EPISODE 165
துர்காவை அழைத்துக்கொண்டு மருத்துவமனை விரைந்த ஆதி, அவனுடன் வந்த இளைஞன் மருத்துவமனையில் காரை நிறுத்தியதும், காரில் இருந்து துர்காவைத் தூக்கிக்கொண்டு இறங்கினான். ஆதி துர்காவைக் கையில் ஏந்தி வருவதைப் பார்த்த செவிலியர் (Nurse) வேகமாக ஒரு ஸ்ட்ரெச்சரை எடுத்து வந்து அவன் அருகில் கொண்டு வர, ஸ்ட்ரெச்சரில் துர்காவைப் படுக்க வைத்துவிட்டு, அவசரசிகிச்சைப் பிரிவுக்குச் (Emergency Ward) செவிலியர்களுடன் துர்காவைத் தள்ளிக்கொண்டு சென்றான் ஆதி.
துர்காவை உள்ளே அழைத்துச் சென்ற செவிலியர்கள் ஆதியை வெளியே இருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றனர். அவசரசிகிச்சை மருத்துவரும் வந்துவிட, துர்காவுக்குச் சிகிச்சை உள்ளே நடந்து கொண்டிருந்தது.
காரை நிறுத்திவிட்டு வந்த அந்த இளைஞன் சாவியைக் கொண்டு வந்து ஆதியின் கையில் கொடுத்துவிட்டு, “நான் கிளம்பட்டுமா?” என்று கேட்க… அவனுக்கு நன்றி கூறிய ஆதி, அவனுடைய பெயர் என்ன? என்று கேட்டான். “என் பேரு புகழ் சார்,” என்றான் அந்த இளைஞன். அவனிடம் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்ட ஆதி, “என் மனைவி கண் விழிச்சதும் நான் உங்களுக்குப் பேசுகிறேன்,” என்றான்.
அந்த இளைஞன் சென்ற பிறகு, ஆதி கதிருக்கு அழைத்து துர்காவுக்கு நடந்த விபத்து பற்றிச் சொன்னவன். உடனே கடற்கரைக்குப் சென்று, அங்கே தாங்கள் இருந்த இடத்தின் அடையாளத்தைச் சொல்லி, துர்காவுக்கு இப்படி நடந்த விஷயங்களைப் பற்றி விசாரிக்கச் சொன்னான் ஆதி.
ஆதி மிகவும் வருந்தினான். ‘நான் துர்காவைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் அவளை என்னுடன் கடற்கரைக்கு அழைத்து வந்த போது பாதுகாவலர்களையாவது (Guards) என்னைப் பின்தொடர்ந்து வரச் சொல்லியிருக்க வேண்டும். அவர்களையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நான் துர்காவைத் தனியாக விட்டது ஒரு முட்டாள்தனம் செய்து விட்டேன்,’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் ஆதி.
கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்குப் பிறகுதான் அவசரசிகிச்சைப் பிரிவுக்குள் துர்காவுக்குச் சிகிச்சை செய்து முடித்த மருத்துவர் வெளியே வந்தார். கடல் நீரை அதிகமாகக் குடித்து விட்டதால் துர்காவுக்குச் சிகிச்சை செய்து அவளைக் காப்பாற்றி, அவளை சாதாரண நிலைக்குக் கொண்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது என்று சொன்ன மருத்துவர். “அவங்க இப்போ கண் விழிச்சிட்டாங்க. நான் அவங்க கிட்டப் பேசின வரை அவங்க ரொம்பப் பயந்து போய் பதட்டமா இருக்காங்க,” என்றார் மருத்துவர்.
“அவங்களுக்கு இதுக்கு முன்னாடி எதுவும் சிகிச்சை எடுத்துட்டு இருக்கீங்களா? அவங்களுக்கு உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று கேட்டார் அந்த மருத்துவர்.
“கொஞ்ச நாள் முன்னாடி அவங்களுக்கு ஒரு பெரிய விபத்து நடந்து, அதுல உடம்பு எல்லாம் காயமாகி கால்கள் இரண்டும் விபத்தில் அடிபட்டு இருந்துச்சு. அதுவும் இல்லாம அவங்க தலையில் அடிபட்டு இரத்தம் நிறையப் போனதுனால அவங்க பழைய நினைவுகள் எல்லாம் மறந்து இருந்தாங்க. இப்ப வரைக்கும் அதே பழைய நினைவுகள் மறந்த நிலையில் தான் இருக்காங்க,” என்று சொன்னான் ஆதி.
அவன் சொன்னது எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்ட மருத்துவர். “ஐ திங்க் (I think) இவங்களுக்குப் பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வந்திருச்சுன்னு நினைக்கிறேன். ஏன்னா, அவங்க பேசுவதைப் பார்த்தால் இவ்வளவு நாள் என்ன நடந்துச்சுன்னு தெரியாத மாதிரி தான் என்கிட்டப் பேசினாங்க. ஒருவேளை நீங்க பேசிப் பார்த்தா, அவங்க இப்போ எந்த மாதிரி நிலையில இருக்காங்கன்னு உங்களாலப் புரிஞ்சுக்க முடியும். அவங்களை ரொம்பச் சிரமப்படுத்த (Strain) விடாம அவங்க கிட்ட நீங்க பேசுங்க,” என்று மருத்துவர் சொல்ல…
‘இன்று பழைய நினைவுகள் வந்துவிட்டது’ என்று மருத்துவர் சொல்வதைக் கேட்டதும் ஆதியின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. நான் எதற்காக இத்தனை நாள் காத்திருந்தோமோ, அந்த விஷயம் இன்று நடந்து விட்டதாக நினைத்து ஆதி மிகவும் சந்தோஷப்பட்டான்.
“டாக்டரின் கைகளைப் பிடித்துக் கொண்ட ஆதி, “ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு என்னால விவரிக்க முடியவில்லை. என் மனைவிக்குப் பழைய ஞாபகம் எல்லாம் வந்திருச்சுங்கிறது எனக்குப் பெரிய சந்தோஷம் தான். நான் அவங்களைப் போய்ப் பார்க்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, மருத்துவரின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஆதி வேகமாக அவசரசிகிச்சைப் பிரிவில் துர்காவை வைத்திருந்த அறைக்குக் கதவைத் திறந்து கொண்டு செல்ல…
அவன் மிகவும் ஆர்வமாக உள்ளே செல்வதைப் பார்த்த மருத்துவர், ‘இவர் மனைவி மீது ரொம்பப் பாசம் வைத்திருக்கிறார் போல,’ என்று அருகில் நின்று அங்கு இருந்த செவிலியரிடம் சொல்லிச் சிரித்தவர் அங்கிருந்து சென்று விட்டார்.
துர்காவைப் பார்ப்பதற்காக ஆவலாக அவளை இருக்கும் இடத்திற்கு வந்த ஆதி, துர்கா கண்கள் மூடி அமைதியாகப் படுத்திருக்க, ‘அவள் தூங்குகிறாளா? எந்த நிலையில் இருக்கிறாள்?’ என்று யோசனையோடு ஆதி துர்காவின் அருகில் வந்து அவள் கைகளைத் தன் கைகளால் தொட….
ஏதோ யோசனையில் உழன்று கொண்டிருந்த துர்கா, ஆதியின் ஸ்பரிசம் பட்டதும் பட்டுனு தன் கண்களைத் திறக்க… துர்கா தூங்கவில்லை, கண் விழித்துத் தான் இருக்கிறாள் என்று தெரிந்ததும் அவள் அருகில் அமர்ந்த ஆதி. துர்காவின் கையைப் பிடித்து, “துர்கா, இப்போ உனக்கு எப்படி இருக்கு? எங்கேயும் வலிக்குதா? எங்கேயும் அடிபட்டுருச்சா? உனக்கு எல்லாமே ஞாபகம் வந்திருச்சா?” என்று ஆதி மிகவும் ஆர்வமாக துர்காவிடம் கேட்க..
அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த துர்கா, “ஆதி, எனக்கு என்ன ஆச்சு? நான் ஏன் இங்கே இருக்கேன்? நம்ம இப்போ எங்கே இருக்கோம்?” என்று துர்கா கேட்க…
“நம்ம இப்போ மருத்துவமனையில் இருக்கோம் துர்கா. நான் உன்னைக் கடற்கரைக்குக் கூட்டிட்டுப் போயிருந்தப்போ நீ தெரியாமக் கடல் தண்ணீரில் விழுந்துட்டாய். அதுல மயக்கம் போட்டுட்டாய். உனக்குச் சிகிச்சை பண்ணத் தான் இங்க கூட்டிட்டு வந்தேன்,” என்று ஆதி சொல்ல.
“இப்போ நம்ம டென்மார்க்கில் இல்ல, இந்தியாவில் இருக்கோமா ஆதி?” என்று கேட்டாள்.
அவள் அப்படி கேட்டதும், துர்காவுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்ட ஆதி, அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “துர்கா, நம்ம இப்போ இந்தியாவில் தான் இருக்கோம். உனக்குப் பழசு எல்லாம் ஞாபகம் வந்திருச்சா?” என்று அவன் குரல் தழுதழுக்கக் கேட்க…
அவனிடமிருந்து தன் முகத்தை விலக்கிய துர்கா, ஆதியின் முகத்தைப் பார்த்து, “ஆதி, அப்போ எனக்குப் பழசு எல்லாம் மறந்துடுச்சா? இவ்வளவு நாள் நான் எந்த ஞாபகம் இல்லாமதான் இருந்தேனா?” என்று கேட்டாள்.
“ஆமாம்,” என்று தலையாட்டிய ஆதி, “இப்போ நீ எதையும் போட்டு ரொம்ப யோசிக்காத. மருத்துவர் உன்னை ரொம்பச் சிரமப்படுத்தக் கூடாது. நல்லா ஓய்வு எடுக்கணும்னு சொல்லி இருக்காங்க. உனக்குத் தெளிவானதுக்கு (Relaxed) பிறகு நான் நடந்த எல்லா விஷயத்தையும் உன்கிட்ட சொல்றேன். நீ கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கு,” என்று சொல்ல…
“இந்த இடமே ஒரு மாதிரியா இருக்கு. நாம நம்ம வீட்டுக்குப் போகலாமா? எனக்கு இங்க இருக்க சௌகரியமா (Uncomfortable) இல்லை,” என்று துர்கா சொல்ல…
“அப்படியா துர்கா? சரி இரு, நான் போய் மருத்துவர் கிட்ட உன்னை **வெளியனுப்பலாமா (Discharge)**ன்னு கேட்டுட்டு, அவர் சரின்னு சொன்னா, வெளியே அனுப்பிட்டு வந்துடுறேன். அதன் பிறகு நம்ம ரெண்டு பேரும் வீட்டுக்குப் போகலாம்,” என்று சொன்னவன், அவளைப் படுக்க வைத்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றான். அதற்குள் அவனுடைய பாதுகாவலர்கள் வெளியே வந்து அவசரசிகிச்சைப் பிரிவில் காத்திருக்க… தான் வரும்வரை ஒருவரையும் உள்ளே விடக்கூடாது என்று அவர்களுக்கு உத்தரவிட்டு விட்டு, மருத்துவரைப் பார்க்கச் சென்றான் ஆதி.
மருத்துவரின் அறைக்கு வந்த ஆதி, “துர்காவை வெளியே அனுப்பி வீட்டிற்கு அழைத்துச் செல்லலாமா?” என்று கேட்க… மருத்துவர், “தாராளமாக அழைத்துச் செல்லலாம்,” என்று சொன்னவர் அவளுக்கு இரண்டு நாட்களுக்கு மட்டும் மாத்திரைகளை எழுதிக் கொடுத்து.. அதைத் தவறாமல் சாப்பிடச் சொல்லுங்கள். நன்றாக அவரை ஓய்வு எடுக்கச் சொல்லுங்கள் என்று மட்டும் சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.
அவரிடம் மருத்துவரின் குறிப்பைப் (Prescription) வாங்கிவிட்டு சந்தோஷமாக வந்த ஆதி, துர்காவை வெளியே அனுப்பி தன்னுடன் அழைத்துச் சென்றான். பாதுகாவலர்களைப் பின்னே வருமாறு சொல்லிவிட்டு, துர்காவை அழைத்துக்கொண்டு தனியாக ஆதி கார் ஓட்டிச் சென்றான்.
செல்லும் வழி எல்லாம் துர்காவைத் திரும்பிப் பார்த்துச் சந்தோஷமாகச் சிரித்த முகத்தோடு அவளைப் பார்த்துக்கொண்டே ஆதி வழிநெடுகக் காரை ஓட்டிக் கொண்டிருக்க… அவனுடைய இந்த மாற்றத்தையும், தன்னைப் பார்த்து அவன் சந்தோஷப்படுவதையும் பார்த்த துர்காவுக்கு ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தாலும், மற்றொருபுறம் அவன் இப்படித் தன்னைக் குறுகுறுவென பார்ப்பதைக் கவனித்து வெட்கம் தான் வந்தது.
“ஆதி, தயவு செய்து இப்படி என்னைப் பார்க்காத. எனக்கு என்னவோ போல இருக்கு. ப்ளீஸ், சாலையைப் (Road) பார்த்து வண்டியை ஓட்டு,” என்று துர்கா அவனிடம் தயங்கிக் கொண்டே கூற… அதற்கும் ஆதி சிரித்தவாறு ‘சரி’ என்று தலையாட்டி விட்டுச் சாலையில் கவனம் செலுத்தினான்.
வீட்டிற்கு அவர்கள் வரும்பொழுது நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. இவர்களுக்காக வாசலிலேயே காத்திருந்த செண்பகம், துர்காவும் ஆதியும் காரில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்தவர், வேகமாக துர்காவிடம் சென்று, “துர்கா, உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே? நீ நல்லா தானே இருக்க? கதிர் எனக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போன் பண்ணி சொன்னான் உனக்கு உடம்பு சரியில்லைன்னு. இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்க…
செண்பகத்தைப் பார்த்ததும் துர்கா, அவரை நீண்ட நாள் கழித்து பார்த்த உணர்வோடு அவரிடம், “அம்மா, எனக்கு ஒன்னும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? உங்களுக்கு உடம்பு எல்லாம் நல்லா இருக்கா?” என்று அவரைப் புதிதாகப் பார்ப்பது போல அவளிடம் துர்கா பேச, அவள் பேசுவதைக் கேட்டு செண்பகம் துர்காவைப் பார்த்துவிட்டு ஆதியைப் பார்க்க…
“அத்தை, துர்காவுக்குப் பழைய ஞாபகம் எல்லாம் வந்துடுச்சு,” என்று ஆதி சிரித்தபடி சொல்ல… இந்த மகிழ்ச்சியான விஷயத்தைக் கேட்டதும் செண்பகத்தின் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போனது. தன் எதிரில் இருந்த துர்காவைப் பார்த்து, “துர்கா, உனக்கு எல்லாமே ஞாபகம் வந்திருச்சா?” என்று ஆச்சரியமானவர், துர்காவை அழைத்துக் கொண்டு நேராகப் பூஜை அறைக்குச் சென்றவர், அங்கே கடவுளுக்குத் தீபம் ஏற்றச் சொல்லி தீபாராதனை காட்டி, அவளுக்கு திருநீறு (Vibuthi) இட்டவர், “இனி எல்லாம் உன் வாழ்க்கையில் நல்லதாகவே நடக்கும்,” என்று சொன்னார்.
செண்பகத்தின் காலில் விழுந்து ஆசி வாங்கிய துர்கா அவரைப் பார்த்துச் சிரிக்க… “அத்தை, அவளை மருத்துவர் ஒரு ரெண்டு நாளைக்கு முழுவதுமாக (Completely) ஓய்வு எடுக்கச் சொல்லி இருக்காரு. நான் கூட்டிட்டுப் போய் அவளை ஓய்வு எடுக்கச் சொல்றேன். காலையில் எல்லாருக்கும் விஷயத்தைச் சொல்லிக்கலாம்,” என்று ஆதி சொல்ல….
“நீ துர்காவைக் கூட்டிட்டுப் போய் அவளை ஓய்வு எடுக்கச் சொல்லுப்பா.. நான் இப்பவே எல்லாருக்கும் தொலைபேசி செய்து சொல்றேன். அப்பதான் எனக்குத் திருப்தியாகும்,” என்று சொல்லிவிட்டுத் தன் போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார், அந்த நேரத்தில் அனைவரின் தூக்கத்தைக் கெடுப்பதற்காக…
அவ்வளவு மகிழ்ச்சியாகச் செல்வதைப் பார்த்த ஆதி சிரித்தபடியே துர்காவைப் பார்க்க, துர்காவும் அப்போதுதான் ஆதியைத் திரும்பிப் பார்த்தாள். ஆதியை அப்படி நேருக்கு நேராகப் பார்த்ததும் துர்காவுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு தோன்ற, சட்டென அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் தன் கண்களைத் தாழ்த்திக் கொள்ள…
துர்காவைப் பார்த்துச் சிரித்தபடி அவள் அருகில் வந்த ஆதி, அவள் சிறிதும் எதிர்பார்க்காத போது, தன் கைகளில் துர்காவை ஏந்திக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். துர்காவும் தன் மனதில் எழுந்த எண்ணம் எதையும் ஆதியிடம் காட்டிக்கொள்ளாமல் அவனுடன் செல்ல, துர்காவை கட்டிலில் படுக்க வைத்து அவளுக்குப் போர்வை போர்த்தி விட்டவன், “நல்லா படுத்துத் தூங்கு துர்கா. மற்றதெல்லாம் காலைல பேசிக்கலாம்,” என்று சொல்லிவிட்டு அவனும் அவள் அருகில் படுத்துக்கொள்ள… ஆதியைப் பார்த்தபடி படுத்திருந்தவள். மருந்துகளின் வீரியத்தில் கண்கள் மூடித் தானும் தூங்க ஆரம்பித்தாள். துர்காவைப் பார்த்தபடியே சந்தோசமாக இருந்த ஆதி, அவனும் அவளோடு சேர்ந்து உறங்கிப் போனான்.
மாதவி-போதி: பரிசும் காதலும்
மாதவியின் நினைவில் கனவு கண்டு கொண்டு இருந்தான் போதி. அவன் அறைக் கதவைத் தட்டிக்கொண்டு தயக்கத்துடன் உள்ளே வந்த மாதவி, போதியைப் பார்க்க… வேறு மாணவி யாரோ வருகிறார்கள் என்று நினைத்து மிகச் சாதாரணமாக போதி நிமிர்ந்து பார்க்க…
அவன் எதிரே மஜெந்தா நிற அனார்கலி சுடிதார் அணிந்து, மேலே போர்த்தி இருக்க வேண்டிய ஷாலை கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டு, நெற்றியில் பச்சை நிறப் பொட்டு வைத்து, லேசாக வெட்கத்துடன், தங்க நிற மேனியுடன் அவன் எதிரே அழகுச் சிலையாக… அவன் முன் தயங்கியபடியே நின்று இருந்த தன் காதலியைப் பார்த்ததும் அப்படியே உறைந்து தான் போனான் போதி.
அவன் அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து அதே அதிர்ச்சியுடன் எழுந்து வந்த போதி, மாதவியின் அருகில் வந்து அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் நிறுத்த…. அவள் முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டு மாதவி அவன் கைக்குள் நெளிந்தபடி இருக்க… அவள் முகத்தைத் தன் வலது கையால் பிடித்துத் தன்னைப் பார்க்குமாறு உயர்த்தியவன். அவள் கண்களைப் பார்த்து, “நேத்து மேடையில் (Stage) என்னைப் பார்த்துப் பாடினாயே, அந்த வரிகளை ஒரு முறை எனக்காக இங்கே பாடு மாதவி,” என்றான்.
அவன் கைக்குள் நெளிந்து கொண்டு நின்று இருந்தவள், “அது… அது எல்லாம் என்னால முடியாது,” என்று சொல்லிவிட்டு அவன் கைக்குள் இருந்த தன்னை விடுவித்துக் கொண்டு போதியை விட்டு விலகிச் செல்லப் போக… அவள் கையை விடாமல் பிடித்து நிறுத்தியவன், “எங்கே ஓடுறே… நேத்து மட்டும் மேடையில் அத்தனை பேர் முன்னாடி அவ்வளவு தைரியமா என் கண்ணைப் பார்த்துப் பாடி உன் மனசுல இருக்கறதை எனக்குச் சொன்னே… ஆனா இங்கே யாருமில்லையே. இப்போ பாடின என்ன?” என்று போதி அவள் முகம் பார்த்து கேட்டான்.
அவன் கேட்டாதும், ‘சரிதான். நேற்று நிறைய பேர் இருந்த தைரியத்தில் பாடி விட்டேன். ஆனா இப்போ திடீர்னு அதுவும் அவனிடம் நான் காதல் சொன்ன மறுநாளே என்னைப் இப்படிப் பாட சொன்னால் நான் எப்படிப் பாடுவேன்?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள். “அதெல்லாம் பாட முடியாது. முதல்ல என் கையை விடுங்க…” என்று அவன் கையில் இருந்து தன் கையை உருவப் பார்க்க..
அவள் கையை விடாமல் பிடித்துக் கொண்டு, “என்னை பார்க்கவே இப்படி வெட்கப்படுற… நான் மட்டும் தான் நீ இங்கே வந்ததில் இருந்து பேசிட்டு இருக்கேன். நீ என்கிட்டே வந்ததில் இருந்து நான் கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்லிட்டு இருக்க… என்னை இவ்வளவு தூரம் பார்க்க வந்துட்டு ஏன் பேசாமல் போறே?” என்று கேட்டான் போதி.
“அது… அது.. வந்து நான் இங்கே எதுக்கு வந்தேன்…” என்று அவளுக்கே மறந்து போக… அதற்கு மேல் பேசாமல் யோசித்தாவள், நினைவு வந்தவளாக… “முதல்ல என் கையை விடுங்க. நான் அப்போ தான் சொல்லுவேன்,” என்றாள் மாதவி.
“கையை விட்டால் தான் சொல்லுவியா என்ன?” என்றான் போதி. அவள் ‘ஆமாம்’ என்று நின்று இருந்த நிலையில் இருந்து அவனைப் பார்க்காமலேயே தலையை ஆட்ட… “என்னை இவ்வளவு தூரம் பார்க்க வந்துட்டு இப்படி முகத்தைப் பார்க்காமல் பேசினா நல்லா வா இருக்கு?” என்றான் போதி.
அவனை நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்துப் புருவம் சுருக்கி, முகத்தைச் சிணுங்குவது போல வைத்துக் கொண்டு, “ப்ளீஸ், என் கையை விடுங்க…” என்று மாதவி கெஞ்ச.. அவள் காட்டிய பாவனையில் கவிழ்ந்த போதி, அவனை அறியாமல் அவள் கையை விட… அவனிடம் இருந்து தன் கையை மெதுவாக எடுத்தவள், கையைத் தடவிக்கொண்டே வந்தவன் கை அவள் சுண்டு விரலைப் பிடித்துக்கொண்டு அவள் முகத்தைப் பார்க்க…
அவள் பார்வையாலேயே “ப்ளீஸ்,” என்று கெஞ்ச… பதிலுக்கு போதி, “இந்த ஒற்றை விரலையாவது நான் பிடிச்சுகிறேனே ப்ளீஸ்.. நேத்து நீ போனதில் இருந்து உன் நினைப்பாவே இருக்கேன். நான் கொடுத்தப் பரிசை நீ பிரிச்சுப் பார்த்தியா? உனக்கு நான் கொடுத்தப் பரிசுகள் பிடித்து இருந்ததா?” என்று அவன் ஆர்வமாகக் கேட்க…
“அதுக்காகத் தான் இங்கே வந்தேன்,” என்று சொல்லி, அவன் கையில் இருந்த தன் விரலை எடுத்துக்கொண்டவள் தன் தோளில் மாட்டிக் கொண்டு இருந்த அவள் பையை எடுத்து, அதில் இருந்து போதி கொடுத்தப் பரிசை பிரிக்காமலேயே அப்படியே உறை பிரிக்கப்படாமல் அவனிடம் நீட்டி… “இதை கொடுத்துட்டுப் போகலாம்னு தான் நான் உங்களை பார்க்க வந்தேன்,” என்றால் மாதவி.
தான் கொடுத்தப் பரிசை அவள் திறந்து பார்க்காமலேயே கொண்டு வந்து தன்னிடம் திருப்பி கொடுத்ததும், அதைப் பார்த்த போதிக்கு முகம் சுருங்கிப் போனது… அவன் முகம் வாடி விட்டதைப் பார்த்த மாதவி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே… “இந்தாங்க நீங்க கொடுத்தப் பரிசு,” என்று சொல்லி அவன் கையில் திணித்து விட்டு, “நான் கிளம்புறேன்,” என்று சொல்ல…
“நான் உனக்காக ஆசை ஆசையாப் பார்த்து வாங்கினது… குறைந்தபட்சம் (Atleast) அதில் என்ன இருக்குனு கூட நீ பிரிச்சுப் பார்க்கலையா?” என்று போதி மாதவியிடம் கேட்டான்.
“ம்ம்ஹும்…” என்று தலையை இடவலமாக ஆட்டியவள், திரும்பிச் சென்று கதவைத் திறக்கப் போனவள் நின்று திரும்பிப் போதியைப் பார்க்க… அவன் தன் கையில் இருந்தப் பரிசை ஏக்கமாகப் பார்த்துவிட்டு நிமிர்ந்து மாதவியைப் பார்க்க..
அவனைப் பார்த்து மெல்ல ஒரு வசீகரிக்கும் புன்னகையை மட்டும் உதிர்த்தவள், “நீங்க கொடுத்தப் பரிசை நான் பிரிச்சுப் பார்க்காமல் இருப்பேனா?… நேத்து இரவே அந்தப் பரிசைப் பிரிச்சுப் பார்த்துட்டேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு,” என்று சொல்லித் தன் கையில் அணிந்திருந்த அவன் வாங்கிக் கொடுத்த வாட்சைக் காட்டிச் சொன்னவள். “அது உங்களுக்கு நான் கொடுக்கிறது,” என்று சொல்லி அவன் கையிலிருந்தப் பெட்டியைக் காட்டிவிட்டு, கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்து, “இப்படிச் சின்னப் பிள்ளையைப் மாதிரி முகத்தைச் சோகமா வெச்சுக்காதிங்க இனிமேல் என் முன்னே,” என்றாள்.
அவள் தனக்காகப் பரிசு கொண்டு வந்து கொடுத்து இருக்கிறாள் என்ற சந்தோஷம் ஒரு புறம் இருக்க… மாதவி தன்னிடம் இப்படி உரிமையாகப் பேசுவதைச் சந்தோசமாகப் பார்த்தவன், “நான் இப்படி முகத்தை வெச்சுகிட்டா பார்க்குறதுக்கு நல்லாயில்லையா?” என்றான்.
“**ம்ஹும்… நீங்க இப்படி முகத்தைப் பாவமா வெச்சிட்டு இருந்தா, எனக்கு உங்க முகத்தைப் பிடிச்சு உங்களைக் கொஞ்சிச் சமாதானம் செய்யணும்னு சொல்ற என் மனச என்னால கட்டுப்படுத்த (Control) முடியலை,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி விட..
அவள் சொல்வதைக் கேட்டு உள்ளுக்குள் ஒரு உணர்வு பாய… தன்னை அவள் அப்படி கொஞ்சினால் எப்படி இருக்கும் என்று மனதிற்குள்ளேயே நினைத்துப் பார்த்தவனுக்கு உடல் எல்லாம் சிலிர்த்துவிட…
தனக்குக் கொடுத்தப் பரிசை மேஜை மீது வைத்துவிட்டு அமர்ந்தவன், அதையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்த போதி, பின் ஆர்வம் தாங்காமல், ‘போதிக்கு மாதவி என்ன பரிசு கொடுத்து இருப்பாள்?’ என்று யோசனையோடு அந்தப் பரிசைப் பிரித்தான்.
அந்தப் பரிசைப் பிரிந்ததும் மாதவி கைப்பட எழுதி இருந்த ஒரு காகிதம் இருக்க.. அதை எடுத்துத் திறந்து பார்த்தவன், அதில், “எனக்குக் கொடுத்த போட்டோ ரொம்ப அழகா இருந்தது. எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருக்கு என்றும், என்னால உங்க அளவுக்குப் பரிசு வாங்க முடியாது. அதனால என் கையால் உங்களுக்குச் சுவீட் (Sweet) செஞ்சு கொண்டு வந்து இருக்கேன். அதைச் சாப்பிடுங்க அத்தான்,” என்று எழுதி இருக்க…
“அத்தான்,” என்று சொல்லிப் பார்த்துக் கொண்ட போதி, மாதவி தன்னை இப்படி நேரில் கூப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டவன், அவள் கொடுத்தக் கடிதத்தை வைத்துவிட்டு உள்ளே இருந்த ஒரு அழகியப் பெட்டியை வெளியே எடுத்தவன், அதை ஆர்வமாகத் திறந்து பார்க்க… அதில், “பால்கோவா மாதிரி இருக்கும். என் அத்தானுக்காக நான் செய்த பால்கோவா…” என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி இருக்க..
“என்னை பால்கோவான்னு சொல்லுறாளா?” என்று நினைத்துச் சிரித்தவன், அவள் கொடுத்த சுவீட் முழுவதையும் ரசித்து ருசித்துச் சாப்பிட்டான்.

1 comment
Ayoo akka inaki episode sema super 😍 Durga ku palasula niyabagam vanthutu ippo intha bothi apram mathavi love super 😍💐ana oru vishiyathula sangavi ya romba pidichiruku mathavi ku nalla oru sister ah nadathukura💐💗🫂🌹 mathavi tha sangavi ya thiruthanum💝👀❤️