“அப்பறம் என்ன, என் பொண்ணு மனசுல யாரும் இல்லன்னு சொல்லிட்டாலே! அப்போ நாம சூர்யா போட்டோவை அவகிட்ட காட்டுவோம். அவளுக்குப் பிடிச்சா, அடுத்த கட்டத்தைப் பத்தி பேசலாம்,” என்றான் குரு.
எதற்காக இந்த கல்யாண பேச்சை பிரியா எடுத்தாளோ, அது நல்லபடியாக நடக்கும் என்று தோன்றினாலும், பிரியா நக்ஷ்த்திராவின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
பின்பு, சூர்யாவின் போட்டோ இருந்த கவரை அவளிடம் கொடுத்து, “நீ பார்த்துட்டு உனக்குப் பிடிச்சா சொல்லு. அடுத்து என்னன்னு பிறகு பார்த்துக்கலாம்,” என்றாள் பிரியா.
சூர்யாவைப் பார்த்து அனைவரும் கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நக்ஷ்த்திராவிடம் இருந்த கவரை பிரியாவின் கையில் இருந்து பிடுங்கிய ரிஷி, சூர்யாவின் போட்டோவைப் பார்த்தவன் முகத்தைச் சுழித்து, “அய்யே… என்ன இவன் இப்படி இருக்கான்?” என்றான்.
அவன் முகத்தைச் சுழிப்பதைப் பார்த்ததும், சூர்யா எப்படி இருப்பானோ என்ற சந்தேகம் நக்ஷ்த்திராவுக்கு வந்தது.
ரிஷியின் கையில் இருந்த போட்டோவை வாங்கிய தேவ், “ஆமாம், ரிஷி, நீ சொன்னதுபோல இவன் நம்ம நக்ஷ்த்திராவுக்கு மேட்ச் ஆவானான்னு தெரியலையே,” என்று தேவும் முகம் சுழிக்க…
தேவின் கையில் இருந்த போட்டோவை பிடுங்கிய நக்ஷ்த்திரா, போட்டோவைப் பார்த்தாள்.
யோசனையோடு வாங்கியவளின் முகம், சூர்யாவின் போட்டோவைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் அப்படியே மலர்ந்தது.
போட்டோவை பார்த்துவிட்டு, தன் அண்ணன்கள் இருவரையும் நக்ஷ்த்திரா திரும்பிப் பார்க்க…
இருவரும் சிரித்துக்கொண்டே நக்ஷ்த்திராவை பார்த்து, “மாப்பிள்ளை நல்லா இல்லை, இல்லையா?” என்று கோரசாகக் கேட்டார்கள்.
“ஏன் அண்ணா, பொய் சொல்றீங்க? நல்லாதான் இருக்காரு,” என்றாள்.
“பாருடா! ‘நல்லாதான் இருக்காரு’ன்னு மரியாதையெல்லாம் தரா. அப்போ உனக்கு சூர்யாவை பிடிச்சிருக்குன்னு சொல்லு,” என்றான் ரிஷி.
ரிஷி, ‘சூர்யாவைப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டதும், நக்ஷ்த்திராவின் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டது.
அதைக் கவனித்த பிரியா, “டேய், ரெண்டு பேரும் பேசாம இருங்க,” என்றவள், “நக்ஷ்த்திரா குட்டி, உனக்கு சூர்யாவைப் பிடிச்சிருக்கா? நாங்க மேற்கொண்டு உன்னோட கல்யாணத்தைப் பத்தி பேசலாமா?” என்றாள்.
நக்ஷ்த்திரா யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல், “சரி” என்று தலையை ஆட்ட…
“இப்பதானே கல்யாணத்துக்கு என்ன அவசரம்னு கேட்டே? அதுக்குள்ள போட்டோவைப் பார்த்து மனசு மாறிட்டியே,” என்றான் ரிஷி.
“அப்போ சூர்யா போட்டோவை பார்த்தே நீ மயங்கிட்டே, அப்படித்தானே?” என்றான்.
“போ… அண்ணா,” என்று அங்கிருந்து எழுந்து தன் ரூமுக்கு போட்டோவுடன் ஓடிவிட்டாள்.
பிரியாவும் குருவும் நங்கை வீட்டிற்கே நேராகச் சென்று பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். அன்றிரவே கிளம்ப வேண்டும் என்று அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்படி தேவிடம் பொறுப்பை விட்டனர்.
ரிஷியிடம் திரும்பிய பிரியா, “ரிஷி, நாம கொஞ்சம் வெளியே போய் வரலாமா? எனக்கு கொஞ்சம் நங்கை அக்கா வீட்டுக்கு எதுவும் வாங்கிட்டு போகணும். நீ என் கூட வா,” என்றாள்.
“உடனே நான் எப்படி உங்க கூட ஷாப்பிங் வர முடியும்? அப்பா தான் என்னோட கார்ட்ஸ் எல்லாத்தையும் பிளாக் பண்ணி வெச்சிட்டாரு. அதுவும் இல்லாம, என்னோட பாஸ்போர்ட்டை ஏர்போர்ட்டில் இருந்து வரும்போதே வாங்கி வெச்சுட்டாரு.”
“நான் அப்படி என்ன செஞ்சேன்? என்கிட்ட இருந்து எல்லாமே வாங்கி வெச்சுட்டாங்க,” என்றான் பாவமாக.
“என்னடா, எதுவும் செய்யாதவன் போல பேசுறே… வைல்ட் லைஃப் போட்டோகிராஃபி தான் பிடிக்கும்னு மேல படிக்க மாட்டேன்னு, ஆபிஸ் போக மாட்டேன்னு எல்லா பொறுப்பையும் தேவ் கிட்டே கொடுத்துட்டு ஊர் சுத்திட்டு இருந்தே.”
“சரி பரவாயில்லைன்னு பார்த்தா, நீ என்னடான்னா போற ஊர்ல எல்லாம் பொண்ணுங்களை கூட சேர்த்துட்டு சுத்திட்டு இருக்க… என்ன பழக்கம் இது எல்லாம்?” என்றான் குரு.
“அப்பா, அவங்க எல்லாம் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் தான்… நீங்க ஏன் தப்பா புரிஞ்சுக்கிறீங்க? நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நான் யார் கூடையும் தப்பா பழகல,” என்றான்.
“எங்க ரிஷி அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டான். நீங்க எதுக்கு இப்படி நம்ம பையன் மேல சந்தேகப்படுறீங்க? நாமலே நம்ம பையனை நம்பலைன்னா, வேற யாரு அவனை நம்புவா?” என்ற பிரியா, தன் சேலையில் மறைத்து வைத்திருந்த ரிஷியின் கிரெடிட், டெபிட் கார்டுகளைக் கொடுத்தாள்.
அதை பார்த்த குரு, “ஏய் பிரியா, இதை நான் பீரோக்குள்ளதானே மறைச்சு வெச்சிருந்தேன். இதை எப்போடி எடுத்தே?” என்றான்.
“ஆமாம், ஏழு மலை தாண்டி ஒளிச்சு வெச்சிருந்தீங்க. அதைக் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் பாருங்க,” என்ற பிரியா, “டேய் ரிஷி, சீக்கிரம் சாப்பிட்டு வா,” என்றாள்.
நக்ஷ்த்திராவிடம் திரும்பி, “நீ போய் சீக்கிரம் ரெடியாகிட்டு வா. நான் உன்னை மீனு வீட்டில் விட்டுட்டு வந்துடுறேன்,” என்றாள்.
“அம்மா, இப்போ எதுக்கு அங்கே போகணும்?” என்றாள் நக்ஷ்த்திரா.
“ஏய், யாரா வந்து இருக்காளே… அவளைப் போய் பார்க்க வேண்டாமா? நீயும் அவளும் எப்ப பார்த்தாலும் ஸ்கூல் மாதிரி ஒட்டிக்கிட்டு சுத்திட்டு இருந்தீங்க. இப்போ என்ன? அவள் வந்து ரெண்டு நாள் ஆகிடுச்சு. நீ இன்னும் அவளைப் பார்க்க போறேன்னு சொல்லவே மாட்டுறே. என்ன ஆச்சு?” என்றாள் பிரியா.
“அம்மா, நான் இன்னும் குளிக்கவே இல்லை,” என்றாள் நக்ஷ்த்திரா, மீனு வீட்டிற்குப் போவதைத் தவிர்க்க எண்ணி.
“பரவாயில்லை, நீ சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா, நாங்க வெயிட் பண்றோம்,” என்றவள், நக்ஷ்த்திராவை மேலே அனுப்பி வைத்தாள்.
மேலே தன் அறைக்கு வந்த நக்ஷ்த்திரா, ‘கடவுளே, நான் இவங்க வீட்டுக்கு போகும்போது அந்த வில்லன் அங்கே இருக்க கூடாது. சீக்கிரமா போய் சீக்கிரமா வந்துடனும்,’ என்றபடி குளித்து ரெடியாகி கீழே வந்தாள்.
பிரியா நக்ஷ்த்திராவை முறைத்தவள், “இவ்வளவு லேட்டாவா வருவ?” என்று அவளை முறைத்தபடி அழைத்துக்கொண்டு ரிஷியுடன் பிரியாவும் நக்ஷ்த்திராவும் கிளம்ப…
“குரு, நானும் தேவும் வர்றோம். பிரியா, நானும் யாராவைப் பார்த்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. அப்படியே யாராவைப் பார்த்த மாதிரியும் இருக்கும். நக்ஷ்த்திராவுக்கு கல்யாணம் பேசுற விஷயத்தையும் சொன்ன மாதிரியும் இருக்கும்,” என்றவன், “நீங்க மூணு பேரும் முன்னால் போங்க. எனக்கு ஆபிஸில் கொஞ்சம் வேலை இருக்கு. நான் அதையெல்லாம் முடிச்சிட்டு வரேன்,” என்றான் குரு.
குருவிடமும், தேவிடம் சொல்லிக்கொண்டு மூவரும் கிளம்பினர்.
நக்ஷ்த்திரா திருமணத்திற்கு சம்மதம் சொன்ன விஷயம் தெரியாமல் சூர்யா அவளைப் பற்றிய நினைவுகளில் உலவிக்கொண்டிருந்தான்.
சூர்யா சாய்ந்தபடி கண்மூடி யோசனையில் இருக்க… அவனைப் பார்க்க உள்ளே வந்த விக்ரம், ஏதோ கேட்டுக்கொண்டே சூர்யாவின் அருகில் வர…
அதை எதையும் கவனிக்கும் நிலையில் சூர்யா இல்லாமல் வேறொரு சிந்தனையில் இருந்தான்.
அவன் அருகில் வந்து விக்ரம் நின்று இருக்க, தன் அப்பா வந்து நிற்பதைக் கூட கவனிக்கும் நிலையில் சூர்யா இல்லாமல் இருப்பது பார்த்து, அப்போதுதான் விக்ரமுக்கு சற்று வருத்தமாக இருந்தது.
‘அவனுக்கு என்று நேரம் ஒதுக்க தான் அவனுக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை,’ என்பதை சூர்யா ஏதோ யோசனையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து விக்ரமிற்கு தோன்றியது.
சூர்யாவின் தலைமுடியை விக்ரம் வாஞ்சையாகத் தடவ, சட்டென்று சூர்யா கண்விழித்ததும், அவன் எதிரே விக்ரம் நின்றிருந்ததைப் பார்த்தவன்,
“அப்பா… நீங்க எப்ப வந்தீங்க? சாரி, நான் கவனிக்கல,” என்று சேரில் சாய்ந்திருந்தவன் எழுந்திருக்கப் போக…
அவன் தோளில் அழுத்தி, விக்ரம் சூர்யாவை சேரில் அமர வைத்தவன், “என்ன? வேற ஏதோ ஆழ்ந்த சிந்தனையில இருக்க போல,” என்றான் அவன் முன்னால் இருந்த டேபிளில் சாய்ந்து நின்று.
“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. சும்மா ஜஸ்ட் அப்படியே உக்காந்துட்டேன்,” என்றான் சூர்யா.
“சூர்யா, நான் ஒன்னு சொல்லுவேன். நீ அதை மறுக்காமல் கேட்பியா?” என்றான் விக்ரம்.
“நீ ஒரு ஒரு மாசம் எங்கேயாவது ட்ரிப் போயிட்டு வாயேன்,” என்றான் விக்ரம்.
“என்னப்பா விளையாடுறீங்களா? இங்கே எவ்வளவு வேலை இருக்கு. இதையெல்லாம் விட்டுட்டு என்னை ட்ரிப் போக சொல்றீங்க,” என்றான் சூர்யா.
“சரி, ட்ரிப் போக வேண்டாம். அட்லீஸ்ட் ஒரு மாசம் ஆபிஸ் பக்கம் வராம நம்ம வீட்டிலேயே ரெஸ்ட் எடு,” என்றான் விக்ரம்.
“அப்பா, இப்போ நான் ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கிற அளவுக்கு எனக்கு என்ன ஆகிடுச்சு? ஏன் திடீர்னு இப்படி சொல்றீங்க?” என்றான் சூர்யா.
“எனக்கு உன்னோட இந்த வயசுல கல்யாணமே ஆகிடுச்சுடா, சூர்யா. நான் உன் வயசுல நிறைய நல்ல நல்ல நினைவுகளை அனுபவித்து சேர்த்து வெச்சிருக்கேன்.”
“ஆனா, நீ இந்த வயசுல பிசினஸ் பிசினஸ் என்று ஓடுவது எனக்கு விருப்பமில்லை. கொஞ்சம் நீ ரிலாக்ஸ் ஆகு. எனக்கு உன்னை இப்படிப் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு,” என்றான் விக்ரம்.
“அப்பா, எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. நான் நல்லாதான் இருக்கேன்,” என்றான் சூர்யா.
“நான் சொல்றத கேக்குறேன். இப்போதானே என்கிட்ட சொன்ன. நான் சொன்னா சொன்னதுதான். நீ ஒரு மாசம் ஆபிஸ் பக்கமே வரக்கூடாது. அப்படி எதுவும் முக்கியமான வேலை இருந்துச்சுன்னா, வீட்டில் இருந்து அதை செஞ்சு முடிச்சிடு. சரியா? இன்னும் ஒரு மாசத்துக்கு நீ ஃப்ரீயா இரு. ஓகேவா?” என்றான் விக்ரம்.
“சரிப்பா. அப்போ நான் நாளைக்கு காலையில என்னோட ஃப்ரெண்ட் தருண் ஹாங்காங்ல இருக்கான்னு சொல்லியிருக்கேனே, அவன் என்னை ரொம்ப நாளா வரச்சொல்லி கேட்டுட்டு இருக்கான்.”
“நான் விஷ்ணுவை கூட்டிட்டு அங்கே வேணா போய்ட்டு வரேன்,” என்றான்.
“சரி சூர்யா. அப்போ நான் ஷ்யாம் கிட்டே சொல்லி உனக்கும் விஷ்ணுவுக்கும் ஃப்ளைட் டிக்கெட்ஸ் எப்போன்னு பார்த்து புக் பண்ண சொல்றேன். ஓகேவா?” என்றான் விக்ரம்.
“ஓகேப்பா,” என்றவன், “சரி, நீங்க ஏதும் சொல்லணும்னு இங்கே வந்தீங்களா, அப்பா?” என்றான் சூர்யா.
“ஆமாம், சூர்யா. குரு ஃபேமிலியோட நம்ம வீட்டுக்கு வரேன்னு சொன்னான், யாராவைப் பார்க்கிறதுக்காக. அதான் உன்னையும் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்,” என்றான்.
“அப்போ நீங்க வேணா வீட்டுக்குப் போய்டுங்க. நான் முக்கியமான ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு ஃப்ளைட் எப்போன்னு ஷ்யாம் அங்கிள் கிட்ட கேட்டுட்டு கால் பண்றேன்.”
“நாங்க ஊருக்கு கிளம்புறதுக்குள்ள முக்கியமான ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு கிளம்பிடறோம்.”
“அப்பறம், நம்ம ரசிகா, நம்ம ஃபேமிலி அப்புறம் ஃப்ரெண்ட்ஸ்க்கு மட்டும் கெட்-டுகெதர் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்கா. மார்னிங்கே எனக்கு கால் பண்ணி சொல்லிட்டா. நான் போகலைன்னா அவ்ளோதான்.”
“பார்ட்டியை அட்டென்ட் பண்ணிட்டு நைட் லேட்டா தான் வீட்டுக்கு வருவேன். அம்மா கிட்ட சொல்லி என்னோட திங்ஸ் எல்லாம் ஒரு பதினைந்து நாட்களுக்கு பேக் பண்ண சொல்லிருங்க,” என்றான் சூர்யா.
“ஓகே சூர்யா. நீ எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு இருக்காதே. நான் எல்லாமே பார்த்துக்கிறேன்,” என்றவன் வீட்டிற்கு கிளம்பினான்.
விக்ரம் கிளம்பியதும், ஷ்யாமுக்கு கால் செய்து, ஹாங்காங் செல்லும் விவரங்களைச் சொல்லி, ளைட் டிக்கெட்ஸ் புக் பண்ண சொல்லிவிட்டு, ஃப்ளைட் டைமிங்கை தனக்கு மெசேஜ் செய்ய சொல்லிவிட்டு, விஷ்ணுவை அழைத்து விபரம் சொன்னவன், வேலைகளில் மூழ்கிப்போனான்.
யாராவும் சிராவும் ஹாலில் அமர்ந்து லுடோ கிங் கேம் மிகவும் தீவிரமாக தங்கள் ஐ-பேடில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
மீனு, சிராவின் அருகில் அமர்ந்துகொண்டு, “இந்த காயை நகர்த்துங்க அத்தை, அது வேணாம்,” என்று சிராவுக்கு உதவுகிறேன் என்று உபத்திரவம் செய்துகொண்டு இருக்க…
யாராவுக்கு துணையாக செல்வியும் சேர்ந்து காய்களை கவனமாக நகர்த்தி யாராவுக்கு உதவிக் கொண்டு இருந்தார்.
வரிசையாக சிராவின் காய்களை யாரா வெட்டிக்கொண்டு இருக்க…
யாராவும் செல்வியும் அவர்களை கிண்டல் செய்தபடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
கடைசி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இரு அணியும் விளையாடிக் கொண்டிருக்க…
உள்ளே வந்த விக்ரம், இவர்கள் வழக்கம் போல லுடோ விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், சிரித்துக்கொண்டே மீனுவின் அருகில் வந்து, “என்ன ஆச்சு மீனு? ஜெயிக்கப் போறியா?” என்றான் ஆவலாக.
“விக்ரம், கொஞ்ச நேரம் அமைதியா இரு. நாங்கதான் தோற்றுவிடுவோம் போல இருக்கு,” என்று கூறிக்கொண்டே, திரையை தீவிரமாக மீனு வெறித்துக்கொண்டு இருக்க…
அவளுக்கு உதவ விக்ரம், மீனுவிடம் வந்து நின்று அவள் ஜெயிக்க உதவ ஆரம்பித்தான்.
யாரா விளையாடிக்கொண்டே, “அப்பா, நீங்க பேசாம இருங்க. அம்மா என் கூட விளையாடி தோற்றுப் போயிட்டா, பார்கவி பாட்டி அம்மாவுக்கு பரிசாகக் கொடுத்த வைர வளையல்களை எனக்குக் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. அவங்களே விளையாடட்டும். நீங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணாதீங்க,” என்றாள் யாரா.
“யாரா குட்டி, உனக்கு எத்தனை வைர வளையல்கள் வேணும்னாலும் சொல்லுடா. அப்பா வாங்கித் தரேன்.”
“அப்பா, அம்மாவுக்குதான் சப்போர்ட் பண்ணப் போறேன். அம்மா ஜெயிச்சாதான் அப்பாவுக்கு சந்தோஷமே,” என்றான் விக்ரம்.
“எனக்கு வேணும்னா நானே வாங்கிக்க மாட்டேனா, அப்பா? அம்மா இத்தனை வருஷமா பொக்கிஷமா வெச்சிருக்கிறது எனக்குத் தரேன்னு அவங்க வாயாலேயே சொன்ன பிறகு, நான் எப்படி அதை வேண்டாம் என்று சொல்லுவேன்? அதெல்லாம் நீங்க எதுவும் வாங்கித் தர வேண்டாம். எனக்கு அம்மா கூட ஜெயிச்சு அந்த வளையலை வாங்கணும். நீங்க அமைதியா இருங்க,” என்றாள்.
என் மகள் கூறிய பிறகு, விக்ரமால் மீனுவிற்கு உதவ முடியவில்லை.
“விக்ரம், நீ எனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண வேண்டாம். அப்புறம் நான் ஃபோங்க பண்ணி ஜெயிச்சுட்டதா இவ என்ன சொல்லி காமிச்சுக்கிட்டு இருப்பா. நானே யாராவை ஜெயிக்கிறேன்,” என்றாள் மீனு.
சரி என்று விக்ரம் ஓரமாக அமர்ந்தபடி இவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது குருவும் தேவ்வும் வந்தனர்.
உள்ளே வந்த இருவரும், ஹாலில் விளையாடிக்கொண்டிருக்கும் யாராவையும் மீனவையும் பார்த்து, “இங்கே என்ன நடக்குது?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் குரு.
“பேசாம அமைதியா உக்காந்து என்ன நடக்குதுன்னு மட்டும் வேடிக்கை பாரு, குரு. இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல போய்ட்டா, அப்புறம் நம்மதான் மாட்டிட்டு முழிக்கணும்,” என்றான் விக்ரம்.
சரியாக அப்போது உள்ளே வந்த பிரியா, விக்ரமிடம், “என்ன, என் ஃப்ரெண்ட என் புருஷன் கிட்ட சொல்லி கொடுத்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே நக்ஷ்த்திரா, ரிஷி இருவருடனும் உள்ளே வந்தாள்.
“ஆமாம்மா, உன் ஃப்ரெண்டைத்தான் நாங்க கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்கோம். வா… நீயும் வந்து அவ கூட சேர்ந்து,” என்றான் குரு.
தேவ் வந்து விக்ரமின் அருகில் அமர்ந்தவன், அவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் தன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க…
மீனுவுடன் பிரியா இணைந்து கொள்ள… யாராவுடன் நக்ஷ்த்திரா இணைந்து கொண்டாள்.
இவர்கள் இருவருக்கும் நடுவில் ரெஃப்ரியாக ரிஷி நின்று கொண்டு இருவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தான்.
இருவரும் மிகவும் சீரியஸாக விளையாடிக் கொண்டிருக்க, கடைசியில் ஜெயித்தது என்னவோ யாரா தான்.
அதுவரை விளையாட்டில் கவனமாக இருந்த யாரா, ஜெயித்துவிட்டு சந்தோஷத்தில் தன் கையில் இருந்த ஃபோனை தூக்கி பெட்டில் வீசியவள்,
“ஏய்… நான் தான் ஜெயிச்சுட்டேன்,” என்று சொல்லி மேலும் கீழும் குதிக்க…
அவள் வீசிய ஃபோன் நேராக சென்று தேவ்வின் மடியில் போய் விழுந்தது.
யாரா டான்ஸ் ஆடிக்கொண்டே மீனுவின் அருகில் வந்து, “போ… போய் சீக்கிரம் உன் அம்மா உனக்கு கிஃப்ட்டா கொடுத்த அந்த வைர வளையலை எடுத்துட்டு வந்து என் கையில போட்டு விடு,” என்று சொல்லி, மீனுவின் முன்பு தன் கைகள் இரண்டையும் ஆட்டி டான்ஸ் ஆடிக்கொண்டே கேட்டாள்.
மீனு எதுவும் பேசாமல் உள்ளே சென்றவள், அவள் அம்மா அவளுக்காக ஆசையாக வாங்கி கொடுத்த வைர வளையலை சோகமாக எடுத்து வந்தவள், தன் மகளின் கையில் கொடுக்க…
யாரா அதை வாங்காமல் தன் கையை நீட்டி, “போட்டு விடு,” என்றாள்.
“உனக்கு ரொம்ப கொழுப்பு ஆயிருச்சுடி,” என்ற மீனு சிரித்தபடியே, “சரி, எப்படி இருந்தாலும் இந்த வளையல் என் மகளுக்கும் அல்லது என் மருமகளுக்கும் தான் போய் சேர வேண்டும். இப்போ நீயே முந்திட்ட. பரவாயில்லை, என் மருமகளுக்கு நான் தனியா வாங்கி கொடுத்துக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு மீனு வளையலை யாராவுக்கு மாட்டி விட்டாள்.
யாரா மீனு போட்டு விட்ட வளையலை, மீனுவின் முகத்தின் முன்பு ஆட்டி ஆட்டிக் காட்டியவள், “இந்த வளையல் ரொம்ப அழகா இருக்குல்ல,” என்று சொல்லி மீனுவை வெறுப்பேற்றினாள்.
“சரி, போடி, நீயே வெச்சுக்கோ,” என்ற மீனுவும், “வா பிரியா,” என்று அப்போதுதான் பிரியாவை அழைத்தவள், அவளை அழைத்துக்கொண்டு போய் அமர வைத்து, அவளுடன் சேர்ந்து மீனுவும் அமர்ந்து கொண்டு, வந்திருந்தவர்களுக்கு ஜூஸ் கொடுக்கச் சொன்னார்.
யாரா நக்ஷ்த்திராவுடன் அமர்ந்தவள், “நான் வந்து ரெண்டு நாள் ஆச்சு. உனக்கு என்ன வந்து பார்க்கிறதுக்கு நேரமே கிடைக்கலையா?” என்று கேட்டாள்.
“அதுதான் இப்போ வந்துட்டேனே,” என்றாள் நக்ஷ்த்திரா.
பிரியாவிடம் மீனுவும், “அப்புறம் என்னடி, இந்த பக்கம் காத்து அடிக்குது? நான் கூப்பிடும்போதெல்லாம் வீட்டுக்கு வர மாட்ட… இப்ப எதுவும் விஷயம் இல்லாமல் இங்கே வந்திருக்க மாட்டியே. என்ன?” என்று கேட்டாள் மீனு.
“என்ன? இங்கே வரக்கூடாதுன்னு எதுவும் இருக்கா என்ன? என் மகனுக்கும் என் புருஷனுக்கும் ஆக்கிப் போடவே எனக்கு சரியா இருக்கு,” என்றாள் பிரியா.
பிரியா சொன்னதைக் கேட்டு தேவ்வும் குருவும் தங்கள் முகத்தை ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தனர்.
“அது ஒன்னும் இல்ல பிரியா, நம்ம நக்ஷ்த்திராவுக்கு என்னோட ஊர்ல வீட்டு பக்கத்துல இருக்காங்களே, நங்கை அக்கா, நான் கூட உங்ககிட்ட அடிக்கடி சொல்லியிருக்கேன்,” என்றாள் பிரியா.
“ஆமா, சொல்லு பிரியா, என்ன?” என்றாள் மீனு.
“அதுவா, நங்கை அக்கா, அவங்க பையன் சூர்யாவுக்கு நம்ம நக்ஷ்த்திராவைப் பொண்ணு கேட்டு எனக்கு ஃபோன் பண்ணியிருந்தாங்க. நானும் ரிஷி வந்த பிறகு எல்லாரும் ஒன்னா உக்காந்து பேசி முடிவு பண்ணிக்கலாம்னு இருந்தேன். நேற்றுதான் ரிஷி வந்தான்.”
“இன்னைக்கு காலையிலதான் எல்லாரும் கலந்து பேசி, சூர்யாவுக்கு நம்ம நக்ஷ்த்திராவை கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்,” என்றாள் பிரியா.
பிரியா சொன்ன செய்தியைக் கேட்ட யாரா, நக்ஷ்த்திராவைப் பார்த்து, “ஏய், நக்ஷ்த்திரா, சொல்லவே இல்ல,” என்று சொல்லி அவளைக் கட்டிக்கொண்டாள்.
“அதத்தான்டி, வெட்கப்பட்டுக்கொண்டு, காலையில தான்டி முடிவு பண்ணினாங்க. அத சொல்லத்தான் நாங்க இங்கே வந்தோம்,” என்றாள் நக்ஷ்த்திரா.
வந்த விஷயங்களை பேசிவிட்டு, பின் பிரியா, நக்ஷ்த்திராவை தங்கள் ஊருக்குச் சென்று வரும் வரை யாராவுடன் இங்கேயே இருக்கச் சொன்னாள்.
“அம்மா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் நம்ம வீட்டுக்கு வரேன். தேவ் அண்ணா இருப்பாங்கதானே? எனக்கு என்ன நம்ம வீட்ல இருக்கிறதுக்கு?” என்றாள் நக்ஷ்த்திரா.
“உன் அண்ணன் ஆபிஸுக்குன்னு போயிட்டான்னா, வீட்டுக்கு எப்ப வரணும்ன்றது அவனுக்கு மறந்துடும். வீட்ல ஒருத்தவங்க இருக்காங்கன்றதையும் மறந்துடுவான். நீ தனியாதான் இருக்கணும். நான், உன் அப்பா, ரிஷி ஊருக்கு போயிட்டா வர்றதுக்கு எப்படியும் ரெண்டு மூணு நாளாவது ஆகிடும். அதுவரைக்கும் நீ தனியா அங்கிருந்து என்ன பண்ணப் போற? பேசாம இங்கேயே இரு,” என்றாள் பிரியா.
யாராவும் நக்ஷ்த்திராவிடம், “ஏன்டி, என் கூட இங்கே இருக்க மாட்டியா? நானும் எவ்வளவு வருஷம் கழிச்சு இங்கே வந்திருக்கேன்,” என்று நக்ஷ்த்திராவை இருக்கச் சொல்லி அவள் வற்புறுத்த…
நக்ஷ்த்திராவுக்கும் யாராவுடன் இருக்க ஆசைதான். தன் வீட்டில் இருக்கும்போதே சுவர் ஏறிக் குதித்து தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்ட சூர்யாவை நினைத்துதான் இங்கே இருக்கப் பயந்தாள்.
அங்கேயே அவ்வளவு தைரியமாக வந்தவன், தான் அவன் வீட்டில் தான் இருக்கிறேன் என்று தெரிந்தால் என்ன செய்வானோ என்று பயந்தாள் நக்ஷ்த்திரா.
பிறகு அனைவரும் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்ல, யாராவும் நக்ஷ்த்திராவும் மாலை கெட்-டுகெதர் பார்ட்டிக்கு மீனுவிடம் சொல்லிவிட்டு கிளம்பினர்.
