Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 167

உன் ரகசிய ரசிகை நான் 167

by Layas Tamil Novel
167 views

EPISODE 167

ஸ்ரீ ரியாவைக் காதலிப்பதை அவன் சொல்வதற்கு முன்பாகவே சங்கவி ரியாவின் முன்பு போட்டு உடைத்து விட… அதன் பிறகு அலுவலகத்திற்குள் ஸ்ரீயைப் பார்க்கும் போதெல்லாம் ரியா ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தாள். அவனிடம் சரியாக முகம் கொடுத்து ரியா பேசுவதே இல்லை. அலுவலக விஷயமாக ஏதாவது கேட்க வேண்டும் என்றால் மட்டுமே தானாகச் சென்று ஸ்ரீயிடம் பேசினால் ரியா.

இன்றும் அதுபோலத்தான், காலையில் வந்ததிலிருந்து ஸ்ரீ ரியாவின் பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருக்க…. அவன் செய்வதை கண்டுகொள்ளாமல் ரியா தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க… அவள் செல்லும் இடமெல்லாம் அவளிடம் ஏதாவது ஒரு சந்தேகம் கேட்கிறேன் என்று ரியாவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டு திரிந்தான் ஸ்ரீ.

இதையெல்லாம் தன் தனி அறையில் (Cabin) இருந்தவாறு கவனித்துக் கொண்டிருந்த விக்கி. ‘இவன் பண்றதெல்லாம் பார்த்தா அவளை எப்படியாவது பேசி காதலிக்க வெச்சிடுவான் போல இருக்கு. கொஞ்ச நேரம் கூட அந்தப் பிள்ளையைத் தனியா இருக்க விடவே மாட்டேங்குறானே. இப்படி அட்டை மாதிரி அந்தப் பொண்ணு பின்னாடி ஒட்டிக்கிட்டு சுத்திட்டு இருக்கானே,’ என்று யோசித்துக் கொண்டிருந்த விக்கி, இன்டர்காமில் ஸ்ரீயின் தொலைபேசிக்கு அழைக்க… போன் அழைப்பைப் பார்த்த ஸ்ரீ, காலை அட்டென்ட் செய்து, “சொல்லுங்க சார்,” என்றான்.

“உள்ளே வாடா…” என்றான் விக்கி கடுப்பாக. அவன் பேசிய தொணியில் இருந்தே ஸ்ரீக்கு புரிந்தது விக்கி ஏதோ கடுப்பாக இருக்கிறான் என்று. அதுக்கு என்ன? அறையின் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்த ஸ்ரீயைப் பார்த்ததும் விக்கி… “ஏண்டா உனக்கு ஆபீஸ்ல வேற எந்த வேலை எதுவும் இல்லையா? எப்ப பார்த்தாலும் அந்தப் புள்ள பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க…” என்று கேட்டான்.

“என்ன பண்றது? நான் யாரை விரும்புறேனோ அந்தப் பொண்ணு கூட என்னைச் சேர்த்து வைக்கிறேன்னு சொன்னவரே, நான் அந்தப் பொண்ணு பின்னாடி லோ லோன்னு நாய் மாதிரி அலையுறதைப் பார்த்தும் எதுவும் பேசாம இருக்காரு. அப்புறம் நான் அலுவலகத்துல வேலையைப் பார்க்குறதை விட, இப்போதைக்கு என் காதலை என் ஆளுகிட்ட சொல்லி என் காதலை முன்மொழியும் (Propose) வேலையில தான் நான் தீவிரமா இருக்கேன்,” என்றான் ஸ்ரீ.

‘இவனை நான் மிரட்டலாம்னு கூப்பிட்டா, உள்ளே வந்து இவன் என்னையே மிரட்டுகிறானே,’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட விக்கி. “டேய் ஸ்ரீ….” என்று விக்கி அழைக்க…

“சொல்லுங்க…” என்றான் கோபமாக.

“சரிடா சரிடா கோவப்படாத. இங்க வா,” என்று தன் அருகில் வர அழைத்தான் ஸ்ரீயை விக்கி.

“சொல்லுங்க,” என்று அதே கடுப்போடு வந்து நின்றான் ஸ்ரீ, விக்கியின் பக்கத்தில்.

“இப்போ நீ என்கிட்டக் கோச்சு என்னடா ஆகப்போகுது.. அந்தப் புள்ள பின்னாடி சுத்துறத நிறுத்து,” என்றான் விக்கி.

“ஆமா. ஏற்கனவே அவ என்னைக் கண்டாலே ஆகாத மாதிரி எப்பவுமே மூஞ்சியை உம்மென்று வச்சிட்டு இருக்கா. இதுல அவ பின்னாடி நான் சுத்துறத நிறுத்திட்டா, ‘சனியன் தொலைஞ்சது’ன்னு நிம்மதியா… ரொம்பச் சந்தோஷமா இருப்பா. என்னை ‘ஏன்’னு கூடக் கேட்காமல்,” என்றான் ஸ்ரீ.

“நீ இப்படி விடாம அட்டை மாதிரி அவ பின்னாடியே ஒட்டிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தா அவ அப்படித்தான் நடந்துக்குவா,” என்றான் விக்கி.

“வேற என்ன மாமா என்ன பண்ண சொல்றீங்க?” என்று கேட்டான் ஸ்ரீ.

“என்னது மாமாவா? என்ன மாமாவாகவே ஆக்கிட்டியா நீ?” என்றான் விக்கி.

“ஆமா மாமா. ரியா உங்களுக்குத் தங்கச்சி முறை. அப்போ நீங்க எனக்கு மாமா தானே,” என்றான் ஸ்ரீ. “நீங்க என் அத்தை சிவகாமியோட பையன். அப்ப நான் உங்களை முறைக்கு மாமான்னு தானே கூப்பிடணும்,” என்றான்.

“இந்த உறவு முறை எல்லாம் நல்லாதான் புரிஞ்சு வச்சிருக்கே…. ஆனா ஒரு பொண்ணோட மனச பத்தி உனக்குத் தெரியலையே டா…. இப்படி இருந்தா அவ கூட நீ எப்படி உறவாடுறது?” என்றான் விக்கி.

“என்ன மாமா சொல்றீங்க? எனக்குப் புரியல,” என்றான் ஸ்ரீ.

“அடேய் மாப்ள….” என்றான் விக்கி.

“என்னது மாப்பிள்ளையா!!!!” என்றான் ஸ்ரீ ஆச்சரியமாக…

“அட ஆமா டா மாப்ள… நான் உனக்கு மாமா என்றால் நீ எனக்கு மாப்பிள்ளை தானே. அவன் நான் சொல்றதக் கேட்கப் போறியா? இப்படியே இருக்கப் போறியா?” என்று சொல்லி நாற்காலியில் இருந்து கோபமாக எழுந்து அந்த அறையில் இருந்த சோபாவில் போய் விக்கி அமர்ந்தான்.

“சரி மாமா. நீங்க ‘மாப்பிள்ளை’ன்னு இல்ல… என்ன இப்படி வேணா கூப்பிடலாம். உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? கோச்சுக்காம சொல்லுங்க ப்ளீஸ்…” ஸ்ரீ விக்கியின் முன் பாவமாக நிற்க..

“அப்பாடி வாடா மாப்பிள்ளை வழிக்கு. இப்பதான் நீ என்னோட வேவ் லெங்த்துக்கு வந்த,” என்றவன் ஸ்ரீயின் தோளின் மேல் கையைப் போட்டு அவனிடம்.

“**இப்போ… நீ ரியாவை விடாம எங்க போனாலும் அவ பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தேன்னு வை… அவளுக்கு உன்னை பார்க்கும்போது எல்லாம் ஒரு மாதிரி எரிச்சலா… கடுப்பா… தான் வரும். நீ இப்படி அவ பின்னாடியே சுத்திட்டு இருந்தா… அதுக்கு அப்புறம் உன்னைக் கண்டாலே அவளுக்குப் பிடிக்காமல் போயிடும்டா,” என்றான் விக்கி.

“என்ன மாமா சொல்றீங்க? அவளுக்கு என்னைப் புடிக்காம போயிடுமா?” என்றான் ஸ்ரீ அதிர்ச்சியாக.

“உன்னைப் பத்தி அவளை யோசிக்கவே விட மாட்டேங்குற. அப்புறம் எப்படி அவளுக்கு உன் மேல காதல் வரும்?” என்றான் விக்கி.

ஸ்ரீ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… ‘ஆஹா…பையன் இப்பதான் கரெக்டான ரூட்டுக்கு வரான். இவனை இப்படியே கொண்டு போகணும். அப்பதான் சரியா இருக்கும்,’ என்று மனக்கணக்கு போட்ட விக்கி.

“இங்க பாரு ஸ்ரீ… ரியா உன்னைப் பத்தி கொஞ்சமாவது யோசிக்கணும். நீ என்ன பண்ணிட்டு இருக்க? நீ எங்க இருக்க? அந்த மாதிரி எல்லாம் முதல்ல ஒரு சின்ன சின்ன விஷயமாவது உன்னைப் பத்தி நினைக்கிறதுக்கு அவளுக்கு நீ வாய்ப்பு கொடுக்கணும்,” என்றான் விக்கி.

“அப்படி வாய்ப்பு கொடுத்தால் ரியா என்னைக் காதலிச்சிடுவாலா மாமா?” என்று ஆர்வமாக கேட்டான் ஸ்ரீ.

“ம்ம்ம்ம்ம்….” வேலை விட்டதைப் பார்த்து யோசித்த விக்கி, “அதற்கு 50% வாய்ப்பு இருக்கிறது,” என்றான்.

“பாக்கி ஐம்பது சதவீதம் என்ன மாமா ஆகும்?” என்று கேட்டான் ஸ்ரீ.

“அவளுக்கு உன்னைப் புடிக்காமப் போகலாம். ‘அப்பாடா…தொல்லை விட்டது’ன்னு ரியா நிம்மதியா இருக்கலாம். ‘இனிமேல் நீ அவளைத் தொந்தரவு (Disturb) பண்ண மாட்ட. நம்ம நிம்மதியா எங்கு வேண்டுமானாலும் போலாம் வரலாம்னு’ அவ நினைக்கலாம்,” என்றான் விக்கி.

விக்கி சொன்னதைக் கேட்டு, இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போனது போலத் தோன்றிய ஸ்ரீ…. “கொஞ்சமாவது பாசிட்டிவா சொல்லி என் காதலைச் சேர்த்து வைப்பீங்கன்னு பார்த்தா… இப்படி எது எதையோ சொல்லி என்னையும் ரியாவையும் நீங்களே பிரிச்சிடுவிங்க போல இருக்கு… உங்க ஐடியாவும் வேணாம் எதுவும் வேணாம். நானே ஏதாவது பண்ணி என்னோட காதலை அவகிட்டே சொல்லிக்கிறேன்,” என்று சோபாவில் இருந்து எழுந்து செல்லப் போனான் ஸ்ரீ.

அவனைப் பிடித்துத் தன் அருகில் இழுத்து அமர வைத்த விக்கி. “என்ன சொல்ல வரேன்னு முதல்ல கேளுடா… அதுக்கு பிறகு நீ என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ,” எதற்கென்று விக்கி ஸ்ரீயின் கழுத்தில் கையைப் போட்டு இருக்க…

“சரி சரி… முதல்ல நீங்க என்ன சொல்ல வரீங்களோ அதைச் சொல்லுங்க. அதுக்கு பிறகு நீங்கள் சொல்றதைக் கேட்கலாமா வேணாமான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்,” என்று சொல்லி விக்கியைச் ஸ்ரீ பார்க்க…

‘எல்லாம் என் நேரம் டா…’ என்று நினைத்துக் கொண்டே ஸ்ரீயிடம். “இப்போ நீ முதல்ல ரியா பின்னாடி பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு அவ கூடவே சுத்துறத நிறுத்து,” என்றான் விக்கி.

“என்னது!! அவ பின்னாடி சுத்துறதை நிறுத்தச் சொல்றீங்களா!!! அட போங்க… மாமா என்னால ஒரு நாள் கூட ரியாவைப் பார்க்காம… அவ பின்னாடி சுத்தாம இருக்க முடியாது,” என்ற ஸ்ரீ சோபாவில் இருந்து எழுந்து செல்ல…

“சரி அப்போ நீயே அவ பின்னாடி லோலோன்னு சுத்திக்கிட்டு இரு… அவ உன்னைத் திரும்பி கூடப் பாக்க மாட்டா… நான் சொல்றதக் கேட்கலன்னா, சத்தியமா ரியா உன் பக்கம் திரும்பியே பார்க்க மாட்டா,” என்றான் விக்கி.

வாசல் வரை சென்ற ஸ்ரீ அப்படியே நின்று திரும்பி விக்கியைப் பாவமாகப் பார்க்க… அவனைப் பார்த்து விக்கி, “நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளுடா. இப்படி முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்பட்டு எந்திரிச்சுப் போனா நான் எப்படித்தான் உனக்குச் சொல்லிப் புரிய வைப்பேன்,” என்று சொன்னான் விக்கி.

“அவசரப்பட மாட்டேன். நீங்க பொறுமையா சொல்லுங்க. கேட்கிறேன்,” என்று சொல்லி ஸ்ரீ விக்கியின் அருகில் அமர்ந்தான்.

“இங்க பாரு. நீ ரியா பின்னாடி எங்கே போனாலும் சுத்திக்கிட்டே இருந்தா, அவளுக்கு உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எரிச்சலூட்டுற (Irritate) மாதிரி தான் இருக்கும். நீ என்ன பண்ணு? ஒரு ஒரு வாரத்துக்கு ரியா இருக்கிற பக்கமே போகாத. அலுவலகம் வந்தியா… உன் வேலையப் பாத்தியா… வேலை முடிஞ்சதும் வீட்டுக்குப் போனியான்னு இரு. அவளைப் பற்றி எதுவும் பேசாத. அவ கிட்டப் போய் நீயா வழிஞ்சு எதுவும் கேட்காத,” என்றான் விக்கி.

“ஆமா. இப்படிப் பண்ணுனா ரியா என் கூட நல்லாப் பேசுவாளா? நான் அவளைக் காதலிக்கிறேன்னு புரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கா?” என்று கேட்டான் ஸ்ரீ.

“நான் சொன்ன மாதிரி நீ இருந்து பாரு. எல்லாம் தானாவே நடக்கும்,” என்று சொன்னான் விக்கி.

“நீங்க சொன்ன மாதிரி நடந்தா, என்னைப் போல இந்த உலகத்துல சந்தோஷப்படுறவன் வேறு யாருமே இருக்க மாட்டடான். சரி மாமா, இன்னைல இருந்து ஏன் இப்போ இருந்து நான் நீங்க சொன்னது போலவே நடந்துக்கிறேன்,” சொன்ன ஸ்ரீ விக்கியின் அறையில் இருந்து வெளியே எழுந்து சென்றான்.

அவன் சென்றதும் விக்கி அவன் சென்ற திசையைப் பார்த்துச் சிரித்தவன், “இவனை அலுவலகத்தில் வேலை பார்க்க வைக்கிறதுக்கு நான் என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு பாரு,” என்று வாய்விட்டு புலம்பியவன். ‘நான் சொன்ன ஐடியா ஒர்க் அவுட் ஆகி, ரியாவும் இவனும் காதலிக்கணும். அடுத்த ஜோடி ரெடி ஆயிடும்,’ என்று நினைத்துத் தன் வேலையைப் பார்க்கச் சென்றான் விக்கி.

விக்கியின் அறையை விட்டு வந்த ஸ்ரீ, தன் அறைக்குச் சென்றவன், இத்தனை நாள் நிலுவையில் (Pending) வைத்து இருந்த அனைத்து வேலைகளையும் எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தான். விக்கியின் அறைக்குள் சென்று நீண்ட நேரம் கழித்து வெளியே வந்த ஸ்ரீ, சிரித்த முகமாக அவன் அறைக்குச் சென்று வேலையைப் பார்ப்பதைக் கவனித்த ரியா, “என்ன ஆச்சு இவனுக்கு?” என்று யோசனையில் தன் வேலையில் மூழ்கினாள்.


மாதவியை இழுத்துக் கொண்டு விடுதிக்குள் சென்றவன், இங்கே ஏற்கனவே இவர்களுக்காக பதிவு செய்யப்பட்டிருந்த (Booked) மேஜையில் சென்று போதி அமர, அவனைப் புரியாமல் மாதவி பார்த்து, “இங்கே எதற்கு என்னைக் கூட்டிட்டு வந்தீங்க?” என்று கேட்டாள்.

“அறைக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டுச் சாப்பிட இங்க கூட்டிட்டு வந்துட்டேன்னு ஏமாந்துட்டியா?” என்று சிரித்தபடி போதி கேட்க… அவனை முறைத்தவள், “நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. என்னை எதுக்கு இப்போ இங்க கூட்டிட்டு வந்தீங்க. நான் கல்லூரிக்குப் போகணும். என்னைக் கொண்டு போய் விடுங்க,” என்று சொன்னால் மாதவி.

“கல்லூரிக்குத் தானே. போகலாம்… போகலாம்… இப்போ நீங்க வந்து உட்காரு,” என்று சொல்லித் தன் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு மாதவியை இழுத்து அவன் அருகில் அமர வைத்துக் கொண்டான் போதி.

தன் அருகில் மாதவியை அமர வைத்தவன், மாதவியின் வலது கைக்குள் தன் இடது கையை கோர்த்து அவள் கையை விடாமல் பிடித்துக் கொள்ள… அவன் ஸ்பரிசம் பட்டதும் மாதவிக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய, இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் கையில் இருந்து தன் கையைப் பிரிக்க முயற்சிக்க…

“கொஞ்ச நேரம் அப்படியே அமைதியா உட்காரு மாதவி ப்ளீஸ்…. எனக்கு இந்த மாதிரி எல்லாம் ஒரு உணர்வு (Feeling) இதுவரைக்கும் வந்ததே இல்லை. இந்த உணர்வை முழுசா அனுபவிக்க விடு ப்ளீஸ்…” என்று போதி மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி கெஞ்ச…

அவன் முகத்தைப் பார்க்கப் பாவமாக இருக்கவும் மாதவி எதுவும் பேசாமல் அமைதியானாள்.

மெளிதாகப் புன்னகைத்த போதி, “என்ன சாப்பிடுற வி?” என்றான்.

“வி (V) யா…” என்று மாதவி புரியாமல் அவனிடம் கேட்க…

“மாதவியுடைய கடைசி எழுத்து வி. அதைத் தான் சுருக்கி (Short) கூப்பிட்டேன்,” என்றான்.

“ஓஹோ…” என்றவள், “அப்போ உங்க பெயர் கடைசி லெட்டர் ஐ (I). அப்போ நான் உங்களை ‘ஐ’ன்னு கூப்பிடட்டுமா?” என்று விழி விரித்துச் சிரித்த முகமாக கேட்க… அதைப் பார்த்த போதி அவளை ரசித்தவாறே, “சரி. உனக்கு எப்படித் தோணுதோ அப்படி கூப்பிடு,” என்றவன் இருவருக்கும் உணவை ஆர்டர் செய்தவன்.

வந்த உணவுகளைப் பார்த்துப் பார்த்து மாதவிக்குப் பரிமாறினான். அவளால் சாப்பிடவே முடியவில்லை. அவ்வளவு உணவுகளை அவள் தட்டில் வைத்தது போதாது என்று தன் தட்டில் இருந்த உணவை எடுத்து, அவள் ‘வேண்டாம்’ என்று சொல்லச் சொல்ல வலுக்கட்டாயமாக ஊட்டி விட்டான்.

பின் விடுதியில் இருந்து அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன், காரில் ஏற்றியவன் அவளிடம் எதுவும் பேசாமல் காரை ஓட்ட… மாதவியும் ‘எங்கே போகிறோம்’ என்று கேட்டுப் பார்த்துவிட்டு, போதி எதுவும் சொல்லாமல் காரை ஓட்ட… வேறு வழி இல்லாமல் அமைதியாக அமர்ந்து விட்டாள்.

மாதவியைக் வலுக்கட்டாயமாக காரில் அமர வைத்து அவளுடன் புறப்பட்டவன், நேராக மாதவியை அழைத்துக்கொண்டு போதி தன் பங்களாவிற்கு அவளை அழைத்து வந்தான். அவ்வளவு பெரிய பங்களாவின் வெளியே காரை நிறுத்தி ஒலி எழுப்ப (Horn)… அவனுடைய பங்களாவின் கதவு தானாகத் திறந்தது. அதை மாயாஜாலக் கதவு ஒன்று தானாகத் திறப்பது போல ஆச்சரியமாக மாதவி வாயைப் பிளந்து கொண்டு பார்க்க…

மாதவி வாயைத் திறந்து கொண்டு கதவு திறப்பதைப் கவனித்த போதிக்குச் சிரிப்பு வரத் தன் உதட்டைக் கடித்துச் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

கதவு திறந்ததும் தன் காரைப் பார்க் செய்துவிட்டு இறங்கியவன், மாதவியை உள்ளே அழைத்துச் செல்லப் போக… தன் கையைப் பிடித்து இருந்த அவன் கையை உதறிய மாதவி, “இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க? இது யாரோட வீடு?” என்று கேட்டாள்.

“ஏன்? இது யாரோட வீடுன்னு சொன்னா தான் மேடம் உள்ளே வருவீங்களோ?” என்றான் போதி.

“ஆமா… யார் வீடுன்னு சொன்னாதான் உங்களோட வருவேன். இல்லைன்னா வரமாட்டேன்,” என்று மாதவி இடுப்பில் கை வைத்துக் கொண்டு போதியிடம் பேச…

“வாழப் போற வீட்டுக்குள்ள வரதுக்கு அடம்பிடிக்கிறியே,” என்றான் போதி.

“வாழப் போற வீடா!!! யார்? வாழப் போறாங்க இங்கே?” என்று மாதவி புரியாமல் கேட்க…

“வேற யாரு? நீ தான்,” என்றான் போதி.

“நானா?” என்று சுட்டுவிரலால் தன் மார்பில் வைத்துக் காட்டி மாதவி கேட்க…

“ம்ம்ம்ம்…. நீயேதான். வா…உள்ள போலாம். உனக்காக எல்லாரும் காத்துட்டு இருக்காங்க,” என்று சொன்னான் போதி.

“என்னது? உங்க வீட்ல எல்லாரும் இருக்காங்களா? நான் வரல.. எனக்குப் பயமா இருக்கு,” என்றாள் மாதவி.

“ஓ…. அப்போ வீட்ல யாரும் இல்லைனா நீ வருவியா? அப்போ உனக்குப் பயம் இல்லையா?” என்று கேட்டான் போதி.

அவனை முறைத்தவள், “உங்க அம்மா அப்பாவைப் பார்க்கப் போறேன்னு சொல்லாம என்ன இப்படித்தான் கூட்டிட்டு வருவீங்களா… நான் சரியா உடை கூடப் போடல. அவங்க என்னைப் இப்படிப் பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று மாதவி தன்னைக் குனிந்து தன்னுடைய உடையைப் பார்த்துக் கொண்டே போதியிடம் கேட்க..

அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தவன், “இந்த உடைக்கு என்ன குறைச்சல்? இந்த உடையில நீ தேவதை மாதிரி இருக்க தெரியுமா?” என்றவன், “சரி வா…” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்குள் செல்லப் போக….

அப்போது வீட்டு வாசலில் போதியின் கார் சத்தம் கேட்டு போதியுடைய பாட்டி வெளியே வந்தவர். போதி ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் வருவதைப் பார்த்ததும், “அங்கேயே நில்லுடா,” என்று கோபமாகக் கத்தினார்.

அவர் கோபத்தைக் கண்ட போதி அப்படியே நின்றுவிட, அவன் அருகில் இருந்த மாதவி அவன் வாசலில் வயதான பெண்மணி கோபமாக நின்று அவளைப் பார்ப்பதைக் கண்டதும் பயத்தில் நடுங்கியவாறே போதியின் பின்னால் நின்று அவனுடன் ஒட்டிக்கொண்டாள்.


துர்கா சாப்பிட்டுவிட்டு வரவேற்பறையில் இளைப்பாறலாம் என்று தன் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்து கொண்டிருக்க, அலுவலகத்திலிருந்து அப்போது தான் உள்ளே வந்த ஆதி அவளைத் தூக்கிக்கொண்டு தன் அறைக்குச் சென்றான்.

அவள் மடியில் படுத்துக் கொண்டே துர்காவின் முகத்தைப் பார்த்து ரசித்தபடி ஆதி படுத்திருக்க, முகக்கவசம் அணிந்த அவன் முகத்தைப் பார்த்த துர்கா, அவன் கண்களில் தெரிந்த சந்தோஷத்தைக் கண்டு அவளும் மிகவும் சந்தோஷப்பட்டாள்.

சிகிச்சை செய்த பிறகு யாரிடமும் தன் முகத்தைக் காட்டாமல், துர்காவிடம் தான் முகக்கவசம் அணிந்த முகத்தை துர்கா கழட்டச் சொல்லி ஆதி தன் முகத்தைக் காட்ட… ஒரு சிறு தழும்பு கூட இல்லாமல் அப்பழுக்கின்றி தூய்மையாக இருந்த ஆதியின் முகத்தை அதிசயம் போல துர்கா பார்த்தாள்.

முகக்கவசத்தைக் கழட்டி அவன் முகத்தைத் துர்கா ரசிக்க, தாமதிக்காமல் அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன், துர்காவின் இதழில் முத்தம் கொடுக்க…

இதைச் சற்றும் எதிர்பாராத துர்கா ஆதியைப் பார்க்க… அவன் கண்களும் அவள் கண்களும் மிகவும் அருகில் நெருக்கமாகச் சந்தித்துக் கொள்ள… அவளுக்கு முத்தமிடுவதை நிறுத்தாமல் அவள் கண்களைப் பார்த்து, “என்ன,” என்று புருவம் உயர்த்திக் கேட்க…

அவள் பதில் சொல்லாமல் அவன் கண்களையே பார்த்தாள். பின்னே துர்காவால் வேற என்னங்க பண்ண முடியும்? நம்ம நாயகன் (Hero) தான் அவள் எதுவும் பேச முடியாத படிக்கு அவள் உதட்டைத் தன் வாய்க்குள் வைத்து இம்சிக்கிறானே…

அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் துர்கா பார்வையைத் தாழ்த்திக் கொள்ள… தன் முத்தத்தை தீவிரப்படுத்திய ஆதி, அவள் முகத்தில் இருந்து தன் கைகளை மெல்ல மெல்லக் கீழே இறக்கி அவள் சங்கு கழுத்தைத் தாண்டி கீழே வர….

அவன் கையை சட்டென்று பிடித்துக்கொண்டு துர்கா ஆதியைப் பார்க்க… ஆதியோ துர்காவிடம், “எவ்வளவு நாள் தான் என்னைப் பார்க்க வைத்துத் தவிக்க வைப்பாய்… எனக்குக் கொஞ்சம் இடம் கொடு,” என்று பார்வையாலேயே அவளிடம் கெஞ்ச…

அவன் பார்வையின் அர்த்தம் புரிந்த துர்கா, மெல்ல தன் கணவனின் கையைப் பிடித்திருந்தத் தன் கைகளின் பிடியை லேசாகத் தளர்த்த… அவள் கைகள் தளர்ந்ததும் அப்படியே அவளை வாரி அணைத்து, துர்காவை அப்படியே படுக்கையில் இருந்து தூக்கியவன், அவளை தன் மீது போட்டுக்கொண்டு மெத்தையில் படுத்தான்.

அவனின் இந்தத் திடீர் செயலில் உறைந்து போன துர்கா, அவன் மீது படுத்துக் கொண்டே அவன் முகத்தைப் பார்த்து, “என்ன ஆதி இது,” என்று சிணுங்கினால்.

“என்ன…” என்று அவனும் எதுவும் தெரியாதவள் போலக் கேட்க…

“ம்ம்ம்.. இது தான்,” என்று தன் கண்களை உருட்டி அவன் கீழே படுத்திருக்கத் தான் அவன் மேலே படுத்து இருந்ததைச் சுட்டிக் காட்டி துர்கா கேட்க..

“என் மனைவியை என் மேல படுக்க வெச்சு இருக்கேன்,” என்றான்.

“இதுக்காகத் தான் என்கிட்டே இப்போ கெஞ்சினியா?” என்றாள்.

“ஆமா… வேற எதுக்காக,” என்றான் ஆதி சிரித்த படி.

“ஒன்றும் இல்லையே….” என்று துர்கா வெட்கப்பட…

“நீ எதுக்கு இப்படி வெட்கப்படுறேன்னு எனக்கு நல்லா தெரியும்,” என்றவன். “உனக்குக் கால்கள் இரண்டும் நல்லபடியா குணமாகும் பிறகுதான் நமக்குள்ளே எல்லாமே நடக்கும்,” என்றவன். “அதுக்காக உன் பக்கத்துலயே நான் வர மாட்டேன்னு நினைச்சுச் சந்தோஷப்படாதே… அப்போ அப்போ வந்து உன்னைக் குட்டி குட்டி ரொமான்ஸ் செய்து இம்சிப்பேன்,” என்று சொல்லி கண்ணடிக்க…

அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்தாள்.

You may also like

1 comment

S joshna December 1, 2025 - 8:52 pm

Akka inaki episode super 😍💕🌹🫂💋

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured