Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 117

உன் ரகசிய ரசிகை நான் 117

by Layas Tamil Novel
219 views

விசாலாட்சி திடீரென்று வடிவிடம் கீர்த்திகாவைத் கதிருக்குத் திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டதும் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதைவிட அதிர்ச்சியானது கீர்த்திகாவும் கதிரும்தான். விசாலாட்சி அப்படி சொன்னதும் கீர்த்திகாவும் கதிரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சொல்ல முடியாத உணர்வுகளோடு அங்கே நின்றிருந்தனர்.

விசாலாட்சி இடம் வந்த வெங்கடாசலம் “வடிவு நீ புரிஞ்சுதான் பேசுறியா…. கதிருக்கு ஏற்கனவே ராதாவுடன் நிச்சயம் ஆயிடுச்சுன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா?” என்று கேட்டார் வெங்கடாசலம்.

ஆதியும் கூட விசாலாட்சியிடம் அதே கேள்வியைத்தான் கேட்க நினைத்து அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

விசாலாட்சி “எனக்கு எல்லாமே தெரியுங்க. அதெல்லாம் மறந்துட்டு தான் நான் இப்ப இப்படி பேசுறேன்னு நீங்க நினைக்கிறீங்களா…. நீங்களே பார்த்தீங்கள்ல? இவங்க மூணு பேரும் துர்காவுக்கும் இவங்களுக்கும் எந்த உறவும் இல்லை என்று எல்லாருக்கும் தெரிஞ்சதுக்கப்புறம் எவ்வளவு உடைஞ்சு போய் கஷ்டப்பட்டு இருக்காங்கன்னு. இத்தனை நாள் நாம இவங்களுக்குக் கொடுத்த மரியாதையையும், அன்பையும் அதேபோல திருப்பிக் கொடுக்கணும்னா இந்த ஒரு வழியை தவிர்த்து வேறு எதுவுமே இல்லை. என்னதான் இவங்க துர்காவைப் பார்க்க உரிமையா நம்ம வீட்டுக்குள்ள வந்தாலும். ஏதோ ஒரு நேரத்துல ஏதோ ஒரு சூழ்நிலையில நமக்கே தெரியாம நம்ம எதுவும் சொல்லிட்டாலோ அல்லது நடந்துகிட்டாலோ இவங்க மூணு பேருக்குமே நம்ம செய்ற ஒவ்வொரு விஷயமும் அவங்க மனசுல அவங்களுக்கும் நம்ம வீட்டுக்கும் இருக்க உறவை அவங்களுக்கு அன்னியமாகத்தான் காட்டும். காலப்போக்குல அதுவே அவங்களுக்கு இன்னும் வருத்தத்தைக் கொடுக்கும். அந்த வருத்தத்தைப் போக்கணும்னா… எப்படி துர்காவை நம்ம வீட்டுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து உரிமையா அவங்க நம்ம வீட்டுக்கு வந்தாங்களோ…. அதே உரிமையோடு முழு மனசோட நம்ம வீட்டுக்கு வரணும்னா கீர்த்திகாவை கதிருக்குக் கல்யாணம் பண்ணி கொடுப்பது தவிர்த்து வேறு வழியே இல்லைங்க. அப்போதான் அவங்களுக்கு தன் ரெண்டு பொண்ணுங்களையும் ஒரே இடத்தில இருக்காங்கங்கிற உரிமையோடு நம்ம வீட்டுக்குள்ள வர முடியும். அவங்கள வேற யாரும் எதுவும் சொல்ல முடியாது” என்று சொன்னார் விசாலாட்சி வெங்கடாசலத்திடம்.

“நீ சொல்றது எனக்கு புரியுது விசாலாட்சி. ஆனா உன் இதுக்கு உன் தம்பி ஒத்துக்கணுமே… எல்லாத்தையும் விட முதல்ல கீர்த்திகா கதிருடன் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கணுமே” என்று கேட்டார் வெங்கடாச்சலம்.

வெங்கடாசலம் அப்படிச் சொன்னதும் நேராக விசாலாட்சி கீர்த்திகாவின் அருகில் வந்தவர் கீர்த்திகாவின் கையைப் பிடித்து “நீ சொல்லுமா? உனக்கு என் பையனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே?” என்று கேட்டார் விசாலாட்சி.

கீர்த்திகாவிற்கு ஒரு புறம் கதிரையே தனக்கு திருமணம் செய்து கொடுக்க கேட்கிறார்கள் என்று சந்தோஷமாக இருந்தாலும். ஆனால் “நான் சம்மதம் தெரிவித்துவிட்டால் ராதாவின் நிலை என்ன ஆகும்? அவள் இந்த கல்யாணத்தை நினைத்து எவ்வளவு கனவு கண்டு இருப்பாள். தன்னால் அவள் வாழ்க்கை வீணாகக் கூடாது” என்று தன் தோழியை நினைத்து மிகவும் வருந்தினாள் கீர்த்திகா.

கீர்த்திகா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… விசாலாட்சி மறுபடியும் கீர்த்திகாவிடம் “உன் மனசுல என்ன நினைக்கிறியோ அதை தைரியமா சொல்லுமா… உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி அவளுக்கு தைரியம் சொன்னார்.

கீர்த்திகா ஒரு முறை கதிரை பார்த்துவிட்டு “அத்தை என்கிட்ட இந்த கல்யாணத்துக்கு சம்மதம் கேட்கிறதுக்கு முன்னாடி ராதா கிட்டயும் அவங்க அம்மா அப்பாகிட்டையும் முதல்ல பேசுங்க… அவங்க என்ன சொல்றாங்களோ அதுதான் என்னோட முடிவு. எங்களால் இனியும் உங்க குடும்பத்துல எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது. இதில் முடிவைவிட ராதாவின் முடிவு தான் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த கல்யாணத்தை நினைத்து எவ்வளவு கனவு கண்டிருப்பாளோ யாருக்கு தெரியும்? அந்த கனவை கலைக்க நான் விரும்பல…. ராதாவோட வாழ்க்கையும் இதில் சம்பந்தப்பட்டிருக்கு அத்தை. அவ என்னோட நல்ல தோழி. அவளை நான் இழக்க விரும்பல அத்தை. அவ முடிவு தான் என் முடிவும்” என்று தன் மனதில் இருந்ததை அப்படியே சொல்லிவிட்டால் கீர்த்திகா.

அப்போது ஆதி கீர்த்திகாவைப் பார்த்து “அப்ப ராதா கதரைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா… நீயும் சரின்னு கதிருக்கும் ராதாவுக்கும் கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிடுவியா?” என்று கேட்டான்.

ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் “ஆமாம் மாமா” என்றால் கீர்த்திகா கதிரை பார்த்துக் கொண்டே…

கீர்த்திகா சொன்னதைக் கேட்ட விசாலாட்சி அங்கிருந்தவர்கள் அனைவரையும் பார்த்து “எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க. ராதாவை இந்த கல்யாணத்துக்கு எப்படி சம்மதிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும். கதிருக்கும் கீர்த்திகாவுக்கும் தான் கல்யாணம் நடக்கணும்… நடக்கும். வடிவு நான் சொன்னா சொன்னதுதான். இதை நீ மறுக்க கூடாது” என்று சொல்லிய விசாலாட்சி “கதிருக்கும் ராதாவுக்கும் எந்த தேதியில் கல்யாணம் முடிவு செய்தோமோ…. அதே தேதியில் கீர்த்திகாவுக்கும் கதிருக்கும் நிச்சயம் கல்யாணம் நடக்கும். வாங்க போகலாம்” என்று சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றார் விசாலாட்சி.

என்றுமே அதிர்ந்து பேசாத விசாலாட்சி இன்று தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.


துர்காவுடன் துரையும் கனகாவும் இருக்க… ஷிவுவும் ராதாவும் இவ்வளவு நேரம் துர்காவுடன் இருந்து அவளுடன் பேசி சந்தோஷமாக இருந்தவர்கள் துர்கா சிறிது நேரம் ஓய்வு எடுக்கட்டும் என்று அவரவர்கள் ரூமிற்கு சென்று விட்டனர்.

ராதா தன் ரூமிற்கு வந்ததும் முதல் வேலையாக சந்தோஷிற்கு தான் போன் செய்தால்.

சந்தோஷும் ராதாவின் அப்பா வந்து சந்தோஷிடம் பேசி விட்டு சென்றதிலிருந்து ராதாவிடம் பேச நிறைய முறை கால் செய்ய அவள் எடுக்காமல் போகவே சரி அவளாகவே கூப்பிடட்டும் என்று அவளுக்காக காத்திருந்தவன் ராதா அழைத்ததும் போனை எடுத்து காதில் வைத்தவன். “ஏ குட்டச்சி … உனக்கு எவ்வளவு முறை கால் பண்றது? ஏன் போனை எடுக்கவே இல்ல?” என்று சந்தோஷ் கேட்டான்.

சந்தோஷ் இடம் துர்காவைப் பற்றி கூற ஆவலாக தன் அறைக்கு வந்து அவனுக்கு கால் செய்த ராதா சந்தோஷ் இப்படி கேட்டதும் “டேய் வாத்தி! இப்போ என்ன ஆச்சு உனக்கு… நீ கூப்பிட்ட உடனே அப்படியே ஓடி வந்து போன் எடுத்து இருக்கணுமா…. எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா?” என்றால் அவனை வம்பு இழுக்க…

“சரி சரி. நான் கூப்பிட்டால் உனக்கு போன் பேச நேரமில்லாம மேடம் அவ்வளவு பிஸியாவா இருக்கீங்க…. போய் அந்த வேலையே பாக்க வேண்டியதுதானே… இப்ப எதுக்கு எனக்கு போன் பண்ணினே? பேசாம போனை வை” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான் சந்தோஷ்.

சந்தோஷ் இப்படி திடீர் என்று போனை கட் செய்யவும் ராதா திரும்பவும் அவனுக்கு கால் செய்ய….

அவள் திரும்பவும் அழைத்ததும் போனை அட்டென்ட் செய்து வெறுமனே காதில் வைத்துக் கொண்டு சந்தோஷ் பேசாமல் இருக்க….

“என்ன சாருக்கு கோபம் வந்துருச்சு?” என்று கேட்டாள் ராதா.

சந்தோஷ் “ம்ம்ம்…” என்று மட்டும் பதில் சொன்னான்.

“சரி சரி கோவிச்சுக்காத. நான் உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் போன் பண்ணினேன்” என்று சொன்னால் ராதா.

“என்ன சந்தோஷமான விஷயம்? உன் கல்யாணம் நின்னுருச்சா?” என்று கேட்டான் சந்தோஷ்.

“நான் அன்னைக்கு சொன்னது தான் இன்னிக்கும். நீயா முயற்சி பண்ணி என் கல்யாணத்தை நிறுத்தலைன்னா நான் கதிர் மாமா கூட இந்த கல்யாணத்தை பண்ணிக்க தான் போறேன்” என்று சொன்ன ராதா. “அதெல்லாம் விடு. அந்த விஷயத்தை அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல நான் சொல்ல வரத கேளு” என்று சொல்லிவிட்டு துர்காவைப் பற்றி இன்று நடந்தது அனைத்தையும் சந்தோஷிடம் ஒன்று விடாமல் கூறினாள் ராதா.

தனக்கு புது உறவு கிடைத்துவிட்டது என்று ராதா மிகவும் சந்தோஷமாக சந்தோஷிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள….

அவள் இவ்வளவு சந்தோசமாக தன்னிடம் பேசுவதைக் கேட்ட சந்தோஷிற்கு, அவளின் இந்த சந்தோஷமான தருணத்தை தனக்கும் அவள் அப்பாவிற்கும் இடையில் நடந்த விஷயங்களை இப்போதைக்குச் சொல்லி, அவளுடைய சந்தோஷத்தைக் கெடுக்க வேண்டாம் என்று அதை சொல்லாமலே விட்டு விட்டான்.

தான் சொல்ல வந்த விஷயங்கள் அனைத்தையும் ராதா சந்தோஷிடம் கூறி முடித்தவள். “யோவ் வாத்தி… எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு உனக்கு தெரியுமா? முதலிலேயே துர்கா அக்கா என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க… இப்ப நான் தான் அவங்களோட உண்மையான தங்கச்சின்னு தெரிஞ்சது இன்னும் எவ்வளவு சந்தோஷப்பட போறாங்களோன்னு எனக்கு தெரியல. ஆனா இப்போ அதையெல்லாம் அவங்க உணரும் நிலை இல்லை” என்று சொன்னாள் ராதா சோகமாக.

“ஏன் அப்படி சொல்ற ராதா? இப்ப தானே சொன்னேன் நீ உன்னையும் உன் அக்காவையும் பார்த்து துர்கா ரொம்ப பாசமா பேசினாங்க…. சந்தோஷமா உங்க கூட பேசி சிரிச்சாங்கன்னு சொன்ன…. ஆனா இப்போ என்னடான்னா அவங்களுக்கு அதெல்லாம் உணர நிலைமையில் இல்லைன்னு சொல்ற? ஏன்?” என்று கேட்டேன் சந்தோஷ்.

“துர்கா அக்கா டென்மார்க்ல இருந்தப்போ அவங்களுக்கு ஒரு ஆக்சிடென்ட் ஆகி தலையில் அடி பட்டு பழசை எல்லாம் மறந்துட்டாங்க… எப்படியும் அவங்களுக்கு குணமாகி வர கொஞ்ச நாள் ஆகும்னு டாக்டர் சொன்னதா எங்க ஆதி மாமா சொன்னாரு. துர்கா அக்கா முழுசா குணமாகி வரப்போ என்னையும் என் அக்காவையும் எப்படி எடுத்துப்பாங்கன்னு எனக்கு தெரியல” என்று சொன்னாள்.

“நீ ஒன்னும் கவலைப்படாத குட்டச்சி. எல்லாம் சரியாயிடும். உங்க துர்கா அக்கா நினைவு திரும்பிய பிறகு உன்கிட்ட இப்போ இருக்கிறத விட இன்னும் நல்லாவே பாசமா நடந்துப்பாங்க பாரு” என்று சொன்னான் சந்தோஷ்.

சந்தோஷ் இப்படி நல்ல விதமாக சொல்லவும் ராதாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாகப் போக “தேங்க்யூ…..” என்று சொல்லி ஃபோனிலேயே அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள் ராதா.

“இந்த முத்தத்தை நேரில் வந்து கொடுத்தா நல்லா இருக்கும்” என்றான் சந்தோஷ்.

“அப்போ என் கதிர் மாமா கூட நடக்க இருக்க என் கல்யாணத்தை நிறுத்தி என்னை கல்யாணம் பண்ணிக்க…அப்பறம் பாரு என்னை” என்றாள் ராதா.

அவள் பேசியதைக் கேட்டு ஆவலான சந்தோஷ் “அப்படியா? என்ன பண்ணுவே? முத்தம் மட்டும் கொடுக்காம….” என்று சொல்லி இழுக்க….

“ஏய்… சி… போடா…. வாத்தி” என்று சொல்லி அவள் போனை வைத்து விட்டாள்.

வெங்கடாசலம் விசாலாட்சியுடன் ஆதியும் கதிரும் அவர்கள் வீட்டிற்குச் சென்று விட.. தன் புது மனைவியைப் பார்க்கும் ஆவலில் விக்கி தன்னுடைய அப்பார்ட்மெண்ட்டுக்கு கிளம்பினான்.

விக்கி நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வருகிறான் என்று அவனை வரவேற்பதற்காக விருந்துகள் எல்லாம் தடபுடலாக அவன் வீட்டில் செய்யப்பட்டிருந்தது.

நிலானி விக்கியைப் பார்ப்பதற்காக மிகவும் ஆவலாக இருந்தாள். அழகாக உடை உடுத்தி லைட்டாக மேக்கப் போட்டு தன்னுடைய வீல்சேரில் ஹாலில் அமர்ந்து விக்கியை எதிர்பார்த்து நிலானி காத்திருக்க…

விக்கி வருகிறான் என்பதற்காக பத்மாவும் மதுவும் சேர்ந்து தடபுடலாக சமையல் செய்து கொண்டிருந்தனர்.

இவ்வளவு நாள் நிலானிக்கு தன் உடல்நிலை சரியாகவில்லை என்று ஒருபோதும் நினைத்துக் கவலை கொண்டதில்லை. ஆனால் இன்று அவள் கணவன் முதன்முதலாக திருமணத்திற்கு பின்பு வெளியே சென்று விட்டு நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வரும் பொழுது அவனுக்காகத் தான் பார்த்து பார்த்து சமையல் செய்து அவனுக்கு பிடித்தது கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால். ஆனால் தனது உடல் இருக்கும் நிலையில் தன்னால் இதையெல்லாம் செய்ய முடியவில்லை என்று நினைத்து மிகவும் வருந்தினாள்.

அடிக்கடி தான் அமர்ந்திருந்த வீல்சேரை நகர்த்தி கொண்டு போய் வாசலில் நின்று லிஃப்ட் சத்தம் கேட்கும்போது விக்கி வருகிறானா என்று எட்டிப் பார்ப்பதும். அவன் வரவில்லை என்றதும் திரும்பவும் வீட்டுக்குள்ளே வந்து சோகமாக இருப்பதுமாக வாசலுக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருந்தாள் நிலானி.

அவள் படும் அவஸ்தையைப் பார்த்த மது நிலானிக்கு தெரியாமல் சமையல் அறையில் இருந்துகொண்டே நிலானியை வீடியோ எடுத்து அதை விக்கிக்கு அனுப்பி வைத்து. “Your darling is waiting” என்று அந்த வீடியோவிற்கு கீழ் போட்டு அனுப்பி இருந்தாள்.

கீர்த்திகாவை கதிருக்கு திருமணம் செய்து கொடுக்கச் சொல்லி விசாலாட்சி துர்காவின் அம்மாவிடம் கேட்டதே குறித்து யோசித்துக் கொண்டு இருந்த விக்கிக்கு. மொபைலில் நோட்டிபிகேஷன் சவுண்ட் வந்ததும் யார் என்று பார்ப்பதற்காக மொபைலை எடுத்துப் பார்க்க… மது தான் அவனுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாள். மது தனக்கு அப்படி என்ன அனுப்பி இருக்கிறாள் என்று மெசேஜ் ஓப்பன் செய்து பார்க்க அதில் வீடியோ ஒன்று வந்திருக்கவும் அதை ப்ளே செய்து பார்க்க….

நிலானி அவன் வீட்டு வாசலுக்குத் திரும்பவும் ஹாலுக்கும் ஆக தன் வீல்சேரைத் தள்ளிக்கொண்டு இங்கும் அங்கும் அலைவது அந்த வீடியோவில் இருக்க…. அந்த வீடியோவுக்கு கீழே மது அனுப்பி இருந்த வாசகத்தைப் படித்தவன் நிலானி தனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்து விக்கிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

டிரைவரிடம் சொல்லி காரை சீக்கிரமாக தன் வீட்டிற்கு ஓட்டிச் செல்ல சொன்ன விக்கி அனுப்பிய வீடியோவை திரும்ப திரும்ப போட்டு பார்த்து சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தான் விக்கி.

அப்பார்ட்மென்ட் வந்ததும் காரில் இருந்து இறங்கிய விக்கி டிரைவர் இடம் “லக்கேஜ் எல்லாம் மேல கொண்டு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக லிஃப்ட்டுக்கு வந்து லிஃப்ட்டில் ஏறி தன் அப்பார்ட்மெண்ட்க்கு வர…

லிஃப்ட் வரும் சத்தம் கேட்டதும் விக்கியாக இருக்குமோ என்று ஹாலில் இருந்த நிலானி வீல்சேரைத் தள்ளிக்கொண்டு வேகமாக வாசலுக்கு வர….

அப்போது சரியாக லிஃப்ட்டில் இருந்து விக்கியும் வெளியே நிலானி தனக்காக காத்திருக்கிறாளா… என்று ஒரு எதிர்பார்ப்புடன் அவனும் வேகமாக லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்தவன் அவன் வீட்டை நோக்கி வர….

இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்துக் கொண்டே வெளியே வர…. வீட்டுக்குள் இருந்து நிலானி எட்டிப் பார்க்கவும் லிஃப்ட்டில் இருந்து விக்கி வரவும் சரியாக இருந்தது.

இருவரும் எதிர்பார்ப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள…. விக்கியைப் பார்த்ததும் நிலானிக்கு வெட்கம் வந்துவிட உள்ளே செல்லவா வெளியே செல்வதா…..என்று தெரியாமல் வெட்கப்பட்டு கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தன் சுடிதார் துப்பட்டாவை கையில் பிடித்து கசக்கிக் கொண்டு அங்கேயே இருக்க….

தன்னைப் பார்த்ததும் வெட்கப்பட்ட நிலானியின் முகத்தைப் பார்த்தவனுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

நிலானியை நோக்கி விக்கி வேகமாக வந்தவன் அவள் அருகில் வந்து வீல் சேரின் அருகில் முட்டி போட்டு அமர்ந்து நிலானியின் கையைப் பிடித்த விக்கி “நிலா குட்டி எப்படி இருக்க” என்று அவளைப் பார்த்து கேட்டான் விக்கி.

விக்கியின் முகத்தை நேருக்கு நேராக பார்க்க வெட்கப்பட்ட நிலானி அவனை ஒரு முறை பார்த்துவிட்டு “ம்ம்ம்…” என்று வெட்கப்பட்டுக் கொண்டே தன் தலையை மட்டும் ஆட்டினாள்.

“உன்ன பார்க்க மாட்டியா நிலா குட்டி…. உன்ன பாக்கணும்னு தான இவ்வளவு ஆசையா வந்தேன். என் முகத்தைக் கூட பார்க்க மாட்டேங்கறியே போ….” என்று அவளிடம் பொய் கோபம் காட்டினான்.

விக்கி கோபப்பட்டு விட்டானோ என்று பதறிய நிலானி வேகமாக நிமிர்ந்து விக்கி முகத்தைப் பார்க்க விக்கியும் அவள் கண்டிப்பாக தன்னைப் பார்ப்பாள் என்பது போல எதிர்பார்த்தவன் நிலானி தன்னைப் பார்த்ததும் சட்டென நிமிர்ந்து அவள் முகத்தைத் தன் இரு கைகளாலும் பிடித்து வாசலில் வைத்தே அவள் இதழில் முத்தம் ஒன்றை பதித்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured