Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 104

உன் ரகசிய ரசிகை நான் 104

by Layas Tamil Novel
242 views

EPISODE 104

சங்கவி போதியுடன் சுவிட்சர்லாந்தில் ஒரு மீட்டிங்கில் கலந்து கொண்டு காரின் பின் சீட்டில் அமர்ந்து அவனுடன் பேசிக் கொண்டு இருந்தாள். போதியின் போன் அடித்ததும், “ஒரு நிமிஷம் சங்கவி,” என்று சொல்லிவிட்டுத் தன் போனை எடுத்துப் பார்க்க அதில் அம்மா என்று வந்தது. சிரித்துக் கொண்டே, “ஹலோ அம்மா… எப்படி இருக்கீங்க?” என்றான்.

“பரவாயில்லையே போன் பண்ணினதும் எடுத்துட்டே… இல்லையின்னா மீட்டிங் இருக்கு அது இதுன்னு சாக்கு சொல்லி போன் எடுக்காம விட்டுருவியே,” என்றார். “அம்மா அப்படியெல்லாம் இல்லை. நிஜமாகவே எனக்கு வேலை அதிகம் இருக்கிறது. அதனால் தான் நீங்கள் போன் செய்யும்போது என்னால் எடுத்துப் பேச முடியவில்லை,” என்று சொன்னால் போதி. “சரிப்பா பரவாயில்ல. என்ன வேலை இருந்தாலும் சாப்பிடும் வேலையில் சரியாகச் சாப்பிட மறந்துடாத,” என்று அவன் மீது அக்கறையாகப் போதியின் அம்மா சொன்னார்.

“சரி சரிமா பார்த்துக் கொள்கிறேன். அப்பா என்ன பண்றாரு? எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டான். “ம்ம்… எல்லாரும் நல்லா இருக்கோம் போதி… உன் அத்தை பொண்ணு ரதியை உனக்குத் திருமணம் செய்து கொடுக்கச் சொல்லி உன் அத்தை நம் வீட்டிற்கு வந்து இருந்தார். உன் அப்பாவும் நானும் உன்னிடம் பேசிவிட்டுப் பதில் சொல்கிறோம் என்று சொல்லி விட்டோம். நாங்களும் ரொம்ப வருஷமா உன்னைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லி கேட்டுட்டு இருக்கோம். நாங்க பார்க்கிற பொண்ணையும் நீ வேண்டாம்னு சொல்லிட்டே… ரதி படிப்பை முடிச்சிட்டு வேற யாரையும் திருமணம் செய்துக்க மாட்டேன்னு உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதமா இருக்கா…. நீ இப்படிப் பிடி கொடுக்காமல் இருந்தா நாங்க என்ன பண்றது போதி. உன் அத்தை உன் அப்பாகிட்டே சண்டை போட்டுட்டு ரதியை அழைச்சுட்டு போய்ட்டாங்க,” என்று வருத்தமாக சொன்னார்.

“அம்மா எனக்கு உங்க வருத்தம் புரியுது. நம்ம இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா வந்திருவேன். நேரில் வந்து நான் என் கல்யாண விஷயம் பற்றிப் பேசுகிறேன். நீங்க கவலைப் படாமல் இருங்க அம்மா. நான் உங்களுக்கு நல்ல முடிவா தான் சொல்லுவேன்,” என்ற போதி அவரிடம் பேசிவிட்டுப் போனை வைத்தான்.

அவர்கள் பேசுவதை எல்லாம் அவன் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்த சங்கவி போன் வைத்ததும். “போதி நான் உன்கிட்டே ஒன்னு கேட்கலாமா?” என்றாள் சங்கவி. “நீ ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளலைன்னு தானே கேட்கப் போறே,” என்றான் போதி. “ம்ம்… ஆமாம். உனக்கும் திருமண வயது வந்துவிட்டது. உனக்கு இருக்கும் வசதிக்கு நிறையப் பெண்கள் வந்து இருப்பார்கள். ஆனால் நீ ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை… இல்லை யாரையேனும் காதலிக்கிறாயா?” என்று கேட்டாள் சங்கவி.

“நீ சொல்வது சரி தான் சங்கவி. எனக்கு இதுவரை நிறையப் பெண்கள் தங்கள் காதலை என்னிடம் சொல்லி என் சம்மதம் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அவர்கள் மீது எல்லாம் எந்த ஒரு ஈர்ப்பும் வந்ததே இல்லை,” என்றான் போதி. “அப்போ யாரையாவது நீ… லவ் பண்றியா?” என்றாள் சங்கவி. அவள் அப்படி கேட்டதும் சிறிது நேர தயக்கத்திற்குப் பின் ஆம் என்று தலையை ஆட்டினான் போதி.

“அப்படியா!! யார் அந்த லக்கி கேர்ள்?” என்று ஆர்வமாகச் சங்கவி போதியைப் பார்த்துக் கேட்டாள். “இதுவரை என்னை தவிர யாருக்கும் நான் யாரை லவ் பண்றேன்னு சொன்னதில்லை. கொஞ்ச நாள் பொறு. நானே சொல்றேன் உன்கிட்டே,” என்றான் போதி. “என்ன போதி? நாம அப்படியா பழகுறோம்? நீ… என் கிட்டே சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டே பார்த்தியா…” என்று அவனிடம் கோபித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டால்.

சங்கவி தன்னிடம் கோபித்துக் கொண்டால் என்பதைப் புரிந்து கொண்ட போதி சங்கவியிடம்… “சங்கவி கோவப்படாதே. ப்ளீஸ் என்னைப் பாரு ஒரு நிமிஷம்,” என்று போதி சொன்னவுடன் அவனைப் பார்த்து, “என்ன?” என்றாள் சங்கவி. “நான் சொல்றது கொஞ்சம் புரிஞ்சுக்கோ… நான் உன்கிட்டே சொல்லக்கூடாதுன்னு ஒன்னும் இல்ல… ஆனா நான் லவ் பண்ற விஷயத்தை அந்தப் பொண்ணுகிட்டே இன்னும் சொல்லலை. அப்போ…. நான் எப்படி உன்கிட்டே சொல்ல முடியும்? நான் என் லவ்வைச் சொன்ன பிறகு அந்தப் பொண்ணு ஓகே சொன்னா தானே நானும் தைரியமா இந்தப் பொண்ணை லவ் பண்றேன்னு எல்லார்கிட்டயும் சொல்ல முடியும்,” என்று சொன்னான் போதி.

“நீ இன்னும் உன்னோட லவ்வை அந்தப் பொண்ணு கிட்டே சொல்லவே இல்லையா?” என்றாள் ஆச்சரியமாகச் சங்கவி. அதற்குள் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் வந்திவிட… போதி அவன் ரூமிற்குச் செல்லப் போக… “எங்கே போறே… நான் கேட்டதுக்குப் பதில் சொல்லிட்டு அப்புறம் உன் ரூமுக்கு போ…” என்றாள் சங்கவி. “விட மாட்டியே நீ…” என்று சிரித்தவன், “சரி வா காபி சாப்டுட்டே பேசலாம்,” என்று ஹோட்டலில் இருந்த ரெஸ்டாரண்டிற்கு இருவரும் வர… போதி இருவருக்கும் காபி ஆர்டர் செய்துவிட்டுச் சங்கவியைப் பார்க்க.. “ஆமா சங்கவி நான் என்னோட லவ்வை நான் இன்னும் அந்தப் பொண்ணு கிட்டே சொல்லவே இல்லை,” என்றான் போதி.

“ஏன் சொல்லலை..” என்றாள் சங்கவி. “அவ கிட்டே நான் பேசிப் பழகி முழுசா ஒரு மாசம் கூட ஆகி இருக்காது. அப்படி இருக்க அப்போ நான் எப்படி என்னோட லவ்வைச் சொல்ல முடியும்,” என்றான் போதி. உடனே சங்கவி, “அப்படியெல்லாம் நீ யோசிச்சுட்டு இருந்தா… நீயும் என்னைப் மாதிரி லவ் பண்ணினவங்களை மிஸ் பண்ணிட்டுப் பின்னாடி வருத்தப்படப் போறே,” என்றாள் சங்கவி.

“என்ன சொல்றே? நீ லவ் பண்ணுனியா? யாரை லவ் பண்ணினே? சங்கவி,” என்று கேட்டான் போதி. “வேற யாரு உன்னோட ஃபிரெண்ட் ஆதியைத் தான்,” என்றாள் சங்கவி. அவள் சொன்னதை நம்ப முடியாமல் ஆச்சரியமாக, “என்ன சொல்றே சங்கவி? நிஜமாவே ஆதியை நீ லவ் பண்றியா? அப்போ ஆதி..” என்றான் கேள்வியாக அவளிடம்.

“உனக்கு விஷயமே தெரியாதே. எனக்கும் ஆதிக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆகி மணமேடை வரை வந்துட்டோம்,” என்றாள் சங்கவி. “என்ன சொல்றே? சங்கவி என்னால நம்பவே முடியலையே,” என்றான். “நான் மட்டும் கொஞ்சம் அவசரப் படாமல் இருந்திருந்தா.. இந்த நேரம் நானும் ஆதியும் இங்கே பிசினஸ் பார்ட்னெர்ஷா வராம… ஹனிமூன் கபில்ஸா வந்து இருப்போம். எல்லாம் என் நேரம். என் அப்பா பேச்சைக் கேட்டு நான் ஒழுங்காக ஆதியைக் கல்யாணம் பண்ணி இருக்கணும். அவன் நோயை காரணம் காட்டி அவனை நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதனால அவன் அம்மா அதே முகூர்த்தத்தில் அவனுக்கு அந்த துர்காவைத் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க,” என்றாள் கோபமாக.

சங்கவி ஆதி துர்காவைத் திருமணம் செய்து கொண்டான் என்று சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியான போதி கையில் இருந்த காபி கப்பை அப்படியே கீழே போட…. அவன் கப்பை கீழே போட்டதும், “போதி ஆர் யூ ஆல்ரைட்… என்ன ஆச்சு,” என்று சங்கவி கேட்க… “அது ஒன்னும் இல்ல சங்கவி. காபி கப் சூடா இருந்துச்சு. சரியாப் பிடிக்க முடியாமல் கீழே போட்டுட்டேன்,” என்று சொல்லிச் சமாளித்தான் போதி. “நீ… நீ… என்ன சொன்னே சங்கவி மறுபடி சொல்லு,” என்றான் போதி.

“அதுவா… நான் ஆதியைப் வேண்டாம்னு சொன்னதும் அந்த ஆதியை இது தான் சான்ஸ்னு சொல்லி அவன் அம்மாவை என்னவோ சொல்லி மயக்கி அந்த ஆதியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா,” என்றாள் சங்கவி. அவள் சொல்வதை நம்ப முடியாமல் போதி அமர்ந்து இருக்க… சங்கவி ஆதியின் ஆபிஸில் வேலை செய்தது முதல் அவனுக்கும் துர்காவிற்கும் திருமணம் ஆகியும் இன்னும் இருவரும் தம்பதிகளாக வாழவில்லை என்றும் சொன்னாள்.

காபி குடிக்கப் போகிறேன் என்று சென்ற இருவரும் ஹோட்டலில் இருந்த பாருக்குச் சென்று மது அருந்திக் கொண்டே பேச… போதை அதிகம் ஆக.. ஆக.. சங்கவி தான் ஆதியைத் திருமணம் செய்யப் போவதாகவும் அதற்காகத் தான் என்ன எல்லாம் செய்து இருக்கிறேன் என்பது வரை சொல்லி இருந்தாள். இதை எல்லாம் கேட்ட போதிக்கும் ஆதிக்கும் துர்காவும் மட்டுமில்லாமல் அவன் கூட இருக்கும் அனைவருமே தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று ஆத்திரம் கொண்டான்.

போதி கோபமாக இருப்பதைப் பார்த்த சங்கவி… போதையில் அவனிடம் உளறிக் கொண்டே, “ஏன் போதி என் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம். கேட்டு நீ கோபமா இருக்கே…” என்று கேட்டாள். “நீ எப்படி ஆதி கிடைக்காமல் கஷ்டப்படுறியோ… அதே போல.. இவ்வளவு நாள் நான் காதலித்தப் பெண்ணிற்கு நீ காதலித்தவன் உடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்து தான் நான் இப்போது கோபமாக இருக்கிறேன்,” என்றான் போதி.

போதி சொன்னதைக் கேட்டு, “அப்போ நீ லவ் பண்ணினப் பொண்ணு துர்காவா?” என்றாள் சங்கவி அதிர்ச்சியாக. “ஆமாம்,” என்று சொன்ன போதி தன்னை ஏமாற்றி விட்டார்களே என்று நினைத்து துர்காவின் மீது கொலை வெறியில் இருந்தவன் தான் கையில் இருந்த மது கோப்பையை இறுக்கிப் பிடிக்க… அது சுக்கு நூறாக உடைந்து போதியின் கையைக் கிழித்து விட.. குடித்துக் கொண்டு இருந்த சங்கவி அவன் கையைப் பார்த்து, “ஏய் போதி என்ன பண்ணி இருக்கே நீ…” என்று அவன் கையைப் பிடித்து அவளிடம் இருந்த கைகுட்டையை வைத்து அவன் கையில் கட்டியவள்.. “போதி நமக்குத் துரோகம் பண்ணினவங்களைத் தான் நாம காயப் படுத்தணும். நம்மை காயப்படுத்திக்கக் கூடாது,” என்று சொன்னால்.

“ஆமா சங்கவி. அந்தத் துர்காவை நான் சும்மா விட மாட்டேன்,” என்று கோபமாகச் சொன்ன போதி அங்கிருந்துத் தன் அறைக்குச் சென்றுவிட்டான். அவன் செல்வதையே பார்த்தவள் தன் கையில் இருந்த மதுவைக் குடித்துக் கொண்டே… “அந்தத் துர்காவை எப்படிப் பழி தீர்க்குறதுன்னு இவ்வளவு நாளா யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா இப்போ அதுக்கு வேலை இல்லாமலா பண்ணிட்டியே போதி. நான் இனி அந்தத் துர்காவை எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீயே எல்லாத்தையும் பார்த்துகுவே,” என்றாள் சங்கவி.


தனக்கு இன்னும் பத்து நாளில் திருமணம் என்று தெரிந்து கொண்டதில் இருந்து ராதாவிற்குத் தூக்கமே வரவில்லை. இரவெல்லாம் தூங்காமல் தன் அறையில் படுத்து இருந்தவள் எப்படி இந்தக் கல்யாணத்தை நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டு இருக்க… அப்போது அவள் போனில் மெசேஜ் நோட்டிபிகேஷன் வர…. அதை எடுத்துப் பார்க்க… சந்தோஷ் தான் மெசேஜ் அனுப்பி இருந்தான். அதை ஓபன் செய்து பார்த்தவள், “ஹாய் செல்ல குட்டி…” என்று சந்தோஷ் மெசேஜ் அனுப்பி இருந்தான். அதைப் பார்த்தது சிரித்துக் கொண்டே… “சொல்லு டா வாத்தி,” என்று அனுப்பினால்.

ராதாவிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவள் பதிலுக்காகக் காத்திருந்தவன் மெசேஜ் அனுப்பிய உடன் பதில் ரிப்ளை வந்ததும், ‘நம்ம ஆளு இன்னும் தூங்கலை போல,’ என்று நினைத்தவன் பதில் மெசேஜ் அனுப்பினான். “நீ இன்னும் தூங்கலையா டி.. செல்லக்குட்டி..” என்று அனுப்பினான் சந்தோஷ். “ஆமாடா வாத்தி… தூக்கம் வரல. அதனால தான் தூங்காமப் படுத்து இருக்கேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க….” என்று கேட்டால் ராதா. “நானும் படுத்துட்டுத் தான் இருக்கேன் என் செல்ல குட்டி…. ஆமா ஏன் இவ்வளவு நேரம் ஆகி நீ இன்னும் தூங்காம இருக்க… இந்த மாமனை நினைச்சுட்டுத் தூக்கம் வரலையோ உனக்கு,” என்று கேட்டான்.

ராதா சந்தோஷ் அனுப்பிய மெசேஜைப் படித்துவிட்டுச் சிரித்தவள் அவனுக்குப் பதில் மெசேஜ் அனுப்பினால். தனக்கு வந்த மெசேஜை ஆசையோடு ஓபன் செய்து பார்த்த சந்தோஷ் ராதா அனுப்பிய மெசேஜைப் பார்த்துவிட்டுக் கடுப்பானான். அதில், “நான் எனக்கு இன்னும் பத்து நாளில் கல்யாணம்னு இன்னிக்குத் தான் முடிவு பண்ணினாங்களா… அதனால தான் என் கல்யாணத்துக்கு என்ன சாரீ எடுக்கலாம்… என்ன நகை வாங்கலாம்… என்ன மாதிரி மேக்கப் போடலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தேனா… அந்தக் சந்தோசத்துல தான் எனக்குத் தூக்கம் வரலை டா வாத்தி….” என்று அனுப்பி இருந்தாள்.

அதைப் பார்த்துவிட்டுத் தான் சந்தோஷுக்குக் கடுப்பானது. உடனே ராதாவிற்குக் கால் செய்ய…. பட்டென்று போனை அட்டென்ட் செய்து.. “டேய் வாத்தி… இப்போ எதுக்கு டா பத்து நாளில் கல்யாணம் ஆகப் போற பொண்ணுக்கு இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்கே…” என்றாள் ராதா வேண்டுமென்றே அவனை கடுப்பேற்றும் விதமாக…

பெட்டில் படுத்து இருந்த சந்தோஷ் எழுந்து அமர்ந்தவன், “ஏய்… ஏய்… குட்டச்சி… உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா… என் கிட்டயே உனக்குக் கல்யாணம்னு சொல்லுவே,” என்று கத்தினான். தன் காதில் இருந்த போனை எடுத்தவள், “என்ன இப்படிக் கத்துறான் பாரு ஷ்….. அப்பா… காது வலிக்குது…” என்று தன் காதைத் தேய்த்துக் கொண்டு… ‘நல்ல டென்ஷன் ஆகிட்டான் போல…’ என்று சிரித்துக் கொண்டவள், “ஆமா என்னை என்ன சொன்னான்? குட்டச்சியா நானு…” என்று கோபம் ஆனா ராதா. போனை மறுபடியும் காதில் வைத்து… “யோவ்.. வாத்தி.. யாரைப் பாத்து குட்டச்சின்னு சொன்னே… நீதான் டா நல்லாப் பனை மரம் மாதிரிப் பெருசா வளர்ந்து இருக்கே… நம்ம ஒன்னும் குட்டச்சி.. இல்லை,” என்றாள் கடுப்பாக…

“ஏய்… நீ சொன்னாலும் சொல்லாட்டியும் குட்டச்சி தான் டி… நான் உன்னை அப்படி தான் டி சொல்லுவேன் குட்டச்சி… குட்டச்சி.. குட்…. ட்ட… ச்… ச்சி…..” என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி நிறுத்தி.. நிறுத்தி… சந்தோஷ் சொல்ல….. “டேய் வாத்தி… நீ மட்டும். இப்போ என்னைக் கையில் கிடைச்சேன்னு வை நான் உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது டா…” என்றாள் ராதாவும். “பின் இப்போ எதுக்கு நீ… இப்படி கத்துறே… நீதானே ஏன் தூக்கம் வரலையின்னு சொன்னே… அதான் ஏன் தூக்கம் வரலையின்னு நானும் சொன்னே. அதுக்கு போய்ப் இப்படிக் கத்துறே..” என்றவள். “ஆமா… எனக்குக் கல்யாணம்னு சொன்னதும் நீ ஏன் யா… வாத்தி டென்ஷன் ஆகுறே,” என்றாள்.

“நான் டென்ஷன் ஆகாம உங்க அப்பன் அந்தச் சொட்ட மண்டையனா டி… டென்ஷன் ஆவான்,” என்றான் சந்தோஷ் காட்டமாக… “டேய்… என்னடா நினைச்சிட்டு இருக்கே… முதல்ல என்னைக் குட்டச்சின்னு சொன்னே… இப்போ என் அப்பாவை…. நீ சொட்டை மண்டையன்னு சொல்றே … உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே என் அப்பாவைக் கிண்டல் பண்ணிப் பேசுவே,” என்று அவனிடம் சண்டைக்கு நின்றாள்.

“உங்க அப்பன் சொட்ட மண்டையனை சொன்னால் உனக்குக் கோபம் வருதா… அதே மாதிரி தான் எனக்கும் நீ என்கிட்டே உனக்குக் கல்யாணம்னு சொன்னாக் கோபம் வரும்,” என்று கத்தினான். ‘நிஜமாவே வாத்திக்குக் கோபம் வந்திருச்சு போல… ரொம்ப ஓவரா பேசிட்டமோ…’ என்று அமைதியாக ராதா இருக்க… “ஏய்… என்ன டி.. அமைதியாகிட்டே… பேசு டி… இப்போ பேசு… ஏன் எதுவுமே பேச மாட்டேங்குறே….” என்றான் கடுப்பாக சந்தோஷ்.

சற்று நேர அமைதிக்குப் பின், “மாமா….” என்று மறுமுனையில் ராதா கொஞ்சும் குரலில் சந்தோஷை அழைக்க… இவ்வளவு நேரம் தாம் தூம் என்று கத்திக் கொண்டு இருந்தவன். ராதா தன்னை மாமா… என்று அழைத்ததும் அப்படியே மெழுகாக உருகிப் போய் விட்டான். அவன் எதுவும் பேசாமல் அமைதியாகி விட… ‘என்ன வாத்தி…. நான் மாமான்னு ஒரு வார்த்தை தான் சொன்னேன். இதுக்கே ஆஃப் ஆகிட்டான். அப்போ…. இந்த வார்த்தையை வெச்சே இவனைச் சமாதானம் செய்து விடலாம் போலவே,’ என்று நினைத்தவள். மறுபடியும், “என்ன மாமா… எதுவுமே பேச மாட்டேன்குறீங்க… பேசுங்க மாமா…” என்று குழைந்தால்.

சந்தோஷிற்கு அவள் ஒவ்வொரு முறையும் மாமா… என்று அழைக்கவும் பேச்சே எழவில்லை. சந்தோஷுக்கு வார்த்தைகள் வராமல் தடுமாறிக் கொண்டே அவளை, “செ…. செல்லக்.. குட்டி….” என்று அழைத்தான். “என்ன மாமா… என் மேல கோபமா இருக்கீங்களா?” என்றாள் ராதா. “கோபமா… எனக்கா… உன் மேலயா… ச்சே… ச்சே… நான் எதுக்கு உன் மேல கோபப்படப் போறேன் செல்லக்குட்டி,” என்றான். “நான் கொஞ்சம் முன்னாடி என் கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் இருக்குன்னு சொன்னேனே… மாமா… அதைக் கேட்டு கோபம் வந்திருச்சா உங்களுக்கு….” என்றாள் ராதா. “இல்ல டி… செல்லக்குட்டி… அதெல்லாம் ஒன்னும் இல்லை,” என்றான் சந்தோஷ்.

“என்னது அதெல்லாம் ஒன்னும் இல்லையா… யோவ் வாத்தி நான் என்ன எனக்கு இன்னும் பத்து நாளில் கல்யாணம்னு சொல்றேன். நீ அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு சொல்றே..” என்று மீண்டும் அவனிடம் மல்லுக்கு நிற்க… “ஏய்.. மக்கு இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுறே… அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். எப்படியாவது உன் கல்யாணத்தை நிறுத்தி உன்னை என் பொண்டாட்டி ஆகிக்குறேனா… இல்லையா பாரு,” என்றான் சந்தோஷ். அவன் அப்படிச் சொன்னதும் முகம் மலர்ந்தவள், “நிஜமா தான் சொல்றியா வாத்தி… என்னைக் கல்யாணத்தை எப்படியாச்சும் நிறுத்திடு யா…” என்றாள் ராதா.

“சரி டி செல்ல குட்டி… நான் ஏதும் செய்றேன்,” என்றவன். “ஏய்…” என்று அழைத்தான். “ம்ம்… சொல்லுய்யா…” என்றாள் ராதா. “ஏய்… செல்லக்குட்டி… வாயா… போய்யான்னு கூப்பிடாமல் என்னை கொஞ்ச நேரம் முன்னாடி கூப்பிட்டியே… அப்படி கூப்பிடு டி…” என்றான் குழைந்து கொண்டே ராதாவிடம். அவன் எதைச் சொல்கிறான் என்று புரிந்து கொண்ட ராதா சந்தோஷிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல். “கொஞ்ச நேரம் முன்னாடி டேய்… ன்னு சொல்லிக் கூப்பிட்டேனே… அந்த மாதிரி கூப்பிடணுமா?” என்று கேட்டாள் ராதா.

“ம்ம்ஹும்… அப்படி இல்லை செல்ல குட்டி… வேற.. மாதிரி கூப்பிட்டியே..” என்றான் சந்தோஷ். “வேற மாதிரின்னா… வாத்தின்னு சொன்னேனே… அப்படியா,” என்றாள் எதுவும் தெரியாதவள் போல.. “ப்ச்… இவ இருக்காளே எல்லாத்தையும் நேராக் சொன்னா தான் இவளுக்குப் புரியும் போல…” என்று நினைத்தவன். “கொஞ்ச நேரம் முன்னாடி…” என்று இழுத்தான் சந்தோஷ். “ம்ம்ம்.. கொஞ்ச நேரம் முன்னாடி என்ன… சொல்லு,” என்றாள் ராதா. “அது இல்ல. கொஞ்ச நேரம் முன்னாடி நீ… நீ… என்ன…” என்று அவன் வெட்கப்பட்டுக் கொண்டே… தன் கையால் பெட் ஷீட்டைப் பிடித்துக் கசக்கிக் கொண்டே.. சந்தோஷ் பேச… ‘வாத்திக்கு வெட்கம் வந்திருச்சு போலயே…’ என்று சிரித்துக் கொண்ட ராதா. “என்ன வாத்தி சொல்ல வர… என்னனு சீக்கிரம் சொல்லு. எனக்குத் தூக்கம் வருது…” என்றாள்.

மறுபடியும் சந்தோஷ், “அது… அது வந்து…” என்று இழுக்க…. “இப்போ நீ சொல்றியா.. இல்லை நான் போனை வைக்கவா..” என்றாள் ராதா. “ஏய் இரு இரு… போனை வெச்சுடாதே… நான் சொல்றேன்,” என்றான் சந்தோஷ். “ம்ம்ம்… சொல்லு,” என்றாள் ராதா. “கொஞ்சம் முன்னாடி நீ… என்னைக் மாமான்னு கூப்பிட்டியே அது மாதிரி கூப்டு டி.. செல்லக்குட்டி…” என்றான் சந்தோஷ். அவன் அப்படி கேட்டதும் ராதாவிற்கு வெட்கம் வர… எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…

“என்ன செல்லக்குட்டி எதுவும் பேச மாட்டேங்குறே… ஒரு வாட்டி சொல்லேன். அதுக்கு அப்புறம் நான் உன்னை எதுவும் கேட்க மாட்டேன்,” என்றான் சந்தோஷ். “ம்ம்ஹும்… சொல்ல மாட்டேன் போய்யா….” என்றால் ராதா வெட்கப்பட்டுக் கொண்டே.. “ஏய்… ஏய்.. ராதா… ப்ளீஸ்… டி… ஒரு வாட்டி.. ஒரே ஒரு வாட்டி… நீ என்னை மாமான்னு கூப்பிடு டி…” என்றான் அவளிடம் கெஞ்சிக் கொண்டே. அவன் இவ்வளவு தூரம் கெஞ்சியதும் ராதாவிற்கு மனம் இறங்கி வர… “ஒரு வாட்டி தான் சொல்லுவேன்,” என்றாள் ராதா.

அவள் அப்படிச் சொன்னதும் இவ்வளவு நேரம் கெஞ்சிக் கொண்டு இருந்தவனின் முகம் பிரகாசம் ஆகி விட… “ஓகே… டன்,” என்றான் சந்தோஷ். “சரி,” என்றாள் ராதா. “சொல்லு… டி…” என்று சிணுங்கினான் சந்தோஷ். “ஐயோ… இப்படி எல்லாம் சீனுங்காத டா… எனக்கு என்னவோ மாதிரி இருக்கு,” என்று சொல்லி பதிலுக்கு ராதாவும் சிணுங்கினால். “சரி… சரி.. நான் எதுவும் பேசலை சரியா… நான் இப்போ ஒன், டு, த்ரீ.. எண்ணுவேணாம் நான் எண்ணி முடிச்சதும் நீ ஒரு வாட்டி அப்போ சொன்ன மாதிரி அழகா என்னை மாமான்னு சொல்லிட்டுப் போனை வெச்சிடு,” என்றான்.

“ம்ம்ம்… சரி,” என்றாள் ராதா. “சரி அப்போ நான் எண்ணட்டுமா?” என்றான் சந்தோஷ். “ம்ம்…” என்றாள் ராதா…. “அப்போ எண்ணிடுவேன்….” என்றான் சந்தோஷ். “நீ இப்படியே சொல்லிடு இருந்தா… நான் போனை வெச்சிடுவேன்,” என்றாள் ராதா. “சரி.. சரி… கோச்சுக்காத. நான் இப்போ எண்ணுறேன்,” என்றவன் நீ ரெடியாக் இருந்துக்கோ சொல்றதுக்கு என்று சொல்லிவிட்டு. “ஒன்….” என்றான். “ம்ம்ம்…” என்றாள் ராதா. “டூ…” என்றான் சந்தோஷ். “ம்ம்ம்…” என்றாள் ராதா. “த்ரீ…” என்று சொல்லிவிட்டு அவள் சொல்வதைக் கேட்பதற்காகத் தன் காதுகளை நன்றாகத் தீட்டிக் கொண்டு…. காத்திருக்க…

ராதா, “மாமா….” என்று கொஞ்சும் குரலில் அழைத்தாள் சந்தோஷை. அவள் அப்படி அழைத்ததும், “ஐயோ… செல்லக்குட்டி…. என்னவோ ஆகுது டி…” என்றவன். “ஒரே ஒரு வாட்டி,” என்று அவன் கெஞ்ச… “ம்ம்ம்ம்,” என்றவள். “யோவ்… மாமா… பத்து நாளில் எனக்குக் கல்யாணம். மறக்காம வந்திரு மாமா….” என்று சொல்லிவிட்டுப் போனை கட் செய்துவிட்டால் ராதா.

“ஏய்… ஏய்…” என்று ராதா சொன்னதைக் கேட்டு சந்தோஷ் கத்த…. அதற்குள் போன் துண்டிக்கப் பட்டு விட… ‘இவளை…’ என்று பல்லைக் கடித்தவன். தன்னிடம் வேண்டுமென்றே வம்பு செய்கிறாள் என்று புரிந்து கொண்டவன். சிரித்துக் கொண்டே தன் போனை மெத்தையில் போட்டுவிட்டுத் தலைக்குக் கை கொடுத்து… ராதாவை நினைத்துக் கொண்டே படுத்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured