Home Uncategorizedஎன் பொண்டாட்டி நீ தான்டி! 4

என் பொண்டாட்டி நீ தான்டி! 4

by Layas Tamil Novel
599 views

EPISODE 4

அன்று போலவே இன்றும் ராஜன் தலைகவிழ்ந்தபடி நின்று இருக்க… இதழ்யா அழுத விழிகளாக செய்வதரியாது நின்று இருந்தாள்.

தேன்மொழி உச்ச படர்ச்சி கோபத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருந்தார்.

“எவ்ளோ தைரியம் இருந்தா இவரு கூட சேர்ந்து இவர் பேச்சை கேட்டுட்டு இப்படி ஒரு காரியத்தை நீ பண்ணி இருப்ப.. அதுவும் நான் ஊர்ல இல்லாத நேரம் பார்த்து இந்த மாதிரி காரியத்தை செய்ய உங்க ரெண்டு பெருகும் எப்படி தைரியம் வந்துச்சு ” என்று ராஜனையும் , சதாசிவத்தையும் முறைத்தார்.

தேன்மொழியின் அண்ணன்கள் அவரை காட்டிலும் அதிக கோபத்தில் இருந்தனர். 

“ஏன் மாப்பிள்ளை இப்படி ஒரு காரியத்தை நீங்க பண்ணுவிங்கன்னு நாங்க யாரும் எதிர்பார்க்கவே இல்லை . எப்படி உங்களுக்கு இப்படி ஒரு தைரியம் வந்துச்சு . மணமேடை வரைக்கும் போன பொண்ணை தூக்கிட்டு வந்து இப்படி ஒரு காரியத்தை பண்ணி வெச்சுட்டீங்க . ஏன் தங்கச்சியை பத்தி கொஞ்சமாச்சும் நினைச்சு பாத்திருப்பீங்களா ? ” என்று மூவரும் மாற்றி மாற்றி சதாசிவத்தை கேள்வியால் துளைத்தெடுக்க…

“அட இப்போ என்ன அங்கிருச்சுன்னு அண்ணனை ஆளாளுக்கு கேள்வி கேட்டு நிக்க வெச்சிருக்கீங்க. அவர் எந்த தப்பும் பண்ணல.. நான் தான்…” என்று ராஜன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தேன்மொழியின் அண்ணன்கள் பாலு , கந்தன் , தண்டாயுதபாணி மூவரின் முன்பு வந்து பேச…

“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் அண்ணன்க முன்னாடி நெஞ்சை நிமிர்த்திட்டு பேச வந்திருப்ப… பண்றதை எல்லாம் பண்ணிட்டு இப்படி குரலை ஒசத்தி பேசினா நீ செஞ்சது சரின்னு ஆகிடுமா ? ” என்று ராஜனின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தார் தேன்மொழி.

“தேனு!! இப்போ எதுக்கு அவனை அடிக்குற… அவனுக்கு கட்டி தரமாட்டேன்னு பிடிவாதமா அந்த பொண்ணோட வீட்ல வேற ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க பார்த்தாங்க. அதனால அந்த பொண்ணை தூக்கிட்டு வந்துட்டான்” .

“சரி நானும் இனி இந்த பிரச்னையை இப்படியே வளர்த்திடு இருக்க கூடாதுனு அவங்க வீட்டு ஆளுங்க வந்து இந்த பொண்ணை அவன்கிட்டே இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிடக்கூடாதுனு நம்ம சாமி ரூம்ல அம்மன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து அவன் கிட்டே கொடுத்து அந்த பொண்ணு கழுத்துல கட்ட சொன்னேன். அதை நீயும் தானே பார்த்த… நீயம் உன் அண்ணன்களும் உள்ளே வரும்போது தானே அவன் தாலி கட்டினான்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்தவர்களை பார்த்தார்.

“அதனால தான் எங்க தங்கச்சிக்கு கோபமே.. என்ன தான் ராஜன் என் தங்கச்சியை அண்ணின்னு கூப்பிட்டாலும் , அவ அவனை சொந்த தம்பி மாதிரி இல்ல பாக்குறா அவ கிட்டே கூட சொல்லாம இப்படி இவனுக்கு கல்யாணம் செய்துவெச்சுட்டீங்கன்னு தான் தேனுக்கு கோபமே ” என்றார் பாலு .

“சரி விடுங்க … அந்த நேரத்துல என்ன பண்றது தெரியாம அவசரத்துல தாலி கட்ட சொல்லிட்டேன் . இப்போ என்ன அவனுக்கு எப்படியோ ஒரு வழியா கல்யாணம் செய்திட்டான் . அதை நினைச்சு சந்தோசப்படுவியா அதை விட்டுட்டு இப்படி தைய்யா தக்கான்னு குதிச்சிட்டு இருக்க… ” என்றவர் .

” டேய் என்ன டா நான் பேசிட்டு இருக்கேன் நீ அமைதியா நின்னுட்டு இருக்க… உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வந்து உன் அண்ணி கழுத்துல விழுந்து ஆசிர்வாதம் வாங்கு டா ” என்று ராஜனை பார்த்து கூற..

அவனோ சதாசிவத்தை பார்த்து “என்ன அண்ணா இதெல்லாம் ” என்பது போல ஜாடையாக கேட்டான்.

“டேய் நான் என்ன டா பண்ணுவேன் . உன் அண்ணி திடீர்னு ஊர்ல இருந்து சொல்லாம கொள்ளாம அவ அண்ணன்களோட வருவான்னு நான் என்ன கண்டேன்.  சும்மா சும்மா எதாவது கரணம் சொல்லி அந்த குட்டியை அனுப்பறதும், அப்பறோம் தூக்கிட்டு வறதும்னு விளையாடவா முடியும் . அதான் அவளை இங்க என் கண்ணுமுன்னாடியே வெச்சுக்கணும்னு தான் அவ கழுத்துல உன்னை தாலி கட்ட சொன்னேன் . வேற வழி இல்லை டா .. கொஞ்ச நாள் சமாளிக்கலாம் ” என்று அவனிடம் ரகசியம் பேச..

“பண்றதெல்லாம் பண்ணியாச்சு இன்னும் என்ன அவகிட்டே ரகசியம் பேசிட்டு இருக்கீங்க ” என்ற தேன்மொழி  நகருங்க என்று அவர்கள் இருவருக்கும் குறுக்கே புகுந்து இதழ்யாவிடம் சென்றவர் .

“இங்க பாரு மா இப்படி உங்க கல்யாணம் உன் வீட்டு ஆளுங்க இல்லாம நடந்திருச்சுனு வருத்தப்படாத… சீக்கிரமே எல்லாரையும் கூப்டு நீங்க கல்யாணம் செய்துக்கிட்டதை விமர்சையா கொண்டாடிலாம் சரியா . நீ எதுக்கும் கவலைப்படாத… நான் இருக்கேன் உனக்கு  சரியா ?” என்று இதழிடம் ஆதரவாக பேசினார் தேன்மொழி.

என்ன தான் தேன்மொழி சமாதானம் செய்தாலும் தன் நிலையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள் . அவள் கழுத்தில் தாலி கட்டிய ராஜன் அவளை ஏன் கடத்தி வந்தான் . எதற்காக தன்னை மிரட்டி தன் கழுத்தில் தாலி கட்டினான் என்று அவளுக்கு எதுவும் புரியவில்லை .

தன் வாழ்க்கை இப்படி ஒரு ரௌடி கையில் மாட்டிக்கொண்டதே என்று நினைத்து தன் நிலையை நினைத்து தானே நொந்து கொண்டாள். அவள் அழுகை மேலும் அதிகமானது அவள் அழுவதை பார்த்து தேன்மொழிக்கு கஷ்டமாக இருக்க…

“ராஜன்… போய் வண்டியை எடு ” என்றார் .

“அண்ணி எங்க?” என்றான்.

“என்ன டா எங்கன்னு கேக்குற …” என்றவர்  இதழ்யாவிடம் வந்து அவள் தோளில் போட்டு தன்னோடு இழுத்து சேர்த்து நிறுத்தியவர் .

“உன் பொண்டாட்டியை பார்த்தே இல்ல எப்படி அழுகுறான்னு . என்ன தான் அவளுக்கு உன்னை பிடிச்சிருந்தாலும் . அவங்க வீட்டு ஆளுங்க இல்லாம கல்யாணம் நடந்ததை நினைச்சு அவளுக்கு வருத்தமா இருக்கும் இல்ல… அதான் உன்னையும் , அவளையும் கூட்டிட்டு அவங்க வீட்டுக்கு போய் அவங்ககிட்டே மன்னிப்பு கேட்கலாம். எப்படி இருந்தாலும் அவங்களுக்கு உன் மேலையும், உன்  பொண்டாட்டி மேலையும் கோபம் இருக்கும்ல அதான் அவங்களை பார்த்து பேசி சமாதானம் செய்துட்டு வரலாம் வா ” என்று இதழ்யாவை அழைத்துக்கொண்டு போக…

ராஜன் என்ன செய்வது என்று தெரியாமல் சதாசிவத்தை பார்க்க… அவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் ராஜனை பார்த்து எதையாவது சொல்லி சமாளி டா… என்றார்.

” தேனு என்ன ம்மா நீ புரியாத புள்ளையா இருக்க… அவங்களே இப்படி ஒரு காரியத்தை அவங்க பொண்ணு பண்ணிருச்சுனு  கோபத்தில இருப்பாங்க . இப்போ  அவங்க முன்னாடி இவங்களை கூட்டிட்டு போய் நிப்பாட்டினா கோபத்துல அவங்க இவங்க ரெண்டு பேரையும் ஏதாவது செய்துட்டா என்ன செய்றது . இப்போதைக்கு நீ எங்கையும் போக வேணாம் . கொஞ்ச நாள் போகட்டும் இவங்க ஒரு குழந்தை பெத்துக்கட்டும் முதல்ல அதுக்கு பிறகு அவங்களை போய் பார்த்து சமாதானம் செய்துக்கலாம் ” என்றார் தேன்மொழியின் மூத்த அண்ணன் பாலு .

அழுதுகொண்டு இருந்த இதழ் பாலு சொல்வதை கேட்டு அதிர்ச்சியில் அவரை பார்த்தாள் . இவனை கல்யாணம் செய்துகொண்டதையே இன்னமும் ஜீரணிக்க முடியதாவலுக்கு அவனுடன் குழந்தை என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை .  அதே அதிருப்தியோடு ராஜனை ஏறிட்டாள் இதழ் .

அவன் கருத்த நிறமும் , கட்டுமஸ்தான உடற்கட்டையும் பார்த்தவளுக்கு இவனுடன் தான் குடும்பம் நடத்தவேண்டுமா “முருகா … ” என்று கடவுளை நினைத்து உள்ளுக்குள் வருத்தியவள் நடந்த உண்மையை எப்படியாவது தேன்மொழியிடும் கூறி இவனிடம் இருந்து எப்படியாவது தப்பி செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் எழுந்தது .

” நீ சொல்றதும் சரி தான் . கொஞ்ச நாள் போகட்டும் அப்பறோம் மத்ததை பார்த்துக்கலாம் ” என்று தேன்மொழி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர்கள் வீட்டின் முன்பு வரிசையாக உயர்ரக கார்களும் அவற்றை தொடர்ந்து போலீஸ் ஜீப்பும் வந்து நின்றது.

சதாசிவம் வீட்டு படியேறி உள்ளே வந்த தன் குடும்பத்தை  பார்த்து “அங்கையே நில்லுங்க … எதுக்கு நீங்க எல்லாரும் இங்கே வந்திருக்கீங்க ” என்று தன் குடும்பத்தை சதாசிவத்தின் வீட்டு வாசற்படியை மிதிப்பதற்கு முன்பு பேசி அவர்களை வாசலிலேயே நிப்பாட்டி இருந்தாள் இதழ்யா .

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured