EPI 227
காலை 8 மணியை போல போதி படுக்கையில் இருந்து கண்விழித்தவன் எழுந்ததும் தன் அருகில் மாதவியை தேடினான். தன் ஆசை மனைவியுடன் முதலிரவு கொண்டாடியதை நினைத்துக் கொண்டு படுக்கையில் தன் அருகில் அவளைத் தேட… ஆனால் மாதவி படுக்கையில் இல்லை. “அதுக்குள்ள எழுந்து எங்க போனா இவ?” என்றபடி எழுந்து குளிக்க போதி செல்ல போக…
சரியாக அப்போதுதான் குளித்துவிட்டு பாத்ரூம் கதவை திறந்து கொண்டு, தலையில் ஈரத் துண்டைச் சுற்றிக்கொண்டு, இன்ஸ்கட்டும் பிளவுசும் போட்டு அதன் மேலே புடவையைச் சுற்றியபடி அழகாக குட்டி தேவதையாக அவன் முயல் குட்டி வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் போதியின் கால்கள் தானாக மாதவியை நோக்கிச் சென்றன.
போதி தன்னருகில் வரவும் அவனைப் பார்த்த மாதவி “எழுந்துட்டீங்களா? போங்க போய் குளிச்சிட்டு வாங்க, நான் ரெடி ஆகிட்டு கீழே போறேன்” என்றபடி ட்ரெஸ்ஸிங் ரூமை நோக்கி அவனைத் தாண்டிச் செல்லப் போக…. தன் முயல் குட்டியை ரசித்தவாறு அவளிடம் நெருங்கி வந்த போதி, மாதவியை எட்டிப் பிடித்து அவள் இடையில் கை கொடுத்து தன்னிடம் இழுத்து, அவளைத் தன்னோடு சேர்த்துப் பின்னால் இருந்து அணைத்து நிறுத்திக் கொண்டான்.
“என்ன போதி இது? விடுங்க என்னை” என்று சிணுங்கிக் கொண்டே அவன் கைக்குள் இருந்து விடுபட மாதவி முயற்சிக்க… “என்ன முயலு நீ? நான் எவ்வளவு ஆசையா என் பொண்டாட்டியை கட்டிப்பிடிக்குறேன். ஆனா நீ என்னவோ இப்படி என்னை விடச் சொல்லி ரகளை பண்றியே போ…” என்று அவள் இடையில் இருந்த கையை எடுக்க…
போதி கோபத்தில் கையை எடுக்கவும், அவன் கையை சட்டெனப் பிடித்து மாதவி அவனைத் தன்னோடு இழுத்துத் திரும்பி, அவன் கழுத்தில் தன் கையை மாலையாகப் போட்டு கட்டிக்கொண்டு நின்றாள். “என்னடா செல்லம் கோவிச்சுட்டியா?” என்றாள். போதியோ மாதவி பேசுவதைக் கண்டு கொள்ளாமல் முறுக்கிக் கொண்டு நின்றான்.
அவன் இப்படி சிறுபிள்ளை போல கோபித்துக் கொள்வதைப் பார்க்க மாதவி சிரித்துக் கொண்டே போதியின் தாடையைப் பிடித்துத் தன்னை பார்க்குமாறு அவன் முகத்தைத் திருப்பினாள். போதியின் நெற்றியில் முட்டி “டேய் செல்லக்குட்டி, கல்யாணமான முதல் நாளே நான் லேட்டா எழுந்து கீழே போனா பாட்டியும் அத்தையும் என்னை பற்றி என்ன நினைப்பாங்க?” என்றாள்.
“யார் என்ன நினைச்சா எனக்கு என்ன? அந்த மாதிரி எல்லாம் எங்க அம்மாவும் பாட்டியும் கிடையாது. நீ போய் தான் கீழ எல்லாம் வேலை செய்யணும்னு எந்த அவசியமும் இல்லையே, நீ என் கூட இருக்கலாமே” என்றான் போதி.
“இங்கே வேலை செய்வதற்கு ஆட்கள் நிறைய இருக்காங்கிறதுக்காக நான் நேரமே எழுந்து கீழே போகாம என் புருஷனை கொஞ்சிக்கிட்டே ரூமுக்குள்ளே இருக்கணுமா என்ன?” என்று போதியின் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டு கேட்டாள். “ஏன் என்னை கொஞ்ச நேரம் கொஞ்சினால் என்ன நீ குறைந்தா போயிடுவ…” என்றான் போதி.
“நான் என்ன என் புருஷனை கொஞ்ச மாட்டேன்னு சொன்னேன்?” என்று வெட்கப்பட்டவள் தலையைக் கீழே குனிந்து கொண்டு, “நேத்து நைட்டு முழுக்க உங்களை கொஞ்சிக்கிட்டே தானே இருந்தேன்” என்று சொல்லித் தன் முகத்தை வெட்கத்தில் மூடிக்கொள்ள… “நைட் மட்டும் கொஞ்சினா போதுமா?” என்று சொல்லி போதி சிரிக்க…
“பின்ன… பகல் பூரா உங்களை இந்த ரூம்ல வச்சு கொஞ்சிக் கொண்டே இருக்கணுமா?” என்று கேட்டாள். “ஏன் பகல் மட்டும் இல்ல, காலம் முழுக்க இப்படியே நீ என்னை கொஞ்சிக்கிட்டு இருந்தாலும் சந்தோசம்தான்” என்றான் போதி.
போதியைச் செல்லமாக முறைத்த மாதவி “அப்போ எங்கேயும் போகாம இந்த ரூமுக்குள்ளேயே இருக்கணும்னு சொல்றீங்களா?” என்றாள். “ஆமாம், ஏன் அப்படி இருந்தா உனக்கு என்ன பிரச்சனை?” என்றான் போதி. “ம்ம்ம்… ஆசைதான்” என்று அவன் இடையில் நறுக்கென்று கிள்ளி வைத்துவிட்டு அவனைப் பின்னால் தள்ளிவிட்டு ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் மாதவி.
தடுமாறித் தன்னை சமாளித்துக் கொண்டு நின்றவன், ட்ரெஸ்ஸிங் ரூமைப் பார்த்து “ஏய் முயலு…. எப்படியும் நீ என் கையில சிக்காமையா போயிடுவ…. அப்ப வச்சுக்கிறேன் உன்னை” என்று போதி கூற… “ஆஹா….. அதையும் தான் பார்க்கிறேன். முதல்ல போய் குளிங்க” என்று உள்ளிருந்து சத்தமாகப் பேசினாள் மாதவி. போதியும் மாதவியை நினைத்துச் சிரித்தவாறு குளிக்கச் சென்றான்.
❤️
வெளியே விக்கி தங்களுக்கு முதலில் தான் அப்பாவான விஷயத்தைக் கூறாமல், ஆபீஸில் வேலை செய்பவர்களுக்கு ஸ்வீட் வழங்கிக் கொண்டிருக்க… அவனைத் தனியாக அழைத்துக் கேட்டுக் கொள்ளலாம் என்று ஆதியும், கதிரும் அவரவர் அறைக்குச் சென்றனர்.
கதிருடன் பேசிவிட்டுத் தன் கேபின் கதவைத் திறந்து கொண்டு ஆதி உள்ளே வர, அப்போது அவன் பாக்கெட்டில் இருந்த போன் அடித்தது. லேப்டாப் பேகையும் சாவியையும் மேஜை மேல் வைத்துவிட்டுத் தன் போனைப் பார்க்க… அதன் திரையில் ‘சங்கவி’ என்று பெயர் வந்ததும் ஆதியின் முகம் சுருங்கிவிட்டது.
அவள் திருந்துவதாகச் சொல்லித் தங்கள் வீட்டில் இருந்தாலும், அவள் நடவடிக்கையில் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த ஆதி, அவளிடம் இங்கு வந்ததிலிருந்து சரியாகவே பேசிக் கொள்வதில்லை. சங்கவியின் பெயரைப் பார்த்ததுமே கடுப்பான ஆதி, “இவள் எதற்காக எனக்கு கால் செய்திருக்கிறாள்?” என்று யோசித்தபடியே போனை அட்டென்ட் செய்தான்.
“ஹலோ” என்று அவன் சொன்னதும், பதிலுக்கு சங்கவியும் “ஹலோ” என்றாள். அவள் குரலைக் கேட்டவனுக்குக் கடுப்பாகி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். “என்ன ஆதி, என் குரல் கேட்டதும் கடுப்பாகி இருக்குமே?” என்று சொல்லிச் சிரித்தாள் சங்கவி.
“அதான் தெரியுது இல்ல, இப்போ எதுக்கு எனக்கு தேவையில்லாம நீ கால் பண்ணி இருக்க?” என்றான் எரிச்சலாக. “ஒன்னும் இல்ல ஆதி, உன் அப்பா தான் உன்கிட்ட பேசணும்னு சொன்னாரு. கொஞ்சம் இரு, போனை அவர்கிட்ட கொடுக்குறேன்” என்று சொல்ல…
“சங்கவியின் போனில் இருந்து அப்பா பேசுகிறாரா? ஏன் அப்பாவோட போன் என்ன ஆச்சு?” என்று யோசனையிலேயே ஆதி போனை காதில் வைத்துக் கொண்டு இருக்க… அதற்குள் சங்கவி போனை வெங்கடாசலத்திடம் கொடுத்துவிட்டாள். போனை வாங்கி “கார்த்திகேயன்… ஆதி, நீ முதல்ல சீக்கிரமா வீட்டுக்கு கிளம்பி வா” என்றார் வெங்கடாசலம்.
“அதெல்லாம் இருக்கட்டும் பா, என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா? நீங்க ஏன் இவளோட போன்ல இருந்து எனக்கு கால் பண்ணி இருக்கீங்க? என்னப்பா ஆச்சு?” என்று பதட்டமாகக் கேட்டான் ஆதி.
மறுமுனையில் இருந்தவர் ஏதோ குழப்பத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தவன் “சரி நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே வந்து விடுவேன்” என்று சொல்ல… சட்டென இடைமறித்த வேதாச்சலம் “நீ வரும் பொழுது உன்னுடன் கதிரையும் விக்கியையும் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வா” என்றார்.
“அப்பா அவங்களையும் கூட அழைச்சிட்டு வரணுமா? ஏனப்பா எதுவும் முக்கியமான விஷயமா?” என்று ஆதி கேட்க… “அதெல்லாம் நான் நேர்ல விபரமா சொல்றேன், நீ முதல்ல அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு கிளம்பி வா” என்று சொல்லி போனை வைத்தார்.
பிறகு ஆதி போனை கட் செய்து விட்டுத் தன் சாவியையும் லேப்டாப்பையும் எடுத்துக் கொண்டு வெளியே செல்லப் போக… சரியாக அப்போது விக்கியின் கையைத் திருகி அவனது முதுகுக்குப் பின்னால் மடக்கிப் பிடித்தபடி உள்ளே அழைத்து வந்தான் கதிர்.
அவர்களைப் பார்த்த ஆதி அமைதியாகப் பார்க்க… அப்போது விக்கியைத் தள்ளிக் கொண்டு வந்த கதிர், ஆதியின் முன்னால் நிற்க வைத்துவிட்டு “அண்ணா, இவனா வந்து நம்மகிட்ட இவன் அப்பாவாக போற விஷயத்தைச் சொல்லுவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை” என்றான்.
விக்கி “டேய் நான் ஒன்னும் வேணும்னே உங்க கிட்ட சொல்லக்கூடாதுன்னு நினைக்கல. ஆனா அதுக்குள்ள என் பொண்டாட்டியோட அக்கா, அதான் நம்ம ஆபீஸ்ல வேலை செய்யுற துர்கா, வந்து ஆபீஸ் முழுக்க நிலானி கர்ப்பமாய் இருக்கிற விஷயத்தை தண்டோரா போட்டு ஸ்வீட் கொடுத்துட்டு இருந்தா. அதனால மது கையில் இருந்து ஸ்வீட் வாங்கி நானே எல்லாருக்கும் கொடுக்க வேண்டியதா போயிடுச்சு” என்றான்.
விக்கியும் கதிரும் ஆதியிடம் பேசிக் கொண்டிருக்க… இவர்கள் பேசுவது எதுவும் கவனத்தில் கொள்ளும் நிலையில் ஆதி இப்போது இல்லை. ஆதி அமைதியாக இருப்பதைப் பார்த்து அவன் ஏதோ சரியான மனநிலையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டனர்.
முதலில் கதிர் “அண்ணா ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று கேட்டான். விக்கி “டேய் மச்சான், நான் உன்கிட்ட அப்பா ஆனது பத்தி ஃபர்ஸ்ட் சொல்லலன்னு கோபத்துல இருக்கியா?” என்று கேட்டான். விக்கி சொன்னதைக் கேட்டுத் திரும்பிய ஆதி, “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. சரி முதல்ல நீங்க ரெண்டு பேரும் கிளம்பி என் கூட வாங்க, மற்றதை எல்லாம் போற வழியில சொல்றேன்” என்று சொல்லிக்கொண்டே தன் காருக்கு விரைந்தான் ஆதி.
“ஆபீஸிற்கு வரும்போது நன்றாகத்தானே இருந்தான், அதற்குள் இவனுக்கு என்ன ஆனது? ஏன் இப்போதே வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்கிறான்?” என யோசனையில் இருந்த கதிர், விக்கியைப் பார்த்து “சரி வா மச்சான் போலாம், என்னன்னு போய் பார்த்தா தானே தெரியும்” என்று அவனை இழுத்தபடி ஆதி முன்னே செல்ல, அவன் பின்னால் கதிரும் விக்கியும் சென்றனர்.
