலாம் என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்த தாசும், யாழினியின் அப்பாவும் இலக்கியா அங்கிருந்து கிளம்பித் தனியே செல்வதைப் பார்த்து, அவளைச் சந்திக்க யாருக்கும் தெரியாமல் அவள் பின்னால் தனித்தனியாகச் சென்றனர்.
அந்த பில்டிங்கின் பின்வாசல் வழியாக வெளியே வந்த இலக்கியா அங்கே இருந்த கார்டனைப் பார்க்க…
அது மிகவும் பெரிதாகவும் அழகான மரங்கள், செடிகள், பூக்கள் என நிறைந்து இருந்தது. கூடவே சிறுவர்கள் விளையாடுவதற்கு இடமும் ஒதுக்கி இருக்க…
சிறுவர்கள் எல்லாம் ஊஞ்சலாடிக் கொண்டும், சறுக்குமரம் விளையாடிக் கொண்டும் இருந்தனர்.
அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை எல்லாம் ரசித்தபடி கார்டனையும் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த இலக்கியா, தூரத்தில் ஒரு மரத்திற்கு அடியில் மேஜை போடப்பட்டு இருக்க… அங்கே சென்று அமர்ந்து கொண்டாள்.
அந்த இடமே மிகவும் ரம்மியமாக இருக்க… அந்த இடத்தைப் படம்பிடிக்கத் தன் மொபைலை எடுத்து அந்த இடத்தை வீடியோ எடுக்க ஆரம்பித்தாள்.
இலக்கியா தனியாகச் சென்று ஒரு பென்சில் அமர்ந்திருப்பதைப் பார்த்த தாஸ் அவளிடம், “இதை விட்டால் ஒரு நல்ல சந்தர்ப்பம் பேசக் கிடைக்காது” என்று இலக்கியாவிடம் பேச அவளை நோக்கிச் செல்ல…
வேறொரு இடத்திலிருந்து இலக்கியாவைப் பார்த்த யாழினியின் அப்பா, “இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இந்த பெண்ணிடம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடும்.
அதனால் எப்படியாவது அவளிடம் பேசி அவள் அம்மாவைப் பற்றிக் கேட்டு விட வேண்டும்” என்று நினைத்தவாறு வேறொரு பக்கத்தில் இருந்து யாழினியின் அப்பா இலக்கியாவை நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்.
அவள் அங்கே தெரிந்த ஒவ்வொரு இடமாக வீடியோ எடுத்துக் கொண்டு வர, அப்போது அவள் ஃபோனுக்கு முன்னால் ஒரு உருவம் வந்து நின்று, அவளை வீடியோ எடுக்க விடாமல் தன் உருவத்தை வைத்து மறைத்து நின்றது.
அந்த அழகிய கார்டனைத் தன் மொபைலில் படம்பிடித்துக் கொண்டிருந்த இலக்கியா, தன்னை மறைத்து நின்றவரை யார் எனத் தலையை நிமிர்த்திப் பார்க்க, அவள் முன்னே ஒரு பெண் இலக்கியாவைப் பார்த்துச் சிரித்தவாறு நின்று இருந்தாள்.
தன்னைப் பார்த்து மிகவும் சகஜமாகச் சிரிக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்த இலக்கியா, அந்தப் பெண்ணைப் பார்த்து ஸ்நேகமாகப் புன்னகைத்தாள்.
“நான் இங்கே உட்காரலாமா?” என்று அந்தப் பெண் கேட்க..
இலக்கியா சற்று ஓரமாகத் தள்ளி அமர்ந்தவள், தனக்கு எதிரில் நின்றிருந்த பெண்ணுக்குத் தன் அருகில் அமர இடம் கொடுத்தாள்.
“ஹலோ, ஐ அம் தீபா” என்று சொல்லி வந்து இலக்கியாவின் முன்பு தன் கையை நீட்டி தன்னை அறிமுகம் செய்து கொள்ள..
இலக்கியாவும் பதிலுக்குத் தன் பெயரைச் சொல்லி தீபாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
தங்களிடம் சற்று முன்பு தன் வயதைப் பற்றியும், இலக்கியாவைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதைப் பற்றியும் கடுமையாகப் பேசிய நபரைத் தன் பாடிகார்ட்சிடம் தனியாகக் கவனிக்கச் சொல்லி அந்த நபரை அனுப்பி வைத்தான்.
தமிழ் அந்த நபர் பேசிட்டு இருந்ததால் சற்று கோபமாகவே காணப்பட்டான்.
அந்த நபர் பேசியதற்காக மற்றவர்கள் தமிழிடம் மன்னிப்பு கேட்க…
அவர்கள் மன்னிப்புக் கேட்டதும் சற்று மனம் குளிர்ந்த தமிழ் தன்னுடைய அடுத்த ப்ராஜெக்ட் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தான்.
“தன்னுடைய ப்ராஜெக்ட் பற்றி மேடை ஏறி அனைவரிடமும் சொல்ல வேண்டும்” என்று தமிழிடம் வேண்டுகோள் வைக்க…
மேடையில் ஏறிப் பேச மறுத்த தமிழ், “எனக்கு இதில் எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை. எதுவாக இருந்தாலும் நேரடியாக என் ஆபிசில் வந்து என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று கறாராகச் சொல்லி விட்டான்.
தமிழை இதற்கு மேலும் வற்புறுத்தினால், இந்த பார்ட்டியை விட்டு முகத்தில் கிளம்பினாலும் கிளம்பி விடுவான் என்று அவனை கூல் செய்தவர்கள்.
இந்த பார்ட்டிக்கு தமிழை அவன் ஆபீசில் சென்று நேரில் பார்க்க முடியாதவர்கள் எல்லாம்.
இந்த பார்ட்டியில் வைத்து எப்படியாவது தமிழைத் தனியாகச் சந்தித்து அவனிடம் தங்கள் ப்ராஜெக்ட் பற்றிப் பேசி விட வேண்டும் என்று நிறைய இளம் கட்டிடத் துறையில் முன்னேறி வரும் நபர்கள் வந்து இருந்தனர்.
அவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வந்து தமிழிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள…
தமிழும் வளர்ந்து வரும் புதிய தொழில் அதிபர்களை ஊக்குவிக்கும்படி அவர்களிடம் நல்ல முறையில் பேசினான் தமிழ்.
வந்திருந்தவர்களில் தமிழின் கவனத்தை ஒருவன் மட்டும் கவர்ந்தான்.
அவனிடம் அதிகமாகப் பேசிய தமிழ், அவனைப் பற்றிய மேலோட்டமான விவரங்களை மட்டும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
தமிழின் கவனத்தை ஈர்த்த அந்த நபர், பிகே ஆர்க்கிடெக்ட்டின் சிஇஓ பிரேம்.
அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்த தமிழ் தன் கார்ட்சியை அழைத்து, “அந்த பிரேமைப் பற்றிய அனைத்து விவரங்களும் தனக்கு வந்து சேர வேண்டும்” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டுச் சென்றான்.
பிரேமிடம் விடைபெற்று இலக்கியாவைத் தேடிச் செல்லலாம் என்று தமிழ் அங்கிருந்து கிளம்பப் போக…
அப்பொழுது அவன் ஃபோன் அடிக்கவும், அதை எடுத்துப் பார்த்தால், தமிழ் அவனுடைய ஃப்ரெண்ட் ஆதித்யா அழைத்திருந்தான்.
ஃபோனை அட்டென்ட் செய்த தமிழ், “சொல்லு” என்றான் இறுக்கமான குரலில்.
“நான் வேணா அப்புறமா ஃபோன் பண்ணட்டுமா தமிழ்? நீ ரொம்ப கோபமா இருக்க போல இருக்கு” என்று ஆதித்யா ஃபோனை வைக்கப் போக…
“எதுக்கு ஃபோன் பண்ணினு சொல்லிட்டு ஃபோனை வச்சா நல்லா இருக்கும். இல்லன்னா நடக்கப் போற பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாது” என்றான் தமிழ்.
“சரி, கோச்சுக்காத. நான் ஸ்ட்ரெயிட்டா விஷயத்துக்கு வரேன். நீ சாப்பிட்ட உணவுலதான் உனக்கு டிரக்ஸ் கலந்து கொடுத்திருக்காங்க” என்றான்.
“வாட்? என்ன சொல்ற ஆதித்யா? நான் அன்னைக்கே தீபா வீட்ல மட்டும் தான் சாப்பிட்டேன், வேறு எங்கேயும் சாப்பிடல. நீ சரியாத்தான் செக் பண்ணி சொல்றியா? நிஜமாகவே நான் அங்கே சாப்பிட்ட உணவில் டிரக்ஸ் கலந்து இருக்கா?” என்றான் தமிழ்.
“ஆமாம் தமிழ். நான் பொய் சொல்லல. நிஜமாவே நீ சாப்பிட்ட சாப்பாட்டில்தான் யாரோ உனக்குத் தெரியாமல் டிரக்ஸ் கலந்து கொடுத்திருக்காங்க.
அது மட்டுமில்லாமல் நான் உன்னோட ரத்தத்தையும் பரிசோதித்துப் பார்த்துட்டேன். உன்னோட ரத்தத்தில் ஆல்கஹால் லெவல் அதிகமாக இருக்கு” என்றான் ஆதித்யா.
ஆதித்யா சொன்னதைக் கேட்ட தமிழ், “நீ சொன்னது இப்போ வரைக்கும் என்னால நம்ப முடியலடா” என்றான்.
“நான் சொல்றதை நீ நம்ப மாட்டேன்னு உன்னோட டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் நான் வச்சுட்டேன். நான் உன்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன்.
உன்னோட பிளட்டில் கலந்து இருக்கிற ஆல்கஹால் உடைய லெவலைப் பார்க்கும்போது நீ நேற்றுதான் டிரக்ஸ் யூஸ் பண்ண மாதிரி தெரியல..
ஏற்கனவே நிறைய முறை யூஸ் பண்ணி இருக்கிற மாதிரிதான் ரிசல்ட்ல காட்டுது” என்றான் ஆதித்யா.
நம்ப முடியாமல் தமிழ் அப்படியே நின்று இருக்க…
பின் சுதாரித்துக் கொண்ட தமிழ், நடந்து கொண்டே அந்த கார்டனை விட்டு இலக்கியாவை இருந்த இடத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தவன், “தீபா அப்படிப்பட்டவ எல்லாம் கிடையாதுடா…
அவள் இந்த மாதிரி சீப்பான வேலையெல்லாம் செய்ய மாட்டாள். எதுவா இருந்தாலும் நேரடியா வேணும்னு கேட்கிறவ அவள்” என்றான் தமிழ், இப்போதும் ஆதித்யா சொல்வதை நம்ப முடியாமல்.
“நான் சொல்றதை உன்னால நம்ப முடியலன்னா நான் ஒரு ஐடியா சொல்றேன், அதைக் கேக்குறியா?” என்றான் ஆதித்யா.
“ம்ம்ம்… என்ன சொல்லு” என்றான் தமிழ்.
“உண்மையாவே தீபா கொடுக்கிற சாப்பாட்டுலதான் ரெகுலரா டிரக்ஸ் கலக்குதா இல்லையான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. அதை தீர்த்துக்கணும்னா நீ மறுபடியும் தீபா வீட்டுக்குப் போகணும், அவ கொடுக்கிற சாப்பாட்டைச் சாப்பிடணும். அப்பதான் உனக்கு என்ன நடக்குதுன்னு உண்மையாகவே புரியும்” என்றான் ஆதித்யா.
“சரி நான் யோசிக்கிறேன்” என்றவாறு ஃபோனை வைத்துவிட்டு, அந்த கார்டனில் இலக்கியாவைத் தேட, தூரத்தில் மரத்திற்கு அடியில் இலக்கியா அமர்ந்திருக்க, அவள் அருகில் தீபா அமர்ந்து இலக்கியாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
“எப்படி இங்கே வந்தால்?” என்று யோசித்தபடி அவர்களே தமிழ் நெருங்கிக் கொண்டு இருக்க…
ஏதோ சொல்லிக் கொண்டு இருக்க, அவள் பேசுவது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இலக்கியாவின் முகம் மிகவும் கலவரமாக இருந்தது.
அதை எல்லாம் கவனித்தபடி அவர்கள் அருகில் வந்தவன். இலக்கியாவைப் பார்த்து, “என்னுடைய கார்ட்ஸ் வருவாங்க உன்னைக் கூட்டிட்டுப் போக… நீ அவங்களோட வீட்டுக்குப் போயிடு” என்றவன், தீபாவின் கையைப் பிடித்து அவளைத் தன்னுடன் அழைக்க…
தீபா தன் கையைப் பிடித்திருக்கவும், திரும்பி இலக்கியாவைப் பார்த்து, “நான் சொன்னேன் இல்லையா? என்னைப் பார்த்ததும் எல்லாத்தையும் மறந்துட்டு என் பின்னாடி தமிழ் வந்துருவான்னு சொல்லி சொன்ன மாதிரியே இப்போ என்னைப் பார்த்ததும் அவன் கூட என்னைக் கூட்டிட்டு போறான் பார்த்தியா?” என்றால் ஏளனமாக.
இச்சொல்லவும் தமிழ் தன்னிடம் எதுவும் அது குறித்துச் சொல்வான் என்று எதிர்பார்த்து இலக்கியா தமிழின் முகத்தையே பார்க்க…
ஆதித்யா சொன்னதை நினைத்துக் கொண்டு இலக்கியாவைச் சரியாகக் கவனிக்காமல் தீபாவின் கையைப் பிடித்து அங்கிருந்து வேகமாக இழுத்துச் சென்றான்.
தமிழ் செல்வதைப் பார்த்த இலக்கியா, தீபா தன்னிடம் இவ்வளவு நேரம் சொன்னது எல்லாம் உண்மையாகி விட்டதோ என்று யோசித்தவள், கலங்கிய மனதோடு அங்கே அமர்ந்திருக்க அவளை நெருங்கிக் கொண்டு இருந்தான் தாஸ்.
