Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 138

உன் ரகசிய ரசிகை நான் 138

by Layas Tamil Novel
286 views

விக்கிக்கும் நிலானிக்கும் முதலிரவு முடிந்த அடுத்த நாள் காலையில் விருந்து தடபுடலாக ஏற்பாடு ஆகியிருக்க, சந்தோஷையும் ராதாவையும் காலை நேரமே இங்கே வரச் சொல்லி கமலாவும் முத்துவும் சொல்லிவிட, எலியும் பூனையும் போல சண்டை போட்டுக் கொண்டே இருவரும் கிளம்பி சிவகாமியின் வீட்டிற்கு வந்தனர்.

முதலிரவு முடிந்த அறையில் இருந்து வெளியே வர நிலானி மிகவும் வெட்கப்பட… அவளைக் கடினப்பட்டு ராதாதான் அவள் அறையிலிருந்து வெளியே அழைத்து வந்தாள்.

“ஏய், உலகத்துல யாருக்கும் நடக்காததாடி உனக்கு நடந்துருச்சு? என்னமோ இவளுக்கு மட்டும்தான் முதலிரவு நடந்த மாதிரி ரொம்ப ஓவரா வெட்கப்படுற. பேசாம வாடி” என்று ராதா நிலானியைக் கிண்டல் செய்தவாறே, அவள் அருகில் இருந்து வெளியே அழைத்து வந்தாள். ராதா வீல்சேரில் அமர்ந்திருந்த நிலானியைக் கை தாங்கலாகப் பிடித்து மிக மெதுவாக நடக்க வைத்து, மாடிப்படிகளில் இறக்கி டைனிங் டேபிளுக்கு நிலானியை அழைத்து வந்தாள்.

சந்தோஷ் உடன் அமர்ந்து ஹாலில் பேசிக் கொண்டிருந்த விக்கி, நிலானி நடந்து வருவதைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. சோபாவில் அமர்ந்திருந்தவன் வேகமாக எழுந்து நிலானியின் அருகில் வந்தவன்.

“ஏய் நிலா குட்டி, என்ன ஆச்சரியமா இருக்கு! நான் நடக்கச் சொல்லும் போதெல்லாம் ‘மாட்டேன், பயமாயிருக்கு’ அப்படின்னு ஏதாவது சொல்லிச் சமாளிப்ப. ஆனா இன்னைக்கு மாடிப்படி எல்லாம் இறங்கி வந்துட்டே” என்று கேட்க…

அவனைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டே, “நான் இல்லை, இவ தான்” என்று தன் அருகில் நிலானியைப் பிடித்துக் கொண்டு வந்த ராதாவைப் பார்த்துக் கைகாட்டிச் சொல்ல…

“ஏண்டி, ரொம்ப நாளா வீல்சேரில் உட்கார்ந்துட்டு இருக்கியேன்னு சொல்லி, நீ நடக்க நான் ஹெல்ப் பண்ணலாம்னு சொல்லி உன்னைக் கூட்டிட்டு வந்தா, நீ என்ன விக்கி அண்ணன்கிட்டப் போட்டுக் கொடுக்குறியா?… போ… நான் உன்னைப் பிடிக்க மாட்டேன்” என்று சொல்லி நிலானியின் கையை விட… ராதா நிலானியின் கையை விட்டதும் நிலானி பேலன்ஸ் இல்லாமல் கீழே விழப் போக… விக்கி அவளை விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

ஹாலில் அமர்ந்திருந்த சந்தோஷ் ராதாவைப் பார்த்து, “ஏ லூசு… நீ பாட்டுக்கு அப்படியே அவங்களை விட்டுட்டு வந்துட்டே…. எங்காவது கீழே விழுந்து அடிபட்டிருந்தால் என்ன ஆகிறது?” என்று கேட்க….

“ஏன், அவ்வளவு அக்கறையா இருக்குறவன் நீ போயி நிலானி விழுறதுக்குள்ள புடிச்சிருக்க வேண்டியதுதானே? பெரிய ஹீரோ மாதிரி வந்துட்டான் பேசுறதுக்கு” என்று சொன்ன ராதா. “அதான் விக்கி அண்ணா பக்கத்துல இருந்தாருல்ல. அவர் பிடிச்சுக்குவாருன்னு தெரியும். அதனாலதான் நான் வேணும்னே அவளை விட்டுட்டு வந்தேன்” என்று சொல்ல…

ராதாவின் அருகில் வந்த சந்தோஷ், “ஏ குட்டிச்சு… நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கிறப்போ நீ என்னை என்ன வேணா பேசு. இத்தனை பேர் முன்னாடி என்னைக் காலை வாருற மாதிரிப் பேசினே… அப்புறம் வீட்டுக்குப் போனது உன்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவேன்” என்று சந்தோஷ் சொல்ல…

“ஆமாமா! நீ நேத்து என்ன ஒரு வழி ஆக்குனதை நான் தான் பார்த்தேனே. சும்மா லேசா என் கால் முட்டி அங்கப்பட்டத்துக்கு ‘அய்யோ… அம்மா…’ நைட் எல்லாம் என்னைத் தூங்கவிடாமல் என் காதிலேயே வந்து கத்தி என் உயிரை வாங்கிட்டு… இப்போ வந்து வீட்டுக்குப் போய் என்ன உண்டு இல்லைன்னு பண்ணிடுவானாமா? போயா… வாத்தி…” என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிளுக்கு ஓடிவிட… அவளை முறைத்தவன், “இன்னைக்கு இருக்கு உனக்குக் கச்சேரி வாடி” என்று நினைத்துக் கொண்டான்.

விக்கி, நிலானி, சந்தோஷ், ராதா நால்வரையும் அமர வைத்துத் தடபுடலாக அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த சிவகாமியும் கமலாவும் அசைவ உணவுகளை நால்வருக்கும் மாறி மாறிப் பரிமாறினர்.

ஹாலில் இருந்த அனைவரும் சந்தோஷமாகப் பேசி சிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, சங்கவியின் அறைக்குள் இருந்தவளுக்கு இவர்கள் பேசும் சத்தம் அவளுக்கு இடைஞ்சலாகவும், எரிச்சலாகவும் இருக்க, அறைக்குள் இருந்து வெளியே வந்த சங்கவி, டைனிங் டேபிளுக்கு வந்தவள்.

“சாப்பிடும்போது இப்படித்தான் சந்தைக் கடை மாதிரி சத்தம் போட்டு பேசிக்கிட்டு இருப்பீங்களா?” என்று கடுமையாகப் பேசிக் கொண்டே வந்து அவர்களுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்த சங்கவி, சிவகாமியைப் பார்த்து டைனிங் டேபிளில் இருந்த உணவுகளைக் காட்டி, “என்ன, இன்னைக்கு இவ்வளவு சாப்பாடு செஞ்சு வெச்சு இருக்க? காசு என்ன மரத்திலேயா காய்க்குது?” என்று சங்கவி பேச….

“இன்னைக்கு உன் அண்ணனுக்கும் சந்தோஷுக்கும் நம்ம வீட்டுல தான் விருந்து சங்கவி. அதனாலதான் இவ்வளவு செஞ்சு வெச்சிருக்கேன். இதுக்கு எதுக்குக் கணக்குப் பார்த்துட்டு?” என்று சிவகாமி சிரித்தவாறு கூற…

“இத்தனை வருஷமா இந்தச் சொத்தை நானும் என் அப்பாவும் கஷ்டப்பட்டு சம்பாரிச்சு சேர்த்துட்டு வந்தா, நீ ரோட்ல போறவனை எல்லாம் கூட்டிட்டு வந்து உட்கார வச்சு, உன் பையன்னு சொல்லி சோறு போட்டுட்டு இருக்கியா?” என்று சங்கவி பேச, அதுவரை சந்தோசமாக அனைவருடனும் பேசி சிரித்துச் சாப்பிட்டு கொண்டு இருந்த விக்கி அப்படியே சாப்பிடுவதை நிறுத்திவிட…

நிலானி சங்கவி தன் கணவனை அவமானப்படுத்துவது போலப் பேசுவதைக் கேட்டதும் சாப்பிடுவதை அப்படியே நிறுத்திவிட்டாள்.

இவர்கள் இருவரும் சாப்பிடாமல் அமர்ந்திருக்க… சந்தோஷும் ராதாவும் கூட சாப்பிடுவதை நிறுத்திவிட்டுச் சங்கவியைப் பார்க்க…

சங்கவி அப்படிப் பேசியதும் இவர்கள் யாருமே சாப்பிடாமல் தயங்கிக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்த வேதாச்சலத்திற்குச் சங்கவியின் மீது கோபம் வந்தது. சங்கவியிடம் வேதாச்சலம், “நாகரிகம் இல்லாமல் சாப்பிட உட்கார்ந்து இருக்கிறவங்க கிட்ட இப்படித்தான் பேசுவியா? நீ இப்படிப் பேசினதாலும் பாரு, அவங்க யாருமே சாப்பிடாமல் அப்படியே உட்கார்ந்து இருக்காங்க. அவங்ககிட்ட முதல்ல நீ மன்னிப்பு கேளு” என்று வேதாச்சலம் சொல்ல….

“நான் எதுக்கு இவன் கிட்ட மன்னிப்புக் கேட்கணும்? இவனுக்கும் எனக்கும் என்ன இருக்கு?” என்று சங்கவி சொல்ல…

“என்ன சங்கவி பேசுற? இந்தச் சொத்துல உனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ, அதே உரிமை என்னோட பையனுக்கும் இருக்கு. இனிமேல் இந்த மாதிரி வார்த்தையை அவசரப்பட்டு விடாதே…. அது நல்லா இருக்காது” என்று வேதாச்சலம் முதன்முறையாகச் சங்கவியைக் கண்டிக்க….

அவர் அப்படிப் பேசியதும் வேதாச்சலத்தை ஆத்திரத்தோடு திரும்பிப் பார்த்த சங்கவி, “இந்தச் சொத்து, இந்த வீடு, நீங்க நடத்திட்டு இருக்குற பிசினஸ் எல்லாமே என் பெயரில் தான் இருக்கு. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா மிஸ்டர் வேதாச்சலம்?” என்று அவள் அப்பாவை பெயர் சொல்லி அழைக்க….

அவள் பேசியதைக் கேட்டதும் வேதாச்சலம் முதற்கொண்டு அங்கிருந்த அனைவரும் உறைந்து போய் அப்படியே நிற்க, அப்போது சங்கவியிடம் வந்த முத்து, “அம்மா சங்கவி, உன் அப்பாகிட்ட இப்படியெல்லாம் நீ பேசலாமா? பாரு அவன் எப்படி உடைந்து போய் நின்னுட்டு இருக்கான்னு” என்று சொல்ல….

“இங்க பாரு முத்து, இது எனக்கும் என் குடும்பத்துக்கும் நடக்கிற விஷயம். இதுல நீ தேவையில்லாமத் தலையிடாதே. உன் தங்கச்சியை பார்க்க வந்தியா… மூணு வேளை மூக்கு பிடிக்கச் சாப்பிட்டியா? ஊருக்குக் கிளம்பிப் போனியான்னு இருக்கணும். இப்படி தேவையில்லாம எங்க குடும்ப விஷயத்துக்குள்ள மூக்கை நுழைக்கிற வேலையெல்லாம் வேண்டாம்” என்று சங்கவி முத்துவிடம் எரிந்து பேச…

சங்கவி பேசியதெல்லாம் கேட்டு இதுவரை பொறுமையாக இருந்த சந்தோஷத்திற்கு, அவள் வேதாச்சலத்தை அவமானப்படுத்தியது போதாது என்று, இப்போது தன் தந்தையையும் இத்தனை பேர் முன்னிலையில் மிகவும் கேவலமாகப் பேசுவதைக் கேட்டதும், சந்தோஷால் அவள் பேசுவதைக்க கேட்டுப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த சந்தோஷ் சங்கவியை அடிக்க எழுந்திருக்கப் போக, ராதா சட்டென சந்தோஷின் கையைப் பிடித்து இழுத்து அமர வைக்க…. அவளைத் திரும்பி கோபமாகப் பார்த்த சந்தோஷிடம், ‘வேண்டாம்’ என்பதுபோலத் தலையை இடவலமாக ஆட்ட… தன் கை விரல்களை மடக்கி இறுக்கிப் பிடித்துக்கொண்டு தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான் சந்தோஷ்.

சங்கவி அப்படிப் பேசியதும் மிகவும் வருத்தம் அடைந்த முத்து, அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக அவளை விட்டு நகர்ந்துவிட…. இது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிவகாமிக்கு ஆத்திரம் தாங்காமல் அவள் அருகில் வந்தவர், “எவ்வளவு தைரியம் இருந்தா என் அண்ணனை அப்படிப் பேசுவ?” என்று சொல்லி சங்கவியின் கன்னத்தில் மாறி மாறி அடித்தார்.

சிவகாமி சங்கவியை அடித்ததைப் பார்த்ததும் வேதாச்சலத்திற்குக் கோபம் வந்துவிட… வேகமாக அவர் அருகில் வந்து சங்கவியை அடித்துக் கொண்டிருந்த சிவகாமியின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவர், “என்ன காரியம் பண்ணிட்ட? என் பொண்ணு மேல கை வைக்க உனக்கு யாரு உரிமை கொடுத்தது?” என்று சொல்ல…

“என்ன பேச்சுன்னு பேசுறீங்க? அவ என் அண்ணனையோ, நம்ம விக்கியையோ பார்த்து எப்படிப் பேசணும்னு நீங்களும் தானே பார்த்துட்டு இருந்தீங்க? இப்படிப் பேசுற போல ஆரம்பத்திலேயே நாலு தட்டுத் தட்டி அடக்கி வச்சாதான் சரியா வரும். அப்படி அதை விட்டுட்டு நீங்க அவளுக்குச் சப்போர்ட் பண்ணி என்கிட்டப் பேச வர்றீங்க” என்று சிவகாமி வேதாச்சலத்தை புரியாமல் பார்க்க…

“அவ ஆயிரம் தப்பு பண்ணியிருக்கலாம். ஆனா அவ நம்ம பொண்ணு. அவள நீ எப்படி அடிக்கலாம்? என் பொண்ணு அனுசரிச்சுப் போற மாதிரி இருந்தா இந்த வீட்ல எல்லாரும் இருக்கலாம். அப்படி இல்லைன்னா இப்பவே இந்த வீட்டை விட்டு எல்லாரும் வெளியே போகலாம்” என்று வேதாச்சலம் கோபமாகக் கத்த…

சாப்பிட்டுக் கொண்டிருந்த சந்தோஷ் ராதாவின் கையைப் பிடித்துக்கொண்டு எழுந்தவன், அவன் அம்மா, அப்பா, ஸ்ரீ மூவரையும் பார்த்து, “வாங்க போகலாம்” என்று அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற…

தன் அண்ணன் குடும்பம் அவமானப்பட்டுத் தன் வீட்டிலிருந்து வெளியே செல்வதைப் பார்க்க முடியாமல் சிவகாமி அழுது கொண்டு நின்று இருக்க….

சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலேயே கையை கழுவி விட்டு டைனிங் டேபிளில் இருந்து எழுந்த விக்கி, அதிகமாகத் தான் இருந்த ரூமிற்குச் சென்றவன், அவனுடைய உடைமைகளையும் நிலானியின் வீல்சேரையும் எடுத்துக்கொண்டு கீழே வந்தவன், நிலானியைத் தூக்கி அந்த சேரில் அமர வைத்துவிட்டுச் சிவகாமியையும் வேதாச்சலத்தையும் பார்த்தவன்.

“இந்த வீட்டில எனக்கு உரிமை இருக்குன்னு என்னால திருப்பிப் பேச முடியும். ஆனால், என்னை மட்டும் நீங்க அவமானப்படுத்தி இருந்தால் பரவாயில்லையேப்பா. என்னை நம்பி வந்தவளையும் நான் அவமானப்படுவதற்கு விடமாட்டேன். அவளையும் சேர்த்துத்தானே, இந்த வீட்டில் இஷ்டம் இருந்தால் இருக்கலாம், இல்லை வெளியே போகலாம்னு சொன்னீங்க. எப்படி என் மனைவிக்கு மரியாதை இல்லாத இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன்” என்று சொன்னவன், நிலானியை அழைத்துக்கொண்டு அந்த வீட்டை விட்டுச் செல்வதாகக் கூறி அங்கிருந்து கிளம்ப…

காணாமல் போன தன் மகன் தன் வீட்டிற்கு வந்த சந்தோஷத்திலிருந்த சிவகாமி, அவன் இப்படி வந்த மறுநாளே தன் மகளால் அவமானப்பட்டு வீட்டை விட்டுவிட்டு வெளியே செல்வதைப் பார்த்தவருக்கு நெஞ்சம் பொறுக்கவில்லை.

வேதாச்சலத்திடம் வந்த சிவகாமி, அவர் கையைப் பிடித்துக்கொண்டு, “நம்ம புள்ள வீட்டை விட்டு வெளியே போறான். அவனை தயவு செய்து தடுத்து நிறுத்துங்க” என்று கெஞ்ச…. வேதாச்சலம் எதுவும் பேசாமல் அப்படியே நிற்க….

இதை சற்றும் வேதாச்சலத்திடம் இருந்து எதிர்பார்க்காத சிவகாமி, “**இவ்வளவுதானா நீங்க? உங்களுடைய புத்தி எப்பவுமே மாறாதா?… சங்கவியின் பெயரில் எல்லாச் சொத்தும் இருக்குதுன்னு உங்க பொண்ணு ஞாபகப்படுத்தினதும், அப்படியே நீங்க அவள் பக்கம் சாஞ்சுட்டீங்க…. சாகுற வரைக்கும் நீங்களும் உங்க பொண்ணும் இந்தப் பணத்தையும் சொத்தையும் கட்டிக்கிட்டுச் சந்தோசமா இருங்க. நான் என் பையன் கூடப் போறேன்” என்று சொல்ல… வேதாச்சலம் அதற்கும் எதுவும் சொல்லாமல் அப்படியே கல் போல நின்று இருக்க…

“நீங்க எல்லாம் என்ன ஜென்மமோ? இப்படி கட்டின மனைவியையும் பெத்த பிள்ளையையும் வீட்டை விட்டுப் போறதை பார்த்துட்டு, கல் நெஞ்சோட நிற்க உங்களால் மட்டும் தான் முடியும்” என்று சொன்னவர்.

“எனக்குப் பொண்ணும் இல்லை, புருஷனும் இல்லை என்று நான் நினைச்சுட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு விக்கியிடம் வந்தவர், “வா விக்கி, நம்ம போகலாம்” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

முத்துவின் குடும்பம் சங்கவியின் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்க… அவர்கள் அங்கிருந்து செல்வதற்காக கேப்ஐ புக் செய்து விட்டு சங்கவியின் வீட்டின் வெளியே காத்திருந்தவர்களுக்கு, சிவகாமி, விக்கி, நிலானி மூவரும் கையில் துணிமணிகளோடு வெளியே வருவதைப் பார்த்ததும் அவர்களுக்குப் புரிந்துவிட்டது, இவர்கள் மூவரையும் வீட்டை விட்டுச் சிவகாமியும் வேதாச்சலமும் அனுப்பி விட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டதும், முத்து வேகமாகச் சிவகாமியிடம் வந்தவர்.

“சிவகாமி, என்ன இது அநியாயம்? ஏன் வேதா இப்படி நடந்துக்கிறான்?” என்று ஆதங்கத்தோடு முத்து சிவகாமியிடம் கேட்க, “என்ன அண்ணா பண்றது? என் புருஷனுக்கும் பொண்ணுக்கும் பணம் தான் ரொம்ப முக்கியமாப் போயிடுச்சு. மனுஷங்க முக்கியமாத் தோணல. விடுங்க, அவங்க குணமே அப்படித்தான். இனியும் இவங்க கூட என்னால வாழ முடியாது. என் பையன் இருக்கான், அவன் என்னைப் பார்த்துப்பானு நம்பிக்கையில அவன் கூட நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். இனிமேல் அங்கே நான் போக மாட்டேன்” என்று சொல்ல…

விக்கியிடம் வந்த சந்தோஷ், “அப்பா, நம்ம இருக்கிற கெஸ்ட் ஹவுஸும் மாமா எனக்குக் கொடுத்ததுதான். அங்கே இருக்கிற திங்ஸை எல்லாம் காலி பண்ணிட்டு அந்தச் சாவியையும் நம்ம இவங்க கிட்டயே கொடுத்துடலாம். அந்தக் கெஸ்ட் ஹவுஸில் இருந்து நம்ம வேற பக்கம் வீடு பார்த்துப் போயிடலாம்” என்று சொல்ல…

“நான் இருக்கும்போது என் மாமாவை, குடும்பத்தை இப்படி நிற்கதியா இருக்க நான் விடமாட்டேன். நீங்க ஏன் வேற பக்கம் வீடு பார்த்துப் போகணும்? என்னுடைய அப்பார்ட்மெண்டிலேயே வீடு காலியாக இருக்கிறது. அங்கேயே வந்து நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்ல…

சந்தோஷ் விக்கியிடம், “உங்களோட நல்ல எண்ணத்திற்கு நன்றி. ஆனால் அது சரிவராது. சொந்தங்களிடம் உரிமையோடு அவர்கள் வீட்டில் இருக்கக் கூடாது என்பதை நான் இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்” என்று சொல்ல….

“என்னையும் என் அப்பாவையும் என் தங்கையையும் போலவே நினைத்து விடாதே சந்தோஷ். என்னை நம்பி என்னுடன் வா” என்று வலுக்கட்டாயமாக விக்கி அழைக்க…

சிவகாமி சந்தோஷைப் பார்த்து, “நீயும் எங்களோட வந்துட்டு சந்தோஷ். அத்தை இருக்கிறேன். இந்த அத்தைக்காகவாது நீ என்னோட வரலாம் இல்லையா?” என்று அவர் பேச, சந்தோஷ் வேறு வழியில்லாமல் விக்கியுடன் அவன் அப்பார்ட்மெண்ட்க்கு வருவதற்குச் சம்மதம் தெரிவித்தான்.

அனைவருக்கும் சேர்ந்து வேறு கேப்களை புக் செய்து அனைவரும் கிளம்பி விக்கியின் அப்பார்ட்மெண்ட்க்குச் சென்றனர்.


சிம்லாவில் ஆதியின் ஆபீஸில் மதுவும் பவனும் வேலை செய்து கொண்டிருக்க… அங்கு வேலை செய்யும் பியூன் மதுவிடம் வந்து, “சார் இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்” என்று பவனைக் காட்டிச் சொல்ல…

அவரிடமிருந்து மது அந்தக் கவரை வாங்கிவிட்டு, “சரி நீங்க போங்க” என்று அவரை அனுப்பிவிட்டு, அவர் சென்றதும் பவன் கொடுத்த கவரை ஓபன் செய்து பார்க்க… அதில் இரண்டு மூவி டிக்கெட் இருந்தது.

அதைப் பார்த்ததும் மது நிமிர்ந்து பவனைப் பார்க்க… தன் மொபைலில் ஏதோ மெசேஜ் டைப் செய்து அவளுக்கு அனுப்பிவிட்டு, மதுவின் மொபைலைப் பார்க்கச் சொல்லி பவன் செய்கை செய்ய…

அவனைப் பார்த்துச் சிரித்தவள், தங்களை யாரேனும் பார்த்துவிடப் போகிறார்கள் என்று அவனைக் கண்டுகொள்ளாதவள் போலத் திரும்பிக் கொண்டவள், மெதுவாகத் தன் மொபைலை எடுத்து, பவன் அனுப்பி இருந்த மெசேஜைத் திறந்து பார்க்க…

“ஈவினிங் 6 ஓ கிளாக் ரெடியா இரு… நானும் நீயும் மட்டும் படத்துக்குப் போயிட்டு வரலாம் ஓகேவா?” என்று கேட்டு பவன் மெசேஜ் அனுப்பி இருக்க…

பவன் அனுப்பிய மெசேஜைப் பார்த்துவிட்டுச் சிரித்த மது, அவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தவள், அவனுக்கு மட்டும் தெரியும்படி தலையாட்டிவிட்டுத் தன் வேலைகளில் மூழ்கி விட்டாள்.

மது வழக்கம் போலத் தன் வேலைகளைச் செய்து கொண்டிருக்க, ஆனால் அவனுக்குத்தான் இங்கே கை கால் ஓடவில்லை. எந்த வேலையும் செய்யாமல் மாலை மதுவுடன் படத்திற்குச் செல்வதை நினைத்து கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தான்.

சரியாக மாலை 4 மணி ஆனதும் ஆபீஸ் வேலைகளை எல்லாம் முடித்து மது கிளம்பத் தயாராகிக் கொண்டு இருக்க…

அப்போது அவளது மேனேஜர் மதுவை அவர் கேபினுக்கு அழைத்து, ஒரு முக்கியமான ஃபைலைக் கொடுத்து, இதில் உள்ள மெட்டீரியல் பற்றிய விவரங்கள் அனைத்தையும் குடோனில் சென்று சேகரித்து வருமாறு அவளிடம் ஃபைலை நீட்ட…

மது தயங்கியவாறே மேனேஜர் கொடுத்த ஃபைலை வாங்கிக் கொண்டு அவர் அறையை விட்டு வெளியே வர…

மேனேஜரின் அறைக்குச் சிரித்த முகத்தோடு சென்று, மது வெளியே வரும் போது முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்து, பவன் தன் மொபைலில் இருந்து, ‘மதுவிற்கு என்ன ஆச்சு?’ என்று மெசேஜ் செய்ய….

மது அவன் அனுப்பி மெசேஜைப் பார்த்துவிட்டு, மேனேஜர் சொன்ன விவரங்களை அவனுக்குத் திருப்பிப் பதில் அனுப்ப…

மதுவைப் பார்த்துப் பெருமூச்சு ஒன்றை விட்ட பவன், “சரி, நீ ரெடியா இரு. நானும் உன்னோட குடோனுக்கு வரேன். நம்ம ரெண்டு பேரும் போய்ச் சீக்கிரமா வேலையை முடிச்சிட்டுப் படத்துக்குப் போகலாம்” என்று மெசேஜ் செய்தான்.

மதுவும் ‘சரி’ என்று பதில் அனுப்பிவிட்டு அங்கிருந்து கிளம்ப… பவனும் அவளோடு சேர்ந்து குடோனுக்குச் சென்றான்.

இருவரும் கம்பெனி காரிலேயே குடோனிற்குச் செல்ல… அவர்கள் செல்லும் பொழுதே மணி ஆறைத் தாண்டிவிட்டது. இதற்கு மேலும் படத்திற்குப் போக முடியாது என்று இருவருக்கும் புரிந்து விட, வேறு வழியே இல்லாமல் மதுவும் பவனும் மேனேஜர் கேட்ட விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர்.

அது பெரிய குடோன் என்பதால், சிம்லாவில் மாலை வேளை மிகவும் குளிரும் என்பதால் வேலை செய்பவர்கள் எல்லாம் கிளம்பிவிட, வாட்ச்மேன் மட்டும்தான் இவர்கள் வரும்போது இருந்தார்.

அவர் வந்து பவனிடம், “வேலை முடிந்ததா?” என்று கேட்க… “இன்னும் இல்லை, வேலை முடிய சிறிது நேரம் ஆகும்” என்று சொல்ல…

“என்னுடைய மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று எனக்குப் போன் செய்தால். இன்னும் நேரம் ஆகிவிட்டால், பனியெல்லாம் அதிகமாகப் பெய்து சாலையையே மூடிவிடும். நான் சீக்கிரமாக வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என்று சொன்ன வாட்ச்மேன், அந்தக் குடோனின் சாவியைப் பவனிடம் கொடுத்துவிட்டு, “வேலை முடிந்ததும் குடோனைப் பூட்டிவிட்டுச் சாவியை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள். நான் காலையில் ஆபீஸில் வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

பவனுக்கும் வேறு வழி தெரியாததால் அவரிடமிருந்து சாவி வாங்கிக்கொண்டு வாட்ச்மேனை அனுப்பி வைத்தவன். மதுவிடம் வந்து விவரம் சொல்ல, “சரி, நம்ம சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு இங்கிருந்து போயிடலாம். இப்பவே ரொம்பக் குளிர ஆரம்பிச்சிடுச்சு. நேரம் ஆக ஆகப் பனி சாலையை மூடிவிடும் என்று வாட்ச்மேன் சொன்னாரே. நாம சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டுப் போகலாம்” என்று மது சொல்ல, ‘சரி’ என்று தலையாட்டிய பவன் அவளோடு சேர்ந்து அவர்களுக்குத் தேவையான விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தான்.

எவ்வளவு நேரம் இருவரும் வேலை செய்தார்கள் என்று தெரியவில்லை. வேலை எல்லாம் முடித்துவிட்டு, ‘சரி போகலாம்’ என்று அவர்கள் குடோனின் வாசல் கதவைத் திறக்கப் போக, வாசல் கதவு திறக்க முடியாமல் அப்படியே இருந்தது. என்ன என்று புரியாமல் வாசல் கதவில் இருந்த ஓட்டை வழியாக வெளியே பார்க்க, அந்தக் கதவு முழுவதும் பனியால் மூடி அடைக்கப்பட்டு இருந்தது.

பவனும் மதுவும் அதைப் பார்த்துவிட்டு, “இப்போது எப்படி இங்கிருந்து செல்வது?” என்று தெரியாமல் விழித்தவர்கள், தன் போனில் இருந்து அவர்களுடைய மேனேஜருக்கும் வாட்ச்மேனிற்கும் அழைக்க முயற்சிக்க… அங்கு சிக்னல் இல்லாமல் போகவே அவர்களின் அழைப்பு அவர்கள் இருவருக்கும் போகவில்லை.

மதுவிற்கு வேறு உடல் எல்லாம் குளிரில் உதிரல் எடுக்க ஆரம்பித்தது. அவனிடம் வந்த மது, “என்னால குளிர் தாங்க முடியல பவன். சீக்கிரமா எங்கிருந்து போக ஏதாவது வழி பண்ணு” என்று சொல்ல….

பவனும் அங்கிருந்து வெளியே செல்வதற்கு வேறு வழி இருக்கிறதா என்று பார்க்க, மதுவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு குடோனின் மற்ற பக்கங்களைப் பார்க்கச் சென்று விட்டான்.

பவன் சென்று வெகு நேரம் ஆகியும் அவன் திரும்பி வராமல் போகவே, ஏற்கனவே குளிரில் நடுக்கத்தில் இருந்த மதுவிற்கு, அவன் அருகில் இல்லாமல் போகவே பயம் தொற்றிக் கொண்டது. சரியாக அந்த நேரம் பார்த்து கரண்டும் கட் ஆகிவிட… மதுவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்க, அப்போது அவள் மீது ஏதோ வந்து விழவும், ஏற்கனவே பயத்தில் இருந்தவள் அதிர்ச்சியில் அப்படியே மயக்கம் போட்டு கீழே விழுந்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured