Home Uncategorizedமோகம் முத்தாடுதே 24

மோகம் முத்தாடுதே 24

by Layas Tamil Novel
406 views

EPISODE 24

ஸ்டேஷனில் திவாகரும் அவன் மனைவியும் ரசிகாவை முறைத்துக்கொண்டு நின்றிருக்க… ரசிகாவோ கூனிக் குறுகிப் போய் அங்கே நின்று இருந்தாள்.

தன் பக்கம் இருக்கும் நியாயத்தை ரசிகா எவ்வளவு எடுத்துக்கூறியும் அவள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் உண்மை என்று அவளுடைய பெற்றோரும் இப்போது நம்பிவிட்டதுதான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரசிகாவை தன் கேபினுக்குள் வரவழைத்து அவளிடம் தவறாக நடந்துகொண்ட திவாகர் நல்லவன் போலவும், அவனிடம் அத்துமீறி ரசிகா தான் நடந்துகொண்டதாகவும், அவனைத் தன்னோடு ஹோட்டலுக்கு வரும்படி அழைத்ததாகவும் அவன் கூறியதை போலீசாரும், ரசிகாவின் பெற்றோரும் அப்படியே நம்பிவிட்டனர்.

ரசிகா எவ்வளவோ எடுத்துக்கூறியும் யாரும் அவள் பேச்சைக் கேட்பதாக இல்லை. போலீசாரிடம் பணத்தை வாரி இறைத்து, திவாகர் மீது ரசிகா புகார் கொடுப்பதற்குள், இவர்களாகவே கேசை ஜோடித்து ரசிகாவின் மீது திசை திருப்பி இருந்தனர்.

இவர்களிடம் தன்னுடைய நிலையை எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் யாரும் நம்ப முடியாமல் போகவே, ரசிகாவிற்கு ஆத்திரமாக வந்தது. நேராக திவாகர் முன்பு வந்து நின்றவள், “இங்க பாருங்க சார், நீங்க என்னோட அப்பா வயசு இருப்பீங்க. தயவுசெய்து நீங்க செஞ்ச குற்றத்தை ஒத்துக்கோங்க. இப்படி அபாண்டமாக என் மேல பழியைப் போட்டு என் வாழ்க்கையே நாசம் பண்ணிடாதீங்க” என்றாள்.

ஆனால், திவாகர், “என்னம்மா? பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்ப இத்தனை பேர் முன்னாடி நல்லவன் மாதிரி நடிக்கிறியா? உன்னை பற்றி எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சின்னு இப்படி நாடகம் ஆடினால், ‘நான் போனா போகுதுன்னு’ இறங்கி வந்து பேசுவேன் என்று நினைத்தாயா? அதுதான் இல்லை. நீதான் என்கிட்ட அத்துமீறப் பார்த்த. அதுக்குச் சாட்சி என் பொண்டாட்டி இங்க நிக்கிறா. அவதான் நீ எப்படி என் சட்டையைப் பிடித்து சோபால தள்ளினதை கண்கூடாகப் பார்த்தா” என்றார்.

திவாகர் சொன்னதைக் கேட்டு மேலும் கோபமடைந்த ரசிகா, அவன் மனைவியிடம் திரும்பி, “என்ன மேடம்? உங்க வீட்டுக்காரர் மேல நான் போலீஸ்ல ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுப்பேன்னு சொல்லிட்டு வந்ததும் அப்படியே ‘கேஸ்’ திசை திருப்பி என் மேல முழுசா திருப்பி விட்டுட்டீங்க அப்படித்தானே?” என்றாள்.

“இங்க பாருமா, உன்கிட்ட பேச எனக்கு எதுவும் கிடையாது. நீ தேவையில்லாமல் என் புருஷன் மேல பழி போடுற வேலையெல்லாம் வெச்சுக்காதே. அவரைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். நீ பண்ண தப்புக்கு என் புருஷன் கெட்ட பெயர் வாங்கணுமா? அதுக்கு நான் ஒரு நாளும் இடம் கொடுக்க மாட்டேன்” என்ற அவர், பின்னால் நின்றிருந்த கான்ஸ்டபிளைப் பார்த்து, “என்ன சார், இந்தப் பொண்ணு பேச வெச்சு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? நான்தான் அவங்க மேல ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுத்திருக்கேன். முதல்ல அரெஸ்ட் பண்ணி இந்தப் பொண்ணை உள்ள போடுங்க. இந்தப் பொண்ணெல்லாம் டாக்டரா இருக்கறதுக்குக் கொஞ்சம் கூட அருகதை இல்லாதவ. இவளோட மெடிக்கல் லைசென்ஸைக் ‘கேன்சல்’ பண்ணச் சொல்லி நான் ஏற்கனவே கவுன்சிலில் முறையிட்டு இருக்கேன்” என்றார் அந்தப் பெண்.

இத்தனை நேரம் ஆத்திரமும், கோபமும் இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு அமைதியாக அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்த ரசிகா… இப்போது தன்னுடைய கனவைச் சிதைப்பதாக முடிவு செய்து திவாகரின் மனைவி தன் மேல் மெடிக்கல் கவுன்சிலில் புகார் அளித்திருப்பதாகக் கூறவும், அவளால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“ஏய்ய்ய்….” என்று ஆத்திரம் கொண்டு கத்திய ரசிகா, வேகமாக திவாகர் மனைவியிடம் நெருங்கி வந்தவள், அவள் தலைமுடியைப் பிடித்து ஆட்டி, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் மேல பொய் வழக்கு கொடுப்ப? ‘போனா போகுதுன்னு’ நானும் பேசிக்கிட்டு இருந்தால், நீங்க எல்லாரும் என் பொறுமையைச் சோதித்துப் பார்க்கிறீங்க. நான் இப்படியே பொறுமையாகப் போயிடுவேன், நீங்க சொன்னதுக்கெல்லாம் ‘ஆமாம்’னு தலையாட்டிப் பழியை ஏத்துக்க வேண்டும் என்று நினைத்தீர்களா? அது ஒரு நாளும் நடக்காது” என்று திவாகரின் மனைவியை விடாமல் தலையில் முடியைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தாள் ரசிகா.

அதைப் பார்த்ததும் திவாகர் ரசிகவிடம் வந்து, “என்னம்மா இப்படி பண்ற? முதல்ல என் பொண்டாட்டியை விடு” என்று சொல்லி, அவளிடம் இருந்து அவர் திவாகர் மனைவியைப் பிரிக்க முயல…

“வாடா பெரிய மனுஷா. இது எல்லாத்துக்கும் முக்கிய காரணம் நீதானே? உன்னோட சபல புத்திக்கு என்னைப் பலியாக்க நினைச்சுட்டு, அது நடக்கலைனதும் என்மேல நான் போலீஸ் ‘கேஸ்’ கொடுத்துவிடுவேன் என்று சொன்னதும், நீயும் உன் பொண்டாட்டியும் சேர்ந்து அப்படியே ‘கேஸை’ என் பக்கம் திருப்பி விட்டுட்டீங்க அப்படித்தானே?” என்றவள், திவாகர் மனைவியை விட்டுவிட்டு, திவாகரின் சட்டையைப் பிடித்து அவனை உலுக்கி கேள்வி கேட்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத திவாகர், சட்டையைப் பிடித்திருந்த ரசிகாவின் கையை வேகமாக விலக்கிவிட்டவன், “பார்த்தீங்களா? என்னம்மா உங்க கண்ணு முன்னாடியே இந்தப் பொண்ணு என்னையும் என் பொண்டாட்டியும் அடிக்குது? வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களா? முதல்ல இவளைப் பிடித்து உள்ள போடுங்க” என்று கத்தினான்.

இங்கு நடக்கும் இத்தனைக்கும் பார்த்துக் கொண்டிருந்த துறையும், அவர் மனைவியும் ரசிகாவைத் தடுக்கவோ, அவளுக்கு ஆதரவாகவோ அவள் அருகில் நிற்கவில்லை. மாறாக, அவள் செய்வது எல்லாம் பார்த்துக் கொண்டு வெறுமனே நின்றிருந்தனர் இருவரும்.

கான்ஸ்டபிள் வேகமாக வந்து ரசிகாவைப் பிடித்துப் பின்னால் இழுத்துக்கொள்ள… ரசிகாவின் பெற்றோரோ அவளிடம் வந்தவர்கள், “இப்படி ஒரு கேவலமான காரியத்தை நீ செய்வேன்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. உனக்கு எப்படி இந்த மாதிரிப் புத்தி வந்துச்சு? உன்னை நாங்க அப்படி வளர்க்கவே இல்லையே” என்றார் ரசிகாவின் அம்மா.

அவள் பதில் பேச முடியாமல் கண்களில் கண்ணீரோடு நின்று இருக்க… “ஏன் ரசிகா? ஏன் இப்படி எல்லாம் கீழ்த்தரமாக நடந்துக்கிற? உனக்கு எதுல நாங்க குறை வெச்சோம்? உனக்குப் பிடிச்சது எல்லாம் ஒரே பொண்ணுன்னு பார்த்து நாங்க செஞ்சோமே! உனக்கு ஏன் இந்த மாதிரிப் புத்தி போச்சு?” என்று அவரும் நம்பாமல் பேச…

“அப்பா, அம்மா… நீங்க ரெண்டு பேருமே இவங்க சொல்றதை நம்புறீங்களா? உங்களுக்கு என் மேல அப்போ நம்பிக்கை இல்லையா? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? உங்க பொண்ணு மேல மத்தவங்க பழி போடுறதைப் பார்த்துட்டு அவங்க கூட எனக்காகப் பரிந்து பேசுவீங்கன்னு பார்த்தா… அவங்களோடு சேர்ந்து என்னையும் இப்போ நீங்க கேள்வி கேட்கிறதுதான் என்னால் தாங்கிக்கவே முடியல” என்று சொல்லி அழுதாள் ரசிகா.

“அவங்க சொன்னதை எல்லாம் கேட்டு நாங்க ரெண்டு பேரும் அப்படியே நம்பிடுவோம்னு நினைத்தாயா? ஆனா, எப்போ அவங்க ஆதாரத்தோட எங்ககிட்ட உன்னைப் பற்றிச் சொன்னாங்களோ… இதுக்கு மேல இதை எங்களால் எப்படி நம்பாமல் இருக்க முடியும் ரசிகா? நீயே சொல்லு. இந்தப் போட்டோவைப் பாரு. நீ எவ்வளவு கீழ்த்தரமாக இவர்கிட்ட நடந்து இருக்க” என்று ரசிகா திவாகர் மேல் விழுந்திருப்பது போல போட்டோ அதில் இருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்தவள்…

“அப்பா, இந்தப் போட்டோல இருக்கிறதை அப்படியே நம்புறீங்களா? அது பொய் பா. என்னை நம்புங்க” என்றாள் ரசிகா.

“பேசாதே ரசிகா, வாயை மூடு. இது… இதுக்கு மேல நீ பேசறது எல்லாம் கேட்டுட்டு எங்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்றவர் நேராக திவாகரிடம் வந்து, “சார், எங்க பொண்ணை தயவுசெய்து மன்னித்து விட்டுடுங்க. என் பொண்ணு மேல அவள் மேல ‘கேஸ்’ போட்டு அவள் வாழ்க்கையே கெடுத்துடாதீங்க.

“அவ செய்த செயலுக்காக நானும் என் மனைவியும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறோம். என் பொண்ணு மேல கொடுத்த ‘கேஸை’ ‘வாபஸ்’ வாங்கிடுங்க. இனிமேல் அவ உங்க ஹாஸ்பிடல் பக்கம் மட்டும் இல்ல, வேற எங்கேயுமே போக மாட்டா. அதுக்கு நாங்க பொறுப்பு. அவள் மேல நீங்க மெடிக்கல் கவுன்சிலில் கொடுத்த புகாரை எப்போ விசாரிக்கக் கூப்பிடுறாங்களோ, அப்போ நாங்க எந்தப் பிரச்சினையும் பண்ணாம வந்து, உண்மை சொல்லி மன்னிப்பு கேட்கிறோம். தயவுசெய்து எங்க பொண்ணை இத்தோட விட்டுடுங்க” என்று கைகூப்பி அவர்கள் இருவரிடமும் கெஞ்சினார் துரை.

இதை சற்றும் எதிர்பாராத ரசிகா, தன்னை பிடித்திருந்த கான்ஸ்டபிள்கள் கையை உதறிவிட்டு, அவள் அப்பாவின் முன்பு வந்தவள், “அப்பா!” எனக் கோபம் கொண்டு அழைத்தவள், “இப்படி என்னை அவமானப்படுத்துவதற்குப் பேசாமல் விஷம் வாங்கிக் கொடுத்து என்னைக் கொன்னுடுங்க. நான் நிம்மதியாகச் செத்துப் போயிடுறேன்” என்று அழுதாள்.

“சும்மா இருடி. உனக்கு எதுவும் தெரியாது” என்று அவளை ரசிகாவின் அம்மா அடர்த்திவிட்டு, திவாகர் மனைவியிடம் திரும்பி, “என் பொண்ணு செஞ்ச தப்புக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன். தயவுசெய்து அவள் மேல இருந்து ‘கேஸை’ ‘வாபஸ்’ வாங்கிடுங்க” என்றார்.

அவர் ரசிகாவின் குடும்பமே அவள் தன் முன்பு கெஞ்சிக் கொண்டு நிற்பதைப் பார்த்து திவாகரின் மனைவி திமிராக நின்றிருந்தவர், “சரி. நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் கெஞ்சி கேட்டதுனால இவன் மேல இருக்கிற ‘கேஸை’ ‘வாபஸ்’ வாங்கிட்டோம். நாங்க மெடிக்கல் கவுன்சிலிங் பேசி, இவளை இனிமேல் இந்த டாக்டர் தொழில் பக்கமே வர முடியாத மாதிரி செஞ்சுடுவோம். அதுக்கு நீங்க எந்த மறுப்பும் சொல்லாம வந்து அங்கே ஒப்புதல் அளிக்கணும்” என்றார். அவர் சொன்னதுக்கு இவர்களும் ‘சரி’ என்று சம்மதம் தெரிவித்த பின்பு, ரசிகாவின் மேலிருந்து ‘கேஸை’ திவாகரும், அவன் மனைவியும் ‘வாபஸ்’ வாங்கிவிட, ரசிகாவை ஸ்டேஷனிலிருந்து அழைத்துக்கொண்டு துரையும், அவர் மனைவியும் கிளம்பினர்.

வீட்டிற்கு ஆட்டோவில் மூவரும் வந்து இறங்கியவர்கள், வாசல் கதவைத் திறந்துகொண்டு ரசிகாவின் பெற்றோர் உள்ளே செல்ல… ஆனால் ரசிகா வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நின்றிருந்தாள்.

அவளை வாசலில் நின்று திரும்பிப் பார்த்த இருவரும், “ஏன் இன்னும் எதுக்குடி அங்கே நின்னுட்டு இருக்க? எல்லாரும் வந்து உன்னைப் பார்த்து எங்க மானத்தை வாங்கணுமா? ஒழுங்காக உள்ள வந்துடு. போதும் நீ வேலைக்குப் போய்க் கிழிச்சது எல்லாம். இப்படி எங்க பேரைச் சந்தி சிரிக்க வெச்சுட்டியே! உன்னை எல்லாம் ஏன்டா இந்த வயித்துல பெத்தேனோ?” என்று ரசிகாவின் அம்மா தன் வயிற்றில் அடித்துக்கொண்டு புலம்பியவர்… வாசலில் நின்று இருந்த ரசிகாவின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் செல்லப் போக…

அவர் கையை உதறிய ரசிகா, “என் மேல நம்பிக்கை இல்லாதவங்க கூட நான் இருக்க விரும்பல. நான் இனிமேல் இந்த வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன். கலங்கத்தைத் துடைச்சிட்டு அதுக்கப்புறம் உங்களை வந்து பார்க்கிறேன். அதுவரைக்கும் நீங்க யாரோ நான் யாரும். என்னை தேடி எங்கேயும் வராதீங்க” என்று சொன்னவள், அவர்கள் இருவரையும் திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured