Home UncategorizedMR.LOVER 1

MR.LOVER 1

by Layas Tamil Novel
253 views

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களின் farewell partyதொடங்கியது.

மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி மகிழ்ந்தனர். ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றாகக் கூடி மது அருந்தியும், தங்கள் காதல் ஜோடிகளுடன் உற்சாகமாகவும் இருந்தனர். சிலர், விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த தனிமையான இடங்களில், தங்கள் காதல் ஜோடிகளுடன் கூடி, பிரிவுக்கு முன் தங்கள் காதலை காமமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அங்கு கூடியிருந்த அனைவருக்கும் யார் யார் எப்படி பழகுகிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். பல நாடுகளில் இருந்து வந்து இங்கு பயில்பவர்கள் கூட தங்கள் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மறந்து, மது, போதை வஸ்துக்கள், தவறான உறவுகள், ஒன் நைட் ஸ்டாண்ட், காதல் என்ற பெயரில் நேரம், காலம், இடம் எதையும் பார்க்காமல் பொதுவெளியில் உடலுறவு வைத்துக் கொண்டிருந்தனர்.

வாழ்க்கையில் இன்பம் என்றால் இந்த மாதிரியான விஷயங்களில் தான் கிடைக்கிறது என்ற தவறான எண்ணத்தில், இப்போதைய இளம் சமூகம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பின்னாளில் தங்கள் வாழ்க்கையில், குடும்பத்தில், உடலில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி சிந்திக்கும் நிலையில் இப்போது உள்ள தலைமுறையினரில் பெரும்பாலானோர் இல்லை.

அதற்காக அனைத்து இளம் தலைமுறையினரையும் நாம் தவறாகச் சொல்லிவிட முடியாது. மது, போதை பொருட்கள், தவறான உறவுகள் போன்ற எந்தப் பிடியிலும் சிக்கிக் கொள்ளாமல், தனக்கென ஒரு சிறிய வட்டத்தை உருவாக்கிக்கொண்டு, அதற்குள் தன்னுடைய மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டும் சிலர் இருக்கின்றனர்.

சரி, ஒரு குட்டி மெசேஜ் இப்போது இருக்கும் இளம் தலைமுறையினருக்குச் சேர்த்தாச்சு. இனி கதைக்குள் போவோம்.

பிரிவு உபச்சார விழாவில் இத்தனை கோலாலங்கள் நடந்துகொண்டிருக்கையில், அங்கு ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கு ஏற்ப அழகாக நடனம் ஆடிக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் இருந்தாள். அவள் ஆடும்போது அவள் உடலில் தெரிந்த வளைவு நெளிவுகளை அங்கிருந்த இளைஞர்கள் ரசித்துக் கொண்டும், அவள் ஆடுவதை உற்சாகப்படுத்தியும் இருந்தனர்.

எவ்வளவு நேரம் தன்னை மறந்து ஆடினாள் என்று தெரியவில்லை. நீண்ட நேரம் ஆடியதில் களைப்பாக உணர, தன் இடை வரை இருந்த கருங்கூந்தலை சுழற்றிச் சுழற்றி ஆடியபடியே நடனத்தை நிறுத்த நினைத்தாள். அப்போது சுழன்று கொண்டிருந்த அவள் கூந்தல் அலைகளாக ஆடி அவள் முகத்தை மறைத்திருந்தது.

ஆடி முடித்ததும் முகத்தில் வழிந்த வியர்வையை தன் பையிலிருந்து டிஷ்யூவை எடுத்து ஒற்றிக் கொண்டே தன் நண்பர்கள் இருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.

தூரத்தில் சில மாணவர்கள் இவள் ஆடுவதை பார்த்துக் கொண்டு இருந்தவர்களில் ஒருவன், “ஏண்டா! இங்கு இருப்பவர்கள் இத்தனை பேரும் ஆளுக்கு ஒரு ஜோடியை கூட்டிட்டு சுற்றிக்கொண்டு இருக்கும்போது, இவளும் இவளுடைய நண்பர் குழுவும் இதிலெல்லாம் மாட்டிக்கொள்ளாமல், இத்தனை வருஷம் நம்ம கல்லூரியில் எந்த ஒரு தவறான நடவடிக்கையிலும் ஈடுபடாமல், எப்படி இவ்வளவு கண்ணியமாக இந்த நான்கு வருடங்களை கடந்து வந்தார்கள்?” என்றான்.

“ஆமாண்டா! நானும் இவங்க எல்லாரும் நம்ம கல்லூரிக்கு வந்ததிலிருந்து கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். இந்த மாதிரி மது விருந்துகளுக்கெல்லாம் அதிகமா வரவே மாட்டாங்க. அதுவும் இன்று இவங்க எல்லாரும் கலந்துகொண்டதற்கான காரணம், இது பிரிவு உபச்சார விழா. இதுக்கப்புறம் யாரையும் சந்திக்க முடியாது அப்படிங்கறதால தான். ஏன்னா, இவங்க இந்த விழா முடிந்ததும் அடுத்த விமானத்தில் இந்தியாவுக்கு கிளம்ப போறாங்க” என்றான் மற்றொருவன்.

அவனிலிருந்த ஒருவன், “இப்போது ஆடிவிட்டுப் போனாளே அந்த யாரா… நான் இவளைக் கவர எவ்வளவோ முயற்சி பண்றேன். ஆனால் இவள் என்கிட்ட மசியவே மாட்டேங்குறா. எத்தனை பெண்களை நான் எளிதாக என் கைக்குள்ள போட்டு இருக்கேன். என்னோட விருப்பத்துக்கு ஏற்ப அவங்களும் என் கூட இருந்திருக்காங்க. ஆனால் இவ கிட்ட மட்டும் என்னால் நெருங்கவே முடியலடா. நெருங்கிப் போனாலும் அவளுடைய நண்பர் குழு எப்பவுமே சுத்தி இருந்துகிட்டே இருக்காங்க. என்னால அந்த யாரா கூட தனியா ஒரு நிமிடம் கூட பேசவே முடியல. இன்றைக்கு எப்படியாவது அவள் கூட நான் ஒன்றாக இருக்கணும். அதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க” என்று கேட்டான்.

“டேய்! என்ன விளையாடுறியா? கடைசி நாளில் எதுவும் பிரச்சனையை இழுத்து விட்டுக்காதே. அவங்க குழுவை பத்தி உனக்கு நல்லாவே தெரியும் தானே? யாராவும் அவளுடைய அந்த நண்பர்களும் எப்பவும் ஒன்றாகத்தான் இருப்பாங்க. யாரும் எங்கே போனாலும் தனியா அவ்வளவு சீக்கிரம் போக மாட்டாங்க. நீ என்னடான்னா இப்படி பேசிக்கிட்டு இருக்க?” என்றான் மற்றொருவன்.

போதையில் இருந்த அவன், “அப்படி எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி நான் நினைச்சதை நடத்த முடியும்? அதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்த யாரா இப்போதே எனக்கு வேண்டும். இங்கு இருக்கிற எத்தனை பெண்களை நான் எளிதாக மயக்கி இருக்கேன். இவளை மட்டும் ஏன் என்னால் மயக்க முடியவில்லை? இன்று அதை செய்தால் தான் என்னோட மனசு திருப்தியாகும்” என்றவன் அங்கிருந்த மதுபானத்தை பரிமாறிக் கொண்டிருந்த பணியாளரை அழைத்தான்.

அவனிடம் கையில் பணத்தைத் திணித்து ஏதோ சொல்ல, அவன் தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் நண்பர்கள், “டேய்! இப்போ எதுக்கு அவனுக்கு பணம் கொடுத்து அனுப்பினாய்? என்ன பண்ணப் போற?” என்று கேட்டனர்.

“ஒன்னும் இல்லடா. சும்மா அவள் குடிக்கிற குளிர்பானத்தில் போதை மருந்து கலக்கச் சொல்லி இருக்கேன். கண்டிப்பா அவள் குடிச்சதும் தலை சுற்றி மயக்கம் வர மாதிரி இருக்கும். ஆனால் அவள் அப்படி இருக்கும்போது அந்தக் குழுவை விட்டு தனியா இருக்கணும். அப்போதான் நான் அவளை என் கூட அழைச்சிட்டுப் போக முடியும்” என்று சொல்ல, “என்னவோ பண்ணு! இதுல எங்களை யாரையும் இழுக்காதே. நாளைக்கு எதுவும் பிரச்சனை வந்துச்சுன்னா எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்று சொல்லிவிட்டு அவன் நண்பர்கள் அவனை விட்டு விலகிவிட…

பயந்தாங்கோலி பசங்க! ஒரு பெண்ணைக் கவர துப்பில்லை. கவர முயற்சிப்பவனையும் ஏதோ வில்லன் போல பார்க்கிறாங்க. இதெல்லாம் இங்கு யாருமே செய்யாமையா இருக்காங்க? நான் இனிமேல் புதிதாக செய்கிற மாதிரி என்னை இப்படி பார்க்கிறாங்க” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவன், தன் நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த யாராவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் சொன்னது போலவே, அந்த பணியாளர் போதைப்பொருள் கலந்த குளிர்பானத்தை யாராவின் முன்பு இருந்த மேசையில் வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு அவரவர் கேட்ட குளிர்பானத்தை வைத்தான்.

யாரா தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டே குளிர்பானத்தை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொண்டு இருந்தால்.

அவள் குளிர்பானம் முழுவதுமாக குடித்து முடித்த நேரம் பார்த்து, அவளுக்கு வயிறு முட்டிக்கொண்டு வர, தன் தோழிகளிடம் சொல்லிக்கொண்டு கழிவறை நோக்கிச் சென்றாள்.

அவளைப் பின்தொடர்ந்து வந்த அந்த மாணவன், தனக்கு சரியான வாய்ப்பு கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் யாராவின் பின்னாலேயே அவளுக்குத் தெரியாமல் சென்றான்.

நண்பர்கள் குழுவும் அவள் கழிவறை தான் சென்றிருக்கிறாள், வந்துவிடுவாள் என்று தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு இருக்க…

இங்கே யாராவைப் பின்தொடர்ந்து சென்றவன், அவள் கழிவறை சென்றுவிட்டு வெளியே வரட்டும் என்று காத்திருந்தான்.

கழிவறை சென்றவள் சுத்தமாகிவிட்டு, கைகளை டிஷ்யூவால் துடைத்துக் கொண்டே வெளியே வரும்போது யாராவுக்கு லேசாகத் தலை சுற்றுவது போல இருந்தது. திடீரென்று தலை சுற்றவும் என்ன என்று புரியாமல் குழப்பத்தோடு அங்கிருந்து சுவற்றைப் பிடித்துக் கொண்டே தள்ளாடியபடி நடந்தாள் யாரா.

ஏதோ சரியாக இல்லை என்பதை உணர்ந்தவள், தங்கள் நண்பர்கள் குழுவிற்குள் கலந்துவிட வேண்டும் என்று வேகமாக கழிவறை உள்ளிருந்து அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி தள்ளாடிய படியே நடந்தாள்.

இப்போது அவளுக்கு போதை மருந்து குளிர்பானத்தில் கலந்து கொடுக்கச் சொன்ன மாணவன் சரியாக அவள் முன்பு வந்து நின்றான்.

“என்ன யாரா? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று நல்லவன் போல கேட்டான்.

“ஜான்! என்னன்னு தெரியல, எனக்கு லேசா தலை சுத்துற மாதிரி இருக்கு” என்று தன் தலையைப் பிடித்துக் கொண்டு தடுமாறி நடந்தாள்.

“அப்படியா? சரி, என் கூட வா. நான் உன்னை உன்னோட நண்பர்கள் இருக்கும் இடத்துக்கு அழைச்சிட்டுப் போறேன். நீ இப்படி தனியா நடந்துபோய் எங்கேயும் விழுந்திடாதே” என்று சொல்லி அவள் கையைப் பிடிக்க…

அவன் கையை உதறிய யாரா, “இல்லை ஜான். ஒரு பிரச்சனையும் கிடையாது. நான் அப்படியே மெதுவாகப் போகிறேன். நீ உன் வேலையைப் பார்” என்று சொல்லிவிட்டு அவனைத் தவிர்த்து அங்கிருந்து வேகமாக தன் நண்பர்களை நோக்கிச் செல்ல…

அவள் பின்னால் வந்த ஜான், அப்படி யாராவின் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்தவன், “ஏன் எங்கடி போற? இங்க வா…” என்று மதுபோதையில் இருந்த யாராவின் கையைப் பிடித்து இழுத்து அவளை தன்னோடு இழுத்துச் சென்றான்.

போதையில் குளறியபடியே, “என் கையை விடுடா! என்னை எங்க இழுத்துட்டு போற? என்னை விடு, நான் போகணும்” என்று அவன் கையை தன் கையிலிருந்து உதற முயற்சிக்க, ஆனால் அவன் அவள் கையை விடாமல் பிடித்துக் கொண்டவன், அவளை அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் விழா அரங்கின் பின்புறம் இருக்கும் ஒரு அறைக்கு இழுத்துச் சென்றான்.

ஜான் ஒரு அறைக்குள் தன்னை இழுத்து வந்து கதவை மூடியதும் யாராவுக்கு பயம் பிடித்துக் கொண்டது.

இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவன் முன்பு தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டவள், “ஒழுங்கா இப்போ கதவைத் திறக்கப் போறியா, இல்லை நான் என்னோட நண்பர்களைக் கூப்பிடட்டுமா?” என்றாள் யாரா.

“நீ யாரை வேணா கூப்பிட்டுக்கோ. இந்த அறையிலிருந்து நீ கூப்பிட்டா அங்கே விழா அரங்கில் இருக்கிற உன்னோட நண்பர்களுக்குக் கேட்குமா என்ன? அங்கே இருக்கிற சத்தத்துக்கு நீ சத்தமாகக் கத்தினாலும் யாரும் உனக்கு உதவி செய்ய இங்கே வர மாட்டாங்க. உனக்கு வேற வழியே இல்லை. இன்று என் கூட இங்கே ஒன்றாக இருந்தாகணும்” என்று சொல்லியவன், மேல் அணிந்திருந்த சட்டையைக் கழற்றிவிட்டு அவளை நோக்கி கேலித்தனமாக சிரித்தபடி வர…

அவன் தன்னை நெருங்குவதை உணர்ந்த யாரா, தன்னைக் காத்துக் கொள்ள என்ன செய்வது என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். வெளியே செல்ல வேறு எந்த வழியும் இல்லை. இருந்த ஒரே வழியை மறித்துக் கொண்டு ஜான் நின்று இருந்தான்.

வேகமாக யாராவின் அருகில் வந்த ஜான், அவள் தோள்களில் கையை வைத்து அங்கிருந்த கட்டிலில் யாராவைத் தள்ளிவிட, ஏற்கனவே போதையில் இருந்தவளால் அவனை எதிர்க்க முடியாமல் மெத்தையில் போய் பொத்தென்று விழுந்தாள்.

ஏற்கனவே ஜான் போதையில் இருக்க, யாராவைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு மேலும் போதை ஏறிவிட…

கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஒரு நொடி கூட வீணடிக்கக் கூடாது என்று முடிவு செய்தவன் யாராவின் மேல் பாய்ந்தான்.

இதை சற்று எதிர்பாராத யாரா, அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள தன் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி தன் மேல் இருந்தவனின் மார்பில் கை வைத்து அவனை கீழே தள்ள, கட்டிலில் படுத்திருந்த யாராவின் அருகில் பொத்தென்று விழுந்தவன், விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டு யாராவை இறுக்கமாக கட்டிக் கொண்டான்.

“என்னடி! ரொம்ப திமிருற? உனக்கு வேற வழியே இல்லை. என்கிட்ட அடங்கிப் போய் தான் ஆகணும். கொஞ்ச நேரம் ஒத்துழைத்தால் என் வேலை முடிந்ததும் நானே உன்னை விட்டுவிடுகிறேன். இல்லை, ரொம்ப முரண்டு பண்ணினால் அப்புறம் நடக்கும் சேதாரத்துக்கு நான் பொறுப்பு கிடையாது” என்று ஜான் பேச…

“வாயை மூடுடா நாயே! நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? ஒரு பொண்ணு கிட்ட இப்படித்தான் நடந்துக்கச் சொல்லி உன் அம்மா அப்பா உன்கிட்ட சொல்லிக் கொடுத்தாங்களா?” என்று அவனை என்ன சொல்லி திட்டுவது என்று தெரியாமல், அவனிடமிருந்து விலகுவதிலேயே யாரா குறியாக இருந்தாள்.

“என் அம்மா அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்தார்களோ இல்லையோ, உன் அப்பா அம்மா உன்னை நன்றாகத்தான் வளர்த்து இருக்காங்க. அதனால்தான் இந்த நாலு வருஷமா நான் எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னால உன்னை நெருங்கவே முடியல. இன்றைக்கு உன்னை நான் அடையாமல் இங்கிருந்து போக மாட்டேன்” என்று சொல்லி அவளை மெத்தையின் கீழே தள்ளி, அவள் உதட்டை நோக்கி முத்தம் கொடுக்க குனிய…

அவனைத் தன்னிடம் நெருங்க விடாமல் தன்னால் முடிந்தவரை அவனிடம் போராடிக்கொண்டு இருந்தாள் யாரா.

தன்னுடைய கடைசி நாளில் தன்னுடைய கல்லூரி நினைவு இப்படியா இருக்க வேண்டும் என்று நொந்து கொண்ட யாரா, கண்களில் கண்ணீரோடு ஜானை தன்னை நெருங்க விடாமல் அவனிடம் போராடிக்கொண்டு இருக்க…

அவர்கள் இருந்த அறைக்கதவு `டமார்’ என்று உடையும் சத்தம் கேட்டது.

அவள் மேல் படுத்துக்கொண்டே இருந்த ஜான் திரும்பி வாசல் கதவைப் பார்க்க…

அங்கே திடகாத்திரமாக இரண்டு ஆண்கள், கண்கள் இரண்டும் சிவந்து இருக்க கோப முகத்தோடு, யாராவின் மேல் படுத்து இருந்த ஜானை கொலைவெறியோடு பார்த்துக் கொண்டு கதவைத் தாண்டி வந்துகொண்டிருந்தனர்.

இவ்வளவு நேரம் தனக்கு என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்று பயந்து இருந்த யாரா, அவர்கள் இருவரையும் பார்த்ததும், மெத்தையில் ஜானுடன் போராடிக் கொண்டு இருந்தவள், நேராக நின்றிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஜானின் முகத்தைத் திருப்பி, “எங்கே? இப்போ என்னைத் தொடுடா பார்க்கலாம்!” என்றாள் திமிராக.

“யாருடி இவனுங்க? ஒரே மாதிரி இருக்கானுங்க. உன் ஒரே நேரத்தில் இரண்டு ஆம்பளையா கவர வைத்துட்டு தான் இத்தனை வருஷமா எங்க யார்கிட்டயும் சிக்காமல் இருந்தியா?” என்று அவன் கேட்க…

அவன் சொன்ன வார்த்தையில் கோபம் கொண்ட யாரா, அவ்வளவு போதையிலும் தன் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி தன் காலால் அவன் வயிற்றில் எட்டி உதைத்து, தன்மையிலிருந்து அவனைத் தள்ளி, “டேய்! யாரைப் பார்த்து என்ன சொல்ற? இவங்க ரெண்டு பேரும் என்னோட பலம். அது உனக்குத் தெரியுமா?” என்று சொல்லி தடுமாறியபடியே எழுந்து நடந்து வந்தவள், வாசலில் நின்று இருந்தவர்களின் இடையில் போய் நின்று அவர்கள் தோளில் கை வைத்து, “இவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியுமா? என்னோட சகோதரர்கள், என்னுடைய பலம், என்னுடைய காதல் எல்லாமே இவங்க தான்” என்று சொல்லி தன் அண்ணன்கள் இருவரையும் பெருமையாக பேசிக்கொண்டு யாரா நின்று இருக்க…

பேசுவதைக் கனிவாகப் பார்த்துக் கொண்டு இருந்த சூர்யாவும் வினுவும், தன் தங்கை யாராவை கனிவாகப் பார்த்துவிட்டு, அவள் தலையில் கை வைத்து அவள் முடியைக் கலைத்தவர்கள், திரும்பி அவர்கள் எதிரே என்ன செய்வது என்று தெரியாமல் நின்று இருந்த ஜானை கோப முகத்தோடு பார்த்தார்கள்.

அங்கிருந்து தப்பித்துச் செல்ல ஜான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்க…

யாராவை அருகில் இருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு வினுவும் சூர்யாவும் ஜானை நோக்கி வந்தனர்.

கட்டிளம் காளைகள் போல திடகாத்திரமாக வளர்ந்து தன் முன்பு நிற்கும் சூர்யாவையும் வினுவையும் பார்த்த ஜானுக்குத் தானாகவே இரண்டு கால்களும் நடுங்க ஆரம்பித்தது.

பயத்தில் அவன் முகம் வெளிறிப் போய் இருக்க…

அதை ரசித்தவாறு யாரா சோபாவில் கால் மேல் கால் போட்டு ஜானைப் பார்க்க, ஜான் திரும்பி யாராவிடம் “யாரோ! இவங்க கிட்ட சொல்லு. என்னை எதுவும் செய்ய வேண்டாம்” என்றான்.

அவன் சொல்வதை காதிலேயே வாங்காமல் யாரா அமர்ந்து இருக்க, அவளை திரும்பிப் பார்த்த சூர்யாவும் வினுவும், “என்ன, முடிச்சிடலாமா?” என்று கேட்டனர்.

“சீக்கிரம் அண்ணா. என் நண்பர்கள் எல்லாம் எனக்காகக் காத்திருப்பாங்க” என்று சொல்ல…

யாரா அனுமதி கொடுத்த அடுத்த நொடி, ஜான் அந்த அறைக்கதவிலிருந்து வெளியே பறந்து வந்து விழுந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured