நக்ஷத்ராவைப் பார்த்துவிட்டு, அவளை அடுத்து எங்கே, எப்போது சந்திக்கலாம் என்று யோசித்த சூர்யா, நீண்ட நேரம் வெளியில் சுற்றிவிட்டு நேராக தன் வீட்டிற்குள் நுழைந்தான். அங்கு அவனுக்காக விஷ்ணு காத்திருந்தான். சூர்யாவைக் கண்டும் காணாதவன் போல உள்ளே செல்ல…
“என்ன திமிர் பார்த்தியா இவனுக்கு? நைட் பன்னிரண்டு மணிக்கு மேல ஆகியும் இன்னும் நான் வீட்டுக்குப் போகாமல், இவன்கிட்டே கையெழுத்து வாங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இவன் ஜாலியா ஊரைச் சுத்திட்டு, இவன் இஷ்டத்துக்கு வீட்டுக்கு வந்துட்டுப் போயிட்டு இருக்கான். அட அது கூட பரவாயில்லை. என்னைப் பார்த்தும் பார்க்காதவன் போல இல்ல போறான் இவன். நான் என்ன பேயா, பிசாசா… கண்ணனுக்குத் தெரியாம போறதுக்கு! எல்லாம் என் நேரம்டா… இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகட்டும். என் அப்பனை அந்த அகாடெமியை விட்டுத் துரத்திட்டு, நான் அதைக் கை எடுத்து நடத்துறேன். இங்க இவன் கூட மல்லுக்கு கட்டுறதுக்கு பேசாம நான் என் அப்பன் கூடவே மல்லுக்கு நிக்கலாம் போல இருக்கு,” என்று புலம்பியபடியே படி ஏறி சூர்யாவின் அறைக்குச் சென்றான் விஷ்ணு.
உள்ளே வந்த விஷ்ணு, சூர்யாவைத் தேட… பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. அவன் குளித்துவிட்டு வரட்டும் என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்த விஷ்ணு, அசதியில் அப்படியே தூங்கிவிட்டான்.
குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்த சூர்யா, விஷ்ணு சோபாவில் மல்லாந்து படுத்துக்கொண்டு, ஒரு காலை சோபாவில் சாயும் இடத்திற்கு மேலேயும், மற்றொரு காலை தரையிலும் தொங்க விட்டுக்கொண்டு, பாப்பாத்தி போல தூங்கிக்கொண்டு இருக்க… அவன் படுத்திருந்த பொசிஷனைப் பார்த்து, ஏற்கனவே கடுப்பில் இருந்த சூர்யாவிற்கு மேலும் கோபம் வர… சோபாவில் இருந்த தலையணையைத் தூக்கி விஷ்ணுவின் மேல் வீச… அது சரியாக அவன் கால்களுக்கு நடுவில் போய் விழுந்தது.
என்னவோ பாறாங்கல்லைத் தூக்கி அவன் கால்களுக்கு நடுவில் போட்டதுபோல, வலியில் துடிப்பவன் போல… “ஐயோ… அம்மா…” என்று அலறிக்கொண்டு எழுந்தான் விஷ்ணு.
“டேய், ரொம்ப சீன் போடாதடா…” என்றவன், தான் கையெழுத்துப் போட வேண்டிய ஃபைலை எடுத்துக்கொண்டு பெட்டிற்குச் சென்று அமர்ந்தான். ஒவ்வொரு ஃபைலாகப் பார்த்து கையெழுத்துப் போட ஆரம்பித்தான்.
எங்கே மீண்டும் தூங்கினால் மறுபடியும் சூர்யாவிடம் அடி வாங்க நேருமோ என்று பயந்த விஷ்ணு, அமைதியாக சோபாவின் ஓரத்தில் அமர்ந்து தூங்கி வழிந்துகொண்டிருந்தான்.
அனைத்து ஃபைல்களையும் சரிபார்த்துவிட்டு நிமிர, விஷ்ணு அமர்ந்தபடியே தூங்கி வழிந்தபடி இருக்க… தன் கையில் இருந்த ஃபைலைத் தூக்கி எறிய… பதறி அடித்துக்கொண்டு எழுந்த விஷ்ணு, கண்களைத் தேய்த்துக்கொண்டே சூர்யாவைப் பார்க்க… அவன் குளித்துவிட்டு ஈர டவலையே அப்படியே போட்டுக்கொண்டு மெத்தையில் படுத்துவிட்டான்.
சத்தமில்லாமல் ஃபைல்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் விஷ்ணு.
விஷ்ணு அறைக்கதவை சாற்றும் வரை அமைதியாகப் படுத்து இருந்த சூர்யா, வேகமாக எழுந்து பால்கனிக்கு வந்தவன், விஷ்ணு காரை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக் கேட்டுத் தாண்டும் வரை நின்று பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் சென்றதும் உள்ளே வந்து உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவன் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
நேராக காரை நக்ஷத்ராவின் வீட்டிற்கு முன் வந்து நிறுத்தியவன், வேகமாக காரில் இருந்து இறங்கி, தன்னை யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டபடி, குருவின் வீட்டுச் சுவரை ஏறிக் குதித்தவன், நக்ஷத்ராவின் ரூம் பால்கனியில் ஏறினான். பால்கனிக் கதவு வழியாக நக்ஷத்ராவின் ரூமிற்குள் பார்க்க… அவள் சூர்யாவிற்கு முதுகு காட்டிப் படுத்து இருந்தாள்.
சத்தமில்லாமல் உள்ளே தாளிடப்பட்டு இருந்த பால்கனிக் கதவை லாவகமாகத் திறந்துகொண்டு உள்ளே வந்தவன், நேராகச் சென்று நக்ஷத்ராவின் அருகில் மெத்தையில் படுத்துக்கொண்டான்.
அவளைத் தொந்தரவு செய்யாமல் நக்ஷத்ராவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, “ஏன்டி… என்னோட தூக்கத்தைக் கெடுத்துட்டு நீ இங்கே நிம்மதியா தூங்குறியா? இருடி, உன்னைத் தூங்க விட்டால் தானே,” என்று மனதிற்குள், அமைதியாகத் தூங்கிக்கொண்டு இருந்தவளைப் பார்த்து ரசித்தவாறே திட்டிக்கொண்டிருந்தான்.
கண்கள் மூடி சாந்தமாகப் படுத்து இருந்த நக்ஷத்ராவைப் பார்த்தவன், அவள் நெற்றியைத் தாண்டி விழுந்து இருந்த ஒற்றை முடி அவள் அழகை மறைத்துவிடுவது போல, அந்த முடியைப் புறம் தள்ளினான். அவள் வளைந்து இருந்த புருவத்தைத் தன் விரல் கொண்டு வரைந்து பார்த்தான்.
அவன் விரல் அவள் புருவத்தில் வருடிக் கொண்டிருக்க… அந்த குறுகுறுப்பில் அவள் புருவத்தைச் சுருக்கினாள். உடனே தன் விரலை பின்னுக்கு இழுத்துக்கொண்ட சூர்யாவின் கை, அவள் அணிந்திருந்த வைர மூக்குத்தியில் வந்து பதிந்தது.
அதை லேசாகச் சுண்டிவிட்டவன், அப்படியே கீழே வர… அவள் சிவந்திருந்த உதடும் அதன் மேல் இருந்த மச்சமும் அவன் கண்ணைப் பறிக்க… அவள் கீழ் உதட்டைப் பிடித்து இழுத்தவன், “இதை இப்போதே கடித்துச் சாப்பிடணும் போல இருக்குடி நக்ஷத்ரா…” என்றவன், அவள் உதடு நோக்கித் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் குனிய…
அவ்வளவு நேரம் அமைதியாகத் தூங்கிக்கொண்டு இருந்த நக்ஷத்ரா, சூர்யாவின் குரல் கேட்டதும் பட்டென தன் கண்களைத் திறந்துகொண்டு, தன் எதிரே மிக நெருக்கமாகப் படுத்து இருக்கும் சூர்யாவைப் பார்த்துத் தூக்கி வாரிப் போட… வாரிச் சுருட்டிக்கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள்.
அவள் அருகில் படுத்து இருந்தவன், “எழுந்துட்டியா?” என்று கேட்டுக்கொண்டே எழுந்து அவளிடம் வர…
சூர்யா அவள் அருகில் வருவதைப் பார்த்ததும், நக்ஷத்ரா வேகமாகப் பின்னால் நகர… சூர்யாவும் அதே வேகத்துடன் ஆவலுடன் சென்றவன், அவள் சுவரில் மோதி நின்றதும், அவள் உடல் உரசும் தூரத்தில் வந்து நின்று, “என்ன?” என்று கேட்டான்.
“நீ… நீ… நீங்க என் ரூமுக்குள்ள எ… எப்படி வந்தீங்க?” என்றால்.
“எப்படியோ வந்தேன். நீ கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உன் வீடு தேடி நான் வரலை,” என்றான்.
“அப்பறம் ஏன் வந்தீங்க?” என்றால் மெல்லிய குரலில்.
“நான் ஈவினிங் உன்கிட்டே கேட்டேனே, என்னைப் பார்த்து ஏன் பயப்படுறேன்னு கேட்டேனே. நீ என்ன பதில் சொல்ல போறேன்னு கேட்டுட்டு வரலாம்னு தான் வந்தேன்,” என்றான் சூர்யா.
“அடப்பாவி, இதைக் கேட்கவா என் வீடு ஏறி வந்தான்?” என்று மனதிற்குள் பேசிக்கொண்டவள்.
“நீங்க அடுத்த முறை என்னைப் பார்க்கும்போதுதான் கேக்குறேன்னு சொன்னீங்க,” என்றால் பயந்துகொண்டே.
“அதுதான் அடுத்த முறை வந்திருச்சே… நான் என்ன சொன்னேன்? உன்னை அடுத்த முறை எப்போ பார்ப்பேனோ அப்போ எனக்குப் பதில் சொல்லணும்னு சொன்னேன் இல்லையா. அதுதான், என்னை நீ இப்போ பார்த்துட்டியே, சொல்லு,” என்றான் திமிராக.
தன் கையை அவனிடம் இருந்து கஷ்டப்பட்டுப் பிரித்தவள், அவனிடம் இருந்து சில அடி தூரம் நகர்ந்து நின்றாள். “நான் எங்கே இவனைச் சந்திச்சேன்? இவன்தான் என் வீடு தேடி வந்திருக்கான்,” என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.
தான் நெருங்கும்போது எல்லாம், தன்னை இழுக்கும் காந்தம் போல நக்ஷத்ராவின் அருகில் போய், அவளை ஒட்டிக்கொண்டு சூர்யா திடீரென்று மீண்டும் நெருங்கி வர…
அவள் கைகள் இரண்டையும் தன் முகத்திற்கு நேராகத் தூக்கி, என்னவோ சூர்யா அடிக்க வருபவன் போலவும், அவனிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக தன் கைகளை உயர்த்தி நிற்பவள் போலவும் நக்ஷத்ரா நின்று இருக்க…
அதைப்பார்த்துச் சிரித்த சூர்யா, அவள் கையைப் பிடித்துத் தன் அருகில் இழுக்க, அவன் மீது மோதி தடுமாறியபடி நக்ஷத்ரா நின்றாள்.
“என்ன அப்படி பார்க்குறே? சொல்லு,” என்றான்.
“என்ன சொல்லணும்?” என்றால் நக்ஷத்ரா.
“என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லு,” என்றான் சூர்யா.
அவனை அதிர்ச்சியாகப் பார்த்தவள் மருண்டு விழிக்க…
அவள் முகபாவனைக்கு ஏற்ப அவள் புருவங்கள் வளைவதை ரசித்தவன், அவள் கன்னத்தைப் பிடித்து, “சொல்லு. என்னைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுற?” என்றான் சூர்யா சற்று கோபமாக.
“அது… அது வந்து… நீங்க ரொம்பக் கெட்டவர். உங்களைப் பார்த்தாலே எனக்குப் பயம் வருது,” என்றாள்.
“என்ன?!” என்று அதிர்ச்சியானவன்.
“நான் கெட்டவன்னு உனக்கு எப்படித் தெரியும்? அப்படி யாரு என்னைக் கெட்டவங்கன்னு சொன்னாங்க?” என்றான்.
“யாரும் சொல்லலை. நானே பார்த்தேன்,” என்றாள் நக்ஷத்ரா.
“ஓஹோ… இந்தக் பச்சை கண்ணை வெச்சு நான் கெட்டவன்னு நீ பார்த்து தெரிஞ்சுக்கிட்டியா?” என்றான் கோபமாக.
அவள் எதுவும் பேசாமல் அவள் கன்னத்தைப் பிடித்து இருந்த கையை எடுக்க முயற்சிக்க… தன்னிடம் இருந்து நழுவி ஓடுவதிலேயே இவள் குறியாக இருக்கிறாளே என்று எரிச்சலானவன், “எங்கே, எப்போ நான் கெட்டவனா உன் கண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சேன்? சொல்லு,” என்றான் அதே எரிச்சலோடு சூர்யா.
அவள் கன்னத்தில் சூர்யாவின் கை அழுத்தம் கூட்டிக்கொண்டே போக… அவளுக்கு வலித்தது. வலியில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழியவே, அதைப் பார்த்ததும் தன் பிடியைத் தளர்த்தி, “சொல்லுடி… நான்தான் கேட்கிறேன் இல்ல, சொல்லு,” என்றான் சூர்யா சற்று அதட்டலாக.
அவன் அதட்டியதில் நக்ஷத்ராவின் உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது. அதைப் பார்த்தவனுக்கு, “என்ன இவ இதுக்கே நடுங்க ஆரம்பிச்சுட்டா?” என்று புரியாமல் அவளைப் பார்த்தான்.
நக்ஷத்ரா அழுதபடியே, “ஒரு மூணு வருஷத்துக்கு முன்ன நான் என்னோட ஃபிரெண்ட் வீட்டுக்கு அவளைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கே நீங்க வந்தீங்க,” என்றவள், அன்று நடந்த சம்பவத்தைச் சூர்யாவிடம் விவரிக்க ஆரம்பித்தாள்.
தன் தோழி ராஜி வீட்டிற்குச் சென்றிருந்தாள் நக்ஷத்ரா. அவளைக் கண்டதும் ராஜி சென்று நக்ஷத்ராவை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, தன் அண்ணா, அம்மா, அப்பாவிடம் அறிமுகம் செய்தாள். அவளை அழைத்துக்கொண்டு மேலே இருக்கும் தன் அறைக்குக் கூட்டிச் சென்றாள். இருவரும் தங்கள் அறையில் வரப்போகும் செமஸ்டருக்காகப் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கீழே இருந்து ராஜியின் அம்மா அலறும் சத்தம் கேட்டது. ராஜியும், நக்ஷத்ராவும் அலறி அடித்துக்கொண்டு வந்து மாடியில் இருந்து எட்டிப் பார்க்க…
அங்கே சூர்யா ராஜியின் அண்ணன் குமாரை போட்டு அடித்துக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் ராஜிக்கும், நக்ஷத்ராவிற்கும் பயம் பிடித்துவிட, கீழே வராமல் இருவரும் மாடியிலேயே நின்றுவிட்டனர். குமாரின் அம்மா சூர்யாவின் கால்களில் விழுந்து எவ்வளவோ கெஞ்சியும் கூட, சூர்யா அவனை விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் ராஜியின் அண்ணன் சூர்யா அடித்ததில் மயக்கம் போட்டு விழுந்துவிட… அப்போதும் சூர்யா அவனை விடாமல், அங்கிருந்து தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் காரில் போட்டவன், அங்கிருந்து கிளம்பிச் சென்றான். அதற்கு மேல் நக்ஷத்ரா அங்கே இருக்க வேண்டாம் என்று சொல்லி, ராஜியின் அம்மா நக்ஷத்ராவை அனுப்பி வைத்துவிட்டார்.
“அன்றுதான் நான் ராஜியை கடைசியாகப் பார்த்தது. அதன் பிறகு அவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று இன்று வரை எனக்குத் தெரியாது. நீங்கள் அவள் அண்ணன் குமாரை அடித்ததினால் தான் அவர்கள் எல்லாம் இந்த ஊரைவிட்டே போய்விட்டார்கள்,” என்றால் நக்ஷத்ரா.
அவள் சொல்வதை எல்லாம் முழுவதும் கேட்டவன், யாரைப் பற்றிக் கூறுகிறாள் என்று யோசித்தவன், நக்ஷத்ராவைப் பார்த்து, “உன்னோட ஃபிரெண்ட் வீடு எங்கே இருக்கு?” என்றான்.
அவள் இடத்தை சொல்லவும், “எப்போ நடந்தது? அவள் யார்? அவள் அண்ணன் பெயர் என்ன?” என்று அத்தனையும் கேட்டுத் தெரிந்துகொண்ட சூர்யாவிற்கு, நக்ஷத்ரா யாரைச் சொல்கிறாள் என்று சட்டென்று பிடிபட்டது.
அவள் சொன்னவனின் அண்ணன், சூர்யாவின் நண்பனின் தங்கையை தவறாக வீடியோ எடுத்து அதை நெட்டில் விட்டு இருந்தான். அது தெரிந்து அந்தப் பெண் தூக்கிட்டுத் தன் உயிரை மாய்த்துக்கொள்ள… அந்தப் பெண் ஏன் இறந்தாள் என்று அவள் வீட்டில் காரணம் தெரியாமல் அனைவரும் குழம்பிப் போயிருக்க… யார் காரணம் என்று சூர்யாவும் அந்தப் பெண்ணின் அண்ணனும் சேர்ந்து அவளின் உடைமைகளில் இதற்குக் காரணம் யார் என்று தேடினர். அப்போது அவள் எழுதி வைத்த டைரியில், ராஜியின் அண்ணன் குமார் அவளை மிரட்ட ஆரம்பித்தது எல்லாம் எழுதி இருந்தாள். இதைப் படித்ததும் சூர்யாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவனை வீடு புகுந்து தூக்கி அடித்து போலீசில் ஒப்படைத்து இருந்தான்.
அதைத்தான் நக்ஷத்ரா தவறாகப் புரிந்துகொண்டு, சூர்யாவைக் கெட்டவனாக இவ்வளவு நாளும் தவறாகப் புரிந்துகொண்டு இருக்கிறாள்.
அதை யோசித்துக்கொண்டே போய் அவள் பெட்டில் அமர்ந்தவன், தான் எதற்காக அவள் தோழியின் அண்ணனை அடித்தேன் என்று நக்ஷத்ராவிடம் சொல்லிவிடலாமா என்று நினைத்தான். ஏன், எதற்கு என்று விபரம் தெரியாமலேயே தன்னை கண்மூடித்தனமாக கெட்டவன் போல அவள் மனதில் இத்தனை நாளும் சித்தரித்திருப்பவளிடம் போய் தன்னிலை விளக்கம் கூற, சூர்யாவின் மனது இடம் கொடுக்கவில்லை. தவிர, நக்ஷத்ரா தன்னைப் பார்க்கும்போது எல்லாம் இப்படிப் பயந்துபோய் பேசுவது அவனுக்குப் பிடித்திருந்தது. அது அவளின் பால் அவனை ஈர்க்கத்தான் செய்தது என்று அவனுக்குத் தெரிந்தும், அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
தன்னிடம் பயந்தபடி சுவரோடு சுவராகப் பூனை போல் ஒட்டி நின்று இருக்கும் நக்ஷத்ராவைப் பார்த்தவன், லேசாகச் சிரித்தபடி எழுந்து அவள் அருகில் வந்து, இருபக்கமும் நகராமல் இருக்கக் கையை வைத்து அணை போட்டான்.
“நான் அவனை அடிச்சதுனால நீ என்னைப் பார்த்துப் பயந்து நடுங்குறியா?” என்றான் சூர்யா.
நக்ஷத்ரா எதுவும் பேசாமல் தன் பச்சை கண்ணை உருட்டி உருட்டி அவனைப் பார்க்க…
அவள் தன் தைரியத்தை ஒன்று திரட்டி, “நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய காரணம் தான் இப்போ உங்களுக்குத் தெரிஞ்சிருச்சு இல்ல. அப்போ நீங்க இங்கே இருந்து…” என்று சொல்லி பால்கனிக் கதவைக் காட்ட…
“என்னை வெளியே போகச் சொல்றியா?” என்றான் சூர்யா கோபமாக.
“பின்னே, உன்னை அங்கேயேவா என் அறையில் இருக்கச் சொல்லுவாங்க?” என்று மனதிற்குள் பேசிக்கொண்டவள், அவனைப் பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.
தன்னை வெளியில் போகச் சொன்னவளைப் பார்த்து கோபம் அதிகமாக, மூச்சு எடுத்தவன் அவள் முகத்தைப் பிடித்து, “நான் இங்கே இருந்து போகலைன்னா என்ன செய்வே?” என்றான்.
அவள் எங்கே சொன்னது போல இங்கேயே இருந்து விடுவானோ என்று பயந்தவள், “நீங்க… நீங்க இப்போ போகலைன்னா நான் என் அம்மாவை கூப்பிடுவேன்,” என்றால் பயந்துகொண்டே.
“நீ ஏன் கூப்பிடுறே? இரு, நானே என் பிரியா அத்தையை கூப்பிடுறேன்,” என்று சொன்னவன், நக்ஷத்ராவின் வாசல் கதவைத் திறந்துகொண்டு, “நக்ஷத்ரா…” என்று சத்தமாக அழைத்தபடி வெளியில் சென்றான்.
