கதிருக்கும் கீர்த்திகாவுக்கும் திருமணம் செய்து வைக்க கனகாவும் ராதாவும் சம்மதித்துவிட…
விசாலாட்சி துரையிடம், “இப்போ உன்னோட சம்மதம் மட்டும் தான் எங்களுக்கு வேண்டும் துரை. நீ என்ன மனசுல நினைக்கிறாயோ, உன் முடிவு என்னவோ, அதை அப்படியே எங்க கிட்ட சொல்லு,” என்று கேட்டார்.
“எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் இல்லைன்னு நான் சொன்னா என்ன அக்கா பண்ணுவ?” என்று கேட்டார் துரை, விசாலாட்சியிடம்.
“உனக்கு விருப்பம் இல்லாம, உன் பேச்சை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன் துரை,” என்று சொன்னார் விசாலாட்சி.
விசாலாட்சி அப்படிச் சொன்னதும், “எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை அக்கா. இதுதான் என்னோட முடிவு,” என்று சொன்னார் துரை.
துரையின் முடிவைக் கேட்டதும் அங்கிருந்த அனைவருக்கும் சற்று வருத்தமாகத்தான் இருந்தது.
கதிர் எப்படியும் தன் அம்மா வீட்டில் இருக்கும் அனைவரிடமும் தனக்கும் கீர்த்திகாவுக்கும் திருமணம் செய்து வைக்கச் சம்மதம் வாங்கிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தவனுக்கு, துரை இப்படிச் சொல்லவும் என்ன செய்வது என்று தெரியாமல் கஷ்டத்தோடு அமர்ந்திருந்தான்.
இங்கே ராதாவின் மனதும் அதே நிலையில்தான் இருந்தது. விசாலாட்சி வந்து தன்னிடம் கதிருக்கும் கீர்த்திகாவுக்கும் திருமணம் செய்து வைக்கச் சம்மதம் கேட்டதும், “அப்பாடா, ஒருவழியாகத் தன் பிரச்சனை தீர்ந்தது,” என்று நினைத்த ராதாவிற்கு, தன் அப்பாவின் இந்த பதிலால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அங்கே அமர்ந்திருந்தாள்.
விசாலாட்சி துரையிடம், “துரை, ஒரு நிமிஷம் நல்லா யோசிச்சுப் பாரு. ஏன் இந்த முடிவை எடுத்து இருக்கேன்னு உன்னை விட கனகா நல்லா புரிஞ்சு இருக்கா. நீயும் என்னைப் புரிஞ்சிக்குவேன்னு நினைச்சேன். ஆனா நீ இப்படிப் பிடிவாதமா இருக்குறது நல்லதில்லை,” என்று சொன்னார் விசாலாட்சி.
“என்னைக் கேட்காம நீயா இப்படி முடிவு எடுத்துட்டு வந்துட்ட. நான் என்னக்கா பண்ண முடியும்?” என்று சொன்ன துரை, ராதாவைப் பார்த்து, **”உன்னோட அம்மா இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொன்னாளே, அதனாலதான் நீ கதிருக்கும் கீர்த்திகாவுக்கும் கல்யாணம் பண்ணச் **’சரி’ன்னு சம்மதம் சொன்னியா?” என்று கேட்டார் துரை.
ராதா, துரை தன்னிடம் இப்படிக் கேட்பார் என்று தெரியாததால், “ஆமாம்,” என்று தயக்கத்துடனே தலையை ஆட்டினாள்.
“உனக்கு உன் அம்மா தான் பெருசா? இந்த அப்பா பெருசு இல்லையா? என்னோட முடிவு என்னன்னு நீ தெரிஞ்சுக்காமயே நீ எப்படிப் பதில் சொல்லலாம்?” என்று கேட்டார் துரை, ராதாவிடம்.
ராதா எதுவும் பேசாமல் அவரையே பார்க்க…
“சொல்லு ராதா, அப்போ உனக்கு என் மேல பாசம் இல்லையா? உன்னோட அம்மா மேல தான் ரொம்ப பாசமா இருக்கியா?” என்று கேட்டார் துரை.
துரை அப்படி கேட்டதும், “அப்பா, என்ன இப்படி எல்லாம் சொல்றீங்க? எனக்கு நீங்களும் அம்மாவும் ஒண்ணுதான். அத்தை வந்து இப்படி என்கிட்ட கேக்குறப்போ, நான் எப்படி அவங்களை மறுத்துப் பேச முடியும்? இதுபோல அம்மாவும் கதிர் மாமாவுக்கும் கீர்த்திகாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கச் சம்மதம்னு சொல்லிட்டாங்க. அதனாலதான் அவங்க முடிவுக்குச் சம்மதம் சொன்னேன்,” என்று எதையோ சொல்லிச் சமாளித்தாள் ராதா.
“அக்கா, நீ ராதா பேசினதைக் கேட்ட தானே? அவள் நீ சொன்னதுக்காகவும், என் பொண்டாட்டி சொன்னதுக்காகவும் மட்டும்தான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லி இருக்கா… ஆனா அவள் மனசுக்குள்ள கதிர் மாப்பிள்ளை மேல ஆசை இருக்கு,” என்று சொன்னார் துரை.
துரை இப்படிச் சொன்னதும் ராதாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது.
துரை சொன்னதைக் கேட்டு ராதா அதிர்ச்சியாகி முழிப்பதைப் பார்த்த துரை, “நான் உனக்கு அப்பன்டி, என்கிட்டேயே எப்படி நடிக்கிறாய் நீ? என்னவோ என் அக்கா இவகிட்ட கேட்டதாளையும்… என் பொண்டாட்டி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னதுனாலயும் தான் இவ கதிரை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னு சொன்ன மாதிரி எவ்வளவு சீன் போடுறா!”
**”ஆனால் நீ, **’டியூஷன் போறேன், டியூஷன் போறேன்’ன்னு சொல்லிட்டு அந்தச் சந்தோஷை லவ் பண்ணிட்டு வந்து நிக்கிற விஷயம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டு தானே இந்தப் பேச்சு பேசிட்டு இருக்க! இரு மகளே, இன்னும் கொஞ்ச நேரம் உன்னை எப்படிச் சுத்தலில் விடுறேன் பாரு,” என்று ராதாவை நினைத்து மனதிற்குள் சொல்லிக் கொண்டார் துரை.
“நீயும் கனகாவும் கேட்டுக் கேட்டதுனால தான் இவ நீங்க சொன்னதுக்குச் சம்மதம் சொல்லி இருக்கா… இப்போ சொல்லு அக்கா, நான் என்ன பதில் சொல்லணும்னு நீ எதிர்பார்க்கிறாய்?” என்று கேட்டார் துரை.
துரை சொன்னதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது என்று புரிந்து கொண்ட விசாலாட்சி, ராதாவைப் பார்த்து, “என்ன ராதா, நீ. நான் தான் உன் மனசுல என்ன இருக்கோ, அத அப்படியே வெளிப்படையா சொல்லணும்னு தானே உன்கிட்ட கேட்டேன். ஆனா நீ உன் மனசுல இவ்வளவு ஆசையை வச்சுக்கிட்டு, எங்களுக்காக இல்லை, உன்னோட கல்யாணத்தையே தியாகம் பண்ணத் துணிஞ்சுட்ட!” என்று கேட்டார் விசாலாட்சி.
“ஐயோ! என் அப்பன் தான் புரியாம பேசுறானா… என் அத்தையும் இப்படிப் பேசுதே… அக்காவுக்கும் தம்பிக்கும் ஒரே மாதிரி தானே மூளை இருக்கும், அப்புறம் வேற எப்படி யோசிப்பாங்க?” என்று நினைத்த ராதா, “இப்போ இப்படி இவங்க இரண்டையும் நான் எப்படிச் சமாளிக்கப் போறேன்? ஐயோ… ஆண்டவா, இதுங்க ரெண்டுகிட்ட இருந்தும் என்னைக் காப்பாத்துடா…” என்று கடவுளை மனதிற்குள் மானசிகமாகத் திட்டிக் கொண்டாள்.
அவள் அப்பாவிடம் திரும்பி, “அப்பா, நீங்க சொல்ற மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்ல. அன்னைக்கு நீங்க திடீர்னு வந்து, ‘கதிர் மாமாவை உன் அக்கா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன், அதனாலதான் நான் உன்னை கேட்கிறேன், உனக்குக் கதிர் மாமாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?’ன்னு நீங்க உன்கிட்ட எத்தனை பேர் முன்னே வச்சு கேட்டப்போ…”
**”இத்தனை பேரு முன்னாடியும் **’எனக்கு சம்மதமில்லை’ன்னு சொல்லி உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பாமல் தான், அன்னைக்கே உங்களுக்காகத்தான் நான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன் அப்பா. நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக மட்டும் தான் நான் கதிர் மாமாவை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொன்னேன். மத்தபடி எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்ல அப்பா. எனக்குப் படிக்கணும்,” என்று மட்டும் சொன்னாள் ராதா.
இத்தனை பேர் முன்னிலையில், “தனக்காக மட்டும் தான் கதிரைத் திருமணம் செய்யச் சம்மதித்தேன்,” என்று ராதா சொல்லவும், “தனக்காகத் தான் தன் காதலித்தவனையும் விட்டு, தான் சொன்ன ஒரே காரணத்துக்காகக் கதிரைத் திருமணம் செய்ய ராதா சம்மதம் சொன்னாள்,” என்பதைக் கேட்டவுடன், துரைக்கே இதற்கு மேல் அவளிடம் என்ன பேசிச் சமாளிப்பது என்று தெரியவில்லை.
ராதா பேசியதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வெங்கடாசலம், துரையிடம், **”பார்த்தியா துரை? உன் பொண்ணு கிட்ட நீ கேட்டியே, **’உன் அம்மா சொல்றதைத்தான் கேட்பியா, அப்போ இந்த அப்பாவைப் பத்தி நினைக்கவே இல்லையா?’**ன்னு.”
“ஆனா அவள் உனக்காகத்தான் என் பையனைக் கல்யாணம் பண்ணிக்கவே சம்மதம் சொல்லி இருக்கா… இதை நீ கவனிச்சியா? நம்ம அவசரப்பட்டு இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருந்தா, இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருந்திருக்குமான்னு தெரியல துரை.”
“இனியும் நீ ரொம்பப் பிடிவாதம் பிடிக்காம, விசாலாட்சி சொன்னதுபோல, கதிருக்குக் கீர்த்திகாவையே கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சம்மதம்னு சொல்லு,” என்று சொன்னார் வெங்கடாசலம்.
அவர் சொன்னதைக் கேட்டதும், **”மாமா, அப்போ என் பொண்ணுக்குப் பிடிக்கல, இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்றீங்க… ஆனா கதிர் மாப்பிள்ளை என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க அன்னைக்கு அவ்வளவு சந்தோஷமா **’சம்மதம்’னு சொல்லிட்டுப் போனாரே… இப்ப எப்படி திடீர்னு கீர்த்திகாவை அவரு கல்யாணம் பண்ணிக்க, அவர் எப்படிச் சம்மதம் சொல்ல வைப்பீங்க?” என்று கேட்டார் வெங்கடாசலம்மிடம் துரை.
“நானும் கீர்த்திகாவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம். எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் தான்!” என்று இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கதிர், “இங்கே இவர்களாக எதுவும் பேசி இந்தக் கல்யாணத்தில் ஏதும் குழப்பம் வந்துவிடுமோ,” என்று நினைத்தவன், வேகமாக எழுந்து அனைவரிடமும் சொல்ல…
அங்கிருந்த அனைவருமே ஆச்சரியமாகத் திரும்பி கதிரைப் பார்த்தனர்.
கதிர் அருகில் அமர்ந்திருந்த ஆதி, “ஒரு வழியா இவனாவே வாயைத் திறந்து கீர்த்திகாவை லவ் பண்றேன்னு சொல்லிட்டான்,” என்று நினைத்தான்.
விசாலாட்சி கதீரிடம் திரும்பி, “என்னப்பா சொல்ற? நீயும் கீர்த்திகாவும் தான் காதலிக்கிறீர்களா? அப்ப ஏன் நீங்க ராதாவை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொன்ன?” என்று கேட்க.
**”அன்னைக்கு வடிவு அத்தை பொதுவா, **’என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமா?’**ன்னு கேட்டப்போ, அவங்க கீர்த்திகாவை மனசுல வச்சுட்டுத்தான் சொல்றாங்கன்னு நினைச்சுட்டு கல்யாணத்துக்குச் **’சம்மதம்’**னு சொல்லிட்டேன்.”
“ஆனா அதுக்கு பிறகுதான் தெரிந்தது எனக்கும் ராதாவுக்கும்தான் நீங்க கல்யாணம் பேசி முடிச்சு இருக்கீங்கன்னு சொல்லி,” என்று சொன்னான் கதிர்.
“அப்புறம் ஏன் இவ்வளவு நாளா நீ உன் கீர்த்திகாவைக் காதலிக்கிறதைப் பத்தி சொல்லவே இல்லை?” என்று கோபமாகக் கதீரிடம் கேட்டார் வெங்கடாசலம்.
“உங்ககிட்ட நேரடியா வந்து சொல்ல எனக்குப் பயமா இருந்துச்சு அப்பா. அதனாலதான் அண்ணன் (ஆதி) ஊரிலிருந்து வந்ததுக்குப் பிறகு, அண்ணன் கிட்ட சொல்லி எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்தலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.”
“ஆனாவே அம்மா மூலமா இந்தக் கல்யாணம் நிற்கும்படியாக ஆகிடுச்சு,” என்று தயங்கிக் கொண்டே கதிர், வெங்கடாசலம்மிடம் சொல்ல.
துரைக்கு, “கதிருக்கும் இந்தக் கல்யாணத்தில் சம்மதமில்லை. ராதாவுக்கும் இந்தக் கல்யாணத்தில் சம்மதமில்லை. ஆனால் நாங்கள் எல்லோரும் சொன்னோம் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக, தங்கள் மனதில் இருக்கும் ஆசை எல்லாம் கொண்டு இருவருமே திருமணத்திற்குச் சம்மதித்திருக்கிறார்கள்,” என்று தெரிந்ததும், “நாம் எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டோம்,” என்று புரிய…
“அக்கா, எப்போ மாப்பிள்ளை கீர்த்திகாவை லவ் பண்றேன்னு சொல்லிட்டாரோ, அதற்குப் பிறகு நான் அவரை என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கட்டாயப்படுத்த விரும்பல…”
“கதிர் மாப்பிள்ளைக்கும் கீர்த்திகாவுக்கும் கல்யாணம் செய்து வைக்க எனக்குப் பரிபூரணச் சம்மதம்,” என்று சொன்னார் துரை.
அவர் சொன்னதும் விசாலாட்சி துரையிடம் வந்து அவரைக் கட்டிக் கொண்டு, “எனக்குத் தெரியும் துரை, நீ பார்க்கத்தான் முரடன் மாதிரி இருந்தாலும் உன் மனசு சுத்த தங்கம்,” என்று சொல்லி அவரைக் கட்டி அணைத்தவர்.
வெங்கடாசலம்மிடம் திரும்பி, “என்னங்க, நாளைக்கு நம்ம முறையா போய்க் கீர்த்திகாவை நம்ம கதிருக்கு முடிச்சுட்டு வந்துடலாம். இன்னும் ஒரு வாரத்துல அவங்க ரெண்டு பேருக்கும் குறித்த தேதியிலேயே கல்யாணம் பண்ணிடுவோம்,” என்று விசாலாட்சி அவரிடம் கூற…
“நீ சொல்லி நான் என்னைக்கு விசாலாம் ‘வேண்டாம்’ என்று சொல்லி இருக்கேன். உன் விருப்பம் தான் என் விருப்பம். நீ சொன்னபடியே செய்து விடுவோம்,” என்று சொல்லி சிரித்தார் வெங்கடாசலம்.
கட்டிலில் படுத்திருந்த நிலானி மயக்கம் தெளிந்து கண்விழித்தவள், உடனே தன்னைச் சுற்றி, “நாம் எங்கே இருக்கிறோம்?” என்று பார்த்தவள், தன் அருகில் நின்றிருந்த மதுவைப் பார்த்து…
“அக்கா… அக்கா… நான் ஏன் இங்க இருக்கேன்? அவருக்கு என்ன ஆச்சு? அந்த ரவி வந்து அவரைக் கத்தியால குத்துனானே? அவருக்கு ஒண்ணும் ஆகலையே? அவர் நல்லாத்தானே இருக்காரு?” என்று பதட்டப்பட்டுக் கொண்டு நிலானி மதுவின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்க…
அப்போதுதான் ரவியைப் போலீஸிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கு வேண்டிய தகவல்களையெல்லாம் கொடுத்துவிட்டு உள்ளே வந்த விக்கி, நிலானி மதுவிடம் தன்னைப் பற்றிக் கேட்டுப் பதற்றப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவன்.
“எனக்கு ஒண்ணும் ஆகல. லேசா சின்ன காயம் தான் ஆகியிருக்கு பாரு,” என்று தன் கையைக் காட்டிக் கொண்டே அவர்கள் பெட்ரூமிற்குள் நுழைந்தான் விக்கி.
விக்கிக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்ததும் தான் நிலானிக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.
நிலானியின் அருகில் வந்து அமர்ந்த விக்கியைப் பார்த்து, “ஏங்க, உங்களுக்கு எதுவும் ஆகலையே? ரவி கத்தியை ஓங்கி உங்களோட குத்துற சத்தம் எனக்குக் கேட்டுச்சே. வேற எதுவும் எங்கேயும் காயம் எதுவும் ஆகி இருக்கா?” என்று பதட்டமாக அவன் உடலைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே கேட்டாள் நிலானி.
நிலானி பதட்டப்படுவதைப் புரிந்து கொண்ட விக்கி, அவள் முன்பு எழுந்து நின்று ஒரு முறை தன்னைச் சுற்றிக் காண்பித்து விட்டு, “பாரு… நீயே பார்க்கிற தானே? எனக்கு எதுவுமே ஆகல. நான் நல்லாத்தான் இருக்கேன்,” என்றவன் தன் வலது கையை காட்டி, “இங்க மட்டும் தான் லேசா கத்தி கிழிச்சிடுச்சு. வேற ஒன்றும் இல்லை,” என்று அவளிடம் தன் கையை காட்ட…
இப்போது தான் நிலானிக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. அவன் கையைப் பிடித்துக் கொண்டு, “சின்ன காயம்ன்னு சொல்றீங்க. கட்டு இவ்வளவு பெருசா போட்டு இருக்காங்களே,” என்று கேட்டாள் நிலானி.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை,” என்று விக்கி சொல்லிச் சமாளிக்க…
“எப்படி நீங்க அந்த ரவி கிட்ட இருந்து தப்பிச்சீங்க?” என்று நிலானி கேட்டாள்.
“அதை ஏன் கேக்குற நிலா? உன் வீட்டுக்காரர் வந்துட்டு இருக்கும்போது, அந்த ரவி குத்தினதை பார்த்து எனக்கே ஒரு நிமிஷம் ஷாக் ஆயிடுச்சு,” என்ற மது சற்று முன்பு நடந்ததை நிலானியிடம் விவரித்தாள்.
ஊரிலிருந்து நிலானியைப் பார்ப்பதற்காக ஆவலாக லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்த விக்கி, அவர்கள் வீட்டை நோக்கி வர…
அப்போது அங்கு மறைந்திருந்த ரவி, கையில் கத்தியுடன் விக்கியை நோக்கி அவனைக் குத்த வர…
அதைப் பார்த்த நிலானி பதட்டத்தில் பயந்து சத்தம் போடவும், வீட்டுக்குள் இருந்தவர்களும், அப்பார்ட்மென்டில் இருந்த அனைவரும் “என்ன சத்தம்?” என்று வெளியே வர, அங்கே விக்கி வயிற்றில் ரவி கத்தியை சொருக்க, அதைப் பார்த்த நிலானி அதிர்ச்சியாகிப் பயத்தில் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
அவளைப் போலவே அதிர்ச்சியான அனைவருமே ரவியையும் விக்கியையும் பார்த்துக் கொண்டு இருக்க…
அவன் கால்களுக்குக் கீழே இரத்தம் சொட்டிக் கொண்டு இருக்க… அதைப் பார்த்த பின்னால் ஓடிவந்துகொண்டிருந்த மதுவிற்கும் பவனுக்கும் ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது.
அதைப் பார்த்ததும் ஓடி வந்து கொண்டிருந்த பவன் விக்கியிடம் சென்று அவனைப் பார்க்க… ரவி தன்னைக் குத்த வரும்போது, அவனைக் குத்த விடாமல் தன் வலது கையால் அவன் குத்திய கத்தியைப் பிடித்துத் தடுத்துக் கொண்டு, அந்தக் கையால் ரவியின் கழுத்தைப் பிடித்து நின்றிருந்தான் விக்கி.
விக்கி பிடித்திருந்த கத்தியை ரவி அவனிடமிருந்து வேகமாக இழுத்து மீண்டும் விக்கியின் வயிற்றில் குத்தப் போக…
கத்தி விக்கியின் கையை கிழித்துவிட… இழுத்த வேகத்தில் கத்தியிலிருந்த இரத்தம் தெறிக்க, பவன் பார்த்ததும், “மறுபடியும் ரவி எங்கே விக்கியைக் குத்தி விடுவானோ,” என்று வேகமாகச் சென்று ரவியின் மார்பில் ஓங்கி உதைக்க…
அவன் அங்கிருந்து விக்கியை விட்டுத் இரண்டு மூன்று அடி தள்ளிப் போய்க் கீழே விழுந்தான்.
ரவி கீழே விழுந்த வேகத்தில், அங்கு நின்றவர்கள் அவனை அருகில் வேகமாக ஓடி, அவன் கையில் இருந்த கத்தியைப் பிடுங்கித் தூர வீசியவர்கள், அவனை எங்கும் ஓட விடாமல் ஆளுக்கு ஒருபுறமாக நின்று பிடித்துக் கொண்டனர்.
ரவி கத்தியால் குத்திவிட அதைப் பார்த்த நிலானி இருந்த இடத்தில் அப்படியே மயக்கம் போட்டுவிட, அவள் அருகில் நின்றிருந்த பத்மா நிலானி மயக்கம் போட்டு விழுந்ததைப் பார்த்ததும் பதற…
“என்ன கத்தியது?” என்று விக்கி தன் பின்னே திரும்பிப் பார்க்க, வீல்சேரில் அப்படியே மயக்கம் போட்டு நிலானி விழுந்திருக்க, வேகமாக அவளிடம் சென்று நிலானியின் கன்னத்தைத் தட்ட அவள் கண் விழிக்கவில்லை.
உடனே அவளைக் கைகளில் தூக்கி, அவளை உள்ளே தூக்கிச் சென்று பெட்ரூமில் கட்டிலில் படுக்க வைத்து, நிலானியின் கன்னத்தைத் தட்ட… அவள் எழுந்திருக்காமல் போகவே, மதுவிடம் சொல்லி டாக்டருக்கு கால் செய்யச் சொன்னான் விக்கி.
டாக்டர் வந்து சிறிது நேரத்தில் அவளைப் பரிசோதித்து விட்டு, “அதிர்ச்சியில் தான் மயக்கம் போட்டு இருக்கிறார். அவருக்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்டு இருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் கண் விழித்து விடுவார்,” என்று சொல்லி கிளம்பி விட்டார்.
நடந்ததெல்லாம் கூறிய மது, “சரி, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் போய் உங்களுக்குச் சாப்பிட எதுவும் கொண்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு, அவர்கள் இருவரையும் தனியே பெட்ரூமில் விட்டுவிட்டு வெளியே சென்றாள்.
இவ்வளவு நேரம் நிலானி விக்கியிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தவள், இப்போது மது சென்றதும் தான், “தங்கள் இருவரும் மட்டுமே இப்போது இந்த அறையில் இருக்கிறோம்,” என்று தெரிந்ததும், நிலானிக்குப் பதட்டமாகி என்ன செய்வது என்று தெரியாமல் தன் கைகளைப் பிசைந்து கொண்டு தலையைக் குனிந்து அமர்ந்திருந்தாள்.
தன்னுடன் தனியே இந்த அறையில் இருப்பதை நினைத்துப் பதற்றப்படுகிறாள் என்று புரிந்து கொண்டு விக்கி, நிலானியின் கையைப் பிடித்து, “பயப்படாதே, நான் உன்னை எதுவுமே செஞ்சிட மாட்டேன், சரியா?” என்று சொல்லிச் சிரிக்க…
தன்னைச் சகஜமாக்க முயன்று தன்னிடம் கேலி பேசும் விக்கியைப் பார்த்து, நிலானியும் சற்றுப் பதற்றம் குறைந்து அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
