Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 274

உன் ரகசிய ரசிகை நான் 274

by Layas Tamil Novel
102 views

EPI 274

அபிக்குத் திருமணம் செய்யத் தேர்ந்தெடுத்த கபிலனை சங்கவி திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறவும், கபிலனும் அவளையே திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாகக் கூறிவிட்டான்.

அவர்கள் இருவரின் மீதும் அபி வஞ்சத்தை வளர்த்துக் கொண்டாள். எப்படியாவது சங்கவியைப் பழிவாங்கியே தீருவேன் என்று சவால் விட்டவள், அந்த மண்டபத்தை விட்டு கோபமாக மரகதத்தை அழைத்துக் கொண்டு சென்றுவிட… அவர்கள் சென்றதைப் பார்த்த செண்பகம் வெங்கடாச்சலத்திடம் வந்து, “அண்ணா! அபி கோபிச்சு மண்டபத்தை விட்டுப் போறா பாருங்க. அவளைக் கூப்பிடுங்க. நான், ‘நீங்க சொன்னா அவ கேட்டுப்பா. நான் சங்கவிகிட்டப் பேசி இந்தக் பையனையே அபிக்குக் கல்யாணம் பண்ணச் சம்மதிக்க வைக்கிறேன்'” என்று செண்பகம் கூற.

“இல்ல செண்பகம், வேண்டாம். சங்கவி மட்டும் கபிலனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருந்தால் கூட நானே சங்கவியைப் பேசிச் சமாதானம் செய்து கபிலனை அபிக்குக் கல்யாணம் செய்து வைத்திருப்பேன். ஆனால் கபிலனும் சங்கவியைக் கல்யாணம் பண்ணிக்கத் தான் விரும்புகிறான். அதுக்கான காரணத்தையும் அவன் சொன்னதை நீ கேட்ட தானே? இதுக்கு அப்புறமும் எப்படி நம்ம அபிக்குக் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைக்க முடியும்?” என்று கேட்டார் வெங்கடாச்சலம்.

செண்பகம் செய்வதறியாது கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருக்க, அவர் அருகில் வந்த துர்கா, “அம்மா! நீங்க ஏன் வருத்தப்படுறீங்க? நம்ம எல்லாரும் நினைச்ச மாதிரி சங்கவிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப் போகுது. அது நல்லபடியா அவளுக்கு நடத்திக் கொடுக்கணும் இல்லையா? கண்டதை நினைச்சு யோசிச்சு நீங்க கவலைப்படாதீங்க. அபி பத்தி நீங்க யோசிச்சுக் குழப்பிக்க வேண்டாம். அவளை எப்படியாவது நம்ம வழிக்குக் கொண்டு வந்து விடுவோம். முதல்ல நம்ம சங்கவி மனசு மாறுவதற்குள்ள அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்கிற வழியைப் பார்ப்போம்” என்று செண்பகத்திற்கு மட்டும் கேட்கும் படி கிசுகிசுத்தாள்.

துர்கா சொன்னதைக் கேட்டதும் சட்டெனப் புரிந்து கொண்ட செண்பகம், நேராகச் சங்கவியிடம் வந்து நின்ற செண்பகம், “அண்ணா! அப்போ இந்த மேடையிலேயே சங்கவிக்கும் நீங்க ஏற்பாடு பண்ணின பையனுக்கும் கல்யாணம் செய்து வைத்து விடலாமா?” என்றார்.

“இதில் என்னமா கேள்வி? அதுக்குத்தானே நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்? இப்பவே இந்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் செய்துவிடலாம்” என்றார் வெங்கடாச்சலம்.

சங்கவிக்கு இதயத்திற்குள் ஒரு பெரிய பூகம்பமே ஏற்பட்டது போல இருந்தது. திடீரென ஒரே நாளில் தன் வாழ்க்கை இப்படி மாறிவிட்டது என்று அவளால் நம்ப முடியவில்லை. இந்தச் சொத்து கைவிட்டுப் போகக்கூடாது என்பதற்காகத் திருமணம் செய்து கொண்டு இருந்தாலும், அவள் கபிலனைத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணமே அவளுடைய நண்பன் என்பதால் தான்.

வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டு அவனுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தன்னால் வாழ முடியாது. ஆனால் கபிலனுக்குத் தன்னை நன்றாகத் தெரியும். அவன் நண்பன் என்ற ஸ்தானத்தில் தனக்கான இடத்தைக் கொடுத்து தன்னோடு பயணிப்பான் என்று நம்பிக்கையில் தான் சங்கவி, திருமணம் செய்து கொள்ள கமலனை விடுத்து கபிலனைத் தேர்ந்தெடுத்தாள்.

அடுத்தடுத்த நிகழ்வுகள் துரிதமாக மண்டபத்திற்குள் நடக்க ஆரம்பித்தது. முதலில் வெங்கடாச்சலமும் விசாலட்சியும் அமர வைத்து, அவர்களுடைய அறுபதாம் கல்யாணத்தை நல்ல முறையில் நடத்தி முடித்தவர்கள், பிறகு அதே மண மேடையில் சங்கவியையும் கபிலனையும் மணக் கோலத்தில் அமர வைத்து, கபிலனின் கையில் தாலியைக் கொடுத்து சங்கவியின் கழுத்தில் கட்டச் சொன்னார் ஐயர்.

தாலியைக் கையில் எடுத்த கபிலன் தன் அருகில் நின்றிருந்த அவன் பெற்றோரைப் பார்க்க, அவர்கள் மூவருமே சந்தோஷமாக அவனைத் தாலி கட்டச் சொல்லி கூறவும். சற்று நிம்மதி அடைந்தவன், திரும்பி அவன் தம்பி கமலனைத் தேட…

அப்போது அவன் பின்னால் நின்றிருந்த கமலன் தன் அண்ணன் கபிலனின் காதில் குனிந்து, “அண்ணா, நீ நினைச்சது போலவே உனக்குப் பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கப் போற. இனிமே எதுக்காக நேரத்தைக் கடத்திட்டு இருக்க? சீக்கிரமா அவங்க மனசு மாறுறதுக்குள்ள தாலியைக் கட்டு” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்த கபிலன், திரும்பி சங்கவியை ஒரு முறை பார்த்துவிட்டு அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

எதற்குமே தலைவணங்கிப் பழக்கம் இல்லாத சங்கவி முதல்முறையாக கபிலன் அவள் கழுத்தில் கட்டும் தாலிக்காகத் தலை குனிந்து அதை ஏற்றுக் கொண்டாள்.

சங்கவியின் கழுத்தில் கபிலன் தாலி கட்டியதும் செண்பகம் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவர் மகள் மற்றவர்களைப் போல ஒரு நிம்மதியான நல்ல வாழ்க்கையை வாழ்ந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் வந்த ஆனந்தக் கண்ணீர் அது.

சங்கவிக்கு பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து வேதாச்சலமும் சிவகாமியும் அவளுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளையும், சீர் சம்பிரதாயங்களையும் செய்து திருமணம் நடத்தி வைக்க, அவர்களை விட்டுச் சற்றுத் தள்ளி நின்றிருந்த செண்பகம், ஆதி, கதிர், துர்கா, தன் அண்ணன் வெங்கடாச்சலம், விசாலட்சி என அனைவரையும் பார்த்து நன்றி கூறினார்.

அவர் கையெடுத்துக் கும்பிட்டு வெங்கடாச்சலத்தையும் விசாலட்சியையும் பார்க்க, அவர் கையைப் பிடித்துக் கொண்ட விசாலட்சி, “என்ன செண்பகம் இது? சங்கவி யாரு? நம்ம பொண்ணு தானே? அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சு அவர் நல்லா வாழணும்னு ஆசைப்பட்டோம். அது நடக்கவும் செஞ்சிருச்சு. இனி அவ வாழ்க்கை அவள் கையில் தான் இருக்கு. நீ கவலைப்படாத. அவ நல்லபடியா எல்லாரும் முன்னாடியும் வாழ்ந்து காட்டுவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றார் விசாலட்சி.

மணமேடையில் இருந்து எழுந்த கபிலன் சங்கவி இருவரையும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளச் சொன்னார் ஐயர்.

முதலில் கபிலனின் பெற்றோரின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ஜோடிகள், அடுத்து வேதாச்சலம், சிவகாமி இடமும், வெங்கடாச்சலம், விசாலட்சி இடமும் ஆசீர்வாதம் வாங்கினர். பிறகு திரும்பி என் சங்கவி செண்பகத்திடம் வர…

அதுவரை மனதில் தேக்கி வைத்திருந்த மொத்த உணர்வுகளையும், சங்கவியை மணக்கோளத்தில் பார்த்ததும் அவளைக் கட்டிக்கொண்டு வெடித்து அழ ஆரம்பித்து இருந்தால் செண்பகம்.

சங்கவிக்கு செண்பகம் இப்படி வெடித்து அழுவதைப் பார்த்து இதயம் கனத்தது. அவர் அழுகையில் இருந்தே தெரிந்தது, அவர் தன் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்று. அவரின் அக்கறையும் அன்பும் இந்த அழுகையிலேயே அவளுக்குப் புரிந்தது.

தன்னிடமிருந்து செண்பகத்தைப் பிரித்த சங்கவி, “அம்மா! இனியும் நீங்க என்னை நினைச்சு வருத்தப்படவோ, கவலைப்படவோ வேண்டியதில்லை. நீங்க எதிர்பார்த்ததுபோல என்னால ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும். நீங்கள் நினைத்தது இதுதானே? எனக்கான ஒரு குடும்பம், எனக்கான ஒரு வாழ்க்கை இருக்கணும்னு. அதே போல தான் எனக்கு இப்போ அமைஞ்சிருக்கு. நீங்க கவலைப்படாதீங்க” என்று அவருக்கு ஆறுதல் சொன்னவள், “எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றால்.

அவள் பேசிக்கொண்டு இருந்தவள் செண்பகத்தின் காலில் விழப்போக, அப்போது விக்கி வந்து கபிலனிடம் எதையோ சொல்லி கேட்டுக் கொண்டிருக்க, அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த கபிலன் செண்பகம் காலில் சங்கவி விழுந்ததை கவனிக்கவில்லை. அவன் காலில் விழாததைக் கண்டவள், குனிந்தவாறு அவனை நிமிர்ந்து பார்த்து அவன் வேஷ்டியைப் பிடித்து வடுகென இழுக்க, அவள் இழுத்த வேகத்தில் கபிலனும் செண்பகத்தின் காலில் விழுந்தான்.

அவர்கள் இருவரின் செயலைப் பார்த்து மேடையில் நின்றிருந்தவர்கள் சிரிக்க… மேடைக்கு வந்த விக்கி கபிலனைப் பார்த்து, “நண்பா! நல்லா வகையா மாட்டிக்கிட்டடா” என்று சொல்லிச் சிரித்தவன், “ஹாப்பி மேரீட் லைஃப் டா மச்சான்” என்று சொல்லி கபிலனைக் கட்டிக் கொண்டான் விக்கி.

கபிலனும் சிரித்துக் கொண்டே, “மாட்டிகிட்டது நான் இல்ல, சங்கவி தான்” என்று விக்கியின் காதில் கூற, கபிலனிடமிருந்து பிரிந்து அதிர்ச்சியோடு கபிலனை விக்கி பார்க்க, அவனைப் பார்த்துக் கண்ணடித்து விட்டுச் சென்று சங்கவியின் அருகில் நின்று கொண்டான்.

சொன்னது போலவே விக்கி சங்கவிக்காக எழுதிக் கொடுத்த பத்திரத்தை அவள் கையில் கொடுத்த சிவகாமி சங்கவியின் முகத்தைப் பிடித்து அவளைத் தன் அருகில் இழுத்தவர், அவள் நெற்றியில் முத்தம் வைத்து, “நல்லாயிருமா” என அவளை வாழ்த்தினார்.

திருமணம் முடிந்த கையோடு முதலில் மணமகன் வீட்டிற்குத் தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சங்கவியையும் கபிலனையும் கபிலன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட, அவர்களோடு செண்பகம், கனகா, துரை மூவரும் சென்றுவிட, வெங்கடாச்சலம் விசாலட்சியை அழைத்துக் கொண்டு துர்கா, கீர்த்திகா, ராதா, சிவு என அனைவரும் அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

வீட்டிற்கு வந்ததும் பெரியவர்கள் காலில் ஜோடிகளாக வந்து ஒவ்வொருவராக ஆசி வாங்கியவர்கள், அவரவர் வீட்டிற்கு கிளம்பி விட்டனர். துர்கா, கீர்த்திகா, கதிர், ஆதி நால்வரும் தோட்டத்தில் அமர்ந்து சாவகாசமாகப் பேசிக்கொண்டு இருக்க, வெங்கடாச்சலம் விசாலட்சி காலையிலிருந்து மண்டபத்தில் தங்களுக்கு ஓய்வு வேண்டும் என்று நேரமே சென்று உறங்கி விட்டனர்.

தோட்டத்தில் புல் தரையில் படுத்து இருந்த ஆதியின் அருகில் இருந்த கதிர், “அண்ணா, எப்படி நீங்க சங்கவி இந்தக் கல்யாணத்தைச் செய்துக்க சம்மதிப்பாள்னு சொல்லி இவ்வளவு பெரிய பிளான அவ்வளவு சாதாரணமாகப் போட்டீங்க?” எனக் கேட்டான்.

“ஏன் கதிர், இப்ப அதுல எதுவும் பிரச்சினையா? நம்ம நினைச்சது போலவே சங்கவி தான் கபிலனைக் கல்யாணம் செய்துக்கிட்டாளே. அப்புறம் என்ன?” என்றான் ஆதி.

“இல்ல அண்ணா. நீ சொல்லு. எப்படி சங்கவி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுவான்னு நீ சரியா யோசிச்சுக் காய் நகர்த்தினாய்?” என்றான் கதிர்.

“அதை நான் சொல்றேன்” என்ற துர்கா. “முதலில் சங்கவி சின்ன வயசுல இருந்தே வேதாச்சலம் அப்பா தான் வளர்த்துட்டு வந்தார். ஒரே செல்ல மகள். அதனால அவர் கேட்டது எல்லாம் அள்ளிக் கொடுத்து, அவளுக்கு உறவுகளுடன் தூய்மையான அன்பு பற்றிக் காட்டிக்காம வெறும் பணம், காசு, வசதி, வாய்ப்பைக் காட்டியே அவளை வளர்த்துட்டாரு.”

“சிவகாமி அம்மா என்னதான் சங்கவி மேல் பாசம் வச்சு இருந்தாலும், அவரோட பாசத்தை வேதாச்சலம் அப்பாவும், சங்கவியும் பெருசா எடுத்துக்கல. முதல் முறையா சங்கவி அவளோட பெற்றோரைப் பிரிந்து இங்கே வரப்போ, அவ ரொம்ப டிப்ரஷன்ல தான் இருந்தா. அவளுக்கான குடும்பம் எதுவுமே இல்லாம செண்பகம் அம்மாவ அவளோட அம்மாவா ஏத்துக்க முடியாம அவ ரொம்பச் சிரமப்பட்டார்” என்றால் துர்கா.

“இதை நானும் ஆதியுமே ஹாஸ்பிடல்ல சங்கவி அட்மிட் ஆகி இருக்கிறப்போ, அவன் நிறைய முறை தனியா உட்கார்ந்து அழுதிருக்கிறது பார்த்திருக்கோம். நம்ம எல்லாரும் முன்னாடியும் அவ வீம்பா, பிடிவாதமா, திமிரு புடிச்சவளா தன்னை காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள்ள அவன் உண்மையாவே பாசத்துக்கு ஏங்கிட்டு தான் இருந்தா. அவகிட்ட யாரும் பாசமா வந்து பேசுற கூடாது என்று தான் எல்லாரையுமே ஒதுக்கி வைத்து அவர்களை எடுத்து எறிஞ்சு பேசிப் பழகி இருக்கா.”

“சரியா கொஞ்சங் கொஞ்சமா மாறிடுவான்னு நானும் ஆதியும் நினைச்சோம். ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் ஏதாவது ஒரு ரூபத்துல நம்ம எல்லாருக்கும் குடைச்சல் கொடுத்துட்டே தான் இருந்தா. அவளை எப்படிச் சரி பண்றதுன்னு எங்களுக்குப் புரியவே இல்ல. ஒரு கட்டத்துல அவ என்னதான் பண்றான்னு பார்க்கலாம்னு திருப்பி அடிக்க ஆரம்பிச்சோம்.

இந்தக் கல்யாணத்தை நிறுத்தி நம்ம எல்லாரையும் நடுத்தெருவுல கொண்டு வந்து நிப்பாட்டி, இங்கே இருக்கிற சொத்துக்கள் எல்லாமே அவ பேருல மாத்திடப் போறதா சொல்லி என்கிட்ட சவால் விட்டா.”

“அப்போதான் எனக்கு இவ கிட்ட இருந்து எப்படி நம்ம எல்லாரையும் காப்பாத்துறது? அவளோட பிளான் என்னவா இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அதை ஆதிகிட்டேயும் நான் ஒருமுறை சொன்னப்பதான், ஆதி, ‘ஏன் அவளைப் பத்தியே யோசிக்கிற? அவளை எப்படிச் சரி பண்ணனும்னு நம்ம யோசிப்போம்’ என்றான். அப்போதான் அபியாலையும் நமக்கு பிரச்சினை வந்துச்சு. இப்படியே விட்டா சரி வராது என்று நாங்கள் யோசித்து இருந்த வேளையில தான் அபிக்குக் கல்யாணம் செய்து வைக்கலாம்னு வெங்கடாச்சலம் அப்பா சொல்லிட்டு இருந்தாரு. அதுக்குப் பிறகு போட்ட பிளான் தான் இத்தனையும்” என்றால் துர்கா.

“செண்பகம் அம்மாகிட்ட சங்கவியைப் பிடிச்ச விஷயத்தைச் சொல்லிக் கொடுத்து அவரை அதேபோலப் பேச வச்சோம். அவரும் சங்கவிகிட்ட நாங்க சொன்னது போலவே உண்மையா பாசமா பேசவும் அவளுக்குச் செண்பகம் அம்மாவோட பேச்சை மீற முடியல. தவிர, அவளுக்கு எப்பவுமே சாய்ஸ் கொடுத்தா பிடிக்காது. அவளை விட பெட்டரா சங்கர் அபிக்கு வரன் அமையப் பார்த்ததும், அதை சங்கவிக்குத் தாங்க முடியலை. இதுவும் ஒரு காரணம்னு கூட சொல்லலாம்” என்றான் ஆதி.

“எப்படியோ நம்ம எல்லாரும் சங்கவிகிட்ட இருந்து தப்பிச்சிட்டோம். ஆனால் அந்தக் கபிலன் வசமாக மாட்டிக்கிட்டான்” என்று சொல்லி கீர்த்தி சிரித்தாள்.

“யாருக்குத் தெரியும்? சங்கவிகிட்ட கபிலன் மாட்டிகிட்டானா? இல்ல கபிலன்கிட்ட சங்கவி சிக்கி கிட்டாளான்னு” என்று துர்காவும் கூற, அனைவரும் சிரித்தனர்.

இங்கே மண்டபத்தில் இருந்து மரகதத்துடன் கிளம்பி வந்த அபி, கோபத்தின் உச்சத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியாமல் வீட்டிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டுத் தாறுமாறாக உடைக்கத் துவங்கியிருந்தால்.

அவளிடம் வந்த மரகதம், “அபி! உனக்கு என்ன பைத்தியமாடி பிடிச்சிருச்சு? இப்போ எதுக்கு இதையெல்லாம் போட்டு உடைச்சிட்டு இருக்க? இதெல்லாம் எவ்வளவு காஸ்ட்லியான பொருள் தெரியுமா? இப்படித்தான் பொறுப்பில்லாமல் இருப்பியா?” என அவளைத் திட்ட.

“ஆமா! உனக்கு காசு, பணம் இதெல்லாம் தான் முக்கியம். உன் பொண்ணு அங்க அத்தனை பேர் முன்னாடி அவமானப்பட்டு வந்து நிற்கிறது பெருசா தெரியல அப்படித்தானே? அந்தச் சங்கவி எனக்குப் பார்த்திருந்த பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று பிடிவாதமா நின்னு அவனை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டா? அதுக்காகச் சொன்ன காரணம் என்னன்னு கேட்டியா? ‘ஒரே வீட்ல எப்படி ரெண்டு பேர் இருக்கிறது? அதுவும் நான் மூத்தவளா அந்த வீட்ல இருக்கிறப்போ எனக்குக் கீழ அவளால் இருக்க முடியாதா? அதனால் தான் அவ இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்’னு சொல்றா” என்றாள் அபி.

“நான் சங்கவியை கூட ஒரு வகையில மன்னிச்சிடுவேன். ஏன்னா அவளோட குணமே அப்படித்தான். அது நமக்கு நல்லாவே தெரியும். ஆனால் அவ கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக, இந்த அப்பாவும் என் பொண்ணுக்குப் பார்த்த மாப்பிள்ளையே நீ எப்படி கட்டிக்கலாம்னு ஒரு வார்த்தை கூடக் கேட்காம, ‘சரி’ன்னு சம்மதிச்சு அவனப் பிடிச்சு அவ தலையில கட்டி வச்சுட்டாரு. அதுக்கு அவர் கூடி இருந்த எல்லாருமே சங்கவிக்குச் சப்போர்ட் வேற செய்யறாங்க. இதையெல்லாம் பார்த்தால் எனக்கு அந்த வீட்ல நான் யாரோ போலத்தான் திரியுறேன். எனக்கான உரிமை அந்த வீட்ல இப்போ வரைக்கும் கிடைக்கவே இல்லை” என்று புலம்பினாள்.

“சரி விடு அபி. இன்னும் நீ அதையே நினைச்சுட்டு இருக்கியா? உனக்கு அந்தச் சங்கவி கல்யாணம் பண்ணின பையனை விட நல்ல, வசதியான, அழகான ஒரு பையனை அம்மா பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன்” என்றார் மரகதம்.

“அம்மா! இத்தனை நடந்து பிறகும் உன்னால எப்படி இப்படிப் பேச முடியுது? மண்டபத்தில் வைத்து உனக்கு யாராவது ஒருத்தராவது பரிந்து பேசி நீ பார்த்தியா? இப்போ அந்த ஊர்ல இருக்கிற எல்லாருக்குமே நான் வெங்கடாச்சலத்தோட பொண்ணுன்னு தெரிஞ்சிருக்கும்.”

“உன்னையும் என்னையும் பத்தி இந்த நேரம் காட்டுத்தீ போல தேவையில்லாத விஷயங்கள்தான் முதல்ல பரவி இருக்கும். அப்படி இருக்கிறப்போ நீ எந்த முகத்தை வச்சுட்டுப் போய் எனக்கு மாப்பிள்ளை பார்ப்ப? அதுவும் நம்மளை விட வசதியான்னு சொல்ற. அப்படி ஒருத்தன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிப்பான்னு நீ நினைக்கிறாயா?” என்றால் அபி.

“ஏன்டி அப்படி சொல்ற? அதெல்லாம் நல்ல பையனாவே பார்த்து நான் உனக்குக் கல்யாணம் செய்து வைக்கிறேன்” என்றார் மரகதம்.

“அம்மா! கொஞ்சமாவது யோசிச்சுப் பேசுங்க. இப்போ உனக்கும் எனக்கும் குடும்பமோ, சொந்தமோ, ஒரு அந்தஸ்து எதுவுமே இப்போ கிடையாது. நம்ம அந்தக் குடும்பத்தோட சேர்ந்து இருந்தா மட்டும்தான் நமக்கான மதிப்புக் கிடைக்கும்னு நான் இன்னைக்கு நல்லா புரிஞ்சுகிட்டேன்.

முதல்ல நமக்குச் சேர வேண்டிய சொத்துக்களை எல்லாம் வாங்கணும்னா, அப்பா சொன்னது மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு குழந்தையைப் பெத்துக்கணும். அந்தச் சங்கவி எப்படி அந்தச் சொத்தை வாங்குவதற்காகக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சாளோ, அதே காரணத்துக்காகத் தான் நானும் இப்போ கல்யாணம் செய்துக்கப் போறேன். ஆனா யாரோ எவனையோ என்னால கல்யாணம் செய்துக்க முடியாது. அவளை விட வசதியில், அந்தஸ்துல உயர்ந்தவனா பார்த்து எனக்குக் கல்யாணம் செய்யணும். அப்படின்னா, அதுக்கு நீயும் நானும் முயற்சி செய்தால் சுத்தமா நடக்காது. என்னோட கல்யாணத்தை நடத்திப் பாக்கணும்னா அப்பா மனசு வச்சா மட்டும் தான் முடியும்” என்றால் அபி.

“ஏன்? இப்பதான் ‘எனக்கு எதுவுமே வேண்டாம்’னு மண்டபத்தில் இருந்து எல்லார்கிட்டயும் சண்டை போட்டுட்டு கிளம்பி வந்த. ஆனா இப்ப என்னடான்னா உன்னோட கல்யாணத்தை உன் அப்பா தான் நடத்தி வைக்கணும்னு சொல்ற? அது எப்படி முடியும்? அவருக்கும் உன்னை மாதிரியே கோபம் இருக்காதா என்ன?” என்றார் மரகதம்.

“அப்பாவுக்கு என் மேல கோபம் இருக்கத்தான் செய்யும். அது எனக்கும் புரியுமா. ஆனா என்னதான் இருந்தாலும் அவருடைய முதல் பொண்ணு நான் தானே? என் மேல அவருக்கு கண்டிப்பா பாசம் இருக்கத்தான் செய்யுது. அதையே நான் காரணமா காட்டி, சீக்கிரமே ஒருத்தனை கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துக்கிட்டு அந்தச் சொத்து எல்லாம் அவர்கிட்ட இருந்து வாங்கப் போறேன். அதுவரைக்கும் அவர்கிட்ட அவரோட பாசமான பொண்ணா, நல்லவளா நான் நடிக்கப் போறேன்” என்றாள் அபி.

“இதெல்லாம் நடக்கிற காரியமடி? முதல்ல உன் அப்பா உன்னை நம்பனும். அதற்கு முதலில் என்ன பண்ணனும்னு யோசி. அவர நம்ப வச்சிட்டா போதும். மத்ததெல்லாம்வே நம்ம கைக்கு வந்து சேரும்” என்றார் மரகதம்.

மரகதம் சொன்னதை யோசித்துக் கொண்டிருந்த அபி அப்படியே உறைந்து போய் எங்கோ பார்த்தபடி நின்று இருந்தால். அவள் அருகில் வந்த மரகதம், “என்னடி? நான் பேசிட்டு இருக்கேன். நீ எதுவும் பேசாம அப்படியே சிலை மாதிரி நின்னுட்டு இருக்க. சொல்லு, என்ன செய்யப் போற? இப்ப ஏன் இப்படி இருக்க?” என அவளை உலுக்கிக் கேட்க, தன் மேல் இருந்தவரின் கையைத் தட்டிவிட்ட அபி வேகமாக அங்கே கீழே உடைந்து கிடந்த கண்ணாடிச் சில்லறை எடுத்துத் தன் கையைக் கிழித்துக் கொண்டாள்.

அதைப் பார்த்ததும் பதறிய மரகதம் அதிர்ச்சியானவர், வேகமாக அவளிடம் ஓடி வந்து, “ஐயோ அபி! என்னடி இப்படிப் பண்ணிட்ட?” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

You may also like

1 comment

S joshna January 8, 2026 - 10:30 pm

Enna akka repeat athe episode ah

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured