விக்கி நிலானியை ஆதியின் வீட்டிற்கு அழைத்து வந்தவன், இருவரும் வாசலிலேயே நிற்க, அவர்களைப் பார்த்த ராதா, இருவரும் தனித்தனியாக வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, அவர்கள் இருவரையும் உள்ளே அழைக்க…
அப்போது அங்கு வந்த கதிர், நிலானிக்கும் விக்கிக்கும் திருமணமான விஷயத்தைச் சொன்னதும், அதிர்ச்சியான ராதா முதலில் அதே அதிர்ச்சியோடு உள்ளே சென்றவள்.
பின் ஹாலுக்கு வந்ததும், “எல்லாரும் இங்க வாங்க! எல்லாரும் இங்க வாங்க! விக்கி அண்ணா கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்காரு!” என்று சொல்லி எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் ராதா திருப்பினாள்.
ராதா ஹாலில் கத்திக் கொண்டே வருவதைப் பார்த்த துரை, “இவளுக்குக் கல்யாணம் நின்றதில் இருந்தே ஒரு மார்க்கமாகச் சுத்திக்கிட்டு இருக்கா… இவளுக்கு இருக்கு ஒரு நாளைக்கு,” என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்ட துரை, அவளிடம் வந்து, “ஏன் இப்படி கத்திக்கிட்டு வர… என்ன ஆச்சு உனக்கு?” என்று துரை கேட்க…
“அப்பா! உன் காது என்ன செவிடாப் போச்சா? நான் இவ்வளவு கத்தினதும் உன் காதில் விழலையா?” என்று ராதா துரையை வார…
“என்னைப் பார்த்துச் செவிடுன்னு சொன்ன?” என்று அவளை அடிக்கத் துரை கை ஓங்க…
வெங்கடாசலம் அவர் கையைப் பிடித்தவர், “என்ன பழக்கம் இது துரை? வயசுக்கு வந்த பொண்ணைக் கை நீட்டி அடிக்கிறது?” என்று சொல்லி அவர் கையை விட்டவர், “என்ன ராதா சொன்ன?” என்று வெங்கடாசலம் கேட்க…
“ம்ஹுக்கும்…. எங்க அப்பா தான் செவிடுன்னா, மாமாவுக்குக் காதும் கேட்குறது இல்ல போல இருக்கே,” என்று நினைத்தவள்.
“நான் என்ன சொன்னேன்னு கேட்கிறாரே பாரு. இப்ப நான் கத்திட்டு வந்ததுக்கு அர்த்தமே இல்லையா?” என்று நினைத்த ராதா.
“ஐயோ! மாமா ஒரு நிமிஷம் என் கூட வாங்க,” என்று அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்று ராதா, “இங்க பாருங்க விக்கி அண்ணா என்ன பண்ணிட்டு வந்திருக்காருன்னு,” என்று சொன்ன ராதா, விக்கியைக் கைகாட்டி…
“விக்கி அண்ணா என் ஃப்ரெண்ட் நிலானியை யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணி இருக்காரு. எனக்கே இந்த விஷயம் இப்பதான் தெரியுமோ மாமா,” என்று நல்லவள் போல முகத்தை வைத்துக் கொண்டு விக்கியையும் நிலானியையும் வெங்கடாசலத்திடம் போட்டுக் கொடுக்க…
அவர்கள் பின்னாலேயே வந்த துரை, “அடேயப்பா…. என் பொண்ணு எவ்வளவு நல்லவ மாதிரி நடிக்கிறா!” என்று ஆச்சர்யப்பட்டவர்.
“இந்த நேரத்துக்குக் கதிருக்கும் கீர்த்திக்கும் கல்யாணம் இல்லாமல், இவளைக் கதிருக்குக் கல்யாணம் பண்ணப் பேசி இருந்தோம்னா, ‘இந்தக் கல்யாணம் வேண்டாம்’ என்று சொல்லி பாதியிலேயே அந்த சந்தோஷ் கூட ஓடிப் போயிருப்பா இவ. விக்கியைச் சொல்லிக் கொடுக்க வந்திட்டா,” என்று நினைத்து அவளை மனதிற்குள் திட்டினார் துரை.
ராதாவின் சத்தம் கேட்டு அனைவரும் வாசலுக்கு வந்துவிட…
வந்து நின்ற அனைவரையும் பார்த்துப் பயந்த நிலானி தன் அருகில் நின்றிருந்த விக்கியின் கையைப் பிடித்துக் கொள்ள…
அவள் மேலும் ஒன்றி, வெங்கடாசலத்தையும் அவர் அருகில் வந்து நின்ற துரையையும் மாறி மாறிப் பார்க்க…
அங்கே வந்த மற்றவர்கள் விக்கியையும் நிலானியையும் பார்த்துவிட்டு விக்கிடம், “டே விக்கி, என்ன காரியம்டா பண்ணிட்டு வந்திருக்க? ராதா சொல்றது உண்மையா? இந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என்று கேட்டார்.
விக்கி ஒருமுறை வெங்கடாசலத்தையும் விசாலாட்சியையும் பார்த்துவிட்டு “ஆமாம்,” என்று தலையை ஆட்ட…
“அடப்பாவி! இது எப்படா நடந்தது? எங்க கிட்ட சொல்லவே இல்லை?” என்று கனகா கேட்க, “ஒரு மாசம் ஆச்சு,” என்றான் விக்கி.
“அடப்பாவி! கல்யாணமாகி ஒரு மாசம் கழிச்சு இப்பதான் எங்ககிட்ட வந்து உனக்குக் கல்யாணம் ஆன விஷயத்தைச் சொல்லத் தோணிச்சா?”
“ஏண்டா, அதுக்குள்ள இந்தப் பொண்ணு எதுவும் கர்ப்பம் ஆகிட்டாளா? அதனாலதான் எங்ககிட்ட இனியும் மறைக்க முடியாதுன்னு சொல்ல வந்தியா?” என்று கனகா கேட்க…
அவர் சொன்னதைக் கேட்டதும் நிலானி அதிர்ச்சியாகி விக்கியை நிமிர்ந்து பார்க்க…
விக்கி அவளைப் பார்த்துவிட்டு, “ஐயோ! அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. எனக்குக் கல்யாணம் ஆன கையோட, அந்த அன்னைக்கே நான் துர்கா கூட டென்மார்க் போயிட்டேன்.”
“உங்க எல்லாரையும் நேர்ல பார்த்துச் சொல்லணும்னு தான் நான் இவ்வளவு நாளா சொல்லல,” என்று சொன்னான் விக்கி.
“சரி, எவ்வளவு நேரம் இவங்க ரெண்டு பேரையும் வாசலிலேயே நிற்க வச்சு பேசிட்டு இருப்பீங்க?” என்று சொல்லிக் கொண்டே அவர்கள் பின்னால் வந்த ஆதி, “விக்கி, உன் ஒய்பைக் கூட்டிட்டு உள்ள வாடா…” என்றான்.
ஆதி சரியான நேரத்திற்கு வந்து தன்னை இவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டான் என்று நினைத்து விக்கி “சரி,” என்று தலையாட்டிவிட்டுக் தயங்கியவாரே உள்ளே வர…
“விக்கி உள்ள வராத. அங்கேயே நில்லு,” என்று வெங்கடாசலம் சத்தமிட்டார். தங்களை உள்ளே வர வேண்டாம் என்று வெங்கடாசலம் சொல்லவும், விக்கியும் நிலானியும் அப்படியே நின்றுவிட…
ஆதி அவரிடம் வந்தவன், “அப்பா, ஏன் விக்கியை உள்ள வர வேண்டாம் என்று சொல்றீங்க? பாவம், நீங்களும் அம்மாவும் அவங்க ரெண்டு பேரும் ஏத்துக்கிட்ட பிறகு தான் வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு இருக்கான். நீங்க இப்போ அவனை உள்ள வர வேண்டாம் என்று சொன்னா என்ன அர்த்தம்?” என்று ஆதி கேட்க…
“நீ பேசாம இரு ஆதி,” என்று அதட்டி நிறுத்தியவர், விசாலாட்சியிடம் திரும்பி, “நீ போய் ஆரத்தி தட்டை எடுத்துட்டு வா,” என்று சொன்னார்.
வெங்கடாசலம் உள்ளே வர வேண்டாம் என்று சொன்னதும், வாசலிலேயே பயந்துபோய் நின்று இருந்த விக்கியையும் நிலானியையும் பார்த்த விசாலாட்சி.
“என்னடா அப்படிப் பார்க்கிற? என் மகன் ஆதி எப்பவோ உனக்கும் இந்தப் பொண்ணுக்கும் கல்யாணம் ஆன விஷயத்தைச் சொல்லிட்டான்.”
“நீயே வந்து சொல்ற வரைக்கும், உனக்குக் கல்யாணம் ஆன விஷயம் தெரிஞ்சும் கேட்காதது போலக் காட்டிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டான்,” என்று சொன்னார் விசாலாட்சி.
விக்கி “அம்மா,” என்று வந்து செல்லப் போக, “டே டேய்! ஒரு நிமிஷம் அங்கேயே நில்லுடா. என் மருமகளுக்கும் உனக்கும் ஆரத்தி எடுக்கிறேன். அதுக்கப்புறம் ரெண்டு பேரும் உள்ளே வாங்க,” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குச் சென்றவர், கையில் ஆரத்தித் தட்டோடு வந்து, இருவருக்கும் ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்துவிட்டு, அவர்கள் இருவரையும் உள்ளே வரச் சொன்னார் விசாலாட்சி.
“ரெண்டு பேரும் வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாங்க,” என்று சொல்லிவிட்டு, ஆரத்தித் தட்டை வேலையாளிடம் கொடுத்து வெளியே ஊற்றி வரச் சொன்னவர், அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு போய்ச் சோபாவில் அமர வைத்தார் விசாலாட்சி.
“ரெண்டு பேரும் ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணிட்டு வந்தா, இவங்க எல்லாம் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பார்க்கலாம்னு நினைச்சுத் தானே இப்படித் தொண்டை தண்ணி வத்தக் கத்தினேன்.”
“ஆனா நீங்க என்னடான்னா, ஒரே நிமிஷத்துல எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ரெண்டு பேரையும் உள்ள கூட்டிட்டு வந்துட்டாங்களே,” என்று சலித்துக் கொண்டாள் ராதா.
வீல்சேரைத் தள்ளிக்கொண்டு ராதாவிடம் வந்த நிலானி, ராதாவை முறைத்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு, “ஏய், நான் உன் ஃப்ரெண்ட் டி…. உனக்கு அது ஞாபகம் இருக்கா? இல்லையா? நானும் வந்ததிலிருந்து உன்னை கவனிச்சிட்டுத் தான் இருக்கேன். என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குற…. எனக்குக் கொஞ்சமும் சப்போர்ட் பண்ண மாட்டேங்குற,” என்று நிலானி சொல்ல…
அவள் கையை உதறிவிட்டு, “உனக்குக் கல்யாணம் ஆன விஷயத்தை என்கிட்ட நீ சொல்லாதப்போ… நான் எதுக்கு உனக்குச் சப்போர்ட் பண்ணனும்?” என்று கோபமாக ராதா சொல்ல…
ராதாவின் கையைப் பிடித்துத் தன் முகத்திற்கு அருகில் எடுத்த நிலானி, தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு, ராதாவிற்கு மட்டும் கேட்கும்படி, “நீ லவ் பண்றது மட்டும் என்கிட்ட சொல்லல. நான் மட்டும் எனக்குக் கல்யாணம் ஆன விஷயத்தை உனக்குச் சொல்லனுமா?” என்று நிலானி கேட்க…
அவளை அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்தவள், “ஏய்! உனக்கு எப்படித் தெரியும்?” என்று ராதா கேட்க…
“அதெல்லாம் கீர்த்திகா எனக்கு எப்பவோ ஃபோன் பண்ணிச் சொல்லிட்டா. நீயும் சந்தோஷ் சாரும் லவ் பண்ற விஷயத்தை என்கிட்டே சொல்லிட்டா,” என்று நிலானி சொல்ல…
ராதா நிலானியைப் பார்த்து அசடு வழியே நிற்க…
“சரி சரி, அசடு வழியாத. நல்லாவே இல்லை,” என்ற நிலானி. “ஆமா… நாங்க வந்ததும் எதுக்கு நீ அப்படி கத்திட்டு ஓடுன?” என்று நிலானி கேட்க…
“அதுவா…. நானும் சந்தோஷ்ம் ஒருவேளை ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணிட்டு வந்தோம்னா….. இவங்களோட ரியாக்ஷன் எல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம். அப்படி கத்திக்கிட்டுப் போய்ப் எல்லார் கிட்டயும் நான் சொன்னேன்.”
“ஆனா இவங்க உங்க கிட்ட நடந்துகிறதைப் பார்த்தா, உங்களைப் மாதிரித் தான் என்னையும் இப்படித்தான் எதுவும் பேசாமல் கூப்பிட்டுக்கு வாங்கலோன்னு தோணுது,” என்றவள், “எது எப்படியோ எனக்குப் பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன்,” என்றாள் ராதா.
ஆனால் ராதாவையே முறைத்துக் கொண்டிருந்த துரைக்கு இவளுடைய காதல் விஷயம் தெரியும். பின்னாளில் அவரால் தான் எதுவும் பிரச்சினை வரும் என்று ராதாவிற்குத் தெரியாமல் போனது.
விக்கியையும் நிலானியையும் “இனிமேல் இந்த வீட்டை விட்டு எங்கும் போகக் கூடாது. அவர்கள் தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்ட்டைக் காலி செய்துவிட்டு வரச் சொல்லி,” விசாலாட்சி ஒரு முடிவாகச் சொல்லி விட… அவர்கள் இருவராலும் விசாலாட்சியின் பேச்சை மீற முடியவில்லை.
