Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 151

உன் ரகசிய ரசிகை நான் 151

by Layas Tamil Novel
255 views

EPISODE 151

ஆதி, துர்காவை அவளுக்குப் பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு, மருத்துவமனையிலிருந்து நேராக அழைத்து வந்து காரை ஓர் இடத்தில் நிறுத்தினான்.

அவன் காரை நிறுத்தியதும், அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு வெளியே பார்த்த துர்கா, “இது என்ன இடம்?” என்று கேட்டாள்.

“நீயே வந்து பார். உனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த இடம் தான் இது,” என்றான் ஆதி.

“அப்படியா!” என்று ஆச்சரியமான துர்கா, அவன் அழைத்து வந்த இடத்தைத் திரும்பிப் பார்க்க… அவளுக்கு அந்த இடத்தைப் பார்த்ததும் அது மிகவும் பழக்கமான இடம் போல இருந்தது. அவள் மனம் ஏனோ அந்த இடத்தைப் பார்த்ததும் நிம்மதி அடைந்தது போல உணர ஆரம்பித்தாள்.

ஆதி காரிலிருந்து இறங்கி, துர்காவின் சக்கர நாற்காலியை (wheelchair) எடுத்து வந்து துர்காவை அதில் அமர வைத்தவன், அவளை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல… அந்த இடத்தை அண்ணாந்து பார்த்தபடி அவனுடன் சென்றாள் துர்கா.

துர்காவை உள்ளே அழைத்து வந்த ஆதி, வீட்டிற்குள் நுழைய, அப்போது வாசலில் சத்தம் கேட்கவும் சமையலறையில் வேலையாக இருந்த வடிவு கையால் துடைத்தபடி வெளியே வந்தார். வரவேற்பறையில் துர்காவுடன் நின்று இருந்த ஆதியைப் பார்த்ததும் வடிவுக்குச் சந்தோஷமாக இருந்தது.

அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு வேகமாக அவர்கள் அருகில் வந்த வடிவு, “மாப்பிள்ளை வாங்க” என்று அழைத்தவர், அவனை வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னார்.

துர்காவின் அருகில் வந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டு, “துர்கா நல்லா இருக்கியா? உடம்புக்குப் பரவாயில்லையா?” என்று வடிவு பாசமாகக் கேட்க…

வடிவு துர்காவின் கையைப் பிடித்துக்கொண்டு பேசவும், துர்காவிற்கு அவர் யார் என்று நினைவில் இல்லை என்றாலும், அவர் கீர்த்தியின் அம்மா என்று ஏற்கனவே கதிர் துர்காவிடம் சொல்லி இருக்க… அவரைப் பார்த்து சிரித்த துர்கா மறுகணமே பயந்துகொண்டு ஆதியின் கையைப் பிடித்துக்கொண்டாள்.

அவள் கையைச் சிரிப்புடன் பிடித்துக்கொண்ட ஆதி, “பயப்படாதே துர்கா, இவங்க யாருன்னு உனக்குத் தெரியும் தானே?” என்றவன் வடிவைக் காட்டி, “இவங்க கீர்த்திகாவுக்கு மட்டும் அம்மா கிடையாது. இவங்களுக்கு இன்னொரு பெண்ணும் இருக்காங்க” என்றான்.

“இன்னொரு பெண்ணா! யாரு அது?” என்று துர்கா கேட்டாள்.

“நீ தான் துர்கு அது” என்று ஆதி சொல்ல…

“நானா! ஆனால் என்னோட அம்மாதான் அங்கே நம்ம வீட்டில இருக்காங்களே!” என்றாள் துர்கா.

“அவங்களும் உன்னோட அம்மா தான், இவங்களும் உன்னோட அம்மா தான்” என்று வடிவைக் காட்டிச் சொன்னான் ஆதி.

“அது எப்படி ஆதி, ரெண்டு அம்மா இருப்பாங்க?” என்று துர்கா ஆர்வமாகக் கேட்க…

ஆதி துர்காவின் கைகளைப் பிடித்து அவள் முன் அமர்ந்தவன், “இவங்க தான் உன்னை இத்தனை வருஷமா பத்திரமாப் பார்த்துப் பார்த்து வளர்த்தவங்க” என்றவன், அவளிடம் நடந்த விஷயத்தைச் சுருக்கமாகக் கூறி முடித்தான். வடிவைக் காட்டி துர்காவிடம், “இவங்களும் உனக்கு அம்மா தான்” என்றான்.

ஆதி சொன்னதைக் கேட்ட துர்கா வடிவைப் பார்த்து, “அப்போ நீங்க தான் அந்த ரௌடிங்க கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துனாங்களா அம்மா?” என்றால்.

அவளைப் புரியாமல் பார்த்த வடிவு, “எந்த ரௌடிங்க துர்கா?” என்று துர்காவிடம் திரும்பி கேட்க…

ஆதி, துர்கா தன் சிறுவயதில் நடந்த விஷயங்களை எல்லாம் தன்னிடம் சொன்னதை வடிவிடம் கூறியவன், “அத்தை, நானே உங்களைக் கேட்கலாம்னு இருந்தேன். நீங்க துர்காவை முதன்முதலில் எங்கே பார்த்தீங்க? நீங்க பார்க்கும் போது பழைய விஷயங்கள் எல்லாம் துர்காவிற்கு ஞாபகம் இருந்ததா?” என்றான்.

“இல்லை மாப்பிள்ளை. நாங்க முதன்முதலில் துர்காவைப் பார்த்தது திருச்செந்தூர் கோவில்ல வெச்சு தான் மாப்பிள்ளை. முதல்ல நான் தான் துர்காவைப் பார்த்தேன்,” என்று சொல்லிக்கொண்டே முருகன் உள்ளே வந்தார்.

அவரைப் பார்த்த ஆதி, “வாங்க மாமா!” என்றவன், “திருச்செந்தூர்ல வெச்சு துர்காவைப் பார்த்திங்களா?” என்றான்.

“ஆமா மாப்பிள்ளை. நாங்க பாக்குறப்போ துர்கா உடம்பில் எல்லாம் காயத்தோட, தலையில் அடிபட்டு ரத்தம் வழிஞ்சிட்டு, எங்களைப் பார்த்துப் பயந்துட்டே ஓடி வந்தா… முதல்ல எங்களுக்கு எதுவும் புரியலை, ஆனா துர்கா ஏதோ ஆபத்துல இருக்கா என்று மட்டும் புரிந்தது. எங்ககிட்ட ஓடி வந்தவ அப்படியே மயங்கி விழுந்துட்டா. நாங்க பதறியடிச்சிட்டு அவளை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போய் வைத்தியம் பார்த்தோம்.

நாங்க திருச்செந்தூர் போனது எங்களுக்குக் குழந்தை வரம் வேண்டி, நானும் வடிவும் சஷ்டி விரதம் இருந்து போயிருந்தோம். அந்தக் குறையை முருகர் எங்களுக்குக் கேட்டதும் கொடுத்துட்டாரு. மருத்துவமனையில் வெச்சு துர்காவிற்கு வைத்தியம் பார்த்துட்டு இருந்த அன்னிக்கு, வடிவு மயக்கம் போட்டு அங்கேயே விழுந்துட்டா… விரதம் இருந்ததால் தான் வடிவு மயங்கிட்டான்னு நான் நினைச்சிருந்தேன். ஆனா வடிவு கர்ப்பமாக இருக்கான்னு மருத்துவர் வந்து சொன்ன அப்போ நாங்க ரெண்டு பேரும் அடைந்த சந்தோஷத்திற்குக் கணக்கே இல்லை.

அதே சமயம், துர்கா கண் முழிச்சுட்டான்னு வந்து சொன்னப்போ, அவள் எங்க ரெண்டு பேரையும் பார்த்த உடனே அம்மா, அப்பான்னு சொல்லி கூப்பிட்டதும், ஒரே நேரத்தில் அந்த முருகன் எங்களுக்கு இரண்டு குழந்தையைக் கொடுத்துட்டாருன்னு நாங்க ரொம்ப சந்தோஷப்பட்டோம்.

அதுக்கப்புறம் நாங்க துர்காகிட்டே ஒரு ரெண்டு மூணு தரம் அவளோட அம்மா அப்பாவைப் பத்திக் கேட்டுப் பார்த்தோம். ஆனா அவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. அவளைத் துரத்திட்டு வந்தவங்க யாருன்னு கேட்டப்போ, அவங்க குழந்தையைக் கடத்திட்டுப் பிச்சை எடுக்க வைக்குற கும்பல்லனு, அவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறப்போ தான் அவங்க துர்காவை அடிச்சிருக்காங்க,” என்றார் முருகன்.

இதையெல்லாம் கேட்ட பிறகுதான் ஆதிக்கு, துர்கா ஏன் பழையதை எல்லாம் மறந்தாள் என்று ஓரளவுக்குப் புரிந்தது. அந்த ரௌடிகள் அவளைத் தலையில் அடித்ததால் தான் துர்காவிற்குப் பழைய விஷயங்கள் எல்லாம் மறந்து போய்விட்டது என்று புரிந்தது.

பின் ஆதி வேறு எதுவும் அவர்களிடம் கேட்காமல், சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு, துர்காவுடன் அவர்கள் இருவரும் நேரம் செலவிடட்டும் என்று அவர்களிடம் விட்டுவிட்டு, அலுவலகம் போய் வந்து துர்காவைக் கூட்டிச் செல்வதாகக் கூறி அங்கிருந்து கிளம்பினான்.

முதலில் துர்கா ஆதியைப் போகவே விடவில்லை. பின் அவளை சமாதானம் செய்த பிறகு தான் அங்கிருந்து கிளம்பினான்.


கதிரும் கீர்த்தியும் இரண்டு நாட்களாக அவர்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஹனிமூனிற்கு வந்த அன்று நிலானியின் அறையில் வைத்து அவர்கள் இருவரையும் பார்த்ததோடு சரி. அதன் பிறகு இவர்கள் இருவரையும் மற்ற இரு ஜோடிகளும் பார்க்கவே இல்லை.

விக்கியும் நிறைய முறை அவர்களுக்கு அழைப்பு செய்து வெளியே அழைக்க… ஏதோ ஒரு சாக்கு சொல்லி இருவரும் அறையை விட்டே வர மறுத்துவிட்டனர்.

இன்றும் அனைவரும் சேர்ந்து வெளியே கிளம்பலாம். காலையில் நேரமே கிளம்பி வரச் சொல்லி இரவே விக்கி கதிருக்குச் செய்தி (Message) அனுப்பி இருந்தான். அனைவரும் கிளம்பித் தயாராக இருக்க, கதிரும் கீர்த்தியும் தங்கள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

விக்கியும் நிலானியும் தயாராகி தங்கள் அறையில் இருக்க, சந்தோஷும் ராதாவும் கூடக் கிளம்பி அவர்கள் அறைக்கு வந்துவிட்டனர். விக்கி மிகவும் கோபமாகிப் போனான்.

ராதாவும் நிலானியும் கூட மாற்றி மாற்றி கீர்த்திகாவுக்கு அழைக்க… அவர்கள் அழைப்பையும் அவள் ஏற்கவில்லை.

ராதாவுக்கு கீர்த்தியின் மேல் கோவமே வந்துவிட்டது. “இவ என்ன நினைச்சுட்டு இருக்கா? ஹனிமூனுக்கு வந்த அந்த வேலையை மட்டும் தான் பார்க்கணுமா என்ன? நாங்களும் தான் ஹனிமூன் வந்திருக்கோம், ஆனா இவங்களைப் மாதிரியா நாங்க இருக்கோம்?” என்று சந்தோஷைப் பார்க்க…

“அவங்க ரெண்டு பேரும் எதுக்காக ஹனிமூன் வந்தோமோ, வந்த வேலையைச் சிறப்பா செய்றாங்க. இங்கே அப்படியா வந்து ரெண்டு நாள் ஆச்சு, என்னை நீ ரெண்டு தடவை தான் கிட்டயே விட்டே… அவன் கொடுத்து வெச்சவன். அவன் பொண்டாட்டி கூடச் சந்தோஷமா இருக்கான். உனக்கு என்ன வந்துச்சு, அவங்களாச்சும் என்ஜாய் பண்ணட்டுமே!” என்று சந்தோஷ் கூற…

அதைக் கேட்ட விக்கியும் நிலானியும் அவர்களுக்குத் தெரியாமல் சிரித்துக்கொண்டனர்.

ராதா அவனை முறைத்து, “ஏண்டா வாத்தி என் மானத்தை வாங்குறே? இப்படி எல்லார் முன்னாடியும் என்னை இன்னொரு வாட்டி அசிங்கப்படுத்தினா, அப்புறம் ஊருக்குப் போற வரைக்கும் உன்னை என் கிட்டயே விட மாட்டேன்” என்று அவன் அருகில் பல்லைக் கடித்துக்கொண்டு ராதா பேச…

அவள் செய்தாலும் செய்துவிடுவாள் என்று நினைத்த சந்தோஷ், “நான் எதுவும் பேச மாட்டேன்” என்று தன் வாயில் கைவைத்து மூடிக்கொண்டான்.

இவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டதைப் பார்த்த விக்கி, “ஹுக்கும்…” என்று கனைத்தவன்.

“பாரு நிலாக்குட்டி. உன் ஃபிரெண்ட் வாத்தியாரையே வாயில் காய் வெச்சு நிக்க வெச்சிருக்கா! பாவம் சந்தோஷ்,” என்று விக்கி கூற…

“ஆமா விக்கி, எப்படி வந்து தெரிஞ்சே வாண்டடா வந்து நானே மாட்டிக்கிட்டேன் பாரு,” என்று சந்தோஷ் கூற…

அவன் சொன்னதைக் கேட்ட ராதா, “யோவ் வாத்தி, உனக்கு ஊருக்குப் போற வரை வெளியே திண்ணை தான்!” என்று சத்தம் போட்டுக் கூறிவிட…

அவள் பேசியதைக் கேட்டு நிலானி சத்தமாகவே சிரித்துவிட… அவளையும் முறைத்த ராதா, “ஏய் நிலானி, வேணாம்! என்னை வெறுப்பேத்தாதே! அப்புறம் உன்னையும் விக்கி அண்ணாவையும் ஊருக்குப் போற வரை தனியாவே விட மாட்டேன் பாத்துக்கோ. உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் வந்து உட்கார்ந்துக்குவேன் பாத்துக்கோ” என்று ராதா கூற…

“என்னது! எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவில் வந்து உட்கார்ந்துக்குவியா?” என்று அதிர்ச்சியான விக்கி, சந்தோஷிடம், “உன் பொண்டாட்டியச் சும்மா இருக்கச் சொல்லு சந்தோஷ்! அங்க ஒருத்தன் ரூமை விட்டே வராம என்னை வெறுப்பேத்துறான், இங்கே இவ என்னடான்னா எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்து உட்கார்ந்துக்குவேன்னு சொல்றா. இதுதான் நீ பொண்டாட்டியைப் பார்த்துக்கிற லட்சணமா?” என்றான் விக்கி.

சந்தோஷ் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க…

“நம்ம பிரச்சினையை அப்புறம் பார்க்கலாம். முதல்ல கீர்த்திகாவையும் கதிர் மாமாவையும் போய் வெளியே கூட்டிட்டு வரலாம் வாங்க!” என்று சொல்லி ராதா, நிலானியை இழுத்துக்கொண்டு முன்னே செல்ல…

விக்கி சந்தோஷைப் பார்த்து, “உன் பாடு கஷ்டம் தான்டா மாப்பிள்ளை” என்று சொல்லிக்கொண்டே விக்கியும் அவர்களுடன் சென்றான்.

ராதாவும் நிலானியும் கீர்த்திகாவின் அறைக்கு வந்து அவர்களின் அறைக்கதவைத் தட்ட…

ஐந்து நிமிடம் கழித்தே வந்து கதிர் கதவைத் திறந்தான். தங்களுக்காக ஆர்டர் செய்திருந்த உணவுதான் வந்திருந்தது என்று நினைத்துக் கதவைத் திறந்த கதிர், தன் அறைக்கு எதிரே நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் தலையைச் சொரிந்து கொண்டு நிற்க…

“என்னடா நிக்கிற? இங்கே வந்து ரெண்டு நாளைக்கு மேல ஆகுது, ரூமை விட்டுப் புருஷனும் பொண்டாட்டியும் வெளியே வரவேண்டும் என்று நினைப்பே இல்லையா?” என்ற விக்கி, “ஒழுங்கா நீயும் உன் பொண்டாட்டியும் ரெடியாகி இப்போ கிளம்பி எங்க கூட வெளியே வரீங்க. அப்படி இல்லைனா, இப்பவே எல்லாரும் கிளம்பி ஊருக்குப் போகலாம்” என்று சொன்னான்.

“விக்கி, ஊருக்குப் போறதா இருந்தா நீ, நீங்க எல்லாம் கிளம்புங்க. என்னையும் என் பொண்டாட்டியையும் ஏன் கூப்பிடுறீங்க?” என்றான் கதிர்.

“ஏய்! இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலையா? வந்ததுல இருந்து புருஷனும் பொண்டாட்டியும் ரூம்க்குள்ளேயே இருக்கீங்க. இதெல்லாம் உனக்கு நியாயமா இருக்குதாடா?” என்றான் விக்கி.

விக்கி சொன்னதைக் கேட்டு அருகில் இருந்த சந்தோஷ், “ஆமா விக்கி, அப்படி எல்லாம் இருந்து எங்களை நீங்க வெறுப்பேத்துறீங்க” என்றான்.

“என் பொண்டாட்டி கூட நான் சந்தோஷமா இருந்தா உங்களுக்கு என்னடா வந்துச்சு? நீங்க எதுக்குக் கடுப்பாகுறீங்க?” என்று விக்கியையும் சந்தோஷையும் பார்த்து கதிர் கேட்க…

“அ… அது எல்லாம் அப்படித்தான்” என்று விக்கியும் சந்தோஷும் ஒரு சேரச் சொன்னவர்கள். “உனக்கு நீ நினைச்சது நடக்குது. எங்கே… எங்களை விட்டால் தானே!” என்று இருவரும் தங்கள் மனைவியைத் திரும்பிப் பார்க்க…

நிலானியும் ராதாவும் அவர்களின் கன்னத்தில் இடித்தவர்கள், “கதிர் மாமா, இப்பப் போய் நீங்க கிளம்பி வரப் போறீங்களா? இல்லையா?” என்று ராதா கேட்க…

“ராதா, அது வந்து…” என்று தன் தலையைச் சொரிந்து கொண்டு நின்றான் கதிர்.

“இப்படி எல்லாம் சொன்னா நீ கேட்க மாட்ட” என்று சொல்லிவிட்டு, விக்கி கதிரைத் தள்ளிவிட்டு ரூமுக்குள் செல்ல…

கீர்த்தி அப்போதுதான் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து தயாராகி வெளியே வர…

அவளைப் பார்த்த ராதாவும் நிலானியும் அவளிடம் ஓடிச் சென்று கீர்த்திகாவின் கையைப் பிடித்து, “வெளியே போகலாமா?” என்று கேட்டார்கள்.

“நான் எப்பவோ ரெடி ஆயிட்டேன் டி. அவர் ரெடியான சரிதான்” என்று கதிரைக் காட்ட… “ஓ! அப்போ நீங்க எங்க கூடக் கிளம்பி வரதுக்குத் தான் தயாராக இருக்கீங்களா?” என்று கேட்டாள் நிலானி.

“அடி! ஏன்? நேத்து நைட்டு அவர் போனுக்கு விக்கி அண்ணா இன்னைக்கு வெளியே போகலாம்னு செய்தி அனுப்பி இருந்ததா என்கிட்ட சொல்லி, காலையில நேரமே ரெடியாகச் சொன்னது அவர் தானே?” என்று கதிரைப் பார்த்து கீர்த்திகா சொல்ல…

விக்கியும் சந்தோஷும் கதிரைத் திரும்பிப் பார்க்க… “ஏண்டா! அப்போ வேணும்னு எங்களை வெறுப்பேத்த தான் இவ்வளவு நேரம் வெளியே வராம ரூம்க்குள்ளயே இருந்தியா நீ?” என்றான் விக்கி.

“ஆமாண்டா! வேணும்னு உங்களுக்கு வெறுப்பேத்த இப்படிப் பண்ணினேன்,” என்று கதிர் சொல்லிச் சிரிக்க…

சந்தோஷும் விக்கியும் கதிரைப் பிடித்து அவன் முதுகில் நாலு சாத்து சாத்தி, “போடா… போய்ச் சீக்கிரமே ரெடியாகி வா…” என்று சொல்லி அவன் முதுகில் அடித்து, கதிரைப் குளிக்க அனுப்பி வைத்தனர்.

இந்த நேரத்தில் கதிரும் தயாராகி வர, ஆறு பேரும் மாலத்தீவில் (Maldives) இருந்த கடைத்தெருவிற்குச் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.

கதையை படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க ப்பா.. யாருமே கமெண்ட் பண்ண மாட்டேங்குறீங்க இப்படி பண்ணினா எப்படி அடுத்த ஏபி எழுத, போஸ்ட் பண்ண மனசு வரும். ஒரு மோட்டிவேஷனே இல்ல


You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured