தப்பு 48
ஒருவாரம் போயிருக்கும் தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை பூவிழி. எப்போதும் அழுது கரைந்து கொண்டே இருந்தாள்.
இங்கே பர்வதமும் அதே நிலை தான். தன் அறையை விட்டு வெளியிலேயே வரவில்லை. நடந்ததை அனைத்தும் கேட்டுவிட்டு மனம் நொந்து போயிருந்தார் அவர்.
கார்த்திகேயன் வீட்டிற்கே வருவதில்லை ஆபிஸே கத்தி என்று இருக்க..
ராஜேந்திரனும் தன் அறைக்குள் முடங்கிப்போனார்.
இவர்கள் யாரையும் சமாதானம் செய்ய முடியாமல் யுகேந்திரன், யுவஜித், ஆராதனா மூவரும் சோர்ந்து போனார்கள்.
ஆராவும், காவேரியும் தான் இப்பொது வீட்டைப் பார்த்துக்கொண்டனர்,
சமைப்பது வீட்டில் இருப்பவர்களை வேலா வேலைக்கு சாப்பிட வைப்பது என்று காவேரிக்கு ராஜேந்திரனைத் தவிர மற்றவர்களை கவனிக்க நேரம் சரியாக இருந்தது.
ஆரா தான் ராஜேந்திரனை சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறாள்.
காலை , இரவு இரண்டு நேரமும் பூவிழியை யுகேன் தான் சாப்பிட வைப்பதே. அவன் ஆபீஸ் சென்றதும் அவளை கவனிக்கும் பொறுப்பு காவேரியிடம் வந்துவிட்டது, இன்றும் அவளுக்கு குடிக்க ஜூஸை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார் காவேரி.
இப்போதும் கட்டிலில் சாய்ந்தமர்ந்து குழந்தையை மடியில் போட்டபடி விரித்துகொண்டு அமர்ந்து இருந்தாள் பூவிழி.
அழுது அழுது அவள் கண்கள் இரண்டும் வீங்கி முகமெல்லாம் பொலிவில்லாமல் இருக்க.., குழந்தை பெற்றுக்கொண்ட புதிதில் எல்லோரும் படும் சிரமங்களும் தூக்கமின்மை, மனஉளைச்சல் என எல்லாமும் சேர்ந்து கொண்டது அவளுக்கு.
“என்ன டி இது இப்படி உக்கார்ந்திருக்க.. இன்னும் எவ்ளோ நாள் தான் நீ அழுதுகிட்டே இருக்கப் போற.. ” என்று அவள் அருகே வந்து ஜூஸை வைத்துவிட்டு பிள்ளையை தூக்கிக்கொண்டார்.
“எனக்கு என்ன பண்றதுனு தெரியல மா.. என்னால எப்பவும் போல நார்மலா இருக்க முடியல . என் வாழ்க்கையை நினைச்சா எனக்கே ஒன்னும் புரியல,,. நான் எதுக்காக இருக்கேன். ஏன் இருக்கேன்னு தோணுது “என்று சொன்னவள் அவர் இடுப்பைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
ஒரு கையில் குழந்தையை பிடித்துக்கொண்டவர் “இப்படி எல்லாம் பேசினா அப்பறோம் வாயிலையே அடிப்பேன் உன்னை ” என்று அவளை அணைத்துக்கொண்டவர் “இங்க பாரு பூவு.. எல்லாருக்கும் அவங்கவங்க வாழ்க்கையில் பல பிரச்சனை, போராட்டம் கண்டிப்பா இருக்கும். நடந்ததை எல்லாம் யாராலயும் மாட்ட முடியாது, ஆனா இனிமேல் நடக்கபோறதை நமக்கு தகுந்து மாத்திக்க நம்மால நிச்சயம் முடியும் டி.. ‘என்றார்.
அவரை அணைத்தபடி நிமிர்த்து பார்த்தாள் பூவிழி.
“என்ன டி பாக்குற.. யுகேன் , யுவனோட அப்பா என்னை எவ்ளோ கஷ்டப்படுத்தினர் தெரியுமா? நான் அவரைப் பிடிச்சு தான் என்னையே அவர்கிட்டே பறி கொடுத்தேன். அதுக்கான தண்டனையை நானும், என் மகனும் இவ்ளோ நாள் அனுபவிச்சோம்.என் மகனை நான் பிரிஞ்சு எவ்ளோ கஷ்டப்பட்டேனு எனக்கு தான் தெரியும். அதுக்காக நான் அப்படியே அழுதுட்டு இருக்க முடியுமா? என் கையில இருக்க உன்னை தான் என்னோட நம்பிக்கையா பார்த்தேன்” என்று அவள் தலையை வருடிக்கொடுத்தவர்.
“யுவன் கண்டிப்பா நல்லா இருப்பான்னு தெரியும், என்ன நான் இல்லாம தான் அவன் கஷ்டப்படுவான் அதுவும் தெரியும். என்னிக்காவது ஒரு நாள் அவனை நான் பார்ப்பேன்னு நம்பிக்கையில் இருந்தேன். நான் நினைச்சது போல நடக்கவும் செய்திருச்சு. நானே எதிர்பார்க்காதது நீ என் மேல வெச்சிருந்த பாசம் . நான் சோர்ந்து , உடைஞ்சு போகும்போது எல்லாம் அம்மா… அம்மான்னு என் புடவையை புடிச்சிட்டு என் பின்னாடியே அட்டை மாதிரி ஒட்டி திரிஞ்ச உன்னோட பாசம் தான் ” என்றார்.
“எனக்கு உன்னை இப்பவும் புடிக்கும்மா.. ஆனா நீ… ” என்று தேம்பியவள் “என்னைப் பத்தி எல்லாருக்கும் இப்போ தெரிஞ்சிருக்கும், என் அம்மா எப்படி என்னைப் பெத்தாங்கன்னும் எல்லாருக்கும் தெரியும். அவங்க எல்லாம் என்னை கேவலமா நினைச்சிருப்பாங்க இல்ல.. அதனால தான் ராஜேந்திரன் சாருக்கு என்னைக் கண்டாலே பிடிக்குறது இல்ல ” என்று மீண்டும் அழுதாள்.
“யாருக்கு உன்னைப் பிடிச்சா என்ன ? பிடிக்கலையினா என்ன? அதை எல்லாம் நினைச்சு கவலைப் பட்டுட்டே இருந்தா இந்த உலகத்துல ஒருத்தராலையும் நிம்மதியா வாழ முடியாது டி.. ” என்றவர். “உனக்குன்னு ஒரு குடும்பம் ஆயாச்சு இப்போ. உன் புருஷன் , உன் குழந்தை, உன்னோட குடும்பம்னு வந்தாச்சு. நடந்தது எதுவும் பண்ண முடியாது, யுகேன் உன் மேல அவ்ளோ ஆசை வெச்சிருக்கான். நீ இந்த ஒருவாரமா தம்பியை சரியாவே கவனிக்கல.. எப்படி மாறிடுச்சு தெரியுமா? அதால உன்னை இப்படி ஒரு நிலையில் பார்க்கவே முடியல.. ” என்றார்.
அவர் சொல்வதும் சரி தான் என்று பூவிழி யோசிக்க..
“இங்க பாரு இனியும் இப்படி நினைச்சு நினைச்சு அழுதுட்டு இருந்தேன்னு வை நானே உன்னை உண்டு இல்லேனு பண்ணிருவேன், அதனால ஒழுங்கா உன்னை மாத்திக்கிட்டு வா. ” என்றார்.
பூவிழி அவரையே பார்க்க..
“இப்படி முடிஞ்சு போனதையே இழுத்து வெச்சு யோசிச்சு யோசிச்சு அழுதுட்டு இருந்தா அடுத்து நீ பெத்துவெச்சிருக்க இவனை யாரு பாத்துகிறது. ” என்றவர் குழந்தையை அவளிடம் கொடுது “நீ இவனுக்கு சரியா பால் கூட கொடுக்கிறதே இல்ல. நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன். இவன் பிறந்த நாள்ல இருந்து இப்போவரை நீ இவனை சரியாவே கவனிச்சுக்கல ” என்று கடிந்து கொண்டார்.
“அம்மா அது வந்து .. ” என்று தயங்கியவள் “நான் வேணும்னு பண்ணல . அவனுக்கு என்னால பால் கொடுக்க முடியல” என்று தலையை கவிழ்த்து தன் மடியில் உறங்கிக்கொண்டிருந்த தன் மகனைப் பார்த்தாள்.
“என்ன டி சொல்ற.. பால் எதுவும் பத்தலையா? அதனால தான் அவனுக்கு பசி அடங்குறதே இல்லையா ?” என்றவர் “இப்படி ஓயாம அழுதுட்டே இருந்தா எப்படி , குழந்தைக்கு பசியாத்துற அப்போ எல்லாம் கண்டதை போட்டு மனசை கொழப்பிக்காம , போனை நோண்டுறது, டிவி பாக்குறது, புக்கு படிக்குறதுனு இப்படி எதுவும் செய்யாம இருக்கனும். உன் குழந்தையை மட்டும் மனசுல நினைச்சுட்டு அவனுக்கு பசியாத்தனும் டி. ” என்றவர்.
“என்கிட்டே முன்னமே சொல்லிருந்தா பூண்டு ரசம், கருப்பட்டி லேகியம், கடுகு போடி, பால் சுறா, ஜூஸ் அது இதுன்னு எதாவது செஞ்சு கொடுத்திருப்பேன் இல்ல. இப்படி குழந்தையை பசியில விட்டுட்டோம்னு நினைப்பு இருந்தா என்கிட்டே அப்போவே சொல்லிருப்பே இல்ல.. “என்றார்.
“அம்மா அப்படி இல்ல.. அது வந்து” என்று பூவிழி பேசவர.
“நீ எதுவும் சொல்லாத டி முதல்ல போய் குளிச்சுட்டு வந்து அவனுக்கு பாலைக் கொடு, நான் போய் உனக்கு லேகியம் செஞ்சுட்டு வரேன் ” என்றவர் வெளியே செல்லப் போக..
“அம்மா ஒரு நிமிஷம் நில்லு , நான் சொல்றதைக் கேளு ” என்று பூவிழி அழைத்து அவருக்குக் கேட்கவே இல்லை.
செய்வதறியாது வாசலையே பார்த்தவள் எழுந்து குளிக்க சென்றாள் , காவேரி வரும்போது அப்படியே அமர்ந்து இருந்தால் அவ்வளவு தான் என்று அவள் அறியாததா.
இங்கே கீழே வந்த காவேரி சமைத்துக்கொண்டிருந்த கஸ்தூரியிடம் “ஏன் டி இந்த கருப்பட்டி லேகியதுக்கு பூண்டு போடணும் தானே.. ” என்றார்.
“லேகியமா? அக்கா நான் எங்க அதெல்லாம் செஞ்சேன். என் அப்பத்தா இருந்த அப்போ இதெல்லாம் செஞ்சு கொடுத்துச்சு . அதுவும் இப்போ இல்ல.. ” என்ற கஸ்தூரி ஆமா எதுக்கு கேக்குற ” என்றார்.
“அடி புள்ளைக்கு பசியாத்த முடியாம அவ இருக்கா. என்கிட்டே ஏண்டி புள்ளைக்கு பாலே சரியா கொடுக்கிறது இல்லேன்னு கேட்டதும் இதை சொல்றா டி அவ,, ” என்றார்.
“அடிப்பாவி ” என்று வாயில் கையை வைத்துக்கொண்ட கஸ்தூரி. “விடுக்கா. அவளுக்கு இருக்குற பிரச்சனை நினைச்சே அழுக நேரம் சரியா இருக்கு. இதுல எங்க இதெல்லாம் நம்மகிட்டே சொல்லப் போறா ” என்றவர் “வேற யாருகிட்டே கேக்குறது” என்று யோசித்தவள்
“காவேரி அக்கா , நம்ம அம்மாவுக்கு இதெல்லாம் அத்துப்புடி, நம்ம வீட்டுக்கு ரெகுலரா காய் கொண்டு வறுவல் சரண்யா அவளுக்கு நம்ம பூவு மாதிரி தான் குழந்தை பொறந்து சரியா பால் வரலன்னு வந்து புலம்பினா . கொஞ்ச நேரம் அவளை இருக்க சொல்லிட்டு பெரியம்மா தான் லேகியம் கிண்டி கொண்டு வந்து அவகிட்டே கொடுத்தாங்க ” என்றாள்.
“அப்படியா அப்போ நீ போய் கேட்டுட்டு வரியா ” என்றார் காவேரி.,
“நானா! ஐயோ அந்த அம்மா ஒரு வாரமா ரூமுக்குள்ளையே இருக்கு. அன்னிக்கு அந்த பிரச்சனை நடந்ததுல இருந்து ஆளாளுக்கு அவங்ககவங்க ரூமுக்குள்ள இல்ல போய் உக்காந்துக்கறாங்க. ஏதோ ஆரா பாப்பாவும், நீயும் தான் எல்லாமே பாத்துக்கிறிங்க ” என்றாள் .
“அதுக்கு இப்போ என்ன டி பண்ண முடியும் , போய் கேட்டுட்டு வாயேன் ” என்று கஸ்தூரியிடம் இருந்து கரண்டியை பறித்துவிட்டு அவரை கிச்சனுக்கு வெளியே அனுப்ப..
சரியாக அந்த நேரம் அங்கே வந்த பர்வதத்தின் மீது கஸ்தூரி விழுந்துவிட..
“ஏய்! கண்ணை எங்க பொடனியிலையா வெச்சிருந்த பாத்து வரக்கூடாது”என்றவர் “எனக்கு தலை வலிக்குது ஒரு காபி வேணும் “என்றபடி கிச்சனுக்குள் நுழைய.. அங்கே நின்றிருந்த காவேரியைப் பார்த்தவர் திரும்பி வெளியே நடக்க..
“பர்வதம் நில்லு! “என்று அதிகாரக் குரலில் ஒரு குரல் அழைக்கவும் அப்படியே ஸ்தம்பித்துப் போனார் பர்வதம்.
அவரை அப்படி அதிகாரமாகவும், உரிமையோடம் அழைத்து காவேரி தான் . சட்டெனத் திரும்பி காவேரியை அவர் பார்க்க..
இவர்கள் பேச்சு சத்தம் கேட்டு ஆராவும் , ராஜேந்திரனும் அறைக்குள் இருந்து வெளியே வந்தனர்.
“என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல,, நான் இந்த வீட்ல இத்தனை நாள் வேலைக்காரியா இருக்கறதுனால தான் என்கிட்டே பேச மாட்டெங்குறியா நீ ” என்றார் காவேரி.
“ஐயோ அப்படி இல்ல காவேரி , நான் அப்படி எல்லாம் நினைக்கல ” என்று பர்வதம் அவசரமாக பதில் கூற.
அந்த நேரம் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த யுகேனும், யுவனும் அங்கு நடப்பதை பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் ஆராவைப் பார்த்து என்ன என்று கேட்டனர்.
அவளும் தெரியாது என்று தோள்களைக் குலுக்க.. மறுபடி காவேரி பேசவும் அவரைப் பார்த்தனர்.
“அப்பறோம் என்ன பேசுறதுக்கு உனக்கு. உன் வீட்ல ஒருத்தியா என்னை ஏத்துக்கலையின்னா எனக்கு எந்த கவலையும் இல்ல. ஆனா என் பொண்ணு என்ன பண்ணினா உனக்கு. அவ அம்மா பண்ணின தப்புக்கு நீ எதுக்கு அவளை தண்டிக்குற,, ” என்று பொரிந்து தள்ளினார்.
“நானா! நானா அவளை தண்டிக்குறேன், என் வாழ்க்கை அவ அம்மாவால எப்படி ஆகிருச்சுனு நீயும் தானே கேட்டுட்டு இருந்த. எனக்கு அந்த வலி இருக்காதா? சும்மா எல்லா தப்பையும் என் மேலையே போடுற நீ.. ” என்றார் பர்வதம்
