Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 143

உன் ரகசிய ரசிகை நான் 143

by Layas Tamil Novel
242 views

Episode 143 

சிவகாமி வீட்டை விட்டு விக்கியுடன் வெளியேறியதிலிருந்து, இத்தனை நாள் இருந்த வீட்டின் நிலையே தலைகீழாக மாறிவிட்டது.

வேலை ஆட்கள் எல்லோரும் சங்கவி தங்களை நடத்திய விதத்தில், அவளிடம் இனி வேலை செய்ய முடியாது என்று சொல்லி, வேலையை விட்டே சென்றுவிட்டனர். வேதாசலமும் சங்கவிக்கு ஆதரவாக இருக்க, தங்களுக்கு எந்த நியாயமும் இந்த வீட்டில் இருக்காது என்று இந்த முடிவை அனைவரும் ஒருசேர எடுத்து, வேலையை விட்டுச் சென்றனர்.

சங்கவிக்கு அடுப்பைப் பற்ற வைக்கக்கூடத் தெரியாது. அப்படி இருக்க… அவளை நம்பி எப்படி மூன்று வேளையும் சாப்பிடுவது என்று, சீக்கிரமாக ஒரு ஆளை வேலைக்கு வைக்க வேண்டும் என்று தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் ஆள் கிடைக்க ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தார் வேதாச்சலம்.

அவருடைய பிசினஸ் நண்பர் ஒருவர், சமையல் வேலைகளையும் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்ள ஒரு பெண் இருப்பதாகவும், ஆனால் அவள் வேலைக்குச் சேர சில கண்டிஷன்கள் இருப்பதாகவும் கூறினாள் என்று சொல்ல…

வேதாச்சலம் இப்போதைக்கு வீட்டு வேலைக்கு ஆள் கிடைத்தால் போதும் என்று சொல்லி, அந்தப் பெண் என்ன கண்டிஷன் போட்டாலும் சரி, அதற்குத் தாங்கள் ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.

“சரி, அந்தப் பெண்ணை அனுப்பி வைக்கிறேன். நீயே அவளிடம் என்ன கண்டிஷன் வைக்கிறாள் என்று கேட்டுத் தெரிந்து கொள்” என்றார் அவர் நண்பர்.

வேதாசலத்தின் நண்பர் சொன்னது போல… காலை ஏழு மணிக்கெல்லாம் அவர்கள் வீட்டிற்கு அந்தப் பெண் வந்திருந்தாள்.

ஹாலில் அமர்ந்து தன் போனை நோண்டிக் கொண்டு இருந்த சங்கவி, வாசலில் ஏதோ நிழல் ஆடுவது போல இருக்க… ‘யார்?’ என்று திரும்பிப் பார்த்தாள்.

வாசலில் ஒரு இருபத்தி இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று இருந்தாள்.

அவளைப் பார்த்த சங்கவி, “ஏய் பொண்ணே! யாரும்மா நீ?” என்றாள்.

“நான்… இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்திருக்கேன்” என்று சொல்லித் தயங்கிய படி கூற…

“ஓ… நீதான் என் அப்பா சொன்ன பெண்ணா?” என்றாள் அவளை ஏறிட்டும் பார்க்காமல். “உள்ளே வா…” என்றவள் தன் மொபைலில் மூழ்கிவிட…

வாசலில் நின்று இருந்த பெண் வேகமாக வந்து சங்கவியின் அருகில் நின்றாள். அதற்குள் வேதாசலமும் வந்துவிட…

சங்கவியின் அருகில் நின்று இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவர். ‘இந்தப் பெண்தான் வேலைக்கு வந்திருப்பவள் போல…’ என்றவர் அவள் அருகில் வந்து, “உன் பேர் என்னம்மா?” என்றார்.

“என் பெயர் மாதவி” என்றாள் அந்தப் பெண்.

“உன் ஊர், உன் வீடு, உன் பெற்றோர்?” என்றார் வேதாச்சலம்.

“வேலை எங்கு இருக்கிறதோ அது தான் என் வீடு. அந்த வீடு எங்கு இருக்கிறதோ அது தான் என் ஊர். எனக்கு அப்பா அம்மா எல்லாம் கிடையாது. சின்ன வயசுலயே அவங்க இறந்துட்டாங்க” என்றாள் மாதவி.

அவள் பேசுவதைக் கேட்டு அப்போதுதான் சங்கவி நிமிர்ந்து தன் எதிரே நின்று இருப்பவளைப் பார்த்தாள்.

நல்ல சிவந்த நிறம், அமைதியான மேக்கப் என்பது சிறிதும் இல்லாத அழகிய முகம். ஆனால் அவள் குரலில் தெரிந்த ஒரு கம்பீரம் அவளைப் பார்க்கும்போது வரவில்லை.

சிறு பெண் தான். அளவான உடல் அழகுடன், பெண்களுக்கே உரிய வனப்புடன் ஒரு சிறிய மஞ்சள் பையில் துணியுடன் சங்கவியின் எதிரே நின்று இருந்தவளை, பார்வையாலேயே அளந்த சங்கவி.

தான் இத்தனை அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தியும், இவ்வளவு மேக்கப் போட்டுக் கொண்டும் கூட, இவள் அப்பழுக்கற்ற சருமத்திற்கும் அழகுக்கும் முன்னால் தான் ஒன்றுமில்லை என்பது போலச் சங்கவிக்குத் தோன்றியது.

மாதவியை ஏறி இறங்க பார்த்த சங்கவி, “ஆமா, நீ இங்கே வேலைக்குச் சேருவதற்கு ஏதோ கண்டிஷன் எல்லாம் போட்டியாமே. என்ன அது?” என்றாள் சங்கவி.

“நான் சென்னையில் ஒரு பிரபல கல்லூரி பெயரை சொல்லி, அங்கு சேர்ந்து இருக்கிறேன். எனக்கு காலேஜ் செல்லும் நேரம் தவிர மீதி எப்போது வேலை சொன்னாலும் நான் செய்துவிடுவேன். எந்த காரணத்தைக் கொண்டும் நான் காலேஜ் செல்வதை நீங்கள் தடுக்கக் கூடாது” என்றாள் மாதவி.

அவள் சொன்னதைக் கேட்ட சங்கவி, “வீட்டு வேலைக்கு வந்துட்டபிறகு நீ ஏன் படிக்க போகணும்?” என்றாள் திமிராக.

“என்னுடைய கனவு, நான் நன்றாகப் படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பது. என்னுடைய அம்மா அப்பாவுடைய ஆசை. அவங்க ஆசையை நிறைவேற்றணும்னு தான் நான் படிக்கிறேன். என்னோட எம்.பி.பி.எஸ்.சை இதற்கு முன் வேலை பார்த்த ஊரில் ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டே படுத்தேன். அந்த வீட்டில் இருப்பவர்கள் மிகவும் தங்கமானவர்கள். என்னுடைய படிப்பிற்கு நிறைய உதவி இருக்கிறார்கள். நான் என்னுடைய படிப்பில் அடுத்த நிலைக்குச் செல்வதற்காகச் சென்னையில் சேர்ந்து இருக்கிறேன். அதனால் நான் இந்த வேலை செய்றது என்னோட தனிப்பட்ட செலவுக்காக…”

“நான் மெரிட்ல படிச்சு பாஸ் ஆகி இருக்கேன். அதனால எனக்கு சீட் ஃபிரீயா கிடைச்சிருக்கு… நான் இதை ஒரு நாளும் மிஸ் செய்ய மாட்டேன். அதனால் என் படிப்பைப் பாதிக்காதவண்ணம் நான் உங்களுக்கு வேண்டிய எல்லா வேலையையும் செய்து கொடுத்துவிட்டு காலேஜ் போய் வர உங்கள் சம்மதம் வேணும்” என்றாள் மாதவி.

அவள் பேசும் தொணியும், அவள் தன்னம்பிக்கையும் காண்பவர்கள் அனைவர்க்கும் அவளை நிச்சயம் பிடித்துவிடும். சங்கவிக்கும், வேதாசலத்திற்கும் கூட அப்படித்தான் இருந்தது.

ஆனால் சங்கவி அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும். சங்கவிக்கு மாதவியை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

“சரி சரி, வெட்டியா பேசிட்டு இருக்காம சீக்கிரமாப் போய் எங்க ரெண்டு பேருக்கும் ஸ்ட்ராங்கா காபி கொண்டு வா போ…” என்று சங்கவி மாதவியை அதட்ட…

“அப்போ நீங்க என்னை வேலைக்குச் சேர்த்துட்டிங்களா?” என்றாள் ஆர்வமாக மாதவி.

சங்கவி உடனே, “உன்னோட சமையலைச் சாப்பிட்டுப் பார்த்து தான் நான் முடிவு எடுக்கணும். சீக்கிரம் போய் காபி போட்டு கொடுத்திட்டு சமையல் வேலையைப் பார்” என்று கிச்சணைக் கை காட்டி சங்கவி சொல்ல…

“இதோ அஞ்சே நிமிஷத்தில் நான் போய் உங்களுக்கும் அய்யாவுக்கும் காபி போட்டு எடுத்து வரேன்” என்று கிச்சனுக்குள் நுழைந்தவள். சொன்னது போல ஐந்தே நிமிடத்தில் மணக்க மணக்கக் கையில் காபியுடன் வந்த மாதவி சங்கவியிடம் வைத்தவள், வேதாச்சலத்திடம் ஒரு கப்பை எடுத்து நீட்டி விட்டு, சங்கவியைப் பார்த்து…

“நீங்க காபி சாப்டுட்டு இருங்க. நான் போய் சாப்பிட டிபன் ரெடி பண்றேன்” என்று சொல்லி மாதவி கிச்சனுக்குள் சென்றாள்.

சரியாக அரை மணி நேரத்தில் மணக்க மணக்க முருங்கைக்காய் சாம்பார், வெண் பொங்கல், உளுந்து வடை, தேங்காய் சட்னி என ஹோட்டலில் பரிமாறுவது போல… டைனிங் டேபிளில் அவர்களுக்கு வைத்துவிட்டுச் சாப்பிட அழைத்தால் மாதவி.

அதற்குள்ளாகச் சங்கவியும் வேதாசலமும் ஆபீஸுக்குக் கிளம்பி வந்திருக்க… அவர்களுக்கு அறையிலேயே மணக்க மணக்க சமையல் செய்யும் வாசம் அரைவறை அவர்களின் பசியைத் தூண்டிவிட்டு இருந்தது.

இருவரும் வந்து டேபிளில் அமர்ந்து தட்டில் அழகாகப் பரிமாறி இருந்த உணவைப் பார்த்ததும், எதுவும் பேசாமல் மாதவி செய்து வைத்திருந்த உணவை முழுவதுமாகச் சாப்பிட்டு முடித்தனர்.

கிட்டத்தட்ட சிவகாமி சமையல் போலத்தான் மாதவியும் சமைத்து இருந்தாள். அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘உனக்கு நன்றாக இருக்கிறதா? இல்லையா?’ என்று எதுவும் சொல்லவில்லை இருவரும். ‘ஒருவேளை என்னுடைய சமையல் சரியாக இல்லையோ? இவர்களுக்குப் பிடிக்கவில்லையோ?’ என்று யோசித்தவாறு மாதவி நின்று இருந்தாள்.

ஆனால் வேதாசலமும், சங்கவியும் சிவகாமி சென்றதில் இருந்து மூன்று நேரமும் கடையிலேயே வாங்கிச் சாப்பிட்டுச் சாப்பிட்டு இருவருக்கும் அலுத்துப் போய்விட்டு இருந்தது.

மாதவி செய்து இருந்த உணவு இந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் அமிர்தம் போல இருந்தது. அதனால் தான் உணவின் ருசியில் அடிமை ஆனவர்கள் போல இருவரும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

முழுவதுமாகச் சாப்பிட்டு விட்டு இருவரும் எழுந்து சென்று கை கழுவி விட்டு வர… அவர்களுக்காகக் காத்திருந்த மாதவி இருவரையும் பார்த்துக் கொண்டு நின்று இருக்க…

தன் ஹேண்ட்பேகையும் மொபைலையும் கையில் எடுத்துக் கொண்டு சங்கவி கிளம்பி விட… அவளோடு வேதாசலமும் கிளம்பினார். மாதவிக்கு ஏமாற்றமாக இருந்தது.

‘என்ன! இதை எதுவுமே சொல்லாமல் போகிறார்கள். அப்போது இவர்களுக்கு என் சமையல் பிடிக்கவில்லையா? அதனால் தான் சாப்பிட்டுவிட்டு எதுவும் பேசாமல் போகிறார்களா?’ என்று நினைத்தவள், இனி தனக்கு இங்கே வேலை இல்லை போல என்று நினைத்தவள், அங்கிருந்து கிளம்பலாம் என்று முடிவு செய்ய….

வாசல் வரை சென்ற சங்கவி அங்கே நின்று திரும்பி மாதவியைப் பார்க்க… மாதவியும் சங்கவியைத்தான் பார்த்தாள்.

“மதியத்திற்கு உனக்கு நல்லா செய்ய வர நான்வெஜ் ஐட்டம் செஞ்சிட்டு நானும் அப்பாவும் ஷார்ப்பா ஒன்றரை மணிக்கு வந்திருவோம். நாங்க வரும்போது எல்லாம் ரெடியா இருக்கணும்” என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பிச் செல்ல, அவள் பின்னால் நின்றிருந்த வேதாச்சலம் மாதவியைப் பார்த்து, “உன்னோட சாப்பாடு சூப்பர்” என்று சொல்லி தன் கட்டை விரலைத் தூக்கி காட்டியவர், ஆபீசுக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

மாதவிக்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. அவர்கள் தான் செய்திருந்த சமையல் பிடித்து இருக்கிறது என்று நேரடியாகப் பாராட்டாமல். தன்னை வேலையில் சேர்த்துக் கொண்டும் என்பதை நாசுக்காகச் சொல்லிவிட்டுச் செல்பவர்களைப் பார்த்த மாதவிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இந்த இவர்கள் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டால், தான் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பித்து வேறு எங்கும் வேலை தேடுவது இன்னும் பத்து நாட்களுக்கு மேலாகிவிடும். ஏற்கனவே அவள் நான் படுத்துக் கொண்டிருந்த ஊரிலிருந்து இங்கு வந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது.

கையில் இருந்த பணம் எல்லாம் கரைந்து விட… எங்கு தேடியும் வேலை கிடைக்காமல் சோர்ந்து இருந்த நேரத்தில் தான் வேதாச்சலத்தின் நண்பர் தனக்குத் தெரிந்து வீட்டில் வேலை இருக்கிறது, செய்கிறாயா என்று கேட்டிருந்தார்.

அந்த நேரத்தில் இவளுக்கு இது மிகவும் பெரிய விஷயமாகத் தோன்ற, ‘சரி’ என்று உடனே சம்மதித்து இங்கே கிளம்பி வந்து விட்டாள். அவள் எதிர்பார்த்தது போலவே அவளை இங்கு வேலைக்கு எடுத்துக் கொண்டதில் மாதவிக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.


பழைய ஆபீஸில் இருந்து வேலையை ரிசைன் செய்திருந்த ஷிவு ஆதியின் ஆபீசுக்குச் செல்லாமல் தன் ரூமிலேயே இருந்தாள்.

அவளுக்கு ரூபேஷ் அவளை ஏமாற்றி விட்டது இன்னும் நம்ப முடியாதவளாகவே இருந்தால்.

‘எப்படி அவன் தன்னை ஏமாற்றி விட்டான்? இவனுக்கு அந்த அஜயே தேவலாம் போலவே. உனக்கும் இவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையே’ என்று ரூபேஷின் மீது ஷிவு மிகவும் கோபமாக இருந்தாள்.

தன்னை இந்த நிலைக்கு ஆக்கியதற்கு காரணம் ரூபேஷ் தான். இந்த விஷயம் ஆதிக்கு மட்டுமே தெரியும் என்றாலும், தன் பெற்றோருக்கு மற்றவர்களுக்கும் தெரிய வரும் போது, தன்னைப் பற்றியும் தன் ஒழுக்கத்தைப் பற்றியும் அவர்களெல்லாம் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து மிகவும் வருந்தினாள் ஷிவு.

எப்படி இத்தனையையும் செய்துவிட்டு, தன்னிடம் தன் மாமா ஆபீஸில் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாகப் பழைய ஆபீஸிலிருந்து வேலையை ரிசைன் செய்தவன், இத்தனை நடந்த பின்னும் இன்று வரை ஆபீஸ் சென்று கொண்டிருப்பதை கேள்விப்பட்டவர்களுக்கு, அவன் மீது ஆத்திரமாத்திரமாக வந்தது. எப்படி அவனால் தன்னை ஏமாற்றிவிட்டு, தன் மாமாவின் ஆபீஸிலேயே தைரியமாக வந்து வேலை பார்க்க முடிகிறது என்று ஷிவுவுக்குத் தோன்றியது.

தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த ஷிவுவை கனகாவும் எவ்வளவோ முறை வந்து அவள் ஏன் இப்படி இருக்கிறாள், ஏன் வேலைக்குச் செல்லவில்லை என்று கேட்டுப் பார்த்து விட்டார். ஆனால் ஷிவு எதுவும் சொல்லி அவரைச் சமாளித்து விட்டாள். துரையையும் சமாளிக்க வேண்டி இருந்தது.

தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை எப்படி வீட்டில் சொல்வது? அதைவிடத் தான் ஏமாற்றப்பட்ட விஷயத்தை அவர்கள் எல்லாம் கேள்விப்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்து உள்ளுக்குள்ளேயே வருந்திக் கொண்டிருந்தாள் ஷிவு.

ஷிவு இந்த யோசனையிலேயே அமர்ந்திருக்க… இப்போது அவள் அறைக்கதவு தட்டப்படவும், கனகா தான் வந்திருப்பார் என்று நினைத்த ஷிவு, உள்ளிருந்தவாரே, “நான் தான் எங்கேயும் போகல, எங்கேயும் வரலைன்னு சொல்றேனேமா. என்னை ஏன் சும்மா சும்மா வந்து தொந்தரவு பண்ணிட்டு இருக்கீங்க?” என்று எரிச்சலாக ஷிவு பேச…

அறைக்கு வெளியே இருந்து ஆதி “நான் உள்ளே வரலாமா?” என்று குரல் கொடுக்கவும், ஆதியின் குரலைக் கேட்டதும் பதறி அடித்துக் கொண்டு மெத்தையில் அமர்ந்திருந்த ஷிவு வேகமாக வந்து தன் அறை கதவைத் திறந்து, “உள்ளே வாங்க மாமா” என்று அழைக்க, ஆதியும் ‘சரி’ என்று தலையாட்டி விட்டு உள்ளே வந்தான்.

உள்ளே வந்த ஆதி, ஷிவுவின் அறையை ஒரு முறை நோட்டமிட்டு விட்டு அவளிடம் திரும்பி, “நீ இன்னும் ரெடியாகவில்லையா?” என்று கேட்டான்.

ஷிவு புரியாமல் ஆதியைப் பார்க்க…

“என்ன பாக்குற? சீக்கிரம் கிளம்பி வா. ஆபீசுக்கு டைம் ஆகுது. ஆபீசுக்கு வராம எவ்வளவு நாள் ரூம்குள்ளயே அடைஞ்சு கிடக்கப் போறே?” என்று ஆதி கேட்க..

“மாமா… மாமா…. அது வந்து…” என்று ஷிவு பேசத் தயங்க..

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு எல்லாம் தெரியும். நான் பாத்துக்கிறேன். நீ முதல்ல கிளம்பி என் கூட வா. நான் ஹாலில் வெயிட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு ஆதி அவள் அறையை விட்டு வெளியே செல்ல…

ஷிவுவுக்கு ஆதியிடம் எதுவுமே பேச முடியவில்லை. வேறு வழியே இல்லாமல் ஆபீசுக்குக் கிளம்பச் சென்றாள்.

ஹாலில் ஆதி அமர்ந்திருக்க… ஆபீஸ் செல்வதற்கு கிளம்பி ஷிவு கீழே வந்தவள், ஆதியிடம் வந்து, “மாமா, போலாம்” என்று சொல்ல…

ஷிவு கிளம்பி மாடியில் இருந்து வருவதைப் பார்த்த கனகா ஹாளுக்கு வந்தவர், “என்னடி ஆச்சரியமா ஆபீஸ்க்கு கிளம்பிட்ட? நான் உன்கிட்ட எவ்வளவு தடவை வந்து சொன்னேன். ஆனா அப்போ எல்லாம் ஆபீசுக்கு கிளம்பாம இப்ப என்ன திடீர்னு கிளம்பி வந்து உன் மாமா கிட்ட ஆஃபீஸ் போகலாம்ன்னு கேக்குற?” என்றார் கனகா.

“அம்மா, ஆதி மாமா வந்து கூப்பிடும் போது எப்படி வர மாட்டேன்னு சொல்றது? அதுதான் நான் கிளம்பி வந்துட்டேன்” என்று ஷிவு சொன்னாள்.

“நான் தான் அத்தை அவள போய் கிளம்பி வர சொன்னேன். ஆனால் அவ வீட்டிலேயே இருப்பா. அவ தானே என்னோட ஆபீஸ்ல வேலை வேணும்னு சொல்லி கேட்டிருந்தா? அதனால தான் நான் இன்னைக்கு கண்டிப்பா ஷிவுவை ஆபீஸ் அழைச்சிட்டு போகணும்னு அவளை கிளம்பி வரச் சொன்னேன்” என்றான் ஆதி.

“சரிப்பா. எப்படியோ அவளை நீ அழைச்சிட்டு போறியே. அதுவே போதும். நானும் பாத்துட்டே இருக்கேன், இவ ராதாவுக்குக் கல்யாணமானதிலிருந்து சரி இல்ல. எப்பவும் அவகிட்ட கீரியும் பாம்பும் மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருப்பா…. ஆனா இப்போ அவளை விட்டுப் பிரிச்சிருக்க முடியல போல… எதுவும் எந்தப் பொருளோட அருமையும் அது நம்மள விட்டுப் போனதுக்கப்புறம் தான் நம்மால உணர முடியும். இவர்களுக்கும் அப்படித்தான் போல” என்று சொன்னவர். “எப்படியோ இதோ நீ சொல்லியாவது ஆபீசுக்கு வர சம்மதிச்சாலே அதுவே போதும்” என்ற கனகா, “சரி நீ சாப்பிடுறீயா?” என்று கேட்க…

ஷிவு தனக்குப் பசிக்கவில்லை என்று சொல்லவும்.

ஷிவுவைப் பார்த்து, “நான் ஏற்கனவே சாப்பிட்டேன். நீ போய் சீக்கிரம் சாப்பிட்டு வா. போகலாம்” என்று ஆதி சொல்ல…

“இல்ல மாமா, எனக்குப் பசிக்கல” என்று ஷிவு தயக்கமாக ஆதியிடம் கூற…

“நான் உன்னச் சாப்பிட்டு வரச் சொன்னேன்” என்று மிரட்டுவது போல ஆதி பேசவும், அவனை மறுத்துப் பேச முடியாமல் அமைதியாகச் சென்று சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பவும் ஆதியிடம் வர, கனகாவிடம் சொல்லிக்கொண்டு இருவரும் ஆபீசுக்குக் கிளம்பினர்.

ஆதி சொன்னதும் எதுவும் பேசாமல் சொன்னதைச் செய்யும் தன் மகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டவர், அவர்கள் இருவரும் கிளம்பி ஆபீசுக்குச் செல்வதேயே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

காரில் ஏறி இருவரும் ஆபீசுக்குக் கிளம்பும் வழியில் ஷிவு எதுவுமே பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க…

காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆதி ஷிவுவிடம். “நீ ஏன் ஆபீஸ் வரதுக்கு இவ்வளவு தயங்குறேன்னு எனக்கு நல்லாவே புரியுது ஷிவு. உன்னை நம்ப வைத்து ஏமாற்றிய அந்த ரூபேஷ் இப்ப என்னோட ஆபீஸ்ல இன்னமும் வேலை பார்த்துட்டு இருக்கிறது தான் உனக்குப் பிரச்சனை. அவன் அங்க இருக்கும் போது எப்படி நீ அங்கே வரதுன்னு தானே யோசிக்கிறே?” என்றான் ஆதி.

ஷிவு ‘ஆமாம்’ என்ற தலை ஆட்ட….

“நான் ஏன் அவனை இன்னும் வேலையை விட்டுத் தூரத்திலன்னு நீ யோசிக்கிற அப்படித்தானே?” என்று கேட்டான் ஆதி.

‘ஆமாம்’ என்று தலையாட்டிய ஷிவு ஆதியைப் பார்க்க..

“அவனைத் திடீரென்று காரணம் இல்லாமல் வேலையை விட்டுத் தூக்கி விட்டால், அவன் உன்னை ஏமாற்றின விஷயம் எனக்குத் தெரிந்து தான் அவனை நான் வேலையை விட்டுத் தூக்கி விட்டேன் என்று தெரிந்துவிடும். அதன் பிறகு அவன் என்ன செய்கிறான், எங்கே போகிறான் என்பதை நமக்குத் தெரியாமல் போய்விடும். அதனால் தான் அவனை நம் அருகிலேயே வைத்துக் கொண்டு என்ன செய்கிறான் என்று கண்காணிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவனை நான் இன்னும் வேலையை விட்டு அனுப்பாமல் வைத்திருக்கிறேன்” என்று சொன்ன ஆதி.

“நீ இருப்பதையே கருத்தில் கொள்ளாமல் ஆபீஸ் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்ததையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் இப்படி ரூமில் அடைந்து இருப்பது, யாரிடமும் சரியான பதில் சரியாகப் பேசாமல் இருப்பது, நேரத்திற்குச் சாப்பிடாமல் இருப்பது என்று இருக்காதே. முன்பு போல நீ தனி ஆள் கிடையாது. உன் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கிறது. அதை நீ நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டாமா? இனியும் இப்படி இருக்காதே. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தோடு இருக்கப் பழகிக் கொள். நான் இருக்கிறேன் உனக்கு. கவலைப்படாமல் இரு” என்று ஆதி ஷிவுவுக்கு ஆறுதல் சொல்ல…

ஆதி தனக்கு ஆதரவாகப் பேசுவது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஷிவுவுக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அவனை நன்றி உணர்வோடு ஷிவு பார்த்தாள்.

“என்ன அப்படி பார்க்கிற? ஷிவு. என்னடா, எப்பவுமே சிடு சிடுன்னு இருக்குறவன் இப்போ இவ்வளவு அக்கறையா வந்து உன்கிட்ட பேசறான்னு நினைக்கிறியா? எனக்கு எப்பவுமே எல்லார் மேலயும் ரொம்ப அக்கறையும் பாசமும் இருக்கு ஷிவு.”

“ஆனா அத நான் வெளியே காட்டிக்கல. இத்தனை நாள் அப்படி இருந்ததுனால தான் என்னால துர்கா மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியாம போயிடுச்சு. அவளோட என்னோட வாழ்க்கையும் சரியாக ஆரம்பிக்க முடியாம நான் இப்போ ரொம்ப வருத்தப்படுறேன். நான் ரொம்ப லேட்டா தான் இந்த விஷயத்தை ரியலைஸ் பண்ணுனேன். அதனால தான் இனிமேல் நான் என்னை கொஞ்சம் மாத்திக்கணும்னு நினைச்சு கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிட்டு வரேன்” என்று சொன்னவன். ஷிவுவின் தலையில் கை வைத்து அவள் முடியைக் கலைத்தவன், அவள் தோளைத் தட்டிக் கொடுத்து, “சியர் அப் ஷிவு! நீ இன்னும் வாழ்க்கையில் பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது. தைரியமாக இரு” என்று சொல்லிவிட்டு காரை ஆபீஸிற்குச் செலுத்த ஆரம்பித்தான்.

❤️

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured