EPISODE 81
கனகாவும், செண்பகமும் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகலாம் என்று விசாலாட்சியைத் தங்களுடன் அழைக்க…
“நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க…. நான் இன்னொரு நாள் வரேன்…” என்று விசாலாட்சி அவர்களிடம் கூற.
“ஏன் அண்ணி நீங்க வீட்ல சும்மா தானே இருக்கீங்க? கொஞ்ச நேரம் தானே வாங்க,” என்று கனகா அவர் கை பிடித்து இழுக்க…
அப்போது இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வந்த விக்கியும், கதிரும் அவர்கள் அருகில் வந்தவர்கள்.
“அத்தை நீங்க இப்போ என்ன சொல்லி கூப்பிட்டாலும் என் அம்மா உங்க கூட வர மாட்டாங்க,” என்று கதிர் சொல்ல.
“ஏன்டா கதிர்?” என்று கனகா அவனிடம் கேட்க.
“அது ஒண்ணுமில்லை கனகா அம்மா… நாங்க ரெண்டு பேரும் இப்போ நேர ஏர்போர்ட்டுக்குத் தான் போறோம். அப்பாவை கூப்பிட அவர் டென்மார்க்கில் இருந்து இன்னைக்குத் தானே வராங்க…” என்ற விக்கி.
“அவர் வரும்போது வீட்ல இருக்கணுமில்லையா… அதனால் தான் உங்க கூட வரலைன்னு சொல்லிட்டு இருக்காங்க,” என்று விக்கி சொல்ல.
விசாலாட்சியைத் திரும்பி கனகாவும், செண்பகமும் ஆச்சர்யமாகப் பார்க்க…. அவர்கள் அப்படிப் பார்த்தது விசாலாட்சிக்கு வெட்கம் வந்துவிட்டது.
அதை மறைக்க எண்ணி அவர் திரும்பிக்கொள்ள… விக்கியும் கதிரும் விசாலாட்சியைப் பார்த்து “இந்த வயதிலும் வெட்கப்படுகிறார்,” என்று சொல்லி கிண்டல் செய்ய… அவர்கள் இருவரையும் எப்படிச் சமாதானம் செய்வது என்று தெரியாமல் விசாலாட்சி கிட்செனிற்குள் சென்று விட்டார்.
செண்பகம் கனகாவிடம் “அப்போ அண்ணி இன்னைக்கு நம்ம கூடக் கோவில் வர மாட்டாங்க. சரி வா… நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்,” என்று கிளம்ப….
அப்போது கதிர், “எங்க கூடவே வாங்க. நாங்க அப்பாவை பிக்கப் பண்ண ஏர்போர்ட்டுக்குத் தான் போறோம். இன்னும் டைம் இருக்கு எங்களுக்கு,” என்று சொல்லித் தங்களுடன் அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றான்.
எப்போதும் அவர்கள் வழக்கமாகச் செல்லும் கோவிலுக்குச் சென்று இருவரையும் இறக்கி விட்டு கதிரும் விக்கியும் செல்லப் போக…
செண்பகம் “இவ்வளவு தூரம் எங்க கூட வந்தீங்களே. உள்ளே வந்து சாமிகும்பிட்டுப் போங்க,” என்று சொல்ல….. “இல்லை அத்தை ஏர்போர்ட்டுக்கு லேட் ஆகிடும். நாங்க இன்னொரு நாள் வரோம்,” என்று கதிர் சொல்ல.
இருவரும் உள்ளே வரவில்லை என்று சொன்னதும் செண்பகத்திற்கு முகம் வாடி விட்டது…. “இதுவே ராதாவோ… துர்காவோ இருந்து இருந்தால் எங்க கூட உள்ளே வந்து நாங்க சொன்னதுக்காகச் சாமிகும்பிட்டுட்டுப் போயிருப்பாங்க,” என்று சொல்ல.
கதிரும் விக்கியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, “நீங்க ரெண்டு பேரும் நடந்து போனால் கால் வலிக்குமேன்னு சொல்லிட்டு கூட வந்து விட்டால்… ராதா கூடவும், லக்ஷு கூடவும் எங்களை வெச்சிப் பேசி இன்சல்ட் பண்ணிட்டீங்க….” என்றவர்கள் “வரோம்…” என்று காரை விட்டு இறங்கி அவர்களுடன் கோவிலுக்குச் சென்றனர்.
செண்பகமும், கனகாவும் மெதுவாக ஒவ்வொரு சன்னதியாக தரிசனம் செய்துவிட்டு வர அதற்குள் விக்கியும், கதிரும் சாமிகும்பிட்டு விட்டுச் செண்பகத்திடமும், கனகாவிடமும் சொல்லிவிட்டு வெளியே கிளம்புவதற்காக வர….
அப்போது தூரத்தில் சங்கவியின் அம்மா கோவிலை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தார். அவரைக் காட்டி கதிர் விக்கியிடம் “அங்கே பாருடா சங்கவியின் அம்மாவை… அவளுக்குப் போய் எப்படி இப்படி ஒரு அம்மா… ரொம்ப நல்ல டைப் இவங்க. ஆனா அந்தச் சங்கவியும், அவ அப்பனும் எப்போடா அடுத்தவனைக் கெடுக்கலாம் அவன் பணத்தை எப்படி ஆட்டையைப் போடலாம் என்று அழையறதுங்க,” என்றான் கதிர்.
“ஆமாம்டா… நாம பூமிகா. விஷால். கல்யாணத்துக்குப் போயிருந்த அப்போ கூட இவங்களைப் பார்த்தேன். எவ்வளவு நல்லாப் பேசிப் பழகுறாங்க தெரியுமா? ஆதிக்கும், சங்கவிக்கும் கல்யாணம் நின்னு போன அப்போ கூட இவங்க ஆதியை நினைச்சுச் சந்தோஷம் தான் பட்டாங்க. சொந்தப் பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆகிருச்சுன்னு வருத்தப்பட்டதைவிட… நம்ம ஆதியைப் இப்படி பண்ணிட்டாங்கன்னு தான் ரொம்ப ஆதங்கப்பட்டாங்கடா..” என்றான் விக்கி.
இருவரும் சிவகாமி வருவதைப் பார்த்து பேசிக்கொண்டே காரில் ஏறிச் செல்ல… காரைத் தாண்டி வந்து கொண்டு இருந்த சிவகாமி நடந்து கொண்டு இருக்கையில் திடீர் என்று மயக்கம் போட்டுத் தரையில் விழ…
காரில் கதிருடன் பேசிக்கொண்டே காரை ஓட்டிய விக்கி… ஏதேச்சையாகக் காரின் சைடு மிரரில் பார்க்க… சிவகாமி கீழே விழுவதைப் பார்த்துவிட்டு காரைச் சடன் பிரேக் போட்டுவிட்டு நின்றவன். காரை விட்டு வேகமாக இறங்கி அவரிடம் ஓட…
கதிருக்கு என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் விக்கி அவரிடம் ஓடிவிட்டான். சரியாகக் கோவிலில் இருந்து வெளியே வந்த செண்பகமும் இதைப் பார்த்துவிட கனகாவிடம் சிவகாமி விழுந்த இடத்தைக் காட்டி அவரையும் அழைத்துக் கொண்டு வேகமாக அவர் அருகில் ஓட அதற்குள் விக்கி வந்து சிவகாமியைத் தன் மடியில் தூக்கி வைத்து அவர் முகத்தைத் தட்ட சிவகாமி எழுந்திருக்கவில்லை.
அதற்குள் கதிர் காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து கனகாவிடம் கொடுக்க… அவர் அத்தை வாங்கித் தண்ணீரை எடுத்துச் சிவகாமியின் முகத்தில் தெளிக்க…
முகத்தில் தண்ணீர் சில்லென்று படவும் மயக்கத்தில் இருந்த சிவகாமி லேசாகக் கண்கள் திறந்து பார்க்க… கண் விழித்ததும் அவர் கண்களுக்கு முதலில் மங்கலாகப் பின் தெளிவாகத் தெரிந்தான் விக்கி.
அவனைப் பார்த்ததும் “தம்பி… நீங்க…” என்று சொல்லிக்கொண்டே எழுந்தவரை கைத்தாங்கலாகப் பிடித்து நிறுத்திய விக்கி… “அதுக்குள்ள என்னைப் மறந்துட்டீங்களா ஆண்ட்டி?” என்றான் விக்கி.
செண்பகமும், கனகாவும் கைத்தாங்கலாகக் கோவில் படியில் சிவகாமியை அமர வைக்க… விக்கியைப் பார்த்துவிட்டு “இல்லை தம்பி திடீர்னுப் பார்த்ததும் ஒண்ணும் புரியலை,” என்றார் சிவகாமி.
“பரவாயில்லை ஆண்ட்டி… என்ன ஆச்சு திடீர்னு மயங்கிட்டிங்க? உடம்பு எதுவும் சரி இல்லையா? ஹாஸ்பிடல் எதுவும் போலாமா? நல்லா இருக்கீங்களா?” என்று விக்கி கேட்க.
“இல்லைப்பா… நான் காலையில் இருந்து சாப்பிடலை. அதனால் தான் மயங்கிட்டேன். உடம்புக்கு எல்லாம் ஒன்றும் இல்லை,” என்று சற்று டைர்டாகவே பேசினார்.
“என்ன அக்கா சொல்றீங்க? காலையில் இருந்து சாப்பிடலையா….” என்றார் கனகா வருத்தமாக.
“ஆமாம் கனகா…. என் காணாமல் போன பையனை என்கிட்டே எப்படியாவது கொண்டு வந்து சேர்த்துற சொல்லி நான் சாமிகிட்ட வேண்டி காலையில் இருந்து விரதம் கனகா… கோவிலுக்கு வந்து சாமிகும்பிட்டு விரதம் முடிக்கலாம்னு வந்தேன் அதுக்குள்ள இப்படி மயங்கிட்டேன்,” என்றார் சிவகாமி.
அவர் சொன்னதை எல்லாம் கேட்ட… கதிரும் விக்கியும் அவரைப் பார்த்து வருத்தப்பட்டனர்..
“ஆண்ட்டி வாங்க நாம ஒரு தரம் ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்,” என்று சொல்லிச் சிவகாமியை அழைக்க “வேணாம் தம்பி…. ஹாஸ்பிடல் போனால் எப்படியும் அவருக்குத் தெரிஞ்சிடும். அப்புறம் நான் விரதம் இருந்ததும் தெரிஞ்சிடும். என்னைத் தான் திட்டுவார்,” என்று பயந்தார்.
“இப்போ எனக்குப் பரவாயில்லை தான். நான் சாமிக்கும்பிட்டுட்டு விரதம் முடிச்சுக்கிறேன்,” என்ற சிவகாமி எழுந்து உள்ளே செல்லப் போக அவருக்கு மீண்டும் தலை சுற்றுவது போல இருக்கவும் சரியாக அவரால் நிற்க கூட முடியவில்லை.
அவர் சரி இல்லை என்பதை உணர்ந்த விக்கி சற்றும் தாமதிக்காமல் அவர் அருகில் வந்தவன் “நீங்க சாமிகும்பிட்ட பிறகு தான் சாப்பிடுங்களா?” என்று கேட்டான். அவரும் ஆம் என்று சொல்ல “விரதம் மட்டும் தான் வெச்சிருக்கீங்களா…. இல்லை வேற எதுவும் வேண்டுதல் இருக்கா?” என்றான் விக்கி.
அவன் கேட்ட விதமே விக்கியைப் பார்த்ததும் தன் மீது உரிமை எடுத்துப் பேசும் அவனைப் பார்த்துச் சிவகாமிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க… “ம்ம்ம்… சொல்லுங்க ஆண்ட்டி. இன்னும் வேண்டுதல் இருக்கா…” என்றான்.
“இல்லை தம்பி. கோவிலை இருபத்திஏழு முறை வலம் வரணும்னு வேண்டிருக்கேன்…” என்று சொல்லவும். அவர் அருகில் நின்று இருந்த செண்பகம் சிவகாமியின் கையைப் பிடித்து “இந்த நிலைமையில் நீ ஒரு நாள் முழுக்க விரதம் இருந்துட்டு கோவிலைச் சுற்றி வர வேற வேண்டி இருக்கே சிவகாமி. கொஞ்சம் உன்மேலயும் அக்கறை வை சிவகாமி…”
“என்னோட பொண்ணும் தான் காணாம போயிட்டா. அவ உயிரோட இருக்காளா இல்லையான்னு.. கூட எனக்குத் தெரியாது. ஆனாலும் அவளை எப்படியும் பார்த்திருவோம்னு நம்பிக்கையில் தான் நான் இப்போ வரை வாழ்ந்துட்டு இருக்கேன். என்னிக்காவது ஒருநாள் அவங்க நம்மளைத் தேடி வர அப்போ நாம நல்லா இருந்தால் தான் அவங்களாலச் சந்தோஷமா இருக்க முடியும்,” என்று தன் ஆதங்கத்தையும் சேர்த்துச் சிவகாமியிடம் செண்பகம் கொட்டி விட…
“நீ சொல்றது புரியுது செண்பகம். இனி நான் இந்த மாதிரி எல்லாம் செய்ய மாட்டேன். இன்னிக்கு வேண்டுதலை மட்டும் நிறைவேற்றிக்கிறேனே,” என்று அவர் பாவமாகக் கேட்க.
“இப்போ என்ன நீங்க உங்க வேண்டுதலை நிறைவேற்றின பிறகு தான் சாப்பிடுவிங்க அப்படிதானே?” என்றான் விக்கி. “ஆமாம் தம்பி…” என்று தயக்கத்துடன் தலையை ஆட்ட…
“சரி வாங்க,” என்று சொல்லிய விக்கி சட்டென்று சிவகாமியைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்றான். அவன் பின்னால் சென்ற கனகா… “டேய் விக்கி என்ன பண்ற…” என்று அவனிடம் ஓட…
“இவங்க எப்படியும் வேண்டுதல் நிறைவேற்றாமச் சாப்பிடப் போறதில்லை. அதனால நான் ஆண்ட்டியைத் தூக்கிட்டு வேண்டுதலை நிறைவேற்றப் போறேன்,” என்று சொல்லித் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
கதிருக்கு விக்கியைப் பார்த்து ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ‘என்ன இவன் இவ்வளவு எமோஷனல் ஆகுறானே…’ என்று யோசித்தவன் ‘ஒரு வேலை கல்யாணம் ஆன பிறகு விக்கி இப்படி ஆகிட்டானோ…’ என்று யோசித்தவன் அமைதியா அவர்கள் வரும்வரை காத்திருந்தான்.
விக்கி இருபத்திஏழு முறை கோவிலைச் சிவகாமியைத் தூக்கிக் கொண்டு வலம் வர சிவகாமிக்கு ஒரு புறம் சங்கடமாக இருந்தாலும் மறுபுறம் தனக்கு இப்படி ஒரு பிள்ளை இருந்திருந்தால் அவன் என்னிடம் இப்படித்தான் நடந்து கொள்வான் என்று நினைத்து மனதைச் சமாதானம் செய்து கொண்டார்.
வேண்டுதல் முடிந்து சாமியைத் தரிசனம் செய்துவிட்டு வந்து சன்னதியில் சிவகாமியை உட்கார வைக்கும் வரை அவரை கீழே இறக்கியே விடவில்லை விக்கி.
அவரைச் சன்னதியில் அமர வைத்தவன் மற்றவர்களை அவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கோவிலை விட்டு வெளியே சென்றவன் சற்று நேரத்தில் கையில் ஜூஸ் உடன் வந்தான்.
சிவகாமி கையில் ஜூஸ்ஸைக் கொடுத்துக் குடிக்கச் சொல்ல… அவர் எதுவும் பேசாமல் வாங்கி மொத்த ஜூஸையும் குடித்துவிட்டுக் கிளாசை அவனிடம் நீட்டினார்.
“சரி உங்களுக்கு இப்போ பரவாயில்லையா…” என்று கேட்டான். “ம்ம்ம்…” என்று தலையை ஆட்டினார்.
“சரிங்க ஆண்ட்டி. நீங்க எப்படி வீட்டுக்குப் போவீங்க?” என்று சொல்ல… “நான் அப்படியே நடந்து….” என்று சொல்ல வர… விக்கியின் முகத்தைப் பார்த்ததும் அவன் என்ன நடந்தா… என்று சொல்ல… “இல்லை இல்லை… தம்பி என் அண்ணன் மகனுக்குப் போன் பண்ணி அவனை வரச் சொல்லி அவன் கூடப் போய்கிறேன்,” என்று சொன்னார்.
“சரி அப்போ இப்பவே கூப்பிடுங்க,” என்று விக்கி சொல்ல… தன் பர்ஸில் இருந்து போனை எடுத்துச் சந்தோஷிற்கு அழைக்க…. அவனுக்கு ரிங் போன அடுத்த நொடி போனை எடுத்த சந்தோஷ்… “சொல்லுங்க அத்தை,” என்றான்.
அவர் பேசுவதற்குள் சிவகாமி கையில் இருந்த போனை வாங்கிய விக்கி… “வீட்டில் வயதானவங்க இருக்க அப்போ இப்படித் தான் பொறுப்பில்லாமல் தனியா வெளியே அனுப்புவீங்களா?” என்று காட்டமாக விக்கி கேட்க.
போனைத் தன் காதில் இருந்து எடுத்துத் தனக்கு வந்த கால் சரியாகத் தான் இருக்கிறதா என்று எடுத்துப் பார்த்துவிட்டுத் திரும்பவும் போனை காதில் வைத்தவன்.
“ஹலோ நீங்க யாரு? என் அத்தை போனில் இருந்து பேசிட்டு இருக்கீங்க?” என்றான் சந்தோஷ் காட்டமாக. “உன் அத்தை மேல அவ்ளோ பாசம் இருந்தால் அவங்களை இப்படித் தனியா விட்டு இருப்பியா?” என்றான் விக்கி.
‘யாருடா இவன் இப்படிப் பேசுகிறான்?’ என்று யோசித்துக் கொண்டே… அவர்கள் இருக்கும் கோவிலுக்குள் வந்த சந்தோஷ்.
“ஹலோ யாருங்க நீங்க… கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம அடுத்தவங்க போன்ல பேசிட்டு இருக்கீங்க,” என்று சொல்ல….
அப்போது சந்தோஷ் பேசும் சத்தம் அருகில் கேட்கவும் விக்கி திரும்பிப் பார்க்க… சந்தோஷும் விக்கியைப் பார்க்கவும் சரியாக இருந்தது.
இருவரது பார்வையும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொள்ள… ஒருவரை ஒருவர் புருவம் சுருக்கிப் பார்த்துக் கொள்ள…
“அடடே… தம்பி நீங்களே வந்துட்டீங்களா…” என்று சொல்லி ஹேமா சந்தோஷின் கையைப் பிடித்துக் கேட்க… “ஆமாம் அத்தை. நல்லா இருக்கீங்களா?” என்றவன் அவரைத் தாண்டித் தூணில் சாய்ந்த படி சிவகாமி சற்று டயர்டாக அமர்ந்து இருக்க… அவரிடம் பதறிக்கொண்டு போன சந்தோஷ்… “அத்தை என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று பதட்டமாகக் கேட்க.
“ஒண்ணுமில்லை ராஜா… லேசா… தலை சுத்தல். அதுதான் அப்படியே சாய்ந்து உட்கார்ந்துட்டேன். அதனால் தான் இந்தத் தம்பி உனக்குப் போன் பண்ணிச்சு,” என்று சொல்ல சந்தோஷ் என்ன ஆச்சு என்று மறுபடியும் கேட்க… சிவகாமி எதுவும் சொல்லாமல் சமாளித்தவர் மற்றவர்களிடமும் சொல்ல வேண்டாம் என்று பார்வையாலேயே கெஞ்ச அனைவரும் எதுவும் சொல்லாமல் விடுவிட்டனர்.
பின் கனகா ஏதோ சொல்லிச் சமாளிக்க… சிவகாமியை கைத்தாங்கலாகப் பிடித்து நிறுத்திய சந்தோஷ் அவரை அழைத்துக்கொண்டு வெளியே போக… அப்போது விக்கி “ஒரு நிமிஷம்,” என்று சொல்லி அவர்கள் அருகில் சென்றவன் தன் கையில் இருந்த சிவகாமியின் போனை சந்தோஷ் கையில் கொடுத்துவிட்டுப் “பத்திரமா கூட்டிட்டுப் போங்க…” என்றான்.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றான் சந்தோஷ். சிவகாமியை அழைத்துக் கொண்டு சென்றான்.
அவர்கள் செல்லும் வரை அமைதியாக இருந்த விக்கி பின் திரும்பி… கதிரிடம் “போகலாமாடா….” என்று கேட்க… “எங்கேடா?” என்றான் கதிர்.
“என்னடா… இப்படி கேட்கிற… அப்பாவை கூப்பிட ஏர்போர்ட்டுக்குப் போகணுமில்ல? ஏற்கனவே லேட் ஆகிருச்சு,” என்றான் விக்கி.
“நீ சிவகாமி ஆண்ட்டியைத் தூக்கிட்டு ‘அம்மா’ என்று அழைக்காத உயிர் இல்லையே…. பாட்டுல வர மாதிரி கோவிலைச் சுத்தும்போதே டிரைவருக்குப் போன் பண்ணி அப்பாவை பிக்கப் பண்ணப் போகச் சொல்லிட்டேன்.”
“நாம என் அத்தைங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்த மாதிரியே கூட்டிட்டுப் போய் விட்ருவோம்,” என்ற கதிர் அனைவரையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
சிவகாமியை அழைத்துக் கொண்டு போய்க் வீட்டில் விட்டுவிட்டு அவருடன் அங்கேயே இருந்துவிட்டான் சந்தோஷ். வேத்தாசலமும் ஊரில் இல்லாததால் தனியாகச் சிவகாமியை விட மனமில்லாமல் இரவு அங்கேயே தங்கி விட்டான் சந்தோஷ்.
மறுநாள் காலை சிவகாமியின் வீட்டில் இருந்தே… கிளம்பிக் காலேஜ் சென்றான்.
இன்று பஸ்ஸில் சந்தோஷ் இல்லாதது கண்டு ராதாவிற்குச் சற்று நிம்மதியாகத் தான் இருந்தது.
பஸ்ஸில் வரும்போது நிலானி கீழே விழுந்ததையும் அவள் அக்காவுடன் இப்போதை இருப்பதாகவும் மட்டும் ராதாவிற்குச் சொல்லி இருந்தாள் கீர்த்திகா.
அவள் எப்படியும் காலேஜ் வருவதற்கு இரண்டு மூன்று மாதம் ஆகிவிடும் என்றாள் கீர்த்திகா. நிலானியின் நிலையை எண்ணி ராதா மிகவும் வருந்தினாள்.
பின் இருவரும் கதை பேசிக்கொண்டே காலேஜ் வந்தனர். நேராக வகுப்பிற்குள் வந்த இருவரும் வர…. ஆஃபீஸ் ரூமில் இருந்து ராதா உன்னை ஸ்டாப் ரூம் வரச் சொன்னாங்க என்று சொல்லிவிட்டுப் பியூன் சென்றுவிட.
கீர்த்திகாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஸ்டாப் ரூம் சென்றாள் ராதா… உள்ளே யார் இருக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தவளுக்கு அங்கே அனைத்து ஸ்டாஃப்களுக்கும் மத்தியில் சந்தோஷ் அமர்ந்து இருக்க… அவனைப் பார்த்தது ‘ஐயோ… இவன் இன்னைக்குக் காலேஜ் வந்திருக்கானா?’ என்று அதிர்ச்சியானவள் அப்படியே நிற்க…
அப்போது அங்கு அமர்ந்து இருந்த வேறு ஒரு ஸ்டாப் “என்னம்மா… வேணும்?” என்று கேட்டார். அவர் பேசுவதைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த சந்தோஷ் “நான் தான் வரச் சொன்னேன்,” என்று சொன்னவன். “வந்து வெளியே நிற்பதற்க்கா உன்னை கூப்பிட்டாங்க? உள்ளே வா,” என்றான் கடுப்பாக.
அவனை முறைத்துக் கொண்டே வந்த ராதா… “சொல்லுங்க சார்… எதுக்கு கூப்பிட்டீங்க என்னை?” என்றாள்.
அவள் பேசிய தோரணையைப் பார்த்துவிட்டு “ம்ம்ம்… உன்னை நிக்க வெச்சு அழகு பார்க்கத் தான் கூப்பிட்டாங்க…” என்றான்.
சந்தோஷ் அப்படிப் பேசவும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தவள் அப்படியே நிற்க…
“என்ன அப்படியே மரம் மாதிரி நிக்குறே?” என்றவன் அவள் அருகில் நின்று இருந்த கீர்த்திகாவைப் பார்த்து… “அந்தக் காபோர்ட்டைத் திறந்து அதில் ஒரு வெள்ளை நிற ஃபைல் இருக்கும். அதை எடுத்துட்டு வாங்க,” என்றான்.
கீர்த்திகா சென்று அவன் சொன்ன ஃபைலை எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் கொடுக்க… அதை வாங்கியவன் அதில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து ராதாவிடம் நீட்டியவன் “நீ தான் உங்க கிளாஸில் நல்லா படிக்கிற பொண்ணுன்னு கேள்விப்பட்டேன். இந்தா. இதில் இருக்கிற விபரங்களை எல்லாம் படிச்சுக்கோ…”
“அடுத்த வாரம் நம்ம காலேஜின் ஆண்டுவிழா வரப் போகிறது. அதில் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி என்று நிறைய இருக்கிறது. இந்த ஆண்டு நம்ம டிபார்ட்மென்டில் யார் யார் இதில் பார்ட்டிசிபேட் பண்றங்கனு கேட்டுக் லிஸ்ட் ரெடி பண்ணிக்கோ. புரோக்ராம் நடக்குற அன்னைக்கு நீ தான் ஹோஸ்ட் பண்ணனும் சரியா… அதுக்குத் தகுந்து ப்ரிப்பேர் பண்ணிக்கோ. சரியா?” என்றவன் “சரி நீ கிளம்பலாம்,” என்று தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
‘வரச் சொன்னான் கையில் பேப்பர் கொடுத்தான் இதைச் செய் அதைச் செய்ன்னு சொன்னான் என்னைப் போகச் சொல்லிட்டு வேலையைப் பார்க்கிறான்’ என்று அவனையே பார்க்க….
ராதாவும் கீர்த்திகாவும் இன்னும் போகாமல் அங்கேயே நிற்க… அவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்த்துவிட்டு ராதாவைப் பார்த்து “என்ன இன்னும் இங்கேயே நிக்குறே… வேற எதுவும் வேண்டுமா?” என்று சொல்லி அவள் இடையைப் பார்க்க…
அவன் பார்வை சென்ற திசையைக் கவனித்த ராதா…. அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தவள் கோபத்துடன் அவனைப் பார்த்து “ராஸ்கல்,” என்று முனகியவள் “வாடி போலாம்,” என்று சொல்லி கீர்த்திகாவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.
தன்னை ராஸ்கல் என்று திட்டிவிட்டுச் செல்லும் ராதாவைப் பார்த்தவன். ‘எந்தப் பெண்ணையும் கண்களைத் தவிர வேறு எங்கேயும் தவறாகப் பார்த்துப் பேசும் குணம் இல்லாதவன் நான். ஆனால் உன்கிட்ட மட்டும் ஏன் எனக்கு அத்துமீறத் தோணுது… என்னைப் பார்த்து யாராவது ஒரு வார்த்தை பேசினாலும் அவர்களுடன் சண்டை போடும் எனக்கு.. இவள் என்னை எவ்வளவு பேசினாலும் ரசிக்கத் தானே தோணுது,’ என்று நினைத்துச் சிரித்துக்கொண்டான்.
அவன் கொடுத்த பேப்பரை வரும்வழியில் கீர்த்திகாவும் ராதாவும் பார்த்துக் கொண்டு வந்தவர்கள் கிளாசிற்கு வந்ததும் அடுத்த வாரம் நடக்க இருக்கும் கல்லூரி ஆண்டு விழாவில் நடக்கும் போட்டிகளை எல்லாம் சொன்னவள் யாருக்கெல்லாம் இதில் பங்கு கொள்ள விருப்பமோ அவர்கள் வந்து போட்டிக்கு இன்னும் இரண்டு தினங்களில் பெயர் கொடுக்கச் சொல்லிவிட்டுத் தன் பெஞ்சில் போய்ப் அமர்ந்து கொள்ள.
இப்போது வந்தவளை அழைத்து “இவ்வளவு பெரிய பொறுப்பை அந்த சார் கொடுத்துட்டாரு. கிளாஸில் வேறு யாருமே இல்லையா? இவளுக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்காரு அந்த சார்.”
“அப்படி என்ன இவளுக்கு எங்களை விடத் திறமை இருக்கிறது என்று வந்த கொஞ்ச நாளிலேயே அவளுக்கு இந்தப் பொறுப்பை எல்லாம் கொடுத்திருக்கிறார்?” என்று சந்தோஷை கிளாஸில் இருந்த ஒரு பெண் பேச…
அப்போது உள்ளே வந்த சந்தோஷ் “கரெக்டா தான் சொன்னீங்க மிஸ்…” என்று அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசிக்கொண்டே வந்தவன் “உங்க பேர் என்ன?” என்று கேட்டான்.
“என் பேரு மாலா…” என்றாள் அந்தப் பெண் பயந்து கொண்டே.
“சரி மிஸ் மாலா. நீங்க சொன்ன மாதிரியே மிஸ் ராதாவின் திறமையை வெளிப்படுத்தி விட்டு அவர் இந்தக் கிளாஸில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளட்டும். இதில் உங்களுக்குச் சம்மதமா மிஸ் மாலா…” என்று சொல்ல முதலில் தயங்கிய அந்தப் பெண் “ஓகே சார் எனக்குச் சம்மதம்,” என்று சொன்னாள்.
உடனே மாலாவையும், ராதாவையும் வரச் சொன்னவன் ராதாவின் கையில் இருந்த பேப்பரை வாங்கி மாலாவிடம் நீட்டி… “அப்போ நீங்களே இந்தா. பொறுப்பை எல்லாம் பார்த்துக் கோங்க…” என்று மாலாவின் கையில் அந்தப் பேப்பரை நீட்ட மாலா தயங்கி நிற்க… “ம்ம்…” என்று அவன் குரலில் இருந்த அதிகாரத்திலேயே பேப்பரை வாங்கிக் கொண்டாள்.
ராதாவிடம் திரும்பி “நீங்க இந்தப் போட்டியில் எதுவும் கலந்து கொண்டு உங்கள் திறமையை நிரூபிக்க முடியுமா மிஸ் ராதா?”
“நான் உங்களைக் கேட்காமலேயே உங்கள் சார்பில் இந்தப் பொண்ணு கிட்டே சொல்லிட்டேன்,” என்றான் சந்தோஷ்.
“எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை சார். நான் என்னைத் தகுதியானவள் என்று நிரூபித்த பிறகு இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்,” என்றாள் ராதா.
“குட்,” என்றவன் “சரி எந்தப் போட்டியில் நீங்க கலந்துக்கறீங்க?” என்று ஆர்வமாகக் கேட்டான் சந்தோஷ். ராதா சற்று யோசித்துவிட்டு… “டான்ஸ்,” என்றாள்.
“உங்களுக்கு டான்ஸ் எல்லாம் ஆடத் தெரியுமா?” என்று ஆச்சர்யமாகக் கேட்டான் சந்தோஷ். ராதா “ம்ம்ம்…” என்று மட்டும் பதில் சொன்னாள்.
‘வாயைத் திறந்து பேசுகிறாளா பார்’ என்று நினைத்தவன் ‘சாயங்காலம் நீ டியூஷன் வரும்போது உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்,’ என்று நினைத்தவன்.
மாலாவிடம் திரும்பி “உங்களுக்கு ஓகேவா?” என்று சந்தோஷ் கேட்க.
“எனக்கு ஓகே சார். லாஸ்ட் இயர் டான்ஸ் காம்பெடிஷனில் நான் தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கினேன்,” என்று மாலா தன்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்ல.. “ஓகே அப்போ காம்பெடிஷன் சூடு பிடிக்கும் போகிறது,” என்றான் சந்தோஷ்.
“சரி மற்றவர்கள் அவர்களுக்கு விருப்பமான போட்டிகளில் பெயர் கொடுத்து விடுங்கள்,” என்று சொல்லிவிட்டு ராதாவையும், மாலாவையும் போகச் சொல்லிவிட்டுப் பாடம் நடத்த ஆரம்பித்து விட்டான்.
