Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 178

உன் ரகசிய ரசிகை நான் 178

by Layas Tamil Novel
211 views

EPISODE 178

நிலானியைக் கல்லூரியில் இறக்கிவிட்டு, தன்னுடன் அலுவலகத்திற்கு (ஆபீஸ்) சிவகாமியியை அழைத்து வந்தான் விக்கி.

அலுவலக வாசலில் வந்து தனது காரை நிறுத்திய விக்கி வேகமாக இறங்கி வந்து சிவகாமியி அமர்ந்திருந்த காரின் கதவைத் திறந்து விட…

காருக்குள் அமர்ந்திருந்த சிவகாமியி விக்கியைப் பார்த்து, “கண்டிப்பாக இந்த பாயசத்தைக் கொடுப்பதற்காக நான் இவ்வளவு தூரம் வரணுமா விக்கி? எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. நீ வேணா உள்ள கொண்டு போய் ஆதி கிட்ட இந்த பாயாசத்தைக் கொடுத்துட்டு வா. நான் காரிலேயே வெயிட் பண்றேன்” என்று சொன்னார்.

“ஐயோ!!! காரியமே கெட்டது அம்மா… தயவுசெய்து உள்ளே வாங்க. இவ்வளவு தூரம் ஆபீஸுக்கு வந்துட்டு, நீங்க பார்க்க வேண்டியவங்களப் பார்க்காம வீட்டுக்கு நான் உங்களைத் திரும்ப அழைச்சிட்டுப் போனா, உங்க மருமக என்ன ஒரு வழி பண்ணிடுவா” என்று விக்கி சொல்ல.

“யாரைப் பார்க்கணும்னு சொல்ற? என்னப்பா சொல்ற? நிலானி உன்னை எதுக்குத் திட்டப் போற?” என்று சிவகாமியி புரியாமல் கேட்க…

“அது… அது வந்து அம்மா… நீங்க ஆபீஸ் வரைக்கும் வந்தும், ஆதியைப் பார்க்க விடாம நான் உங்களை ஆபீஸில் வெளியவே நிக்க வச்சு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன்னு தெரிஞ்சா, அவ (நிலானி) என்னை திட்டுவா.”

“நீங்க ஆபீஸுக்கு வந்துட்டு ஆதியைப் பார்க்காமல் திரும்பிப் போனா, அவன் என்ன பயங்கரமா திட்டுவான். ‘அம்மாவை இவ்வளவு தூரம் அழைச்சிட்டு வந்துட்டு, என்கிட்ட சொல்லாம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டியா’ன்னு என்கூட சண்டைக்கு வருவான். தயவுசெய்து வாங்கம்மா ப்ளீஸ்” என்று விக்கி சிவகாமியியிடம் கெஞ்ச…

வேறு வழியே இல்லாமல் அரை மனதோடு சிவகாமியி காரை விட்டு இறங்கியவர், விக்கியுடன் அலுவலகத்திற்குள் சென்றார்.

அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்ற விக்கி நேராக அவரைத் தன் கேபினுக்கு அழைத்து வந்து அங்கிருந்த சோபாவில் அமரச் சொல்லிவிட்டு, வேகமாக வெளியே சென்றவன் ரியாவிடம், “சங்கவி வந்து விட்டாளா?” என்று கேட்டான்.

“இன்னும் இல்லை சார். அவங்க இப்போ வர நேரம் தான்” என்று ரியா சொல்ல..

“சரி, சங்கவி வந்ததும் வேறு எங்கேயும் போகாமல் அவளை எப்படியாவது நேராக என்னோட கேபினுக்கு அனுப்பிடு” என்று விக்கி சொல்ல.

“சார், நான் எப்படி அவங்க கிட்ட…” என்று ரியா தயங்க..

“நீ என்ன பண்ணுவியோ, எது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. இன்னைக்கு அவகிட்ட நீ திட்டு வாங்கினாலும் பரவால்ல, அவளை வேற எங்கேயும் போக விடாமல் முதல்ல என்னோட கேபினுக்கு அனுப்பி வை. அதன் பிறகு மத்ததை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்ன விக்கி.

“சங்கவியை என் கேபினுக்கு அனுப்பின பிறகு வேறு யாரையும் உள்ளே விடாத. அவளா வெளியே வர வரைக்கும் என்னோட கேபினுக்குள்ள வேற யாரும் போகக்கூடாது” என்று சொன்னான் விக்கி.

ரியாவிற்கு வேறு வழி இல்லாமல் “சரி” என்று தலையை ஆட்ட…

சங்கவியைத் தன் கேபினுக்கு அனுப்பச் சொல்லிவிட்டு நேராக உள்ளே வந்த விக்கி, அவன் அறையைச் சுற்றிக் கொண்டிருந்த சிவகாமியியிடம் வந்தவன், “அம்மா, நீங்க கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க. எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அந்த மீட்டிங் முடிச்சுட்டு நானே ஆதியை அழைச்சிட்டு இங்க வரேன். அதுவரைக்கும் நீங்க எங்கேயும் போக வேண்டாம்” என்று விக்கி சொல்ல.

“என்னப்பா சொல்ற? நீ இல்லாம நான் மட்டும் இங்கே எப்படி தனியா இருக்கிறது? பேசாம பாயசத்தை நீயே ஆதி கிட்ட குடுத்துடு. நான் வேணா ஒரு ஆட்டோ பிடிச்சு கிளம்பி வீட்டுக்குப் போய்க்கிறேன். நீ மீட்டிங் முடிச்சுட்டு வந்து ஆதியிடம் இந்தப் பாயசத்தைக் கொடுத்துடு” என்று சொல்ல.

“அம்மா, ஏன் மறுபடி மறுபடி வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க? எனக்காகக் கொஞ்ச நேரம் வெயிட் பண்ண மாட்டீங்களா? என்னோட ஆபீஸுக்கு இன்னைக்குத் தானே நீங்க முதல் முறை வந்து இருக்கீங்க. என்னோட கேபினில் எல்லாம் எப்படி இருக்குன்னு சுத்தி பாத்துட்டு இருங்க. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு, அவர் பதிலுக்குக் காத்திராமல் வேகமாக விக்கி தன் கேபினில் இருந்து வெளியே சென்றான்.

வேறு வழியே இல்லாமல் சிவகாமியி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவர், எதிரில் மேஜையில் இருந்த பத்திரிக்கையை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

கேபினை விட்டு வெளியே வந்த விக்கி நேராக ஸ்ரீயும் பவனும் பேசிக் கொண்டிருந்த அவர்கள் கேபினுக்குள் செல்ல…

விக்கி தங்கள் கேபினுக்குள் வந்ததும் பேசிக்கொண்டிருந்த இருவரும் விக்கியைப் பார்த்து…

“சார், என்ன வேணும்? நீங்களே எங்களுடைய கேபினுக்கு வந்திருக்கீங்க” என்று பவன் கேட்க…

“முக்கியமான வேலையா வந்தேன்” என்று அவர்களைப் பார்க்காமல், “சங்கவி வருகிறாளா?” என்ன என்று வாசலை பார்த்தபடி அவர்கள் கேபினுக்குள் மறைவாக நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தான் விக்கி.

அவன் தங்களிடம் பேசிவிட்டு வெளியே எதையோ கவனமாகப் பார்ப்பதை நீங்கள் பார்த்த ஸ்ரீயும் பவனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு… அவர்களும் வந்து விக்கியின் பின்னால் அவனைப் போலவே நின்று கொண்டு, ‘விக்கி அப்படி என்ன பார்க்கிறான்?’ என்று வெளியில் பார்த்தார்கள்.

விக்கி ஏன் என்றால் பார்க்கும் திசையை ஸ்ரீ பார்க்க, அங்கே ரியா நின்று இருந்தால்.

ரியாவிற்குத் தெரியாமல் விக்கி தன் கேபினுக்குள் நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ஸ்ரீ. தன் பின்னால் இருந்து வேகமாக ரியாவை மறைத்துக் கொண்டு விக்கியின் முன்னால் வந்து நின்றவன்.

“மாமா, என்ன செய்து கொண்டு இருக்கீங்க… அவ என்னோட ஆளு. தவிர உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா?” என்று ஸ்ரீ கேட்க..

ஸ்ரீ கூறியதைக் கேட்ட பவன், “என்ன ஸ்ரீ சொல்ற? ரியாவும் நீயும் காதலிக்கிறீங்களா (லவ் பண்றீங்களா)?” என்று கேட்டான்.

“இப்போதைக்கு நான் மட்டும்தான் காதலிக்கிறேன் பவன் சார். ரியா இன்னும் என்னைக் காதலிக்கிறாளா இல்லையான்னு எனக்குத் தெரியாது” என்றான் ஸ்ரீ.

வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த விக்கியை ஸ்ரீ மறைத்துக் கொண்டு நின்றிருக்க… அவன் தோளில் கைவைத்து ஸ்ரீயை, “பாதையை மறைக்காதே! தள்ளி நில்லு” என்று சொல்லி அவனைத் தன்னிடம் இருந்து அருகில் தள்ளி நிற்க வைக்க.

திரும்பவும் விக்கி வெளியே பார்க்க, ஸ்ரீ மீண்டும் தவறாக விக்கி, ரியாவை தான் பார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்தவன் மீண்டும் விக்கி முன்பு வந்து நின்ற ஸ்ரீ.

“மாமா… நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கோபமாகக் கேட்டான்.

“அது எல்லாம் நல்லா தெரியும். அவ இந்த பக்கம் வரும் போது நான் அவளைப் பார்க்கிறேன் என்று அவளுக்குத் தெரியக்கூடாது. அதுக்காகத்தான் நான் உன்னோட கேபினுக்கு வந்து மறைந்து நிக்கிறேன்” என்று விக்கி சொல்ல..

“என்ன மாமா சொல்றீங்க? ரியாவை நீங்க பார்க்கிறது அவளுக்குத் தெரிய கூடாதா? ஆமா, நீங்க எதுக்கு அவளை ஒளிந்து நின்னு பாக்குறீங்க?” என்று ஸ்ரீ கேட்க.

“யாருடா இவன்? சுத்த லூசா இருப்பான் போல!” ஏன் என்று விக்கி ஸ்ரீயைப் பார்த்தவன் அவன் தலையில் நங்கென்று கொட்டி விட்டு.

“டேய் லூசு பயலே! நான் இவ்வளவு நேரம் ரியாவைப் பார்த்துட்டு இருந்தேன்னு நினைச்சியா?” என்றவன், “சங்கவி இப்போ வருவா. நான் சங்கவியை என்னோட கேபினுக்கு அனுப்பி வைக்க சொல்லி ரியா கிட்ட சொல்லி இருக்கேன். அவ உள்ளே வந்ததும் ரியா என்ன சொல்லி என்னோட கேபினுக்கு சங்கவியை அனுப்பப் போறான்னு பாக்குறதுக்காக நான் இங்கு நின்னுட்டு இருக்கேன். சங்கவி உள்ளே வர அப்போ என்னை பார்த்துட்டான்னா என்னோட கேபினுக்குப் போக மாட்டா. அதனால்தான் நான் இங்கே நிற்கிறேன்” என்றான்.

“சரி, சங்கவி எதுக்கு உங்க கேபினுக்கு போகணும்?” என்றான் ஸ்ரீ.

“அதெல்லாம் விவரமா அப்புறம் சொல்றேன். நீ கொஞ்ச நேரம் தொந்தரவு (டிஸ்டர்ப்) பண்ணாம இந்த பக்கம் வா” என்று ஸ்ரீயை இழுத்து தன் பின்னால் நிற்க வைத்துவிட்டு விக்கி திரும்ப…

சங்கவி சரியாக அலுவலகத்திற்குள் அப்போதுதான் நுழைந்தாள். அவள் உள்ளே வந்து நேராகத் தன் கேபனுக்குள் செல்லப் போக… அவளைப் பார்த்த ரியா வேகமாக சங்கவியின் முன்பு வந்து நின்று, “மேடம், ஒரு நிமிஷம்” என்றால்.

அவளைக் கண்கள் சுருக்கிப் பார்த்த சங்கவி, “என்ன?” என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.

“விக்கி சார் உங்க கேபின்ல வெயிட் பண்றாரு” என்று ரியா பதட்டத்தில் உளற…

தன் பின்னால் நின்றிருந்த ஸ்ரீயைத் திரும்பிப் பார்த்து அவன் தலையில் கொட்டியவன். “என்னடா, உன் ஆளு இவ்வளவு மக்கு (மக்கா) இருக்கா? அவகிட்ட நான் தெளிவா சொல்லிட்டு வந்தேன்.”

“சங்கவியை என்னோட கேபினில் வெயிட் பண்ணச் சொல்லி… ஆனா இப்ப அவ என்ன சொல்லிக்கிட்டு இருக்கா பாரு” என்றான் கடுப்பாக.

“சும்மா என் ஆளைத் திட்டாதீங்க மாமா. அவ பயந்து போய் இருக்கா” என்று ஸ்ரீ, ரியாவிற்கு ஆதரவுக்கு வர..

இவர்கள் பேசுவதைப் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்த பவன். “இதுவே என்னோட ஆள் மதுவா இருந்துச்சுன்னா சங்கவி மேடம் கிட்ட பயப்படாம விக்கி சார் என்ன சொல்றாரோ அதை கரெக்டா இந்த நேரம் செஞ்சு முடிச்சிருப்பா. இந்த ரியாவுக்கு எப்பவுமே அறிவு கிடையாது. இப்படித்தான் ஏதாவது செஞ்சு சொதப்பிட்டு இருப்பா” என்று அவன் ரியாவை காலை வார…

ஏற்கனவே டென்ஷனில் இருந்த விக்கி திரும்பி பவன்னைப் பார்த்து, “இந்த நேரத்துல உன்னோட ஆளுக்கு நீ ஸ்கோர் பண்றியா?” என்று அவனை முறைக்க…

அவன் திருதிருவென விழித்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டு நிற்க…

சரியாக ரியாவின் கேபினுக்கு மது வந்தாள். கையிலிருந்த கோப்பைப் பக்கத்தைப் (ஃபைல்) பார்த்துக் கொண்டே வந்த மது, அங்கே ரியாவும் சங்கவியும் நின்று இருப்பதைப் பார்த்தவள்.

சங்கவியைப் பார்த்தவள், “ஐயோ இந்த மேடமா?! இவங்க முன்னாடி இப்ப போய் நம்ம நின்னா சம்பந்தமே இல்லாம நம்மள திட்டுவாங்க… பேசாம இப்படியே திரும்பி போயிடலாம்” என்று நினைத்தவள் அப்படியே திரும்பி செல்லப் போக…

அதைப் பார்த்த விக்கி திரும்பி அவனைப் பார்த்து, “என்னவோ இப்பதான் சொன்ன, உன் ஆளு மதுவும் சங்கவியைப் பார்த்து பயப்பட மாட்டேன்னு. இப்போ பாரு, தூரத்திலிருந்து சங்கவியைப் பார்த்ததும் தலை தெறிக்க ஓடுறாளே…” என்று விக்கி பவன்னை வாரினான்.

“ஷ்…. ரெண்டு பேரும் கொஞ்சம் பேசாம இருங்க” என்ற ஸ்ரீ விக்கியிடம், “மாமா, இப்ப என்ன? சங்கவி அக்கா உங்களோட கேபினுக்குள்ள போகணும். அவ்வளவுதானே?” என்று கேட்டான்.

“ஆமாம்” என்று விக்கி தலையாட்ட…

ஸ்ரீ விக்கியைத் தாண்டி விருவிறு என சங்கவியின் முன்பு போய் நின்றான்.

வேகமாகத் தன் முன்பு வந்து நின்ற ஸ்ரீயைப் பார்த்த சங்கவி. அவனைப் பார்த்து, “என்னடா ஸ்ரீ இங்க என்ன பண்ற? உன் ஆளை மீட் பண்ண வந்தியா?” என்று சொல்லித் தன் அருகில் நின்றிருந்த ரியாவே கண்ணைக் காட்டி கேட்க.

ரியாவை ஒரு ஓரப் பார்வை பார்த்த ஸ்ரீ. “நீ சும்மாவே இருக்க மாட்டியா…. இப்ப நான் வந்து உன்கிட்ட அவளைக் காதலிக்கிறேன்னு சொன்னேனா?” என்றவன்.

சங்கவியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நேராக விக்கியின் கேபினுக்குள் தள்ளி கதவைச் சாற்றி வெளியே நின்று கொண்டான்.

இப்படித் திடீரென்று விக்கியின் கேபினுக்குள் தன்னைத் தள்ளி கதவைச் சாற்றிய ஸ்ரீயின் மேல் கோபம் வந்து திரும்பி சங்கவி கதவைத் திறக்கப் போக.. அவன் வெளியே கதவைத் திறக்க விடாமல் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.

கதவை இரண்டு மூன்று முறை எட்டிப் பார்த்துவிட்டு கடுப்பான சங்கவி திரும்பி அறையில் பார்க்க…

இங்கே சங்கவி உள்ளே வந்ததுமே அவளைக் கவனித்த சிவகாமியி தாய் பாசத்தோடு அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

சிவகாமியியை இந்த நேரத்தில் இங்கே எதிர்பார்க்காத சங்கவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘இவர் என்ன இங்கு செய்து கொண்டிருக்கிறார்?’ என்று யோசனையோடு சிவகாமியியைப் பார்த்த சங்கவி. பின்பு இன்று தனக்குப் பிறந்தநாள், அதனால் தன்னை பார்ப்பதற்காக இங்கே வந்திருப்பாரோ என்று யோசனையோடு சிவகாமியியைப் பார்க்க..

சங்கவியைப் பார்த்த சந்தோஷத்தில் வேகமாக அவள் அருகில் வந்தவர் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, “சங்கவி, நல்லா இருக்கியா? எப்படி இருக்க? ஏன் இப்படி துரும்பா இளைச்சிப் போயிட்ட?” என்று அவள் மீது அக்கறையாக சங்கவியை கீழிருந்து மேலாகப் பார்த்து சிவகாமியி கேட்டுக் கொண்டு இருக்க…

வேகமாக சிவகாமியியின் கையைத் தட்டி விட்ட சங்கவி, “நானும் அப்பாவும் வேண்டாம்னு சொல்லிட்டு உங்க பையன் பின்னாடி போன பிறகு நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன? இப்போ எங்க இருந்து இந்த அக்கறை வந்தது?” என்று அவர் முகத்தில் அடித்தது போல சங்கவி பேச..

சங்கவி தன்னைப் பார்த்ததும் ‘அம்மா’ என்று ஆசையோடு கட்டிக் கொள்வாள் என்று எதிர்பார்த்த சிவகாமியிக்கு அவள் இப்படிப் பேசியது சற்று ஏமாற்றம்தான். இருந்தும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாக, “இன்னைக்கு உன்னோட பிறந்தநாள். வழக்கமா போற கோயிலுக்குப் போயிட்டு வந்தியா?” என்று கேட்டவர்.

“உனக்காகத்தான் நான் இன்னைக்குப் பாயசம் செய்தேன்” என்று சொல்லி வேகமாக ஆதிக்காகக் கொண்டு வந்த பாயசத்தை எடுத்து சங்கவியின் முன்பு நீட்டி, “இந்தா குடி” என்று சொல்ல…

சங்கவிக்கு அவள் பிறந்தநாள் அன்று சிவகாமியி செய்யும் சேமியா பாயசம் என்றால் மிகவும் பிடிக்கும். அவள் முகத்திற்கு நேராக சிவகாமியி பாயாசத்தை நீட்ட அதன் வாசம் அவள் நாசியைத் துளைத்தது. அதன் வாசனையை முகர்ந்ததுமே சங்கவிக்கு அந்தப் பாயசத்தை அப்போதே குடிக்க வேண்டும் போல இருந்தது. இருந்தும் தன் பிடிவாதத்தை (வீராப்பை) விட்டுக்கொடுக்கக் கூடாது என்று சிவகாமியியைப் பார்க்காமல் திரும்பி நின்றவள்.

“எனக்கு எதுவும் வேண்டாம். நான் ஏற்கனவே பாயசம் குடிச்சிட்டேன். அதுவும் நீங்க செய்வதை விட ரொம்பச் சுவையான (டேஸ்டான) பாயசம். என்னையும் அப்பாவையும் வேண்டாம் என்று உதறித் தள்ளிட்டுப் போனதும் நான் வருத்தப்பட்டு அழுது வடிந்துட்டு இருப்பேன்னு நினைச்சீங்களா… அதுதான் இல்லை. நானும் அப்பாவும் இப்பதான் நிம்மதியா இருக்கோம்” என்று சங்கவி சொல்ல…

சிவகாமியியின் முகம் அவள் சொன்னதைக் கேட்டு, அவளைப் பார்த்தபோது இருந்த சந்தோசமாக இருந்த முகம் வடிந்து சோகமாக ஆனது. சிவகாமியி எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருக்க…

‘என்ன… நம்ம கோபமா பேசினால் அம்மா எப்பவுமே பதிலுக்கு என் கூட சண்டை போடுவாங்களே. ஆனா இன்னைக்கு எதுவும் பேசாமல் அமைதியா இருக்காங்க’ என்று நினைத்தவாறு சங்கவி திரும்பி சிவகாமியியைப் பார்க்க..

கண்களில் கண்ணீரோடு சங்கவியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் சிவகாமியி.

அவரை அப்படிப் பார்த்ததும் சங்கவிக்கு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. தனக்காக, தன்னைப் பார்ப்பதற்காக இவ்வளவு தூரம், தனக்குப் பிடித்த பாயாசத்தைச் செய்துகொண்டு வந்து தன் முன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிற்கும் தன் தாயைப் பார்த்த சங்கவிக்கு மேலும் அவரைத் திட்டிப் பேசி நோகடிக்க விரும்பவில்லை.

எதுவும் பேசாமல் ஒரு நொடி தன் தாயின் முகத்தைப் பார்த்தவள், அவர் கையில் இருந்த பாயாசத்தை வாங்கி ஒரே மடக்கில் அத்தனையும் குடித்தவள். மீண்டும் அந்தப் பாத்திரத்தை அவர் கையில் வைத்து விட்டு, “இப்போ திருப்தியா?” என்று சொன்னவள் வேறு எதுவும் பேசாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே வர…

அங்கே உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக விக்கி, ஸ்ரீ, பவன் மூவரும் கதவின் ஓரத்தில் காதை வைத்து உள்ளே என்ன நடக்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள். கதவைத் திறந்து சங்கவி வெளியே வந்ததும் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல, எதுவும் தெரியாதது போல திரும்பி நின்று கொள்ள…

‘இது எல்லாம் இவர்களுடைய வேலை தானா?’ என்று நினைத்த சங்கவி. முதுகைக் காட்டிக் கொண்டு தன் முன் நின்றிருந்த விக்கியின் முதுகில் தட்டினாள்.

விக்கி சங்கவி தன் முதுகைத் தட்டியதும் பயத்தில் ஸ்ரீயின் முதுகைத் தட்டி, “டேய், உன் அக்கா உன்னைக் கூப்பிடுறா டா” என்று சொல்ல…

“மாமா, அவ என்னோட அக்கா இல்லை, உங்க தங்கச்சி. உங்க தங்கச்சி உங்களைத்தான் பாசமா கூப்பிடுறாங்க. திரும்புங்க” என்று சொல்லி விக்கியின் தோளைப் பிடித்துத் திருப்பி சங்கவியின் முன்பு நிற்க வைக்க…

“அம்மா இல்லை அவளுக்கு நான் தானே அண்ணன்? நான் எதுக்கு சங்கவிக்கு பயப்படனும்?” என்று சொல்லி நெஞ்ச நிமிர்த்திக் கொண்டு திரும்பி விக்கி நிற்க.

சங்கவி முறைத்துக் கொண்டு விக்கியைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த விக்கிக்கு இருந்த தைரியம் வடிந்துவிட்டது. விக்கி வழிந்து கொண்டு சங்கவியைப் பார்க்க…

அவனைப் பார்த்து முறைத்த சங்கவி, விக்கியின் கேபின் உள்ளே கண்ணை காட்டி, “இது எல்லாம் உன்னோட வேலையா?” என்று கேட்க…

முதலில் “ஆமாம்” என்று தலையாட்டியவன் பின்பு வேகமாக “இல்லை, இல்லை என்னோட பொண்டாட்டி தான்” என்று சொல்ல…

அவனை முறைத்து விட்டு ஸ்ரீயைப் பார்த்தவள், “உனக்கு ஒரு நாளைக்கு இருக்கு” என்று சொல்லிவிட்டுத் தன் கேபினுக்குச் சென்றாள்.

அவள் சென்றதும் அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டு விக்கி, ஸ்ரீயைத் திரும்பி, “ஆனாலும் உனக்கு ரொம்பத் தைரியம் தான். இந்த அடங்காப் பிடாரியை கையைப் பிடிச்சு இழுத்துக் கொண்டு போய் என்னுடைய ரூமுக்குள்ள விட்டு கதவைச் சாத்திட்ட. நான் இதுவே வேறு யாரும் பண்ணி இருந்தா இந்த நேரம் அவங்கள சங்கவி ஒரு வழி பண்ணி இருப்பா” என்று விக்கி சொல்ல.

“ஏய் என்ன மாமா பண்றது? எனக்கும் சங்கவி அக்காவைப் பார்த்தா பயமாத்தான் இருக்கும். ஆனால் என்னால் அவங்க முன்னாடி பயந்து நின்னுட்டு இருப்பதைப் பார்த்த எனக்குக் கஷ்டமா இருக்கு. அதனால்தான் இப்படியே தைரியத்தை வரவழைத்து விட்டு அப்படி செஞ்சிட்டேன்” என்று சொன்னான் ஸ்ரீ.

இவன் ரியாவிற்குப் பாவம் பார்த்து அவளை சங்கவியிடம் இருந்து காப்பாற்றியதாக நினைக்க…

சரியாக ரியாவோ அவன் “சங்கவியிடம் நான் இவளக் காதலிக்கிறேன்னு உன்கிட்ட சொன்னேனா?” என்று சொல்லிய அந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டு ஸ்ரீக்குத் தன் மீது காதல் இல்லை என்று அவனை நினைத்துக் கோபப்பட்டுக் கொண்டிருந்தாள்.

You may also like

2 comments

S.joshna December 5, 2025 - 8:11 pm

Inaki episode super 😍

Reply
S.joshna December 7, 2025 - 7:22 pm

Akka next episode podunga please sis 🥺🫂💋

Reply

Leave a Reply to S.joshna Cancel Reply

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured