News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மோகம் முத்தாடுதே 4

by Layas Tamil Novel
562 views
A+A-
Reset

வீராவைத் தான் கல்யாணம் பண்ணிக்கொள்வது கடைசி நிமிடத்தில்தான் உறுதியானது என்று பூவிழி சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகி அவளைப் பார்த்தனர்.

“என்னம்மா சொல்ற.. என் மகனே வந்து உன்னை கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னானா?” என்று தேவகி ஆச்சரியமாகக் கேட்டார்.

“மண்டபத்துக்கு நான் வந்ததிலிருந்து என் பக்கத்துலதான் வீரா உட்கார்ந்திருந்தான். எங்கேயும் எழுந்து போகல. அப்புறம் எப்படி நீயும் அவனும் பேசிக்கிட்டீங்க? அவன் எப்போ உன்னை கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னான்?” என்று கேட்டான் மித்ரன்.

“டேய், நான் தான் சொல்றேன். நான் தான் அவனை என்னை கல்யாணம் செய்துக்கச் சொன்னேன்” என்று மித்ரனின் தலையில் அடித்துச் சொன்னாள் பூவிழி.

“ஏய், லூசு! அடிக்காத டி…” என்ற மித்ரன் தலையைத் தேய்த்துவிட்டுக் கொண்டே, “உன் கழுத்துல தாலி கட்டச் சொன்னது நீதான்னு சொல்ற. ஆனா எப்படி ரெண்டு பேரும் பேசினீங்க?” என்று புரியாமல் கேட்டான்.

“டேய், நாம என்ன அந்தக் காலத்துலயா இருக்கோம்? கையிலேயே உலகம் சுத்திட்டு இருக்கும்போது, மண்டபத்துக்குள்ள இருக்குற ஒருத்தரை ஒருத்தர் பேசிக்கிறதுக்கு வழி இல்லாமையா போயிடும்?” என்றாள்.

மித்ரன் புரியாமல் அவளையே பார்க்க, தன் கையில் இருந்த மொபைலைத் தூக்கி அவர்கள் முகத்திற்கு நேராக ஆட்டிக் காட்டினாள்.

“நான் முகூர்த்தப் புடவை மாத்துறதுக்காக உள்ளே போகும்போதுதான் வீரா கிட்ட இருந்து எனக்கு மெசேஜ் வந்துச்சு. ஃபர்ஸ்ட் எனக்கு ஆச்சரியமாதான் இருந்தது. இத்தனை வருஷம் கழிச்சு அவன் எதுக்கு எனக்காக மெசேஜ் பண்றான்? அதையும் இந்த நேரத்துல மெசேஜ் பண்றானேனு யோசிச்சுதான் மெசேஜை ஓப்பன் பண்ணிப் பார்த்தேன். ‘கல்யாணப் பொண்ணு முகம் ஏன் டல்லா இருக்கு?’னு மெசேஜ் அனுப்பி இருந்தான். அதைப் பார்த்த பிறகுதான் அவன் என்னோட கல்யாணத்துக்கு வந்திருக்கான்னு எனக்குத் தெரியும்” என்றாள்.

“அவன் மனசுல விஷயத்துக்கு ரிப்ளை பண்ணலாமா வேண்டாமானு என் கையில போன வெச்சு யோசிச்சிட்டு இருந்தேன். அப்போ எனக்கு வந்த மெசேஜை லட்சுமியும் ரசிகாவும் பார்த்துட்டு, ‘யார்டி நீ? இந்த நேரத்துல மெசேஜ் பண்ணியிருக்கான்?’னு கேட்டாங்க. நானும் பையனைப் பத்திச் சொன்னேன். ‘அவன் கூடத்தான் பேசுறது இல்லையே, அவனை நீ கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணி இருந்தியா?’னு கேட்டார்கள். ‘சரி அவன் கேட்டதுக்கு ரிப்ளை பண்ணு, அதனால கூட உனக்கு எதுவும் உதவி கிடைக்கலாம்’னா ரசிகா. அதுக்கு அப்புறம்தான் நான் வீராவுக்கு மெசேஜ் பண்ணேன். ‘எனக்கு இந்தக் கல்யாணத்துல துளியும் இஷ்டமில்லை. என்னோட அம்மா உடல்நிலையைக் காரணம் காட்டி இந்தக் கல்யாணத்தை என் தலையில கட்டப் பார்க்குறாங்க. என்ன பண்றதுன்னு தெரியல. அதான் என் முகம் அப்படி இருக்கு’னு ரிப்ளை பண்ணியிருந்தேன்.

“பேசாம இந்தப் பையனைப் பிடிக்கலன்னு எழுதி வெச்சுட்டு மண்டபத்தை விட்டு ஓடிப் போயிட வேண்டியதுதானே?’னு நான் அனுப்பிய மெசேஜைப் பார்த்துவிட்டு, அவன் கேட்டான்.

“மண்டபத்தை விட்டு ஓடிப் போறதுக்கு என் கூட யாரும் வர மாட்டேங்குறாங்க’னு நான் கிண்டலா மெசேஜ் பண்ணேன். ‘நான் வேணா கூட ஓடி வரட்டுமா?’னு அவன் திருப்பி ரிப்ளை பண்ணியிருந்தான். அதைப் பார்த்துட்டு எங்க மூணு பேருக்குமே பயங்கர ஷாக்.

என்ன பண்றதுன்னு புரியாம நான் போனை கையில வெச்சிட்டு இருந்தப்போ, ரசிகா என் கையில இருந்து போனைப் பிடுங்கி, ‘நான் ஏற்கனவே பயங்கர டென்ஷன்ல இருக்கேன். கல்யாணத்தை நிறுத்த முடியாம, இதுல நீ வேற இப்படி எல்லாம் பேசி என்னைக் கடுப்பேத்தாத. அப்படி நீ சொன்ன மாதிரியே செய்ய ரெடியா இருந்தா, மணமேடையில எல்லார் முன்னாடியும் தைரியமா என்னைத் தாலி கட்டி உன் கூடக் கூட்டிட்டு போக முடியுமா?’னு பூவிழிக்குப் பதிலா ரிப்ளை செய்தாள்.

அதைப் பார்த்த லட்சுமியும் பூவிழியும் அதிர்ச்சி அடைந்தனர்.

“ஏய், ரசிகா! என்னடி இப்படி அனுப்பி இருக்க? அவன் என்ன பத்தி என்ன நினைப்பான்? ஏற்கனவே இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் அவனாவே என்கிட்ட பேசியிருக்கான். நீ இப்படி ரிப்ளை அனுப்பி மொத்தமா எங்க ஃப்ரெண்ட்ஷிப்பைக் கட் பண்ணி விடலாம்னு நினைச்சுட்டியா?” என்று கடுப்பாக பூவிழி, ரசிகாவின் கையிலிருந்த போனைப் பிடுங்கப் போக…

பூவிழியின் ஃபோனில் நோட்டிஃபிகேஷன் சவுண்ட் வரவும், ரசிகா தன் கையிலிருந்த ஃபோனின் திரையைப் பார்க்க, பூவிழிக்கும் லட்சுமிக்கும் பதட்டம் அதிகரித்தது.

ரசிகா அனுப்பிய மெசேஜைத் தான் அனுப்பியதாக நினைத்து, இந்த நேரம் கண்டிப்பாக வீரா பார்த்திருப்பான். அதைப் பார்த்துவிட்டு என்ன சொல்லி தன்னைத் திட்டி ரிப்ளை செய்திருப்பானோ என்று பூவிழிக்குப் பதட்டம் அதிகமானது. “அவன் என்ன அனுப்பியிருக்கான்னு பார்க்கலாம்” என்று வேகமாக ரசிகாவின் கையிலிருந்த போனைப் பிடுங்கினாள் பூவிழி.

போனை வாங்கி ஓப்பன் செய்தவள், வீரா அனுப்பிய மெசேஜைத் திறந்து பார்த்ததும் அப்படியே உறைந்து போனாள்.

“ஏய், பூவிழி! என்னடி ஆச்சு? ஏன் ஃப்ரீஸ் ஆகிட்ட?” என்று சொல்லிக்கொண்டே லட்சுமி, பூவிழியின் கையிலிருந்த மொபைலை வாங்கி, வீரா அனுப்பிய மெசேஜைப் பார்த்ததும் அவளும் ஷாக் ஆகிவிட்டாள். “என்னங்கடி ஆச்சு? அவன் என்னதான் ரிப்ளை பண்ணியிருக்கான்னு சொல்லித் தொலைங்களேன்” என்று எட்டி லட்சுமியின் கையிலிருந்த ஃபோனில் வீரா அனுப்பிய மெசேஜைப் பார்த்தாள்.

அதில் ‘சரி’ என்று மட்டும் ரிப்ளை வந்திருந்தது.

மூவரும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அப்படியே நின்று இருக்க, “முகூர்த்தத்திற்கு நேரமாச்சு, இன்னும் எல்லாரும் உள்ள என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சீக்கிரம் பொண்ணை அழைச்சிட்டு வாங்கம்மா” என்று வெளியில் இருந்து ஒருவர் சத்தமிட…

அதில் தெளிவு பெற்ற மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, பூவிழி கண்ணை மூடித் தன் மூச்சை இழுத்துத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

“ரசிகா, நீ அவனுக்கு அனுப்பிய மெசேஜ் ஒரு வகையில நல்லதுலதான் முடியும்னு நினைக்கிறேன். எனக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளையை சுத்தமா பிடிக்கல. அவனோட கேரக்டரும் அவனோட பழக்கவழக்கமும் எனக்கு சுத்தமா செட் ஆகாது. அவன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்குக் காரணமே என்கிட்ட இருக்கிற சொத்துக்காகத்தான். இந்த கல்யாணம் நடந்ததுனா தான் இந்தச் சொத்துக்களை எல்லாம் என் பேர்ல எழுதி வைக்கிறதா என்னோட மாமா சொல்லியிருக்காரு. அதுக்காகத்தான் அவன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிச்சிருக்கான். இந்த விஷயம் எதுவும் வீராவுக்குத் தெரியாது. என்னோட கல்யாணம் எதுக்காக முடிவானதுனு கூட அவனுக்குத் தெரியாது. எதுவுமே தெரியாம அவன் என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லியிருக்கான். அப்போ என்னோட இக்கட்டான சூழ்நிலை அவனுக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும். அதனால என்ன நடந்தாலும் சரி, என் வீட்டுல யாரு என்ன கேட்டாலும் பரவாயில்லை, வீரா என் கழுத்துல தாலி கட்டின உடனே மறுப்பு பேசாம நான் அவன் கூடக் கிளம்பப் போறேன்” என்றாள் பூவிழி.

“வீரா சொன்னது போல நடந்துக்குவானா?” என ரசிகா சந்தேகமாகக் கேட்க, “நீதானே அவனுக்கு மெசேஜ் அனுப்புன? நீ அனுப்பினதும் அவன் வேற எந்தக் கேள்வியும் கேட்காமல் ‘சரி’னு சம்மதம் சொல்லி ரிப்ளை செய்திருக்கான். அப்போ கண்டிப்பா அவன் சொன்னதைச் செய்திடுவான். எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க வாங்க போகலாம்” என்று அவசர அவசரமாக முகூர்த்தச் சேலையை மாற்றிவிட்டு மூவரும் மணவறைக்குச் சென்றனர்.

“அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் தான் நீங்களே பார்த்துட்டு இருந்தீங்களே. எவ்வளவு ஃபாஸ்டா மேடை ஏறி, ஐயர் என் பக்கத்துல உட்கார்ந்திருந்த அந்தப் பைத்தியத்து கிட்ட தாலியைக் கொடுக்கிறதுக்கு முன்னாடி அதைப் பிடுங்கி என் கழுத்துல கட்டிட்டான்” என்றாள் பூவிழி.

இந்த நடந்ததை எல்லாம் பூவிழியிடம் கேட்டு, அவர்கள் நண்பர்களும் வீராவின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

திருமணமே வேண்டாம் என்று சொன்னவன், தன் தோழிக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்ததும், அவளை இத்தனை பேர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

தன் அறைக்கதவைத் திறந்து கொண்டு வீரா வெளியே வர, பூவிழியின் அருகில் இருந்த அனைவரும் எழுந்து சோபாவில் ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்துகொண்டு, எதுவும் நடக்காதது போல இறங்கி வரும் வீராவைப் பார்க்க…

வேகமாக இறங்கி வந்தவன் கவினிடம், “ஆஃபீஸ் கிளம்பலாமா?” என்றான்.

அதைக் கேட்டதும் பாலசுப்ரமணியம் வேகமாக எழுந்து வந்து வீராவிடம், “என்னப்பா விளையாடுறியா? இன்னைக்குத்தான் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க. கல்யாணம் பண்ணின அன்னைக்கு ஆஃபீஸ் போகணுமா? அது எல்லாம் எதுவும் வேண்டாம். புதுசா கல்யாணம் ஆனவங்க ரெண்டு மூணு நாளைக்கு எங்கேயும் வெளியே போக வேண்டாம். வீட்டிலேயே இருங்க. இப்படி திடீர்னு நீ கல்யாணம் செய்திட்டு வந்துட்ட. நம்ம சொந்த பந்தங்கள் கிட்ட விஷயத்தைத் தெரியப்படுத்த வேண்டாமா? அவங்களை எல்லாம் கூப்பிட்டு, உனக்குக் கல்யாணம் ஆன விஷயத்தைச் சொல்லி, சின்னதா ஒரு ரிசப்ஷன் அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்கேன். அது முடிஞ்சதுக்கு அப்புறம்தான் நீ ஆஃபீஸுக்கே போகணும். அதுவும் இல்லாம, உங்களுக்கு அடுத்தடுத்து நடக்கப்போற சடங்குகளை எல்லாம் நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டாமா?” என்று இருவரின் சாந்தி முகூர்த்தத்தைப் பற்றி அவர் கூற, விளக்கேற்றத் தெரியாத பூவிழிக்குப் பாலசுப்ரமணியம் சொன்னது புரிந்துவிட்டது. ஆனால், வீராவுக்குத்தான் என்னவென்று புரியவில்லை.

“என்னப்பா சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியல. என்ன சடங்கு? ஏற்கனவே தாலியே கட்டியாச்சு. அதுக்கப்புறம் என்ன?” என்றான்.

வீரா அருகில் வந்த மித்ரன், “டேய், அவளைக் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டியே? அடுத்து குடும்பம், புள்ள குட்டின்னு பார்க்க வேண்டாமா? உங்க ரெண்டு பேரோட ஃபர்ஸ்ட் நைட் பத்திதான் அப்பா எப்படி இன்டைரக்டா சொல்லிக்கிட்டு இருக்காரு” என்றான் மித்ரன்.

“எனக்கு ஃபர்ஸ்ட் நைட் தெரியாதா? நான் வேணும்னுதான் கேட்டேன்” என்றான் வீரா.

அதிசயம் போலப் பார்த்த மித்ரன், “நீதானடா இது? எங்களால் நம்பவே முடியல” என்றவன் பேசாமல் தள்ளிப் போய் நின்று கொள்ள…

“சரிப்பா, எல்லாரும் இருங்க. நான் போய் சாப்பிட ரெடி பண்ண சொல்லிட்டு வரேன். யாரும் இங்கே இருந்து போக வேண்டாம். இன்னும் ரிசப்ஷன் டேட் குறித்துட்டு, ஃபங்ஷன் எல்லாம் முடிஞ்ச பிறகுதான் நீங்க எல்லாரும் கிளம்பணும். அதுவரைக்கும் இங்கேதான் இருக்கப் போறீங்க” என்று தேவிகா ஆர்டர் போட்டுவிட, அவர்களும் அவருடைய வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் அங்கேயே இருக்க சம்மதித்தனர்.

பூவிழியைப் பார்த்து, “வாம்மா, அதுவரைக்கும் நீ என் கூடவே தங்கிக்கோ” என்றவர், பூவிழியை ரெஸ்ட் எடுக்க அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.