பூவிழிக்கும் வீராவுக்கும் திருமணமான விஷயத்தை பாலசுப்பிரமணியமும் தேவிகாவும் தங்கள் சொந்த பந்தங்கள் அனைவரிடமும் கூறினர். ரிசப்ஷனுக்கு அனைவரும் கண்டிப்பாகக் குடும்பத்துடன் வரவேண்டும் என ஒருவரை விடாமல் வீரா, பூவிழி ரிசப்ஷனுக்கு அழைப்பிதழ் அனுப்பிவிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்கள் திருமணம் செய்த முகூர்த்தம் மிகவும் அருமையான முகூர்த்தம். ரிசப்ஷன் முடிந்த அன்றே இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் வைத்துக்கொள்ளலாம் என்று ஜோசியர் நாள் குறித்துக் கொடுத்துவிட்டார்.
நடப்பதை எல்லாம் வீராவும் பூவிழியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். ஆனால், அவர்கள் எதுவுமே அதில் நாட்டம் இல்லாதது போல இருவரும் நடந்துகொள்ள, அதைப் பார்த்த தேவிகா அவர்களுடைய நண்பர்களிடம் வந்து, “டேய், இவங்க ரெண்டு பேருமே உண்மையாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா? இல்லை நம்மளை நம்ப வைக்கிறதுக்காகப் பொய்க் கல்யாணம் எதுவும் பண்ணிக்கிட்டாங்களா?” என்றார் சந்தேகமாக.
“அம்மா, என்ன இப்படி கேட்டுட்டீங்க? அவன் என் கண் முன்னாடிதான், ஏன் அந்த மண்டபத்தில் இருக்கிற எல்லார் முன்னாடியும்தான் பூவிழி கழுத்துல தாலி கட்டினான். நான் சொல்றதை நம்பலைன்னா இதோ, இவங்கெல்லாம் அங்கேதான் இருந்தாங்க. அவங்ககிட்ட வேணா கேட்டுக்கோங்க” என்றான் கவின்.
அவன் சொன்னதற்கு “உண்மைதான்” என்று தலையாட்டினார்கள்.
“அப்புறம் ஏன்டா, ரெண்டு பேரும் இஞ்சி தின்ற குரங்கு மாதிரியே முகத்தையே உர்ரென்று வைத்துக்கொண்டு சுத்திக்கிட்டு இருக்காங்க? புதுசா கல்யாணம் ஆனவங்களா இருந்தா, அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சந்தோஷம், முகத்துல ஒரு களைப்பு, இடையில ஒரு சின்ன சின்ன ரொமான்ஸ் கூட இல்லையேடா? அவ இருக்கிற பக்கம் இவன் திரும்பிப் பார்க்க மாட்டேங்குறான், இவன் இருக்கிற பக்கம் பூவிழி எட்டி கூடப் பார்க்க மாட்டேங்குறா. இப்படி இருந்தா எப்படிடா?” என்றார் தேவிகா.
“அம்மா, நாம எல்லாரும் அவங்க கூடவே இருக்கறதுனால இவங்க ரெண்டு பேரும் இப்படி நடந்துக்கிறாங்கன்னு நினைக்கிறேன். இவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டாத்தானே அவங்க மனசுல என்ன இருக்கு, அவங்க எப்படி நடந்துகொள்கிறார்கள்னு நமக்குத் தெரியும்?” என்றான் மித்ரன்.
“அதுவும் சரிதான்டா. இன்னிக்கு ரிசப்ஷன் முடிஞ்சதும் எப்படியும் எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பார்க்க போயிடுவோம். அதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தானே இருப்பாங்க? அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம்” என்றார் தேவிகா.
வீரா பூவிழியைத் திருமணம் செய்து வந்த இந்த நான்கைந்து நாட்களில், பூவிழியின் வீட்டிலிருந்து யாருமே அவளுக்கு ஃபோன் செய்தோ அல்லது நேரில் வந்தோ எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால், பூவிழியின் அம்மா மட்டும் ஒருமுறை அவளுக்கு ஃபோன் செய்து, எப்படியோ தன் மகளுக்கு ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டதை நினைத்துச் சந்தோஷப்படுவதாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஃபோனை யாரோ அவரிடம் இருந்து பிடுங்குவதை மட்டும் உணர்ந்தாள் பூவிழி.
அன்றிலிருந்து அவளுக்குத் தன் தாய் செண்பகத்தின் நினைவாகவே இருந்தது. அவருக்கு என்ன ஆனதோ, தன் தாயை என்ன செய்து வைத்திருக்கிறார்களோ எனச் சற்று மன உளைச்சலிலேயே பூவிழி இந்த நாட்களில் இருந்தாள்.
மாலை ரிசப்ஷனுக்குத் தயார் செய்வதற்காக அந்த ஊரிலேயே மிகவும் அனுபவமிக்க பியூட்டிஷியன்களை வரவழைத்து, பூவிழிக்குத் தேவையான ஆடைகள், நகைகள் என ஏற்கனவே தேர்வு செய்திருந்ததைத் கொடுத்து, அதற்கு ஏற்ப அவளை அழகாக அலங்கரித்து வரும்படி தேவிகா கட்டளையிட்டிருந்தார்.
பூவிழியும் அதை எதையும் மறுப்பு சொல்லாமல் தேவிகாவின் விருப்பம் போலவே விட்டுவிட்டாள். ஏனென்றால் அவளுக்கு இதில் எல்லாம் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. ஒரு ஜீன்ஸும் டீசர்ட்டும் கொடுத்துவிட்டால் அதைப் போட்டுக்கொண்டு துறுதுறுவென்று சுற்றித்திரிபவளுக்கு, இந்த நகைகளும் ஆடம்பரமான ஆடைகளும் புதிதாக இருந்தது.
வீரா ஏற்கனவே தயாராக இருக்க, அவனுடைய நண்பர்கள் அனைவரும் பூவிழியை அங்கே வைத்துப் பார்த்துக்கொள்ளலாம். அதனால் இப்போதே கிளம்ப வேண்டும் என்று வம்படியாக அவனை இழுத்துக்கொண்டு ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி ஹாலுக்குச் சென்றுவிட்டனர்.
இங்கே வீட்டிலிருந்து பூவிழி கிளம்ப, அவளோடு தேவிகாவும் பாலசுப்ரமணியமும் கிளம்பி மண்டபத்திற்கு வந்தனர்.
தன்னுடைய குடும்பம், தொழில் வட்டாரம் என வந்திருந்தவர்களோடு பேசிக்கொண்டிருக்க, பூவிழியை அழைத்து வந்த கார் மண்டபத்தின் முன்பு வந்து நின்றது.
காரைவிட்டு இறங்கிய பூவிழியை அழைத்துக்கொண்டு தேவிகாவும், பாலுவும் உள்ளே வந்தனர்.
பூவிழியை வரவேற்க, சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு அதில் மலர்கள் தூவப்பட்டு இருக்க, பூவிழியை அதன் மேலே நடந்து வரச் சொன்னார் தேவிகா.
“அம்மா ஒரு நிமிஷம் இருங்க. வீராவும், பூவிழியும் ஒண்ணா அதில் நடந்து வந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்று ராகவ், வீராவின் கை பிடித்து இழுத்து வந்தவன், அவனைப் பூவிழி முன்பு நிற்க வைத்தான்.
அவனை ஒரு பார்வை பார்த்த வீரா, பூவிழியின் முன்பு தன் கையை நீட்ட, பூவிழி சிறிது தயக்கத்தோடு தன் கையை வீராவிடம் நீட்டினாள்.
அவள் கைகளுக்குள் தன் கைகளைக் கோர்த்து, மலர்கள் தூவப்பட்ட அந்தச் சிவப்பு கம்பளத்தில் பூவிழியை அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தான்.
அவர்கள் இருவரும் சேர்ந்து நடந்து வர, இருபுறமும் நின்ற பெண்கள் வழி நெடுக மலர் தூவி இருவரையும் வரவேற்றனர்.
காண்பதற்கு தேவலோகத்தில் இருக்கும் தலைவன், தலைவி போல இருவரும் ஒன்றாக வந்தனர். அதைக் கண்டு பாலு, தேவிகா இருவரும் மகிழ்ச்சி கொள்ள, அதைவிடப் பெருமகிழ்ச்சியில் இருந்தார் பூவிழியின் அம்மா செண்பகம்.
அவரை வீல் சேரில் வைத்துத் தள்ளிக்கொண்டு, அவரோடு சேர்ந்து ரசிகா அங்கே வந்தாள்.
அவர்கள் இருவரையும் பார்த்ததும் பூவிழிக்கு ஒரு பக்கம் ஆச்சரியமும், மறுபுறம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அவர்களிடம் ஓடிவந்த பூவிழி, “அம்மா…” என்று செண்பகத்தைக் கட்டிக்கொண்டாள்.
தன் மகளை வாரி அணைத்துக்கொண்டவர், “பூவிழி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா. நீ நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி இருக்கிறதை நினைச்சு” என்று மிகவும் சந்தோஷப்பட்டார்.
அவரின் சந்தோஷம் பார்த்தவள், தன் அருகில் நின்று இருந்த வீராவைப் பார்த்து நன்றி சொல்லும் விதமாகப் பார்க்க, அவள் பார்வையில் இருந்த அர்த்தத்தைப் புரிந்துகொண்ட வீரா மெல்ல சிரித்தவன், குனிந்து செண்பகத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன், “அத்தை, நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க… நான் பூவிழியை காலம் முழுக்கக் கண் கலங்காமப் பார்த்துக்குறேன்” என்றான்.
அவனைத் திரும்பிப் பார்த்த பூவிழி, “மச்சி… அதை நான் சொல்லணும். நீ என்னைப் பார்த்துக்கப் போறியா இல்லை நானா?” என்று நினைத்துக்கொண்டாள்.
ரசிகாவையும் பார்த்த பூவிழி, “ஏய் ரசி, எப்படி நீயும் அம்மாவும் அங்கே இருந்து எப்படி வந்தீங்க? உங்களை எப்படி அவங்க விட்டாங்க? அந்த வீட்டில் பிறந்த பாவத்துக்குதான் நானும் என் அம்மாவும் அங்கே இவ்ளோ வருஷமா இருந்து கஷ்டப்பட்டோம். அந்தக் கஷ்டத்தோட நீயும் அவ்ளோ வசதியான உன் வீட்டை விட்டு வந்து எங்க கூடத் தங்கிட்டு இருக்க… எப்படிடி அங்கே இருந்து வந்தீங்க? இல்லை இல்லை, உங்களை எப்படி அவங்க வெளியே விட்டாங்க?” என்றாள் பூவிழி புரியாமல்.
“அவங்க எங்கே எங்களை விட்டாங்க? சொல்லப்போனா, வீராதான் எங்களை அங்கே இருந்து கூட்டிட்டு வந்தான்னு சொல்லணும்” என்றாள் ரசிகா.
“என்னடி சொல்றே?” என்று பூவிழி அதிர்ச்சியாக…
அவள் தோளில் கைவைத்து அழுத்தம் கொடுத்த வீரா, “அதை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஸ்டேஜுக்குப் போகலாமா? எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்றான்.
செண்பகமும், “ஆமா பூவிழி, போ.. வந்தவர்களை ரொம்ப நேரம் காக்க வைக்க வேண்டாம்” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
பூவிழியும், வீராவும் ஜோடியாக மேடை ஏற, அனைவரும் அவர்கள் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். சில பெண்களைப் பெற்ற பெற்றோர், தங்கள் பெண்ணை வீராவுக்குத் திருமணம் செய்துவைக்க முடியாமல் போனதே என்று வருத்தமும் அடைந்தார்கள்.
ஒவ்வொருவராக வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுப் பரிசுகள் கொடுத்துச் சென்றனர். முறையாக பாலு குடும்பத்தின் மருமகளாகப் பூவிழி அனைவரிடமும் அறிமுகம் செய்யப்பட்டாள்.
ரிசப்ஷன் முடிந்து வீரா, பூவிழியின் நண்பர்கள் நால்வரும் அங்கிருந்து வீட்டிற்குக் கிளம்பினர். செண்பகமும், ரசிகாவும் அவர்களோடு வீரா வீட்டிற்குக் கிளம்பினார்கள்.
வீட்டிற்கு வந்ததும் சாந்தி முகூர்த்தத்திற்காகப் பூவிழியை அழைத்துச் சென்று அவளைத் தயார் செய்யச் சொன்னார் தேவிகா.
இங்கே தன் அறையில் வீரா குளித்து ஃப்ரெஷ் ஆகி, அவன் அப்பா கொடுத்த வேஷ்டி சட்டையைப் போட்டுக்கொண்டு தயாராக இருந்தான்.
பூவிழியைத் தயார் செய்துகொண்டிருந்த ரசிகா, “ஏன்டி பூவிழி, நீயும் வீராவும் திடீர்னு முடிவு பண்ணி அவசரமா கல்யாணம் செய்துக்கிட்டீங்க. உன் அம்மாவும், வீரா வீட்டுலயும் உங்க கல்யாணத்தை ஊரைக்கூட்டிப் பிரபலப்படுத்திட்டாங்க. நிஜமாவே நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா வாழறதுன்னு பேசி முடிவெடுத்துட்டீங்களா? உங்க பிளான் என்ன?” என்றாள்.
“பிளானா? அதெல்லாம் எதுவுமே இல்லைடி. நான் ஏற்கனவே கல்யாணத்துக்கு முன்ன வீரா கிட்ட சொன்னதுதான். நாம ஃப்ரெண்ட்ஸ் அவ்ளோதான். ஊருக்காக ரெண்டு பேரும் கணவன் மனைவியா நடிக்கிறோம்னு சொல்லிட்டேன். அவனும் அதுக்குச் சரின்னு சம்மதம் சொல்லிட்டான். இதுக்கு மேல பிளான் பண்ண என்ன இருக்கு?” என்றாள் பூவிழி சாதாரணமாக.
“ஆமா, இந்த விஷயம் நம்ம பசங்களுக்குத் தெரியுமா?” என்றாள் ரசிகா.
“ம்ஹும்.. இல்லை. நானும் வீராவும் கல்யாணம் செய்துக்கிட்டோம்னு, அதுவும் நீ மெசேஜ் அனுப்பி அவன் கிட்ட கேட்டு, அதற்கு அவன் ரிப்ளை பண்ணியது வரைக்கும் அவங்களுக்குத் தெரியும். இந்த விஷயத்தை நான் அவங்க கிட்ட சொல்லலை. சொன்னா நமக்கும் அவனுக்கும் மட்டும் தெரிந்த விஷயம் அப்புறம் ஊர் முழுக்க தம்பட்டம் போட்டுச் சொல்லுவானுங்க, ஊத்த வாயனுங்க” என்று சொல்லிச் சிரித்தாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அறைக்கதவு தட்டவும், ரசிகா எழுந்து சென்று அறைக்கதவைத் திறந்தாள்.
கையில் பால் செம்புடன் உள்ளே வந்த தேவிகா, “பூவிழி ரெடியா ம்மா?” என்று கேட்டார். அழகாகச் சேலை உடுத்தி, தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து அம்சமாக நின்றிருந்த பூவிழியைப் பார்த்ததும் பெருமை கொண்டவர், பால் செம்பைப் பூவிழி கையில் கொடுத்து, “என் மகன் கொடுத்து வெச்சவன். ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க” என்றார்.
அதைக்கேட்டு ரசிகா நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அவளை முறைத்த பூவிழி, “பேசாம இருடி” என்று அதட்டினாள் ரசிகாவை.
பூஜை அறைக்கு பூவிழியை அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொன்னவர், “வேண்டாம் வேண்டாம், நானே விளக்கு ஏத்திக்கிறேன். நீ வந்த அன்னிக்கு விளக்குப் பதவிச்சதே எனக்குப் போதும்” என்று விளக்கேற்றிவிட்டு, அவளுக்குத் திருநீறு வைத்துவிட்டுத் தன் மகன் அறைக்கு பூவிழியை அனுப்பி வைத்தார்.
மேலே ஏறி அவன் அறைக்கு வரும் வரை அமைதியாக, அடக்க ஒடுக்கமான பெண்ணாக வந்த பூவிழி, அவர்கள் பார்வையில் இருந்து சற்றுத் தள்ளி வந்ததும், “ஷ்…அப்பா, எந்தப் பொம்பளை வேஷம் போட்டாலும் போட்டேன். எவ்வளவு பொறுமையா இருக்க வேண்டி இருக்கு” என்று புலம்பிக்கொண்டு, சேலையை ஒரு கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு, மறுகையில் பால் செம்பைப் பிடித்துக்கொண்டு, வீரா அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் அறைக்குள் வந்த மறு நொடி அவளிடம் வேகமாக வந்த வீரா, பூவிழி கையில் இருந்த பால் செம்பை வாங்கி, அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு, அவளை இழுத்து இறுக்கி அணைத்தவன், “எவ்வளவு நேரம்டி வெயிட் பண்றது? இங்கே இருக்கிற ரூமுக்கு வர உனக்கு இவ்ளோ நேரமா?” என்றவன், “சீக்கிரம் வா” என்று அவளைத் தூக்கி கட்டிலில் போட்டு அவள் மேல் பாய்ந்தான் வீரா. அதில் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் பூவிழி. அவளுக்கு எதுவும் புரியவில்லை.

1 comment
Super super super super super super super super super super super super super super