Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 116

உன் ரகசிய ரசிகை நான் 116

by Layas Tamil Novel
244 views

துர்கா லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்த மது ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு செல்ல போக… அவளுடன் பவனும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள… அவனை தன்னுடன் வர வேண்டாம் என்று மது அவனிடம் சண்டையிட.. “நீ என்னோட சட்டையைப் போட்டு இருக்கியே. அதை அப்படியே நீ எடுத்துட்டு போய்ட்டா என்ன செய்வது? அதனால் என் சட்டையை நீ கொடுக்குற வரைக்கும் நான் உன்கூட தான் இருப்பேன்” என்று காயச்சலைக் கட்டிக்கொண்டு அமர்ந்து விட்டான்.

அவனை முடிந்த மட்டும் முறைத்த மது ஆட்டோ டிரைவரிடம் தன் வீட்டு அட்ரஸை சொல்லிவிட்டு அவனைப் பார்க்காமல் வேறு புறம் பார்த்து அமர்ந்து கொண்டாள்.

அவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மென்ட் வந்தவுடன் ஆட்டோவிற்கு பணம் கொடுத்து அவரை அனுப்பிவிட்டு மது லிஃப்டுக்குள் செல்ல, பவனும் அவளுடனே சென்றான்.

முதல் மாடி வந்ததும் மது லிஃப்ட்டை விட்டு வெளியே வர பவனும் அவள் பின்னே வந்தவன் “என் சட்டை… என் சட்டை…” என்று சொல்லிக் கொண்டே மதுவின் பின்னாலே வந்தான்.

ஆட்டோவில் ஏறியதில் இருந்து அவன் “என் சட்டை என் சட்டை” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வர மதுவிற்கு பயங்கர கடுப்பானது.

அவள் வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தவள் அப்படியே நின்று அவனை திரும்பிப் பார்த்து, “சட்டையை நான் ஒன்னும் அப்படியே கொண்டு போய் தொலைச்சிட மாட்டேன் இல்ல? நானே உங்க சட்டையை வச்சுக்க மாட்டேன். அந்த எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது. உங்க சட்டையை நான் நாளைக்கு கொடுக்கிறேன்” என்று மது சொன்னாள்.

அவள் அப்படிச் சொன்னதும் “என்னது நாளைக்கா!!!” என்று அதிர்ச்சியாக கேட்டான் பவன்.

“ஆமா நாளைக்கு தான்….நான் தான் நாளைக்கு உங்களுக்கு கொடுக்கிறேன் என்று சொன்னேனே. அதுக்கு எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறீங்க” என்று கேட்டாள் மது.

“என்னால நாளைக்கு வரை பொறுக்க முடியாது. நீங்க போய் டிரஸ் மாத்திட்டு இப்பவே என் சட்டையை கொண்டு வந்து என் கைல குடுங்க. அப்பத்தான் நான் என் வீட்டுக்கு போவேன்” என்று சொன்னான் பவன்.

“ஏங்க சொன்னால் கேளுங்க… உங்க சட்டையை நான் ஒன்னும் தூக்கிட்டு ஓடிட மாட்டேன். உங்க வீட்டுக்கு எதிர் வீட்ல தானே நானும் இருக்கேன். நான் அந்த சட்டையை இப்படியே எப்படி கொடுக்கிறது? நான் தான் உங்க சட்டையை போட்டுட்டேனே….. நான் உபயோகப்படுத்தின சட்டையை அப்படியே கொடுத்தால் நல்லா இருக்காது. அதான் சொல்றேன் உங்க சட்டையை நான் துவைத்து அயன் பண்ணி நாளைக்கு கொடுக்கிறேன்” என்றால் மது அவனிடம்.

“என்னது என் சட்டையை நீங்க துவைக்க போறீங்களா!! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். என் சட்டையை எனக்கு இப்பவே குடுங்க” என்று மறுபடியும் அவன் அடம் பிடிக்க…

“இந்த சட்டைக்காக எதுக்கு இவ்வளவு அடம் பிடிக்கிறீங்க? ஒரு நாள் நைட் உங்களால் பொறுத்துக்க முடியாதா?” என்று கேட்டாள்.

“நான் சொன்னா சொன்னது தான். என் சட்டையை நீங்க இப்ப உள்ள போய் மாத்திட்டு வந்து கொடுக்க போறீங்களா.. இல்லையா….. நான் எப்படிங்க வெறும் பனியனோடு என் வீட்டுக்குள்ள போறது….அங்க போனா என் அம்மா என்னை இந்த கோலத்துல பார்த்தா என்னை பற்றி என்ன நினைப்பாங்க. ஒரு வயசு பையன் காலையில சட்டையோடு போயிட்டு சாயங்காலம் வரும் போது வெறும் பனியனை மட்டும் போட்டுட்டு வீட்டுக்கு வந்தான்னா அவங்களுக்கு கண்டதெல்லாம் தோணுமா தோணாதா…” என்றான் பவன்.

“ஏங்க இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல… லிஃப்ட்டில் நடந்த விஷயத்தை உங்க அம்மா கிட்ட போய் சொன்னா… உங்க அம்மா எதுவும் சொல்லவா போறாங்க… இப்படியா சின்ன பையன் மாதிரி அடம்பிடிக்கிறீங்க” என்று சலித்துக் கொண்ட மது “இப்போ என்ன உங்களுக்கு இந்த சட்டை இப்பவே வேணும் அதுதானே? ஒரு நிமிஷம் இங்கேயே நில்லுங்க. நான் போய் வேற டிரஸ் போட்டுட்டு உங்க சட்டையை கொண்டு வரேன்” என்று அவனை முறைத்து விட்டு தன் வீட்டிற்குள் சென்றாள் மது.

மது தன் வீட்டிற்குள் செல்லவும் ஹாலில் அமர்ந்து நிலானி டிவி பார்த்துக் கொண்டிருக்க…. பத்மா நிலானியின் அருகில் தரையில் அமர்ந்து இரவு சமையலுக்கு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள்.

மது திறந்து கொண்டு உள்ளே வரவும் அவளை திரும்பிப் பார்த்த இருவரும் மது சட்டை அணிந்து கொண்டு உள்ளே வருவதை பார்த்து நிலானி “அக்கா என்ன ஆச்சு உனக்கு? ஏன் இந்த டிரஸ் போட்டிருக்க?” என்று கேட்டாள்.

பத்மா மதுவை ஒரு முறை ஏற இறங்க பார்த்தவள் “ஆமா… இந்த சட்டை அந்த எதிர் வீட்டு தம்பி பவனோடது இல்ல?” என்று கேட்டாள்.

“ஆமா ஆமா அவனோடதே தான். ஒரு நிமிஷம் இருங்க ரெண்டு பேரும்… வீட்டுக்குள்ள வந்தது வராது கேள்வி கேட்டுகிட்டு. நான் முதல்ல இந்த சட்டையை மாற்றிவிட்டு வந்து இதை அவன் கிட்ட கொடுத்துட்டு அதுக்கப்புறம் வந்து உங்க கிட்ட பேசுறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக தன் அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

அறைக்குள் சென்றதும் பத்மா திரும்பி நிலானிடம் “ஏன் தங்கம் நான் இப்ப என்ன கேட்டுட்டேன்? உங்க அக்காவுக்கு இவ்வளவு கோபம் வருது. மது பாப்பா போட்டுட்டு இருந்த சட்டை எதிர்வீட்டு தம்பி வச்சிருந்த சட்டை மாதிரி இருக்குது தானே கேட்டேன். அதுக்கு ஏன் இப்படி கோச்சிட்டு போகுது” என்றால் பத்மா.

“யாருக்குத் தெரியும்? அவளே வந்து சொல்றேன்னு சொல்லி இருக்கா இல்ல. அது வரைக்கும் நம்ம எதுவும் கேட்க வேண்டாம் இல்லைனா இப்படித்தான் கத்துகிட்டு போவா” என்று சொல்லிவிட்டு நிலானி டிவி பார்க்க ஆரம்பித்தாள்.

ஐந்து நிமிடத்தில் தன் உடையை மாற்றி விட்டு கையில் பவனுடைய சட்டையோடு அறையை விட்டு வெளியே வந்த மது ஹாலில் அமர்ந்திருந்த இருவரையும் தாண்டி வெளியே சென்றாள்.

உடனே வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த பத்மா மது வெளியே சென்றதும் வேகமாக எழுந்து அவள் பின்னால் சென்றாள். மதுவின் பின்னால் சென்றவள் அவர்கள் வீட்டின் வாசல் கதவு அருகே நின்று கொண்டு மது எங்கு செல்கிறாள் என்று பத்மா பார்க்க…

மது பவனின் சட்டையை எடுத்துக் கொண்டு வேகவேகமாக நடந்து அவள் வீட்டைத் தாண்டி லிஃப்ட் அருகில் செல்ல… வீட்டுக்குள் இருந்த பத்மா லேசாக மது இருந்த இடத்தை எட்டிப் பார்க்க…

லிஃப்ட்டின் அருகில் சென்ற மது அங்கே பவன் நின்று இருக்க…. அவனிடம் தன் கையில் இருந்த அவன் சட்டையை நீட்டி “இந்தாங்க உங்க சட்டை போதுமா? கொண்டு வந்து கொடுத்துட்டேன்” என்று சொல்லி அவனிடம் நீட்ட…

பவன் சிரித்துக் கொண்டே “பரவாயில்லையே சொன்ன மாதிரியே அஞ்சு நிமிஷத்துல சட்டையை கொண்டு வந்து கொடுத்துட்டீங்க” என்று சொல்லிக் கொண்டு அவள் கையில் இருந்து சட்டையை வாங்கப் போக….

அப்போது சரியாக லிஃப்ட் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மதுவின் கையில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே திரும்பி இருவரும் லிஃப்ட்டை பார்க்க….

கதவு திறந்ததும் லிஃப்ட்டுக்குள்ளே ரவி நின்றிருந்தான். லிஃப்ட்டுக்குள் இருந்து ரவி வெளியே வர லிஃப்ட்டின் முன்பு மது தன் கையில் இருந்த சட்டையை பவன் கொடுக்கப் போக… அதை பவன் பிடித்திருக்க என அவர்கள் இருவரும் அந்த சட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்தவனுக்கு ஆத்திரமாக வந்தது. வேக வேகமாக லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்தவன் அவர்கள் கையில் இருந்த சட்டையை வெடுக்கு என்று பிடுங்கினான்.

அவனைப் பார்த்ததும் மதுவிற்கு உடல் எல்லாம் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. முன்பு கதிர் இருந்த தைரியத்தில் அவனை எதிர்த்துப் பேசினாள்.

அவனை இப்போது திடீரென்று இங்கே எதிர்பார்த்திராத மது என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டத்தில் அங்கே நின்று இருக்க…

தன் கையில் இருந்த சட்டையையும் பவனையும் மாறி மாறி பார்த்த ரவி. “என்னடா நீ வெறும் பனியன் கூட நின்னுட்டு இருக்க….அவ கையில சட்டையோடு நின்னுட்டு இருக்கா. என்ன நடக்குது இங்க. ரெண்டு பேரும் நிக்கிறத பார்த்தா அவ கையில இருக்குற சட்டை உன்னோடது தான் போல இருக்கே…” என்று கேட்டான் ரவி.

ரவியைப் பார்த்ததும் பவன் “ஆமாம்” என்று தலையாட்டி விட்டு “இது என்னோட சட்டைத் தான். அதுக்கு என்ன இப்போ…” என்று சொல்லிக் கொண்டு ரவியின் கையில் இருந்து தன் சட்டையைப் பிடுங்கி அவன் முன்னாலேயே அந்த சட்டையை போட்டுக் கொண்டான் பவன்.

“அதைத்தானடா நானும் கேட்கிறேன். உன் சட்டையை எதுக்கு அவ கைல வச்சிருந்தா?” என்று கேட்டான் ரவி.

“என் சட்டை ரொம்ப கசங்கி இருந்துச்சு. அதனால மது கிட்ட சொல்லி என் சட்டையை அவங்க கையால அயன் பண்ணி தர சொன்னேன். அவங்களும் என் சட்டையை நீட்டா அயன் பண்ணி கொடுத்தாங்க. அதுக்கு என்ன இப்போ?” என்று கேட்டான் பவன்.

“டேய் என் பொண்டாட்டி எதுக்குடா உன்னோட சட்டை அயர்ன் பண்ணி தரணும். அவ எனக்கே சட்டை அயன் பண்ணி கொடுத்ததில்லை” என்று சொன்ன ரவி. மதுவிடம் திரும்பி “ஏய் என்ன வேண்டாம்னு சொல்லிட்டு இங்க வந்து உன் தங்கச்சி கூட இருந்துட்டு அவ புருஷன் கூட கூத்தடிக்கிறது பத்தாதுன்னு. இப்படி போறவன் வரவன் கூட சேர்ந்துட்டு கூத்தடிச்சிட்டு இருக்கியா?” என்று நாக்கில் நரம்பில்லாமல் ரவி மதுவைப் பார்த்து கேட்க….

அவன் இப்படி பேசியதை கேட்டதும் மதுவிற்கு அழுகை வந்துவிட அவள் அங்கேயே அழ ஆரம்பித்தாள்.

இதையெல்லாம் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்த பத்மா நிலானியிடம் திரும்பி “கண்ணு உன் அக்காவுடன் பழைய புருஷன் வந்துட்டான். அவன் அந்த லிஃப்ட் முன்னாடி வச்சு உன் அக்காவையும் பவன் தம்பியையும் என்னமோ சொல்லி திட்டிக்கிட்டு இருக்கான். உங்க அக்கா அழுதுட்டு இருக்கா. வா பாப்பா சீக்கிரம் போய் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டு நிலானியின் வீல்சேரைத் தள்ளிக் கொண்டு பத்மா வீட்டை விட்டு வெளியே வர…

அப்போது லிஃப்ட்டின் அருகில் இருந்து ‘பளார்’ என்று அடிக்கும் சத்தம் கேட்க…. பத்மாவும் நிலானியும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்று பார்க்க பவன் ரவியின் கன்னத்தில் ஓங்கி ‘பளார்’ என்று அறைந்து இருந்தான்.

ரவி கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு பவனை பார்க்க… “என்ன அப்படி பார்க்கிற… மது உன்னோட பொண்டாட்டி கிடையாது. அவங்க உன்ன டைவர்ஸ் பண்ணி கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு…. இன்னும் நீ இங்க வந்து அவங்களுக்கு குடைச்சல் கொடுத்துட்டு இருக்க… அவங்களை இப்படி எல்லாம் பேசுவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கு” என்று சொன்ன பவன் மறுபடியும் ரவியின் மற்றொரு கன்னத்தில் அறைய…

இரண்டு கன்னத்திலும் கையை வைத்து தேய்த்துக் கொண்டே ரவி மதுவைப் பார்த்து “என்னை டைவர்ஸ் பண்ணிட்டா நீ என்னோட தொந்தரவு இல்லாம நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சுட்டியா. அன்னைக்கு ஒருத்தனை விட்டு என்னை அடிக்க வெச்ச…. இன்னைக்கு இன்னொருத்தனை என்னை அடிக்கிற… இன்னும் எத்தனை பேரை நீ எனக்குத் தெரியாமல் வச்சிருக்க?” என்று அந்த வார்த்தையை அழுத்தி சொல்ல….

“நான் எத்தனை பேரை வச்சிருந்தா உனக்கு என்னடா வந்துச்சு…. இனிமேல் நீ இந்த பக்கம் வந்தா போலீஸ்ல புடிச்சிக் கொடுத்துடுவேன்னு அன்னைக்கே சொன்னேனே. அதையும் மீறி இப்போ எதுக்கு இங்க வந்த” என்று சொன்ன மது தன் கையில் இருந்த போனில் போலீசுக்கு அழைக்க போக…. அவள் போலீசுக்கு அழைக்கிறாள் என்று தெரிந்ததும் ரவி வேகமாக லிஃப்ட்டுக்குள் சென்றவன் கதவை மூடும் பட்டனை அழுத்திவிட்டு மதுவையும் பவனையும் பார்த்து “ரெண்டு பேருக்கும் ஒரு நாள் இருக்கு” என்று சொல்லி அவர்கள் இருவரையும் எச்சரிக்க பவன் அவனை அடிக்க கை ஓங்கி விட்டு லிஃப்ட் அருகில் செல்லப் போக அதற்குள் லிஃப்ட் கதவு மூடி கொண்டது.

பத்மாவும் நிலானியும் மதுவின் அருகில் வந்து “என்ன ஆனது?” என்று கேட்க “ஒன்றும் இல்லை வாங்க போகலாம்” என்று தன் கண்ணை துடைத்துக் கொண்ட மது பவனை பார்த்து “ரொம்ப தேங்க்ஸ்” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குள் சென்று விட்டாள்.

நிலானியும் பத்மாவும் மதுவுடன் வீட்டுக்குள் சென்று விட… பவன் அவன் வீட்டிற்கு சென்றான்.

வீட்டிற்குள் சென்ற பவன் நேராக தன் அறைக்குள் சென்று கதவை சாற்றி விட்டு கண்ணாடியின் முன் சென்று நின்றவன்.

தன் சட்டையை மது அணிந்து அவனிடம் கொடுத்திருக்க… கண்ணாடியின் முன் நின்று தன்னையே பார்த்துக் கொண்ட பவன்.

தன்னையே ஒருமுறை கட்டிப்பிடித்தவன் முகத்தருகில் சட்டை காலரை கொண்டு வந்த பவன் ஆழ்ந்த மூச்சு எடுத்து தன் சட்டையில் உள்ள மதுவின் வாசத்தை முகர்ந்து பார்த்து சந்தோஷப்பட்டான்.

“ஐயோ…. என்னோட சட்டையில் மதுவோட வாசமே இப்படி இருக்கே…. இதுக்கு தான் என் சட்டையை இப்பவே வேணும்னு உன்கிட்ட அடம் பிடிச்சு வாங்கனேன். நீ பாட்டுக்கு சட்டையை துவைக்கிறேன்னு சொல்லி வாங்கிட்டா அப்புறம் எப்படி இந்த ஃபீல் எல்லாம் எனக்கு கிடைக்கும்” என்று தனக்கு தானே மதுவை மனதில் நினைத்து பேசிக் கொண்டான்.

அதன் பின் அவள் அணிந்து கொடுத்த சட்டையை போட்டுக் கொண்டே மதுவை கட்டிப் பிடிப்பது போல நினைத்து படுத்து தூங்கி விட்டான்.

❤️

கீர்த்திகா தன் பெற்றோருடன் அவள் வீட்டிற்கு வந்துவிட அவர்களை சமாதானப்படுத்துவதற்காக ஆதி, விக்கி, கதிர் மூவரும் கீர்த்திகாவின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

ஆதியின் கார் கீர்த்திகாவின் வீட்டு வாசலில் வந்து நிற்கவும் அனைவரும் திரும்பி கீர்த்திகாவின் வீட்டு வாசலை பார்க்க…. தங்களை எதிர்பார்த்தோ என்னவோ வாசலில் யாருமில்லாமல் போகவே கஷ்டமாக இருந்தது.

ஏனென்றால் ஆதியின் வீட்டில் இருந்து கார் வரும் சத்தம் கேட்டாலே முதல் ஆளாக ஓடி வந்து பார்ப்பது கீர்த்திகா தான். ஆனால் இன்று அவள் இவர்களை எதிர்பார்த்து வந்து பார்க்கும் மனநிலையில் இல்லை.

காரை விட்டு இறங்கிய மூவரும் கீர்த்திகாவையும் அவள் பெற்றோரையும் பார்க்க உள்ளே செல்ல…

ஆதி வீட்டில் இருந்து வந்த மூவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் ஆளுக்கு ஒரு மூலையில் சோகமாக அமர்ந்து இருந்தனர்.

கீர்த்திகா தான் விடாமல் அழுது கொண்டு அமர்ந்திருந்தாள்.

சோஃபாவில் ஒரு ஓரமாக சாய்ந்து கால்களை குறுக்கிக் கொண்டு தன் மடியில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்த கீர்த்திகாவைக் கண்டு உள்ளே வந்த மூவருக்கும் அவர்களை இப்படி பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.

இவர்கள் மூவரும் வந்தது கூட தெரியாமல் கீர்த்திகாவும் அவள் பெற்றோரும் துர்காவுக்கும் தங்களுக்குமான இடையில் இருந்த உறவு போய்விட்டது என்று நினைத்து மிகவும் சோகத்தில் இருந்தனர்.

உள்ளே வந்து ஆதி கீர்த்திகாவின் அருகில் சென்று அவள் தலையை வருடி கொடுத்து அவளை அழைக்க….

அழுது கொண்டிருந்த கீர்த்திகா ஆதியைப் பார்த்ததும் “மாமா….” என்று ஆதியைக் கட்டிக்கொண்டு அழுதாள் கீர்த்திகா.

அவளை தன் தோளோடு சாய்த்து அவள் முதுகை ஆதரவாக தடவி கொடுத்த ஆதி. “இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படி அழுகிற கீர்த்திகா? அழாதே…” என்ற ஆதி முருகனையும் வடிவையும் பார்த்து

“அத்தை மாமா நீங்க செஞ்சது உங்களுக்கே ஒன்னும் நல்லா இருக்கா? இப்படி அங்கே இருக்கிறவர்கள் யார்கிட்டயும் சொல்லிக்காம நீங்க மூணு பேரும் கிளம்பி வந்துட்டீங்க… இப்படி நீங்க யார்கிட்டயும் சொல்லாமல் வந்ததைப் பார்த்தால் நீங்க எங்க எல்லாரையுமே வேண்டாம்னு ஒதுக்கிட்டு வந்ததாத் தானே அர்த்தம்?” என்று கேட்டான் ஆதி.

“மாப்பிள்ளை என்ன வார்த்தை சொல்லிட்டீங்க… நாங்க அந்த மாதிரி எல்லாம் நினைக்கவே இல்லை” என்று சொன்னார் முருகன்.

“நீங்க உண்மையாவே என்னை உங்க மாப்பிள்ளையா நினைச்சிருந்தா எப்படி யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம வந்து இருப்பீங்களா?” என்று கேட்டான் ஆதி.

முருகன் எதுவுமே பேசாமல் இருக்க… வடிவு ஆதியின் அருகில் வந்தவர். “மாப்பிள்ளை எத்தனை வருஷமா நீங்க எல்லாரும் காணோம் என்று தேடிக்கிட்டு இருந்த உங்க வீட்டு சொத்தை… யாருக்கும் தெரியாமல் இவ்வளவு நாளா நாங்க தான் வச்சிருந்தோமே. இதெல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் உங்க வீட்ல இருக்குற ஆளுங்க எல்லாரும் இன்னமும் எங்களுடன் பழையபடி பேசி அது உரிமையோடு பழகுவாங்கன்னு நாங்க எதிர்பார்க்க முடியுமா மாப்பிள்ளை. அதனாலதான் நாங்க மூணு பேரும் இனியும் அங்கு இருக்கிறது சரி வராது என்று சொல்லிட்டு அங்கிருந்து உங்க யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி வந்துட்டோம்” என்று அழுது கொண்டே சொன்னார் வடிவு.

“அப்படி எல்லாம் நீங்க ஏன் அத்தை நினைக்கிறீங்க… பாருங்க உங்களை சமாதானப்படுத்தி அழைச்சிட்டு வரச் சொல்லி என்னை இங்கே அனுப்புனதே கனகா அத்தை தான். என் அம்மாவும் தான் உங்களை பார்த்து பேசி நீங்க எதுவும் மனசு வருத்தப்பட்டு விடக்கூடாதுன்னு சொல்லித்தான் எங்க மூணு பேரையும் உங்களைப் பார்க்க இங்கே அனுப்பி வச்சாங்க” என்று சொன்னான் ஆதி.

“ஆமா வடிவு நீ இப்படி பாதியிலேயே எங்க யார்கிட்டயும் சொல்லாமல் வந்தது எங்களுக்கு வருத்தமா தான் இருக்குது” என்று சொல்லிக் கொண்டு அவர்கள் வீட்டிற்குள் விசாலாட்சி வர….

அனைவரும் வாசலை திரும்பிப் பார்க்க விசாலாட்சி உடன் வெங்கடாசலம், செண்பகம் வடிவையும் அவர் குடும்பத்தையும் தேடி வந்திருந்தனர்.

விசாலாட்சி எப்போதும் போல சகஜமாக பேசிக்கொண்டே அவர்கள் வீட்டிற்குள் வரவும். வடிவு வேகமாக ஓடிச் சென்று விசாலாட்சியைக் கட்டிக்கொண்டு “அண்ணி” என்று அழ ஆரம்பித்தார்.

“நீ இந்த உரிமையை இன்னுமும் மனசுல வச்சிருந்தேன்னா இப்படி பாதியிலேயே வந்து இருப்பியா என்கிட்ட எதுவும் சொல்லாமல்” என்று விசாலாட்சி வடிவை கடிந்து கொண்டார்.

“அண்ணி அது வந்து எங்களுக்குன்னு இனி அந்த வீட்டில் என்ன உரிமை இருக்குன்னு அங்கே இருக்க முடியும்?” என்று கேட்டார் வடிவு.

“ஏன் அப்படி சொல்ற வடிவு? நீயும் செண்பகம் மாதிரி எனக்கு ஒரு தங்கச்சி போல தான். வாய் நிறைய அண்ணன்னு கூப்பிடுறப்போ உண்மையாவே செண்பகம் போல தான் நானும் உன்னை நினைச்சுட்டு இருந்தேன்” என்று சொன்னார் வெங்கடாசலம்.

“இப்படி சொல்லாம கொள்ளாம வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை” என்று சொன்னார் வெங்கடாசலம்.

வடிவிடம் வந்து நின்று செண்பகம் வடிவை பார்த்து… “இவ்வளவு நாளா நாங்க எல்லாரும் உன்கிட்ட பழகினது எல்லாம் பார்த்தும் நாங்க எப்படி உன்னை ஒதுக்கி வெச்சிடுவோம் என்று நீ முடிவு பண்ணின வடிவு? இது தப்பு தானே” என்று கேட்டார் செண்பகம்.

“செண்பகம்” என்று வடிவு கண்களில் கண்ணீரோடு செண்பகத்தின் கையைப் பற்றிக் கொண்டு அழ… அவரை சமாதானப்படுத்த அங்கிருந்து அனைவரும் முயற்சி செய்தனர்.

ஆதியின் தோளில் சாய்ந்து கொண்டிருந்த கீர்த்திகா. ஆதியை நிமிர்ந்து பார்த்து “மாமா…. நானும் என் அம்மா அப்பாவும் அக்காவை பார்க்கணும்னா உங்க வீட்டுக்கு வந்தா நீங்க எல்லாம் எங்களை எதுவும் சொல்ல மாட்டீங்க தானே?” என்று கேட்டாள் கீர்த்திகா.

அவள் சொன்னதைக் கேட்ட வெங்கடாசலம். “நீ எப்போதும் போல நம்ம வீட்டுக்கு வரலாம் கீர்த்திகா. இது என்ன இப்படி ஒரு கேள்வி கேக்குற நீ… அதுவும் உன் வீடு தான்” என்று சொன்னார் வெங்கடாசலம்.

ஆதியிடமிருந்து எழுந்து சென்ற கீர்த்திகா வெங்கடாசலத்தை கட்டிக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் மாமா” என்று சொல்லி அழுதாள்.

“இப்படி எல்லாம் கேள்வி கேட்டு எங்க எல்லாரையும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்காத கீர்த்திகா. உனக்கு அந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கு” என்று சொன்னார் விசாலாட்சி.

“எங்களுக்கு இனிமேல் அந்த வீட்டில் என்ன உரிமை இருக்குது அக்கா. துர்கா தான் எங்க வீட்டு பொண்ணு இல்லைன்னு ஆயிடுச்சே. இனிமேல் நான் என் துர்காவைக் கட்டிக் கொடுத்த வீடு என்று சொல்லி அங்க வர முடியுமா என்ன. துர்கா எங்க பொண்ணு இல்லையே… ரொம்ப நாளா என் பொண்ண கட்டி கொடுத்த வீடுன்னு சொல்லி உரிமையோடு நான் வந்தேன். இப்போ அதுக்கு வாய்ப்பு இல்லாமல் போயிடுச்சே…. ஏற்கனவே கனகாவுடைய வீட்டுக்காரருக்கு எங்களை கண்ட அவ்வளவா பிடிக்காது. இத்தனை நாளா அவர் பொண்ண நாங்க தான் வச்சிருந்தோம்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் அந்த வீட்டுக்குள்ள வந்தா அவர் எங்களை எப்படி நடத்துவார்னு எங்களுக்கு தெரியாதா அக்கா? கனகா மாதிரி அவர் வீட்டுக்காரர் இல்லையே” என்று சொன்னார் வடிவு.

“இவ்வளவு விஷயம் நடந்ததுக்கு அப்புறமும் நீங்க எங்களை எப்போதும் போல உரிமையா என் வீட்டுக்கு வாங்கன்னு சொல்றீங்களே அது உங்க பெருந்தன்மை. ஆனா இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் செஞ்சுட்டு நாங்க எப்படி உரிமையோட உங்க வீட்டுக்குள்ள வர முடியும்” என்று கேட்டார் வடிவு.

“இவ்வளவு நாளா எங்க பொண்ணு துர்கா அங்கே இருக்கான்னு உரிமையில உங்க வீட்டுக்கு வந்துட்டிருந்தோம். துர்கா எங்க பொண்ணு இல்லனா அதுக்கப்புறம் எங்களுக்கு அந்த வீட்டில் எந்த உரிமை இருக்கு?” என்று சொல்லி வடிவு தன் முந்தானையில் முகம் புதைத்து அழுதார்.

வடிவு பேசியதெல்லாம் கேட்டு உணர்ச்சிவசமடைந்த விசாலாட்சி வடிவின் முகத்தை நிமிர்த்தியவர் “வீட்டில் நீ உரிமையோடு எப்போதும் போல வரணும் என்றால் உன் பொண்ணு கீர்த்திகாவை என் பையன் கதிருக்கு கல்யாணம் பண்ணி கொடுங்க” என்று வடிவின் கையைப் பிடித்து கேட்டார் விசாலாட்சி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured