Home Uncategorizedமோகம் முத்தாடுதே 11

மோகம் முத்தாடுதே 11

by Layas Tamil Novel
361 views

EPISODE 11

கிட்டத்தட்ட இருபது படிகளில் உருண்டு புரண்டுதான் கீழே வந்திருக்க வேண்டும் ரசிகா. நல்ல வேளையாக அவள் கீழே விழாமல், முகில் அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.

கீழே விழுந்து விடுவோம் என்று பயத்தில் கண்களை மூடியிருந்த ரசிகா, தன் இடையில் யாரோ கை கொடுத்து விழாமல் பிடித்துக்கொண்டதும் மூச்சு விட்டவள், கண்களைத் திறந்து பார்க்க, அவள் முகத்திற்கு மிக அருகில், தன் முகத்தை ‘ஈ’ என்று பல்லை காட்டிச் சிரித்தபடி நின்றிருந்தான் முகில்.

அவனை இங்கு சற்றும் எதிர்பாராத ரசிகா, ‘வந்து என்னைக் கீழே விழாமல் பிடிச்சிட்டா? நான் கூட என்னைப் பிடிக்க என்னோட ஹீரோதான் வரப் போறான்னு நினைச்சேன். போயும் போயும் இவனா என்னைக் கீழே விழாமல் பிடிச்சுக்கிட்டான்? நீ எதுக்கு? நான் கீழே விழுந்து மூஞ்சி, முகரையெல்லாம் காயம் ஆகியிருந்தாலும் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டவள், வேகமாக முகிலை தன்னிடம் இருந்து தள்ளிவிட்டு அவனை விட்டு விலகி நின்றாள்.

“என்ன ரசிகா இது? பார்த்து வர மாட்டியா? நீ கீழே விழுந்து எதுவும் ஆகியிருந்துச்சுன்னா அப்புறம் உன்னோட அம்மா, அப்பாவுக்கு யாரு பதில் சொல்றது?” என்றால் முகில்.

அவனை முறைத்த ரசிகா, “நீயா? நீ எதுக்கு இங்கே வந்த? உனக்கு இந்த வீட்டில் என்ன வேலை இருக்கு?” என்றாள்.

“ஏன்? இந்த வீட்டுக்கு நான் வரக் கூடாதுன்னு எதுவும் ரூல்ஸ் இருக்கா என்ன? நான் பூவிழியைப் பார்க்க வந்தேன். அவ எங்கே?” என்றான் முகில்.

“பூவிழியா? அவளை எதுக்கு நீ பார்க்கணும்? உனக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லையே? அவள்தான் இப்போ வீராவை கல்யாணம் பண்ணிட்டா. அதுக்கு பிறகு அவளைப் பார்த்து நீ என்ன பண்ணப் போற?” என்று கேட்டாள் ரசிகா.

“அது உனக்குத் தேவையில்லாத விஷயம், டார்லிங்” என்று அவள் கன்னத்தைத் தட்டினான் முகில்.

அவன் கையைத் தட்டிவிட்டுத் தன் கன்னத்தைக் கீழே கிடந்த துப்பட்டாவை எடுத்து அழுத்தித் துடைத்தவள், “இந்தத் தொட்டுப் பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காத. நீ எதுக்கு இங்கே வந்த? முதல்ல அதைச் சொல்லு” என்றாள் ரசிகா.

கீழே செண்பகமோ, முகில் வந்ததைச் சொல்வதற்காகத்தான் ரசிகாவை அழைத்திருந்தார். ‘இவன் வந்ததும் ரசிகாவை வம்பிழுக்க’ என்று செண்பகத்திற்குப் பதட்டம் அதிகமானது. ‘இவனால் எதுவும் இங்கே பிரச்சனை வந்துவிடுமோ’ என அவர் வீல்சேரைத் தள்ளிக்கொண்டு வந்தவர், “முகில், நீ எதுக்குப்பா இங்க வந்த? உனக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? உனக்கு இந்த வீட்டில் என்ன வேலை? என் பொண்ணு இங்கே வாழ வந்திருக்கா. இப்படித் தேவையில்லாம வந்து அவ வாழ்க்கையில் எதையும் குழப்பம் பண்ணிடாத. முதல்ல இங்கிருந்து கிளம்பு” என்றார் செண்பகம்.

“என்ன இது? எல்லாரும் என்ன வில்லன் ரேஞ்சுக்குப் பார்க்குறீங்க? நான் இங்கே பிரச்சனை எதுவும் பண்ண வரலை. பூவிழியைப் பார்த்து சில விஷயம் பேசிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை” என்றான் முகில்.

“இங்க பாரு. என்னைக்குப் பூவிழி கழுத்துல வீரா தாலி கட்டினாரோ, அப்போவே உனக்கும் அவளுக்கும் இடையில் இருந்த சம்பந்தம் முடிஞ்சு போயிடுச்சு. இப்போ நீ யாரோ, அவ யாரோ. அவளைப் பார்த்துப் பேசி நீ என்ன பண்ணப் போற? பேசாம இங்கிருந்து கிளம்பு” என்றாள் ரசிகா.

“யார் சொன்னது எனக்கும் பூவிழிக்கும் சம்பந்தம் முடிஞ்சிடுச்சுன்னு? இனிமேதான் எங்க ரெண்டு பேருக்கும் உள்ள சம்பந்தமே ஆரம்பிக்கப் போகுது” என்று நக்கலாகச் சிரித்தவன், “சரி, பூவிழியோட ரூம் எங்கே இருக்கு? நான் அவளைப் போய் பார்க்கணும்” என்று ரசிகாவை நெருங்கி வந்தான் முகில்.

அதில் முகம் சுளித்த ரசிகா பின்னால் செல்லப் போக, அப்போது…

“என் அண்ணி ரூம் வரைக்கும் போய் பார்க்கிற உரிமை இந்த வீட்டில் சிலருக்கு மட்டும்தான் இருக்கு. உன்னை முதல்ல இந்த வீட்டுக்குள்ள விட்டது தப்பு” என்றபடி போலீஸ் கேப்பை கழட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.

கம்பீர நடை போட்டு, புதிதாக அணிந்த காக்கி யூனிபார்மில் விரைப்பாகத் தன் போலீஸ் மீசையை முறுக்கிக்கொண்டு உள்ளே வந்தான் அர்ஜுன்.

அவனைப் பார்த்ததும் ரசிகாவை நெருங்கி நின்றிருந்த முகில், தானாக இரண்டடி பின்னால் சென்று நின்றவன், அர்ஜுனைப் பார்த்தான்.

படிகளில் ஏறி முகில் அருகில் வந்தவன், “நீங்க எதுக்கு அண்ணியைப் பார்க்கணும்?” என்றான்.

“அதை உங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை. நேரடியாகப் பூவிழியைப் பார்த்து நான் அவகிட்டயே பேசுகிறேன்” என்றான் முகில்.

“என் அண்ணிக்குப் பேர் இருக்கு. அவங்க பேர் சொல்லி கூப்பிடலாம். இல்லை மரியாதையாகக் கூப்பிட்டு பழகுங்க. ‘அவ இவ’ன்னு பேசுற வேலை வேண்டாம்” என்றான் கோபமாக அர்ஜுன்.

“ஓ, சாரி. நான் முன்ன மாதிரி ‘அவ’. சாரி, ‘அவங்க’ கிட்ட பேசிட்டு…” என்றவன், “அவங்களை நான் பார்க்கணும்” என்றான்.

“ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க. அவங்களை கீழே வரச் சொல்றேன்” என்றால் அர்ஜுன்.

முகிலிடம் பேசிவிட்டுத் திரும்பி ரசிகாவை அர்ஜுன் ஒரு பார்வை பார்க்க, அதுவரை அவனையே பார்த்துக்கொண்டிருந்த ரசிகா, அர்ஜுனின் பார்வையை நேரில் கண்டதும் இதயம் அதிர்ந்ததுபோல உணர்ந்தாள். அவள் முகம் முழுவதும் பூரித்துச் சிவந்துவிட, தன் முகம் சூடாவதை உணர்ந்த ரசிகா, சட்டெனத் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

அவன் நெருங்கி வரவும் ரசிகா முகத்தைத் திருப்பிக்கொண்டதைப் பார்த்ததும் அர்ஜுனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. ‘அவள் தன்னை பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டால்’ என்று நினைத்துக்கொண்டவன் ரசிகாவிடம், “அண்ணியை கீழே வரச் சொல்லுங்க” என்றவன், அவளைத் தாண்டிப் படியேறி ரூமிற்குச் சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் தான் ரசிகாவிற்கு மூச்சு வந்தது. ‘யார் இவர்? பாட்டுக்கு உள்ள வந்தான். முகிலை அதிகாரம் பண்ணினான். என்னமோ அவனோட வீடு மாதிரி உரிமையாக மேலே போறான்’ என்று யோசித்தாள். ‘ஒருவேளை இது அவன் வீடாத்தான் இருக்குமோ? அர்ஜுனுக்கு ஒரு தம்பி இருக்கிறதா பூவிழி சொல்லி கேட்டு இருக்கேன். ஒருவேளை இவனா இருக்குமோ?’ என்று யோசித்தவள், பின்…

‘அடி அறிவு கெட்டவளே, உன்னைவிட வயசுல சின்னவனைப் பார்த்தது இப்படித்தான் உன் புத்தி போகுமா?’ என்று தன்னையே நொந்துகொண்டவள், முகிலைப் பார்த்து, “நீங்களே வெயிட் பண்ணுங்க. நான் போய் பூவிழியை கூட்டிட்டு வரேன்” என்றுவிட்டு நேராகப் பூவிழியின் அறைக்குச் சென்றாள்.

இன்னமும் அதே இடத்தில் யோசனையோடு அமர்ந்திருந்த பூவிழி, ரசிகா மீண்டும் வரவும், “என்னடி? அம்மா எதுக்கு கூப்பிட்டாங்க?” என்றாள் அவளைப் பார்த்து.

“அந்த முகில் உன்னை பார்க்க இங்கே வந்திருக்கான்டி. அவனை நீ வரச் சொன்னியா?” என்றாள் ரசிகா.

“நான் எதுக்குடி அவனை இங்கே வரச் சொல்றேன்? எனக்குப் பிடிக்காது அவனை. வேற வரச் சொல்லிப் பார்க்கணுமா?” என்ற பூவிழி, “அவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?” என்றாள்.

“எனக்கும் தெரியலடி. அவன் உன்னை மேலே வந்து உன் ரூம்ல பார்க்கணும்னு சொன்னான். அப்புறம் போலீஸ் யூனிபார்ம் போட்ட ஒரு பையன் வந்தான். அவனைப் பார்த்ததுமே முகில் அப்படியே அமைதியாகிவிட்டான். உன்னை ரூம்ல வந்து பார்க்கிறேன்னு முகில் சொன்னதும் அந்த யூனிபார்ம் போட்ட பையனுக்குக் கோபம் வந்திருச்சு. ‘என் அண்ணியை ரூம்ல போய் பார்க்கிற உரிமை என் அண்ணாவுக்கு மட்டும்தான் இருக்கு’ன்னு சொன்னான். அப்போ அவன் வீராவோட தம்பியா?” என்றாள் ரசிகா ஆர்வமாக.

“போலீஸ் யூனிபார்ம் போட்டு இருக்கான்னு சொன்னதுமே, அது அர்ஜுனாகத்தான் இருக்கும்னு பூவிழிக்கு புரிந்துகொண்டது. “ஆமாண்டி. அவன் தம்பிதான். இன்னைக்குத்தான் டிரெய்னிங் முடிச்சிட்டு அசிஸ்டன்ட் கமிஷனரா ஜாயின் பண்ணி இருக்கிறதா காலையில என்கிட்ட சொன்னான்” என்றாள்.

“அசிஸ்டன்ட் கமிஷனரா? இந்த வயசுலேயா? பரவாயில்லையே” என்று நினைத்துக்கொண்டவள், “சரி வாடி. அந்த முகில் எதுக்காக வந்திருக்கான்னு தெரியல. அம்மா வேற அவன பார்த்ததிலிருந்து ரொம்பப் பதட்டமாக இருக்காங்க” என்று பூவிழியைத் தன்னோடு கீழே அழைத்துச் சென்றாள்.

அங்கே பூவிழி கீழே இறங்கி வரும்போது, ஹாலில் சோபாவில் முகில் அமர்ந்திருக்க, அவனுக்கு எதிரே கால் மேல் கால் போட்டபடி, சோபாவில் இரு கைகளையும் விரித்துச் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் வீரா.

அவனைப் பார்த்ததுமே, ‘ஐயோ, இவனும் வந்துட்டானா? இந்த முகில் எதுக்கு என்னைப் பார்க்க இங்கே வந்திருக்கான்னு தெரியல. போதாக்குறைக்கு இவன் வேற உட்கார்ந்து இருக்கான். என்ன நடக்கப் போகுதோ’ என நினைத்துக்கொண்டே கீழே வந்த பூவிழி, வீராவைக் கண்டுகொள்ளாமல் முகிலைப் பார்த்து, “நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள்.

தன்னைக் கண்டுகொள்ளாமல் பூவிழி முகிலிடம் பேசுவதைப் பார்த்த வீராவுக்குப் பற்றி வந்தது. அங்கே செண்பகம் இருந்ததால், அமைதியாகத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டவன், பூவிழியை “அங்கே நிற்கிற வா. இங்கே வந்து உட்காரு. உன்னைப் பார்க்க வந்திருக்காங்க. பொறுமையாக உட்கார்ந்து என்னன்னு பேசுவா” என்று அவளை அழைத்தான்.

‘இவன் பக்கத்துலயா? இவன் பக்கத்துல போய் உட்கார்ந்தா அவ்வளவுதான்’ என்று நினைத்தவள், “இல்லை, பரவாயில்லை. நான் இங்கேயே நிற்கிறேன்” என்றாள் பூவிழி.

அவன் அழைத்தும் பூவிழி வர மறுக்க, அவளைக் கோபம் கொண்ட பார்வையோடு வீரா பார்த்தான். அதைக் கண்டுகொண்ட செண்பகம், “சொல்றாரு இல்ல? போய் அவர் பக்கத்தில் உட்காரு. எவ்வளவு நேரம் நின்னுக்கிட்டே பேசிக்கிட்டு இருப்ப? போய் உட்காரு” என்று அவளைக் கட்டாயப்படுத்த, வேறு வழியில்லாமல் பூவிழி சென்று வீராவுக்கு அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்.

அவள் வீரா அருகில் அமர்ந்ததும், அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த முகிலுக்கு ஆத்திரமாக வந்தது.

“ஏன் பூவிழி இப்படிப் பண்ண? உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா முதலிலேயே சொல்லி இருக்க வேண்டியதுதானே? எதுக்கு மணமேடை வரைக்கும் வந்துட்டு இப்படி என் மூக்க உடைக்கிற மாதிரி இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு, இவன் பின்னாடி போன? அப்படி என்ன இருக்குன்னு இவன் பின்னாடி நீ போன?” என்று முகில் கோபமாகப் பூவிழியிடம் பேசினான்.

பூவிழி பதில் பேசலாம் என்று வாயைத் திறக்க, அதற்குள் குறுக்கே புகுந்த வீரா, “மைண்ட் யுவர் வேர்ட்ஸ், மிஸ்டர்” என்று அவனை எச்சரித்தவன், “இப்போ பூவிழி என்னை ஏன் கல்யாணம் செய்துகிட்டான்னு தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க?” என்றான்.

“ஹலோ, மிஸ்டர், உங்க கூடப் பேச வரலை. எனக்கு வேண்டிய பதில் பூவிழிதான் சொல்லணும்” என்று வீராவை புறக்கணித்துவிட்டுப் பூவிழியை முகில் பார்க்க…

அவளோ வீராவின் கோபத்தைக் கண்டு சற்று அதிர்ந்தவள், என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருக்க, பூவிழியின் தோளில் கை போட்டு அவளைத் தன்னருகில் இழுத்து அமர வைத்தான். “கேட்கிறார் இல்ல? சொல்லு பூவிழி” என்றான் வீரா.

தன் தோளில் இருந்த கையை விலக்கி விட்ட பூவிழி, முகிலைப் பார்த்து, “இதை தெரிஞ்சு நீங்க இப்ப என்ன பண்ணப் போறீங்க?” என்றாள்.

“என்ன பண்ணப் போறேன்? உன்னால எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? சொந்த பந்தங்கள் முன்னாடி என்னை வேண்டாம்னு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்ட. என் சொந்தங்கள் கிட்ட நான் பதில் சொல்ல முடியுமா? எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத்தான் தெரியும்” என்றான் முகில்.

பூவிழி எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க…

“உன் மனசுல என்ன இருக்கோ அதை வெளிப்படையா சொல்லு. நிஜமாவே உனக்குப் பிடிச்சுத்தான் இவனை கல்யாணம் பண்ணினியா? இல்லை எல்லாரும் முன்னாடியும் அவன் தாலி கட்டிட்டான் என்று அமைதியா அவன் பின்னாடி கிளம்பி வந்துட்டியா? எனக்குக் காரணம் தெரிஞ்சாகணும். சொல்லு பூவிழி” என்றான் முகில்.

ஏற்கனவே பூவிழி தன் கையை விலக்கிவிட்ட கோபத்தில் இருந்த வீரா, அவள் என்ன பதில் கூறப் போகிறாள் என்று அவளைப் பார்த்துக்கொண்டிருக்க, பூவிழி திரும்பி வீராவைப் பார்த்தாள்.

தன் கையை அவள் இடையில் அழுத்தி, “ம்ம்ம்… அதான் கேட்கிறார் இல்ல, பதில் சொல்லு பூவிழி” என்று மேலும் அவள் இடையில் அழுத்தம் கூட்டினான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured