Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 215

உன் ரகசிய ரசிகை நான் 215

by Layas Tamil Novel
228 views

215

சங்கவி வடிவு ஒருவனின் மனதை கண்டதைச் சொல்லி கலைத்திருந்தாள். அதன் பலனாக வடிவு துர்காவிடம் சரியாகப் பேசாமல் வீட்டிற்கு கிளம்புவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து வெளியே சென்றனர்.

அவர்கள் செல்வதை கீர்த்திகாவும் விசாலாட்சியும் தடுக்க போக… அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் முருகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார் வடிவு.

தன் தாயின் மீதும் தந்தையின் மீதும் கோபம் கொண்ட கீர்த்திகா, “அத்தை நீங்க அக்காவை பார்த்துக்கோங்க நான் இப்போ வரேன்” என்று சொல்லிவிட்டு வடிவையும் முருகனையும் காண வாசலுக்கு விரைந்தாள்.

துர்காவின் வீட்டை தாண்டி கேட்டிற்கு இருவரும் அதற்குள் வந்துவிட, அவர்கள் அருகில் ஓடி வந்த கீர்த்திகா வடிவின் கையைப் பிடித்து நிறுத்தியவள்…

“அம்மா ஒரு நிமிஷம் நில்லுங்க, ஏன் நீயும் அப்பாவும் திடீரென ஒரு மாதிரி ஆகிட்டீங்க? ஏன் அக்காகிட்ட முகம் கொடுத்து கூட பேசாம உடனே கிளம்பி வந்துட்டீங்க? அவ எவ்வளவு வருத்தப்படுறான்னு தெரியுமா உங்களுக்கு?” என்றாள் கீர்த்திகா.

அவளைப் பார்த்து வடிவு திருப்தியாக சிரித்தவர், “நீ இன்னும் உன் மனசுல துர்காவை உன் சொந்த அக்காவா தான் நினைச்சுக்கிட்டு இருக்க… ஆனா அவளுக்கு இப்போ ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க… அவங்களுக்கு முன்னாடி எல்லாம் நீ ஒண்ணுமே இல்ல. என்னோட அக்கா…. என்னோட அக்கான்னு சொல்லிட்டு இருக்க… ஆனா துர்கா அப்படி உன்னை நினைச்சிருந்தா அவ கூட ஒரே வீட்ல தங்க வச்சு உன்னை பக்கத்துல இருந்து பார்த்திருக்கணும். ஆனா அவ அப்படி செய்யாம தனியா உன்னை இந்த வீட்டை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறாள், அது உனக்கு புரியலையா?” என்று கேட்டார் வடிவு.

“அம்மா எங்களை தனியா போக சொன்னது அக்கா ஒன்னும் கிடையாது, வெங்கடாசலம் மாமா தான் எனக்கு, ராதாவுக்கு, நிலானிக்கு மூணு பேருக்குமே தனித்தனியா வீடு பிரசன்ட் பண்ணி எங்களை அங்க தங்க வச்சிருக்காரு, ஏன் நீங்க அப்படி எடுத்துக்கல?” என்று கேட்டாள் கீர்த்திகா.

“அங்க தான் நீ அவங்களை புரிஞ்சுக்கல… ராதா எப்படியும் இன்னொரு வீட்டுக்கு போக வேண்டியவள், அது பிரச்சனை இல்லை. விக்கியும் அவன் குடும்பம் என்று ஒன்று சேர்ந்துட்டான், அதனால அவனையும் அந்த வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க. மாப்பிள்ளையையும் உன்னையையும் ஏன் அனுப்பணும்? மாப்பிள்ளையும் அவங்களுக்கு இன்னொரு மகன் தானே? அப்படி இருக்க ரெண்டு மகனையும் ஒரே வீட்டில் வைத்து ஒன்றாக பார்த்திருக்கணும். அப்படி இல்லையா ரெண்டு பேரையும் ஒரே மாதிரி தனித்தனியா வெளியே இருக்க விட்டிருக்கணும். இப்படியும் செய்யாம அப்படியும் செய்யாம உன்னையும் மாப்பிள்ளையும் மட்டும் இந்த வீட்டை விட்டு ஒதுக்கி வச்சிட்டு அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச கார்த்திக்கும் துர்காவும் மட்டும் கூட வச்சிருக்கிறது எந்த விதத்துல நியாயம்?

துர்கா என்னோட பொண்ணு தான்னு இத்தனை நாளா நான் நினைச்சுட்டு இருந்தேன். அப்படித்தான் நினைச்சுட்டு இருக்கான்னு நான் தப்பு கணக்கு போட்டுட்டேன். அவளுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வந்ததும் அவளோட புது சொந்தமும் உண்மையான அம்மா அப்பாவும் கிடைச்சதும்… அவளுக்குன்னு ஒரு குடும்பம் தங்கச்சிங்கன்னு இருக்குன்னு தெரிஞ்சதும், அதுவும் இவ்வளவு வசதியான குடும்பத்துல தான் பிறந்திருக்கோம் என்பதை தெரிஞ்சதும் ஏழையான நம்மளை மறந்துட்டா. எங்களுக்கு கூட விடு, நீ அவ மேல எவ்வளவு பாசமா இருக்கேன்னு எல்லாருக்கும் நல்லா தெரியும், அதைவிட துர்காவுக்கு ரொம்ப நல்லா தெரியும். அப்படி இருக்க அவளால எப்படி உன்னை அவகிட்ட இருந்து தள்ளி வைத்து பார்க்க முடியுது?

எத்தனை வருஷமா உன் மேல அன்பும் பாசமும் வச்சிருந்த துர்கா இப்போ எப்படி இப்படி திடீர்னு மாறிட்டான்னு நீ கொஞ்சம் யோசி கீர்த்திகா. இன்னமும் உன்னோட அக்கா பழைய மாதிரி தான் உன் கூட பேசி பழகிட்டு இருக்கான்னு நீ நினைச்சுட்டு இருந்தா அது பெரிய முட்டாள்தனம், அவ கண்டிப்பா மாறிட்டா அவ்வளவுதான் நான் சொல்வேன். இனி உன்னோட விருப்பம்” என்று சொல்லிவிட்டு, “நாங்க கிளம்பறோம். இனியும் இங்கே இருந்து என் மகள் யாரோ விருந்தாளி மாதிரி இந்த வீட்டுக்கு வந்துட்டு போறதை பார்க்க எனக்கு இஷ்டமில்லை” என்று சொல்லிவிட்டு வடிவு முருகனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

தன் அம்மா துர்கா பற்றியும் இந்த வீட்டில் இருப்பவர்களை பற்றியும் இவ்வளவு தூரம் பேசி விட்டு செல்வதை நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டு அப்படியே உறைந்து நின்றிருந்தாள் கீர்த்திகா.

அவர் சொல்வதை நம்பலாமா? வேண்டாமா? அதுவே தன் அம்மா சொன்னது போல துர்கா முன்னைப் போல தன் மீது பாசம் காட்டவில்லையா? அது தன் அக்கா இத்தனை நாள் தன் மீது பாசம் இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தாளா? என்று கீர்த்திகாவின் மனம் யோசிக்க ஆரம்பித்தது.

அதே யோசனையோடு வீட்டுக்குள் கீர்த்திகா வர… அங்கே ஹாலில் விசாலாட்சி உடனும் கனகா உடனும் துர்கா ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். தன் அம்மா அப்பா துர்காவிடம் கோபித்துக் கொண்டு வெளியே செல்லவும் அவர்களை சமாதானப்படுத்த கீர்த்திகா தான் அவர்கள் பின்னால் ஓடினாளே ஒழிய, துர்கா அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தாள். தன் பெற்றோரைப் பற்றி கவலை இல்லாமல் இங்கே அமர்ந்து துர்கா சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு கோபம் வர, நேராக துர்காவிடம் வந்தவள்…

“அக்கா நீ இப்படி மாறுவேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல. அம்மா அப்பா ஏதோ சங்கடப்பட்டு பேசிட்டு வெளியே போறாங்களே அவங்களை வந்து சமாதானம் செய்வோம்னு கொஞ்சமாவது உனக்கு தோணியிருந்தால் இந்த நேரம் நீ என் கூட வெளியே வந்து இருப்ப… இத்தனை வருஷம் உன்னை அன்போடும் பாசத்தோட வளர்த்த நம்ம அம்மா அப்பாவை மறந்துட்டு இன்னைக்கு வந்தவர்களுக்காக அவங்களை உதாசீனப்படுத்திட்ட இல்ல… நீ அவங்களை மட்டும் உதாசீனப்படுத்தல… என்னையும் சேர்த்து தான்” என்று கீர்த்திகா துர்காவிடம் கோபமாக பேசியவள், “நீ இப்படி சுத்தமா மாறிட்டேன்னு நான் கொஞ்சம் கூட கற்பனை பண்ணி பாக்கல” என்றாள் கீர்த்திகா.

கீர்த்திகா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த துர்கா, விசாலாட்சி, கனகா மூவரும் அவள் பேச்சைக் கேட்டு அதிர்ந்தனர். கீர்த்திகாவிடம் வந்த விசாலாட்சி அவள் தோளை தொட்டு, “கீர்த்திகா நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசுறியா… அவ உன்னோட அக்கா அதை நீ மறந்துட்டியா?” என்றார் விசாலாட்சி.

அவள் தோளில் கை வைத்திருந்த விசாலாட்சியின் கையை எடுத்துவிட்ட கீர்த்திகா, “இத்தனை நாளா நான் என்னோட சொந்த அக்காவை தான் துர்காவா நினைச்சுட்டு இருந்தேன், ஆனா அவ என்னை அப்படி நினைக்கலைன்னு இன்னைக்கு தான் எனக்கு நல்லா புரிஞ்சுது. நீங்களும் உங்களோட புடிச்ச மருமகளை தானே தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுறீங்க… நான் என் அக்கா கிட்ட மனசு கோபமா பேசுறதுக்கு காரணம் என்னன்னு என்கிட்ட கேட்கணும்னு உங்களுக்கு தோணவே இல்லைதானே அத்தை? என்னையும் என்னோட குடும்பத்தையும் மதிக்காம போயிட்டீங்க இல்ல? என்னோட அம்மா அப்பா வீட்டை விட்டு வெளியே கோபமா கிளம்பி போறாங்க, அவங்க கிட்ட என்னன்னு கூட கேட்க உங்களுக்கும் தோணலை தானே?” என்றாள் கீர்த்திகா.

“கீர்த்திகா நான் அப்படி எல்லாம் நினைக்கல, நீ தானே அவங்களை சமாதானப்படுத்துறேன்னு போன, சரி நீயே அவங்களை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்துடுவேன்னு தான் நினைச்சேன். வடிவும் அண்ணனும் துர்கா கிட்ட முகம் கொடுத்து பேசாம போயிட்டாங்களேன்னு துர்கா முகம் வாடி போய் உட்கார்ந்து இருந்தா. அவளை நான் சமாதானப்படுத்தி இப்போதுதான் சிரிக்க வச்சேன். அந்த நேரம் பார்த்து தான் நீ உள்ளே வந்த… அதை பாத்துட்டு தான் நீ தப்பா புரிஞ்சுட்டேன்னு நினைக்கிறேன்” என்றார் விசாலாட்சி.

“நல்லா சமாளிக்கிறீங்க அத்தை” என்று அவரைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்த கீர்த்திகா, “இப்ப கூட பாருங்க நான் இவ்வளவு பேசுறேனே, என் அக்கா மனசுல என்ன இருக்குன்னு ஒரு வார்த்தை வாயை திறந்து எதுவும் என்கிட்ட பேசல பாருங்க, எப்படி கற்சிலை மாதிரி உட்கார்ந்திருக்கா” என்று தன் முன்னால் கீர்த்திகா பேசுவதை எல்லாம் நம்ப முடியாமல் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த துர்காவை காட்டி கேட்டாள் கீர்த்திகா.

கீர்த்திகா தன்னைப் பார்த்து இப்படி கேட்டதும் அதிர்ந்த துர்கா, சோபாவில் இருந்து வேகமாக எழுந்தவள் அவளிடம் வந்து, “ஏய் கீர்த்து…. என்னடி பேசிட்டு இருக்க? நீ சொல்ற மாதிரி எல்லாம் எதுவுமே இல்லை. நீ தான் என்னை தப்பா புரிஞ்சுக்கிட்ட, நான் உன்னையும் அம்மாவையும் எல்லாம் தள்ளி வைத்து பார்க்கல” என்று துர்கா தன்னிலை விளக்கம் கொடுக்க…

“போதும் அக்கா, நீ நடிச்சது எல்லாம்! இனிமேலும் நீ சொல்றது எல்லாம் நான் நம்பிட்டு இருக்க போறதில்லை. உனக்கு கிடைச்ச புது உறவையும் குடும்பத்தையும் வச்சிட்டு நீயே சந்தோஷமா இரு, நாங்க எக்கேடு கெட்டுப் போனால் உனக்கு என்ன வந்துச்சு?” என்றவள், தன் அருகில் கீர்த்திகா பேசுவதை எல்லாம் நம்ப முடியாமல் கேட்டுக்கொண்டிருந்த விசாலாட்சியை பார்த்து, “உங்களுக்கு எப்பவுமே உங்க மூத்த மகனை தானே ரொம்ப பிடிக்கும், என் வீட்டுக்காரர்னாலே உங்களுக்கு இளக்காரம் தான்” என்றாள்.

அப்போதுதான் கார்த்திக்குடன் பேசிக் கொண்டே அவன் அறையில் இருந்து கார்த்திக்கும் கதிரும் கீழே இறங்கி வர… இங்கே கீர்த்திகா துர்காவுடனும் தன் தாயுடனும் கோபமாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்த கதிர், “இவளுக்கு என்ன ஆச்சு துர்காவுடனும் தன் அம்மாவிடமும் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாள்” என்று யோசனையோடு அவசரமாக அவளிடம் வர… தன் தாயை மதிக்காமல் கீர்த்திகா பேசுவதை பார்த்த கதிருக்கு கோபம் வர, அவளை பளார் என அறைந்து விட்டான்.

கதிர் கீர்த்திகாவை கைநீட்டி அடித்ததும், தன் தங்கையை கை நீட்டி கதிர் அடித்து விட்டானே என்ற கோபத்தில் துர்கா கதிரை பார்த்து, “நீ என்ன காரியம் பண்ணி இருக்கீங்க உனக்கு புரியுதா? எப்படி நீ என் தங்கச்சியை கைநீட்டி அடிக்கலாம்?” என்று துர்கா அவனிடம் சண்டைக்குச் செல்ல… “இல்ல துர்கா… அவ உன்னையும் அம்மாவையும் மரியாதை இல்லாம பேசிக்கிட்டு இருந்தா அது தான்” என்று கதிர் துர்காவிடம் பேச… “அது எங்களோட பிரச்சனை நாங்க பேசி சரி பண்ணிக்குவோம், நீ எதுக்கு இப்போ தேவையில்லாம அவளை அடிச்ச?” என்று துர்கா விடாமல் கதிரிடம் சண்டைக்கு சென்றாள்.

துர்கா தனக்காக தான் கதிரிடம் பரிந்து பேசுகிறாள் என்பதை உணராத கீர்த்திகா, அவள் இத்தனை பேர் முன்பு தன்னிடம் பாசமாக இருப்பது போல நடிக்கிறாள் என்று கீர்த்திகா நினைத்தாள். தன்னை முதன்முறையாக கைநீட்டி அறைந்த கதிரை பார்த்து அதிர்ந்து நின்று இருந்த கீர்த்திகா அவனிடம் வந்து, “உனக்காகத்தான் நான் இங்கே உயிரை கொடுத்து பேசிக்கிட்டு இருக்கேன். அது தெரியாம நீ என்னை கைநீட்டி அடிச்சுட்ட இல்ல?” என்று கண்களில் கண்ணீரோடு கீர்த்திகா கதிரை பார்க்க…

தன் மனைவியை அடித்து விட்ட வருத்தத்தில் அவள் முன்பு நின்றிருந்த கதிர், அவள் பேசியதை கேட்டு, “ஏ கீர்த்திகா நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசிக்கிட்டு இருக்கியா? ஏன் இப்போ தேவை இல்லாம துர்கா கிட்டயும் என் அம்மாகிட்டயும் இப்படி சண்டை போட்டுட்டு இருக்க?” என்றான்.

“நான் சரி நான் தேவையில்லாமையே இவங்க கூட சண்டை போடறேன்னு வச்சுக்கோ, கார்த்திக் மாமா மாதிரி தானே நீயும் அவங்களுக்கு மகன் தான? ஆனா அவரை மட்டும் அவங்களோட வச்சு பாத்துட்டு உன்னை மட்டும் ஏன் இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள்?” என்று கேட்டாள் கீர்த்திகா.

“இது என்னடி பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கு… நான் வேணும்னே என்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பவில்லையே…” என்று கதிர் கூற…

“அப்படின்னு நீ தான் நினைச்சுட்டு இருக்க… ஆனா உண்மை அது இல்ல, அவங்களுக்கு மிகவும் பிடித்த மகனை கூடயே வச்சுக்கிட்டு உன்னை இந்த வீட்டை விட்டு இந்த சொத்து எல்லாம் பிரிச்சு கொடுத்து தனியா அனுப்பிட்டாங்க. அப்படின்னா என்ன அர்த்தம்? இந்த வீட்டுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவங்களுக்கு எல்லாமே கார்த்திக் மாமா தான்னு புரிஞ்சிருச்சு” என்றாள் கீர்த்திகா.

“ஏ கீர்த்திகா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல” என்று கதிர் அவளை சமாதானம் செய்ய முயல…

“ப்ளீஸ் கதிர், என்ன சமாதானம் செய்கிறேன்னு உன்னை இந்த வீட்டில எப்படி நடத்துறாங்க என்பதை புரிஞ்சுக்காம விட்டுடாத. உன் அண்ணனுக்கு இந்த வீட்ல என்ன மதிப்பு இருக்கோ அதே மதிப்பு தான் உனக்கும் இங்கே இருக்கு. அவரை மட்டும் தலையில் தூக்கி வைத்து விட்டு ஆடுவதும் உன்னை ஒரு வேலைக்காரன் போல நடத்துவதும் எனக்கு பிடிக்கல. நான் அவரைப் போலவே எப்போ உனக்கு இந்த வீட்ல உரிமை இருக்கோ அப்போதான் நான் இந்த வீட்ல திரும்ப கால் எடுத்து வைப்பேன். அதுவரைக்கும் நான் இங்கே வர மாட்டேன். நீயும் இங்கே வரக்கூடாது” என்று சொல்லிவிட்டு அவன் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக தன்னுடன் இழுத்துச் சென்றாள் கீர்த்திகா.

தன்னையும் தங்கள் வீட்டையும் விட்டு கீர்த்திகா கதிரை பிடித்து செல்வதை பார்த்த விசாலாட்சியால் அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல், கீர்த்திகாவை சமாதானம் செய்ய அவள் பின்னால் செல்ல…

“அத்தை தயவு செய்து எங்களை தடுக்காதீங்க… இனிமேல் உங்களுக்கு ஒரு மகன் தான், என்னையும் என் புருஷனையும் மறந்திடுங்க… எப்போ உங்களுக்கு கார்த்திக் மாமா மாதிரியே உன்னோட கதிரும் ஒசத்தின்னு தோணுதோ அப்போ சொல்லுங்க, நானும் கதிரும் இங்கே இருப்போம். அதுவரைக்கும் எங்களை கூப்பிடாதீங்க” என்று சொல்லிக் கொண்டு அவரை திரும்பியும் பார்க்காமல் கீர்த்திகா அந்த வீட்டை விட்டு வெளியே சென்றாள்.

அவளை சமாதானம் செய்ய கனகா, துரை என கீர்த்திகாவின் பின்னாலும் கதிரின் பின்னாலும் கெஞ்சிக் கொண்டு அவர்கள் செல்ல, அவர்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு டிரைவரை காரை எடுக்கச் சொல்லி அங்கிருந்து கிளம்பினாள் கீர்த்திகா.

இங்கே நடந்ததை எல்லாம் பார்த்து நம்ப முடியாமல் கார்த்திக் நின்று இருக்க… அவனைவிட அதிர்ச்சியில் உறைந்து போய் துர்கா கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தாள். கார்த்திக் வேறு கதிர் வேறு என்று இத்தனை நாள் விசாலாட்சி ஒருமுறை கூட நினைத்தது இல்லை. ஆனால் கீர்த்திகா இன்று இப்படி சொல்லிவிட்டு போனதை கேட்டதிலிருந்து விசாலாட்சியின் மனம் பாடாய்ப்பட்டது.

தன் மகனை இந்த வீட்டிற்கு கீர்த்திகா அழைத்து வர மாட்டாளா? தன் மகனை தங்களிடம் இருந்து மொத்தமாக கீர்த்திகா பிரிந்து போய்விட்டாளா? என்ற பரிதவிப்பிலேயே இங்கு நடந்ததெல்லாம் ஒரு கனவாக இருந்துவிடக் கூடாதா… நான் இப்போது என்ன செய்வேன் என்று விசாலாட்சி அழுது புலம்ப… அவர் இப்படி மிகவும் உணர்ந்து போய் அழுவதை பார்க்க முடியாமல் துர்கா விசாலாட்சியை சமாதானம் செய்ய அவரிடம் வர…. திடீரென தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி அப்படியே தரையில் சரிந்தார் விசாலாட்சி.

நீண்ட நேரம் இங்கே நடந்த கலைபரங்களை எல்லாம் தன் அருகில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சங்கவிக்கு, “அப்பாடா இன்னைக்கு தான் நான் போட்ட பிளான் கரெக்டா வேலை செய்திருக்கு. ஆனால் நானே எதிர்பார்க்காதது என்னன்னா இந்த விசாலாட்சி நெஞ்சைப் பிடிச்சிட்டு கீழ விழுந்துட்டா… அவ ஒரேடியா மண்டையை போட்டுட்டா நல்லாத்தான் இருக்கும்” என்று நினைத்து சிரித்தபடியே தன் அறைக் கதவை சாத்திவிட்டு உள்ளே சந்தோசமாக சென்றாள் சங்கவி.

You may also like

1 comment

S.joshna December 17, 2025 - 9:22 pm

Ayoo intha sangavi ethuku ipdi panra akka enaku oru doubt karthik na athiya name mathitingala🤔

Reply

Leave a Reply to S.joshna Cancel Reply

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured