EPISODE 15
“நான் உங்களைக் கடித்து சாப்பிட மாட்டேன். தைரியமாக உள்ளே வரலாம்” என்றான்.
அர்ஜுன் குரல் கேட்டதும் முதலில் திடுக்கிட்ட ரசிகா, பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, நீண்ட மூச்சை எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், லேசாகச் சாத்தியிருந்த அவன் அறைக்கதவை முழுவதுமாகத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். உள்ளே வந்தவள் தலை நிமிர்ந்து அர்ஜுனைப் பார்க்க, குளித்துவிட்டு இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு, மற்றொரு துண்டை தோளில் போட்டுத் தன் உடலை மறைத்தவாறு நின்றிருந்தான்.
அவனை அப்படிப் பார்த்ததும் சட்டென்று தன் தலையைத் தாழ்த்திக்கொண்டவள், கையில் இருந்த காபியை அங்கே இருந்த மேசையில் வைத்துவிட்டு, “காபி அத்தை கொடுக்க சொன்னாங்க… ஆறிடப் போகுது. சீக்கிரம் குடிச்சிடுங்க” என்றவள், அவன் அறையை விட்டுச் செல்ல வாசல் பக்கம் திரும்பி நடக்க…
வேகமாக அவன் அறைக்கதவைச் சாற்றிவிட்டு, ரசிகாவை வெளியே செல்ல விடாதபடி வழியை மறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.
அதை சற்றும் எதிர்பாராத ரசிகா அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.
ஆனால் அர்ஜுனோ நிதானமாக ரசிகாவைக் கீழிருந்து மேலாகத் தன் பார்வையை ஓடவிட்டான்.
மருதாணி இட்டிருந்த கால் விரல்கள் பூமியை இறுக்கப் பற்றி இருக்க… அதைப் பார்த்ததும் அவள் தன்னைக் கண்டு பயந்துகொண்டு இருக்கிறாள் என்று நினைத்தவன்… ‘என்னை பார்த்து இவள் ஏன் பயந்துகொள்ள வேண்டும்?’ என்று யோசனையோடு பார்வையை மேலே உயர்த்தினான்.
அவள் இடையில் வந்து நின்றது அவனது பார்வை. அவனைக் கண்டதில் அவள் உடல் முழுவதும் வியர்த்து இருக்க… அவள் சேலையைத் தாண்டி லேசாகத் தெரிந்த ரசிகாவின் இடுப்பில் வியர்வைத் துளிகள் பூத்திருக்க… அதைக் கண்டதும், அவள் இடையை இப்போதே வருட வேண்டும் என்று எழுந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தன் பார்வையை விளக்காமல் அவன் நின்றிருந்தான்.
அப்போது அர்ஜுனின் பார்வை சென்ற இடத்தைப் புரிந்துகொண்ட ரசிகாவின் கைகள் தானாகச் சேலையைக் கொண்டு அவள் இடையை மறைத்துக்கொண்டாள்.
அதில் கடுப்பான அர்ஜுன் சட்டென்று அவள் முகத்தைப் பார்க்க…
அவன் பார்த்த அடுத்த நொடி, பயத்தில் ‘தந்தன தந்தன’ என அடித்துக்கொண்டிருந்த ரசிகாவின் இதழ்கள் நடுங்கியபடியே, “எதுக்காக இப்போ ரூம் கதவைச் சாத்தினீங்க? வழியை விடுங்க. நான் போகணும்” என்று அவனைத் தாண்டி வேகமாக வெளியே செல்லப் போன ரசிகாவின் கையைப் பிடித்து இழுத்தவன், அவளைக் கதவில் தள்ளிச் சாய்த்து நிற்க வைத்தான்.
“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு நீங்க இப்படிப் பயந்துபோய் இருக்கீங்க? பாருங்க உங்க முகமெல்லாம் எப்படி வியர்த்து இருக்குன்னு…” என்று சொல்லி, தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து அவள் முகத்தில் இருந்த வியர்வைத் துளிகளைப் பூபோல ஒற்றி எடுத்தான்.
அவன் நெருங்கி வந்து ரசிகாவிடம் நிற்பதும், இப்படித் தன் வியர்வையை அவன் துடைப்பதையும் பார்த்தவளுக்கு மேலும் பதட்டம் தொற்றிக்கொள்ள… சட்டென்று அவன் கையைத் தட்டி விட்டவள், அர்ஜுனை நேருக்கு நேராகப் பார்த்து, “என்ன இது? நீங்க பண்றது எதுவும் சரியில்லை. இப்படித்தான் ஒரு பொண்ணு கிட்ட அத்துமீறுவீங்களா?” என்றாள், உள்ளுக்குள் அவன் நெருக்கத்தால் எழுந்த பூகம்பத்தைக் கடினப்பட்டு அவனிடமிருந்து மறைத்துக்கொண்டு.
“வாட்! அத்துமீறுறேனா? நான் உங்ககிட்ட அத்துமீறுறேனா?” என்றவன், அவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளியைக் குறைத்தவன், அவள் காதருகில் வந்து, “அத்துமீறுறதுன்னா என்னன்னு தெரியுமா?” என்று தன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் உரசச் செய்து பேசியவன் அவளை விட்டு விலகி ரசிகாவைப் பார்க்க…
அவளோ உடல் மொத்தமும் வியர்த்து நடுங்கியபடி தனக்கு மிக நெருக்கமாக இருந்தவனின் முகத்தைப் பார்த்தாள்.
அவள் பதட்டப்படுவதை அப்பட்டமாக அறிந்துகொண்ட அர்ஜுன், தன் இடக்கையில் பிடித்திருந்த துண்டை வலக்கையில் மாற்றியவன், அவள் கழுத்தில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை ஒற்றி எடுத்து, “இதுவும் அத்துமீறுவதா?” என்று அவள் படபடத்த விழிகளைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.
ரசிகா தன் கழுத்தில் இருந்த அவன் கையைத் தட்டிவிட, தன் கையை உயர்த்த, அவள் கையைத் தன்னைத் தடுக்க விடாமல் பிடித்துக்கொண்டவன், அவள் கழுத்தில் இருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, தன் கையை கீழே இறக்கி அவள் மார்பருகில் கொண்டு வந்து, ஒரு நிமிடம் நிறுத்தியவன் ரசிகாவைப் பார்க்க… அவன் பார்வையை கண்டு பயத்தில் ரசிகாவின் கண் மலர்கள் அகல விரிய… அதை ரசித்தவன், தன் கையைச் சிரித்துக்கொண்டே கீழே இறக்கி அவள் இடையில் துளிர்த்த வியர்வையைத் துடைத்தான்.
அவள் இடையில் இருந்த வியர்வையைத் துடைக்கிறேனென்று துண்டோடு தன் கையையும் சேர்த்து அவள் இடையில் இருந்த வியர்வையை அழுத்தமாகத் துடைக்க…
பயத்தில் சில்லென்றிருந்த அவள் இடையில் அவன் சூடான விரல்கள் உரசவும், ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டாள். கழுத்து குழி உள்ளிழுக்க… மூச்சைப் பிடித்துக்கொண்டு ரசிகா அவனைப் பார்க்க… “இதுவும் அத்துமீறுவதா?” என்றவன், அவளைப் பிடித்திருந்த கையை விடுவித்து, மற்றொரு கையால் அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு இழுத்து நிறுத்த… அவன் இழுத்த வேகத்தில் ரசிகா அவன் மார்பில் மோதி நின்றாள். அவள் கைகள் அவன் மார்பில் மையலிட்டு இருக்க…
அதை குனிந்து பார்த்தவன், அவள் கையைத் தன் விழிகளில் சுட்டிக்காட்டி, “இது அத்துமீறுறது இல்லையா?” என்றான்.
அவன் சொன்னதும் சட்டென்று தன் கையை அவன் மீது இருந்து எடுத்தவள், அவனிடமிருந்து விலகி நின்று, “நான் போகணும்” என்றாள் அழுதுவிடுவதுபோல…
“போங்க…” என்றான்.
“எப்படி? நீங்க இப்படி நின்னா நான் எப்படிப் போறது?” என்று அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கக் கேட்டாள்.
அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அர்ஜுனை ஏதோ செய்ய… அவளை விட்டு சட்டென்று விலகி நின்றவன்,
“என்னை பார்த்து ஏன் இவ்ளோ பயப்படுறீங்க? என்னைப் பார்த்தாலே முகத்தை ஏன் இப்படித் திருப்பிக்கிறீங்க? நான் அப்படி என்ன செய்தேன்?” என்று கேட்கத் துடித்த கேள்விகளைக் கடினப்பட்டு மறைத்துக்கொண்டவன்,
“போங்க…” என்று கை நீட்டி வாசலைக் காட்டினான்.
அவன் முகத்தைப் பார்த்த ரசிகாவிற்கு அவனிடம் அதற்கு மேல் பேசத் துணிவு இல்லாமல், வேகமாகத் திரும்பி அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள்.
அவள் வேகமாகத் திரும்புகையில், அவள் ஈரக்கூந்தலில் இருந்து நீர் துளிகள் அவன் மார்பில் சிதற… அவள் கூந்தல் முடி அவன் முகத்தைத் தொட்டு உரசிக்கொண்டு செல்ல… அர்ஜுனின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்வதை உணர்ந்தவன், கண்கள் மூடி அதை விரும்பி அனுபவித்துக்கொண்டு அப்படியே நின்றுவிட்டான்.
இங்கே, ‘விட்டை போதும்’ என்று தன் சேலையை லேசாகக் கைகளில் உயர்த்திப் பிடித்து, கொலுசொலி ரீங்காரமிட… புள்ளிமான் போல வேகமெடுத்துக் கீழே இறங்கியவள், வழியில் யார் மீதோ மோதிவிட… அது யார் என்று கூட கவனிக்கும் நிலையில் இல்லாமல், வேகமாகத் தன் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள் ரசிகா.
இங்கே ரசிகாவிடம் இருந்து காபி ட்ரேயை வாங்கி வந்த வீரா தன் அறைக்குள் வந்து கதவைச் சுற்றிவிட்டு உள்ளே வந்தவன், காபியை மேஜையில் வைத்துவிட்டு, கட்டிலில் முகம் வரைக்கும் போர்த்திக்கொண்டு படுத்திருந்தவளின் போர்வையை விளக்கிப் பார்த்தான்.
முகம் இருந்த இடத்தில் பூவிழியின் பாதங்கள் இருந்தது. அதைப் பார்த்ததும், ‘ஒரு நாள் அச்சம் போடும் பொண்ணு மாதிரி நடந்திருக்காளே இவள்’ என்று நினைத்துக்கொண்டவன்… போர்த்தியிருந்த போர்வையை முழுவதும் எடுத்துவிட்டுப் பூவிழியைப் பார்க்க…
சேலை அணியாமல் இரவு அவன் எப்படி அவளை மெத்தையில் படுக்க வைத்தானோ, அதேபோல இன்ஸ்கர்ட்டும், பிளவுசும் அணிந்து, விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தவள், தன் இடது கையை நெற்றியில் வைத்து, வலது கையை மார்பிற்கு குறுக்கே கொடுத்து, உறங்கிவிட்டது போலப் படுத்திருந்தாள்.
‘நான் பார்க்கக் கூடாதாம்… அதான் இப்படி முகத்தையும்…ம்ம்.. மறைச்சு வெச்சுட்டுத் தூங்குறா’ என்று நினைத்தவன், ‘எப்படியும் இதெல்லாம் நான் பார்க்கத் தானே’ என்று சிரித்துக்கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.
சீராக மூச்சுவிட்டுக்கொண்டு தூங்கும் பூவிழியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவன், அவள் நெற்றியில் இருந்த கையை எடுத்துத் தன் உள்ளங்கைக்குள் வைத்து வருடிக்கொடுத்தவன், குனிந்து அவள் கையில் முத்தம் வைக்க… அவன் மீசை முடி அவள் உள்ளங்கையில் குறுகுறுப்பை ஏற்படுத்தவும், தன்னிச்சையாகத் தன் கையை அவன் கைக்குள் இருந்து பிரித்துக்கொண்டாள்.
அவள் செய்கையில் சிரித்தவன், அருகில் இருந்த டிராயரைத் திறந்து, அதில் இருந்த மார்க்கரை எடுத்து, பளிச்சென்று அவன் கண்களுக்குத் தெரிந்த அவள் இடையில் குனிந்து, லேசாக அந்த மார்க்கரை வைத்துக் கிறுக்கினான்.
கோசத்தில் நெளிந்த பூவிழி தூக்கத்தில் தன் மார்பில் இருந்த கையை எடுத்து வயிற்றில் தடவினாள்.
அவள் கையை விலகியதும், வீராவின் கண்கள் தானாக அவள் வயிற்றில் இருந்து மேல் நோக்கிச் சென்றது. ஆனால், பூவிழியோ மார்பில் இருந்த கையை வயிற்றிலும், நெற்றியில் இருந்த கையை மார்பிலும் வைத்திருந்தாள்.
அதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தவன், ‘தூங்கிட்டு இருந்தாலும் அலெர்ட்டா தான் இருக்கா என் ரோஸ் மில்க்’ என்று சிரித்தவன்…
மேலே அவள் அருகில் வந்து அமர்ந்து, கையில் இருந்த மார்க்கரை எடுத்து அவள் முகத்தில் மீசை வரைய ஆரம்பித்தான்.
முதலில் தூக்கத்தில் அதை உணராதவள், பின் முகத்தில் ஏதோ குறுகுறுவென்று ஊர்வதுபோல இருக்க… முகத்தைச் சுழித்துக்கொண்டே கண்களைத் திறந்தவள், தனக்கு எதிரே குனிந்து தீவிரமாக முகத்தை வடித்தது கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தான்.
தூக்கக் கலக்கத்தில் கண் விழித்த பூவிழி, “டேய் மச்சி… என்னடா பண்ணிட்டு இருக்க? அதுவும் இவ்வளவு காலையில எழுந்து?” என்றாள் தன் கண்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டே…
“என்னது, இவ்வளவு காலையிலயா? ஒய், ரோஸ் மில்க், மணி இப்போ எட்டு ஆகுது. உனக்காகக் கொண்டு வந்து வெச்ச காபி ஆறியே போயிருச்சு… நீ வாழ்க்கையில ஒரு முறையாவது சூரிய உதயத்தைப் பார்த்து இருக்கியாடி?” என்றான்.
“டேய் மச்சி… நான் வந்து பார்த்தாதான் சூரியன் வரப் போறாரா என்ன? அவர் பாட்டுக்கு வந்து அவர் வேலையைச் செய்யப் போறாரு… நான் வழக்கம் போல என் வேலையைச் செய்யப் போறேன்” என்றவள், கட்டிலில் இருந்து எழுந்து தனக்கு அருகில் அமர்ந்திருந்தவனின் மடியில் படுத்து, அவன் காலைக் கட்டிக்கொண்டு கண்மூடி படுத்துக்கொண்டாள்.
பூவிழி இப்படி இவனிடம் சகஜமாகப் பேசியதும், பழகியதும் இருவரும் சண்டை போட்டுப் பிரிவதற்கு முன்பு நடந்தது. இப்போது இவள் முன்பு போல நடந்துகொள்வது அவனுக்கு ஆச்சரியமாக இருக்க… சிரித்துக்கொண்டே அவள் முதுகில் அந்தக் கருப்பு மார்க்கர் கொண்டு அழகாக இரு ரோஜா வரைந்துகொண்டே அவளிடம், “ஆமாம்டி என் ரோசு… நீ சொல்றதும் சரிதான். நீ என்னவோ எழுந்து அப்படியே வேலை பார்க்குறவ மாதிரி நான் உன்கிட்டப் போய் கேள்வி கேட்டேன் பாரு” என்று சொன்னவன், அவள் முதுகில் வரைந்துகொண்டு இருக்க… “டேய்… லூசு, என்னடா பண்ணிட்டு இருக்க?” என்று நெளிய…
அவன் மடியில் படுத்துக்கொண்டு பூவிழி நெளியவும், வரைந்துகொண்டிருந்த மார்க்கரை அப்படியே விட்டுவிட்டு, பூவிழியின் தோளைப் பிடித்துக்கொண்டு அவளைத் தன் மடியில் இருந்து விளக்க… “டேய், கொஞ்ச நேரம் ப்ளீஸ். இப்படியே தூங்குறேனே. இப்படித் தூங்க நல்ல இருக்கு” என்று அவன் மடியில் மீண்டும் பூவிழி படுத்துக்கொள்ள…
“இன்னும் கொஞ்ச நேரம் நீ இப்படியே தூங்கினா, அவன் எழுந்திருச்சுருவான்டி…” என்றான்.
“என்னடா சொல்ற? எனக்குப் புரியலையே?” என்று கண்மூடி இருந்தவள், நிமிர்ந்து அவனைப் பார்க்க…
“நான் சொன்னது உனக்குப் புரியாது. ஆனா இதை இப்போ படிச்சிட்டு இருந்தவர்களுக்குப் புரிஞ்சிருக்கும்” என்றான்.
‘என்ன?’ என்று புரியாமல் அவன் மடியில் இருந்து தூக்கம் களைந்து எழுந்தவளுக்கு, அப்போதுதான் புரிந்தது. தனக்கும், அவனுக்கும் இப்போது திருமணம் ஆகிவிட்டது என்று.
சட்டென்று அவனைப் பார்த்தவள், அதே வேகத்தில் அவன் பார்வை சென்ற திசையைக் குனிந்து பார்த்துவிட்டு, தன் கைகளைக் கொண்டு மறைத்துக்கொண்டவள், “டேய் ராஸ்கல், அங்க என்னடா பார்வை? உன்னை யாரு என் பக்கத்துல வர சொன்னது?” என்று கோபமாகக் கட்டிலில் இருந்து எழுந்தவள், அங்கே இருந்த போர்வையை எடுத்துத் தன்னை மறைத்துக்கொண்டவள், அவனை முறைக்க…
“ஏன்? நான் பார்க்கக் கூடாதா? நீ காட்டின நான் பார்த்தேன். அவ்ளோதான்” என்று தோளைக் குலுக்கினான்.
ஏகத்துக்கும் அவனை முறைத்தவள், “இந்த வீட்டில் எனக்கு நிம்மதியாகத் தூங்கக்கூட முடியலை… ச்சே…” என்று புலம்பியவள், திரும்பிப் போர்வையை இழுத்துக்கொண்டே நடக்கப் போக… அதைக் கவனித்த அர்ஜுன், தரையில் உரசிக்கொண்டு சென்ற போர்வையைப் பார்த்தவன், சிரித்துக்கொண்டே வேகமாக அந்தப் போர்வையின் மீது லேசாகக் குதித்துத் தன் கால்கள் இரண்டையும் வைக்க…
அவன் மிதித்ததில், போர்வை தடுக்கி தரையில் ‘பொத்தென’ விழுந்தாள் பூவிழி. விழுந்ததும் அவள் நெற்றியில் பலமாக அடித்துவிட… “அம்மா” என்று அலறிக்கொண்டே திரும்பி வீராவைப் பார்க்க…
அவனோ அவள் சிவந்த நெற்றியையும், முகத்தில் அவளுக்கு வரைந்துவிட்ட மீசையையும் பார்த்தவன், சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்தான்.
அதைப் பார்த்ததும் பூவிழிக்கு ஆத்திரமாக வந்தது. “யூ… யூ… ராஸ்கல்” என்று திட்டிக்கொண்டே அவனைப் பார்த்தவள், வீரா நின்று இருந்த போர்வையை வேகமாகப் பிடித்து இழுக்க… அவள் இழுத்த வேகத்தில் வீரா, பூவிழி மீதே ‘பொத்தென்று’ விழப்போனான்.
அதிர்ச்சியில் தன் மேல் விழ வருபவனை பூவிழி பார்க்க… அவனோ பூவிழியின் மேல் வேகமாக மோதி விழுந்தவன், அவள் இதழில் வேண்டுமென்றே தன் இதழைப் பொருத்தினான்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில் நம் வீராவைப்போல புத்திசாலி யாரும் இல்லை.
